Home

Sunday 11 August 2024

ஆழ்மனத்தில் உள்ள கனவு

 

வீட்டில் வளரும் குழந்தைக்கு புற உலக அறிமுகமும் பிற உயிர்களைப்பற்றிய அறிமுகமும் முதன்முதலாக அந்தக் குழந்தையைச் சூழ்ந்து வாழும் பெரியவர்களின் சொற்கள் வழியாகவே அறிமுகமாகிறது. காக்கையை முதன்முதலாகப் பார்க்கும் எந்தக் குழந்தைக்கும் அதன் பெயர் காக்கை என்று தெரியாது. அதை ஒரு சொல்லாக முதலில் கேட்டுப் பழகி மனத்தில் இருத்திவைத்துக்கொள்கிறது. நேருக்கு நேராக ஒரு காக்கையைப் பார்த்துப் பரவசத்தோடு துள்ளிக் குதிக்கும்போது, அதற்கு அருகில் நிற்கும் யாரோ ஒருவர் அதை காக்கை என்று அடையாளப்படுத்துகிறார். அதற்குப் பிறகு அக்குழந்தை அந்தச் சொல்லையும் அந்தப் பறவையின் வடிவத்தையும் இணைத்து ஆழ்நெஞ்சில் பதிய வைத்துக்கொள்கிறது. ஒரு காட்சியனுபவமும் கேள்வியனுபவமும் இணைந்து அக்குழந்தையின் பிஞ்சு மனத்தில் அந்த வடிவம் பதிவாகிறது.  ஒவ்வொரு நாளும் அதன் ஞானம் எல்லையில்லாமல் வளர்ந்துகொண்டே போகிறது.

இந்த இயல்பின் வளர்ச்சியை அடையாளப்படுத்தும் விதமாக,  ஒரு சிறு நாவலை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் துரை. அறிவழகன். ஏற்கனவே அவர் சிறார்களுக்காக பல கதைகளை எழுதியவர். முப்பதாண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் தொடர்ந்து இயங்கி வருபவர். பல நல்ல சிறுகதைகளையும் பண்ணவயல் என்னும் நாவலையும் எழுதியவர்.

ஒரு மழைக்காலத்தில் ஆகாயத்தில் பார்த்த வானவில் காட்சியை வண்ணங்களின் உதவியோடு ஓவியமாகத் தீட்டுகிறாள் ஒரு சிறுமி. அவள் பெயர் கயல் என்கிற கயல்விழி. வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த தன் அண்ணன் சுடரை அழைத்து அந்த வானவில் சித்திரத்தைக் காட்டுகிறாள். இப்படி அறிமுகக்காட்சியோடு தொடங்குகிறது நாவலின் முதல் பகுதி.

தொடர்ந்து படிக்கும்போதுதான் அவளுடைய கால்கள் கொத்தவரங்காயைப்போல மெலிந்தவை என்பதையும் அவளால் மற்ற பிள்ளைகளைப்போல நடமாடமுடியாது என்பதையும் புரிந்துகொள்கிறோம். மற்ற பிள்ளைகள் எல்லோரும் தெருவில் இறங்கி விளையாடிக்கொண்டிருக்கும் சூழலில் அவள் ஏன் உட்கார்ந்த நிலையில் வானத்தை வேடிக்கை பார்த்து, வானவில் சித்திரத்தைத் தீட்டிக்கொண்டிருக்கிறாள், வானவில் தன் எதிரில் வந்து நின்று தன்னோடு உரையாடுவதாக நினைத்துக்கொண்டு தனக்குத்தானே ஏன் பேசிக்கொள்கிறாள் என்பதை அப்போதுதான் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

அவளுக்கு வெளியுலகத்தைப்பற்றி ஏராளமான தகவல்களைச் சொல்லி அவளுடைய கற்பனையைத் தூண்டிவிடுபவர், அவர்களுடைய வயலில் வேலை செய்யும் பஞ்சுபுள்ள என்பவர். பறவைகள், பூச்சிகள், விலங்குகள், மரங்கள், செடிகள், கனிகள் என ஏராளமான தகவல்கள் அவருக்குத் தெரிந்திருக்கின்றனர். அவர் சொல்லும் தகவல்களைக் காதுகொடுத்துக் கேட்டு, அதற்கு தன் மனத்திலேயே ஒரு வடிவம் கொடுத்து ஓவியமாகத் தீட்டிவிடுகிறாள் கயல்.

ஒருநாள் அவளுடைய ஒன்பதாம் பிறந்தநாளை அவளுடைய குடும்பம் கொண்டாடுகிறது. அதையொட்டி, அந்தக் கிராமசபையின் தலைவர் அவளுக்கு ஒரு சக்கரநாற்காலியை வாங்கிக் கொடுக்கிறார். சக்கர நாற்காலியில் அவளை உட்காரவைத்துக்கொண்டு, அன்றே அவளை  ஊரைச் சுற்றிக்காட்ட அழைத்துச் சென்றுவிடுகிறார் பஞ்சுபிள்ள. மெல்ல மெல்ல அவளுக்குப் புற உலகம் அறிமுகமாகிறது. விதவிதமான பறவைகளையும் மரங்களையும் செடிகொடிகளையும் பார்த்து மகிழ்ச்சியில் திளைக்கிறாள். கயலுக்கு தன் உடலெங்கும் இறக்கைமுளைத்ததைப்போல இருக்கிறது.

அதுவரை கற்பனையாக மட்டுமே பார்த்து மகிழ்ந்த உலகத்தை நேருக்கு நேர் பார்த்து மகிழ்ச்சியில் திளைக்கிறாள் கயல். அவர்களுக்குச் சொந்தமான தோட்டத்தில் ஓர் எலுமிச்சைமரம் இருக்கிறது. அந்த மரம் அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதன் நிழலில் சக்கர நாற்காலியை நிறுத்திவிட்ட்டு வேடிக்கை பார்க்கிறாள். அது அவளுடைய வழக்கமான பொழுதுபோக்கு. ஒவ்வொன்றைப்பற்றியும் அவளுடைய நெஞ்சில் நூறு கேள்விகள் எழுகின்றன. அனைத்துக்கும் பொறுமையாக பதில்சொல்லி விளக்கம் அளிக்கிறார் பஞ்சுபுள்ள. அவளுடைய அனுபவ உலகம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைகிறது. பனங்காட்டில் வாழும் நாமக்கோழி, சாக்குருவி, செம்போத்து, காட்டுக்காடை, வாள்காடை, பூங்காடை, அரிகாடை, மைனா போன்ற பறவைகளையும் வேம்பு, பூவரசு, இச்சி, முள்முருங்கை போன்ற விதம்விதமான மரங்களையும் அவர் அச்சிறுமிக்குத் தெரியப்படுத்துகிறார்.

ஒரு பகுதியில், பஞ்சுப்புள்ள தான் சிறுவயதில் கேட்ட கதையென ஒரு கதையை கயலுக்குச் சொல்கிறார். நாட்டுப்புறக்கதையின் சாயலோடு காணப்படும் அக்கதை மிகவும் சுவாரசியமாக உள்ளது. ஒரு சின்னஞ்சிறிய நாட்டில் ஒரு கிணறு இருக்கிறது. ஒருபோதும் வற்றாத கிணறு. அக்கிணற்றில் ஒருபோதும் பாசி படர்ந்ததில்லை. தெளிவோடு பளபளப்பாக எப்போதும் காணப்படும். அக்கிணற்றில் ஒரு தங்கமீன் வசிக்கிறது. அதனால்தான் அக்குளம் வற்றாமல் இருக்கிறது என்பது ஊரில் நிலவும் நம்பிக்கை. அதைக் கேள்விப்பட்ட அயலூரைச் சேர்ந்த ஒரு மன்னன் அந்த ஊர் மீது போர்தொடுக்கிறான். அந்த மன்னனுக்கும் அந்த ஊர் ராஜகுமாரிக்கும் வாள்சண்டை நடக்கிறது. வெற்றி தோல்விக்கு இடமின்றி, நீண்ட நேரமாக மோதல் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. தனித்துப் போரிடுவதில் சோர்வடைந்த ராஜகுமாரி, ஒரு கட்டத்தில் அங்கிருந்து தப்பித்துச் சென்று மீனைக் காப்பாற்றும் முனைப்போடு கிணற்றில் குதித்துவிடுகிறாள். அங்கு வசிக்கும் தங்கமீனோடு ஆழ்நீர் வழியாகவே எங்கோ தப்பித்துவிடுகிறாள். அவளைப் பின் தொடர்ந்து வந்த வீரர்கள் கிணற்றுக்குள். இறங்கி அவளைத் தேடுகிறார்கள். அவளையோ, தங்க மீனையோ அவர்களால் கண்டுபிடிக்கமுடியாமல் நாட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார்கள். ஆழ்பகுதிக்குச் சென்ற ராஜகுமாரியும் தங்கமீனும்  தேவதைகளாக மாறி அதே பகுதியில் வலம்வந்தபடி இருக்கிறார்கள். நாட்டுப்புறக்கதையின் சாயலுடன் கதைக்குள் கதையாக இடம் பெற்றிருக்கும் அந்தக் கதை படிப்பதற்குச் சுவாரசியமாக இருக்கிறது. 

எலுமிச்சை மரத்தை நாடி வந்துபோகும் பட்டுப்பூச்சிகளைச் சுட்டிக்காட்டி பஞ்சுப்புள்ள சொல்லும் கதைகள் எல்லாமே சுவாரசியமானவை. பட்டுப்பூச்சியை சாக்காக வைத்துக்கொண்டு கயல் ஏராளமான கேள்விகளைக் கேட்கிறாள். பஞ்சுபுள்ள எல்லாக் கேள்விகளுக்கும் அமைதியாகப் பதில் சொல்கிறார். அவர் அளிக்கும் விளக்கங்களின் விளைவாக, நடப்பதற்கு கால்கள் இல்லாவிடினும் கயலுக்கு பட்டுப்பூச்சியைப்போல பறந்து திரியவேண்டும் என்று ஆசை எழுகிறது.

உரையாடலை முடிக்கும் தருணத்தில் பஞ்சுப்புளி மிகச்சாதாரணமாக சொல்வதைப்போல ஒரு செய்தியைச் சொல்கிறார். அதுவே இந்த நாவலின் சாரம். பட்டுப்பூச்சிகள் எங்கே தங்கும், எங்கே கூடு கட்டும், எங்கே முட்டையிடும், பட்டுப்பூச்சியின் முட்டை எப்படி பட்டுப்பூச்சியாக மாறும் என்றெல்லாம் அடுத்தடுத்து கயல் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போக்கில், அச்செய்தியைச் சொல்கிறார் பஞ்சுப்புளி. பட்டுப்பூச்சிகள் ஒருபோதும் நேரிடையாக இன்னொரு பட்டுப்பூச்சியைப் பிரசவிப்பதில்லை. மாறாக, ஒரு புழுவையே பிரசவிக்கிறது. ஆனால் அச்சிற்றுயிரில் பறக்கவேண்டும் என்னும் பேராவலும் கனவும் குடிகொண்டிருக்கிந்றன. காத்திருப்பும் தவிப்பும் மன்றாடுதலும் இணைந்து ஒரு கட்டத்தில் அந்தப் புழுவுக்கு, பறப்பதற்குத் தேவையான சிறகும் வானமும் கிடைத்துவிடுகின்றன. ஊர்ந்து செல்லும் ஓர் உயிர் பறந்துசெல்லும் உயிராக உருமாறிவிடுகிறது. ஆழ்மனத்தில் உள்ள கனலே அதன் உருவமாக மாறிவிடுகிறது.

நம்பிக்கையையும் தெளிவையும் கொடுக்கும் இத்தகு சொற்கள் இன்றைய சூழலில் மிகமிக முக்கியமானவை. கயலுக்கு கால்கள் இல்லை. இந்த உலகில் கயலைப்போல ஆயிரக்கணக்கான சிறுமிகளும் சிறுவர்களும் இல்லாமைகளுக்கு நடுவில்தான் வாழ்ந்துவருகிறார்கள். ஆனால் இல்லாததை நினைத்து சோர்வடைந்து முடங்கியிருப்பதைவிட, ஆழ்மனக் கனவோடு அடையவிரும்பும் இலக்குக்காக உள்ளூர போராடுவது சிறந்த வழி. அந்த முயற்சி மட்டுமே, பட்டுப்பூச்சியாக பறக்க நினைக்கும் கனவை நனவாக்கும்.

சக்கரநாற்காலியில் அமர்ந்து உலகத்தை அறிந்துகொள்ள விழையும் கயல், அவளை நாற்காலியில் அமரவைத்து உலகத்தை அறிமுகப்படுத்தும் பஞ்சுப்புளி ஆகிய இரு முதன்மைப் பாத்திரங்கள் வழியாக ஒரு சிறந்த கதையை அளித்திருக்கும் துரை.அறிவழகனின் முயற்சி பாராட்டுக்குரியது. சிறார்கள் ஆர்வத்தோடு படிக்கும் வகையில் ,வரிகளுக்கு இடையில் போதுமான இடைவெளியோடு தெளிவான எழுத்துருவோடு பதிப்பித்திருக்கும் பரிதி பதிப்பகத்தின் அக்கறையும் பாராட்டுக்குரியது.

 

 

 

(எலுமிச்சைமரப் பட்டாம்பூச்சி – சிறார் நாவல். துரை.அறிவழகன். பரிதி பதிப்பகம், 56சி/128, பாரத கோயில் அருகில், ஜோலார்ப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டம்-635851. விலை. ரூ.70)

 

(புக் டே – இணையதளம் – 05.07.2024)