Home

Sunday 26 June 2022

வாசிப்பு என்னும் வரம்

 

மதுரைக்கு அருகில் மேலூருக்கு அருகிலிருக்கும் உலநாதபுரம் என்னும் சிற்றூரில் பிறந்து வளர்ந்தவர் வேலாயுதம். வறுமை சூழ்ந்த அந்தக் காலத்து வாழ்க்கை அவரை பள்ளியிறுதிவரைக்கும் மட்டுமே படிப்பதற்கு அனுமதித்தது. படிப்பைத் தொடரமுடியாவிட்டாலும் மனம் தளராமல் வெவ்வேறு கடைகளில் சிப்பந்தியாகப் பணிபுரிந்து வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டார். பணிவாய்ப்புகள் அவரை கோவைக்குக் குடிபெயரவைத்தன. பணிகள் வழியாகக் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் சொந்தமாக குறைந்த முதலீட்டில் பல்பொருள் அங்காடியொன்றைத் திறந்தார். விற்பனைப்பொருட்களுக்கு இடையில் கடையின் ஓரமாக அலமாரித்தட்டுகளில் புத்தகங்களையும் அடுக்கி விற்கத் தொடங்கினார். மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகங்களை மட்டுமே கடைமுழுதும் நிரப்பி விற்பனைசெய்யும் விற்பனையாளராக மாறினார். நாளடைவில் எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிடும் சிறந்த பதிப்பாசிரியராக உயர்ந்தார். எழுத்தாளர்களோடும் வாசகர்களோடும் அவருக்கு வாய்த்த நட்பையும் நெருக்கத்தையும் பயன்படுத்திக்கொண்டு ஆண்டுதோறும் வாசகர் திருவிழாக்களை நடத்தினார். வெவ்வேறு ஆளுமைகளின் பெயரால் விருதுகளை நிறுவி ஆண்டுதோறும் திருவிழாவைப்போல நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து மிகச்சிறந்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கிப் பாராட்டினார்.

புத்தக வாசிப்பு மீது அவர் கொண்டிருந்த பற்றுதான் அவருடைய  வற்றாத ஊக்கத்துக்கான ஒரே காரணம். ஒரு கட்டுரையில் வேலாயுதம் தன் பள்ளிக்கூட அனுபவத்தைப்பற்றி நினைவுகூரும் தருணத்தில், வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும்போது சாலையில் போகும் மாட்டுவண்டி பின்னாலேயே  யாரோ ஒரு மாணவர் டமாரம், அணில், ஜில்ஜில் என அக்காலத்தில் வெளிவந்த ஏதோ ஒரு சிறுவர் இதழைப் பிரித்து வாய்விட்டு படிக்க, மற்றவர்கள் அதைக் காதுகொடுத்துக் கேட்டபடி செல்லும் காட்சியை விவரிக்கிறார். வாசிப்பு இன்பத்தின் விசைக்கு ஆட்பட்டுவிட்ட பால்யகால அனுபவம் வேலாயுதத்துக்கு ஒரு வரம் போல அமைந்துவிட்டது. அந்த அனுபவத்தின் எல்லையை இன்றளவும் சிறுகச்சிறுக விரிவாக்கியபடியே நடைபோடுகிறார் வேலாயுதம். அவருடைய ஆர்வமும் வாசிப்புப்பழக்கமும் பெருகியபடியே உள்ளன.

தன் வாசகப்பயணத்தில் அவருக்குக் கிடைத்த அனுபவத்துளிகளில் சிலவற்றை ‘இதயம் தொட்ட இலக்கியவாதிகள்’ என்னும் புத்தகம் வழியாக வேலாயுதம் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மு.வரதராசனார், கு.அழகிரிசாமி, கண்ணதாசன், ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, கவிஞர் மீரா, சுஜாதா, அப்துல் ரகுமான், விஜயபாஸ்கரன், வானதி திருநாவுக்கரசு, நா.மகாலிங்கம், பழனியப்ப செட்டியார் என அவர் தம் வாழ்நாளில் சந்தித்த பன்னிரண்டு ஆளுமைகளைப்பற்றியும் தாம் பார்க்க விரும்பிய முன்னோடி ஆளுமையான சக்தி.வை.கோவிந்தன் பற்றியும் எழுதிய நினைவலைகளின் தொகுப்பாக இப்புத்தகம் மலர்ந்துள்ளது.

கண்ணதாசனைப்பற்றிய குறிப்பில் இடம்பெற்றிருக்கும் ஒரு தருணத்தைப்பற்றிய இரு பதிவுகள் மிகமுக்கியமானவை. ஒரு நிகழ்ச்சி தொடர்பாக கோவைக்கு வந்த கண்ணதாசன் விடுதியறையொன்றில் தங்கியிருக்கிறார். அப்போது அவரைச் சந்திப்பதற்காக திரைப்படத் தயாரிப்பாளரான சின்னப்பாத்தேவர் வருகிறார். தன் புத்தகங்கள் சிலவற்றை அவருக்குப் பரிசளிக்க நினைத்த கண்ணதாசன் வேலாயுதம் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு விற்பனையில் இருக்கும் தன் புத்தகங்களில் ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு பிரதியை எடுத்துவரும்படி கேட்கிறார். குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலாயுதமும் புத்தகங்களுடன் அவரைச் சென்று சந்திக்கிறார். தன் புத்தகங்களின் எண்ணிக்கையைப் பார்த்து கண்ணதாசனே மலைத்துப் போகிறார். இவ்வளவு புத்தகங்களா எழுதியிருக்கிறேன் என்று அவரே புன்னகையோடு வியப்பில் மூழ்கிவிடுகிறார். படைப்பின் விசையால் இழுத்துச் செல்லப்படும் ஒரு படைப்பாளியின் கவனம் முழுதும் எப்போதும் படைப்பு சார்ந்ததாகவே இருக்குமே தவிர, தன் சொந்த சாதனைகளைக் குறித்து ஒருபோதும் அவன் நினைத்துப் பார்ப்பதில்லை. கண்ணதாசனின் புன்னகையை வேலாயுதத்தின் சித்தரிப்பில் காணமுடிகிறது.

இன்னொரு தருணம். தன் மீது அன்பு காட்டி, தன்னோடு நெருக்கமாகப் பழகும் வேலாயுதத்துக்கு ஏதேனும் ஓர் உதவியைச் செய்யவேண்டும் என்னும் எண்ணத்தில் கண்ணதாசன், ஒருநாள் அதுவரை வெளிவராத நூலொன்றின் கையெழுத்துப் பிரதியை அவரிடம் கொடுத்து “இதைப் புத்தகமாகப் போட்டுக்கொள்ளுங்கள்” என்று சொல்கிறார். மரியாதையின் நிமித்தமாக அக்கணத்தில் அதை வாங்கிக்கொள்ளும்  வேலாயுதம் அறையைவிட்டு வெளியேறும் முன்பாக அப்பிரதியை கண்ணதாசனிடமே கொடுத்துவிட்டு “உங்கள் நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டுவரும் வானதி பதிப்பகமே இதையும் வெளியிடட்டும். அதுதான் தொழில் தர்மம்” என்று சொல்லிவிட்டு வெளியேறிவிடுகிறார். இருவருமே அத்தருணத்தில் அரிய மனிதர்களாக காட்சியளிக்கிறார்கள்.

ஜெயகாந்தனைப்பற்றிய நினைவுக்குறிப்பில் அவர் ஞானபீட விருது பெற்ற தருணத்தை வேலாயுதம் எழுதியுள்ளார். சுருக்கமான அந்தச் சித்தரிப்பில் இலக்கியத்தின் வலிமை எத்தகையது என்பதை உணர்த்திவிடுகிறார். விழாவில் ஞானபீட விருதை வழங்கியவர் அன்றைய குடியரசுத்தலைவரான அபுதுல்கலாம். விருதுக்குரிய படைப்பாளியின் பெயர் படிக்கப்பட்டதும் அவர் நடந்து சென்று குடியரசுத்தலைவரிடமிருந்து விருதைப்பெற்று திரும்பிவருவதுதான் குடியரசு மாளிகையின் மரபு. ஆனால் அன்று ஜெயகாந்தன் பெயரை அறிவித்ததுமே குடியரசுத்தலைவரே ஜெயகாந்தன் அமர்ந்திருக்கும் இடத்தைத் தேடிச் சென்று மாலையணிவித்து வழங்கினார். மேலும் தன் உரையில் தன் இளமைக்காலத்தில் ஜெயகாந்தனுடைய கதைகளைப் படித்துவிட்டு மணிக்கணக்கில் நண்பர்களுடன் விவாதித்த பழைய நினைவுகளையும் குறிப்பிட்டு மகிழ்ந்தார். தில்லிக்குச் சென்று விருது பெற்றுவந்த பல எழுத்தாளர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுடன் உரையாடியிருக்கிறேன். நான் பார்த்தவரையில் எழுத்தாளர்களின் உறவினர்களோ நண்பர்களோ பொதுவாக அந்த விழாக்களுக்குச் செல்வதில்லை. தொலைவு, செலவு, புரியாத மொழிச்சூழல் என ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி தவிர்ப்பதைத்தான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் ஜெயகாந்தனுக்காக நண்பர்களைத் திரட்டிக்கொண்டு வேலாயுதம் தில்லி வரைக்கும் சென்று விருது பெறும் விழாவைப் பார்த்துவிட்டுத் திரும்பிய செய்தியைப் படிக்கும்போது பெருமையாகவே இருக்கிறது. இலக்கியத்தின் மீதும் இலக்கிய ஆளுமைகள் மீதும் அவருக்குள் நிறைந்திருக்கும் பெரும்பற்றே அத்தகு ஈடுபாட்டுக்கும் விசைக்கும் காரணம்.

நா.பார்த்தசாரதியைப்பற்றிய நினைவுக்குறிப்பில் வேலாயுதம் தன் சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை முன்வைத்திருக்கிறார். இப்படியும் மனிதர்களா என வியப்படைய வைக்கிறது அந்த நிகழ்ச்சி. அது 1959ஆம் ஆண்டு. நா.பார்த்தசாரதி எழுதிய குறிஞ்சிமலர் தொடர்கதையாக வெளிவந்துகொண்டிருந்த நேரம் அது. குறிப்பிட்ட வாரத்தில் வெளியான பகுதியில் அரவிந்தன் என்னும் பாத்திரத்தின் மரணத்தைப்பற்றிய குறிப்பு இடம்பெற்றிருந்தது. வேலாயுதம் போலவே அவருடைய தாயாரும் புத்தகம் வாசிக்கும் வழக்கமுள்ளவர். அன்று அரவிந்தனின் மரணம் நிகழ்ந்த பகுதியைப் படித்துவிட்டு சோகத்தில் மூழ்கிவிட்டார். உணவு சமைக்கும் சிந்தனை கூட அவரிடம் எழவில்லை. அப்படியே சோகத்தில் மூழ்கியபடி பசியை மறந்து அமர்ந்துவிட்டார். மதிய சாப்பாட்டுக்காக கடையிலிருந்து வீட்டுக்கு வந்த வேலாயுதம் அம்மாவின் நிலையைப் பார்த்து புரிந்துகொண்டார். துயரமயமான அந்த வார அத்தியாயத்தை அவரும் படித்துவிட்டு,  பட்டினியோடு கடைக்குத் திரும்பிச் சென்றுவிட்டார்.

நா.பார்த்தசாரதி தொடர்பான மற்றொரு நிகழ்ச்சியும் அவர் மீதான உயர்ந்த எண்ணத்தை உறுதிப்படுத்துகிறது. யாரோ ஒரு நண்பர் தன் வீட்டுக்கு அவரை விருந்துக்கு அழைத்திருக்கிறார். தனக்குத் துணையாக வேலாயுதத்தை அழைத்துக்கொண்டு அவரும் அந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இருவருக்கும் இலைபோட்டு பரிமாறுகிறார்கள். பரிமாறுகிறவர் இருருடைய இலைகளிலும் அசைவ உணவைப் பரிமாறிவிடுகிறார். வேலாயுதம் பதற்றத்தோடு நண்பரை அழைக்கிறார். நா.பார்த்தசாரதி அமைதியாக அவரைக் கையமர்த்திவிட்டு “அசைவ உணவை அப்படியே விட்டுவிட்டு சைவ உணவை மட்டும் சாப்பிடுகிறேன். பேசிப்பேசி இதைப் பெரிதாக்கவேண்டாம்” என்று சொல்லிவிட்டு அமைதியாகச் சாப்பிடத் தொடங்கிவிடுகிறார். அசைவ உணவை கண்ணால் பார்த்தாலேயே வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்கிற இந்த உலகத்தில் நா.பார்த்தசாரதியின் உயர்ந்த பண்பு  வியப்பளிக்கிறது.

நா.பார்த்தசாரதிக்கும் அந்தக் காலத்தில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கும் தொடர்புடைய ஒரு தகவலையும் நா.பா. பற்றிய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் வேலாயுதம். எம்.ஜி.ஆர். ஒருமுறை நா.பார்த்தசாரதியை தொலைபேசியில் அழைத்து ஒரு நிகழ்ச்சியில் உரையாற்ற வருமாறு அழைக்கிறார். இருவருக்கும் இடையில் கட்சி வேறுபாடு இருக்கும்போது எப்படிப் பேசுவது என்னும் தயக்கத்தில் நா.பார்த்தசாரதி மென்மையாக அந்த வேண்டுகோளை மறுக்கிறார். நீங்கள் அரசியல் பேசவேண்டாம், இலக்கியம் பற்றிப் பேசுங்கள் என்று சொல்லி நா.பா.வை ஏற்றுக்கொள்ளும்படி செய்துவிடுகிறார் எம்.ஜி.ஆர். எதிர்பாராதவிதமாக, அந்தச் சமயத்தில்தான் நூலகங்களுக்கு வாங்கப்படும் நூல்களின் எண்ணிக்கையை அறுநூறிலிருந்து இருநூறாக குறைக்கும் ஆணை வெளியாகி, எல்லா எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் ஒருவித கசப்பில் மூழ்கியிருந்தனர். மேடையில் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் பேச்சோடு பேச்சாக நா.பா. அந்த ஆணையைப்பற்றி குறிப்பிட்டு அந்த ஆணை நீக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இடையில் அவரை நோக்கி கையை அசைத்து எதையோ சொல்ல எம்.ஜி.ஆர். முற்பட்ட சமயத்தில் நா.பா. அதைப் பொருட்படுத்தாமல் “நீங்கள் எதைச் சொல்வதாக இருந்தாலும் உங்கள் உரையின்போது சொல்லுங்கள். இப்போது குறுக்கிடவேண்டாம்” என்று அடக்கிவிட்டு தன் உரையைத் தொடர்ந்து நிகழ்த்திமுடித்தார். இறுதியில் உரையாற்றவந்த எம்.ஜி.ஆர். நா.பா.வின் ஆதங்கத்தைக் குறிப்பிட்டு, அந்த அறிவிப்பை ரத்து செய்யும் ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது என்றும் அந்த ஆணையில் கையெழுத்திட்ட பிறகே  கூட்டத்துக்குப் புறப்பட்டு வந்ததாகவும் தெரிவித்தார். அரசியலில் இரு துருவங்களாக இருந்தாலும் மனிதப்பண்பில் இருவரும் ஒருவரையொருவர் மதித்து நடந்த வரலாற்றுத் தருணத்துக்கு வேலாயுதம் எழுதியிருக்கும் குறிப்பு சாட்சியாக அமைந்துவிட்டது.

பதிப்பாசிரியர் பழனியப்ப செட்டியார் பற்றிய நினைவுக்குறிப்பில் அவர் பால்ய காலத்தில் படித்த பள்ளிக்கூடத்தைப்பற்றிய குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. அந்தப் பள்ளிக்கூடத்தை நிறுவியவர் கதிரேசன் செட்டியார். அவர் கணக்கு போடும் வேகம் கற்பனைக்கு எட்டாதது. அதிவிரைவில். கீழ்வாயிலக்கம், எண்சுவடி வாய்பாடுகளை மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றல் நிறைந்தவர். கதிரேசன் எண்சுவடி, கதிரேசன் வட்டிக்கணக்கு, கதிரேசன் பெருக்கல் வாய்ப்பாடு- புதிய முறை ஆகிய நூல்களை அவர் உருவாக்கினார். காந்திய வழிகளால் ஈர்க்கப்பட்டு, சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டவர் அவர். தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி பயிலும் பொருட்டு காந்தியடிகளின் பெயரைச் சூட்டி அந்தப் பாடசாலையை நிறுவினார்.  காந்தியின் பெயரைத் தாங்கிய பள்ளிக்கூடம் என்பதால் சமஸ்தானத்தின் உதவித்தொகை அவருக்கு மறுக்கப்பட்டது. ஆயினும் மனம் தளராத கதிரேசன் செட்டியார் தன் சொந்தப்பணத்தைக் கொண்டே பள்ளியை நடத்தினார். இந்தப் பள்ளியில் ப.ஜீவானந்தம் சிறிது காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பழனியப்பன் படித்த பள்ளியைப்பற்றி எழுதும்போது வேலாயுதம் இத்தகு தகவல்களையும் தம் நினைவிலிருந்து சொல்கிறார். இன்று கதிரேசன் செட்டியாரை நினைவில் வைத்திருப்பவரே இல்லை. அவருடைய தியாகவாழ்க்கையைப்பற்றி எடுத்துரைக்கக்கூட யாரும் இல்லை. அவரைப்பற்றி ஏதேனும் புத்தகமோ, மலரோ வந்திருக்கிறதே என்றும் தெரியவில்லை. இப்படிப்பட்ட சூழலில் வேலாயுதத்தின் இக்குறிப்பு மிகமுக்கியமாகத் தோன்றுகிறது.

கதிரேசன் செட்டியாரிடம் மூன்றாம் வகுப்புவரை கற்றவர் பழனியப்பன். பிறகு தன் தந்தையுடன் ரங்கூனுக்குச் சென்று மூன்றாண்டுகள் கல்வி கற்றார். மீண்டும் தமிழகத்துக்கு வந்து சிதம்பரத்தில் சிறிது காலம், சென்னையில் சிறிது காலம் என படித்து பள்ளிக்கல்வியை முடித்தார். தொழில் செய்ய மகனை மலேசியாவுக்கு அனுப்ப நினைத்த தந்தையின் விருப்பத்துக்கு மாறாக தன் தாயார் கொடுத்த நாலாயிரம் ரூபாயை முதலீடு செய்து திருச்சியில் பதினெட்டு ரூபாய் வாடகையில் எழுதுபொருள் கடையைத் தொடங்கினார். நண்பர்கள் கொடுத்த ஆலோசனைக்கு இணங்கி, எழுதுபொருட்களுடன் புத்தகங்களையும் வாங்கி விற்றார். முதலில் பொது அறிவுநூல்கள், இராமாயணம், மகாபாரதம் ஆகிய நூல்களிலிருந்து தொடங்கி புதுமைப்பித்தன், வ.ரா. போன்ற பிரபலமான எழுத்தாளர்களின் புத்தகங்களையும் விற்கத் தொடங்கினார். கோனார் தமிழ் உரைநூல்கள் மிகக்குறுகிய காலத்தில் அவரை உச்சத்துக்கு அழைத்துச் சென்றன. செட்டியார் சென்னையில் புதிதாக உருவாக்கிய அலுவலகக்கட்டடத்துக்கு கோனார் மாளிகை என்று பெயர்சூட்டினார். ஐயம்பெருமாள் கோனார் தம் வீட்டுக்கு பழனியப்பா இல்லம் என்று பெயர்சூட்டினார். தம் நெஞ்சில் ஊறிய நன்றியுணர்ச்சியை இப்படி இருவரும் இருவேறு வழிகளில் புலப்படுத்தினர். பத்து பக்கங்களில் பழனியப்பன் செட்டியாரின் வாழ்க்கை வரலாற்றையே ஒரு நாவலின் சுருக்கத்தைப்போல பதிவு செய்துவிட்டார் வேலாயுதம்.  

பதின்மூன்று ஆளுமைகளைப்பற்றிய நினைவலைகளைத் தொகுத்துச் செல்லும் போக்கில், இடையிடையே படிக்க நேரும் சிற்சில தகவகள் வழியாக பதினாலாவதாக மற்றொரு ஆளுமையைப்பற்றியும் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. எளிய கடைச்சிப்பந்தியாக வாழ்க்கையைத் தொடங்கிய ஒரு சிறுவன் மெல்ல மெல்ல தன் தளராத உழைப்பாலும் வற்றாத ஊக்கத்தாலும் நேர்மையான வழியில் தமிழ் எழுத்தாளர்களும் வாசகர்களும் பாராட்டும் நட்பார்ந்த பதிப்பாசிரியராக வளர்ந்தோங்கிய  வேலாயுதம் அவர்களே அந்த ஆளுமை. 

 

(இதயம் தொட்ட இலக்கியவாதிகள். விஜயா மு.வேலாயுதம், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை – 600017. விலை. ரூ.175)

 

(புக் டே – 23.06.2022)