Home

Sunday 23 July 2023

அந்தரத்தில் மிதக்கும் இசை

  

ஒருமுறை நானும் மறைந்த எழுத்தாளர் பாரதிமணியும் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக, குறித்த நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாகவே புறப்பட்டு மண்டபத்தை அடைந்துவிட்டோம். மண்டபத்துக்கு அருகிலிருந்த உணவு விடுதிக்குச் சென்று காப்பி அருந்தியபடி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பிறகுதான் மண்டபத்துக்குச் சென்றோம்.

மணமகளின் தந்தையார்தான் எங்கள் நண்பர். வாசலில் நின்று அவரே வணக்கம் சொல்லி எங்களை வரவேற்றார். முதல் வரிசையில் பாரதிமணியை அமரவைப்பதற்காக அவரை அழைத்துக்கொண்டு புதுவேட்டி சரசரக்க முன்னால் நடந்தார். குடும்பத்தாரின் நலம் விசாரித்தபடி கூடத்துக்குள் அடியெடுத்து வைத்த பாரதிமணி தற்செயலாக வலதுபக்கமாக பார்வையைத் திருப்பினார்.

அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடையில் விரிக்கப்பட்டிருந்த வெள்ளை விரிப்பையும் தவில், மேளம், நாதஸ்வரங்களோடு அமர்ந்திருந்த கலைஞர்களையும் பார்த்துவிட்டு ஒருகணம் நின்றார்.  பிறகு ”கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருக்கிறீர்களா?” என்று நண்பரிடம் ஆர்வத்துடன் கேட்டார். நண்பர் “ஆமாம் சார். நாயனக்கச்சேரி. கட்டாயம் இருக்கணும்னு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சொன்னதால அவசரம் அவசரமா யார்யாரையோ புடிச்சி ஏற்பாடு செஞ்சேன். எல்லாருமே விருதுநகர் பக்கத்துக்காரங்க. ஒரு நண்பர் சொல்லித்தான் புக் பண்ணினோம்” என்றார்.

அதைக் கேட்டு முகம் மலர்ந்த பாரதிமணி “நல்ல விஷயம். நான் இப்படியே உட்காந்துக்கறேன். நாயனக்கச்சேரி கேட்டு ரொம்ப காலமாயிடுச்சி” என்றார். நண்பர் தயங்கினார். “என்ன பத்தி கவலைப்படாதீங்க. நான் கச்சேரிய கேட்டபடி இங்கயே இருக்கேன்” என்று புன்னகையோடு சொன்னார் பாரதிமணி. “சரி சார், சரி சார்” என்றபடி கச்சேரி மேடைக்கு அருகில் அழைத்துச் சென்று அமரவைத்துவிட்டு தயக்கத்தோடு வாசலை நோக்கிச் சென்றார் நண்பர்.

கூடம் கொஞ்சம்கொஞ்சமாக நிறையத் தொடங்கியது. கலைஞர்கள் மேடைக்கு வந்து கச்சேரியைத் தொடங்கினார்கள். தவில் ஓசையும் நாதஸ்வரத்தின் ஓசையும் இரு தனி உருவங்களெடுத்து மேடையில் சுழன்று சுழன்று நடனமிடுவது போல இருந்தது. ஒரு கட்டத்தில் தவிலின் இசை ஓங்கியிருந்தது. இன்னொரு கட்டத்தில் நாதஸ்வரத்தின் இசை ஓங்கியிருந்தது. பாரதி மணி அந்த இசையுடன் ஒன்றிவிட்டார். முகம் மலர்ந்து பிரகாசமாக காணப்பட்டது. இந்த உலகத்திலேயே அவர் இல்லை. வேறொரு உலகத்துக்குள் நுழைந்துவிட்டவர் போலக் காணப்பட்டார்.  நாதஸ்வர இசை இழுக்கிற இழுப்புக்கெல்லாம் அவருடைய தலை அசைந்தது. அவரையறியாமல் ஆஹா, ஆஹாஹா என்று அடிக்கடி லயித்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.

தம் இசையை பாரதி மணி லயித்துக் கேட்கிறார் என்பதைப் புரிந்துகொண்டதும் கலைஞர்கள் உற்சாகத்துடன் மேலும் கூடுதலான இனிமையுடன் கவனித்து வாசிக்கத் தொடங்கினர். ஏற்கனவே தெரிந்த ஒருசில பாடல்களின் பின்னணியில் எழுந்த இசையை மட்டுமே என்னால் ஓரளவு பின்தொடரமுடிந்தது. மற்றபடி, பாடல்களை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். சில சமயங்களில் நாதஸ்வர இசை தண்ணீரைத் தொட்டு தெளிப்பதுபோல இருந்தது. சில சமயங்களில் மழைச்சாரலைப் போல இருந்தது. சில கணங்களில் அடைமழையாக பொழிந்தது.

ஒரு மணி நேரத்துக்கும் மேல் கடந்துவிட்டது. வந்திருந்த பார்வையாளர்கள் மணமக்களை வாழ்த்திவிட்டு ஒவ்வொருவராக விருந்துக்குச் செல்லத் தொடங்கினர். நண்பர் நாலைந்து முறைக்கும் மேலாக நெருங்கி வந்து நின்று அவரை அழைத்துச் செல்ல முயற்சி செய்தார். ஆனால் நாதஸ்வர இசைமயக்கத்தில் பாரதிமணி திளைத்திருந்தார். அவர் கவனத்தைத் திசைதிருப்ப முடியவில்லை. கலைஞர்கள் ஒரு பாட்டை முடித்துவிட்டு சீவாளியிலிருந்து உதடுகளை விலக்கியபோது அவர் மெல்ல தானாகவே எழுந்தார். கலைஞர்களைப் பார்த்து வணங்கியபடி நெருங்கிச் சென்று அவர்களுடைய கரங்களைப்பற்றியபடி ஒருகணம் மெளனமாகப் புன்னகைத்தார். பிறகு மின்னல் வேகத்தில் பையிலிருந்து ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவருடைய கைகளில் வைத்துவிட்டு விடைபெறுவதுபோல தலையசைத்துவிட்டுத் திரும்பி மேடையை நோக்கி நடந்தார்.

மணமக்களை வாழ்த்திவிட்டு, சிற்றுண்டி சாப்பிட்ட பிறகு உடனடியாகத் திரும்பிவிட்டோம். வழியெல்லாம் இளமையிலிருந்து தான் கேட்ட நாதஸ்வரக்கச்சேரிகளைப்பற்றிய செய்திகளைப் பகிர்ந்தபடியே வந்தார் பாரதிமணி.

“அந்தக் காலத்துல எங்க வீட்டுல அப்பா கிராமபோன் ப்ளேயர் வச்சிருந்தார். டி.என்.ராஜரத்தினம் பிள்ளை வாசிச்சது, காருகுறிச்சி அருணாசலம் வாசிச்சதுன்னு ஏகப்பட்ட ரெக்கார்டுங்க வச்சிருந்தார். வாசல்ல ப்ளேயர போட்டு ஓட விட்டுட்டு கேட்டுகிட்டே இருப்பார். பக்கத்துவீடு, எதித்த வீடு ஆம்பளைங்களும் பொம்பளைங்களும் அங்கங்க உட்கார்ந்து கேப்பாங்க. தினமும் சாயங்காலத்துல அவருக்கு இது ஒரு வேலை. ராஜரத்தினம் தோடி வாசிக்கிற ரெக்கார்ட் ஒன்னு உண்டு. அப்பா ஒரு ஆயிரம் தரம் கேட்டிருப்பார். நான் ஒரு ஆயிரம் தரம் கேட்டிருப்பேன். இன்னும் என் நெஞ்சில அப்படியே இருக்குது” என்றபடி உண்மையிலேயே தன் நெஞ்சை மெதுவாகத் தடவிக்கொண்டார் பாரதிமணி.

வீடு வந்து சேரும் வரைக்கும் அவர் நாதஸ்வர இசையைப்பற்றிய செய்திகளையும் கலைஞர்கள் பற்றிய செய்திகளையும் சொல்லிக்கொண்டே வந்தார். ஒருமுறை மைசூர் மகாராஜா திருநெல்வேலியைச் சேர்ந்த சித்திரை நாயகர் என்னும் நாதஸ்வரக்கலைஞரைத் தம் அரண்மனைக்கு வரவழைத்து வாசிக்க வைத்துக் கேட்டிருக்கிறார். பிறகு அவருடைய திறமையை மெச்சி தந்தத்தால் ஆன நாதஸ்வரத்தைப் பரிசாக அளித்திருக்கிறார். திருநெல்வேலிக்குத் திரும்பிய சித்திரை நாயகர் அப்போது விமரிசையாக நடைபெற்ற பாரதியார் – செல்லம்மா திருமணத்தில் பரிசாகக் கிடைத்த நாதஸ்வரத்தில் வாசித்திருக்கிறார். அந்த நாதஸ்வரம் அவரிடமிருந்து அவர் மகனுக்குச் சென்று, பிறகு அவருடைய மகளுக்குச் சென்று சேர்ந்துவிட்டது. அவர் இப்போது வழக்கறிஞர். ஆனால் தாத்தாவின் நினைவாக அதை அவர் இன்னும் வைத்திருக்கிறார். ஒரு நண்பர் அதை போட்டா பிடித்து வைத்திருந்தார். பாரதிமணியைச் சந்தித்தபோது அவருக்குப் பிடிக்குமே என்று ஆர்வத்தோடு எடுத்துவந்து காட்டியிருக்கிறார். “நான் அதை என் கண்ணால பார்த்தேன். தொட்டு கண்ணுல ஒத்திகிட்டேன்” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் பாரதிமணி. அவருடைய விழியோரத்தில் நீர்த்துளி தேங்கியதை நான் பார்த்தேன். அப்புறம் வீடு வந்து சேரும் வரைக்கும் அவர் எதுவும் பேசவில்லை.

வீட்டுக்கு தனிமையில் திரும்பிக்கொண்டிருந்த சமயத்தில் வரவேற்பில் கேட்ட நாதஸ்வரத்தின் இசையே அலையலையாகச் சுற்றி வந்தது. அந்த இசையையையும் அதன் மயக்கத்தையும் பற்றி நினைத்துக்கொண்டே வந்தேன். அந்த மயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக என்னை வண்ணதாசனுடைய ’நடேசக்கம்பர் மகனும் அகிலாண்டத்து அத்தானும்’ சிறுகதையின் பக்கமாகக் கொண்டுசென்று சேர்த்தது.  அதுவும் இசைமயக்கம் சார்ந்த சிறுகதை.

நெரிசல் மிக்க பேருந்தில் பயணம் செய்யும் ஒருவனுடைய விவரிப்பைப்போல அச்சிறுகதை தொடங்குகிறது. மனைவியை முன்வாசல் வழியாக ஏற்றிவிட்டு பின்வாசல் வழியாக ஏறிவந்து ஒரு பக்கமாக ஒதுங்கி நிற்கிறான் அவன். ’நகர்ந்து போங்க நகர்ந்து போங்க’ என்று சொல்லிச்சொல்லி நடத்துனர் பொறுமை இழந்துவிடுகிறார். ஒரு கட்டத்துக்குப் பிறகு பிரயாணிகளிடம் எரிச்சலாகப் பேசுகிறார். ஆனாலும் எல்லா நிறுத்தங்களிலும் நிறுத்தி ஆட்களை ஏற்றிக்கொண்டுதான் போகிறது வண்டி. ஒரு நிறுத்தத்தில் ஒரு நாதஸ்வரக்கலைஞர் துணி உறைக்குள் வைத்து மூடிய தன் நாதஸ்வரத்துடன் ஏறுகிறார். அவரையும் ஏற்றிக்கொள்கிறார் நடத்துனர். ஆனாலும் அவர் வாய் சும்மா இல்லை. “மனுஷன் நிக்கறதுக்கே இங்க இடத்தைக் காணோம். பிதுங்கிகிட்டு இருக்கு. இதுல இது வேற இடைஞ்சல்” என்று எரிச்சலைக் கொட்டுகிறார்.

கேட்டும் கேட்காதது மாதிரி ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றுகொள்கிறார் நாதஸ்வரக்கலைஞர்.

அப்போதுதான் அந்தக் கலைஞரை முழுமையாகப் பார்க்கிறான் அவன். உடனே அவனுக்கு அவர் முகம் நினைவுக்கு வந்துவிடுகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அவனுடைய திருமணத்தில் வாசித்தவர் அவர். அவர் தன் நாதஸ்வரம் வழியே வழிந்தோட வைத்த இசைப்பாடலின் சங்கதிகள் கூட அவனுக்கு நினைவுக்கு வந்துவிடுகிறது. தன் கல்யாண கோலமும் அவருடைய ஆலாபனையும் பின்னிப் பிணைந்து அவன் நினைவில் புரள்கின்றன. அவரைப் பார்த்துப் பேசவேண்டும் என்று அவன் மனம் விழைகிறது. கூட்ட நெரிசல் அதற்கு இடம் தரவில்லை. அவரைப் பார்த்து ஒரு கணம் புன்னகைத்தால் கூட போதும் என்று நினைக்கிறான். அவரோ அந்தக் கூட்டத்தில் எங்கோ கவனத்தை வைத்தபடி முன்பக்கம் பார்த்தவாறு நின்றிருக்கிறார். எப்படி அழைப்பது என்று புரியாமல் தடுமாறுகிறான் அவன். அதற்குள் அவர் நகர்ந்து நகர்ந்துபோய் முன்வாசல் கதவுக்கு அருகில் சென்றுவிடுகிறார். தன் மனைவியின் முகம் தெரிந்தால் அவளுக்கு அச்செய்தியைத் தெரியப்படுத்தலாம் என அவன் நினைக்கிறான். ஆனால் அவள் முகமே தெரியவில்லை. எங்கு நிற்கிறாள் என்பதைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.

நாதஸ்வரக்கலைனரின் தோளில் தொங்கும் சால்வையை அவனால் பார்க்க முடிகிறது. கால்வாயிலிருந்து ஓர் ஓடையைப்போல அவருடைய வாசிப்பு அந்தச் சால்வை வழியாக வழிந்து இறங்கி, பேருந்தில் கால்களுக்கிடையில் பாய்ந்தோடி வந்து தன் பாதங்களை நனைப்பதுபோல அவன் மனம் கற்பனை செய்து பார்த்துக்கொள்கிறது. அப்படியே அவன் மனம் திருமண மண்டபத்தில் அவர் வாசித்த ராகத்தை நோக்கிப் பறந்துவிடுகிறது. அன்று வாசித்த சிவகங்கைச்சீமை பாட்டை ஒருமுறை மனத்துக்குள்ளேயே முணுமுணுத்துக்கொள்கிறான்.

அந்த எண்ணத்திலேயே சிறிது நேரம் மெய்மறந்த நிலையில் ஆழ்ந்திருக்கிறான். பிறகு அதிலிருந்து மீண்டு வந்து அவரைத் தேடியபோது அவர் நின்றிருந்த இடத்தில் அவர் இல்லை என்பதை உணர்கிறான். அவர் இறங்கிச் சென்றுவிட்டார் என்பதை உணர்ந்து திகைக்கிறான். ஒரு வார்த்தை கூட அவரிடம் பேசமுடியவில்லையே என்பது அவனுக்கு வேதனையாக இருக்கிறது. அடுத்த நிறுத்தத்தில் அவன் இறங்கிக்கொள்கிறான். சற்றே தாமதமாக அவன் மனைவி இறங்கி வருகிறாள்.

அவள் முகம் மலர்ந்திருப்பதைப் பார்த்ததும் ஒருவேளை அவளும் நாதஸ்வரக்கலைஞரைப் பார்த்திருப்பாளோ என்று நினைத்துக்கொள்கிறான். ஆனால் அவளோ வந்த வேகத்தில் பேருந்துக்குள் நீண்ட காலத்துக்குப் பிறகு பழைய உறவினரான அகிலாண்டத்து அத்தானை பல ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்ததாகச் சொல்கிறாள். அவரை நீங்கள் பார்த்தீர்களா என்று கேட்கிறாள். அவனோ அவரைப் பார்க்கவில்லை என்றும் தம் கல்யாணத்தன்று நாதஸ்வரம் வாசித்த கலைஞரைப் பார்த்ததாகச் சொல்லிவிட்டு நீ அவரைப் பார்த்தாயா என்று கேட்கிறான். அவளோ அவரைப் பார்க்கவே இல்லை என்று சொல்கிறாள். ஒரே பேருந்தில் பயணம் செய்தபோதும் ஒருவர் பார்ப்பவரை இன்னொருவர் பார்க்கவில்லை. இருவர் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் என்பதால் ஒருவர் பார்ப்பதை இன்னொருவரும்  பார்த்திருப்பார் என்று சொல்லமுடியாது. ஒருவர் அறிந்ததை இன்னொருவரும் அறிந்திருப்பார் என்றும் சொல்லமுடியாது. அருகருகில் இருந்தும் கூட ஒவ்வொருவரும் வெகுதொலைவில் இருக்கிறார்கள். இருபதாண்டுக்கு முந்தைய தருணத்தை அப்போதுதான் நிகழ்ந்ததுபோல மீண்டும்  நினைத்துக்கொள்ள வைக்கும் நாதஸ்வர இசை உண்மையிலேயே மகத்துவமானது.

கண்முன்னால் ஒரு கலைஞன் நின்று வாசிப்பதை நேருக்கு நேர் பார்த்து, அந்த இசையைக் காதால் கேட்டு, அதில் திளைப்பதும் அந்த மகத்துவத்தை நினைத்துநினைத்து உருகுவதும் ஒருவகை இன்பம். அதைத்தான் வண்ணதாசன் தன் சிறுகதையில் எழுதிப் பார்த்திருக்கிறார்.

வண்ணதாசனின் சிறுகதையின் தொடர்ச்சியாக இசையை ரசிப்பதுபற்றி யோசித்துக்கொண்டிருந்தபோது மற்றொரு சிறுகதை நினைவுக்கு வந்தது.  கண்ணால் பார்க்காமல், காதால் மட்டுமே கேட்டு – அதுவும் ஒரே ஒருமுறை- அதில் திளைத்துத்திளைத்து தன்னை நிறைத்துக்கொள்ளத் தெரிந்த மனிதனின் கலைப்பசியை அல்லது ரசனையை அந்தச் சிறுகதை முன்வைக்கிறது. அது ஜெயமோகன் எழுதிய தேனீ என்னும் சிறுகதை.

சுசீந்திரம் கோவிலுக்கு வழக்கமாக வந்த ஒருவன், அதுவரை கோவிலுக்குள் ஒருபோதும் பார்த்திராத இன்னொரு முகத்தைப் பார்த்துவிட்டு நிற்கிறான்.  ஒரு தூணோரமாக அமர்ந்திருந்த அந்த இன்னொருவன் தன் நாவால் அந்தத் தூணை நக்கிச் சுவைப்பதைப் பார்க்கிறான். அந்த விசித்திரமான நடவடிக்கையைப் பார்த்து அருவருப்பு கொண்டு அதிர்ச்சியில் உறைந்து விலகியோடிச் செல்ல முற்படுகிறான். ஆனால் அந்த விசித்திரக்காரனோ அவனை நிறுத்தி தான் கோவிலுக்கு வந்த காரணத்தைச் சொல்கிறான். அதன் வழியாக தன் தந்தையைப்பற்றிய சுருக்கமான சித்திரத்தையும் அளிக்கிறான்.

அவருடைய அப்பா பெரிய உழைப்பாளி. பொற்கொல்லர் குடும்பத்தில் பிறந்த அவருக்குக் கூடப் பிறந்த தம்பிகளும் தங்கைகளும் பலர். அவருடைய சித்தப்பா வழியில் தம்பிகளும் தங்கைகளும் இன்னும் இருந்தார்கள்.  பெரிய தலைமுறையினர் அனைவரும் இறந்துவிட, குடும்பப்பொறுப்புகளை அப்பாவே ஏற்றுக்கொண்டார். பகல் முழுதும் பட்டறையில் அமர்ந்து குனிந்த தலை நிமிராமல் வேலை செய்துகொண்டே இருந்தார். ஒவ்வொருவராகக் கரையேற்றினார்.

அவருக்கு நாதஸ்வர இசையின் மீது பெரிய ஈடுபாடு இருந்தது. இசையில் கரைந்துபோகவேண்டும் என்று விருப்பமிருந்தது. ஆனால் இசைக்காக அவரால் நேரம் ஒதுக்கமுடியவில்லை. விழித்திருக்கும் நேரம் முழுக்க வேலை செய்தபடியே இருந்தார். ஆண்டுக்கணக்கில் உழைத்து ஒவ்வொருவராக மேலேறிச் செல்ல வழிவகுத்துக் கொடுத்தார்.

ஒருமுறை ஒரு தங்கைக்கு வளைகாப்பு. சொந்த ஊரான செய்துங்கநல்லூரிலிருந்து வண்டி கட்டிக்கொண்டு செல்கிறார்கள். சுசீந்திரம் கோவிலில் திருவிழா என்பதால் ஊர் வழியாகச் செல்லமுடியாமல், ஊரைச் சுற்றிக்கொண்டு நள்ளிரவில் செல்கிறது வண்டி. அப்போது ஏதோ மயில் அகவுவதுபோல ஓர் இசை கேட்கிறது. உண்மையில் சுசீந்திரம் கோவிலில் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை வாசிக்கும் நாதஸ்வரத்தின் இசை அது. வண்டி தன் திசையில் போய்க்கொண்டே இருக்கிறது. காதில் விழும் எல்லை வரையில் அவரும் கேட்டபடியே வருகிறார்.  இசையில் லயித்து மனமுருகி கண்ணீர் விடுகிறார் அவர். ஒருகணம் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு கேட்கக்கூட அவருக்குக் கொடுத்து வைக்கவில்லை. அப்படி ஒரு ஓட்டம். அப்படி ஒரு வாழ்க்கை. இருபது நிமிட நேரம் காதில் விழுந்த இசையே இந்தப் பிறவிக்கே போதும் என்று அவருக்குத் தோன்றிவிட்டது. ராஜரத்தினம் பிள்ளையை ஒருமுறை கூட நேருக்கு நேர் பார்க்காதவர் அவர்.  ஒருமுறை கூட அவருடைய கச்சேரியைக் கேட்காதவர் அவர். ஆனால் ஆயுள் முழுக்க அதையே நினைத்து நினைத்து உருகியவர். மானசிகமான அந்த இசை அவரைச் சுற்றி காலமெல்லாம் ஒலித்தபடியே இருந்தது.

அதற்குப் பிறகு ராஜரத்தினம் பிள்ளை மறைந்துவிடுகிறார். அது நடந்து பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகிவிடுகிறார். ஒருநாள் திடீரென சுசீந்திரம் கோவிலுக்குச் சென்று பிள்ளையின் வாசிப்பைக் கேட்கவேண்டும் போல இருப்பதாகத் தெரிவிக்கிறார். தடுமாற்றத்துடன் தந்தையைப் பார்க்கும் மகனிடம் மெதுவாக “அவரு போனா என்ன, அந்த தோடி போயிருமா என்ன? அங்கதான் இருக்கும்” என்று சொல்கிறார். அழைத்துச் சென்று ஒரு தூணருகில் உட்கார வைத்ததும் தனக்கு பிள்ளையின் வாசிப்பு கேட்பதாகச் சொல்கிறார். நிதி சால சுகமா என பாட்டின் வரியையும் அடாணா என ராகத்தின் பெயரையும் கூடச் சொல்கிறார். வீட்டுக்குத் திரும்பிய மறுநாள் அவர் இறந்துவிடுகிறார்.

அப்பாவின் நினைவு வரும்போதெல்லாம் மகன் அந்தக் கோவிலுக்கு வந்து செல்வதாகத் தெரிவிக்கிறான். அப்பாவை அமரவைத்த தூணுக்கு அருகில் அமர்கிறான். அப்பாவோடு வந்த அன்றைய தினம், பக்கவாதத்தால் கோணலான வாயிலிருந்து கோடென வழிந்த உமிழ்நீரை துடைத்ததை நினைத்துக்கொள்கிறான். தான் சிறுகுழந்தையாக இருந்த தருணத்தில் வாய் வழியே வழிந்த உமிழ்நீரை தேன் தேன் என கையில் ஏந்திச் சுவைத்த அப்பாவின் ரசனையையும் நினைத்துக்கொள்கிறான்.

தேனீ வாழ்நாள் முழுதும் மலர்களிலிருந்து தேனெடுக்கும் ஒரே வேலையை அலுப்பில்லாமல் செய்துகொண்டே இருக்கும் உயிரினம். அது எடுத்து வந்து சேர்த்துவந்து கட்டும் தேனடை பிறருக்கானதே தவிர, தேனீ தனக்கென வைத்துக்கொள்வதில்லை. ஆசாரியும் ஒருவகையில் தேனீ போன்றவரே. வாழ்நாள் முழுக்க குடும்பத்தினருக்காக செல்வத்தை ஈட்டிக்கொண்டே இருக்கிறார். ஆனால் அதில் அவர் திளைக்கவில்லை. நாதஸ்வர இசையென்னும் தேனில்மட்டுமே கற்பனையில் திளைத்திருக்கிறது. உலைக்களத்தில் நிரப்பப்படும் எரிபொருளைப்போல, அவருக்குத் தேவையான ஊக்கத்தை அந்தக் கற்பனை இசையே நிரப்பிக்கொண்டிருக்கிறது. நாதஸ்வர இசைக்கு அவ்வளவு ஆற்றல்.

நாதஸ்வர இசையின் ஆற்றலையும் அதன் மீது மனிதமனம் கொண்டிருக்கும் பித்தையும் நினைத்துக்கொண்டதும் நினைவுக்கு வந்த மற்றொரு சிறுகதை செந்தில் ஜெகன்நாதன் எழுதிய அனாகத நாதம். ஆகத நாதம் என்பது கலைஞன் தன் முயற்சியாலும் கற்பனையாலும் உருவாக்கும் இசைக்கோலம். அனாகத நாதம் என்பது அந்த எல்லை விரிவடைந்து இயற்கையாக எழும் இசைக்கோலம். தெய்வமே கலைஞனுக்குள் இறங்கி வெள்ளமெனப் பொங்கியெழ வைக்கும் இசைக்கோலம்.

புகழ்பெற்ற நாதஸ்வரக்கலைஞர்கள் பிறந்த குடும்பத்தில் பிறந்தும் வளர்ந்தும் கூட நாதஸ்வரம் பழகாதவனாகவே வளர்ந்து நிற்கிறான் மகன் சாமிநாதன். தந்தையின் மரணத்துக்குப் பிறகு குடும்பப்பெயரைக் காப்பாற்ற நாதஸ்வரம் பயில அவன் முயற்சி செய்தும், அந்தக் கலை அவனுக்குக் கைவந்த பாடில்லை. அவன் அம்மாவுக்கோ அவனை ஒரு வித்வானாக்கிப் பார்க்கும் ஆசை. வேறொரு ஆசிரியரிடம் அனுப்பி வைக்கிறாள். அவரிடமும் அவனுக்கு அவமானங்களே காத்திருந்தன. அவனால் மனத்தை இசையுடன் இணைக்கமுடியவில்லை. இறுதியில் தன் இயலாமையைத் தன் அம்மாவிடம் தெரிவித்துவிட்டு ஒரு ஓட்டலில் சப்ளையராக வேலைக்குச் சென்று சேர்ந்துவிடுகிறான்.

அந்த ஓட்டல் ஏதோ கோவிலுக்கு அருகிலிருக்கும் ஓட்டல். கோவிலிலிருந்து அடிக்கடி நாதஸ்வரச்சத்தம் கேட்கிறது. அதைக் கேட்டதுமே அவனுக்கு உடல் நடுங்கத் தொடங்கிவிடுகிறது. பாத்திரங்கள் கைநழுவி விழுகின்றன. அவன் கேட்கும் பாடல்களில் இடம்பெற்றிருக்கும் நாதஸ்வர இசை அவனை நடுங்கவைக்கிறது. தெருவில் நடக்கும்போது, அங்கங்கே பூத்திருக்கும் செம்பருத்திப்பூக்களின் தோற்றம் நாதஸ்வரத்தை நினைவூட்டி வதைக்கிறது. வீட்டுக்குத் திரும்பினால், மூலையில் சாய்த்துவைக்கப்பட்டிருக்கும் நாதஸ்வரத்தின் இருப்பு அவனுடைய இயலாமையைச் சுட்டிக் காட்டி அவமானப்படுத்துவது போல இருக்கிறது. ஒரு வேகத்தில் அதை எடுத்துச் சென்று நகரத்தில் விற்றுவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு புறப்படுகிறான். அந்தக் குழப்பத்திலும் தடுமாற்றத்திலும் அவன் மேற்கொள்ளும் பேருந்துப்பயணம் அவனை பிறர் முன்னிலையில் நிலை பிறழ்ந்தவனாக நிற்கவைத்துவிடுகிறது. குழப்பத்துக்கு மேல் குழப்பம். அவன் அம்மாவே ஒருநாள் “உனக்கும் நாயனத்துக்கும் விதிக்கலை போல இருக்குடா. எங்கயாவது எடுத்தும் போயி யாருகிட்டயாவது கொடுத்துடு” என்று சொல்கிறாள்.

தன் விதியை நினைத்து மனம் உடைந்தவனாக, நடுவீட்டில் அமர்ந்து சாமியை நெஞ்சுக்குள் தியானித்தபடி நாதஸ்வரத்தை எடுத்து ஆபேரி ராகத்தை வாசிக்கத் தொடங்குகிறான். அவனே எதிர்பாராத விதமாக, இம்மியும் விலகாத சுருதியுடன் சரளமாகப் பொழிகிறது நாதம். அந்த இனிமையான நாதத்தைக் கேட்டு அவன் அம்மாவே திகைத்து கண்களில் நீர் வழிய நின்றுவிடுகிறாள். சிற்சில கணங்களில் தெருவே அந்த வீட்டு முன்னால் திரண்டு வந்து நின்று அந்த இசையைக்  கேட்டு நிற்கிறது. தன்னைத்தானே நினைத்து மனம் கூசி, வெறுத்து, தனக்கு இசையே இனி வராது என்று ஒதுங்கிச் செல்லும் கணத்தில் அவனை இசை எட்டிப் பிடித்து அணைத்துக்கொள்கிறது. அவனையே தன் ஊடகமாக அமைத்துக்கொண்டு அவன் வழியே வெளிப்படத் தொடங்கிவிடுகிறது. இயற்கையான இசை அவன் நெஞ்சிலிருந்து நாதஸ்வரக்குழல் வழியாக பீறிட்டுப் பொழிகிறது.

அத்தகு இசை எத்தனை பெரிய பேரின்பம் என்பதை பாரதிமணியைப்போல கேட்டுக்கேட்டு சுவைத்தவர்கள்தான் சொல்லமுடியும். யாராக இருந்தாலும், அப்படி ஒரு இசையை மனம் குளிரக் கேட்டுப் பழகிய பிறகு, லயம் பிசகிய இசையைக் கேட்டதுமே வெறுப்பு ஏற்படுவது இயற்கையே என்று தோன்றியது.  பல இடங்களில் முதல் வரி பாடலைக் கேட்டதுமே சிலர் எரிச்சலுற்று எழுந்து போவதையும் சிலர் அமைதியாகப் பெருமூச்சுவிட்டபடி நடந்துவிடுவதையும் பார்த்திருக்கிறேன். ஒருசிலர் மட்டுமே பேசிப்பேசி அதன் மீது விமர்சனத்தைக் கொட்டிக்கொண்டே இருப்பார்கள். அதையும் பார்த்திருக்கிறேன். லயத்துக்குப் பழகிய மனம் ஒரு துளி லயப்பிசகையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. எல்லாமே ஒரு மனப்பழக்கம்.

எண்ணங்கள் இப்படி ஒரே திசையில் சென்றுகொண்டிருக்கும்போது அதற்கு இசைவாக இன்னொரு சிறுகதையின் நினைவு வந்தது. அது மூத்த எழுத்தாளர் ஆ.மாதவன் எழுதிய சிறுகதை. கதையின் தலைப்பு நாயனம். ஒரு சிற்றூரில் ஒரு பெரியவர் இறந்துவிடுகிறார். தன் இறுதி ஊர்வலத்தில் நாயனமும் தவிலும் இருக்கவேண்டும் என்று பிள்ளைகளிடம் ஏற்கனவே சொல்லிவைத்திருக்கிறார் அவர். உள்ளூரில் நாயனக்காரர்கள் யாரும் அவருக்கு அமையவில்லை. வெளியூரிலிருந்துதான் அழைத்து வரவேண்டும். இறுதி ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும்படி மற்றவர்களிடம் சொல்லிவிட்டு, மகனே எந்த ஊரிலிருந்தாவது நாயனக்காரரைத் தேடி அழைத்துவருவதாகச் சொல்லிவிட்டு மிதிவண்டியில் புறப்பட்டுச் செல்கிறான். அவன் சென்ற ஊரைச் சேர்ந்த நாயனக்காரர் வேறொரு ஊருக்குப் போய்விட்டார். அதனால் அவன் இன்னொரு ஊரைத் தேடிச் செல்கிறான். அங்கும் யாரும் அமையவில்லை. பிறகு அங்கிருந்து மற்றொரு ஊருக்குச் செல்கிறான். அங்கும் அமையவில்லை. பொழுது இருட்டத் தொடங்கிவிட்டது. யாரோ இரண்டு கத்துக்குட்டிகள் கிடைக்கிறார்கள். சம்பிரதாயத்துக்குத்தானே, இருக்கட்டும் என நினைத்துக்கொண்டு அவர்களை அழைத்துக்கொண்டு வருகிறான். அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.

அதற்குள் முழுமையாகவெ இருள் கவிந்துவிடுகிறது. பெட்ரோமாக்ஸ் விளக்கோடு இறுதி ஊர்வலம் வீட்டைவிட்டுப் புறப்படுகிறது. ஏற்கனவே தாமதத்தாலும் பசியாலும் வெறுப்புற்ற தெருக்காரர்கள் வெளித்தோற்றத்துக்கு அமைதியாகவும் உள்ளூர கொந்தளிப்போடும் அந்த ஊர்வலத்தில் கலந்துகொள்கிறார்கள்.

நாயனக்காரருக்கு நாயனப்பயிற்சியே இல்லை என்பது முதல் வாசிப்பிலேயே தெரிந்துவிடுகிறது. சீவாளியை வாயில் வைத்து வெறுமனே ஊதிக்கொண்டு வருகிறார் அவர். ஒரு சுருதி இல்லை. ஒரு லயம் இல்லை. வாய்க்குள் காற்றை இழுத்து நாதஸ்வரம் வழியாக விடுகிற மாதிரி இருக்கிறது. கூட்டத்தினர் முதலில் அதைப் பொருட்படுத்தாமல் நடந்து வருகிறார்கள். பிறகு தமக்குள் முணுமுணுத்துக்கொள்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக எரிச்சலடைகிறார்கள்.

ஊர்த்தலையாரிக்கு கட்டுக்கடங்காத கோபம் வந்துவிடுகிறது. “படவா ராஸ்கல், நாயனமாடா வாசிக்கிற?” என்று கேட்டபடி அவனிடமிருந்து நாயனத்தை இழுத்துப் பறித்து கால்மூட்டின் மேல் வைத்து இரண்டு கைகளாலும் ஒடித்து ஆற்றில் வீசிவிடுகிறான். “என்னடா வாசிப்பு இது? இன்னும் இங்க நின்னா, உன்னையும் முறிச்சி ஆத்தில வீசிடுவேன்” என்று விரட்டுகிறான். அச்சம் கொண்ட நாயனக்காரரும் தவில்காரரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்துவிடுகிறார்கள்.

ஏதேதோ யோசனைகளில் மூழ்கியபடி நடந்து சென்றதில் வீட்டுக்குப் பயணம் செய்த தொலைவை உணரவே இல்லை. வாகனத்துக்குப் பணம் கொடுத்து அனுப்பிவிட்டு வீட்டுக்குச் சென்றேன். திருமண வரவேற்புக் கச்சேரியின் சிறப்பையும் கேட்ட பாடல்களையும்  பற்றி வெகுநேராம் மனைவியிடம் பேசிக்கொண்டே இருந்தேன். எவ்வளவு பேசினாலும், அந்த இசையின் இனிமையைச் சொல்லி முடிக்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில் நாங்களே உரையாடலை முடித்துக்கொண்டோம். மனைவி உறங்கச் சென்றுவிட, மின்னஞ்சல்களைப் பார்ப்பதற்காக நான் மடிக்கணினியைத் திறந்தேன். அஞ்சல் பெட்டியில் ஆறேழு மடல்கள் வந்திருந்தன. ஒவ்வொன்றையும் படித்துவிட்டு, உரிய பதில்களையும் எழுதிய பிறகு மூடிவைத்தேன். விளக்கை அணைத்துவிட்டு படுத்தேன். ஜன்னல் வழியாக தெரிந்த இருள் மண்டிய வானத்தையும் புள்ளிப்புள்ளியாக மின்னிய நட்சத்திரங்களையும் வெகுநேரம் பார்த்துக்கொண்டே இருந்தேன். என்னை அறியாமலேயே என் கண்கள் நட்சத்திரப்புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் போடத் தொடங்கியது. அந்தக் கற்பனையில் மிதந்துகொண்டிருக்கும்போதே வரவேற்புக்கச்சேரியில் ஒலித்த நாதஸ்வரங்களின் இசை ஆழ்மனத்திலிருந்து மிதந்தெழுந்தது. மெல்ல மெல்ல காற்றில் அசையும் இலையென அந்த இசை அந்தரத்தில் மிதக்கத் தொடங்கியது. ஒரு வலையைப்போல இனிமை என்னைச் சூழ்ந்தது.

 

(சங்கு – ஜூலை 2023)