Home

Sunday 12 February 2023

மாயாண்டி பாரதி : கருணை குடியிருந்த நெஞ்சம்

  

08.05.1933 அன்று சிறையிலிருந்து விடுதலை பெற்ற காந்தியடிகள் ஒத்துழையமை இயக்கப் போராட்டத்தை சில வாரங்களுக்கு ஒத்திவைப்பதாகவும் அதற்குள் ஆங்கில அரசு அவசரமாக இயற்றி நடைமுறைக்குக் கொண்டுவந்த  கடுமையான சட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்யவேண்டுமென அரசாங்கத்திடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். ஒருவேளை ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டு அரசு தன் வேண்டுகோளை நிராகரிக்க நேர்ந்தால் ஒத்துழையாமை இயக்கத்தை மீண்டும் தொடங்கப் போவதாகவும் தெரிவித்தார்.


காந்தியடிகளுடைய வேண்டுகோளை அரசு பொருட்படுத்தவில்லை. எனவே அவர் தன்னுடன் முப்பத்துமூன்று தொண்டர்களை அழைத்துக்கொண்டு அகமதாபாத்திலிருந்து ராஸ் என்னும் கிராமத்தை நோக்கி ஒரு நடைப்பயணத்தைத் தொடங்கினார். வழியெங்கும் கிராமம்தோறும் கூட்டங்களை நடத்தி மக்களிடையில் உரையாற்றியபடி வந்த காந்தியடிகளையும் பிற தொண்டர்களையும் 01.08.1933 அன்று நடுவழியில் காவலர்கள் தடுத்து நிறுத்தி கைது செய்து சிறையில் வைத்தனர். மூன்று நாட்களுக்குப் பிறகு, உடனடியாக அந்த நகரத்தைவிட்டு அனைவரும் வெளியேறவேண்டும்  என்னும் நிபந்தனையோடு அவர்களை விடுதலை செய்தனர். ஆனால் காந்தியடிகள் அதற்கு இணங்க மறுத்ததால் காவலர்கள் அனைவரையும் அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் நிறுத்தினர். விசாரணைக்குப் பிறகு நீதிபதி அனைவருக்கும் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

அந்தச் சிறைவாசத்தின்போது காந்தியடிகளின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு அறுபத்துநான்கு வயது. அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்ட அரசு அவரை உடனடியாக விடுதலை செய்தது. விடுதலை பெற்ற போதும் நீதிமன்றத் தீர்ப்பின்படி ஓராண்டுக் காலம் முடிவடையும்வரை ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்பதில்லை என்று தெரிவித்தார் காந்தியடிகள். அதற்கு மாறாக, அந்த இடைப்பட்ட காலத்தில் தீண்டாமை ஒழிப்பு பரப்புரையில் தீவிரமாக ஈடுபடப் போவதாக அறிவித்துவிட்டு உடனடியாக நாடு தழுவிய ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அப்பயணத்தின் ஒரு பகுதியாக 20.12.1933 அன்று சென்னை நகருக்கு வந்தார். மூன்று நாட்கள் தங்கி ஏராளமான கூட்டங்களில் பங்கேற்று எண்ணற்ற தொண்டர்களைச் சந்தித்து தீண்டாமை ஒழிப்பின் தேவையைப்பற்றி உரையாற்றினார். பிறகு கல்கத்தாவுக்குச் சென்று பரப்புரையைத் தொடர்ந்தார். ஒருசில மாதங்கள் வங்காளம், ஆந்திரம், மைசூர், மலபார் போன்ற இடங்களுக்குச் சென்று 22.01.1934 அன்று நாகர்கோவில் வழியாக மீண்டும் தமிழகத்துக்கு வந்தார். வள்ளியூர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி என பல நகரங்களில் மக்கள் மனம் மாறும் வண்ணம் உரையாற்றியபடி 26.10.1934 அன்று மதுரைக்கு வந்து சேர்ந்தார்.

சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் காந்தியடிகளுக்கு மாணவர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். கூட்டத்தில் உரையாற்றிய காந்தியடிகள் பள்ளியில் அளிக்கப்படும் கல்வியைவிட மிகச்சிறந்த கல்வி ஒன்றிருக்கிறது என்று கூறி, அக்கருத்தை இன்னும் விரிவாக விளக்கினார். மாணவர்கள் அனைவரும் முடிந்த அளவு அதிகமாக தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதிகளுக்குச் செல்லவேண்டும். அது சாத்தியமில்லையெனில், குறைந்தபட்சமாக வாரத்துக்கு ஒருமுறையாவது செல்லவேண்டும். அங்கு வசிப்பவர்களுடைய ஆடைகள் அழுக்காக இருந்தால், அதை வாங்கி துவைத்துக் கொடுக்கவேண்டும். சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பின்பற்றும்படி செய்யவேண்டும். தாழ்த்தப்பட்டோர்களுக்குத் தொண்டாற்றும் அந்தக் கல்வியே மிக உயர்ந்த கல்வி என்றார் காந்தியடிகள். அவர் உரையைக் கேட்டு அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் மன எழுச்சி கொண்டனர்.

செளராஷ்டிர பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவரும் அந்தக் கூட்டத்தில் அமர்ந்து காந்தியடிகளின் உரையைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஏற்கனவே தன் அண்ணன் வழியாகவும் வைகைக்கரையில் தங்கி தாழ்த்தப்பட்டோர்களுக்குச் சேவை புரிந்துவந்த அருணாசலம் போன்றோரின் வழியாகவும் தேச சேவையிலும் தாழ்த்தப்பட்டோர் சேவையிலும் ஈடுபாட்டை வளர்த்துக்கொண்டிருந்த அந்த மாணவரை காந்தியடிகளின் உரை காந்தமென ஈர்த்தது. அந்த மாணவரின் பெயர் மாயாண்டி

மாயாண்டியின் அண்ணனான மண்டையன் என்கிற கருப்பையா காங்கிரஸ் முன்னெடுத்த சுதந்திரப்போராட்ட நடவடிக்கைகளிலும் ஊர்வலங்களிலும் ஆர்வமுடன் பங்கெடுப்பவராக இருந்தார். அவ்வப்போது கேட்க நேரும் தலைவர்களின் உரைகளையும் செயல்பாடுகளையும் தம்பியான மாயாண்டியிடம் பெருமையுடன் பகிர்ந்துகொள்வது வழக்கமாக இருந்தது. அண்ணன் வழியில் நடக்கும் ஆர்வம் இயல்பாகவே மாயாண்டியின் நெஞ்சில் பெருக்கெடுத்தோடியது. வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொள்ள வைத்தியநாதருடன் சேர்ந்து சென்று சிறைபுகுந்தார் கருப்பையா. மகனுடைய விடுதலைப்போராட்ட நடவடிக்கைகளில் அவருடைய தந்தையாருக்கு சற்றும் விருப்பமில்லை.  விடுதலை பெற்று வீட்டுக்குத் திரும்பிய கருப்பையாவைக் கடுமையாக மிரட்டி அடித்தார். அடித்து புத்திமதி சொன்னால் மகன் திருந்திவிடுவான் என்று அவர் நம்பினார். ஆனால் அவர் நினைத்திருந்ததற்கு மாறாக, அந்த வசைகள் அவருக்குள் அரும்பென மொட்டுவிட்டிருந்த சுதந்திரப்போராட்ட விருப்பத்தை மலரவைத்துவிட்டன. அண்ணனையே ஆதர்ச வடிவமாகக் கருதிய தம்பி மாயாண்டியும் அண்ணன் வழியில் நடக்கத் தொடங்கினார்.

மாயாண்டி அப்போது அமெரிக்க மிஷின் நடுநிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். அப்பள்ளியின் தடுப்புச்சுவருக்கு அப்பால் மதிச்சியம் என்னும் கிராமம் இருந்தது. அதுதான் கிராமத்தின் தொடக்கப்புள்ளி என்பதால் ஏராளமான கருவேலமரங்கள் வளர்ந்து அடர்ந்த காட்டுப்பகுதியாக அது இருந்தது. மறைவான இடம் என்பதால் அங்கே ஒரு கள்ளுக்கடை செயல்பட்டு வந்தது. வகுப்பறையில் இருந்த ஜன்னல் வழியாக முழுமையாகப் பார்க்கும் அளவுக்கு அருகிலேயே இருந்தது அக்கடை. நாடெங்கும் கள்ளுக்கடை மறியல் நடந்துவந்த நேரம் அது. ஒருநாள்  அக்கள்ளுக்கடையின் முன்னால் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டமாக நின்று மறியல் செய்யும் காட்சியை வகுப்பறை ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தார் மாயாண்டி. பாதையோரமாக நின்ற தொண்டர்கள் கடைக்குள் செல்வோரைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டபடி குடிக்கச் செல்லவேண்டாமெனக் கெஞ்சினார்கள். அதைப் பொருட்படுத்தாத குடிப்பிரியர்கள் சிலர் அவர்களை அலட்சியப்படுத்திவிட்டு கடைக்குள் சென்றார்கள். ஓரிருவர் தொண்டர்களை நெட்டித் தள்ளிவிட்டு அடித்தனர். இன்னும் சிலர் அவர்கள் மீது எச்சிலைக் காறித் துப்பி அவமதித்தனர். கடைமுதலாளியின் அழைப்பின் பேரில் அங்கு வந்து சேர்ந்த காவலர்களும் தம் பங்குக்கு தொண்டர்களை தடியால் அடித்துத் துன்புறுத்தினர். எதிர்பாராத விதமாக கள்ளுக்கடைக்கு உட்பக்கத்திலிருந்து பலரும் தொண்டர்கள் மீது கற்களை வீசித் தாக்கினார்கள். 

தொடர்ந்து அக்காட்சியைப் பார்க்க இயலாத அளவுக்கு மாயாண்டி சீற்றம் கொண்டார். மெல்ல எழுந்து வகுப்பாசிரியரிடம் சிறுநீர் கழிக்கச் செல்ல அனுமதியைப் பெற்று வகுப்பைவிட்டு வெளியேறினார். வழியில் ஆங்காங்கே கிடைத்த கற்களையெல்லாம் எடுத்து சட்டைப்பையை நிரப்பிக்கொண்டு  தொண்டர்கள் அடிவாங்கும் இடத்துக்கு ஓட்டமாக ஓடினார். தான் கொண்டு வந்த கற்களை தொண்டர்களிடம் கொடுத்து, அடித்தவர்களைத் திருப்பி அடிக்கத் தூண்டினார். தொண்டர்களோ, அதை வாங்க மறுத்தனர். மாயாண்டி அதைக் கேட்டு திகைத்து நின்றார். காந்தியவழிப் போராட்டத்தில் ஆயுதத்துக்கு இடமில்லை என்று புன்னகையுடன் மாயாண்டியிடம் எடுத்துரைத்தனர் அவர்கள்.  அதற்குள் அந்த இடத்தை சுற்றிவளைத்த காவலர்கள் கற்களோடு நின்றிருந்த மாயாண்டியையும் இழுத்துச் சென்று கடைக்குள் தள்ளி அடிக்கத் தொடங்கினர். அதற்குள் கள்ளுக்கடை கொட்டகைக்கு யாரோ தீ வைத்துவிட, கடை கொழுந்துவிட்டெரிந்தது. மக்கள் பதறியடித்து வைகை நதியின் பக்கமாக ஓடத் தொடங்கினர். ஆத்திரம் கொண்ட காவலர்கள் அவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

உடல்முழுதும் காயங்களுடன் வீட்டுக்குத் திரும்பிய மாயாண்டியால் தன் தந்தையாரின் பார்வையிலிருந்து தப்பிக்க இயலவில்லை. காயத்துக்கான காரணத்தை அவர் கேட்டபோது அவர் எதையும் மறைத்துப் பேசவும் விரும்பவில்லை. நடந்த செய்திகளை மறைக்காமல் எடுத்துரைத்தார். அதைக் கேட்டு சினம்கொண்ட தந்தையார் தன் பங்குக்கு மேலும் சில அடிகளைக் கொடுத்து விரட்டினார். அப்பாவின் அடிகள் அவருடைய மனத்தை மாற்றவில்லை. மாறாக அவருடைய ஆர்வம் பெரிதாக வளர்ந்தது. அடுத்த நாளே சம்மட்டிபுரம் என்னும் ஊரைச் சேர்ந்த கள்ளுக்கடையின் முன்னால் நடைபெற்ற மறியலைப் பார்ப்பதற்காக, பள்ளிக்கூடம் முடிந்த பிறகு  சென்றார். காங்கிரஸ் தொண்டர்கள் பெட்ரோமாக்ஸ் விளக்கை சாலையோரமாக வைத்துக்கொண்டு, கள்ளுக்கடைக்குச் செல்வோர்கள் கால்களில் விழுந்து  “போகாதீர்கள், தயவு செய்து கள் அருந்தாதீர்கள்” என மன்றாடித் தடுக்க முயற்சி செய்வதைப் பார்த்தார். சிலர் ஒதுங்கிச் சென்றனர். சிலர் தொண்டர்களை மிதித்துவிட்டுச் சென்றனர். ஒரு சிலரே கள்ளருந்தாமல் திரும்பிச் சென்றனர். எதிர்பாராத விதமாக அங்கே ஒரு வாகனத்தில் காவலர்கள் வந்து கூட்டத்தினர் மீது தடியடி நிகழ்த்தி அனைவரும் கலைந்துபோகச் செய்தனர். அன்று இரவும் அடி வாங்கிய காயங்களோடு திரும்பிய மகனைப் பார்த்த அப்பாவால் சீற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  தன் மகனை அடித்துத் தள்ளிவிட்டுச் சென்றார்.

மாயாண்டியின் வீட்டுக்கு அருகிலேயே கருவேப்பிலைக்காரத் தெருவில் லஜபதி நிலையம் என்ற பெயரில் காங்கிரஸ் தொண்டர்கள் சந்திக்கும் இடம் இருந்தது. அதற்குள் ஒரு நூலகம் செயல்பட்டு வந்தது. செய்தித்தாள் படிக்கும் பழக்கமுள்ள மாயாண்டி தினந்தோறும் அங்கு சென்று பத்திரிகைகளையும் பிரசுரங்களையும் புத்தகங்களையும் கேட்டு வாங்கிப் படித்தார். அங்கே வரும் தொண்டர்களும் தலைவர்களும் உரையாடிக்கொள்வதை ஆர்வமுடன் கேட்டு அவர்களுக்கு அறிமுகமானார். கருப்பையாவின் தம்பி என்கிற அடையாளம் அவர்களிடையே ஓர் அன்பான இடத்தை உருவாக்கியளித்தது. சங்கு சுப்பிரமணியன், சிதம்பர பாரதி, ஸ்ரீநிவாச வரதன், தியாக ராஜசிவம், பத்மாசினி அம்மையார் போன்றோர் அவருடன் நட்புறவுடன் பழகினர்.

லஜபதி நிலையத்துக்கு வரும் காங்கிரஸ் பாடகர்கள் மாயாண்டியின் வயதையொத்த பள்ளி மாணவர்களுக்கு தேசபக்திப் பாடல்களையும் பாரதியார் பாடல்களையும் சொல்லிக் கொடுத்தனர். மாயாண்டியின் இளம்நெஞ்சத்துக்கு விசையூட்டுவதாக பாரதியார் பாடல்கள் அமைந்தன. ஒவ்வொரு பாட்டும் அவர் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தது. சில நாட்களிலேயே மனப்பாடமாக பாடும் அளவுக்கு ஏராளமான பாரதியார் பாடல்களில் அவர் தேர்ச்சி பெற்றுவிட்டார்.

கள்ளுக்கடை மறியலில் பங்கேற்றதைப்போலவே அயல்நாட்டுத் துணிகளை விற்பனை செய்யும் கடைகளின் முன்பு நிகழும் மறியலிலும் மாயாண்டி ஆர்வத்துடன் பங்கேற்றார். காவலர்களால் தாக்கப்பட்டு தொண்டர்கல் அடிபட்டு விழும்போதெல்லாம், அவர்களை லஜபதி நிலையத்துக்கு தூக்கி வந்து சிகிச்சையளிப்பது வழக்கம். மாயாண்டி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தார். சிகிச்சை என்பது பெரும்பாலும் புளிய இலையை வெந்நீரில் போட்டு ஒத்தடம் கொடுப்பது என்பதுதான். லஜபதி நிலையத்தில் நெருக்கடி மிகுந்துவிடும் சமயங்களில் அருகிலிருந்த முத்து வஸ்தாத் கோதா பள்ளி வளாகத்திற்கு தொண்டர்களை அழைத்துச் சென்று தங்கவைத்தனர்.

1936இல் மாயாண்டி பள்ளியிறுதி வகுப்பில் படித்துவந்த நேரத்தில் தன்னைப்போலவே சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்ட இளைஞர்களைத் திரட்டி ஒருங்கிணைத்து இந்திய சுதந்திர வாலிபர் சங்கம் என்னும் பெயரில் ஒரு சங்கத்தை உருவாக்கினார். காந்தியரான என்.எம்.ஆர்.சுப்பராமன் அந்தச் சங்கத்தைத் திறந்துவைத்து உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து ’தேசாபிமானமும் வாலிபர் கடமையும்’ என்ற தலைப்பில் மாயாண்டி பாரதி உரையாற்றினார்.

ஊர்வலம், கூட்டம், மறியல் என அனைத்துவிதமான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்த மாயாண்டி பாரதி வெகுவிரைவிலேயே மதுரைவாழ் சுதந்திரப்போராட்ட வீரர்கள் அனைவரோடும் நெருங்கிப் பழகும் அளவுக்கு நட்புகொண்டார். காங்கிரஸ் வெளியிடும் துண்டுப் பிரசுரங்களை வீடுவீடாகச் சென்று வழங்குவது, மதுரை வாழ் காந்தியர்கள் தயாரிக்கும் சுற்றறிக்கைகளை நள்ளிரவு நேரத்தில் நகரத்தின் பல பகுதிகளில் பொதுமக்களின் பார்வையில் படும் விதமாக ஒட்டிவைப்பது, நாட்டில் தலைவர்கள் கைது செய்யப்பட்ட தகவலையும் மதுரை நகரத்தில் காவலர்கள் தடியடி நடத்திய தகவலையும் பாதிக்கப்பட்ட தொண்டர்களைப்பற்றிய தகவலையும் நகரத்தினர் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் அதிகாலை நான்கு மணியளவில் தெருக்கள்தோறும் தண்டோரா போட்டு தெரிவிப்பது போன்ற செயல்களில் ஊக்கமுடன் செயல்பட்டார். சில தொண்டர்கள் நள்ளிரவில் மீனாட்சி கோவில் கோபுரத்தின் மீது ஏறி காங்கிரஸ் கொடியைப் பறக்கவிடுவதும் காலை வேளையில் அதைக் கண்டு பதற்றமுறும் காவலர்கள் கோபுரத்திலேறி அவசரமாக அந்தக் கொடியை அகற்றுவதும் அடிக்கடி நிகழ்ந்தன. 

அரசியல் ஈடுபாடு அதிகரிக்கத் தொடங்கியதால் மாயாண்டி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்தார். இரண்டு முறை அடுத்தடுத்து முயற்சி செய்தபோதும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. மனச்சோர்வின் காரணமாக மாயாண்டி தற்கொலை செய்துகொள்ளும் முடிவையெடுத்து, உருக்கமான ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறினார். தற்செயலாக வீட்டுக்கு வந்த அவருடைய அண்ணன் கருப்பையா அக்கடிதத்தைப் படிக்க நேர்ந்ததால், அவரும் பிற குடும்பத்தினரும் விரைவில் நாலாபக்கமும் தேடிச் சென்று மாயாண்டியைக் கண்டுபிடித்து, ஆறுதல் சொல்லி வீட்டுக்கு அழைத்துவந்தனர்.

டவுன்ஹால் ரோடில் உள்ள பாப்லி பிரதர்ஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை செய்ய ஒரு வாய்ப்பை, அவருடைய அண்ணன் உருவாக்கிக் கொடுத்தார். அவருடைய மனநிலையில் ஒரு மாற்றத்தை உருவாக்க அந்த வேலை உதவும் என அவர் கருதினார். சில மாதங்கள் மட்டுமே அந்த வேலைக்குச் சென்று வந்தார் மாயாண்டி. பிறகு 1937இல் தேர்தல் நெருங்கிய சமயத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் வேலை கிடைத்தது. ஏறத்தாழ ஆறு மாதகாலம் அந்த வேலையில் நீடித்தார். பிறகு ஜில்லா போர்டு அலுவலகத்தில் எழுத்தராக சில மாதங்கள் பணிபுரிந்தார். வேலை அவரை மீண்டும் சுறுசுறுப்பானவராகவும் ஊக்கம் மிக்கவராகவும் மாற்றிப் பண்படுத்தியது.

ஓய்வு நேரம் முழுக்க லஜபதி நிலைய நூல்நிலையத்தில் செலவழித்தார் மாயாண்டி. பல கூட்டங்களில் கலந்துகொண்டு துடிப்பு மிக்க பேச்சாளராகவும் விளங்கினார். அவருடைய அறிவார்த்தமும் ஆவேசமும் நிறைந்த பேச்சை பிற மூத்த தேசபக்தர்கள் பெரிதும் பாராட்டினர். பாரதியாரின் பாடல்கள் அவருக்கு மனப்பாடமாயின. மாயாண்டியின் தேசப்பற்றையும் பாரதியார் மீதிருந்த பற்றையும் கண்ட சிதம்பர பாரதி, பத்மாசினி போன்றோர் அவருக்கு பாரதி என்ற பட்டத்தைச் சூட்டினர். அன்றுமுதல் மாயாண்டி என்னும் பெயர் மாயாண்டிபாரதி என்று மாறியது. காலப்போக்கில் அதுவும் மாறி ஐ.மா.பா. என்ற சுருக்கமான பெயராகப் பிரபலமடைந்தது.

தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுக்காக பாடுபட்டு வந்த காந்தியரான அருணாசலம் அவர்களோடு இணைந்து ஒதுக்குப்புறங்களிலும் குடிசைப்பகுதிகளிலும் வாழும் அவர்களுடைய தெருக்களுக்குச் சென்று சுகாதாரப்பணிகளில் ஈடுபட்டார். அக்காலத்தில் ஆழ்வார்புரம் பகுதியில் தாழ்த்தப்பட்டோர் அதிக எண்ணிக்கையில் வாந்துவந்தனர். அப்பகுதிக்கு மாயாண்டி பல இளைஞர்களை தன்னுடன் அழைத்துச் சென்று தினந்தோறும் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். குழந்தைகளின் அழுக்கடைந்த ஆடைகளை வாங்கி துவைத்து அலசிக் காயப்போடுவது, சிறுவர்சிறுமியரைக் குளிக்கவைத்து, தலைவாரி, திருநீறு பூசி அருகிலிருந்த மண்டபத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் நின்று வணங்கவைத்து விநாயகர் பாட்டையும் வந்தே மாதரம் பாட்டையும் கற்றுக்கொடுத்து பாட வைப்பது, பாடங்கள் சொல்லிக் கொடுப்பது என பல வேலைகளில் ஈடுபட்டார். தண்ணீர்ப்பற்றாக்குறையைப் போக்குவதற்கு அவர்களுடைய வசிப்பிடத்துக்கு அருகிலேயே கிணறுகளை வெட்டிக் கொடுக்கும் வேலையையும் மேற்கொண்டார். வைத்தியநாத ஐயர் தலைமையில் நடைபெற்ற ஆலயப் பிரவேச இயக்க நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டார்.

1938ஆம் ஆண்டின் இறுதியில் ராஜபாளையத்தில் தமிழ் மாகாண அரசியல் மாநாடு நடைபெற்றது. இராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பி.எஸ்.குமராசாமி ராஜா, ஜீவானந்தம் போன்றோர் அதில் கலந்துகொண்டு உரையாற்றினர். அந்த மாநாட்டில் மதுரை லஜபதி நிலையம் மற்றும் ஜவஹர் வாலிபர் சங்கம் ஆகியவற்றின் சார்பாக மாயாண்டி பாரதி கலந்துகொண்டு திருப்பூர்குமரனுக்கு நினைவுச்சின்னம் எழுப்பவேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து உரையாற்றினார். அவர் எழுதி அச்சிட்டு விநியோகித்த துண்டுப் பிரசுரம் அனைவரையும் கவர்ந்தது. மாநாட்டுக்கு வந்திருந்த சென்னை எழுத்தாளர்களான ம.கி.திருவேங்கடம், சக்திதாசன், சுப்ரமணியன்  போன்றோர் மாயாண்டி பாரதியின் எழுத்தாற்றலைப் பாராட்டிப் பேசினார்கள். விரைவில் தொடங்கவிருக்கும் பத்திரிகையில் இணைந்து பணியாற்ற அவரையும் சென்னைக்கு வருமாறு கேட்டுக்கொண்டனர். அவர்களுடைய சொற்களால் ஊக்கம் பெற்ற மாயாண்டி பாரதி சென்னைக்குச் சென்றார். முதலில் நவசக்தி பத்திரிகையில் சிறிது கால்லம் பணிபுரிந்தார். பிறகு நண்பர்கள் தொடங்கிய லோகசக்தி என்னும் பத்திரிகையில் சேர்ந்து ஏராளமான கட்டுரைகளை எழுச்சியூட்டும் வகையில் எழுதினார்.

01.09.1939 அன்று இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்தியாவின் தேசியத் தலைவர்களைக் கலந்தாலோசிக்காமலேயே இந்தியாவும் போரில் ஈடுபடுகிறது என்று தன்னிச்சையாக அறிவித்தனர். காந்தியடிகள் அந்த அறிவிப்பைக் கடுமையாக எதிர்த்தார். விநோபாவின் தலைமையில் தனிநபர் சத்தியாகிரகம் தொடங்கியது. எவ்விதமான விசாரணையுமின்றி நாடெங்கும் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அரசுக்கு எதிரான கட்டுரையை வெளியிட்டதற்காக லோகசக்தி இதழ் தடைசெய்யப்பட்டு அதன் ஆசிரியரான திருவேங்கடத்தையும் கட்டுரையை எழுதியமைக்காக மாயாண்டி பாரதியையும் கைது செய்து சிறையில் வைத்தது அரசாங்கம். இருமாத சிறைத்தண்டனை முடிந்ததும் விடுதலையான திருவேங்கடம் உடனடியாக பாரதசக்தி என்னும் பெயரில் புதிதாக ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். முன்பு எழுதியதைவிட எழுச்சியூட்டும் வகையில் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி அளித்தார் மாயாண்டி பாரதி. அதைப் படித்து சீற்றம் கொண்ட காவலர்கள் அவ்விருவரையும் மீண்டும் கைது செய்து தண்டனை விதித்து சிறையில் அடைத்தது.

விடுதலை பெற்றதும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் சூழலில் தொண்டர்கள் செயலாற்றுவதற்கு வழிகாட்டும் விதமாக ஒரு புத்தகத்தை எழுதவேண்டுமென்று மாயாண்டிபாரதியைத் தூண்டினார் திருவேங்கடம்.  அதன் தேவையை மாயாண்டிபாரதியும் உணர்ந்திருந்தார். அதனால் சில நாட்கள் அறையிலேயே அடைபட்டுக் கிடந்து ’படுகளத்தில் பாரததேவி’ என்னும் தலைப்பில் ஒரு நூலை எழுதி முடித்தார். திருவேங்கடத்தின் முயற்சியால் அது உடனடியாக நூல்வடிவம் பெற்று வெளியிடப்பட்டது. தொண்டர்கள் அந்தப் புத்தகத்தை பெரிதும் விரும்பிப் படித்தனர். காங்கிரஸ் இயக்கத் தலைவர்கள் அந்தப் புத்தகத்தின் பிரதிகளை வாங்கி காங்கிரஸ் ஊழியர்களுக்கு வழங்கினார். தமிழகம் மட்டுமல்லாது, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை போன்ற பல நாடுகளுக்கும் அந்தப் புத்தகப்பிரதிகள் கொண்டுசெல்லப்பட்டன. அந்தப் புத்தகம் மாயாண்டி பாரதியை தமிழகம் அறிந்த முகமாக மாற்றியது. அதனால் அரசு தன் கழுகுக்கண்களை அவர் பக்கமாகத் திருப்பியது.   தொடர்ந்து சென்னையில் வசிக்கமுடியாத சூழல் உருவானதால் உடனடியாக மதுரைக்கு ரயிலேறினார் மாயாண்டி பாரதி.

23.03.1940 அன்று லாகூரில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் பாகிஸ்தான் என்னும் பெயருடன் இஸ்லாமியர்களுக்கென தனிநாடு வேண்டுமென்ற தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார் முகம்மது அலி ஜின்னா. அவருடன் நடைபெற்ற எல்லாப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிவடைந்தன. இந்திய விடுதலைக்காக அனைவரோடும் இணைந்து அதுவரை நடந்த எல்லாப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்த ஜின்னா தனிநாடு கோரிக்கையை முன்வைத்ததும் முதலில் அனைவரும் உறைந்துவிட்டனர். ஜின்னாவை அமைதிப்படுத்த காந்தியடிகள் எடுத்த முயற்சிகளும் தோற்றுவிட்டன. காந்தியடிகளின் அமைதியான அணுகுமுறை மாயாண்டிபாரதிக்கு ஏமாற்றமளித்தது. இச்சமயத்தில் வீர சவர்க்கரை தலைமையாகக் கொண்ட இந்து மகாசபை பாகிஸ்தான் கோரிக்கையை எதிர்த்து கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டது. அதனால் ஈர்க்கப்பட்ட இளைஞரான மாயாண்டி பாரதி இந்து மகாசபைக்கு மதுரையில் ஒரு கிளையைத் தொடங்கினார். காங்கிரஸ் தலைவர்களான பி.வரதராஜுலு நாயுடு, எஸ்.ஆர்.வரதராஜுலு நாயுடு போன்றோர் அவருக்கு ஊக்கமூட்டினர். ஒருமுறை வீரசவர்க்கரை மதுரைக்கு வரவழைத்து பொதுக்கூட்டங்களில் உரையாற்ற வைத்தார்.

பாகிஸ்தான் கோரிக்கை தொடர்பான விஷயத்தில் மட்டுமே மாயாண்டி பாரதி இந்து மகாசபையை ஆதரித்தாரே தவிர, பிற விஷயங்களில் தீவிர காந்தி ஆதரவாளராகவே இருந்தார். யுத்த ஆதரவுப்பிரச்சாரத்தில் இந்து மகாசபை ஈடுபடுவதில் அவருக்கு உடன்பாடில்லை. காந்திய வழியில் யுத்த எதிர்ப்புப்பிரச்சாரம் செய்யவே மாயாண்டி பாரதி முனைந்தார். ஒருமுறை விருதுநகருக்கு அருகில் கன்னிசேரி என்னுமிடத்தில் நடைபெற்ற யுத்த எதிர்ப்புப் பிரசாரத்தில் பேசிக்கொண்டிருக்கும் போதே காவலர்கள் அவரை கைது செய்து கைவிலங்கு பூட்டி ஸ்ரீவில்லிப்புத்தூர் கிளைச்சிறைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர். விசாரணையின்போது அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. உடனே வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு ஏற்கனவே அடைபட்டிருந்த வி.பி.சிந்தன், ஜமதக்னி, எஸ்.குருசாமி போன்றோருடன் அவருக்கு நல்ல நட்பு உருவானது. அவர்கள் அனைவரும் கம்யூனிசச்சார்பு கொண்டவர்கள். அவர்களோடு நெருங்கிப் பழகியதன் விளைவாகட்டு, மாயாண்டி பாரதிக்கும் கம்யூனிசக் கொள்கையின் மீது ஈடுபாடு உருவானது. ஏழு மாத சிறைவாசத்துக்குப் பிறகு அவர் விடுதலை பெற்றார். ஆயினும் அரசு அவர்மீது ஒரு கண் வைத்திருந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மதுரையில் நடைபெற்ற கூட்டமொன்றில் மாயாண்டிபாரதி பேசிக்கொண்டிருந்த போது, யாரோ ஒருசிலர் கூட்டத்தில் புகுந்து கலவரத்தைத் தூண்டிவிட்டனர். அதற்காகவே காத்திருந்த காவல்துறையினர் மாயாண்டிபாரதியையும் பிறரையும் கைதுசெய்து அழைத்துச் சென்றனர். விசாரணையே இல்லாமல் பாதுகாப்புக்கைதியாகவே இரு மாத காலம் சிறையில் வைத்திருந்துவிட்டு கடைசியாக விடுதலை செய்தனர். மீண்டும் கூட்டம், மீண்டும் சிறை என்பதே அவருடைய வாழ்க்கையாக மாறிவிட்டது. ஏறத்தாழ இரு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சிறையில் அடைபட்டிருந்தார்.

அவர் சிறையில் இருந்த சமயத்தில் அவருடைய தாயார் படுத்த படுக்கையானார். சிறையில் இருக்கும் தன் இளைய மகனான மாயாண்டி பாரதியைப் பார்க்கவேண்டும் என்று பெரிதும் விரும்பினார். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக சிறையிலிருந்து பரோலில் ஒரு மாத விடுப்பு பெற்று வெளியே வந்தார். மரணப்படுக்கையில் இருந்த அவருடைய தாயார் மகனைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் திளைத்தார். மெல்ல மெல்ல அவர் உடல்நிலை சீரடையத் தொடங்கியது. ஒரு மாத காலத்தில் முழுமையாகவே குணமடைந்தார். விடுப்புக்காலம் முடிவடைந்ததும் சிறைக்குச் செல்ல மாயாண்டி பாரதி புறப்பட்ட தருணத்தில்தான், அவருடைய தண்டனைக்காலம் இன்னும் முடிவடையவில்லை என்பதையும் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும் என்பதையும் அவர் தாயார் புரிந்துகொண்டு கலங்கினார். வேறு வழியில்லாமல் தாயாருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சிறைக்குப் புறப்பட்டுச் சென்றார் மாயாண்டி பாரதி. ஆனால் அடுத்த நாளே அவருடைய தாயார் உயிர் பிரிந்துவிட்டது.

சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு ஒரு மாத காலத்தில் காந்தியடிகள் 09.08.1942 அன்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார். அரசாங்கம் நாடெங்கும் ஏராளமான தலைவர்களையும் ஊழியர்களையும் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர், மாயாண்டி பாரதி முதலில் ஒரு மாத காலம் விசாரணைக்கைதியாக மதுரைச் சிறையிலேயே வைக்கப்பட்டிருந்தார். பிறகு வேலூர், பாளையங்கோட்டை, தஞ்சாவூர் என ஒவ்வொரு ஊர்ச் சிறையாக மாற்றப்பட்டார். ஏறத்தாழ இரு ஆண்டுகளுக்குப் பிறகு 1944ஆம் ஆண்டில் விடுதலையானார். அதற்குப் பின் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நகர்ச் செயலாளராகப் பணியாற்றத் தொடங்கினார். அப்போது கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் பி.இராமமூர்த்தி. அவர் ஒருமுறை மதுரைக்கு வந்தபோது மாயாண்டிபாரதியைச் சந்தித்தார். அவருடைய எழுத்தாற்றலைப்பற்றி நன்கு தெரிந்தவர் என்பதால், உடனே அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று ஜனசக்தி இதழில் பணி புரியுமாறு கேட்டுக்கொண்டார். அந்த அலுவலகமே அவருக்குத் தங்குமிடமாகவும் இருந்தது. அங்கு தங்கியிருந்த காலத்தில் எண்ணற்ற கட்டுரைகளை எழுதி வெளியிட்டார்.

15.08.1947 அன்று இந்தியா விடுதலை பெற்ற மகிழ்ச்சியை ஜனசக்தி அலுவலகத்தினர் அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடினர். மாயாண்டிபாரதியின் முயற்சியால் ஜனசக்தி சுதந்திரமலர் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டது. பொதுமக்களிடையே அம்மலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

1948இல் கம்யூனிஸ்ட் கட்சியும் தொழிற்சங்கமும் தடை செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் தடுப்புக்காவல் சட்டப்படி கைது செய்யப்பட்டனர். மாயாண்டி பாரதியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பிறகு விடுதலையடைந்த மாயாண்டி பாரதி திருநெல்வேலி பகுதியில் தலைமறைவாக வாழ்ந்து கட்சிப்பணிகளைச் செய்துவந்தார். இறுதியில் 24.05.1950 அன்று மேலப்பாளையம் என்னும் இடத்தில் அவர் கைது செய்யப்பட்டார். நீண்ட கால விசாரணைக்குப் பிறகு அவருடைய வழக்கு முடிவுக்கு வந்தது. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டபோதும் அரசு அவரை 1953இல் விடுதலை செய்தது. அதற்குப் பிறகே அவருக்குத் திருமணம் நடைபெற்றது. அக்காவின் மகளையே மணந்துகொண்டார். பிறகு சென்னைக்கு வந்து மீண்டும் ஜனசக்தி இதழில் பணியாற்றத் தொடங்கினார். 

அன்று தொடங்கிய மாயாண்டி பாரதியின் எழுத்துப்பணி 1964 வரை நீடித்தது. அதற்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டதை ஒட்டி அங்கிருந்து அவர் வெளியேறினார். மதுரைக்குத் திரும்பி வந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றினார். மதுரையை தலைமையிடமாகக் கொண்டிருந்த தீக்கதிர் இதழ் அவருடைய எழுத்துகளுக்குக் களமாக விளங்கியது.

25.12.1968 அன்று தஞ்சை மாவட்டத்தில் கீழ்வெண்மணி கிராமத்தில் விவசாயத்தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பத்தினருமாக 42 பேர் நிலக்கிழார்களால் ஒரு குடிசைக்குள் தள்ளப்பட்டு உயிரோடு எரிக்கப்படனர். அந்தக் கொடுமையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மாயாண்டி பாரதி உணர்ச்சிகரமான ஓர் உரையை நிகழ்த்தினார். தடையை மீறி கூட்டம் நடத்தியதற்காக அவரை அரசாங்கம் கைது செய்தது. நீதிமன்றத்தில் இருவர் வழங்கிய ஜாமீனில் வெளியே வந்தார்.

அவருடைய இறுதிக்காலத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் அவரைச் சந்தித்து நேர்காணல் எடுப்பதற்காகச் சென்றிருந்தார். தற்செயலாக அன்றைய உரையாடல் ஏதோ ஒரு கணத்தில் அவர் கீழ்வெண்மணிக்கு சென்றிருந்த அனுபவத்தை மையப்படுத்தியதாக மாறியது. கீழ்வெண்மணி என்னும் பெயரைக் கேட்டதுமே உணர்ச்சிவசப்பட்ட மாயாண்டி பாரதி, முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்னால் அங்கே சென்றது, சாம்பல் குவியலாகக் கிடந்த உடல்களையும் வீடுகளையும் பார்த்தது, சாம்பலிடையே எலும்புத்துணுக்குகளையும் தலையோடுகளையும் பார்த்தது, உடல்நடுங்கி கண்ணீர் விட்டு அழுதது, அரசாங்கம் விதித்திருந்த தடையை மீறி கூட்டம் நடத்தியது, சிறைக்குச் சென்றது என ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அடுத்தடுத்துச் சொன்னார்.

சட்டென ஏதோ நினைவுக்கு வந்தவராக பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு, இருக்கையிலிருந்து எழுந்து தன் அறைக்குச் சென்றார். சில நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்தபோது அவர் கையில்  பழுப்படைந்த ஒரு காகிதப் பொட்டலம் இருந்தது.  அதை பத்திரிகை நண்பரிடம் கொடுத்து பிரித்துப் பார்க்குமாறு சொன்னார். என்னவென்று புரியாமல் அதை வாங்கிய நண்பர் அதன் மீது வெண்மணி அஸ்தி என்று எழுதியிருப்பதைப் பார்த்து திகைப்புடன் அவசரமாக மாயாண்டி பாரதியை ஏறிட்டுப் பார்த்தார். அன்று அந்தச் சாம்பல் குவியலைப் பார்த்துவிட்டுத் திரும்புவதற்கு முன்னால் ஒரு பிடி சாம்பலை எடுத்து ஒரு தாளில் பொதிந்து சுருட்டி எடுத்துவந்ததாக பெருமூச்சுடன் சொன்னார் மாயாண்டி பாரதி. அந்தச் சாம்பலை மீண்டும் தொட்டபோது அவர் கைகள் நடுங்கின. கண்களில் நீர்கோர்த்துத் தளும்பியது. நண்பர் மெளனமாக அச்சாம்பலை மடித்து திருப்பியளிக்க முயற்சி செய்தபோது கையை உயர்த்தி அசைத்து வாங்க மறுத்தார். “எங்கிட்ட இருந்த காலம் போதும். உங்களுக்கு என்ன தோணுதோ அதை செய்யுங்க” என்று விழிகள் தளும்பச் சொல்லிவிட்டு அமைதியானார்.  இந்தியா இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, இரு புறங்களிலும் நடைபெற்ற மதக்கலவரங்களில் உற்றார் உறவினரையும் உடமைகளையும் இழந்துவந்து தன் முன்னால் நின்ற மனிதர்களைப் பார்த்து காந்தியடிகளின் கண்களில் கசிந்த கண்ணீரின் தொடர்ச்சியை அன்று மாயாண்டி பாரதியின் கண்களில் பார்க்கமுடிந்ததாகத் தெரிவித்தார் பத்திரிகை நண்பர்.   

இறுதிவரை அவர் மார்க்சிஸ்ட் கட்சியில் பணியற்றிய போதும்  ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் நடைபெறும் கொடியேற்றும் விழாவில் கலந்துகொள்வதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார். 26.01.2015 அன்று குடியரசு தினத்துக்குக் கொடியேற்றுகிற விழாவுக்கு மதுரையில் வீட்டிலிருந்து புறப்படத் தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில் தற்செயலாக  அவசரத்தில் கீழே விழுந்ததில்  அடிபட்டு விட்டது. அதற்குப் பிறகு சில நாட்களிலேயே அவர் மண்ணுலகைவிட்டு மறைந்தார்.

 

(ஜனவரி 2023, சர்வோதயம் மலர்கிறது)

 

 

மாயாண்டி பாரதி

மதுரையில் இருளப்ப ஆசாரி, தில்லை அம்மாள் இணையருக்கு பதினோராவது பிள்ளையாக 1917ஆம் ஆண்டில் மாயாண்டி பாரதி பிறந்தார். மாயாண்டி என்னும் அவருடைய இயற்பெயரை, இளம்பருவத்தில் பாரதியார் பாடல்கள் மீது அவர் கொண்டிருந்த ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிதம்பரபாரதி, தியாகராஜசிவம் போன்ற மூத்த தொண்டர்கள் பாரதியின் பெயரை பின்னொட்டாக இணைத்து மாயாண்டி பாரதி என்று அழைக்கத் தொடங்கினர். அன்றுமுதல் அதுவே அவர் பெயராக நிலைத்துவிட்டது. நவசக்தி, லோகசக்தி, லோகோபகாரி, ஜனசக்தி, தீக்கதிர் என பல இதழ்களில் பணிபுரிந்து ஏராளமான கட்டுரைகளை எழுதினார். அவருடைய சிற்சில கட்டுரைகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு படுகளத்தில் பாரதமாதா, தூக்குமேடைத்தியாகி பாலுவின் இறுதிநாட்கள், விடுதலைப்போரில் வெடிகுண்டுகளும் வீரத் தியாகங்களும் என்ற தலைப்புகளில் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இன்னும் தொகுக்கப்படாத கட்டுரைகள் ஏராளமாக எஞ்சியுள்ளன. 24.02.2015 அன்று மாயாண்டி பாரதி மண்ணுலகைவிட்டு மறைந்தார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுதந்திரச்சுடர் ஐ.மாயாண்டி பாரதி என்னும் தலைப்பில் என்.ராமகிருஷ்ணன் எழுத, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த ஸ்ரீரசா என்னும் எழுத்தாளர் 1998ஆம் ஆண்டில் வெளியிட்டார்.