Home

Monday 5 August 2024

காந்திய வழி என்னும் ஆலமரம்

  

தென்னாப்பிரிக்காவிலிருந்து 09.01.1915 அன்று காந்தியடிகள் இந்தியாவுக்குத் திரும்பிவந்தார். பிறகு  கோகலேயின் ஆலோசனைப்படி இந்தியாவின் நிகழ்முறைகளைப் புரிந்துகொள்வதற்காக ஓராண்டுக் காலம் தேசமெங்கும் சுற்றுப்பயணம் செய்தார். அப்பயணத்தின் தொடர்ச்சியாக லக்னோ நகருக்கு வந்து 1916ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அம்பிகாசரண் மஜூம்தார் தலைமையில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் சம்பாரண் விவசாயிகளின் துன்பங்களை முன்வைத்துப் பேசுவதற்காகச் சென்ற ராஜ்குமார் சுக்லா காந்தியடிகளைச் சந்தித்து சம்பாரணுக்கு வருமாறு கேட்டுக்கொண்டார்.  விரைவில் கல்கத்தாவுக்கு வரவிருப்பதாகவும் அப்போது சம்பாரணுக்கு வருவதாகவும் சுக்லாவுக்கு வாக்களித்தார் காந்தியடிகள்.

சாயத்தின் தேவைக்காக அரை நூற்றாண்டுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய அவுரிச் சாகுபடி சம்பாரண் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்க்கையை முற்றிலும் சிதைத்துவிட்டது. சம்பாரண் பகுதியில் இருந்த நிலங்கள் அனைத்தும்  ஆங்கிலேய அதிகாரிகளின் வசம் இருந்தன. இந்திய விவசாயிகள் அந்த நிலங்களில் குத்தகைக்கு பயிரிட்டு வந்தனர். அதற்கு ஈடாக இருபதில் மூன்று பங்கு நிலப்பரப்பில் அவுரியைப் பயிரிட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவேண்டும் என்பது விதியாக இருந்தது. தீன்கதியா என்று அழைக்கப்பட்ட இந்த நடைமுறையின் விளைவாக விவசாயிகள் கடுமையான பொருளிழப்புக்கு ஆளானார்கள்.

ஒருபுறம், சாகுபடி நிபந்தனையிலிருந்து அவர்களால் விடுபடவும் முடியவில்லை.  மறுபுறம், குத்தகையின் பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ள ஆங்கிலேயர்கள் இழப்பீடாகக் கேட்கும் பெரும் தொகையை அவர்களால் அளிக்கவும் முடியவில்லை.  துன்பத்தின் பிடியிலிருந்து விடுதலை கிடைக்காதா என அவர்கள் ஏங்கித் தவித்திருந்த சமயத்தில்தான் காந்தியடிகள் சம்பாரணை அடைந்தார்.

சம்பாரணை அடைந்ததும், விவசாயிகளை நேருக்குநேர் சந்தித்து பிரச்சினைகளை ஆவணப்படுத்துவதுதான் அவருடைய முதல் நோக்கமாக இருந்தது.  அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு ஏதேனும் போராட்டத்தை அவர் தொடங்கக்கூடும் என எதிர்பார்த்திருந்த மாவட்ட நிர்வாகம் அவர் விவசாயிகளைச் சந்திப்பதிலும் விரிவான வகையில் தகவல்களைச் சேகரிப்பதிலும் மும்முரமாக இருப்பதைப் பார்த்து திகைத்து நின்றுவிட்டது. காந்தியடிகளுடைய நோக்கத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால் அவரை 16.04.1917 அன்று நீதிமன்றத்துக்கு வரவழைத்து, சம்பாரணைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டுமென உத்தரவிட்டார் நீதிபதி. 

அந்த  உத்தரவுக்கு  தன்னால்  கீழ்ப்படிய முடியாது என அமைதியான குரலில் மறுத்துரைத்தார் காந்தியடிகள். அதே நேரத்தில் உறுதியான முறையில்  தன்னை எத்தனை முறை சிறையில் அடைத்தாலும் சம்பாரண் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்வரை சம்பாரணுக்கு மீண்டும் மீண்டும் திரும்பி வருவதை யாராலும் தடுக்கமுடியாது என்றும் அறிவித்தார். என்ன செய்வது என்று முடிவெடுக்கமுடியாத நீதிபதி தீர்ப்பை ஒரு வார காலத்துக்கு ஒத்திவைத்தார். 

ஒரு வாரத்துக்குள் தகவல்களையெல்லாம் தொகுத்து அந்த ஆவணத்தோடு நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார் காந்தியடிகள். விவசாயிகளின் துன்பங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் வகையில் கோரிக்கைகளை முன்வைத்து ஒரு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். 1857இல் நடைபெற்ற புரட்சியை அடக்கியொடுக்கி, சூழலை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தெரிந்த நிர்வாகம் வன்முறையே இல்லாத காந்தியடிகளின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் பேச்சுவார்த்தைக்கு இறங்கிவந்தது. அது விவசாயிகளுக்குச் சாதகமான முடிவுகளை ஈட்டிக் கொடுத்தது. துன்பமற்ற ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு வழிவகுத்தது. இதுவே இந்தியாவில் வன்முறையற்ற வழியில் நடைபெற்ற முதல் போராட்டம். அதற்கு காந்தியடிகள் சத்தியாகிரகம் என்று பெயர் சூட்டினார்.

ஒரு சிறிய மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த சத்தியாகிரகத்தைத் தொடர்ந்து அவர் முன்னெடுத்த ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், சட்ட மறுப்பு இயக்கம், தனிநபர் சத்தியாகிரகம் அனைத்தும் தேசிய அளவிலானவை. இலட்சியம் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு அந்த இலட்சியத்தை அடையும் பாதையும் முக்கியம் என்பதில் ஆழ்ந்த அக்கறையோடு செயல்பட்டவர் காந்தியடிகள். 1917இல் அவர் தொடங்கிய முதல் சத்தியாகிரகத்திலிருந்து 1948இல் அவர் மறையும் காலம் வரைக்கும் அவர் தன் அகிம்சைப்பாதையிலிருந்து இம்மியளவும் பிசகாதவராகவே இருந்தார்.

காந்தியடிகள் உயிரோடு இருந்த காலத்திலேயே அவர் முன்னெடுத்த வன்முறையற்ற போராட்ட வழிமுறை உலகத்தின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது. ரொமாண்ட் ரோலந்து, லூயி ஃபிஷர் போன்றோர் காந்தியடிகளைப்பற்றி எழுதிய நூல்கள் அதற்கு உதவின. காந்திய வழிமுறை காந்தியடிகள் வாழ்ந்த காலத்தோடு முடிவடையவில்லை. அவருடைய மறைவுக்குப் பிறகும், அவர் வழியை தம் வழியாக தகவமைத்துக்கொண்டு முன்னெடுத்துச் சென்ற பல சிந்தனையாளர்கள் வழியாக காலந்தோறும் செழுமையடைந்தபடியே வந்தது. அரசியல் சார்ந்த போராட்டங்களில் மார்ட்டின் லூதர் கிங் முதல் நெல்சன் மண்டேலா வரையிலான தலைவர்கள் ஈடுபட்டு வெற்றியடைந்ததை நாம் கவனிக்கவேண்டும். கிராமப் பொருளாதாரத் துறையில் ஜே.சி.குமரப்பா முதல் ஷூமாக்கர் வரையிலான சிந்தனையாளர்களின் தொடர்ச்சியையும் நாம் கவனிக்கவேண்டும். சமூகவியல், இயற்கை வேளாண்மை என பல துறைகளிலும் காந்தியடிகள் தொடங்கிவைத்த சிந்தனைக்கு ஒரு தொடர்ச்சி இருக்கிறது.

உலக அளவில் காந்தியடிகளுக்குப் பின்பு நடைபெற்ற வன்முறையற்ற போராட்டங்கள் எவை என்பதையும் அவை சமூகத்தில் உருவாக்கிய தாக்கங்கள் எத்தகையவை என்பதையும் அறிந்துகொள்ளும் ஆவல் அனைவருக்கும் இயற்கையாகவே எழக்கூடும். அத்தகையோருக்கு தெளிவு கிட்டும் வகையில் முனைவர் சு.முத்துலட்சுமியின் முயற்சியால் மதுரையில்  இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கருத்தரங்கத்தில் முப்பத்தைந்து பேர் கட்டுரைகளை முன்வைத்து உரை நிகழ்த்தினார்கள். அக்கட்டுரைகள் அனைத்தும் சேர்ந்து ஒரு தொகுதியாக வெளிவரும் இத்தருணத்தில் அக்கட்டுரைகளைப் படிக்கும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. உலகெங்கும் பல்வேறு வடிவங்களில் பல்வேறு தலைவர்கள் வழியாக காந்தியம் தழைத்து வளர்வதை அறிந்துகொள்ள மகிழ்ச்சியாக உள்ளது.  காந்திய வழி என்னும் ஆலமரம் பற்பல இடங்களில் விழுதுவிட்டு வளர்ந்து ஓங்கி நின்றிருப்பதை உணரமுடிகிறது. 

காந்தியம் எப்போதும் மாற்றுத்தரப்புடன் உரையாடலை வலியுறுத்தி வந்திருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும். அதுவே அந்த வழிமுறையின் அடிப்படைச்சரடு. இரு தரப்பினரும் அந்த உரையாடலுக்குப் பிறகு ஒரு பொதுப்புள்ளியை வந்தடைகின்றனர். அந்தப் பொதுப்புள்ளிதான் காந்தியம் ஈட்டியளிக்கும் வெற்றி. காந்தியம் முன்முடிவுகள் எதுவுமின்றி எப்போதும் திறந்த மனத்துடன் மாற்றுத் தரப்புடன் உரையாடலுக்குத் தயாராக இருக்கிறது. திறந்த மனத்துடன் இருப்பவர்களால் மட்டுமே ஒரு கருத்தை எடுத்துரைக்கவும் ஏற்றுக்கொள்ளவும் முடியும்.

ஒரு தரப்பென நம்மை உலகம் பொருட்படுத்தி ஏற்றுக்கொள்ளும் வகையில் நாம் உண்மையுள்ளவர்களாகவும் வெளிப்படையானவர்களாகவும் இருக்கவேண்டும். அதுதான் நம் முதன்மைத்தகுதி.   எத்தருணத்திலும் வன்முறையை நாடாதவர்களாக இருக்கவேண்டும். மாற்றுத்தரப்பினர் நம்மைவிட வலிமை பொருந்தியவர்கள் என்னும் எண்ணம் எப்போதும் நமக்குள் இருக்கவேண்டும். மிகச்சிறிய அளவில் நம்மிடமிருந்து வெளிப்படும் வன்முறை கூட இரு தரப்பினரிடையே நிகழும் உரையாடலின் போக்கை உடனடியாக திசைமாற்றிவிடும். ஆகவே வன்முறையை உதறிய மன உறுதியையே காந்திய வழிமுறை எப்போதும் முன்வைக்கிறது.

எதிர்த்தரப்பினரிடம் தொடர்ச்சியாக உரையாடி அவர்களுடைய கருத்தியலில் மாற்றத்தை உருவாக்கவே காந்திய வழிமுறை எப்போதும் முயற்சி செய்கிறது. அதன் வழியாக நாம் ஈட்டும் நம்பிக்கை ஒரு தொடக்கமாக அமைந்து, நாளடைவில் மாற்றுத்தரப்பினரிடம் முழு மாற்றத்தை ஏற்படுத்தும். தொடர் உரையாடல்களின் மூலமாக நீண்ட காலத்துக்குப் பிறகே, அத்தகு மாற்றம் நிகழக்கூடும் என்றாலும், அதுவே நிலையான நன்மையைக் கொடுக்கும். காந்திய வழிமுறை அத்தகு நிலையான நன்மையை நோக்கி கொஞ்சம்கொஞ்சமாக முன்னேறிச் செல்லும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது.

ஸேஜார் ஷாவேஜ் என்பவர் தலைமையில் 1965இல் கலிஃபோர்னியாவில் நிகழ்ந்த டெலோனா திராட்சைத்தொழிலாளர்கள் போராட்டத்தைப்பற்றிய சித்திரமொன்று இத்தொகுதியில் ஒரு கட்டுரையில் இடம்பெற்றுள்ளது. அங்கே தொழிலாளர்கள் மிகக்குறைந்த ஊதியத்துக்கு உழைக்கிறார்கள். கூடுதலான ஊதியத்தை ஒரு கோரிக்கையாக முன்வைத்து ஒரு போராட்டத்தை தொழிலாளர்கள் தொடங்குகிறார்கள். தோட்ட முதலாளிகள் முதலில் கூடுதலான ஊதிய கோரிக்கையை ஏற்க மறுக்கிறார்கள். தொழிலாளர்கள் ஒரு கட்டத்தில் தம் கோரிக்கையை வலியுறுத்தி பழம் பறிக்கமாட்டோம் என அறிவித்துவிடுகின்றனர். தோட்டங்களைச் சுற்றித் திரண்டு அமைதியாக நிற்கத் தொடங்குகிறார்கள். 

தோட்ட முதலாளிகளின் மிரட்டல்கள் பயனளிக்கவில்லை. தொழிலாளர்கள் கடைப்பிடிக்கும் கட்டுப்பாடும் அமைதியும் அவர்களைச் செயலற்றவர்களாக மாற்றுகிறது. வேறொரு ஊரிலிருந்து தொழிலாளர்களை அழைத்துவந்து வேலை செய்யவைக்கப் போவதாக மிரட்டுகிறார்கள். ஆனாலும் தொழிலாளர்களின் உறுதி சிறிதளவும் குறையவில்லை. ஒருநாள் முதலாளிகளின் ஏற்பாட்டில் அயலூரைச் சேர்ந்த தொழிலாளிகள் தோட்டத்துக்கு வந்து சேர்கிறார்கள். அப்போதும் மனம் துவளாத தொழிலாளர்கள் சிறிதும் பின்வாங்காமல் தோட்டத்தைச் சுற்றி நின்றிருக்கிறார்கள்.

அதைக்கண்டு பொறுமையிழந்த முதலாளிகள் டிராக்டர்களை வரவழைத்து எந்திர முறத்தில் மணலை நிறைத்து தொழிலாளர்கள் மீது வீசி அவர்களைக் கலைக்க முயற்சி செய்கிறார்கள். தொடர்ச்சியாக வீசப்பட்டுக்கொண்டே இருக்கும் மணலால் தொழிலாளர்கள் நிலைகுலைந்து தடுமாறிய போதும் அந்த இடத்திலிருந்து நகரவில்லை. அவர்கள் மன உறுதியோடு அதே இடத்தில் நிற்கிறார்கள். வேலை வாய்ப்பை நம்பி அந்த இடத்துக்கு வந்த புதிய தொழிலாளர்களுக்கு அந்தச் செயல்பாடு பிடிக்கவில்லை. அந்தத் துன்பத்தை அமைதியாக ஏற்றுக்கொள்ளும் உள்ளூர்த் தொழிலாளர்களின் மனவலிமையைப் பார்த்து மனமாற்றம் கொள்கிறார்கள். முதலாளிகளின் போக்குக்கு தம் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக அங்கிருந்து வெளியேறிவிடுகிறார்கள். அதைத் தொடர்ந்து முதலாளிகள் உள்ளூர்த் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தைக்கு இறங்கிவருகிறார்கள். இறுதிக்கட்டமாக ஊதிய உயர்வு உறுதி செய்யப்படுகிறது.

போலந்து நாட்டில் எண்பதுகளில் லெனின் கப்பல் தளத்தில் ஒற்றுமை இயக்கம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட தொழிற்சங்கத்தைப்பற்றியும் தொழிலாளர்களின் உரிமைக்காகவும் சமுதாய மாற்றத்துக்காகவும் வன்முறையற்ற வழியில் போராடியதைப்பற்றியுமான ஒரு சித்திரத்தை முனைவர் சேது ராக்காயியின் கட்டுரையில் காணமுடிகிறது. அப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கி நடத்திய லெச் வாலிசா பிற்காலத்தில் அவரிடம் நிகழ்த்தப்பட்ட ஒரு நேர்காணலில் காந்தியடிகளின் வழிமுறையே தன் மனசாட்சிக்கு வழிகாட்டியது என்று குறிப்பிடுகிறார். அக்குறிப்பைப் படிக்கும்போது ஒரு வாசகராக நான் அடைந்த மன எழுச்சி மகத்தானது.

கென்யாவில் வங்காரி மத்தாய் என்பவரின் தலைமையில் நடைபெற்ற பசுமைப்பட்டை இயக்கத்தின் செயல்பாடுகளை சண்முக. ஞானசம்பந்தனின் கட்டுரை வழியாக அறிந்துகொள்ள முடிகிறது. கென்யாவில் பெரும்பண்ணைகள் உருவாக்கத்துக்காக தொடர்ச்சியாக நிகழ்ந்த காடு அழிப்பும் மண்ணரிப்பும் கிராமங்களில் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. மேய்ச்சல் நிலம் இல்லாமல் கால்நடைகளை வளர்ப்பது இயலாத செயலாகிவிடுகிறது. இயற்கையாக கிடைத்துக்கொண்டிருந்த விறகுகள் இல்லாமல் குடும்பப்பெண்கள் எங்கெங்கோ அலைகிறார்கள். பண்ணைகளில் பயன்படுத்தப்பட்ட பூச்சிக்கொல்லிகளால் குடிநீர் மாசடைந்து புதுப்புது நோய்கள் பரவத் தொடங்குகின்றன.

நிலவியல் சமநிலையில் ஏற்பட்ட மாற்றங்களையும் விளைவுகளையும் நேரில் பார்த்து வருந்திய மத்தாய் தான் ஏற்றிருந்த பேராசிரியர் பணியைத் துறந்து அழிந்த காடுகளை மீண்டும் உருவாக்கும் மாபெரும் கனவோடு தன் முயற்சியைத் தொடங்குகிறார். தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் ஒன்பது செடிகளை நட்டு வளர்க்கத் தொடங்கிகுகிறார். இதுதான் பசுமைப்பட்டை இயக்கத்தின் தொடக்கம். மெல்ல மெல்ல அது நாடெங்கும் வளர்ச்சியுற்ற விதம் வியப்பளிப்பதாக உள்ளது.

கென்யத் தலைநகரான நைரோபியில் மையப்பகுதியாக உள்ள ஒரு பூங்காவின் நடுவில் அறுபத்திரண்டு மாடி கொண்ட ஒரு மாபெரும் கட்டிடத்தையும் நூறடி உயரத்துக்கு ஒரு மாபெரும் சிலையையும் அமைப்பதற்கு அரசு திட்டமிடுகிறது. பூங்கா அழிப்பைத் தடுக்கும் வகையில் மத்தாய் ஒரு போராட்டத்தை ஒருங்கிணைக்கிறார். வன்முறையற்ற வழியில் அவர் முன்னெடுத்த அப்போராட்டம் பல ஆண்டுகள் நீண்டு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எல்லையற்ற துன்பங்களையும் இறுதியில் வெற்றியையும் அளித்த வரலாற்றின் சித்திரம் ஞானசம்பந்தனின் கட்டுரையில் மிகச்சிறப்பான முறையில் பதிவாகியுள்ளது.

காந்திய வழிமுறை என்பது சமூகத்தை இயக்கும் அடிப்படை விசைகளில் ஒன்றாக மாறியிருப்பதை இத்தொகுதியின் கட்டுரைகள் நமக்கு உணர்த்துகின்றன. ஜப்பான், தென்கொரியா, போர்ச்சுக்கல், டென்மார்க், உக்ரைன் என உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வெற்றிகண்ட போராட்டங்களைப்பற்றிய தகவல்களயெல்லாம் கட்டுரையாசிரியர்கள் திரட்டித் தொகுத்து வழங்கியிருக்கின்றார்கள். ஒருசேர அவற்றைப் படிக்கும்போது, இதன் தொடக்கவிசையாக இருந்த காந்தியடிகள் நம் மண்ணில் வாழ்ந்தவர் என்பதையும் காந்திய வழியில் அடைந்த முதல் வெற்றி நம் மண்ணில் நிகழ்ந்தது என்பதையும் நினைத்து ஒருவித நிறைவில் மனம் நெகிழ்ச்சியடைகிறது.

காந்திய வழிமுறை என்பது காந்தியடிகளிடமிருந்து தொடங்கி இன்று உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பல தலைவர்கள் வழியாக அமைதியாக செழித்தோங்கி வளர்ந்து நிற்கிறது. அந்த வழிமுறையின் அடிப்படையாக உள்ள அறம் சார்ந்த உறுதியான பற்றுதான் அதற்குக் காரணம். அது தன்னையும் அறம் சார்ந்தவனாக தகவமைத்துக்கொள்கிறது. மாற்றுத்தரப்பினரையும் அந்த அறம் நோக்கி காந்தமென ஈர்த்து நிலைநிறுத்துகிறது. அறத்துக்கு அழிவில்லை என்பதும் அறமே இறுதியில் வெல்லும் என்பதும் சமூக நீதி.

எந்த நோக்கத்துக்காக இரு தரப்பினரும் உரையாடலைத் தொடங்குகிறார்களோ, அந்த நோக்கத்துக்கு வெற்றி கிடைக்கிறது என்பது அறப்போரின் முதல் விளைவு. அவர்கள் சார்ந்திருக்கும் அறம் அவர்களை சிறந்த மனிதர்களாக மாற்றிவிடுகிறது என்பது துணைவிளைவு. காந்திய வழிமுறையால் விளையும் இத்தகு அபூர்வமான விளைவு வேறு எந்த வழிமுறையிலும் இல்லாத ஒன்று.

இன்றைய இணையகாலத் தலைமுறையினருக்கு இந்தப் புத்தகம் ஒரு முக்கியமான கையேடு. இப்புத்தகத்தின் கட்டுரையாசிரியர்கள் இந்தியாவுக்கு அப்பால் உலகெங்கும்  காந்திய வழிமுறையால்  பெற்ற வெற்றிகளையும் விளைவுகளையும் ஒருசேரத் தொகுத்து வழங்கியிருக்கிறார்கள். கட்டுரையாசிரியர்களுக்கும் தொகுப்பாசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

 

(முனைவர் சு.முத்துஇலக்குமி, அ.அன்னாமலை, முனைவர் தா.ஜான்சி வனிதாமணி ஆகிய மூவரும் பதிபாசிரியர்களாகச் செயல்பட்டு உருவாக்கிய ‘காந்திக்குப் பின்பு உலக அளவில் நடைபெற்ற வன்முறையற்ற போராட்டங்கள்’ தொகுதிக்காக எழுதப்பட்ட அணிந்துரை)

(சர்வோதயம் மலர்கிறது – ஜூலை 2024)