பூம்புகாரின் பெருமையை முன்வைக்கும்போது இளங்கோவடிகள் ஒற்றை வரியில் ‘பதியெழு அறியாப் பழங்குடி’ என்று குறிப்பிடுகிறார். பூம்புகார் நகரத்தில் வசிக்கும் மக்கள் எந்தக் காரணத்துக்காகவும் எந்தத் தேவைக்காகவும் சொந்த ஊரைவிட்டு எந்தக் காலத்திலும் வெளியே சென்றறியாத, செல்லவேண்டிய அளவுக்கு எவ்விதமான நெருக்கடிகளும் இல்லாதவர்களாக வாழ்கிறார்கள் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதற்காக அந்த வரியை எழுதியிருக்கிறார் இளங்கோவடிகள்.
ஆனால் எதார்த்தம் மனிதர்களை அப்படி வாழ அனுமதிப்பதில்லை. ‘பதியெழு அறியாமல்’
வாழ்வது என்பது ஓர் இலட்சியக்கனவு. அவ்வளவுதான். தேவை ஏற்படும்போது பதியை விட்டு இடம்பெயர்வது
தவிர்க்கமுடியாத ஒன்று. அப்படிப்பட்ட தவிர்க்கமுடியாத ஒரு தருணத்தில் எடுத்த முடிவால்தான்
கோவலன் – கண்ணகி இணையர் பூம்புகாரைவிட்டு இடம்பெயர்ந்து செல்கிறார்கள். அதனால் உருவான
கதைதான் சிலப்பதிகாரமாக மலர்கிறது.
சமூக இயங்கியலின் சூத்திரமே இடப்பெயர்ச்சிதான்.
வேட்டைச்சமூகம் மேய்ச்சல் சமூகமாகி, அதைத் தொடர்ந்து விவசாயச்சமூகமாகவும் தொழில்சார்
சமூகமாகவும் கால ஓட்டத்தில் மாற்றமடைவதற்குள்
ஏராளமான இடப்பெயர்ச்சிகள் நிகழ்ந்துவிட்டன. நகரமயமாக்கத்தால் இன்னும் சில இடப்பெயர்ச்சிகள்
நிகழ்ந்தன. போர்களாலும் கலவரங்களாலும் சில இடப்பெயர்ச்சிகள் நிகழ்ந்தன. தொழிற்சாலைகளும்
கல்விக்கூடங்களும் பெருகுந்தோறும் இன்னும் சில இடப்பெயர்ச்சிகள் ஏற்பட்டன. வேலை வாய்ப்புகளைப்
பின்தொடர்ந்து செல்லாமல் மனிதகுலம் தழைப்பதற்கு வழியில்லை. ஜார்கண்ட் தொழிலாளர்கள் கர்நாடகத்தில் வேலை செய்வதையும்
கர்நாடகப் பட்டதாரிகள் தில்லியிலும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வேலை செய்வதையும்
இடப்பெயர்ச்சி என்று குறிப்பிடாமல், வேறு எப்படிக் குறிப்பிடமுடியும்?
குரங்காற்றங்கரையில் பிறந்து வளர்ந்து,
பொருநை நதிக்கரையில் கல்லூரிப்படிப்பை முடித்து, கூவம் நதிக்கரையில் பல்கலைக்கழக ஆய்வுகளில்
ஈடுபட்டு முனைவர் பட்டம் பெற்ற ஆறுமுகப்பாண்டியன், வேலை வாய்ப்புக்காக காவேரி பிறந்த
மாநிலத்தின் தலைநகரமான பெங்களூருக்கு இடம்பெயர்ந்து
வருவதிலிருந்து சுந்தரபாண்டியன் தன் நாவலைத் தொடங்குகிறார். அவர் பெங்களூரில் வாழும்
காலத்தில் சீரான இடைவெளிகளில் ஏற்படும் சில அரசியல் நிகழ்ச்சிகள் அவரை அமைதியிழக்க வைக்கின்றன. மெல்ல
மெல்ல அவருடைய பதற்றம் பெருகிக்கொண்டே செல்கிறது. சென்னைப் பல்கலைக்கழக வேலை வாய்ப்பு
கொஞ்சம் கொஞ்சமாக மங்கிக்கொண்டே வருவதால் உருவாகும் ஏமாற்றத்தை அவர் அமைதியாக விழுங்கிக்கொள்கிறார்.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த
கல்லூரியிலிருந்து ஒருநாள் விருப்ப ஓய்வு பெற்றுக்கொள்கிறார் ஆறுமுகப்பாண்டியன். பொறியியல்
பட்டதாரியான மகன் திருமணம் செய்துகொண்டு பெங்களூரிலேயே வசிக்கத் தொடங்குகிறார். மருத்துவப்
பட்டதாரியான மகளுக்கு சென்னை மாப்பிள்ளை கிடைத்துவிடுவதால், திருமணத்துக்குப் பிறகு
அவர் சென்னைக்குச் சென்றுவிடுகிறார். இனி ஆற்றவேண்டிய கடமையென எதுவும் எஞ்சியில்லாத
நிலையில் ஆறுமுகப்பாண்டியன் பெங்களூரில் வாங்கிய வீட்டை விற்றுவிட்டு, மனைவியோடு சென்னைக்கு
இடம்பெயர்ந்து செல்கிறார். ஓர் இடப்பெயர்ச்சியில் தொடங்கும் நாவல் இன்னொரு இடப்பெயர்ச்சியில்
முடிவடைகிறது.
காவேரி மண் ஆறுமுகப்பாண்டியனின் அடைக்கலமாக
இருந்தது. அவர் விரும்பும் தெய்வமான காவேரியம்மன் ஆலயம் அவர் குடியிருந்த வீட்டுக்கு
அருகிலேயே இருந்ததைப் பார்த்தபோது, அவர் எல்லையில்லாத
மகிழ்ச்சியில் திளைக்கிறார். அந்தத் தெய்வத்தை வணங்கிக்கொண்டிருந்த வேளையில் தன் மனைவி
இரண்டாவதாகக் கருவுற்ற செய்தி கிடைத்ததால், அப்போது பிறந்த குழந்தைக்குக் காவேரி என்றே
பெயரிடுகிறார். காவேரி வளர்ந்து, படித்து, பெரியவளாகி, மருத்துவராகப் பணிபுரியத் தொடங்கி,
திருமணம் செய்துகொண்டு காவேரி மண்ணைவிட்டு இடம்பெயர்ந்கிறார். மகளான காவேரியைத் தொடர்ந்து காவேரி மண்ணைவிட்டு
ஆறுமுகப்பாண்டியனும் இடம்பெயர்கிறார். நாவலின் தலைப்பான ’காவேரி’ என்பது ஒருபுறம் அவருக்கு
அடைக்கலம் அளித்த காவேரி மண்ணைப் போற்றும் சொல்லாகவும் இன்னொருபுறம் அவருடைய ஆசை மகளின்
பெயரை நினைவுபடுத்தும் சொல்லாகவும் அமைந்துவிட்டது.
ஒரு மாநிலத்தின் தலைநகரம் என்னும் நிலையில்,
எல்லாவிதமான குரல்களும் எதிரொலிக்கும் இடமாக பெங்களூர் அமைவது தவிர்க்கமுடியாத ஒன்று.
ஒரு பகுதியினருக்கு உவப்பாக இருக்கும் அரசியல் முழக்கங்களும் நடவடிக்கைகளும் இன்னொரு
பகுதியினருக்கு கசப்பாகவும் சங்கடமாகவும் இருக்கும். அதை அமைதியாகக் கடந்துபோவது என்பது
மிகப்பெரிய சாகசம். அந்தக் கலையை அறியாத நகரமனிதர்களுக்கு வாழ்க்கை என்பது மிகப்பெரிய
வதையாக மாறிவிடும்.
கோகாக் அறிக்கை போராட்டம், சரோஜினி
மகிஷி அறிக்கை, காவிரி நதிநீர்ப் பங்கீடு போராட்டம், ராஜீவ் காந்தி
படுகொலை, வீரப்பனின் பிடியில் கன்னட நட்சட்திர
நடிகரான ராஜ்குமார் கண்ணுக்குத் தெரியாத இடத்தில் 108 நாட்கள் அடைபட்டிருந்த சோகம்,
காவிரி நதிநீர்ப்பங்கீடு தீர்ப்பு தொடர்பான போராட்டங்கள், திருவள்ளுவர் சிலைத்திறப்பு
போராட்டம் என சீரான இடைவெளிகளில் நிகழ்ந்த பல அரசியல் நடவடிக்கைகளையும் சுந்தரபாண்டியன்
தன் நாவலில் சித்தரித்திருக்கிறார். அவற்றுக்கு இணையாக, அத்தருணங்களில் எழுந்த மன உளைச்சலையும்
பதிவு செய்திருக்கிறார். பல ஆண்டு கால வரலாறு ஒரு திரைப்படக்காட்சியைப்போல நம் கண்முன்னால்
ஒளிர்ந்துவிட்டு மறைகிறது.
கதைச்சம்பவங்களின் ஊடே போராட்டம் தொடர்பான
செய்திகளைத் தொகுத்தளித்திருப்பதைப்போலவே, கர்நாடகத்தின் பண்பாட்டுக் கருவூலங்களாக
அமைந்துள்ள பல ஆலயங்களின் கலைச்சிற்பங்களிலும் நகர அமைப்பிலும் அந்தக் காலத்துத் தமிழர்கள்
ஆற்றிய பங்களிப்பு தொடர்பான செய்திகளையும் வேறு சில அத்தியாயங்களில் சுந்தரபாண்டியன்
தொகுத்திருக்கிறார். அனைத்தும் அவர் அரிதின் முயன்று திரட்டிய தகவல்கள். அனைத்தையும்
தகவல்கள் என்னும் எல்லைக்குள்ளேயே நிறுத்திவைத்திருக்கிறார் சுந்தரபாண்டியன். அந்தக்
கட்டுப்பாடு இப்பிரதிக்குப் பெருமை சேர்க்கிறது. அவர் கற்றறிந்த ஆய்வுமுறைமை அவருக்குத்
துணையாற்றியிருக்கிறது.
’பிறர் மீது தீர்ப்பு எழுதாதிருங்கள்’
என்பது பைபிள் வாசகம். சுந்தரபாண்டியனின் எழுத்துமுறைமை அதையொட்டி அமைந்திருக்கிறது. அடுத்தவர்களைப்பற்றி குறைசொல்லி வம்புக்கு இழுப்பதை
ஒரு வேலையாகவே செய்துகொண்டிருப்பவர்களுக்கு நடுவில், அந்த எண்ணத்தையே உதறிவிட்டவராகத்
திகழ்கிறார் சுந்தரபாண்டியன். அது அவருக்கும் பெருமை சேர்க்கிறது. நாவலுக்கும் பெருமை
சேர்க்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன்னால் பெர்ட்னாடோ
பெர்ட்லுச்சி என்னும் இயக்குநர் இயக்கிய The Last Emperor என்னும் திரைப்படத்தைப் பார்த்தேன். ஒரு காலத்தில் அரசனும் படைவீரர்களும் தளபதிகளும்
நடமாடிய ஓர் அரண்மனை வளாகம் என்பது சுற்றுலா மையமாக மாற்றப்பட்டு மக்கள் வரிசையில்
நின்று பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு புரட்சிதான் காரணம்.
முடியாட்சி முடிவடைந்து குடியாட்சி தொடங்கிவிடுகிறது. எதிர்கால அரசன் என சிறுவயதில்
முடிசூட்டப்பட்ட சிறுவனொருவன் புரட்சியின்
காரணமாக அரசிழந்து, அரண்மனையை விட்டு வெளியேற்றப்பட்டுவிடுகிறான். எங்கெங்கோ அலைந்து
திரிந்து, சிறையில் காலத்தைக் கழித்து, எப்படியோ வாழ்க்கை நடத்துகிறான் அச்சிறுவன்.
சமூகம் மாறிவிட்டது. வாழ்க்கை அமைப்பு மாறிவிட்டது. அனைத்தையும் அவன் புரிந்துகொள்கிறான்.
மெளனமாக அனைத்தையும் ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை நடத்துகிறான்.
அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு முதியவனாக
பயணியர் கூட்டத்தோடு ஒருவனாக நின்று அந்த அரண்மனைக்கு வருகிறான் அவன். வேடிக்கை பார்த்தபடி அரியாசனத்தை நெருங்கி வரும்போது,
அவனுக்கு திடீரென அரியாசனத்துக்குப் பின்னால் அவன் சிறுவனாக இருந்தபோது ஒளித்துவைத்து
விளையாடிய வெட்டுக்கிளி பொம்மையின் நினைவு வந்துவிடுகிறது. அது இன்னும் இருக்கிறதா
என்று பார்க்கும் ஆவலோடு அரியாசனத்துக்கு அருகில் சென்று தேடுகிறான். அறுபது ஆண்டுகளுக்கு
முன்னால் அவன் வைத்துவிட்டுச் சென்ற வெட்டுக்கிளி இன்னும் அப்படியே இருக்கிறது. அவன்
அதை புன்னகைத்தபடி எடுத்துப் பார்த்துவிட்டு, தனக்கு அருகில் நிற்கும் இன்னொரு சிறுவனிடம்
’நான் சொர்க்கத்தின் மகன், அரசன்’ என்று சொல்லிக்கொண்டே கொடுத்துவிட்டுச் செல்கிறான்.
வரலாற்றின் அவனுக்கு அந்த அடையாளம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஒரு வகையில் பழங்காலப்
பெருமைகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் அப்படிப்பட்டவைதான். அவை வெறும் அடையாளங்கள்.
இந்த நாவலில் தொடக்கக் காட்சி மிகமுக்கியமான ஒன்று.
படைப்பாளனின் ஆழ்மனம் அவனையறியாமல் சில வரிகளில் வெளிப்படுவதைப்பற்றி பல படைப்பாளிகள்
பேசியிருக்கிறார்கள். காவேரி நாவலின் தொடக்கக் காட்சியில் சுந்தரபாண்டியனின் ஆழ்மனம்
அழகாக வெளிப்பட்டிருக்கிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து
தொடங்குகிறது அக்காட்சி. வேலைக்கான நேர்காணலில் கலந்துகொள்வதற்காக பெங்களூர் செல்வதற்காக
ரயில் நிலையத்துக்கு வருகிறான் ஆறுமுகப்பாண்டியன். அந்த இடத்துக்கு வரும் பேருந்துகள்
வழக்கமாக சென்ட்ரல் நிலையத்துக்கு முன்னால் இருக்கிற சிக்னல் கம்பத்துக்கு அருகில்
வரும்போது சிவப்பு விளக்குதான் எரிவதுதான் வழக்கம். வண்டி நிற்கும் ஓரிரு நிமிடங்களில்
ரயில்நிலையத்துக்குச் செல்லவேண்டிய பிரயாணிகள்
அவசரமாக இறங்கி பாதையைக் கடந்து நடந்து சென்றுவிடுவார்கள். ஆனால், அன்றைய தினம் சிக்னல்
கம்பத்தில் பேருந்து நிற்கவில்லை. சிக்னலில் பச்சை விளக்கு எரிந்துகொண்டிருந்த காரணத்தால் வேகமாகக் கடந்து
சென்று சற்றே தொலைவிலிருக்கும் தங்கசாலை நிறுத்தத்தில் நிற்கிறது. அங்கே இறங்கும் ஆறுமுகப்பாண்டியன்
கைப்பைகளோடு நிலையத்துக்கு மூச்சிறைக்க ஓடிவருகிறான்.
அதுதான் அக்காட்சி.
ஒரு வாய்ப்பு தவறிவிடுகிறது. இன்னொரு
வாய்ப்பு தானாக அமைகிறது. அதுதான் அக்காட்சியின் சாரம். அதுதானே ஆறுமுகப்பாண்டியனின்
வாழ்க்கை. அவர் எதிர்பார்த்த பல்கலைக்கழக வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. அவரே
எதிர்பாராத பெங்களூர் கல்லூரி வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு
திறக்கிறது என்பதைப் படிக்கும்போது ஏதோ பழங்காலத்துக்கதை போல சிலருக்கு சிரிப்பு வரலாம்.
ஆனால் தனக்கென திறக்கும் கதவு வழியாக வெளியேறிப் பயணம் செய்பவர்கள் யாரும் அப்படி சிரிக்க
மாட்டார்கள்.
பெங்களூர் வாழ்க்கை ஆறுமுகப்பாண்டியனின்
வாழ்க்கையில் பல உயர்வுகளை உருவாக்கியிருக்கிறது. சொந்த வீடு, வாசல், வாழ்க்கை என அவருடைய
உலகம் விரிந்திருக்கிறது. பல புதிய நட்புக்கரங்கள் கிடைத்திருக்கின்றன. பல புதிய தொடர்புகள்
உருவாகியிருக்கின்றன. கூடவே அவருக்கு சில கசப்பான அனுபவங்களும் அமைந்திருக்கின்றன. வெல்லத்தின் இனிப்பு ஒருபக்கம்.
வேப்பிலையின் கசப்பு இன்னொரு பக்கம். அனைத்தையும் அசைபோட்டு தொகுத்து வாசகர்களுக்குப்
படைத்திருக்கிறார் ஆறுமுகப்பாண்டியன்.
ஆறுமுகப்பாண்டியன் முன்வைத்திருக்கும்
‘காவேரி’ உண்மையில் காவேரியின் ஒரு துளி. ஆறுமுகப்பாண்டியனுக்கு முன்பு பெங்களூரை விட்டு
வெளியேறிச் சென்றவர்களின் கோணத்தில் இன்னும் சில துளிகள் இருக்கும். இன்னும் பெங்களூரிலேயே
வசிக்கும் கபிரியேல், இராமச்சந்திரன், முருகன், அத்தை, கந்தசாமி, விஸ்வநாதன், வெங்கட்ராமன்,
பாலசுந்தரம், நல்லசிவம் என எண்ணற்றோரின் கோணத்தில் மேலும் சில துளிகள் இருக்கும். இப்படி
கோடிக்கணக்கான துளிகள் சேர்ந்தாலும் கூட, அது
காவேரியின் நிழலாகத்தான் இருக்குமே தவிர, காவேரியாக இருக்காது.
ஒருவர் தன் வாழ்க்கையைத் தொகுத்துப்
பார்த்துக்கொள்வது என்பது ஒரு முக்கியமான செய்தி. ஒரு கோணத்தில் அவர் தான் பார்த்த
சமூகத்தை விருப்புவெறுப்பில்லாமல் மதிப்பிடுகிறார். இன்னொரு கோணத்தில் அவர் தன்னைத்தானே,
தன் வாழ்க்கையையே சுயமதிப்பீடு செய்துகொள்கிறார். காவேரி நாவலில் இரண்டும் நிகழ்ந்திருக்கிறது.
இரு நிலைகளிலும் சுந்தரபாண்டியன் ஒரு தருணத்தில் கூட சமநிலை பிறழவில்லை என்பது எனக்கு
மிகமுக்கியமாகப் படுகிறது. அவர் தன் மனத்தில் கபிரியேலுக்கும் இடமளித்திருக்கிறார்.
இராமச்சந்திரனுக்கும் இடமளித்திருக்கிறார். முருகனுக்கும் இடமளித்திருக்கிறார். பசவண்ணனுக்கும்
இடமளித்திருக்கிறார். அனைவரையும் நட்புணர்வோடும் அன்போடும் பார்க்கும் அவருடைய பார்வை
அவரை அரணாக நின்று காத்திருக்கிறது. அது இயற்கை அவருக்கு அளித்திருக்கும் கொடை.
தன்வரலாற்று அம்சங்கள் கொண்ட நாவல்கள்
என தமிழில் ஒரு பெரிய வரிசை உண்டு. தேரோடும் வீதி, சுதந்திர தாகம், சிலுவைராஜ் சரித்திரம்,
கருக்கு, நிலாக்கள் தூரதூரமாய், நிறங்களின் உலகம் என சொல்லிக்கொண்டே செல்லலாம். இவ்வரிசையில்
சுந்தரபாண்டியனின் நாவல்களுக்கும் இடமுண்டு. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
(சுந்தரபாண்டியன்
எழுதி சமீபத்தில் வெளிவந்த ‘காவேரி’ நாவலுக்கு எழுதிய முன்னுரை)