Home

Sunday 25 August 2024

நீதிக்குத் தவித்த நெஞ்சம்

 

நாம் படிக்கும் புத்தகங்கள் பலவிதமானவை. சில புத்தகங்கள் வாழ்வனுபவங்களின் இனிமையான நினைவுகளை முன்வைப்பவையாக இருக்கும். சில புத்தகங்கள் வாழ்வின் கரடுமுரடான பக்கங்களையும் அவற்றை வெல்லும்பொருட்டு மானுடன் எடுக்கும் முயற்சிகளையும் சித்தரிப்பவையாக இருக்கும். சில புத்தகங்கள் வாழ்வின் புதிர்களை விடுவித்துக்காட்டும். வேறு சில புத்தகங்கள் வரலாற்றின் பின்னணியில் மனிதகுலம் சந்தித்த ஏற்றங்களையும் தாழ்வுகளையும் தொகுத்துக்காட்டி சில மதிப்பீடுகளை வாசகர்கள் மனத்தில் உருவாக்க முயற்சி செய்யும். இன்னும் சில புத்தகங்கள் வாசகர்களை உடனடியாக பதற்றம்கொள்ளச் செய்யும். அமைதியிழக்கச் செய்யும். பாத்திரங்களின் வலியையும் வேதனையையும் தாமும் உணர்ந்து துக்கத்தில் ஆழ்த்தும். மீளாத் துயரிலிருந்து மானுடனை மீட்டெடுப்பதற்காக உருவான அரசியல் அமைப்பும் நிர்வாகமும் மற்ற வேறுவேறு துறைகளும் எதிர்மறையான விதத்தில் அதே மானுடனை புழுவினும் கீழாக மதித்து நசுக்கி தான்தோன்றித்தனமான விதத்தில் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டதைப் படம்பிடித்துக் காட்டும். பேராசிரியர் டி.வி.ஈச்சரவாரியார் மலையாளத்தில் எழுதி, தமிழில் குளச்சல் மு.யூசுப் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ‘ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள் ‘ இறுதியாகக் குறிப்பிட்ட வகையைச் சார்ந்த புத்தகமாகும்.

இப்புத்தகம் இரு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் மகனைக் கண்டடைவதற்காக ஒரு தந்தை மேற்கொண்ட முயற்சிகளையும் அலைச்சல்களையும்பற்றிய உருக்கமான குறிப்புகள் உள்ளன. இரண்டாம் பிரிவில் அவர் தொடுத்த ஆள்கொணர்வு மனுவின்மீது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முழுவடிவமும் இடம்பெற்றுள்ளது.

நினைவுக் குறிப்புகளின் சாரம் இதுதான். 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தியால் தேசமெங்கும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதிகாரிகளுக்கு வானளாவிய சுதந்தரம் வழங்கப்பட்டது. குடிமக்கள் வாய்ப்பூட்டு போடப்பட்ட விலங்குகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஒரு வேட்டை மிருகத்தைப்போல சட்டம் தன்னிச்சையாக எல்லாத் திசைகளிலும் பாய்ந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் தண்டிக்கத் தொடங்கியது. அந்த நாட்களில் கேரளத்தில் பொறியியல் கல்லுாரி மாணவனாக இருந்த ராஜன் என்பவன் காவல் நிலையமொன்றில் துப்பாக்கியொன்று காணாமல்போன வழக்கில் கைது செய்யப்பட்டான். கல்லுாரி ஆண்டு விழாவில் நாடகமொன்றில் பங்கேற்றுவிட்டு, சிரிப்பும் மகிழ்ச்சியுமாக நண்பர்களுடன் கல்லுாரிப் பேருந்திலேயே விடுதிக்கு வந்து இறங்கியவனை எக்காரணமும் சொல்லாமல் கைது செய்து அழைத்துச் சென்றார்கள் காவலர்கள். நகர ஆய்வு பங்களாவில் குழுமியிருந்த விசாரணைத்துறை அதிகாரிகள் மிருகத்தனமான முறையில் அவனை சித்தரவதை செய்தனர்.

மகன் கைதான செய்தியைக் கேள்விப்பட்டு தேடிவந்த தந்தையை அலைக்கழித்ததுகாவல்துறை. அப்படி ஒரு கைது நடக்கவே இல்லை என்று சாதித்தது. பிறகு விசாரணைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக பொய்சொன்னது. அப்புறம் விசாரணையின் பொழுதே தப்பியோடிவிட்டதாக கதை கட்டியது. அவனோடு சேர்ந்து கைதுசெய்யப்பட்டு விசாரணையின்பொழுது வதைக்கு ஆளாகி விடுதலையான மற்ற மாணவர்கள்மூலமாகத்தான் உண்மையான செய்தி தெரியவந்தது. உருளைக்கட்டையால் தாக்கப்பட்ட அடி தாளாமல் மயக்கமுற்று கீழே விழுந்த ராஜன் இறந்துபோனதாகவும் அவன் உடலை காவல்துறையினர் அப்புறப்படுத்தியதாகவும் அவர்கள்தாம் சொன்னார்கள். அந்தச் சமயத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று தொடர்ந்து சாதித்தது காவல்துறை. நெருக்கடி நிலைச் சட்டம் அமுலில் இருந்த இரண்டரை ஆண்டுக்காலமும் இதே பொய்யை வெவ்வேறு விதத்தில் சொல்லிக்கொண்டிருந்தது காவல்துறை.

நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டதும் நீதமன்றத்தில் பதிவுசெய்யப்பட்ட ஆள்கொணர்வு மனுவுக்குப் பிறகுதான் காவல்துறையின் வாயிலிருந்து சற்றே உண்மை கசிந்தது. அதற்கு முக்கியக் காரணம் வழக்கின்போது சாட்சியங்கள் காட்டிய மனவலிமை. மற்றொரு காரணம் ராஜன் கொலைப்பட்ட செய்தி மெள்ளமெள்ள விஸ்வரூபமெடுத்து மாநிலம் தழுவிய கொந்தளிப்பாக உருமாறிவிட்டதாகும். கசிந்து வெளி ப்படும் சிறுசிறு தகவல்கள் உருவாக்கும் அதிர்ச்சிகளையே தாங்கிக்கொள்ள முடியவில்லை. நாம் வாழ்வது நாகரிகமுற்ற நவீன காலத்திலா அல்லது காட்டுமிராண்டிகள் வாழ்ந்த கற்காலத்திலா என்னும் கசப்பைப் படர வைக்கிறது.

மகனுடைய கைதிலும் மரணத்திலும் அடங்கியிருந்த மர்மத்தை வெளிக்கொணரவும் பசிதாளாத அந்த மகனுடைய முகத்தை ஒருமுறையாவது கண்குளிரக் காணவும் ஒரு தந்தை மேற்கொண்ட தளராத முயற்சிகள் நூல்முழுக்க உருக்கமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு முயற்சியும் திக்குத்தெரியாத காட்டில் முடிவடைந்துவிடும் சிறு தடங்களாகவே மாறிவிடுகின்றன. எங்கும் அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் அவர் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர். கல்லூரிப் பேராசிரியர். அதிகாரத்தின்முன் நுட்பத்துடன் பேசத் தெரிந்தவர். அமைச்சரோடும் முதலமைச்சரோடும் நேருக்கு நேர் சந்தித்து மனக்குறைகளை வெளிப்படுத்தும் வழியறிந்தவர். அப்படி இருந்தும் சட்டத்தின் இரும்புக்கதவுகளைத் திறக்க அவரால் முடியவில்லை. காவல் துறையின் வாயிலிருந்து உண்மையை வெளிக்கொணர இயலவில்லை. ஒவ்வாரு முறையும் துக்கத்துடன் சோர்ந்துபோகிறார். படிப்பவர்கள் மனமுருகிக் கரையும்வகையில் அவர் தன் துன்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் விதம் அமைந்துள்ளது. இந்த உலகத்தையே கரைக்கிற கண்ணீரால் காவல்துறையின் நெஞ்சைக் கரைக்க இயலாமல் போனது துரதிருஷ்டவசமானது.

ஈச்சரவாரியார் எழுதிச் செல்லும் பல குறிப்புகள் மனத்தில் ஆழமாக இடம்பிடித்துக்கொள்கின்றன. தன் மகன் கைது செய்யப்பட்டு மரணமடைந்துவிட்ட செய்தியை கொஞ்சமும் அறிந்துகொள்ள இயலாத அளவுக்கு மனநோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோன ராஜனின் தாயாரைப்பற்றிய குறிப்புகள் முக்கியமானவை. மரணத்துறுவாயில் மகனுக்காக சேர்த்துவைத்த உண்டியல் பணத்தை பாதுகாப்பாக மகனிடம் சேர்ப்பிக்கும்படி கோரிக்கை வைத்தபடி அவர் உயிர் பிரிகிறது. காணாமல் போன மகனைத் தேடுவதற்கு எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்காமல் அக்கறையின்றி சும்மா இருப்பதாக குற்றம் சாட்டுகிற மனைவியின் முன் உண்மையைச் சொல்ல இயலாத தவிப்போடும் சகலத்தையும் தன்னோடு பகிர்ந்துகொள்கிற ஒரு மனைவியிடம் பெற்ற பிள்ளையைப்பற்றிய செய்தியை மரணப்படுக்கையில்கூட வெளிப்படையாகச் சொல்லிப் பகிர்ந்துகொள்ள முடியாத குற்ற உணர்வோடும் அவர் தத்தளிக்கும் தருணங்கள் எந்த வாசகனாலும் எளிதில் கடந்துவிட முடியாதவை. ராஜனால் பசியைத் தாங்கிக்கொள்ளவே முடியாது. அவன் பசியென்னும் காட்டுத் தீயில் வெந்து நீறாகியிருக்கிறான். சாவதற்கு முன் தன் தாயின் கையிலிருந்து ஒரு கவளச் சோறு வாங்கியுண்ண அவனால் இயலவில்லை. இறந்த பிறகும் கூட ஆன்மாவின் பசியைப் போக்க அன்புடன் ஒரு கவளம் சோறு அவனுக்கு பலியாக அர்ப்பணம் செய்ய முடியவில்லை என்று வேதனை தாளாத ஒரு தந்தையின் கண்ணீரை யாருடைய விரல்களாலும் துடைத்துவிட முடியாது. பதினேழு பகுதிகளாக பிரித்து வெவ்வேறு தலைப்

புகளில் எழுதப்பட்டிருக்கும் இக்குறிப்புகள் நியாயத்துக்காக ஒரு தந்தை நிகழ்த்திய போராட்டத்தின் தடயங்களைக் கொண்டுள்ளன.

கைதுபற்றிய புதிரின் முடிச்சு மெல்லமெல்ல அவிழும்போது அதிகாரிகள் மீதும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற எல்லா அதிகாரங்களின்மீதும் மிக இயல்பாகவே எரிச்சலும் கோபமும் ஏற்படுகின்றன. காணாமல் போன காவல் நிலையத் துப்பாக்கி வழக்கில் தேடப்படும் நபரின் பெயர் ராஜன். தனது துரித நடவடிக்கைகளால் ராஜன் பிடிபட்டான் என்று மீசையை முறுக்கிக்கொள்ளவும் மேலதிகாரிகளை அமைதிப்படுத்தவும் தேடவேண்டிய ராஜனுக்குப் பதிலாக கைக்கு எட்டிய யாரோ ஒரு ராஜனை அழைத்துக்கொண்டு வந்து விசாரணைாயத் தொடங்குகிறது காவல்துறை. தன் களங்கத்தைத் துடைத்துக்கொள்வதற்காக அப்பாவியைக் களங்கப்படுத்தி வதை செய்து மரணக்குழியில் தள்ளிவிடுகிறார்கள். எவ்வளவு பெரிய அபத்தம். ஒரு மரணம் காவல் துறையைப் பொருத்தமட்டில் ஒரு சாதாரணப் புள்ளிவிவரத்தகவல் மட்டுமே. ஆனால் பெற்று வளர்த்து ஆயிரம் கனவுகளோடு கல்லுாரிக்கு அனுப்பிவைக்கும் ஒரு குடும்பத்துக்கு அது நினைத்துக்கூட பார்க்கமுடியாத பேரிழப்பு.

நெருக்கடி கால நிலையின் சரித்திரம் நிகழ்ந்து கால்நூற்றாண்டு கடந்துவிட்டது. அன்று நடந்த நூற்றுக்கணக்கான விபரீத சம்பவங்களின் படிமமாக ராஜன் கொலை வழக்குக் குறிப்புகள் அமைந்துவிட்டன. தந்தையைப் பிரிந்த மகனும் மகனைப் பிரிந்த தந்தையும் கணவனைப் பிரிந்த மனைவியும் மனைவியைப் பிரிந்த கணவனுமாக ஆயிரக்கணக்கானோர் அந்தத் தருணத்தில் பலியானார்கள். அதிகாரத்தின் ரத்த வேட்டையில் அவர்களுடைய உயிர் பறிக்கப்பட்டது. அன்றைய ஏடுகள் அக்காலகட்டத்தை இருண்ட காலம் எனவும் இரண்டாவது சுதந்தரப் போராட்டக்காலம் எனவும் எழுதின. தமக்கு எதிராக ஒரே ஒரு சின்ன முனகல் சத்தம்கூட கேட்டுவிடாதபடி சர்வஜாக்கிரதையாக அனைவாரயும் சிறையில் அடைத்து மெளனம் சாதித்தது அரசு. அக்கொடுமைகளுக்குத் துணைநின்று சேவகம் செய்தது காவல்துறை. தட்டிக் கேட்கவேண்டிய அரசியல் தலைவர்கள் இரவோடு இரவாக சிறைப்படுத்தப்பட்டனர். காவல்துறையினரின் கொடுமைக்குள்ளானவர்களும் அக்கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியாதமல் மரணத்தைத் தழுவியவர்களின் பெற்றோர்களும் உற்றோர்களும் ராஜனுடைய தந்தையார் எழுதிய குறிப்புகளைப் போல எழுதிக் குவித்தால் அவை ஒருகோடிப் பக்கங்களுக்கும் மேலாகக்கூடும். கறைபடிந்த காவல்துறையின் வரலாறாகவும் தன்னல அரசியல்வாதிகளின் நாற்காலிக் கனவுகளின் வரலாறாகவும் அவை அமையக்கூடும்.

கேரளத்தில் ராஜன் கொலை வழக்கு ஒரு சமூக இயக்கமாகவே நடைபெற்றது என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும். இடதுசாரி அமைப்பினரின் தொடர்முயற்சியால்தான் இது சாத்தியமாயிற்று என்பதையும் கவனிக்கவேண்டும். கேரளத்தில்மட்டுமல்ல, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் முக்கியமான ஒரு பிரச்சனையை முன்வைத்து அவற்றை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்து ஒரு விழிப்புணர்ச்சியை மக்களிடையே உருவாக்கிப் போராட அந்த அமைப்பு மேற்கொண்ட / மேற்கொள்ளும் பெருமுயற்சிகள் மிகமுக்கியமானவையே. ஒரு கால் நுாற்றாண்டுக் காலத்துக்குப் பிறகு அன்று நடந்ததை இன்று நினைத்துப் பார்க்கும்போது நெஞ்சம் விம்முகிறது. யாரை எதிர்த்து, இப்படி ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோ அவர்களோடேயே கைகோர்த்து நிற்கும் அவலச்சூழலில் அந்த அமைப்புகள் திகழ்வதைக் கண்டு மனம் வேதனையில் மூழ்குவதைத் தவிர்க்கமுடியவில்லை. இதே வேதனையை இந்த நூலுக்கு முன்னுரையை எழுதிய கவிஞர் சுகுமாரனும் முன்வைத்து எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. துணைநிற்க கைகளே இல்லாத தனிமையின் துயரில் நீதியும் நியாயமும் கலங்கி நின்று பெருமூச்சு விடுவது யாருடைய காதிலாவது விழுமா ?

( ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்- ராஜன் கொலை வழக்கு . பேராசிரியர் டி.வி. ஈச்சரவாரியர். தமிழில் குளச்சல் மு.யூசுப். காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோயில். விலை. ரூ.100)

 (திண்ணை இணைய இதழில் 17.02.2006 அன்று எழுதிய புத்தக அறிமுகக்கட்டுரை. இங்கு மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது. )