வீட்டில் வளரும் குழந்தைக்கு புற உலக அறிமுகமும் பிற உயிர்களைப்பற்றிய அறிமுகமும் முதன்முதலாக அந்தக் குழந்தையைச் சூழ்ந்து வாழும் பெரியவர்களின் சொற்கள் வழியாகவே அறிமுகமாகிறது. காக்கையை முதன்முதலாகப் பார்க்கும் எந்தக் குழந்தைக்கும் அதன் பெயர் காக்கை என்று தெரியாது. அதை ஒரு சொல்லாக முதலில் கேட்டுப் பழகி மனத்தில் இருத்திவைத்துக்கொள்கிறது. நேருக்கு நேராக ஒரு காக்கையைப் பார்த்துப் பரவசத்தோடு துள்ளிக் குதிக்கும்போது, அதற்கு அருகில் நிற்கும் யாரோ ஒருவர் அதை காக்கை என்று அடையாளப்படுத்துகிறார். அதற்குப் பிறகு அக்குழந்தை அந்தச் சொல்லையும் அந்தப் பறவையின் வடிவத்தையும் இணைத்து ஆழ்நெஞ்சில் பதிய வைத்துக்கொள்கிறது. ஒரு காட்சியனுபவமும் கேள்வியனுபவமும் இணைந்து அக்குழந்தையின் பிஞ்சு மனத்தில் அந்த வடிவம் பதிவாகிறது. ஒவ்வொரு நாளும் அதன் ஞானம் எல்லையில்லாமல் வளர்ந்துகொண்டே போகிறது.