Home

Sunday 30 July 2023

போட்டி - கட்டுரை


நான் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது, திடீரென எங்கள் அப்பாவின் உடல்நலம் குன்றியது. உள்ளூர் மருத்துவர்கள் அளித்த மருந்துகள் எதுவும் பயனளிக்கவில்லை. சென்னைக்குச் சென்று பெரிய மருத்துவமனைகளில் காட்டுமாறு சொந்தக்காரர்கள் சொல்லத் தொடங்கினர். சென்னையில் எங்கள் அத்தை இருந்தார். அதனால் எங்கள் பெரியப்பா, அப்பாவை அழைத்துக்கொண்டு சென்னைக்குச் சென்றார். அத்தையின் துணையோடு பெரிய மருத்துவமனையில் சேர்த்துவிட்டுத் திரும்பிவிட்டார்.

அப்பாவின் உதவியாளராக இருந்த மாதவன் அண்ணனே அப்பா இல்லாத சமயத்தில் கடையைத் திறந்து வேலை செய்தார். ஆனாலும் வாடிக்கையாளர்கள் குறைந்ததால் வருமானமும் குறைந்துவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக குடும்பம் வறுமையை நோக்கிச் சரிந்து விழுந்தது. அதை நேருக்கு நேர் பார்த்து உணரமுடிந்த சாட்சியாக நான் இருந்தேன்

அப்போதெல்லாம். ஒவ்வொரு நாளும் சாயங்காலத்தில் பள்ளிக்கூடம் விட்டுத் திரும்பியதும் கடைத்தெருவுக்குச் சென்று அரிசி, புளி, காய்கறிகள் வாங்கிவரும் வேலை என்னைச் சார்ந்ததாக இருந்தது. ஒரு படி என்னும் அளவில் வாங்கிய பொருள் திடீரென முக்கால் படியாகவும் அரைப்படியாகவும் குறைந்தது. எட்டணாவுக்கு வாங்க வேண்டிய காய்கறிகளை நான்கணாவுக்கு வாங்கி வருமாறு அம்மா சொல்லியனுப்பத் தொடங்கினார். படித்த நேரம் போக, கடைவேலைகளில் மாதவன் அண்ணனுக்குத் துணைசெய்யும் பொருட்டு ஓய்வு நேரங்களில் நான் கடைக்கும் செல்லவேண்டியிருந்தது.

என்னோடு ஒட்டியிருந்த விளையாட்டுக்குணம் திடீரென காணாமல் போய்விட்டது. சட்டென வயதுக்கு மீறிய ஒரு முதிர்ச்சி எனக்குள் புகுந்துவிட்டது. அதே படிப்பு. அதே தேர்வுகள். அதே மதிப்பெண். எதுவும் மாறவில்லை. ஆயினும் முன்புபோல என்னால் கலகலப்பாக இருக்கமுடியவில்லை. நண்பர்களோடு சேர்ந்து கதை பேசவோ, விளையாடவோ, சினிமாக்கதைகள் சொல்லவோ இயலவில்லை. எல்லா ஆர்வங்களும் சட்டென வடிந்துவிட்டன. எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கிச் செல்லும் போக்கு ஆட்கொண்டது.

ஒருநாள் பள்ளியில் காலைப் பிரார்த்தனை சமயத்தில் உரையாற்றிய தலைமையாசிரியர் வழக்கம்போல மாவட்ட அளவில் நடைபெறும் இலக்கியமன்றப் போட்டிகள் குறித்த சுற்றோலை வந்திருப்பதாகவும்  இரண்டு வார இடைவெளியில் விழுப்புரத்தில் நடைபெறவிருப்பதாகவும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி என எல்லாப் போட்டிகளிலும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டு தம் திறமையைக் காட்டி வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அன்று இரண்டாவது பாட வேளையிலேயே வகுப்புக்கு சுற்றோலை வந்துவிட்டது. அப்போது ரங்கனாதன் சார் கணக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அவர்தான் சுற்றோலையை வாங்கிப் படித்தார். தொடர்ந்து நடைபெறவிருக்கும் போட்டிகளின் பட்டியலையும் படித்தார். பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, இசைப்போட்டி, ஓவியப்போட்டி என படித்துக்கொண்டே சென்றவர் இறுதியாக தனிநடிப்பு போட்டி என்று புதிதாக ஒரு போட்டியின் பெயரைச் சொன்னார்.

தனிநடிப்பு என்னும் பெயர் புதுமையாக இருந்தது. இப்படி ஒரு போட்டிப்பிரிவு இதற்கு முன் இல்லாததால் அனைவருக்கும் அது புதுமையாக இருந்தது.

“தனி நடிப்புன்னா என்ன சார்?” என்று ராஜசேகர் கேட்டான்.

“தனியா நடிக்கிறதுடா” என்றார் சார்.

ஒருகணம் வகுப்பே அமைதியில் மூழ்கியிருந்தது. அந்த அசாதாரணமான அமைதியே அந்தச் சொல் யாருக்கும் புரியவில்லை என்பதைச் சாருக்கு உணர்த்திவிட்டது.

“என்னடா, திடீர்னு எல்லாரும் ஊமையாய்ட்டீங்க. யாருக்கும் புரியலையா?”

எல்லோரும் உதட்டைப் பிதுக்கியபடி தலையாட்டுவதைப் பார்த்து சாருக்கு சிரிப்பு வந்துவிட்டது. “தலையை மட்டும் நல்லா பூம்பூம் மாடு மாதிரி ஆட்டத் தெரியுது, ஒரு வார்த்தைக்கு அர்த்தம் சொன்னா தெரிஞ்சிக்க முடியலையா?” என்றார். பிறகு அவரே தொடர்ந்து “நடிப்புன்னா என்ன? மேடையில ஒரு ஆள் வீரனா நடிக்கிறது, கோழையா நடிக்கறது, முதலாளியா நடிக்கறது, தொழிலாளியா நடிக்கிறது எல்லாமே நடிப்புதான். தனி நடிப்புங்கறது, ஒரு காட்சியில ஒரே ஆள் எல்லாப் பாத்திரமாவும் மாறி மாறி நடிக்கிற கலை. புரியுதா?” என்று கேட்டார்.

சிலர் தலையசைத்தார்கள். சிலர் மெளனமாகவே இருந்தார்கள். அதைப் பார்த்துவிட்டு ”என்னடா ஊமைக்கோட்டானுங்களா, இன்னுமா புரியலை?” என்றார். தொடர்ந்து “உங்களுக்கெல்லாம் சினிமா கதையை உதாரணமா சொன்னாதான்டா புரியும். எல்லாரும் ஒரு நிமிஷம் கர்ணன் படத்த நினைச்சிக்குங்க.  அதுல கடைசிக்காட்சியில கர்ணன் அம்பு பட்டு சாகறாரு. அந்த நேரத்துல அவருக்கு பக்கத்துல வந்து கிருஷ்ணர் பேசறாரு. இல்லையா?  அப்ப கர்ணன், கிருஷ்ணர் ரெண்டு பாத்திரங்கள் அந்தக் காட்சியில நடிக்கிறாங்க. ரெண்டு பேருக்கு பதிலா ஒரே ஆளா கர்ணனாவும் கிருஷ்ணனாவும் மாறி மாறி நடிச்சா எப்படி இருக்கும்னு யோசிச்சி பாருங்க. அதுக்குப் பேருதான் தனி நடிப்பு. இங்க்லீஷ்ல மோனோ ஆக்டிங்னு சொல்வாங்க” என்றார்.

ராஜசேகர் உற்சாகத்தோடு எழுந்து “இப்ப நல்லா புரிஞ்சிடுச்சி சார்” என்று கையை உயர்த்தி நின்று சிரித்தான்.

”சரி சரி. பேர் கொடுக்க நினைக்கிறவங்க எல்லாரும் க்ளாஸ் லீடர்கிட்ட வர வெள்ளிக்கிழமைக்குள்ள குடுத்துடணும், சரியா?” என்று சொல்லிவிட்டு பாடங்களைத் தொடங்கினார்.

இடைவேளை சமயத்தில் போட்டிகளில் ஆர்வம் கொண்டிருந்த மாணவர்கள் அனைவரும் லீடர் அமர்ந்திருந்த டெஸ்க்கைச் சூழ்ந்துகொண்டார்கள். ஒவ்வொருவரும் தமக்கு ஆர்வமுள்ள போட்டிகளில் எல்லாம் தம் பெயர்களைச் சொல்லி பதிவு செய்துகொண்டனர். மனோகரன் பாட்டுப்போட்டிக்குப் பெயர் கொடுத்துவிட்டு வந்தான். ராஜசேகரும் நாகராஜனும் கட்டுரைப்போட்டிகளுக்குப் பெயர் கொடுத்தார்கள். பழனி ஓவியப்போட்டிக்கு பெயரைப் பதிவு செய்துகொண்டான். நான் அமைதியாக அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். என் ஆர்வமெல்லாம் எப்படி கரைந்துபோனது என்றே தெரியவில்லை.

மதிய உணவு இடைவேளை சமயத்திலும் சில மாணவர்கள் லீடரைச் சந்தித்து தம் பெயர்களைப் பதிவு செய்துகொண்டார். பக்கத்தில் உட்கார்ந்திருந்த மனோகரன் “ஏன்டா இன்னும் பேர் கொடுக்காம இருக்க? ஒவ்வொரு வருஷமும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டியில நீதானடா பரிசு வாங்கற ஆளு. உன்னைத் தவிர மத்தவனுங்க எல்லாரும் கொடுத்துட்டிருக்கானுங்க. நீ பாட்டுக்கும் உட்கார்ந்திட்டிருக்கே? என்ன ஆச்சு உனக்கு?” என்றான்.

த்ச் என்று நாக்கு சப்புக் கொட்டியபடி “எதுவும் வேணாம்டா. விடு” என்றேன் நான். அவன் நம்ப முடியாதவனாக என்னை ஒருகணம் பார்த்தான். பிறகு பக்கத்திலிருந்த நாகராஜன், சுப்பிரமணி, பழனி அனைவரையும் பார்த்து “ஏன்டா, நீங்களாச்சிம் இவனுக்கு எடுத்துச் சொல்லுங்கடா” என்று தூண்டினான்.

“அவன் சொல்றது காதுல உழுதா, இல்லையா? போய் பேர கொடுக்கற வேலையைப் பாரு” என்று முதுகைப் பிடித்து உலுக்கினான் பழனி.

“என்னமோ மனசே சரியில்லைடா. போட்டிக்கு தயார் செஞ்சிக்கிற அளவுக்கு நேரமும் இல்லை. உற்சாகமும் இல்லை. வீட்டு வேலைக்கே நேரம் சரியா இருக்குது”

நண்பர்கள் முகங்களைப் பார்த்துச் சொல்ல சங்கடமாக இருந்தது. தலைகுனிந்து டெஸ்க் மீது இருந்த புத்தகத்தைப் புரட்டியபடி சொன்னேன்.

மதிய உணவுக்குப் பிறகான முதல் பாடவேளைக்கு தமிழாசிரியர் ராதாகிருஷ்ணன் வந்தார். அவர் வகுப்பு என்றாலே பேச்சுக்கும் கதைக்கும் குறையே இருக்காது. வந்ததுமே பாடத்தைத் தொடங்கிவிட்டார். அரியது, பெரியது, இனியது, கொடியது என்கிற தலைப்பில் அமைந்த ஒளவையார் பாடலின் முதல் மூன்று பகுதிகளை அவர் ஏற்கனவே நடத்தியிருந்ததால் அன்று கொடியது என்னும் பகுதிதான் பாடத்துக்கு உரியதாக இருந்தது. அதையும் அவர் ஒரு கதை சொல்வதுபோலவே சொன்னார்.

“பாட்டுக்கு போகறதுக்கு முன்னால நாம ஒரு விஷயத்தை பத்தி பேசலாம். உலகத்துலயே கொடுமையான விஷயம் எதுன்னு உங்களுக்கு தோணுது?”

அந்தக் கேள்வியைக் கேட்டதும் அனைவரும் கைகளை உயர்த்தி ஒரே நேரத்தில் பதில் சொல்வதற்குத் துள்ளிக் குதிக்கத் தொடங்கினார்கள்.  ”ஒரொருத்தனா எழுந்து நின்னு பதில் சொல்லு. எல்லாருக்கும் வாய்ப்புண்டு” என்றார் சார்.

“வியாதி”

“கோபம்”

“பொறாமை”

”துரோகம்”

“பேராசை”

“நம்ப வச்சி கழுத்தறுக்கறது”

“ஏமாத்தறது”

ஒவ்வொருவரும் ஒரு பதிலைச் சத்தமாகச் சொல்லிவிட்டு அமர்ந்தனர். எல்லாவற்றையும் புன்னகையோடு கேட்டுக்கொண்டார் சார். 

“நீங்க சொன்னதெல்லாமே நம்ம சுத்தி நின்னு ஆட்டம் போடற கொடுமைங்கதான்.  ஆனா, சர்வாதிகாரி மாதிரி எல்லாக் கொடுமைகளைவிடவும் பெரிய கொடுமை ஒன்னு இந்த உலகத்துல இருக்குது? அது என்ன தெரியுமா?”

சார் பதில் சொல்லாமல் எல்லோருடைய முகங்களையும் ஒரு நிமிடம் பார்த்தார். அவர் சொல்லப் போகும் பதிலைக் கேட்பதற்காக எல்லோரும் அவருடைய முகத்தையே பார்த்தபடி இருந்தோம்.

“வறுமைடா வறுமை. அதுதான் மிகப்பெரிய கொடுமை”

தலையை மேலும்கீழும் அசைத்தபடி ஒரு கணம் ஆழ்ந்த பெருமூச்சு விட்டார். தொடர்ந்து “வறுமை வந்தா பசி வந்துரும். பசி வந்தா பத்தும் பறந்துடும். அதப்பத்தி ஒரு பாட்டே இருக்குது, தெரியுமில்லையா? அதுக்கப்புறம் பண்பாடு கிடையாது. நாகரிகம் கிடையாது. மனிதத்தன்மையே கிடையாது. எல்லாமே ஒழிஞ்சி போயிடும். உலகத்துல எல்லா நாடுகளும் வறுமையை ஒழிக்கறதுதான் முதல் குறிக்கோள்னு சொல்றதுக்கு அதுதான் காரணம். வறுமை இல்லாம இருந்தாதான் மக்களும் நல்லா இருப்பாங்க”

அதற்குப் பிறகு முதல் வரிசை பெஞ்ச்சில் அமர்ந்திருந்த நாலைந்து பேர்களை அன்றைய பாடத்துகுரிய ’கொடியது’ பாடலை நிறுத்தி நிதானமான குரலில் படிக்கச் சொன்னார் சார். பிறகு ஒவ்வொரு வரியாக பொருள் சொல்லி விளக்கம் கொடுத்தார். முடிவாக “அரியது, பெரியது, இனியது, கொடியது நாலு பகுதிகளையும் நாளைக்கு மனப்பாடமா படிச்சிட்டு வாங்க. ஒவ்வொரு ஆளும் இங்க வந்து ஒப்பிக்கணும். புரியுதா?” என்றார்.

மேசை மீது வைத்திருந்த புத்தகங்களையெல்லாம் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியபடி லீடர் பக்கமாகத் திரும்பி “என்னடா, இலக்கிய மன்றப் போட்டிக்கு எல்லோரும் பேரு கொடுத்துட்டாங்களா?” என்று கேட்டார். அவன் “ம் சார்” என்றான்.

“யார் யார் பேர கொடுத்திருக்காங்க, இங்க கொண்டு வா, எல்லாப் போட்டிகளுக்கும் போதுமான ஆளுங்க இருக்காங்களா, பார்க்கலாம்” என்று கையை நீட்டினார். அவன் உடனே எழுதி வைத்திருந்த பெயர்ப்பட்டியலை அவரிடம் கொண்டுபோய்க் கொடுத்தான். சார் முதலிலிருந்து கடைசி வரைக்கும் எல்லாப் பெயர்களையும் படித்தார்.

“வெள்ளிக்கிழமைதான்டா கடைசி நாள். அதுக்கப்புறம் என்னச் சேருங்க அவனச் சேருங்கன்னு யாரும் கேக்கமுடியாது”

பொதுவான குரலில் மாணவர்களைப் பார்த்துச் சொல்லிவிட்டு மீண்டுமொரு முறை பெயர்பட்டியலைப் பார்த்தார். சட்டென எதையோ நினைத்துக்கொண்டவர்போல “என்னடா, இதுல பாஸ்கரன் பெயரே இல்லையே. ஏன் இன்னும் அவன் கொடுக்கலையா?” என்று கேட்டார். “ம்ஹூம், கொடுக்கலை சார்” என்றபடி உதட்டைப் பிதுக்கினான் லீடர்.

அதைக் கேட்டு துணுக்குற்றவரைப்போல என் பக்கமாகப் பார்த்தார் சார். அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு ராஜசேகரும் மனோகரனும் எழுந்து நின்று  ”நாங்க எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டம் சார். அவன் வேணாம் வேணாம்னு ஒதுங்கிப் போறான் சார்” என்று சொன்னார்கள். அதைக் கேட்டு சாருடைய பார்வை இன்னும் கூர்மையானது. அவர் என்னைப் பார்த்து கையசைத்து “ஒவ்வொரு வருஷமும் போட்டியில ஜெயிச்சிட்டு வரக்கூடியவன் நீ ஒரு ஆளுதான். நீயே கலந்துக்கலைன்னா எப்படி?” என்றார். நான் பதிலெதுவும் சொல்லாமல் அவரையே பார்த்தபடி நின்றேன். அக்கணமே அவர் “இங்க கிட்ட வா. உன்ன விசாரிக்கணும்” என்றார்.

நான் மெதுவாக என் டெஸ்க்கிலிருந்து எழுந்து அவரை நோக்கி நடந்து சென்று அமைதியாக நின்றேன்.

“என்ன விஷயம்? ஏன் பேரு கொடுக்கலை?”

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியாக தலைகுனிந்தபடி அவருடைய பாதங்களைப் பார்த்துக்கொண்டு நின்றேன்.

“என்ன விஷயம்னு சொல்லுடா, சொன்னாதான புரியும்”

அப்போதும் நான் அமைதியாகவே நின்றிருந்தேன்.

“ரெண்டு மூனு வாரமாவே உன்ன கவனிச்சிட்டுதான் வரேன். கலகலப்பே இல்லாம என்னத்தையோ பறிகொடுத்தவன் மாதிரி உட்கார்ந்திட்டிருக்கே. சரி, ஏதாவது உடம்பு சரியில்லையோ என்னமோனு நானும் எதையும் கேக்காம போயிட்டேன். இப்ப என்னடான்னா, இலக்கிய மன்றப் போட்டிக்கு பேரே கொடுக்காம ஒதுங்கப் பார்க்கற. எந்தப் பிரச்சினையா இருந்தாலும் நேரா சொல்லு. அப்பதான ஒரு தீர்வ கண்டுபுடிக்கமுடியும்”

அப்போதும் நான் அமைதியாக நின்றிருந்தேன்.

வகுப்பு முடிந்ததற்கு அடையாளமாக அப்போது மணியடித்தது. சார் மேசை மீது வைத்திருந்த புத்தகங்களை எடுத்துக்கொண்டார். “அடுத்த க்ளாஸ் யாருடா?” என்று லீடரைக் கேட்டார். அவன் “சரித்திரம் சார். சுப்பையா சார்” என்றான். “சரி, அவரு வந்தா சொல்லு. இவன நான் அழைச்சிட்டு போறேன்” என்று சொல்லிவிட்டு “வா என் பின்னால” என்று வகுப்பறையைவிட்டு படியிறங்கினார். நான் அமைதியாக அவரைப் பின்தொடர்ந்து நடந்தேன்.

ஆசிரியர் அறைக்குள் சென்று, புத்தகங்களை மேசை மீது வைத்துவிட்டு வெளியே வந்தார். வகுப்பறைக் கட்டடங்களை ஒட்டி வேலியோரமாக நாலைந்து பெரிய புளியமரங்கள் இருந்தன. அந்த நிழலை நோக்கி நடந்தார். அங்கே எப்போதோ வெட்டுண்ட அடிமரத்தின் பருத்த துண்டொன்று பெஞ்ச் மாதிரி கிடந்தது. அதன் மீது உட்கார்ந்தபடி என்னை அருகில் வருமாறு அழைத்தார்.

“என்னடா உன் பிரச்சினை? எதுக்கு எதுலயும் ஆர்வமில்லாதவன் மாதிரி நடந்துக்கிற? திடீர்னு என்ன ஆச்சு உனக்கு?”

நான் பதில் பேசாமல் தலைகுனிந்தபடி நின்றேன்.

“எதுவா இருந்தாலும் வாயத் தெறந்து சொல்லுடா. சொன்னாதான ஏதாவது உதவி வேணும்னாலும் செய்யமுடியும்”

அதற்குமேல் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அழுகை பொங்கி வந்தது. தேம்பித்தேம்பி அழத் தொடங்கினேன். என் அழுகை அவரை சற்றே திகைப்பில் ஆழ்த்தியது. சட்டென எழுந்து நின்றுவிட்டார். பிறகு என் தோளில் கைவைத்து அழுத்தியபடியே சில கணங்கள் நின்றார். பிறகு ஒரு பெருமூச்சுடன் மீண்டும் அமர்ந்துகொண்டார். “என்னடா, வீட்டுல ஏதாவது பிரச்சினையா?” என்று பொறுமையாகக் கேட்டார்.

மனத்தில் அதுவரை அடைத்துக்கொண்டு கிடந்ததையெல்லாம் அவரிடம் கொட்டினேன். அப்பாவின் மருத்துவமனை வாசம், வீட்டு நிலைமை, ஒரு நேரம் மட்டுமே சமைக்கமுடிந்த வறுமைச்சூழல், களைப்பு எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகச் சொன்னேன்.

“எல்லாம் சரிடா. எதுலயும் ஆர்வம் காட்டாம உன்னை நீயே ஒடுக்கிக்கிறதால, இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துடும்னு நினைக்கிறியா?”

நான் மெளனமாக தலைகுனிந்திருந்தேன்.

“ஆர்வத்தோடு இருக்கறத மத்தவங்க பாத்துட்டா, பாருடா இவ்ளோ கஷ்டங்களுக்கு நடுவுலயும் இப்படி சிரிச்சிகிட்டு திரியறானே, கொஞ்சமாவது பொறுப்பா நடந்துக்கத் தெரியுதா பாருன்னு சொல்லிடுவாங்கன்னு பயப்படறியா?”

அப்போதும் அவரை நிமிர்ந்து பார்க்க தைரியமில்லாமல் குனிந்தே இருந்தேன்.

சார் ஒருகணம் அமைதியாக இருந்தார். பிறகு “நீ என்ன, தப்பா பண்ணிட்ட? எதுக்கு தலைகுனிஞ்சி நிக்கிற? என்ன பாத்து நில்லுடா” என்று அதட்டினார். நான் மெதுவாக தலையை உயர்த்தி அவரைப் பார்த்தேன். கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை சட்டையை உயர்த்தி துடைத்துக்கொண்டேன்.

“இப்ப நான் சொல்றது இன்னைக்குள்ள பிரச்சினைக்கான வார்த்தை கிடையாது. உன் வாழ்க்கை முழுக்க ஞாபகம் வச்சிக்கவேண்டிய வார்த்தை. நல்லா கேட்டுக்கோ”

ஆட்காட்டி விரலை உயர்த்தி அசைத்தபடி சார் சொன்னார். நான் அவர் முகத்தையே பார்த்தபடி இருந்தேன்.

“நம்மகிட்ட இருக்கிற ஆர்வம், உழைப்பு, சக்தி எல்லாமே நமக்காக இயற்கை கொடுத்த அம்சங்கள். மத்தவங்க என்ன நினைப்பாங்களோன்னு நினைச்சி ஒருநாளும் அத மாத்திக்கக்கூடாது. புரியுதா?” சார் ஒவ்வொரு சொல்லாக உறுதியான குரலில் சொல்லிக்கொண்டே சென்றார்.

“முன்னால இருந்த ஆர்வத்தைவிட இப்போதான் நீ பல மடங்கு ஆர்வத்தோடு இருக்கணும். எப்படிப்பட்ட சூழலா இருந்தாலும், அந்தச் சூழலுக்கு நம்ம ஆர்வத்தை பலிகொடுத்துடக் கூடாது. ஆர்வத்தை வளர்த்துகிட்டாதான் சூழலை ஜெயிக்கமுடியும். புரியுதா?”

நான் தலையசைத்தேன்.

“முதல்ல கண்ண துடை. அழறத நிறுத்து. அழறதால ஒருநாளும் ஒரு பிரச்சினையும் தீராது. குடும்பத்துல திடீர்னு வறுமை வந்துட்டுதுன்னு மூஞ்சிய உம்முனு தூக்கி வச்சிகிட்டிருந்தா, வறுமை ஓடிடுமா? சொல்லு. வறுமை வந்தா என்ன? மூனு வேளை சாப்பாடு ரெண்டு வேளை சாப்பாடாவும். இல்ல, ஒருவேளை சாப்பாடா குறையும். அவ்ளோதான? இந்தியாவுல கால்வாசி பேரு அப்படித்தான் இன்னைக்கு வாழ்ந்திட்டிருக்காங்க தெரியுமா? நெஞ்சில நெருப்பிருந்தா வயித்துல எரியற நெருப்பெல்லாம் சாம்பல்மாதிரி அவிஞ்சிடும். புரியுதா?“

சார் தொடர்ந்து பேச்சு வராமல் என் கண்களையே பார்த்தார். தலை மட்டும் மேலும் கீழும் அசைந்தபடி இருந்தது.

“குடும்பத்துல வறுமை வருவது ஒரு குடிசைக்குள்ள பாம்பு வந்து நுழையறமாதிரிதான். புரியுதா? ஒரு பாம்பால குடிசைக்குள்ள எவ்ளோ நேரம் சுத்திச்சுத்தி வரமுடியும்? பானைக்குக் கீழ போவும். படுக்கைக்குக் கீழ போவும். அடுப்புக்கு பக்கத்துல ஒண்டும். அப்புறம் தன்னால வெளியே ஓடி போவும்.  ஐயோ, பாம்பு வந்துட்டுதேன்னு யாராவது குடிசையை உட்டு ஓடறாங்களா? முடிஞ்சா விரட்டியடிக்கிறாங்க. இல்லைன்னா, வெளியே போறவரைக்கும் காத்திருக்காங்க. அதுக்கப்புறம் அங்கதான வாழறாங்க. அத நீ முதல்ல புரிஞ்சிக்கணும். நீ பெரிய பையன். நீ தைரியமா இருக்கறத பார்த்தாதான், வீட்டுல மத்த  பிள்ளைங்க தைரியமா இருக்கும். நீ கோழையா இருந்து மத்தவங்களயும் கோழையாக்கிடக்கூடாது. புரியுதா?”

சார் சொன்ன சொற்கள் நேரிடையாக என் நெஞ்சில் இறங்கின. என் பாரமெல்லாம் அச்சொற்களால் கரைந்துவிட்டன. இனி எதற்காகவும் சோர்வடையக்கூடாது என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

“போ. போய் போட்டிக்கு பேர கொடுக்கிற வேலைய பாரு. கலகலப்பா, சுறுசுறுப்பா இரு. உன் சக்தி உனக்குத் தெரியாமலேயே ரெண்டு மடங்கா மாறும். புரியுதா?”

சார் எழுந்துகொண்டார். “டீ குடிக்கிறியாடா?” என்று கேட்டார். எனக்கு உண்மையில் அப்போது டீ தேவைப்படவில்லை. ஆனால் சாருடன் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கவேண்டும் என்று தோன்றியது. அதனால் சரி என்று தலையசைத்தேன்.

வேலியைக் கடந்து தோப்பு வழியாக டீக்கடைக்குச் செல்லும் குறுக்கு வழியொன்று இருந்தது. அதன் வழியாக சாரும் நானும் நடந்து சென்றோம். டீக்கடைக்காரர் சாரைப் பார்த்ததும் வணக்கம் சொன்னார். பெஞ்ச்சில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து சாருக்கு இடமளித்தார்கள். ”பையனுக்கு நல்லா ஆத்திக் குடுங்க மாஸ்டர்” என்று டீ போடுபவரைப் பார்த்துச் சொன்னார் சார். அவர் புன்னகையோடு தலையசைத்துக்கொண்டார்.

டீ அருந்திய பிறகு மீண்டும் தோப்பு வழியாகவே நடந்து பள்ளிக்குள் வந்தோம். ஆசிரியர் அறைக்குள் சார் சென்றதும், நான் வகுப்பறைக்குள் சென்றேன். சுப்பையா சார் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். வெளியே சென்றதற்கான காரணத்தை அவரிடம் சொல்லிவிட்டு நான் என்னுடைய இடத்தில் அமர்ந்துகொண்டேன். அந்தப் பாடவேளை முடிந்ததும் லீடரிடம் போட்டிகளில் என் பெயரை எழுதிக் கொள்ளும்படி சொன்னேன்.

“எந்தெந்த போட்டிடா?”

நான் அவனிடமிருந்த தாளை வாங்கி பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, தனிநடிப்பு ஆகிய தலைப்புகளின் கீழே என் பெயரை எழுதினேன். ”நாம சொல்லும்போது வேணாம் வேணாம் தலையாட்டின ஆளு இப்ப தானா வந்து எழுதறான் பாரு” என்று கேலியாக என்னைப் பார்த்துக் கண்சிமிட்டியபடி சிரித்தான் லீடர்.

பள்ளிக்கூட அறிவிப்புப்பலகையில் போட்டிக்குரிய தலைப்பு விவரங்கள் எல்லாம் இருந்தன. நான் அதைப் பார்த்து எல்லா விவரங்களையும் எழுதிக்கொண்டேன். தனி நடிப்புப் போட்டி ஆங்கில மொழிக்கு மட்டுமானதாக இருந்தது. அதற்குரிய பகுதி ஐம்பது வரி நீளத்துக்கு கொடுக்கப்பட்டிருந்தது. தொடக்க வரிகளைப் படித்துப் பார்த்தேன். கொஞ்சம் சிடுக்காகத்தான் இருந்தது. உச்சரிக்கும் விதம் தெரியவில்லை. சொற்கள் இரும்புக்குண்டுகளாக இருந்தன. ஒருகணம் கொடுத்த பெயரை நீக்கி்விடச் செய்யலாமா என்று தோன்றியது. பிறகு என்ன ஆனாலும் சரி, முன்வைத்த காலை பின்வாங்குவதில்லை என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

ஒருகணம் ராதாகிருஷ்ணன் சாரின் முகம் நினைவில் எழுந்து மறைந்தது. பையிலிருந்து நோட்டை எடுத்து நடிப்புக்குரிய பகுதியை எழுதிக்கொண்டேன். ஒருமுறை படித்துப் பார்த்தேன். முதல் சொல்லே சிக்கலாகத் தொடங்கியது. How என்றால் படிப்பது எளிது. Howl என இருப்பதை எப்படிப் படிப்பது. அச்சொல்லுக்கு என்ன பொருள் என்றே புரியவில்லை. ஒருமுறை அல்ல, மூன்றுமுறை அடுத்தடுத்து Howl என்று குறிப்பிடப்பட்டிருந்தது. என்ன பொருள் என்பதை ஊகிக்கவே முடியவில்லை.

அடுத்த நாள் காலைப் பிரிவிலேயே ராதாகிருஷ்ணன் சார் வந்துவிட்டார். எல்லாப் போட்டிகளுக்கும் பெயரை பதிவு செய்துவிட்டேன் என்பதை லீடர் வழியாக அறிந்து மகிழ்ச்சியுடன் என்னைப் பார்த்துச் சிரித்தார்.

ஒளவையார் பாடல்களை ஒவ்வொருவராக எழுந்து நின்று ஒப்பிக்கும்படி சொன்னார் சார். பத்து பதினைந்து பேர்களுக்குப் பிறகு ஆளுக்கு ஒரு பாடலைச் சொல்லும்படி கேட்டுக்கொண்டார். எல்லோரும் சொல்லி முடித்ததும் ஒருசில இலக்கணக்குறிப்புகளைச் சொல்லிக் கொடுத்தார்.

தனிநடிப்புக்குரிய ஆங்கில வரிகளை சாரிடம் காட்டி ஏற்றஇறக்கத்தோடு படிக்கும் விதத்தை அறிந்துகொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் அவர் பாடத்தை முடிக்கும் நேரத்தில் பாடவேளை முடிந்துவிட்டதன் அடையாளமாக மணியடித்துவிட்டது. சார் வெளியேறிவிட்டார். அடுத்தடுத்த இரு நாட்கள் விடுமுறையில் அப்பகுதியை மனப்பாடம் செய்துகொள்வோம் என்றும் அதற்குப் பிறகு பொருளைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம் என்றும் முடிவு செய்தேன்.

அன்று இரவு அந்த உரையாடலின் முதல் இருபது வரிகளை மனப்பாடம் செய்துவிட்டேன். மறுநாள் காலையில் எஞ்சியிருந்த வரிகளையும் படித்து மனப்பாடம் செய்துவிட்டேன். கண்ணை  மூடிக்கொண்டு எல்லா வரிகளையும் என்னால் சொல்ல முடிந்தது. ஆனால் அவற்றின் பொருளைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால் எந்த வரிக்கு எப்படிப்பட்ட உணர்ச்சிகளை முகத்திலும் நடையிலும் காட்டவேண்டும் என்பது புரியவில்லை.

சனிக்கிழமை காலை விடிந்ததும் நோட்டுப்புத்தகத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றேன். அமைதியின் உறைவிடமாக விளங்கும் அந்த இடத்தில்  நிறைய கூட்டம் சேர்ந்திருந்தது. எல்லோரும் ஸ்டேஷன் மாஸ்டர் அறையைச் சுற்றிச் சூழ்ந்திருந்தார்கள். ஒரே கூச்சல். அதோ அதோ, அடி அடி என்று ஆளாளுக்கு சத்தம் போட்டபடி இருந்தார்கள். சத்தத்தைக் கேட்டு நான் வேகமாக ஓடி அந்தக் கூட்டத்துக்குப் பக்கத்தில் சென்று நின்றேன். எதுவும் தெரியவில்லை. பாம்பு, பாம்பு என்று சொல்வதுமட்டும் கேட்டது.

சிறிது நேரத்துக்குப் பிறகு யாரோ ஒருவர் ஒரு நீளமான பாம்பை மாலைபோல கழுத்தில் சுற்றிக்கொண்டு வெளியே வருவதைப் பார்த்தேன்.  அந்தத் தோற்றம் பீதியூட்டுவதாக இருந்ததால் சற்றே பின்வாங்கி நின்றேன்.

“எம்மாம் பெரிய பாம்பு பாருடா. நல்லா ஜாலியா ஃபேன் காத்துல போய் ஒண்டிகிச்சி போல”

“ஒரு அரைமணி நேரம் எல்லாரயும் டிரில் வாங்கிடுச்சி. இப்ப எல்லாம் அடங்கிட்டுது பாரு”

“எங்கனா போய் எரையெடுத்துட்டு திரும்பிப் போக வழி தெரியாம மல்லிகைப்பந்தல் வழியா ரூமுக்குள்ள போயிட்டுதுன்னு நெனைக்கறேன்”

அதற்குள் ஸ்டேஷன் மாஸ்டர் அறையை விட்டு வெளியே வந்து பாம்புடன் நடந்துபோன ஆளைத் தேடினார். அவர் அந்தப் பாம்பை ஒரு கூடைக்குள் செலுத்திவிட்டு மூடினார்.

அவரை நெருங்கிச் சென்ற ஸ்டேஷன் மாஸ்டர்  “பாவம், அடிச்சி கொன்னுடாத. எங்கனா காட்டுப்பக்கமா கொண்டு போய் விட்டுடு, புரியுதா?” என்றபடி இரண்டு ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்தார். ”சரிங்க சாமி” என்றபடி அந்த நோட்டை வாங்கி மடித்து கண்களில் ஒத்திக்கொண்டார் அவர்.

பாம்பாட்டி புறப்பட்டுச் சென்றதும் கூடியிருந்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக உரையாடிக்கொண்டபடி வெளியேறினார்கள்.

டிக்கட் கவுன்ட்டருக்கு எதிரில் ஓடு வேய்ந்த ஒரு பெரிய கூடம் இருந்தது. அதற்குள் நான்கு திசைகளிலும் சதுரவடிவில் இரும்புப்பிடி போட்ட மர பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. நான் அங்கே உட்கார்ந்து தனிநடிப்புக்குரிய பாடல் பகுதியை மனப்பாடமாக எனக்கு நானே சொல்லிப் பார்த்துக்கொண்டேன். அதன் இறுதிப்பகுதியில் மூன்று வெவ்வேறு பாத்திரங்கள் பேசுவதுபோல ஆறேழு வரிகள் இருந்தன. அவற்றை வெவ்வேறு தொனிகளில் பேசிப் பழகினேன். ஆள் நடமாட்டம் இல்லாத கூடம் என்பதால் சுதந்திரமாக சத்தமாக பேசிப் பேசிப் பழகினேன்.

ஒருமுறை விழிமூடி எல்லாப் பகுதியையும் சொல்லிப் பார்த்துவிட்டு நம்பிக்கையோடு விழி திறந்தபோது எதிரில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் நின்றிருந்தார். வெள்ளைச் சட்டை, வெள்ளை பேன்ட் போட்டிருந்தார். கழுத்தில் கழுத்துப்பட்டை தொங்கியது. நான் அவசரமாக எழுந்து நின்று வணக்கம் சார் என்றேன்.

“என்னடா விசேஷம்? காலையிலயே கண்ண மூடிட்டு சொல்லிப் பார்க்கறே? என்ன, ஏதாவது பரீட்சையா?”

“இல்லை சார், ஒரு போட்டிக்காக மனப்பாடம் செய்யறேன்”

“போட்டியா? என்ன போட்டி?”

“விழுப்புரம் வட்டத்துல எல்லாப் பள்ளிக்கூடங்களும் கலந்துக்கப்போற இலக்கிய மன்றப் போட்டியில கலந்துக்கப் போறேன் சார். அதுக்காகத்தான் மனப்பாடம் செய்யறேன்.”

ஸ்டேஷன் மாஸ்டர் என்னிடம் இருந்த நோட்டை வாங்கிப் பார்த்தார். முதல் வரியைப் படித்ததுமே அவர் கண்கள் மலர்ந்தன. பிறகு “இது என்ன? இந்தப் பகுதி எதுல வருது? இத எழுதிய ஆள் யாரு? யாராவது அதைப்பற்றி உனக்குச் சொன்னாங்களா?” என்று கேட்டார். ”எனக்குத் தெரியாது” என்பதற்கு அடையாளமாக உதட்டைப் பிதுக்கி தலையசைத்தேன்.

“நான் காலேஜ் படிக்கிற காலத்துல ஒரு விழாவுல இதே வசனங்களை பேசி மேடையில நான் நடிச்சிருக்கேன்”

பெருமிதமும் புன்னகையும் படர்ந்த அவருடைய முகத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அவர் தன்னிச்சையாக முதல் மூன்று வரிகளை மேடையில் பேசிக் காட்டுவதுபோலப் பேசினார். பிறகு எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார்.

”இது சாதாரணமான வசனம் இல்லை. இதை எழுதியவர் இங்க்லீஷ்ல பெரிய நாடக ஆசிரியர். ஷேக்ஸ்பியர். அவர் எழுதிய ஒரு நாடகத்துல ஒரு பக்கம்தான் இந்த வசனம்.”

“என்ன நாடகம்?”

“கிங் லியர்”

நான் அவருடைய முகத்தையே பார்த்தபடி இருந்தேன்.

“கிங்னா என்னன்னு தெரியும் இல்லையா? அரசன். ஒரு காலத்துல லியர் பெரிய அரசன். அவனுக்கு மூனு பொண்ணுங்க இருந்தாங்க. அரசனுக்கு வயசாயிட்டுது. அதனால தன்னுடைய நாட்ட தன்னுடைய மூனு பொண்ணுங்களுக்கும் நல்ல முறையில பிரிச்சிக் கொடுத்துடணும்னு அவரு நினைக்கிறாரு. அதனால மூனு பொண்ணுங்களயும் உக்கார வச்சி ஒரு கேள்வி கேட்டாரு. உங்கள்ல யாருக்கு என் மேல பாசம் அதிகம்னு கேட்டாரு. முதல் ரெண்டு பொண்ணுங்களும் ஆளாளுக்கு அப்பாவை மயக்குற மாதிரி ஏதேதோ பதில் சொன்னாங்க. அவுங்களுக்கு நாடு கெடைச்சிட்டுது. சின்னப்பொண்ணு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டிருந்ததால அவளுக்கு பேச்சே வரலை. ஆனா லியர் ராஜா அவளுக்கு தன் மேல பாசமே இல்லைன்னு நெனச்சிகிட்டு நாட்டைவிட்டே துரத்தியடிச்சிடுறாரு. ரெண்டு பொண்ணுங்களுக்கு மட்டும் நாட்ட பிரிச்சி கொடுத்துட்டாரு. ஆரம்பத்துல ராஜாவை நல்லபடியா பாத்துகிட்ட பொண்ணுங்க, நாளாக நாளாக அலட்சியப்படுத்தி விரட்டியடிச்சிடறாங்க.  குத்துயிரும் குலையுயிருமா அவர் மூனாவது பொண்ண தேடி வராரு. படையெடுத்து போய் சண்டை போடறாங்க. எதிர்பாராத விதமா அவருக்கு ஆறுதலா இருந்த சின்னப் பொண்ணு செத்துடறா. அவள் மரணத்துக்காக நாயம் கேக்க ஊர் மக்களைப் பார்த்து பேசறாரு லியர் ராஜா. அந்தப் பேச்சுதான் உன் கையில வச்சிருக்கிற சீட்டுல இருக்குது.”

அவர் சொன்ன கதையின் சாரத்தைக் கேட்கக்கேட்க சினிமாக்கதை போல இருந்தது. சட்டென நினைவுக்கு வந்ததுபோல ”Howக்கு என்ன அர்த்தம்னு புரியுது சார். ஆனா Howlங்கறதுக்கு என்ன அர்த்தம் புரியலை சார். அதை எப்படி உச்சரிக்கிறது?”  என்று கேட்டேன்.

ஸ்டேஷன் மாஸ்டர் நெருங்கி வந்து என் தோளைத் தட்டிக் கொடுத்தார். “ஹெள ன்னா எப்படின்னு அர்த்தம். ஹெளல்னு சொன்னா சத்தம் போடறதுன்னு அர்த்தம். முழக்கம்னும் சொல்லலாம். ஆரவாரம்னு அர்த்தம். நியாயத்துக்காக குரல் கொடுங்கன்னு அர்த்தம். ஒரு பெரிய கொடுங்கோலாட்சி நடக்கிற நேரத்துல தட்டிக் கேக்க தைரியம் இல்லாம அமைதியா இருக்கிற மக்கள பார்த்து சத்தம் போட்டு தட்டிக் கேளுங்கன்னு சொல்லிக் கொடுக்கிறாரு. வானமே இடிஞ்சி உழற அளவுக்கு சத்தம் போட்டு எதிர்ப்பை காட்டுங்கன்னு சொல்றாரு”

அவர் சுவாரசியமாக அப்பகுதியை விளக்கிய விதம் மிகவும் பிடித்திருந்தது.

நோட்டினை என்னிடம் கொடுத்துவிட்டு அவர் தன்னிச்சையாக அந்த உரையாடல்களைப் பேசியபடி அந்தக் கூடத்திலேயே நடித்துக் காட்டினார். ஒரு பள்ளிக்கூட மாணவனுக்கே உரிய துள்ளலையும் வேகத்தையும் அவருடைய குரலிலும் உடல் திரும்பும் வேகத்திலும் பார்த்தேன். ஒவ்வொரு சொல்லுக்கும் அவர் முகமும் உடலும் எப்படி திரும்புகிறது, என்னென்ன பாவனைகளைக் காட்டுகிறது, அவருடைய குரல் காட்டும் ஏற்ற இறக்கங்கள் என்ன என எல்லாவற்றையும் உற்றுக் கவனித்தேன்.

ஸ்டேஷன் மாஸ்டர் முழுப் பகுதியையும் பேசி நடித்ததைப் பார்த்தபோது, ஒரு நாடகத்தைப் பார்ப்பதுபோல இருந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் ஒரு வரியைக் கூட மறக்காமல் முழு பகுதியையும் நினைவில் வைத்திருக்கும் விதம் ஆச்சரியத்தை அளித்தது. அவர் உரையாடலைச் சொல்ல, அவருக்குப் பின்பாட்டு போல மனசுக்குள் நானும் ஒவ்வொரு வரியையும் சொல்லிக்கொண்டேன்.

ஸ்டேஷன் மாஸ்டர் நடித்து முடித்ததும் கைதட்டினேன். “சினிமாகாரங்க மாதிரி நடிக்கிறீங்க சார். சினிமாவுக்கு போயிருந்தா பெரிய ஆளா வந்திருப்பீங்க” என்றேன். ”நமக்கு எதுக்குப்பா அந்த ஸ்டார்லாம்? இருக்கிற ஸ்டாரே போதும்” என்று  புன்னகைத்தபடி என் பக்கமாக நடந்துவந்து பெஞ்ச்சில் உட்கார்ந்துகொண்டார்

ஒருமுறை என் நோட்டைப் பிரித்துவைத்துக்கொண்டு ஒவ்வொரு வரியாகப் பிரித்துப் படிக்கும் விதங்களை எடுத்துரைத்தார். பிறகு உரையாடலை எப்படி உச்சரிப்பது என்று சொல்லிக்கொடுத்தார். இறுதியாக ஒவ்வொரு வரியையும் உயிரோட்டமாக உச்சரிக்கும் விதத்தையும் சொல்லிக்கொடுத்தார். ஒவ்வொரு வரிக்கும் அர்த்தத்தையும் சொல்லி முழுமையாகப் புரியும்படி சொன்னார்

”ஒருமுறை நான் நடிச்சிகிட்டே பேசிக் காட்டறேன் சார். சரியா வருதான்னு பார்க்கறீங்களா?” என்று ஸ்டஷன் மாஸ்டரிடம் கேட்டேன். அவர் அதற்கு ஒப்புக்கொண்டதும் அவருக்கு முன்னால் முழுப் பகுதியையும் நடித்துக் காட்டினேன். ஸ்டேஷன் மாஸ்டர் ஒருசில இடங்களில் மட்டும் திருத்தங்கள் சொன்னார். அந்தத் திருத்தங்களோடு மீண்டுமொரு  முறை நடித்துக் காட்டினேன். “இப்ப சரியா வந்துடுச்சி” என்று பாராட்டினார் ஸ்டேஷன் மாஸ்டர். அந்தக் கணத்திலேயே ஓர் அரசனுக்குரிய மிடுக்கு எனக்குள் வந்துவிட்டது.

அன்றைய பயிற்சிக்குப் பிறகு எனக்கு பத்து நாட்களுக்கும் மேல் இடைவெளி இருந்தது.  ஒவ்வொரு நாளும் கடைவேலையை முடித்துக்கொண்டு இரவில் திரும்பிய பிறகு அரைமணி நேரம் அந்தப் பயிற்சிக்காகவென்றே ஒதுக்கினேன். அதற்குப் பிறகே நான் தூங்குவதற்குச் சென்றேன்.

விழுப்புரத்தில் பள்ளிகளிடையில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்வோரைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் சுற்றுப் போட்டிகள் எங்கள் பள்ளியிலேயே மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன.  மூன்று நாட்களும் மாலைப்பொழுதுகள் விழாக்காலம் போல இருந்தது. பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, தனிநடிப்பு என நான் பெயர் கொடுத்திருந்த எல்லாப் போட்டிகளிலும் நான் தேர்வு பெற்றேன். வெற்றியாளனாக என் பெயரை அறிவிக்கும் சமயத்தில் ராதாகிருஷ்ணன் சார் அதைக் கேட்கவேண்டுமே என்ற பதற்றத்தில் கூட்டத்தில் அவரைத் தேடினேன். அவரைக் கண்டுபிடித்து புன்னகைத்தபோது அவர் கண்கள் என்னைத் தேடியதையும் உணர்ந்தேன்.