Home

Sunday 5 February 2023

பாவண்ணன் பாடல்கள் - புதிய தொகுதிக்கான முன்னுரை

விடுப்பில் புதுச்சேரிக்குச் சென்றிருந்த சமயத்தில், சிறந்த தமிழ்ப்பாவலரும் மறைந்த தமிழறிஞருமான ம.இலெ.தங்கப்பாவின் வீட்டுக்கு ஒருமுறை சென்றிருந்தேன்.  சற்றுமுன் வீட்டுக்கு வந்து இறங்கிய புதிய புத்தகக்கட்டுகளைப் பிரித்து அடுக்கிக்கொண்டிருந்தார் தங்கப்பா.  என்னைப் பார்த்ததும் “வா வா” என்று புன்னகையுடன் வரவேற்றார்.



மேசையெங்கும் புத்தகங்கள் நிறைந்திருந்தன. குழந்தைகளுக்காக அவர் எழுதிய புதிய பாடல்தொகுதி வந்திருந்த நேரம் அது.  ஒரே தலைப்பிலான எண்ணற்ற புத்தகங்களை அருகருகே அடுக்கிவைத்திருப்பதைப் பார்ப்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். அழகான எளிய அட்டைப்படம். ஒரு புத்தகத்தை எடுத்து ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் பார்த்தேன். வாய்விட்டுப் படிக்கத் தூண்டும் அழகான சொல்லமைப்புடன் எளிய தாள அமைப்பில் அமைந்த பாடல்கள்.

“குழந்தைப்பாடல்கள் பற்றி உனக்கு என்ன தோன்றுகிறது?” என்று திடீரென தங்கப்பா என்னைப் பார்த்துக் கேட்டார். புத்தம்புதிதாக வந்து இறங்கியிருக்கும் தொகுதியைப்பற்றி உடனடியாக என்ன சொல்வது என்று புரியாமல் குழப்பத்தோடு அவரைப் பார்த்தேன். அவருக்கு என் தடுமாற்றம் புரிந்துவிட்டது. “நான் இந்த புத்தகத்துல இருக்கிற பாடல்கள் பற்றி கேட்கலை. பொதுவா குழந்தைப்பாடல்கள் பற்றி என்ன தோணுதுன்னு கேட்டேன்” என்றார்.

ஒருகணம் யோசித்துவிட்டு “பாடலாக இருந்தாலும் சரி, கதைகளாக இருந்தாலும் சரி, அதெல்லாம் நம்மைச் சுற்றியுள்ள குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நடுவில் நல்லவிதமா ஒரு நெருக்கம் இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லக்கூடிய ஒரு அடையாளம்தான் ஐயா” என்று தடுமாற்றத்தோடு சொன்னேன்.

 நான் சொன்ன பதில் தங்கப்பாவுக்குப் பிடித்திருந்ததா என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏதேனும் அவர் சொல்லக்கூடும்  என்று நான் அவர் முகத்தையே பார்த்தபடி இருந்தேன்.  ”ஒரு கோணத்துல நீ சொல்றது முக்கியமான ஒரு செய்தி. ஏரியில தண்ணீர் இருந்தா, நிலத்தடி நீர்மட்டம் நல்லா இருக்கும்னு சொல்றமாதிரி, குழந்தைகளோடு நல்லுறவு உள்ள மண்ணுலதான் குழந்தை இலக்கியமும் நல்லா இருக்கும்” என்று சொன்னார் தங்கப்பா.

“ஆனால், நான் கேட்ட கேள்வி அதைப்பற்றி இல்லை. ஒரு எழுத்தாளனா குழந்தைப்பாடல்கள் பற்றி என்ன தோணுதுன்னு கேட்டேன்” என்றார். குழந்தைகளோடு பேசிப் பழகுவதில் தொடங்கி, குழந்தைகள் மொழியைக் கண்டடைவது வரை வேகவேகமாகச் சொல்வதற்கு சொற்கள் நெஞ்சில் புரண்டன. ஆனாலும் பதில் சொல்லத் தயங்கி, நான் அவருடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“நாம எழுதும் பாடல்களும் சரி, கதைகளும் சரி எங்கோ பிறந்து எங்கோ விளையாடிக்கொண்டிருக்கிற குழந்தைகளுக்காக என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அதனால்தான் பலர் நல்வழிக் கருத்துகளை எழுதிக் குவித்தபடி இருக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. அடிப்படையில் நமக்குள் - நம் எண்ணத்தில், நம் நினைவில் - ஒரு குழந்தை எப்போதுமே விளையாடிக்கொண்டிருக்கிறது. உண்மையிலேயே அந்தக் குழந்தையை நோக்கித்தான் நாம் பேசுகிறோம், எழுதுகிறோம். நம் பாடல்களைக் கேட்டு அந்தக் குழந்தை கைத்தட்டி சிரித்து ஆனந்தநடனம் ஆடிவிட்டது என்றால், இந்த உலகத்திலே அந்தப் பாட்டு எல்லாக் குழந்தைகளையும் ஆடவைத்துவிடும்”

அப்படியே எங்கள் உரையாடல் நீண்டு வெவ்வேறு பாவலர்கள் எழுதிய குழந்தைப்பாடல்களை நோக்கிச் சென்று, பிறகு அங்கிருந்தும் திசைமாறி வேறு எப்படியோ மாறிவிட்டது. ஆனால் அன்றைய உரையாடல் நான் மிகமுக்கியமான ஓர் உண்மையை உணர்ந்துகொள்ளத் தூண்டுதலாக இருந்தது. அந்த வகையில் அன்றைய தினம் என் வாழ்வில் மிகமுக்கியமானதொரு நாள்.

கொஞ்சம் கொஞ்சமாக தங்கப்பா சொன்னதையெல்லாம் எனக்குள் தொகுத்தும் சுருக்கியும் திரட்டி வைத்துக்கொண்டேன்.   நமக்குள் ஒரு சிறுவன் இருக்கிறான். அவனைப் புன்னகைக்க வைக்கவேண்டும். அவன் என்றென்றும் மகிழ்ச்சியிலேயே திளைத்திருக்கவேண்டும். நாம் எழுதும் பாடல்கள் அனைத்தும் அவனுக்காகவே என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.

கால ஓட்டத்தில் அக்கருத்தை இன்னும் கொஞ்சம் விரிவானதாக்கிக்கொண்டேன். நமக்குள் இருக்கும் சிறுவனுக்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றையும் எடுத்துச் சொல்வதற்கு மாறாக, தானாகவே அனைத்தையும் நேருக்கு நேர் பார்த்து ஆனந்தம் கொள்ளும் வகையில் என் விழிகளை அச்சிறுவனுக்கு வழங்கத் தொடங்கினேன்.  நான் விலகி நின்று, அச்சிறுவனையே நேருக்கு நேர் பார்த்து நிறைவுறச் செய்தேன். அது இன்னும் கூடுதலான பயனை அளித்தது.

கடந்த எட்டாண்டுகளில் யானை சவாரி, மீசைக்காரப்பூனை, எட்டு மாம்பழங்கள், கன்றுக்குட்டி, கொண்டைக்குருவி ஆகிய தலைப்புகளில் சிறுசிறு இடைவெளியுடன் வெளிவந்த  தொகுதிகளில் உள்ள பாடல்களையெல்லாம் வகைப்படுத்தி அடுக்கும் தருணத்தில் தங்கப்பா தொடர்பான நினைவுகள் ஒருகணம் வந்து சென்றன. அதன் தொடர்ச்சியாகவே ஒவ்வொரு பாட்டோடும் இணைந்திருக்கும் சிறுவனையும் நினைத்துக்கொண்டேன். 

ஏற்கனவே எழுதியவைதானே, எளிதாகத் தொகுத்துவிடலாம் என்று நினைத்து நான் தொடங்கிய வேலை அவ்வளவு எளிதாக முடியவில்லை. ஒரு பாட்டிலிருந்து இன்னொரு பாட்டுக்குச் செல்லவே மனம் இடம் தரவில்லை. ஒவ்வொரு பாட்டும் அதற்குரிய பின்னணி நினைவுகளோடு நெஞ்சில் மோதும்போது, அதை மீளமீள நிகழ்த்தி அக்கணத்திலேயே வாழ விரும்பினேன். இறந்த காலத்தைத் தொட்டுவிட்டு மீள்வது என்பது, எல்லோரும் நினைத்திருக்கும் அளவுக்கு எளிதான செயலல்ல. ஒவ்வொரு கணமும் பொற்கணமே.  கெஞ்சல், கொஞ்சல், மீறல், கனிவு, துள்ளுதல், ஓடுதல், அழைத்தல், நடத்தல், வேடிக்கை பார்த்தல் என ஒவ்வொரு பாட்டிலும் ஏராளமான நாடகத்தருணங்கள்.  இத்தொகுதி எனக்கு வழங்கியிருக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.  முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு  இப்போது தங்கப்பாவின் நினைவு மனமெங்கும் நிறைந்துவிட்டது.  இத்தொகைநூலை அவருக்குக் காணிக்கையாக்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இப்படி ஒரு தொகைநூலை உருவாக்கவேண்டும் என்ற எண்ணமெழுந்ததும், அந்த எண்ணத்துக்கு மிகவேகமாக ஒரு வடிவத்தைக் கொடுத்தவர் தோழர் நாகராஜன். அவர் காட்டிய அக்கறையும் ஈடுபாடும் என்றென்றும் நினைவில் நிறைந்திருக்கும். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இத்தொகைநூலில் உள்ள ஒருசில பாடல்கள் பொம்மி, புதுவைபாரதி, சுட்டிவிகடன், பஞ்சுமிட்டாய், சிறுவர்மணி, தும்பி ஆகிய இதழ்களில் வெவ்வேறு காலகட்டத்தில் வெளிவந்தன. அவற்றின் ஆசிரியர்களுக்கு என் நன்றி. என் துணைவி அமுதாவின் உதவியால் நான் பெறும் ஊக்கம் ஆழமானது. அவர் என் நெஞ்சில் எப்போதும் நிறைந்திருப்பவர். இத்தொகுதியை அழகான ஓவியங்களுடன் சிறப்பான முறையில் வெளியிட்டிருக்கும் பாரதி புத்தகாலயத்தாருக்கு என் நன்றி