Home

Wednesday 8 June 2022

அன்னபூரணி மெஸ் - சிறுகதை

  

”வணக்கம். வாங்கவாங்க. நான்தான் ராஜாராமன். இதான் கடைசி பந்தி சார். இதோ இப்ப முடிஞ்சிடும். அதுக்கப்பறமா ரூம பார்க்கலாம். ஒரு பத்து நிமிஷம் அப்படி ஃபேன் கீழ காத்தாட உக்காருங்க.  நல்ல வெயில்ல வந்துருக்கிங்க. வேர்த்துவேர்த்து ஊத்துதே” என்று சொன்னவரின் முகத்தைப் பார்த்ததுமே தனக்கு இந்த இடம் உறுதியாகப் பொருந்திவரும் என்ற நம்பிக்கை பாலகுருவின் மனத்தில் பிறந்தது. ஆனால் எப்படி அந்த எண்ணம் வந்தது என்று தெரியவில்லை. அவனுடைய குரல் அல்லது உடல்மொழி என ஏதோ ஒன்று அதை விதைத்துவிட்டது.

“உங்களுக்கும் இலைபோட சொல்லவா? ஒரே ஒரு வாய் சாப்டுங்க. சைவ சாப்பாடுதான். ஆனா எங்க மெஸ் வத்தக்குழம்புக்கு ஈடு இணையே இல்லைன்னு ஊரே சொல்லும்” என்றபடி அவனைப் பார்த்தான் ராஜாராமன். “நான் சாப்ட்டுதான் கெளம்பனேன். வேணாம்” என்று புன்னகையோடு மறுத்தான் பாலகுரு.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆறு இடங்கள் மாறியதில் பல கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டுவிட்டன. எதுவுமே எளிதில் மறக்கமுடியாதவை. சில அற்பக்காரணங்களை முன்னிட்டு வீட்டுச் சொந்தக்காரர்களோடு உருவாகும் அதிருப்திகள் அவனை அவமானமுற்றவனாக உணரவைத்து வெளியேறவைத்துவிட்டன. ஒரு வேகத்தில் தன் சேமிப்புகளையெல்லாம் முன்பணமாகக் கொடுத்து, நேதாஜி நகரில் வளர்ந்துவரும் ஓர் அடுக்ககத்தில் நாலாவது தளத்தில் ஒரு வீட்டைப் பதிவு செய்து வைத்துவிட்டான். கைக்கு வர இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளாவது தேவை. அதற்குப் பிறகு இந்த அலைச்சல்கள், கெஞ்சல்கள், மோதல்கள், ஏமாற்றங்கள் எதற்குமே அவசியம் ஏற்படாது என்று நினைத்தான்.

ராஜாராமன் தட்டு நிறைய அப்பளங்களை எடுத்துவந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களின் இலைகளில் ஒவ்வொன்றாக வைத்துவிட்டுச் செல்வதைப் பார்த்தான். மற்ற ஆட்கள் சோறும் குழம்பும் பொரியலும் பரிமாறினார்கள். வற்றக்குழம்பின் மணமும் கத்தரிக்காய்ப் பொரியலின் மணமும் காற்றில் அலைபாய்ந்தபடி இருந்தது. சோற்றையும் குழம்பையும் சேர்த்து கூழாகப் பிசைந்து வைத்துக்கொண்டு குனிந்த தலை நிமிராமல் ஒருவர் உருட்டி உருட்டி எடுத்தார். காற்றில் படபடக்கும் அப்பளத்தின்மீது ஒரு கை சோற்றை அள்ளிவைத்துவிட்டு பொறுமையாகச் சாப்பிட்டார் இன்னொருவர். வேகவேகமாக அள்ளியள்ளிச் சாப்பிட்டு முடித்த ஒரு அம்மா இரண்டாவது முறையாக சோறு வாங்கிக்கொள்வதற்காக, சோற்றுவாளியை வைத்திருப்பவர் தனக்கு அருகில் வரும் கணத்துக்காகக் காத்திருந்தார். வாய்க்குள் நாலு பக்கமும் நாக்கைவிட்டுத் துழாவி பருக்கைகளை இழுத்து கண்கள் மூடிய நிலையில் ஒருவர் அசைபோடுவதை அவன் பார்த்தான். ஒருகணம் அவன் உடல் புல்லரித்தது. ஆட்கள் ஒருசேர உட்கார்ந்து உண்ணுவதை அவன் பலமுறை பார்த்திருக்கிறான். அப்போதெல்லாம் அவன் அவர்களில் ஒருவனாகவே இருந்தான். இப்போதுதான் முதன்முறையாக வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பதற்றமும் பரவசமும் இணைந்த கலவையான உணர்வில் அவன் மனம் அலைபாய்ந்தது. .

சாப்பிட்டு எழுந்தவர்கள் அனைவரும் கைகளைக் கழுவிக்கொண்டு சுவரோரமாக இருந்த மேசையில் வைக்கப்பட்டிருந்த பெட்டிக்குள் ஒரேஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டுவிட்டுச் சென்றார்கள். அவர்கள் போடுகிறார்களா இல்லையா என்பதைக்கூட ராஜாராமன் கவனிக்கவில்லை. அவர்கள் செலுத்தும் வணக்கத்துக்கு நெஞ்சுக்கு நேராக கைகுவித்து தலைகுனிந்து பதில்வணக்கம் செலுத்துவதிலேயே கண்ணும்கருத்துமாக இருந்தான்.

சாப்பிட இனி யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு ராஜாராமன் அவனுக்கு அருகில் வந்தான். அவனிடம் ”அது என்ன, எல்லாரும் ஒரே ஒரு ரூபா போட்டுட்டு போறாங்க” என்று ஆச்சரியமாகக் கேட்டான் பாலகுரு. “அதுதான் இந்த மெஸ் சம்பிரதாயம். ஆனா ரூபா போட்டாலும் சரி, போடாட்டாலும் சரி, வயிறு நெறய சாப்பாடு போட்டு அனுப்பணும்ங்கறது எங்க மொதலாளி கட்டள” என்ற ராஜாராமன் “வாங்க, மெத்தைக்கு போகலாம். அங்கதான் ரூம் இருக்குது” என்றபடி அவனை அழைத்துக்கொண்டு பக்கவாட்டில் வளைந்து சென்ற படிக்கட்டுகளில் ஏறினான்.

“ஒரு ரூபாய்க்கு சாப்பாடா?” ஆச்சரியத்துடன் கேட்டான் பாலகுரு.

“என்ன, நம்ப முடியலையா? அதெல்லாம் அப்பறமா சொல்றன். மொதல்ல ரூம பாருங்க” என்றான் ராஜாராமன்.

“இப்பதான் கீதா பவன்ல சாப்டுட்டு வரன். அளவு சாப்பாடு அம்பத்தஞ்சு ரூபா. நந்தினியில நாப்பத்தெட்டு. முருகேஷ்ல அம்பது. பஸ் ஸ்டாண்ட்லதான் ஜனதா சாப்பாடு முப்பத்தஞ்சி. நீங்க எப்படி ஒரு ரூபாய்க்கு குடுக்கறிங்க.”

“அதான் அப்பறமா சொல்றன்னு சொன்னனே. வாங்க, மொதல்ல மெத்தைக்கு போவலாம்”

மெத்தையில் பாதி இடத்தை அடைத்துக்கொண்டு ஒரு சின்ன தோட்டம் இருந்தது. தக்காளிச் செடிகளையும் கத்தரிக்காய்ச் செடிகளையும் அவன் உடனடியாகக் கண்டுபிடித்துவிட்டான். மேலும் புதினா. கறிவேப்பிலை. கொத்துமல்லி. இன்னும் ஏதேதோ இருந்தன. நேரிடையாக வெயில் பட்டுவிடாதபடி ஒரு கூரை காணப்பட்டது. மீதி இடத்தில் எதிரும்புதிருமாக இரண்டு அறைகள். அவற்றில் ஒன்றைத் திறந்தபடி, “வேலை வேகத்துல உங்க பேர கேக்கவே மறந்துட்டன்……” என்று இழுத்தான்.

“பாலகுரு”

ஒரு புன்னகையோடு தலையசைத்தபடி “சரி, ரூம நல்லா பாருங்க” என்றான் ராஜாராமன்.

சுவரோரமாக ஒரு கட்டில். பக்கத்தில்  மேசையும் நாற்காலியும் இருந்தன. கதவுக்கு அருகில் ராமனுக்கு பழம் வழங்கும் சபரியின் படம். அதற்கு அருகில் ஒருபுறம் லட்சுமணனும் மறுபுறம் சீதையும் நிற்க ராமனின் கால்பணிந்து அனுமன் சேவைசெய்யும் படம். முகம் பார்க்கிற பெரிய கண்ணாடியொன்றும் சுவரில் தொங்கியது. ஒருகணம் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து கலைந்துகிடந்த தலைமுடியை கைவிரல்களாலேயே அழுத்தியும் ஒதுக்கியும் சரிப்படுத்தத் தொடங்கினான் பாலகுரு. ”எந்த கம்பெனியில வேலை செய்றிங்க? என்ன வேலை?” என்று ராஜாராமன் கேள்வி கேட்டபிறகுதான் அவனுக்கு சுயநினைவு திரும்பியது. புன்னகையுடன் “சேல்ஸ் ஸைட்ல இருக்கேன் சார். நாலஞ்சி கம்பெனி ப்ராடகட்ஸ ஒரே நேரத்துல மார்க்கெட் பண்றேன்” என்றான்.

ராஜாராமன் ஸ்விட்சை அழுத்தி விளக்கையும் மின்விசிறியையும் போட்டபடி “ரெண்டு சுவத்தலமாரி இருக்குது. துணிமணி, பொட்டி எது வேணும்னாலும் வச்சிக்கலாம். பாத்ரூம், டாய்லெட் எல்லாமே பெட்ரூமோடு சேர்ந்திருக்குது” என்றான். பாலகுரு எல்லாக் கதவுகளையும் திறந்து எல்லாவற்றையும் ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பினான். “என்ன சார், புடிச்சிருக்குதா?” என்று ராஜாராமன் கேட்டதும், சம்மதத்தின் அடையாளமாக புன்னகையுடன் தலையசைத்தபடி, “ஒத்த ஆளுக்கு இது பெரிய அரண்மனை” என்றான்.

“சரி வாங்க, நம்ம ரூமுக்கு போவலாம்” என்றபடி விளக்குகளையெல்லாம் அணைத்துவிட்டு அந்த அறையைச் சாத்திக்கொண்டு தன் அறைக்கு அழைத்துச் சென்றான்.

”வாடகய பத்தி ஒன்னும் சொல்லலியே?”

“நாலாயிரம் வாடக. எட்டாயிரம் அட்வான்ஸ் சார். இதுக்கு முன்னால இருந்த ஆளு அப்படிதான் குடுத்தாரு. பெங்களூருல வேற ஏதோ ஒரு கம்பெனியில வேல கிடைச்சிட்டுதுன்னு காலிபண்ணிட்டு போயிட்டாரு. நீங்களும் அப்படியே குடுத்திருங்க”

அறையைத் திறந்த ராஜாராமன் ஒரே நிமிடத்தில் மேசை மீதிருந்த எலுமிச்சம்பழத்தை வெட்டி ஜூஸ் தயாரித்து ஒரு தம்ளரில் நிரப்பி ”மொதமொதல்ல நம்ம ரூமுக்கு வரீங்க. இந்தாங்க இத குடிங்க” என்றான். கசகசக்கவைத்த வெப்பத்துக்கு அந்தச் சாறு இதமாக இருந்தது.

”இப்ப சொல்லுங்க, ஏன் ஒரு ரூபாய்க்கு சாப்பாடு போடறிங்க?” என்ற கேள்வியோடு பக்கத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான்  பாலகுரு. ராஜாராமன் அவனுடைய முகத்தில் தெரிந்த ஆர்வத்தை ஒருகணம் மகிழ்ச்சி ததும்பப் பார்த்தபிறகு புன்னகைத்தான்.

“வாழ்க்கையில ரொம்ப அடிபட்ட ஆளு எங்க மொதலாளி. சின்ன வயசுல கொலுத்துவேல செய்யற மேஸ்திரியாதான் அவரு வாழ்க்கை ஆரம்பிச்சிது. அந்த காலத்துல யாரோ ஒரு ஏஜெண்ட் குவைத்துக்கு போவற மேஸ்திரிங்கள்ளாம் லட்சலட்சமா சம்பாதிக்கலாம்ன்னு ஆசைய காட்டியிருக்கான். அப்பா காலத்துல வாங்கன கடன், அக்கா தங்கச்சிங்களுக்கு கல்யாணம் செய்யணும்ன்னு  அவருக்கும் ஏகப்பட்ட பொறுப்பு. எதைஎதையோ வித்து அவன்கிட்ட பணத்த கட்டிட்டு குவைத்துக்கு போயிட்டாரு. போன அடுத்த நிமிஷமே, அங்க இருந்த அரபிக்காரனுங்க இவரு பாஸ்போர்ட்ட புடுங்கிகினு பாலைவனத்துல ஒட்டகம் மேய்க்க அனுப்பிட்டானுங்க. மாசம் பத்தாயிரம் ரூபா சம்பளம், தங்கறதுக்கு ஏசி ரூம், போகவர வண்டின்னு ஏஜெண்ட் கத உட்டதுலாம் பொய்னு அப்பவே புரிஞ்சிட்டுது” ராஜாராமன் அந்தச் சம்பவத்தைச் சொல்லும்போது தனக்கு ஏற்பட்ட கஷ்டமாகவே உணர்ந்ததுபோல கண்கள் கலங்க ஒருகணம் நிறுத்தினான்.

பிறகு தொடர்ந்து “ஒரே ஒரு வேள சாப்பாடு, பத்தோட பதினொன்னா ஒண்டிக்கற மாதிரி ஒரு அறை. வெறும் ஆயிரம் ரூபா சம்பளம். ரெண்டு வருஷத்த பல்ல கடிச்சிகிட்டு ஓட்டன பிறகுதான் பாஸ்போர்ட் கைக்கு கெடச்சிது. கூட போயிருந்த ஆளுங்கள்ளாம் இந்தியாவுக்கு ஓடியாந்துட்டாங்க. இவருமட்டும் புடிவாதமா அங்கயே இருந்து சரியான ஆள்மூலமா சரியான கம்பெனிய புடிச்சி, சரியான வேலைய தேடிகிட்டாரு. அந்த வேலை அவுருடைய தலயெழுத்தயே மாத்திடுச்சி. அவருடைய விசுவாசமான வேலை அந்த கம்பெனி அரபிக்காரனுக்கு ரொம்ப புடிச்சிட்டுது. ஒரு வருஷத்துக்கு பிறகு அவர சூப்பர்வைசரா மாத்திட்டான். அடுத்து ரெண்டு வருஷத்திலயே மானேஜர் ப்ரமோஷன். அஞ்சாறு வருஷத்துல கைநிறைய சம்பாதிச்சி எடுத்துகிட்டு இங்க ஊருக்கே வந்துட்டாரு” என்றான்.

“அதுக்கப்புறம் போகவே இல்லையா?”

“இல்ல. இங்கயே கன்ஸ்ட்ரக்‌ஷன் வேலய எடுத்து செய்ய ஆரம்பிச்சாரு. ஒரு நேரத்துல அவருகிட்ட நாப்பது அம்பது பேரு வேலை செஞ்சாங்க. அவுங்களுக்குலாம் நல்ல சாப்பாடு தரணும்ன்னுதான் இந்த அன்னபூரணி மெஸ்ஸ ஆரம்பிச்சாரு. அது எல்லாமே இலவசம். மூணு வேளையும் இங்கேருந்து வேன்ல சாப்பாடு போயிடும். மொதலாளி தொட்டதுலாம் பொன்னாய்ட்டுது. நாலு பங்களா, ஒரு தென்னந்தோப்பு, பத்து காணி நெலம். கல்யாண கேட்டரிங், நாலு டூரிஸ்ட் பஸ்னு இன்னைக்கும் வளந்துகிட்டே போவுது. மெஸ்னு பேர போட்டுடு இங்க வந்து சாப்பாடு கேக்கறவங்களுக்கு இல்லைன்னு எப்படி சொல்லமுடியும்? அதனாலதான் இந்த சிஸ்டம். ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு. அதயும் குடுக்க சக்தியில்லாதவங்க சங்கடமில்லாம சாப்ட்டுட்டு போவணும்ங்கறதுக்காக அந்த உண்டி ஏற்பாடு. பசி, கோபம், காமம் மூணும் உலகத்துல கட்டுக்கடங்காம எரியற நெருப்புன்னு சொல்வாரு எங்க மொதலாளி. கடைசி ரெண்டு நெருப்பயும் சம்பந்தப்பட்ட ஆளே நெனச்சாதான் அடக்கி நிறுத்தமுடியும். அதுலாம் அவன் பொறுப்பு. ஆனா பசிநெருப்பு ஒன்னமட்டும் இன்னொரு ஆளு மனசு வச்சா அணைச்சிடமுடியும்ன்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பாரு.”

சில கணங்கள் ஏதோ எண்ணங்களில் உறைந்தவனாக அப்படியே அமர்ந்திருந்தான் ராஜாராமன்.

“அந்த உண்டி பணத்த கூட எங்க மொதலாளி தொடமாட்டாரு. ஒரொரு வாரமும் ஒரொரு ஆசிரமத்துக்கு போயிடும். சிறுவர்கள் இல்லம், முதியோர் இல்லம், பார்வையற்றோர் இல்லம், ஊனமுற்றோர் இல்லம்னு தேடி பார்த்து சேத்துடுவாங்க.”

“மெஸ்க்கு தேவையானத வாங்க பணத்துக்கு எங்க போவிங்க?”

“அது அவருடைய மானேஜர் வேல. காலையில சமையல்காரங்க வரதுக்கு முன்னாலயே ஒவ்வொரு நாளும் எல்லாத்தயும் வேன்ல வாங்கி கொண்டாந்து போட்டுட்டு போயிடுவாரு”

அடுத்து என்ன கேட்பது என்று புரியாமல் ராஜாராமன் முகத்தைப் பார்த்து சிரித்தான் பாலகுரு. “இங்கதான இருக்கப் போறிங்க. போகப்போக எங்க மொதலாளிய நீங்களே புரிஞ்சிக்கலாம்” என்று ராஜாராமனும் சிரித்தான்.  பிறகு மெதுவாக “கெளம்பலாமா?” என கேட்டபடியே எழுந்து மின்விசிறியை நிறுத்திவிட்டு கதவுகளைச் சாத்தினான். “மதியானம் பன்னெண்டு மணிக்கு பந்தி ஆரம்பிச்சா ரெண்டரை மூணு வரைக்கும் ஓடும். எப்படியும் நூறு நூத்தியம்பது பேருக்கும் மேல சாப்ட்டு போவாங்க.”

இருவரும் வெளியே வந்து தோட்டத்துக்கு அருகில் சிறிது நேரம் நின்றார்கள். தொட்டிகளுக்கு அருகில் கட்டப்பட்டிருந்த கொடியில் உலர்ந்த துணிகளையெல்லாம் எடுத்து உதறி சுவரோரமாக இருந்த சிமெண்ட் கட்டைமீது வைத்துவிட்டுத் திரும்பினான் ராஜாராமன், பிறகு “மொதலாளி ஆளுன்னு என்னபத்தி உங்களுக்கு தோணியிருக்கும், இல்லயா?” என்று கேட்டான். தொடர்ந்து பாலகுருவின் கண்களில் ஒருகணம் படர்ந்து மறைந்த திகைப்பைக் கண்டு அவன் புன்னகைத்தான்.

“நானும் ரெண்டு வருஷத்துக்கு முன்னால உங்களபோல இங்க வாடகைக்கு வந்த ஆளுதான் சார். முத்தியால்பேட்டைல ஒரு இரும்புக்கம்பெனியில சூப்பர்வைசரா இருந்தேன். அப்ப திருஞானம்னு ஒரு பெரியவர்தான் இந்த மெஸ்ஸ பார்த்துகிட்டாரு.  திடீர்னு ஒருநாள் நெஞ்சுவலியில அவரு செத்துட்டாரு. அப்ப பெரியவரு நெருக்கடிய சமாளிக்கறதுக்காக என்ன இந்த வேலைய ஒரு வாரம் பாத்துகிட சொன்னாரு. சரி, நம்மால முடிஞ்ச சின்ன உதவின்னு நெனச்சி நானும் பாத்துகிட்டேன். அடுத்த வாரம் அவரே இங்க வந்து, மெஸ்ஸ நீயே பாத்துக்கறியா தம்பின்னு கேட்டாரு. எனக்கு ஒன்னுமே புரியலை. எனக்கு வேலை இருக்குதே சார்னு சொன்னேன். உனக்கு அங்க என்ன சம்பளம் தராங்கன்னு  கேட்டாரு. பத்தாயிரம் ரூபா சார்னு சொன்னேன். சரி, நான் உனக்கு பதினஞ்சாயிரம் தரேன்னு சொல்லி ஒத்துக்க வச்சிட்டாரு. அன்னையிலேருந்து இப்படியே வண்டி ஓடுது”

இருவரும் படிக்கட்டுகளில் இறங்கி வந்தார்கள். ராஜாராமன் நெகிழ்ந்த குரலில் பேசிக்கொண்டே வந்தான். “பசிக்கற ஆளுக்கு சாப்பாடு போடறதுல எப்படிப்பட்ட சந்தோஷம் இருக்குதுன்னு இந்த ஒரு வருஷத்துல நல்லா புரிஞ்சிட்டுது சார். மனசு அப்படியே பஞ்சுமாதிரி பறக்கும் சார். நம்ம கையில ஒரு கோடி ரூபா இருந்தாலும் இப்பிடி ஒரு சந்தோஷத்த அனுபவிக்கமுடியாது. இந்த சந்தோஷம் எனக்கு  கிடைக்கணும்ன்னே விதி இங்க கொண்டாந்து சேர்த்திருக்குதுன்னு நெனைக்கறேன்”

ராஜாராமன் மெஸ்க்குள் சென்றதும், அவரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினான் பாலகுரு. அன்று மாலையிலேயே ஒரு ஆட்டோவில் தன் பொருட்களோடு அந்தப் புதிய இடத்துக்கு வந்துவிட்டான்.

ஒருசில நாட்களிலேயே பாலகுருவுக்கு அந்த இடத்தோடு நல்ல ஒட்டுதல் உருவாகிவிட்டது.  வானத்தைப் பார்த்தபடி இருக்கும் மாடித் தோட்டத்தை ஓய்வு நேரத்தில் யாரும் சொல்லாமலேயே பராமரிக்கத் தொடங்கிவிட்டான். அதிகாலை நேரங்களில் தோட்டத்துக் கூரையின்மேல் உட்கார்ந்து கூவும் குயில்களின் குரலோசை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. தன் மனம் புதிதாக உணரத் தொடங்கிய உற்சாகத்துக்கெல்லாம் ராஜாராமனே முழுக்காரணமென்று நினைத்தான். அவன்மீது அன்பும் மரியாதையும் பெருகியது.

தொடக்கத்தில் ராஜாராமன் சொன்ன மெஸ் புராணக்கதைகளையெல்லாம் அவனுக்கு சுவையாகவே இருந்தன. ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பிறகு எல்லாமே சலிப்பூட்டுபவையாகத் தோன்றத் தொடங்கியது. வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய வயதில் இப்படி சாமியார்மாதிரி இருக்கிறானே என்றும் தோன்றியது. தன்னைப்போல ஒரு சாதாரண இளைஞனாக அவனை மாற்றவேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாக அவனே நினைத்துக்கொண்டான். அதனால் நேரம் கிட்டும்போதெல்லாம் அவனிடம் பணம், வசதி, பெருமை, சுகபோக வாழ்க்கை என்றெல்லாம் வார்த்தைகளால் சீண்டிப் பார்க்கத் தொடங்கினான்.  சீண்டும் வார்த்தைகளை பயன்படுத்தும் சமயங்களில் தன் மனம் அளவற்ற ஆனந்தத்தில் மிதப்பதை அவன் உணர்ந்தான். ராஜாராமனின் மனத்தைக் கலைத்து, தன் வழியைநோக்கித் திருப்பி அழைத்துவருவதை ஒரு லட்சியமாகவே கருதிக்கொண்டான் அவன். பிறகு மெல்லமெல்ல அது ஒரு வெறியாகவே மாறியது ஒன்றும் அவ்வளவு சுலபமான வேலையில்லை என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் அவன் மனம் உணர்ந்து. இருந்தாலும் தன் முயற்சியில் பின்வாங்கக்கூடாது என்னும் எண்ணத்தில் இடைவிடாமல் அவன்மீது வலையை வீசியபடியே இருந்தான். ராஜாராமனோ எல்லாவற்றையும் ஒரு புன்னகையால் கடந்துபோனான்.

”இன்னைக்கு ராத்திரி நாம சரக்கு அடிக்கலாமா?” என்று ஒரு விடுமுறை நாளில் ஆரம்பித்தான் பாலகுரு. ”ஐயையோ, அந்த பழக்கமே எனக்கு கெடயாதே” என்றபடி உதட்டைப் பிதுக்கி கைகளை விரித்து புன்னகைத்தான் ராஜாராமன். “வேணும்ன்னா நீங்க அடிக்கலாம். அதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்ல” என்று தோளைக் குலுக்கினான்.

தன் முகத்தில் ஏமாற்றம் படர்வதை பாலகுருவால் மறைத்துக்கொள்ளவே முடியவில்லை. “எங்களுக்கு மட்டும் காலேஜ்ல க்ளாஸ் வச்சியா கத்துக்குடுத்தாங்க? வாரம் பூரா ஊரு உலகம்லாம் சுத்தறோம். சும்மா ஒரு ராத்திரி ரிலாக்ஸா இருந்தா மனசுக்கு ஒரு தெம்பு. ஒரு உற்சாகம். அப்படி நாலுபேரு கூட பழகி ஒட்டிகிட்டதுதான். என்ன சொல்றிங்க?”  என்றான்.

“தாராளமா நீங்க எடுத்து வந்து சாப்புடுங்க. நான் வேணும்ன்னா உங்க பாட்டில் முடியறவரைக்கும் கம்பெனி தரேன்” என்று வழக்கமான புன்னகையைச் சிந்தினான் ராஜாராமன். 

மேசையில் துணிவிரிப்பை விரித்து அதன்மீது பாட்டிலையும் கோப்பைகளையும் அலமாரியிலிருந்து எடுத்துவந்து வைத்தான். சில மிடறுகள் அருந்திய பிறகு, கைப்பேசியில் பழைய பாடல்களை தேடித்தேடி பாடவைத்தான். இசைக்கோவைகளை அசைபோட அசைபோட அவர்கள் உரையாடல் எப்படியோ  மெல்லிசையின் பக்கம் போனது. அப்படியே டி.எம்.எஸ். பற்றியதாக மாறி, அவருடைய பாடல்களைப் பட்டியலிடுவதில் வந்து நின்றது. அதிலிருந்து உத்வேகம் கொண்ட பாலகுரு “காசேதான் கடவுளடா, அந்த கடவுளுக்கும் அது தெரியுமடா  பாட்ட கேட்டிருக்கிங்களா ராஜாராமன்? நான் ஒரு நூறு தரமாச்சிம் கேட்டிருக்கறேன். இன்னைய வாழ்க்கை நிலைமைக்கு பொருத்தமான பாட்டு” என்றபடி அந்தப் பாடலை சில கணங்கள் முணுமுணுத்தான்.  பிறகு அடங்கிய குரலில் “பணம் மட்டும் கைநிறைய இருந்தா, எல்லா மரியாதயும் கெளரவமும் தானா தேடி வரும் ராஜாராமன்”  என்றான் பாலகுரு.

“பணத்தால சம்பாதிக்கிற மரியாத பணமில்லாம போனதும் படுத்துடும். தண்ணியில்லாத செடிமாதிரி. ஆனா நம்ம பண்பால சம்பாதிக்கற மரியாத எப்பவும் பனமரம் மாதிரி நெலைச்சி நிக்கும்” என்றான் ராஜாராமன்.

அதைத் தொடர்ந்து உரையாடல் எப்படியோ வேறு திசையில் விலகி வெகுதூரம் சென்று முடிந்துவிட்டது. அப்புறம் இருவருமே தூங்கச் சென்றுவிட்டார்கள். 

மற்றொரு நாள் இரவில் மாடியில் நின்றபடி கீழே சாலையில் நீண்ட வரிசையில் சென்றுகொண்டிருந்த ஒரு திருமண ஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஊர்வலத்தின் அலங்காரத்தைப்பற்றிய உரையாடலாகத் தொடங்கிய அவர்களுடைய பேச்சு எப்படியோ வழக்கமான திசையை நோக்கித் திரும்பிவிட்டது.

“பணத்துடைய அருமை பணக்காரனுங்களுக்குதான் நல்லா தெரியும்னு சொல்வாங்க. பாதாளம்வரைக்கும் பாயற சக்தி அதுக்கு உண்டுங்கறத அவனால மட்டும்தான் புரிஞ்சிக்கமுடியும். லட்சுமிய நடுவீட்டுல வச்சி கொண்டாடறதுக்கும் அவனுக்குத்தான் தெரியும். பரம்பரைபரம்பரையா அந்த பக்தி அவனுங்க ரத்தத்துலயே இருக்குது. நம்மளமாதிரியான அன்னாடங்காய்ச்சிங்களுக்கு வவுறு காஞ்சி கெடக்கற சமயத்துலதான் அந்த நெனப்பு வரும். வவுறு அடங்கிடுச்சின்னா எல்லாத்தயும் காத்துல பறக்க உட்டுருவம்.”

“பணத்த எப்ப நெனைக்கணுமோ அப்பதான் நெனைக்கணும் பாலகுரு. இருபத்திநாலுமணி நேரமும் பணத்தயே நெனைக்கறவனுக்கு பைத்தியம்தான் புடிக்கும்.”

“நீங்க சொல்றது தப்பு ராஜாராமன். ஒரு குதிரைப்பந்தயத்துல ஜெயிக்கணும்ன்னு நெனைக்கறவன் இருபத்திநாலு மணிநேரமும் குதிரையையே நெனச்சிட்டுதான் இருந்தாவணும். அவன் மனசுல தடதடன்னு குதிரை  ஓடற சத்தம் கேட்டுகினே இருக்கணும். ஜெயிக்கறவனுக்கு உள்ள விதி அது. அத மீறவே முடியாது.”

”வாழ்க்கைங்கறது ஜெயிச்சி காட்டவேண்டிய நீச்சல்குளம் கெடையாது பாலகுரு. குளிச்சி விளையாடி ஆனந்தப்படவேண்டிய சாதாரண குளம்.”

பாலகுருவின் மனம் சட்டென சமநிலை இழந்தது. “இங்க பாருங்க ராஜாராமன். வயசான காலத்துல பேசவேண்டிய தத்துவங்களை இப்ப பேசிட்டிருக்கிங்க நீங்க. வீடு, வாசல், நெலம்னு ஓடிஓடி சொத்து தேடவேண்டிய பருவம் இது. பத்துபன்னெண்டு முயல்களை தேடி ஓடக்கூடிய வேட்டைக்காரன் கையிலதான் நாலஞ்சி முயலுங்களாவது மாட்டும். ஓடவே மாட்டேன்னு நின்னுட்டா ஓணானகூட புடிக்கமுடியாது. ஒங்க மொதலாளி இருக்கறாரே, அவர் என்ன ஓடாத ஆளா? இல்ல ஓடி முடிச்சிட்ட ஆளா? இன்னும் ஓடிகிட்டேதான இருக்காரு? அத ஏன் நீங்க யோசிக்கமாட்டறிங்க?  அவருக்கு ஒரு நீதி, ஒங்களுக்கு ஒரு நீதியா? உங்களுக்குன்னு சொந்தமா ரெண்டு கை ரெண்டு காலுங்கள கடவுள் குடுத்திருக்கறதுக்கு அர்த்தம் சந்தோஷம் சந்தோஷம்னு வெறுமனே நீட்டிவுட்டுகினு உக்காரறதுக்கில்ல. எழுந்து ஓடணும்ங்கறதுக்காகத்தான்.”

பாலகுருவுக்கு மூச்சு வாங்கியது.  பிறகு அவனைப் பார்க்காமல் தரையைப் பார்த்தபடி “புரிஞ்சிக்கணும்ன்னு ஆச இருந்தா புரிஞ்சிக்கோங்க, இல்லன்னா எல்லாம் இந்த காத்தோடு போவட்டும்” என்று சொன்னான்.

ராஜாராமனுக்கு அன்று இரவு தூக்கம் வரவில்லை. கண்ணை மூடினால் ஒரு பிச்சைக்காரனாக, ஒரு நோயாளியாக, ஒரு நாடோடியாக, ஆதரவில்லாத அனாதையாக  தான் அலைகிற சித்திரங்கள் மாறிமாறி எழுந்து வதைக்கத் தொடங்கின. நிறைவு, நிம்மதி என்றெல்லாம் தோன்றும் உணர்வுகள் அனைத்தும் தன்னை வேறொரு திசையை நோக்கி இழுத்துச் செல்லக்கூடிய கயிறுகளோ என்னும் சந்தேகம் சூறாவளிக்காற்றாக வீசியது. அதன் வேகம் அவனை வேரோடு பிடுங்கி எங்கோ வீசிவிட்டதுபோல இருந்தது.

விடிந்ததும் அறையை விட்டு வெளியே வந்தபோது பாலகுரு தோட்டத்துக்கு அருகில் சூரியனைப் பார்த்து நின்றபடி யோகாசனம் செய்துகொண்டிருப்பதைப் பார்த்தான். அருகில் சென்று வணக்கம் சொன்னான். அவனும் பயிற்சியை நிறுத்தி வணங்கினான். அவன் முகம் வெளுத்திருப்பதைப் பார்த்து அதிர்ந்தவனாக, “என்ன இது ராஜாராமன்? ஏன் இப்பிடி உங்க மூஞ்சி வீங்கனமாதிரி இருக்குது? சரியா தூங்கலையா?” என்று ஆதரவோடு கேட்டான். “என்னமோ தெரியலை, ஒரே தலவலி” என்றான் ராஜாராமன்.

“நான் எதஎதயோ குருட்டுத்தனமா சொல்லி உங்கள கெடுக்கறதா நெனச்சிக்க வேணாம். ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாலவரைக்கும் நானும் உங்களமாதிரிதான் நான் உண்டு, என் வேல உண்டு, அதுவே பெரிய நிம்மதின்னு காலத்த ஓட்டிகினிருந்தேன். அப்ப நான் இருந்த வீட்டுக்கு ஓனரம்மா பேசன பேச்சுதான் என்ன மாத்திச்சி. பழுக்க காய்ச்சன இரும்ப எடுத்து சொருவறமாதிரி பேசும் அந்த அம்மா. எல்லாத்துக்கும் அடங்கிபோனன். அப்படிப்பட்ட ஒரு சூழல்ல, கூடுதலா ஒரு ரெண்டாயிரம் ரூபாய வாடகயா குடுக்க வக்கு இல்லாததாலதான இந்தப் பேச்ச கேக்கறோம்ன்னு ஒரு ஆளுக்கு தோணுமா தோணாதா, நீங்களே சொல்லுங்க……” என்றபடி ஒரு கணம் பேச்சை நிறுத்தினான் பாலகுரு.

“நிச்சயமா தோணும்” என்றபடி அவன் முகத்தையே பார்த்தான் ராஜாராமன்.

“அதுதான் எனக்கும் தோணிச்சி. அந்த நிமிஷத்திலேருந்து பணம் சம்பாதிக்கறத தவிர வேற எந்த சிந்தனையும் இல்லாம ஓடறேன். பணம்ங்கறது ஒரு பெரிய சக்தி ராஜாராமன். அதுக்கு முன்னால எதுவும் நிக்காது….”

“எப்படியோ, நேத்து சொன்ன எடத்துக்கே மறுபடியும் வந்துட்டிங்க.” என்று புன்னகைத்தான் ராஜாராமன். ஒருகணம் அந்தப் புன்னகை தன்னை சீண்டிப் பார்ப்பதாக நினைத்தான் பாலகுரு. ”வெறும் ப்ராடக்ட்ஸ் மார்க்கெட்டிங்ல அந்த அளவுக்கு பணத்த பொரட்டமுடியாதுன்னு தோணிச்சி. உடனே ஷேர் மார்க்கெட்ல எறங்கனேன். நல்ல பணம். பத்த போட்டு பதினஞ்சா எடுக்கறது. சூதாடறமாதிரிதான். ஆனா ஜெயிச்சிட்டா, எதுல வந்த பணம்ன்னு எவனும் கேக்கமாட்டான்.”

ராஜாராமன் அவன் முகத்தையே உற்றுப் பார்த்தபடி இருந்தான்.

“ரெண்டு மாசத்துக்கு முன்னாலதான் இன்னொரு ஒரு புது வழி கெடச்சிது. இதுவும் ஒரு வகை மார்க்கெட்டிங்தான். ஆனா ட்ரக்ஸ். மொதல்ல மனசுக்கு உறுத்தலா இருந்தது. அப்பறம், எந்த கழுதையோ விக்கறான், எந்த கழுதையோ வாங்கி சாப்படறான் நமக்கென்னன்னு தோணிட்டுது. ப்ராடக்ட்ஸோட ப்ராடக்ட்ஸா அதுவும் கைக்கு வந்துடும். எங்க தரணும், எத்தன மணிக்கு தரணும், எவ்வளவு தரணும்ன்னு எல்லா தகவலும் கெடச்சிடும். வேல முடிஞ்சதும் நமக்கு உண்டான பணம் நம்ம கைக்கு வந்துடும். அவுங்க பணம் அப்படியே ஆன்லைன்ல போயிடும். ஒரு நாளைக்கு ரெண்டாயிரம். எவ்ளோ பெரிய பணம்? இதுக்கு மேல என்ன வேணும் சொல்லுங்க?” 

பாலகுரு ஒரு வேகத்தில் தன் அறைக்குள் சென்று கைப்பெட்டியை எடுத்து வந்து ராஜாராமன் முன்பு திறந்து காட்டினான். உள்மடிப்பில் நாலைந்து மறைவிடங்களைத் தாண்டி ஒரு ஜிப்பை இழுத்தான். சின்னச்சின்ன பிளாஸ்டிக் பைகள். ”என்னமோ, உன்ன பார்த்ததுமே ரொம்ப பிடிச்சி போயிட்டுது. உனக்கும் ஒரு வழிய காட்டலாம்ன்னுதான் சொன்னன். பிடிக்கலைன்னா இதோட விட்டுரலாம்” என்று சொல்லிவிட்டு பெருமூச்சோடு அறைக்குத் திரும்பினான் பாலகுரு. அவர்கள் உரையாடலில் பணத்தைப்பற்றிய பேச்சு அதற்குப் பிறகு இடம்பெறவே இல்லை.

அந்த வார இறுதியில் வழக்கம்போல சரக்கு வாங்கிவந்து மேசைமீது வைத்துக்கொண்டு பாலகுரு மட்டும் பருகினான். போதையின் உச்சத்தில் மேசையிலேயே தலைகவிழ்ந்து படுத்துவிட்டான்.

ராஜாராமன் அவனையே சில கணங்கள் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். மேசைமீது காலியாகிக் கிடந்த பாட்டிலையும் தம்ளரையும் வெறித்தான். அந்தப் பாட்டிலை இழுத்து மூக்குக்கு அருகில் கொண்டு சென்று முகர்ந்து பார்த்தான். அதன் நெடி மூளை நரம்பைத் தாக்கி முறுக்கியது. நெஞ்சு குமட்டியது. உடனே அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டுத் திரும்பினான். கவிழ்ந்திருந்த பாலகுருவின் கழுத்தில் தொங்கிய தங்கச்சங்கிலியின்மீது அவன் பார்வை விழுந்தது. ஒன்றிரண்டு கணங்களுக்குப் பிறகு, பாட்டிலை மீண்டும் இழுத்து முகத்தருகே கொண்டு சென்று அதன் மணத்தை  மறுபடியும் நுகர்ந்தான். கடுமையான நெடியால் ஒருகணம் மனவிலக்கம் உருவானது. சகித்தபடி மீண்டும் நுகர்ந்துவிட்டு நிமிர்ந்தான். முதன்முறையாக அந்த மணம் ஒருவித கிளர்ச்சியைக் கொடுப்பதை உணர்ந்தான். அவனையறியாமல் ஒரு புன்னகை அவன் உதடுகளில் விரிந்தது. மறுபடியும் நாலைந்துமுறை நுகர்ந்தான்.

“பாலகுரு”

அந்த அழைப்பு அவனைத் தொடவே இல்லை. ராஜாராமன் மெதுவாக பாட்டிலை உயர்த்தி, அடியில் எஞ்சியிருக்கும் ஒன்றிரண்டு துளிகள் தன் நாவில் விழும்படி செய்தான். அவன் உடல் குலுங்கியது. நீண்ட நேரம் பாலகுருவைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான். பின்னிரவில் பாலகுருவின் அறைக்குள் நுழைந்து நிதானமாக அவன் உடுப்புகளில் ஒன்றை எடுத்து அணிந்தான். மேசைமீது வைக்கப்பட்டிருந்த பர்ஸையும் கைப்பேசியையும் எடுத்து பைக்குள் வைத்துக்கொண்டான். திரும்பி கட்டிலடியில் இருந்த கைப்பெட்டியையும் எடுத்துக்கொண்டு எங்கோ கிளம்பிப் போய்விட்டான்.

காலையில் மெஸ்ஸிலிருந்து சமையல்காரர் மேலே வந்து ”தம்பி இன்னும் கீழயே வரலையே, எதாச்சிம் உடம்புக்கு முடியலையா?” என்று கேட்டபடி நின்றபோது, பாலகுருவுக்கு என்னமோ அது புதுமையாகத் தோன்றியது. “நேத்து நல்லாதான இருந்தாரு” என்று சொல்லிக்கொண்டே ராஜாராமனுடைய அறைக்குள் சென்றான். அறை திறந்தே இருந்தது. ஆனால் அவனைக் காணவில்லை. ”காணோமே, எங்க போனாருன்னு தெரியலை” என்று சொல்லி சமையல்காரரை அனுப்பிவைத்தான். ”சொல்லாம போவற அளவுக்கு என்ன அவசரமோ, தெரியலை” என்று மனத்துக்குள் முணுமுணுத்தபடியே தன் அறைக்குத் திரும்பினான். தற்செயலாக கட்டிலடியில் பார்வையைத் திரும்பிய கணத்தில் தன் பெட்டி காணாமல் போனதை அறிந்துகொண்டான். ஒருகணம் அவன் உடல் அதிர்ந்து அடங்கியது. இனம்புரியாத பீதியில் அவன் மனம் அமிழ்ந்தது. ஐயோ என்று தன்னையறியாமல் அலறினான்.

எங்கேயும் செல்லத் தோன்றவில்லை. யாரிடமும் சொல்லவும் தோன்றவில்லை. அறைக்குள்ளேயே அடைந்துகிடப்பதைத் தவிர வேறு வழியும் தெரியவில்லை. பன்னிரண்டு மணி சமயத்தில் சமையல்காரர் மீண்டும் மேலேறி வந்து “போன ஆள இன்னும் காணலையே தம்பி. பன்னெண்டு ஆயிடுச்சின்னா, ஏகப்பட்ட ஆளுங்க வந்துடுவாங்க. எங்களால சமாளிக்கமுடியாது. நீங்க கொஞ்சம் ஒத்தாசைக்கும் வந்தா புண்ணியமா போவும்” என்று கேட்டுக்கொண்டபோது, தவிர்க்கமுடியாத மனநிலையில் அவரோடு இறங்கிச் சென்றான்.

முதல் பந்திக்குப் பிறகு அவன் மனம் இயல்பான நிலைக்குத் திரும்பியது. அடுத்தடுத்த பந்திகளில் அவன் உற்சாகமாகவே பரிமாறினான். அடுத்த இருநாட்களும்கூட அவனே முன்னின்று பந்திகளைக் கவனித்துக்கொண்டான். சாப்பிட்ட நிறைவுடன் நிமிர்ந்து பார்க்கும் கண்களில் தெரியும் சுடரைப் பார்க்கப்பார்க்க அவன் மனசுக்கு என்னமோ மாதிரி இருந்தது. தன்னையறியாமல் ஒருவித நிறைவில் தன் மனம் தளும்புவதை முதன்முதலாக உணர்ந்தான். அதே தருணத்தில் குற்ற உணர்வின் முள்  ஆழமாகக் கிழித்துவிட்டுப் போவதையும் உணரமுடிந்தது.

நான்காவது நாள் காலையில் அறைக்குத் தேடி வந்துவிட்டார் முதலாளி. தன் தளர்ந்த கைகளால் பாலகுருவின் தோளைத் தொட்டு “வயசுக்கு மீறிய பெரிய மனசு தம்பி உங்களுக்கு. எல்லாத்தயும் கேள்விப்பட்டன். ஆள் இல்லாம தவிச்ச சமயத்துல தெய்வம்போல நின்னு உதவியிருக்கிங்களே. மறக்கவே முடியாது” என்று சொன்னபடி தட்டிக்கொடுத்தார். மேலும் “ராஜாராமன் ரொம்ப நல்ல பையன். எங்கயும் சொல்லாம கொள்ளாம போவமாட்டான். அவன் ஏன் இப்பிடி செஞ்சான்னுதான் புரியல” என்றார்.

பாலகுருவுக்கு பேச்சே எழவில்லை. “நீங்க ஒன்னு சார். அது ரொம்ப சின்ன விஷயம்தான். அத போயி பெரிசா நெனச்சிகிட்டு…” என்று தொடங்கிய சொற்களை முடிக்கத் தெரியாமல் தவித்தான். முதலாளி புன்னகையுடன் தலையசைத்தபடி அதையும் கேட்டுக்கொண்டார். பிறகு ”ராஜாராமன் இடத்துல நின்னு நீங்கதான் இந்த மெஸ்ஸ கவனிச்சிக்கணும். அவனுக்குக் குடுத்ததவிட கூடுதலா ஒரு அஞ்சாயிரம் குடுத்துடறேன்”.என்றார்.

பாலகுருவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. ஏதோ ஒன்று சொல்லவேண்டும் என்பதற்காக மெதுவாக, “அவரு வந்தாலும் வந்துடுவாரு. இன்னும் ரெண்டு நாள் பாக்கலாமே” என்றான்.

“சரி, உங்க விருப்பம். ரெண்டு நாள் என்ன, நாலு நாள்கூட காத்திருந்து பார்க்கலாம். ஆனா நீங்க மட்டும் மெஸ்ஸ கைவிட்டுடக்கூடாது” என்று சொன்னபடி அவன் கைகளைப் பிடித்து அழுத்திவிட்டுச் சென்றார் முதலாளி.

நாலுநாள் காத்திருந்தும் ராஜாராமன் வராததால், அந்தப் பொறுப்பை அவனே ஏற்றுக்கொண்டான். அன்று இருநூறுக்கும் மேற்பட்ட ஆட்கள் சாப்பிட்டிருப்பதைச் சொன்ன சமையல்காரர் ”எல்லாம் நீங்க வந்த கைராசிதான்” என்று சந்தோஷமாகப் புன்னகைத்தார். அந்தச் சொற்கள் தன்னை ஒருவித பரவசத்தில் ஆழ்த்துவதை உணர்ந்தான் பாலகுரு. இந்த ஒரு வாரத்தில் ஒருமுறை கூட தன் மனம் பணத்தை நினைத்துப் பதறவில்லை என்பதை ஆச்சரியத்தோடு அப்போது நினைத்துக்கொண்டான்.

 

(ஆனந்த விகடன் – 2015)