Home

Sunday 18 August 2024

கலைச்செல்வியின் கதைகள் – இரண்டு பின்னல்கள்

 

சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் ஒரு கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் பேசுபொருளாக விளங்கும் புகழ்பெற்ற ஓவியங்களின் புகைப்படங்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. எல்லாமே பைபிள் கதைகளை மையமாகக் கொண்டவை. புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு சார்ந்த பல தருணங்களையே அந்த ஓவியங்கள் முன்வைத்திருந்தன. லியோனார்டோ டாவின்சி, மைக்கேல் ஏஞ்செலோ, பெலினி, எல் கிரெசோ என உலகப்புகழ் பெற்ற ஓவியக்கலைஞர்கள் தீட்டிய ஓவியங்கள். ஒருவகையில் உலக ஓவிய வரலாற்றை அந்தப் படங்களைக்கொண்டே ஒரு பார்வையாளரால் ஓரளவு புரிந்துகொள்ள முடியும். இருபது முதல் இருபத்தைந்து படங்கள் மட்டுமே போதிய இடைவெளியுடன் அந்தக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தன.

ஆட்டுக்குட்டியை கையில் ஏந்தியிருக்கும் இயேசு, கன்னிமேரி ஏந்தியிருக்கும் குழந்தை இயேசு, மார்த்தா வீட்டு விருந்துக்குச் செல்லும் இயேசு, தச்சுவேலையில் ஈடுபட்டிருக்கும் தந்தைக்கு அருகில் நிற்கும் சிறுவன் இயேசு, கல்வாரி மலையில் சிலுவையை சுமந்து நடக்கும்போது தடுமாறி விழும் இயேசு, சீடர்களுடன் இறுதிவிருந்தில் கலந்துகொள்ளும் இயேசு, சிலுவையில் அறையப்பட்டு தொங்கும் இயேசு என எல்லாமே இயேசுவை மையமாகக் கொண்ட ஓவியங்கள். பைபிள் கணங்களையே ஓவியர்கள் ஓவியங்களாக தீட்டியிருந்தார்கள். ஒவ்வொரு ஓவியத்துக்கும் பின்னணியாக ஒரு கதை இருந்தது.

எல்லா ஓவியங்களையும் பார்த்த பிறகு கூட, அந்தக் கண்காட்சிக் கூடத்தைவிட்டு வெளியே வரவே மனசில்லை. இன்னொரு சுற்று நடந்து ஒவ்வொரு படத்தையும் மீண்டும் பார்த்தேன். இயேசுவின் கண்களின் நிறைந்திருக்கும் கருணையையும் அமைதியையும் பார்க்கப்பார்க்க மனம் நெகிழ்ந்தபடியே இருந்தது. இறைவனே மானுடனாகப் பிறந்து தமக்குச் சேவை செய்வதை உணராமல், அவரைக் கொல்ல அதிகாரச் செருக்குடன் சிலுவையைச் சுமக்க வைத்து அழைத்துச் செல்லும் கொடுமையை முகம் சுளிக்காமல் பார்க்க முடியவில்லை. ஒருசில கணங்களில் மனிதர்கள் எந்த அளவுக்கு அற்பத்தனமாக நடந்துகொள்கிறார்கள் என நினைத்தபோது வேதனையாக இருந்தது. ஒருபக்கம் அன்பே உருவாக இயேசு. மறுபக்கம் அவரைக் கொல்வதையே தலையாய கடமையெனக் கொண்ட மானுடர். ஒரு கலைஞன் இந்தக் கொடுமையை எங்கு போய் சொல்லமுடியும்? தனக்குத் தெரிந்த கலை வழியாக அதை வெளிப்படுத்துவது மட்டுமே அவனுக்குத் தெரிந்த ஒரே வழி. அதைத்தான் அந்த ஓவியர்கள் நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்கள்.

வீட்டுக்குத் திரும்பி வரும்போதும் கூட அந்த ஓவியங்களையே நினைத்துக்கொண்டு வந்தேன். ஏற்கனவே பைபிளில் இருக்கும் செய்திதானே என அந்த ஓவியர்கள் நினைக்கவில்லை. அச்செய்திக்கு ஒரு கலைவடிவம் கொடுத்து காலத்தில் நிரந்தரமாக்கிவிட்டனர் அவர்கள். ஒருவரல்லர், இருவரல்லர், உலகெங்கும் நூற்றுக்கணக்கான ஓவியர்கள் அக்கணங்களை மீண்டும் மீண்டும் தீட்டியிருக்கிறார்கள்.

எந்த நாடாக இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட மொழி பேசும் சூழலாக இருந்தாலும் சரி, அடிப்படையான சில உண்மைகள் ஒருபோதும் மாறாதவை. அவற்றை மீண்டும் மீண்டும் மானுட சமூகத்துக்கு நினைவூட்டியபடியே இருக்கவேண்டியிருக்கிறது. இயேசு ஓவியங்கள் மீண்டும் மீண்டும் தீட்டப்பட்டு, மீண்டும் மீண்டும் பார்வையாளர்கள் முன்னால் வைக்கப்படுவதற்கு அதுதான் காரணமாக இருக்கவேண்டும்.

ஓவியங்கள் மட்டுமல்ல, பைபிள் தருணங்கள் கதைகளாகவும் உலகெங்கும் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டுவந்திருக்கின்றன. ஒவ்வொரு தலைமுறையிலும் யாராவது ஒரு எழுத்தாளர் அவற்றை புதிய தலைமுறை வாசகர்களை நோக்கி முன்வைத்தபடியே இருக்கிறார். பொது சமூகம் சொந்தமாக வாசித்து அறியும் பழக்கத்துக்கு வந்ததுமே லியோ தல்ஸ்தோய் ரஷ்ய மொழியில் சிறுவர்களுக்கான பைபிள் கதைகளை எழுதினார். இந்தியாவிலும் இத்தகு கதைத்தொகுதிகள் வெளிவந்து ஏராளமான வாசகர்களைச் சென்றடைந்தன.  புத்தர் வாழ்க்கை சார்ந்த கருத்துகளும் இத்தகு கலைமுயற்சிகள் வழியாகவே தலைமுறை தலைமுறையாக மனிதர்களிடையில் இன்றுவரை நீடித்துவருகின்றன.

தமிழ்ச்சூழலிலும் இத்தகு தொடர் கலைமுயற்சிகளுக்கான எடுத்துக்காட்டுகள் உண்டு. இரண்டாயிரம் ஆண்டுகளாக திருக்குறள் நம் சமூகத்தில் நீடித்திருக்கும் வழிவகைகளைத் தொகுத்துப் பார்த்தால் அது புரியும். தொடக்கத்தில் திருக்குறள் கருத்தை மையமாகக் கொண்ட தனிப்பாடல்கள் உருவாகின. பிறகு ஓவியங்களும் சிற்பங்களும் உருவாகின. கடந்த நூற்றாண்டில் மேடையுரைகளில் குறள்வழிக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. பொது இடங்களிலும் பொதுப் பேருந்துகளிலும் திருக்குறள் வரிகள் எழுதிவைக்கப்பட்டன. ‘அன்பும் அறனும் உடைத்தாயின் பண்பும் பயனும் அது’ என திருமண அழைப்பிதழ்களை அச்சிட்டு வழங்கும் பழக்கம் இன்று நிலைத்துவிட்டது. நிலைத்த உண்மைகள் என்றபோதும், புதிய தலைமுறைகளின் ஆழ்நெஞ்சில் பதியும்வண்ணம் மீண்டும் மீண்டும் தெரிவிக்கவேண்டிய தேவை இருக்கிறது.

கலைச்செல்வி எழுதியிருக்கும் காந்தி கதைகளின் தொகுதிக்கான முன்னுரையில் இந்தச் செய்திகளையெல்லாம் குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. காந்தியடிகள் மறைந்து எழுபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. காந்தியடிகளின் பெயரை மட்டுமே அறிந்த புதிய தலைமுறையினர் இன்று வாழ்கிறார்கள்.  நடைமுறை ஆதாயங்களுக்காக  காந்தியப் பாதையிலிருந்து விலகி வாழ்ந்ததால் நாம் இழந்தது அதிகம் என நினைத்து குற்ற உணர்வு கொள்பவர்களும் இருக்கிறார்கள். காந்தியக்கருத்துகளை செல்லாக்காசுகள் என்று எள்ளி நகையாடுகிறவர்களும் இன்று நம்மிடையில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் நம் சூழலை நோக்கி காந்திய விழுமியங்களை முன்வைக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. நுண்ணோக்கி வழியாகப் பார்க்கும் ஓர் ஆய்வாளரப்போல நம் புரிதல்களின் எல்லையை விரித்தறிய காந்தியடிகள் சந்தித்த நெருக்கடியான தருணங்களை ஆய்வுக்குட்படுத்தி புதிய இடைவெளிகளைக் கண்டடையவேண்டியிருக்கிறது. அவற்றின் வழியாக புதிய உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

எழுத்தாளர் கலைச்செல்வி தம் இடைவிடாத வாசிப்பின் வழியாக காந்தியடிகளின் நடவடிக்கைகளை கண்முன்னால் நடைபெறும் ஒரு காட்சியை உற்றுப் பார்ப்பதுபோல ஆர்வத்துடன் பார்க்கிறார். கதைக்குப் பொருத்தமான கணங்களை ஆர்வத்துடன் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். காந்தியடிகளை மட்டுமல்ல, காந்தியடிகளைச் சுற்றி எப்போதும் இருந்த பல்வேறு ஆளுமைகளின் வாழ்க்கைவரலாற்றையும் படித்துத் தேர்ந்திருக்கிறார். அதனால் காந்தியடிகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் குறிப்பிடும்போது, அந்த நேரத்தில் அவரோடு இருந்தவர்கள் யார்யார் என்கிற விவரங்களை எல்லாம் துல்லியமாக அளிக்கிறார். அந்தப் புரிதல், காட்சியமைப்புக்கும் உரையாடல் அமைப்புக்கும் மிகுந்த உதவியாக இருக்கிறது. உடனடியாக ஒரு நம்பகத்தன்மையை அளிக்கிறது.

பயிற்சி வழக்கறிஞர்கள் பழைய வழக்குப்பதிவுகளை எடுத்துப் படிக்கும்போது ஒரு புதிய வெளிச்சத்தைக் கண்டு பரவசம் கொள்வதுபோல இச்சிறுகதைகளை எழுதும் தருணங்களில் கலைச்செல்வியும் ஒருசில இடங்களில் பரவசம் கொண்டிருப்பார் என்பதை உறுதியாகச் சொல்லமுடியும். அந்தப் பரவசம் எதிர்காலத்தில் அவர் பெறப் போகும் பல விருதுகளைவிட பெரிய ஒன்று. அது இவ்வுலகில் ஒருவராலும் அளிக்கமுடியாத ஒன்று. மிகப்பெரிய தரிசனம்.

தி.சு.அவினாசிலிங்கம் ‘நான் கண்ட காந்தி’ என்றொரு நூலை எழுதியிருக்கிறார். காந்தியடிகளோடு பழகிய நினைவுகளை அதில் பதிவு செய்துள்ளார். காந்தியடிகளின் தென்னாப்பிரிக்க ஆசிரமத்தில் கஸ்தூர் பா வுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்ற மிலி கிரகாம் போலக் காந்தியடிகளோடு பழகிய நினைவுகளை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார். இப்படி உலகெங்கும் வசிக்கும் நூற்றுக்கணக்கான ஆளுமைகள் காந்தியடிகளோடு பழகிய நினைவுகளை நூலெழுதிப் பதிவு செய்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். காந்தியடிகளின் மறைவுக்குப் பிறகு பிறந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாம். நமக்கு இந்த நூல்கள் வழியாகத் திரண்டெழும் உருவமே காந்தியடிகள். அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு அருகில் வாழ்ந்த மற்றவர்களைவிட, அவரைச் சீர்தூக்கிப் பார்த்து புரிந்துகொள்வதற்கு நமக்கு வாய்ப்புகள் அதிகம். கலைச்செல்வி அத்தகு வாய்ப்புகளைத் தேடிக் கண்டடைகிறார். கதைத்தருணத்தை ஒட்டி முன்னும் பின்னுமான உரையாடல்களை அமைத்து கதையைப் பின்னிச் செல்கிறார். அவருடைய படைப்பாளுமை அத்தருணத்தைக் கொஞ்சம்கொஞ்சமாக ஒரு படிமமாக மாற்றி இலக்கியவெளியில் நிலைநிறுத்துகிறது.  

இத்தொகுதியில் மிகமுக்கியமான ஒரு சிறுகதை ‘முகத்துவார நதி’. காந்தியடிகள் இந்தியாவுக்கு வந்த பிறகு முதன்முதலாக அவுரித்தொழிலாளர்கள் உரிமைக்காக நடத்திய சம்பாரண் சத்தியாகிரகத்தை ஒட்டிய சிறுகதை. லட்சுமணபுரியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக காந்தியடிகள் வருவதும் மாநாட்டில் அவரைச் சந்திக்கும் ராஜ்குமார் சுக்லா அவரிடம் அவுரி விவசாயிகளின் துயரங்களை எடுத்துரைப்பதுமான காட்சியிலிருந்து கதை தொடங்குகிறது. அவர் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் எல்லா விவசாயிகளையும் சந்தித்து உரையாடி தகவல் சேகரித்த முனைகிறார். காவல்துறை அவரைத் தடுத்து கைது செய்கிறது. அவரை நீதிமன்றத்துக்கு அழைத்து விசாரணை செய்யும் நீதிபதி அவருடைய வாதத்தைக் கேட்ட பிறகு அவர் மீது விதிக்கப்பட்ட தடையை விலக்குவதோடு கதை முடிவடைகிறது. ”என்னுடைய நாட்டில் நான் எங்கு போக வேண்டும், எங்கு போகக்கூடாது என்பதை ஒருசில ஆங்கிலேய அதிகாரிகள் முடிவெடுத்து எனக்கு உத்தரவிட முடியாது” என்ற எண்ணம் கொண்ட காந்தியடிகள் தம் வேலைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார்.

இது வரலாற்றில் நடைபெற்ற நிகழ்ச்சி. ஆனால் கலைச்செல்வி இந்த நிகழ்ச்சியை மட்டும் முன்வைக்கவில்லை. இத்துடன் பொருத்தமான வேறொரு கதையையும் இணைத்துக்கொள்கிறார். மூன்று சகோதரிகளை அடுத்துப் பிறந்த இளைஞன் கங்காதர். வீட்டில் அவனுக்கு திருமணம் முடிவுசெய்கிறார்கள். சகோதரிகள் அனைவரும் இளம்விதவைகள். வீட்டோடு இருப்பவர்கள். மிகச்சிறிய வீட்டில் இவர்களுக்கிடையில் புதுமணப்பெண்ணோடு இல்வாழ்க்கை நடத்த கங்காதருக்கு விருப்பமில்லை. ஆனால் அச்சம் காரணமாக அவரால் யாரிடமும் தன் மனத்திலிருப்பதை வெளிப்படையாகச் சொல்லமுடியவில்லை. அதனால் மணப்பெண்ணிடமும் சொல்லாமல் சகோதரிகளிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறி சம்பாரணுக்கு வந்து காந்தியடிகளைச் சந்திக்கிறார்.

காந்தியடிகளின் இடத்தில் வேறு எந்தத் தலைவர் இருந்தாலும் அவரை வரவேற்று போராடும் குழுவோடு இணைத்துக்கொள்வதுதான் உடனடியாக நிகழ்ந்திருக்கும். அதுதான் இயற்கை. ஆனால் காந்தியடிகள் அவரிடம் விசாரணை நடத்துகிறார்.  அவரைப்பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்கிறார். வாழ்விழந்த சகோதரிகளுக்கு நடுவில் வாழ விரும்பாமல் வெளியேறிய அந்த இளைஞனுடைய நிலைபாட்டை அவர் பாராட்டவில்லை. மூன்று பெண்களுக்காக நான்காவதாக ஒரு பெண்ணை பலி கொடுத்துவிட்டதாகவே சொல்கிறார் காந்தியடிகள். எங்கு செல்லவேண்டும், எங்கு செல்லக்கூடாது என முடிவெடுக்கிற உரிமை தன்னைப்போலவே அந்த இளைஞனுக்கும் இருக்கிறது என்பது  காந்தியடிகளுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆனால் அந்த இளைஞர் தன் முடிவை ஒரு ஆவேசத்தின் வெளிப்பாடாக செயல்படுத்தினாரே தவிர. விரிவான கலந்துரையாடலின் விளைவாக தன் முடிவை அவர் அடையவில்லை.

முகத்துவார நதியில் எப்போதும் வண்டல் புரண்டுவரும். நதியோடு வந்து ஒதுங்கும் வண்டல் அருகிலிருக்கும் பள்ளத்தை மேடாக்கும். மேட்டையும் பள்ளமாக்கும் என்பதை நாம் புரிந்துகொண்டால் தன்னை நாடிவரும் ஒவ்வொருவரையும் புடம்போட்ட தங்கமாக மாற்றுகிற காந்தியடிகளையும் புரிந்துகொள்ளமுடியும். சம்பாரண் சத்தியாகிரகப் போராட்டத்தையும் கங்காதரின் மனப்போராட்டத்தையும் ஒரு கோட்டில் கொண்டுவந்து நிறுத்துகிறார் கலைச்செல்வி. இனி, எந்தப் பயணத்தில் ஒரு நதியின் முகத்துவாரத்தைப் பார்க்க நேர்ந்தாலும் காந்தியடிகளை நம் மனம் ஒருகணம் நினைத்துப் பார்த்துக்கொள்ளும். கலைச்செல்வியும் நினைவுக்கு வருவார்.

’முகத்துவார நதி’ படிமத்தைப்போலவே கலைச்செல்வி கண்டுபிடித்திருக்கும் மற்றொரு புதிய படிமம் ‘உதிர்ந்த இலை’. இந்தியாவை இரு துண்டுகளாகப் பிரித்து சுதந்திரநாள் அறிவிக்கப்பட்டுவிட்டது. தலைநகரமான தில்லியில் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அதே சமயத்தில் கல்கத்தாவில் மதக்கலவரம் வெடித்து நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படுகின்றனர். அங்கே அமைதியை நிலைநாட்டும் பொருட்டு தம் நண்பர்களுடன் கலவர பூமியை நோக்கிப் பயணத்தை மேற்கொள்கிறார். பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கும் நேரு, அத்தருணத்தில் காந்தியடிகள் தில்லியில் இருக்கவேண்டும் என்னும் ஆவல் கொண்டவராக உள்ளார். அவர் அனுப்பிவைக்கும் சிறப்புத்தூதுவர் தில்லியிலிருந்து கலவர பூமிக்குச் சென்று காந்தியடிகளைச் சந்தித்து நேருவின் அழைப்பைத் தெரிவிக்கிறார். காந்தியடிகள் அதற்கு உடன்பட மறுக்கிறார். அங்கிருக்கும்  போராட்டக்காரர்களிடமிருந்து நல்லிணக்கமாக வாழும் உறுதிமொழியைப் பெறாமல் தில்லிக்குத் திரும்பமுடியாது என தெரிவித்துவிடுகிறார். தன்னைத் தேடி வந்த தூதுவரை வழியனுப்புவதற்காக வாசல் வரைக்கும் வரும் காந்தியடிகள் அப்போது மரத்தடியில் உதிர்ந்து விழுந்திருந்த ஓர் இலையைக் குனிந்து எடுத்து தன் அன்பளிப்பாக நேருவிடம் கொடுத்து விடுமாறு சொல்லி அனுப்புகிறார்.

அக்கணமே உதிர்ந்த இலைக்கு ஒரு படிமத்தன்மை படிந்துவிடுகிறது. கலவரத்தில் உயிர்துறந்த அப்பாவிகள் அனைவரும் ஒருவகையில் உதிர்ந்த இலைகளே. தனக்கு எது முக்கியம் என்பதை இப்படி எளிமையான முறையில் சுட்டிக்காட்டும் உள்ளம் கொண்டவராக இருக்கிறார் காந்தியடிகள். நேருவுக்கும் அதைப் புரிந்துகொள்ளும் மனம் இருக்கிறது. அந்தக் கதையை வாசித்த கணத்திலிருந்து எந்த மரத்தடியில் உதிர்ந்திருக்கும் இலையைப் பார்த்தாலும், எனக்கு ஒரு கணம் காந்தியடிகளின் நினைவும் மதக்கலவரத்தின் நினைவும் வந்துபோவது வழக்கமாகிவிட்டது. இதற்கு முன்பு குமாரன் ஆசான் எழுதிய வீழ்ந்த பூ கவிதை (வீண பூவ்) நினைவுக்கு வருவது வழக்கம். இப்போது காந்தியடிகளும் கலைச்செல்வியும் சேர்ந்துகொண்டனர்.

தொகுப்பில் இன்னொரு முக்கிய சிறுகதை ’ஆடல்’. கஸ்தூர் பா, காந்தியடிகளின் இல்லறவாழ்க்கையில் ரகசியத்துக்கே இடமில்லை. திருமணமான தொடக்க ஆண்டுகளைத் தவிர, தென்னாப்பிரிக்காவுக்குப் பயணமான நாள்முதல் ஆகாகான் சிறையில் இறந்துபோனது வரை எல்லாமே வெளிப்படையாகவே உள்ளன. தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற நாள்முதல் அவருடைய வாழ்க்கை முழுக்கமுழுக்க ஆசிரம வாழ்க்கையாகவே உள்ளது.   கோச்ரப் ஆசிரமம், சபர்மதி ஆசிரமம், வார்தா ஆசிரமம், தில்லி என எல்லா இடங்களிலும் அவ்விருவருடைய வாழ்க்கையும் திறந்த புத்தகமாகவே இருக்கிறது. அவரைச் சுற்றி ஏராளமானவர்கள் எப்போதும் நிறைந்திருக்கின்றனர். இருவரும் எப்படிப் பழகினார்கள், என்னென்ன பேசிக்கொண்டார்கள் என அனைத்தும் பிறர் பார்வையில் பதிவாகிக் கிடக்கின்றன. ஆனாலும் நம் சூழலில் பலர் இருவருக்கும் இடையில் எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் இருந்ததுபோன்ற ஒரு கற்பிதத்தை உருவாக்கி, தொடர்ந்து அதைப்பற்றியே உரையாடி ஒரு மாயச்சித்திரத்தை எழுப்புவார்கள். கலைச்செல்வி தன் ‘ஆடல்’ சிறுகதையின் வழியாக அந்த மாயச்சித்திரத்தை கலைந்துபோகச் செய்கிறார்.

துப்பாக்கிக்குண்டுக்கு இரையாகி காந்தியடிகள் கீழே சரிந்த கடைசிக் கணத்தை தன் கதைக்கான பின்னணியாக எடுத்துக்கொண்டிருக்கிறார் கலைச்செல்வி. காந்தியடிகளின் நெஞ்சிலிருந்து ரத்தம் வெளியேறுகிறது. அவர் கண்கள் மேலே பார்க்கின்றன. அவருக்கு மூச்சுவிட சிரமமாக இருக்கிறது. வானத்தைப் பார்க்கும் அவர் கண்கள் மேகத் திரளுக்கு நடுவில் தன் மனைவி கஸ்தூரின்  முகத்தைப் பார்ப்பதாகவும் இருவரும் உரையாடிக்கொள்வதுமாக கதையைக் கட்டமைத்திருக்கிறார் கலைச்செல்வி. அந்த உரையாடலில் இன்று ஒருவர் காந்தி – கஸ்தூர் இல்வாழ்க்கையில் நிகழ்ந்ததாக நம்பி பொதுவெளியில்  பேசிக்கொள்கிற எல்லா ஐயங்களையும் தொகுத்து கேள்வி பதில்களாகக் கட்டமைத்து, அவற்றின் புதிர்களை விடுவிக்கிறார்.

ஒரு கட்டத்தில் காற்றில் கஸ்தூரின் முக்காடு விலகிவிடுகிறது. அதைச் சுட்டிக்காட்டி சரியான மறைத்துக்கொள்ளுமாறு சொல்கிறார் காந்தியடிகள். அவர் மகாத்மாவாக இருந்தாலும் ஓர் ஆணாகவே  இருப்பதை சற்றே கேலியுடன் சுட்டிக் காட்டிப் பேசுகிறார் கஸ்தூர். தொடர்ந்து நிகழும் உரையாடலில் அடுத்த பிறவியிலும் தன்னோடு இருக்க கஸ்தூருக்கு விருப்பம் இருக்கிறதா என காந்தி கடைசியாக ஒரு கேள்வி கேட்கிறார். அதற்கு விருப்பம் இருப்பதாகத் தெரிவிக்கிறார் கஸ்தூர். வாழ்நாளெல்லாம் கசப்பை அளித்தவராக கஸ்தூர் கருதியிருந்தால், அக்கேள்விக்கு எதிர்மறையான பதிலை அவர் அளித்திருக்கலாம். ஆனால் அதை விடுத்து, அவர் ஏன் அடுத்த பிறவியிலும் மனைவியாக வாழ விருப்பமென்று தெரிவிக்க வேண்டும் என்பதை நாம் யோசிக்கவேண்டும். ’இம்மை மாறி மறுமையாயினும் நீயாகியர் என் கணவனை யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே’ என்னும் குறுந்தொகை வரி ஒருகணம் நினைவுக்கு வந்து போகிறது.

கஸ்தூர் – காந்தி உரையாடல்களில் இந்தக் கடைசி கேள்வி பதில் மிகமுக்கியமானது. இருவருடைய வாழ்க்கையிலும் பிணக்கு போலத் தோற்றமளித்த எதுவும் உண்மையில் பிணக்கே அல்ல, அது ஒரு தோற்றப்பிழை என உணரவைத்துவிடுகிறது.  நிகழும் விவாதங்களும் கசப்புகளும் ஒருபோதும் அடிப்படை அன்பின் பிடியிலிருந்து விலகாதபடி அவர்கள் வைத்துக்கொண்டார்கள். சிற்சில சமயங்களில் நாம் வைத்திருக்கும் அளவுகோல்கள் பயனற்றவை என்பதை சூழல் நம்மை உணரச் செய்துவிடுகிறது. அது இயற்கையின் ஆடல். 

இத்தொகுதியில் எட்டுக் கதைகள் உள்ளன. எட்டுக் கதைகளிலும் காந்தியடிகளின் வாழ்க்கைக்காட்சிகள் முன்பின்னாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. அசல் பாத்திரத்துக்கு நிகராக கதைப்பாத்திரமும் வரலாற்றை ஊடுருவி உலவுகின்றனர். நவகாளி யாத்திரையை முன்வைத்து புளகிதம், சமர்க்களம் என இரு கதைகளை எழுதியிருக்கிறார் கலைச்செல்வி. இரண்டுமே ‘கரணம் தப்பினால் மரணம்’ கதைகள். இரு கதைகளையும் இருநூறு விழுக்காடு கவனத்தோடும் கூர்மையோடும் ஒரே ஒரு சொல் கூட பிசகிவிடாதபடி எழுதியிருக்கிறார் கலைச்செல்வி. வெள்ளப்பெருக்கில் படகை ஓட்டிக்கொண்டு வருவதுபோல மிகவும் லாவகமாக கதையைத் தொடங்கி அழகாகக் கொண்டுசெல்கிறார்.

வசுமதி என்பது ஓர் ஆற்றின் பெயர். அந்த ஆற்றங்கரையோரத்துக் கிராமங்களில் மதக்கலவரம். ஏராளமானவர்கள் இறந்துவிட்டார்கள். வியாபாரத்துக்கு எங்கோ வெளியூருக்குச் சென்றிருந்தவன் எல்லாவற்றையும் பார்த்து சீற்றம் கொள்கிறான். பிணங்களைப் பார்க்கும்போது அல்லது அதைப்பற்றிய செய்தியைக் கேள்விபப்டும்போது கரையில் முன்பொருமுறை மீன்கள் செத்து கரையொதுங்கிக் கிடந்த காட்சியை நினைத்துக்கொள்கிறான். அந்தக் காட்சிகள் அவனை விசை கொண்டவனாக்குகிறது. கைக்குக் கிடைத்த ஒரு பழைய துப்பாக்கியை எடுத்துக்கொண்டு காந்தியடிகளைச் சுடும் திட்டத்தோடு கிராமத்தைவிட்டுப் புறப்படுகிறான். புளகிதம் என்னும் சிறுகதை இப்படித்தான் தொடங்குகிறது. அவனுடைய பயணத்தை பல்வேறு காட்சித்தொகைகளின் பயணம் என்றே சொல்லவேண்டும். எல்லாமே சிறுசிறு சித்தரிப்புகள். அனைத்தும் சிறப்பாகவே அமைந்துள்ளன.

காந்தியடிகளை ஆய்வு செய்வது என்பது ஒரு பின்னல். அவர் காலத்து மனிதர்களையும் சூழலையும் ஆய்வு செய்வது என்பது இன்னொரு பின்னல். இரண்டையும் அழகாகப் பின்னிப்பின்னி ஒவ்வொரு கதையையும் நகர்த்திச் செல்கிறார் கலைச்செல்வி. இத்தனை ஆண்டுகளாக பல்வேறு நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதி எழுதி கைவரப் பெற்ற திறமை அவருக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

கலைச்செல்விக்கு என் வாழ்த்துகள்.

 

(கோவை புத்தகக்கண்காட்சியை ஒட்டி, எழுத்தாளர் கலைச்செல்வி எழுதிய காந்தியக்கதைகள் ’சமர்க்களம்’ என்னும் தலைப்பில் ஒரே தொகுப்பாக  எதிர் வெளியீடு வழியாக வெளிவந்திருக்கிறது. அந்தப் புதிய தொகுதிக்காக எழுதிய முன்னுரை)

 

(சர்வோதயம் மலர்கிறது – ஆகஸ்டு 2024)