நாம் படிக்கும் புத்தகங்கள் பலவிதமானவை. சில புத்தகங்கள் வாழ்வனுபவங்களின் இனிமையான நினைவுகளை முன்வைப்பவையாக இருக்கும். சில புத்தகங்கள் வாழ்வின் கரடுமுரடான பக்கங்களையும் அவற்றை வெல்லும்பொருட்டு மானுடன் எடுக்கும் முயற்சிகளையும் சித்தரிப்பவையாக இருக்கும். சில புத்தகங்கள் வாழ்வின் புதிர்களை விடுவித்துக்காட்டும். வேறு சில புத்தகங்கள் வரலாற்றின் பின்னணியில் மனிதகுலம் சந்தித்த ஏற்றங்களையும் தாழ்வுகளையும் தொகுத்துக்காட்டி சில மதிப்பீடுகளை வாசகர்கள் மனத்தில் உருவாக்க முயற்சி செய்யும். இன்னும் சில புத்தகங்கள் வாசகர்களை உடனடியாக பதற்றம்கொள்ளச் செய்யும். அமைதியிழக்கச் செய்யும். பாத்திரங்களின் வலியையும் வேதனையையும் தாமும் உணர்ந்து துக்கத்தில் ஆழ்த்தும். மீளாத் துயரிலிருந்து மானுடனை மீட்டெடுப்பதற்காக உருவான அரசியல் அமைப்பும் நிர்வாகமும் மற்ற வேறுவேறு துறைகளும் எதிர்மறையான விதத்தில் அதே மானுடனை புழுவினும் கீழாக மதித்து நசுக்கி தான்தோன்றித்தனமான விதத்தில் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டதைப் படம்பிடித்துக் காட்டும். பேராசிரியர் டி.வி.ஈச்சரவாரியார் மலையாளத்தில் எழுதி, தமிழில் குளச்சல் மு.யூசுப் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ‘ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள் ‘ இறுதியாகக் குறிப்பிட்ட வகையைச் சார்ந்த புத்தகமாகும்.