நான் அல்சூரில் வசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் (1989), தாமோதர முதலியார் தெருவில் இயங்கிவந்த திருக்குறள் மன்றம் என்னும் நூலகத்தில் உறுப்பினராகி புத்தகங்களை எடுத்துப் படித்துவந்தேன். காந்தியடிகள் தொடர்பான பல முக்கியமான நூல்கள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட காந்தியடிகளின் கடிதங்கள், உரைக்குறிப்புகள், கட்டுரைகள், பயணக்குறிப்புகள் ஆகியவை அடங்கிய ஆறு பெருந்தொகுதிகளை அங்கேதான் முதன்முதலில் பார்த்தேன். பச்சை நிறத்தில் ஒரு பெரிய பேரேடுபோல உருவாக்கப்பட்டிருந்த கட்டமைப்பு உறுதியாகவும் அழகாகவும் இருந்தன. எல்லாமே அறுபதுகளில் வெளிவந்தவை. நான் அவை அனைத்தையும் ஒவ்வொன்றாக வீட்டுக்கு எடுத்துச் சென்று படித்தேன். தற்செயலாக எனக்கு அப்போது இன்னொரு புதையல் கிடைத்தது. அது அ.ராமசாமி என்பவர் எழுதிய 'தமிழ்நாட்டில் காந்தி' என்னும் புத்தகம். அதுவும் அறுபதுகளில் வெளிவந்த புத்தகம்.