தென்னாப்பிரிக்காவிலிருந்து 09.01.1915 அன்று காந்தியடிகள் இந்தியாவுக்குத் திரும்பிவந்தார். பிறகு கோகலேயின் ஆலோசனைப்படி இந்தியாவின் நிகழ்முறைகளைப் புரிந்துகொள்வதற்காக ஓராண்டுக் காலம் தேசமெங்கும் சுற்றுப்பயணம் செய்தார். அப்பயணத்தின் தொடர்ச்சியாக லக்னோ நகருக்கு வந்து 1916ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அம்பிகாசரண் மஜூம்தார் தலைமையில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் சம்பாரண் விவசாயிகளின் துன்பங்களை முன்வைத்துப் பேசுவதற்காகச் சென்ற ராஜ்குமார் சுக்லா காந்தியடிகளைச் சந்தித்து சம்பாரணுக்கு வருமாறு கேட்டுக்கொண்டார். விரைவில் கல்கத்தாவுக்கு வரவிருப்பதாகவும் அப்போது சம்பாரணுக்கு வருவதாகவும் சுக்லாவுக்கு வாக்களித்தார் காந்தியடிகள்.