Home

Sunday 23 July 2023

அ.இராமசாமி : முழுமை பெற்ற சித்திரம்

  

நான் அல்சூரில் வசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் (1989), தாமோதர முதலியார் தெருவில் இயங்கிவந்த திருக்குறள் மன்றம் என்னும் நூலகத்தில் உறுப்பினராகி புத்தகங்களை எடுத்துப் படித்துவந்தேன். காந்தியடிகள் தொடர்பான பல முக்கியமான நூல்கள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட காந்தியடிகளின் கடிதங்கள், உரைக்குறிப்புகள், கட்டுரைகள், பயணக்குறிப்புகள் ஆகியவை அடங்கிய ஆறு பெருந்தொகுதிகளை அங்கேதான் முதன்முதலில் பார்த்தேன்பச்சை நிறத்தில் ஒரு பெரிய பேரேடுபோல உருவாக்கப்பட்டிருந்த கட்டமைப்பு உறுதியாகவும் அழகாகவும் இருந்தன. எல்லாமே அறுபதுகளில் வெளிவந்தவை. நான் அவை அனைத்தையும் ஒவ்வொன்றாக வீட்டுக்கு எடுத்துச் சென்று படித்தேன். தற்செயலாக எனக்கு அப்போது இன்னொரு புதையல் கிடைத்தது. அது .ராமசாமி என்பவர் எழுதிய 'தமிழ்நாட்டில் காந்தி' என்னும் புத்தகம். அதுவும் அறுபதுகளில் வெளிவந்த புத்தகம்

 

காந்தியடிகள் முதன்முதலாக 1896இல் தமிழ்நாட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கு வயது 27. இறுதியாக அவர் மறைவதற்கு முன்னால் 1946 இல் வந்தார். இடைப்பட்ட ஐம்பதாண்டுகளில்  இருபது முறை அவருடைய பயணம் நிகழ்ந்திருக்கிறது. அந்த இருபது பயணங்களைப்பற்றிய தகவல்களையும் ஒவ்வொரு பயணத்திலும்  அவரைச் சந்தித்த மனிதர்களைப்பற்றிய குறிப்புகளையும் அவர் ஆற்றிய உரைகளைப்பற்றிய விவரங்களையும் விரிவான அளவில் தேடித் திரட்டித் தொகுத்திருந்தார் .இராமசாமி. அந்தப் புத்தகத்தைப் படித்த பிறகுதான் இந்தியாவில் வேறு எந்த மாநிலப்பகுதியை விடவும் தமிழ்நாட்டுக்கே அவர் கூடுதலான அளவில் வந்து சென்றிருக்கிறார் என்னும் தகவலைத் தெரிந்துகொண்டேன். ஒவ்வொரு பயணத்திலும் காந்தியடிகள் கலந்துகொண்ட கூட்டங்கள் நடைபெற்ற ஊர்களைப்பற்றிய விவரங்கள், ஆற்றிய உரைகள் பற்றிய குறிப்புகள், ஒவ்வொரு ஊரிலும் அவருடைய உரையை மொழிபெயர்த்தவர்களின் பெயர்கள் என எண்ணற்ற தகவல்களைத் திரட்டி அத்தொகைநூல்களை உருவாக்கியிருந்தார் .இராமசாமி

 

அவரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ளும ஆவலில் நண்பர்கள் பலரிடம் அவரைப்பற்றி விசாரித்தேன். யாருக்கும் முழு அளவில் தெரியவில்லை. அவர் பல்வேறு பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவம் நிறைந்தவர். பழகுவதற்கு இனிய மனிதர். காந்தியக் கொள்கைகள் மீது ஆழமான ஈடுபாடு கொண்டவர் என்ற சுருக்கமான அறிமுகச்சித்திரம் மட்டுமே அன்று எனக்குக் கிடைத்தது. ஆனால் அந்தப் புத்தகம் அவருடைய அர்ப்பணிப்புணர்வின் அடையாளமாக விளங்கியது. காந்தியடிகள் பயணம் செய்த அதே பாதையில் அவரும் பயணம் செய்தார். அவர் தங்கிய கிராமங்களில் அவரும் தங்கி தகவல்களைத் திரட்டினார். அன்றைய காலகட்டத்தில் வெளியான செய்திக்குறிப்பகளைத் தேடியெடுத்து ஆய்வு செய்து  வரிசைப்படுத்தி இணைத்தார். பிறகு பல்வேறு பத்திரிகையாளர் சந்திப்புகளில் நிரூபர்கள் கேட்ட கேள்விகளையும் காந்தியடிகள் அளித்த பதில்களையும் பாடுபட்டுச் சேகரித்துத் தொகுத்தார். இந்த மண்ணில் ஒரு தனிமனிதன் நிகழ்த்திய சாதனை என்றே 'தமிழ்நாட்டில் காந்தி' புத்தகத்தைச் சொல்லலாம்

 

ஏறத்தாழ இரண்டு வார காலம் அப்புத்தகத்தை என்னோடு வைத்திருந்தேன். படித்துமுடித்த பிறகு தேவையான குறிப்புகளை எடுத்துககொண்டு புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன். அந்தப் புத்தகத்தை சொந்தமாக வாங்கி வைத்துக்கொள்ள ஆசைப்பட்டு பல இடங்களில் அப்புத்தகத்துக்காக அலைந்தேன். எங்கும் கிடைக்கவில்லை. அது விற்பனையிலேயே இல்லை. சென்னைக்கு வரும் நேரங்களிலெல்லாம் பல பழைய புத்தகக்கடைகளில் ஏறியிறங்கி தேடிப் பார்த்தேன். ஒன்றும் பயனில்லை. அந்தப் புத்தகம் சிறிது காலம் மக்களிடையில் புழங்கி வானவில்லைப்போல மறைந்திவிட்டதாகத் தோன்றியது

 

அந்தப் புத்தகத்தை அச்சில் பார்க்க மேலும் இருபது ஆண்டுகள் காத்திருக்க நேர்ந்தது.  ஆனந்தவிகடன் வெளியீடு. அப்புத்தகம் வெளிவந்த வேகத்திலேயே விற்பனையாகிவிட்டது. என் வேலை நெருக்கடிகளிலிலிருந்து விடுபட்டு சென்னைக்கு வந்த சமயத்தில் எங்கும் புத்தகம் கிடைக்கவில்லை. நல்ல வேளையாக, விகடன் அலுவலகத்தில் வேலை செய்த என் நண்பர் ஜெயகுமார் எனக்காக ஒரு பிரதியை வாங்கி அனுப்பிவைத்தார். அன்றுமுதல் இன்றுவரை ஒரு புனைவுநூலைப் படிப்பதுபோல பல முறை அப்புத்தகத்தைப் படித்துவிட்டேன். நினைக்கும் போதெல்லாம் எடுத்துப் படிக்கத்தக்க வகையில் அப்புதகத்தை மேசையின் மீது வைத்துக்கொண்டேன்.  

 

2021ஆம் ஆண்டில் சந்தியா பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்த 'காந்தியின் கட்டளைக்கல்' என்னும் புத்தகம் .இராமசாமி பற்றிய மனச்சித்திரத்தை இன்னும் விரிவாக்கியதுபுத்தத்தைப் படித்துவிட்டு நண்பர் நடராஜனுடன் உரையாடியபோது .இராமசாமி பற்றி மேலும் சில தகவல்களைத் தெரிந்துகொண்டேன். சுங்கத்துறையில் பணியாற்றிய அவருடைய பிரிவின் தலைவராக இருந்த மோகன்தாஸ் என்பவரின் தந்தையே .இராமசாமி என்றும் காந்தியத்திலும் வள்ளுவத்திலும் தோய்ந்தவர் என்றும் பாராட்டிச் சொன்னார். காந்தியின் கட்டளைக்கல் புத்தகத்தில் 26 கட்டுரைகள் இருந்தன. வள்ளுவர் வகுத்துரைத்த வாழ்க்கை நெறிகள் காந்தியடிகளின் வாழ்வில் மிக இயல்பாகச் வெளிபபடுவதை அவருடைய தென்னாப்பிரிக்க வாழ்வில் நடைபெற்ற வெவ்வேறு நிகழ்ச்சிகளை விவரித்து நிறுவியிருந்தார் .இராமசாமி. அவருடைய நுண்ணுணர்வுக்கும் ஆய்வுப்பார்வைக்கும் அந்த நூல் மிக நல்ல எடுத்துக்காட்டு

 

அந்த நூல் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கட்டளைக்கல் நூலையும் தமிழ்நாட்டில் காந்தி நூலையும் மீண்டுமொரு முறை படித்துவிட்டேன்.இராமசாமியின் மீதான மதிப்பு ஒவ்வொரு நாளும் பெருகிக்கொண்டே இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த எண்ணற்ற காந்திய ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றையும் காந்தியக் கொள்கைகள் மீது அவர்கள் கொண்டிருந்த நெருக்கத்தையும் இணைத்து தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருபவன் என்கிற வகையில். எண்ணற்ற வாழ்க்கை வரலாற்று நூல்களைத் தேடித்தேடிப் படித்து வருகிறேன். ஒரு சுவாரசியத்துக்காக அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் குறிப்புகளையம் .இராமசாமி திரட்டியிருக்கும் குறிப்புகளையும் பலமுறை ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அந்த ஒப்பீடு என்னை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது   . கிஞ்சித்தும் மிகையும் இல்லாமல் குறையும் இல்லாமல் அந்த அளவுக்கு துல்லியமான தகவல்களை .இராமசாமி தொகுத்து முன்வைத்திருக்கிறார். ஒரு சிறந்த ஆய்வாளருக்குரிய சமநிலையை .இராமசாமி கடைப்பிடித்திருப்பதை என்னால் உய்த்துணர முடிகிறது

 

.இராமசாமியின் நூற்றாண்டை தமிழ்ச்சமூகத்துக்கு நினைவூட்டும் வகையில் ஆய்வாளர் .பிச்சை தினமணி நாளேட்டில் 23.06.2023 அன்று எழுதிய கட்டுரை .இராமசாமியின் சித்திரத்தை இன்னும் நெருக்கமாக வழங்கியது. .இராமசாமியை நேருக்கு நேர் பார்த்துப் பழகியவர் என்கிற வகையில் அவர் அளித்திருந்த குறிப்புகளை மிகவும் ஆர்வத்துடன் வாசித்தேன். .இராமசாமி எத்தகைய ஆளுமை என்பதை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது

 

.இராமசாமி நூற்றாண்டு நினைவுப்பதிப்பாகதமிழ்நாட்டில் காந்தி’ புத்தகத்தை வெளியிடவிருக்கும் செய்தியை நண்பர் நடராஜன் தொலைபேசியில் தெரிவித்தபோது நான் எழுதிய புத்தகமொன்று வெளிவருவதைக் கேட்டதுபோல மகிழ்ந்தேன். நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வது என் கடமை என்றும் முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு நாளும் என்னொடு உரையாடிக்கொண்டிருக்கும் .இராமசாமி அவர்களுக்கு நான் செலுத்தும் வணக்கமாக இருக்குமென்றும் நினைத்துக்கொண்டேன்

 

07.07.2023 அன்று மாலை வினோபா அரங்கில் நூற்றைம்பதுக்கும் மேற்பட்டோர் நிறைந்திருந்தனர். ஒவ்வொருவருடைய நெஞ்சிலும் .இராமசாமி நிறைந்திருப்பதை அவர்களுடன் நிகழ்த்திய உரையாடல்கள் வழியே அறிந்துகொண்டேன். சற்றே வயதில் மூத்தவர்கள் தம் இளமை நாட்களில் .இராமசாமியைச் சந்தித்ததையும் உரையாடியதையும் நினைவுபடுத்திப் பேசிக்கொண்டிருந்தனர்.

 

காந்தி கல்வி நிலையம் சரவணன் நிகழ்ச்சியைப்பற்றிய சுருக்கமான அறிமுகவுரையை நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து வரவேற்புரை நிகழ்த்தினார் சந்தியா பதிப்பகம் நடராஜன் . பல ஆண்டுகளுக்கு முன்னால் இப்புத்தகத்தின் உள்ளடக்கத்தால் ஈர்க்கப்பட்டு மறுபதிப்பு கொண்டுவர விரும்பியதாகவும் பதிப்புரிமை தொடர்பான தகவல்களைத் திரட்ட இயலாத சூழலால் அந்த விருப்பம் கைகூடவில்லை என்றும் தெரிவித்தார். காலம் கனிந்துவர அவர் மேலும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. சுங்கத்துறையில் அவர் பணியாற்றிய பிரிவின் தலைவராக விளங்கியவரே தான் இத்தனை காலமும் தேடி வந்த .இராமசாமியின் மகன் என்னும் உண்மை நீண்ட காலத்துக்குப் பிறகே தெரிய வந்தது. அப்போது தான் அடைந்த பரவசத்தை நடராஜன் விவரித்தபோது , அவையிலிருந்த அனைவரும் அப்பரவசத்தை அடைந்தனர். அந்த முன்னுரைக் குறிப்போடு மேடையில் அமர்ந்திருந்த ஆளுமைகளையும் அரங்கத்தில் நிறைந்திருந்த பார்வையாளர்களையும் வருகவருக என வரவேற்றார்.

 

தலைமையுரை ஆற்றிய .அண்ணாமலை (இயக்குநர், தேசிய காந்தி அருங்காட்சியகம், புதுதில்லி) .இராமசாமி திரட்டியளித்திருக்கும் தகவல்கள் வழியாக காந்தியடிகள் தமிழ்நாட்டில் பயணம் செய்த ஊர் விவரங்களைத் தொகுத்து வழிகாட்டும் வரைபடமாக வைத்துக்கொண்டு நண்பர்களோடு இணைந்து ஒரு நீண்ட பயணம்  சென்று வந்ததையும் ஆங்காங்கே பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த நினைவுச்சின்னங்களைப் பார்த்த அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார் .

 

அதைத் தொடர்ந்து சி.இராஜேந்திரன் (பணிநிறைவு பெற்ற சுங்கத்துறை தலைமை ஆணையர், வள்ளுவர் குரல் குடும்பம் நிறுவனர்) தமிழ்நாட்டில் காந்தி புத்தகத்தை வெளியிட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து காந்திய ஆய்வாளர் .பிச்சை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான டி.கே.எஸ்.இளங்கோவன், சித்ரா   பாலசுப்பிரமணியம், கா.வி.ஸ்ரீநிவாஸமூர்த்தி, விப்ரநாராயணன் ஆகியோரும் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். நூல்வெளியீட்டைத் தொடர்ந்து இராஜேந்திரன் தனக்கும் (காந்தியடிகளின் பெயரைக் கொண்ட) .இராமசாமியின் மகனான மோகன்தாஸ் அவர்களுக்கும் இருந்த நெருக்கத்தைப்பற்றி எடுத்துரைத்தார்.

 

வாழ்த்துரை வழங்கிய டிகே.எஸ்.இளங்கோவன் நூற்றாண்டு நாயகரான .இராமசாமி அவர்களும் தன் தந்தையாரும் வெவ்வேறு அரசியல் சார்புநிலை உடையவர்கள் என்றபோதும் அவற்றைக் கடந்து இறுதிவரை நட்போடு வாழ்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார். தம் இளமைக்காலத்தில் கண்ட, அனைவரோடும் எளிமையான தோற்றத்துடன் கலந்து பேசி உரையாடிய .இராமசாமியின் தோற்றம் தம் ஆழ்மனத்தில் இன்னும் பதிந்திருப்பதாக பரவசத்துடன் தெரிவித்தார். சமத்துவ உணர்வோடு எல்லோரோடும் கலந்து பழகிய அவருடைய பண்பும் அன்பும் தம்மை மிகவும் ஈர்த்தன என்று தம் உரையில் குறிப்பிட்டார்.

 

காந்திய உரையாளரான சித்ரா பாலசுப்பிரமணியம் அவர்கள் .இராமசாமி நினைவு நூற்றாண்டுப் பதிப்பாக வெளிவந்திருக்கும் தமிழ்நாட்டில் காந்தி புத்தகத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், மிக விரைவிலேயே இந்தப் புத்தகம் இன்னும் சில கூடுதல் தகவல்களோடு ஓர் ஆய்வுப்பதிப்பாகவும் வெளிவர வேண்டும் என்றொரு கோரிக்கையையும் முன்வைத்தார். காந்தியடிகளின் பயணங்களைப்பற்றிய குறிப்புகளில் அவரைச் சந்தித்து உரையாடிய நூற்றுக்கணக்கான ஆளுமைகள், செயல்பாட்டாளர்கள், அறிஞர்கள்  போன்றோரின் பெயர்கள் நிறைந்திருக்கின்றன. அன்று அவர்கள் நம்பிக்கையூட்டும் தொண்டுள்ளம் கொண்டவர்களாகவும் சத்தியாகிரகத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்து நாளடைவில் ஆளுமைகளாக மலர்ந்தவர்கள். அவர்களைப்பற்றிய துணைக்குறிப்புகள் புதிய பதிப்புக்கு ஆய்வு மதிப்பைக் கூட்டும் என்றும் நூலின் மகத்துவத்தை அதிகரிக்கவைக்கும் என்றும் தெரிவித்தார். சித்ராவின் உரையைத் தொடர்ந்து அண்ணாமலை அவர்கள் சித்ரா குறிப்பிட்டதுபோன்ற ஒரு முயற்சி மேற்கு வங்காளத்தில் மேற்கொள்ளப்பட்ட தகவலைக் குறிப்பிட்டார். சித்ரா குறிப்பிட்டுப் பேசிய வகையிலான எல்லாவகையான துணைக்குறிப்புகளோடும் வங்கமொழியில் ஓர் ஆய்வுப்பதிப்பை கோபாலகிஷ்ண காந்தி கொண்டுவந்திருக்கும் தகவலைத் தெரிவித்தார்

 

விப்ரநாராயணன் (ட்டி.டி.திருமலையான் புதல்வர்) தன் உரையில் மதுரையில் தன் இளமைக்காலத்தில் .இராமசாமியைக் கண்டு பேசிப் பழகிய பழைய காலத்து நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். கல்வியைத் தொடர்வதற்காக சென்னைக்கு வந்த பிறகு  அவரைத் தம்மால் சந்திக்க இயலாமல் போனதைப்பற்றியும் துயரத்துடன் குறிப்பிட்டார்.

 

பாரதியியல் அறிஞரான கா..ஸ்ரீநிவாஸ மூர்த்தி 1909இல் பாரதியார் காந்தியடிகளைப்பற்றிய எழுதிய ஒரு வாசகத்தைப் படித்துக்காட்டினார்.அப்போது காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் டிரான்ஸ்வால் நகரில் காந்தியடிகள் நலைமையில் நடந்த சத்தியாகிகப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியை ஒரு பத்திரிகைச் செய்தியாகப் படித்த பாரதியார் உடனே அதைத் தமிழ்நாட்டினர் அறிந்துகொள்ளும்வண்ணம் ஒரு கட்டுரையை எழுதினார். அதன் முடிவில் 'இப்படிப்பட்ட தெய்வீகக் குணங்கள் அமைந்த புருஷனும் உலகத்தில் இருக்கிறானோ என ஆச்சரியமாக உள்ளது' என்று குறிப்பிட்டார் பாரதியார். காந்தியடிகளின் மறைவுக்குப் பிறகு அறிவியலாளர் ஐன்ஸ்டீனும் அதே பொருள்படும்படியான ஒரு வாக்கியத்தைச் சொன்னார்.

 

சிறப்புரையாற்றிய எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ்மொழியிலிருந்து பிற மொழிகளுக்குச் செல்லவேண்டிய நூல்களைப் பரிந்துரைக்கும் ஆலோசனைக்குழுவில் இருந்தபோது, தமிழ்நாட்டில் காந்தி நூலின் முக்கியத்துவம் கருதி அது உடனடியாக ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடப் பரிந்துரைத்ததாகச் சொன்னார். அந்த முயற்சி அரசு எடுத்த துரித நடவடிக்கைகளால் உடனடியாக ஆங்கிலத்தில் வந்துவிட்டது என்றும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டுக்கு அவர் வருகை தருவதற்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் வசித்துவந்த போதே  தொழிலாளர் பாலசுந்தரம் தொடர்பின் வழியாக தமிழர்களைப்பற்றிய அறிமுகம் அவருக்குக் கிடைத்துவிட்டதைப் பார்க்கமுடியும். இந்தியாவில் எந்த மாகாணத்துக்கும் செல்லாத அளவுக்கு தமிழ்நாட்டுக்கு இவர் இருபது முறை பயணம் செய்து வந்துள்ளார். காந்தியடிகளுடன் மேடையில் அமர்ந்திருந்தவர்கள், வரவேற்புரை ஆற்றியவர்கள், உரையாடியவர்கள், தம் ஐயங்களுக்கு விடை தேடி வந்தவர்கள் போன்றோருக்கு அப்பால், நிதி கொடுக்க வந்தவர்கள், அவர் ஏலம் விடும் பொருட்களை விலைகொடுத்து வாங்க வந்தவர்கள், வாங்கிய பொருட்களை மீண்டும் அவரிடம் அன்பளிப்பாகத் திருப்பிக் கொடுத்தவர்கள், கதராடை அணிந்த ஏராளமான ஆண்கள், பெண்கள் , காந்தியடிகளின் வருகைக்குத் தோதாக நாலே நாட்களில் சாலை வசதி செய்து வழங்கிய எளிய தொண்டர்கள் என எல்லாத் தரப்பினரையும் பற்றிய நுண்சித்திரங்கள் .இராமசாமியின் தொகுதியில் அடங்கியுள்ளன. .இராமசாமியின் எழுத்துக்குள்ள ஆவண மதிப்பு இச்சித்திரங்களை உயிரோட்டம் உள்ளவையாக தகவமைக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.

 

மோகன்தாஸின் நெகிழ்ச்சியுரையோடும் கெளதம நாராயணனின் நன்றியுரையோடும் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திக்க நேர்ந்த அக்களூர் ரவி, தஞ்சாவூர்க்கவிராயர், கடற்கரய், மருதசாமி, தாளம் பாரவி, கன்யூட்ராஜ், சுபாஷிணி, பிரேமா அண்ணாமலை, கி.பா.நாகராஜன், திருவாசகம் சரவணன் என பலரையும் அந்த அரங்கத்தில் சந்திக்க முடிந்ததில் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. நிகழ்ச்சி முடிந்ததும் விழாக்கூடத்துக்கு அருகிலேயே அனைவருக்கும் இரவுச்சிற்றுண்டி வழங்கப்பட்டது

 

வீட்டுக்குத் திரும்பி எழுத்து மேசையில் அமர்ந்தேன்நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நெஞ்சில் அலைமோதின. பல ஆண்டுகளுக்கு முன்னால் மங்கலான கோட்டோவியமாக நெஞ்சில் படிந்த .இராமசாமியின் சித்திரம் முழுமையான அளவில் ஒளிரும் சித்திரமாக நினைவில் சுடர்விட்டு எழுவதை என்னால்  உணரமுடிந்தது.

 

(சர்வோதயம் மலர்கிறது - ஜூலை 2023)