Home

Monday 5 August 2024

மனத்தை அறியும் கலை

 மேடையிலே அமர்ந்திருக்கின்ற எழுத்தாளுமைகளுக்கும் அரங்கிலே அமர்ந்திருக்கின்ற எழுத்தாளர்களுக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள்.  இந்த நாள் தமிழிலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான நாள்தொடர்ந்து  தமிழ் எழுத்துலகில்  முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்பு உணர்வோடு சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், மொழிபெயர்ப்பு என பல தளங்களில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டு வருகின்ற முக்கியமான ஆளுமையான எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களை நண்பர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இது மிகவும் மன நிறைவை அளிக்கிறது.  இந்த மன நிறைவின் வழியாக இன்னொரு முப்பது ஆண்டுகள் அவர் அயர்வின்றி உழைப்பார்.  அத்தகு ஊக்கத்தை பெறுவதற்கான ஒரு முக்கியமான தருணமாக இந்த நாள் அமையும் என்று நான் நம்புகிறேன்.

 



எம்.கோபாலகிருஷ்ணனை அறிமுகமான காலம் தொட்டு  நான்  கோபால் என்றுதான் அழைத்துவருகிறேன்.  சூத்ரதாரி என்கிற புனைபெயரில் அவர் ஆரம்பகாலத்தில் எழுதிக்கொண்டு வந்தாலும்   எங்களுடைய நட்புவட்டத்தில் அவர் எல்லோருக்கும் கோபாலாகவே இருந்து வருகிறார்.  முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் தொண்ணூறுகளையொட்டி ஈரோடு ஜீவா என்கிற ஒரு மருத்துவர் சோலைகள் என்கிற ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.  அப்போது இளைஞர்களாக இருந்த எங்கள் அனைவரையுமே அவர் அந்த சந்திப்புக்கு அழைத்திருந்தார்.  நாஞ்சில் நாடன் பம்பாயிலிருந்து வந்து அச்சந்திப்பில் கலந்துகொண்டார். தருமபுரியிலிருந்து ஜெயமோகன் வந்திருந்தார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வந்திருந்தார். இன்னும் பல மூத்த, இளைய எழுத்தாளர்கள் வந்து கலந்துகொண்டனர். அச்சந்திப்புக்கு கோபாலும்  நண்பர் குழாம் சூழ வந்திருந்தார்.  அவரோடு வந்திருந்த  ரிஷய சிங்கர் எனப்படுகிற ராஜேந்திரனின் முகம் இன்றும் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது.  பசலை என்கிற ஒரே ஒரு சிறுகதைத்தொகுதியை மட்டும் எழுதிய கோவிந்தராஜன் என்பவரை கோபால்தான் எனக்கு அன்று அறிமுகப்படுத்தினார். எழுத்தாளர்களாகிய எங்களுக்கு டாக்டர் ஜீவாவும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து அங்கிருந்த மழைக்காடுகளை சுற்றிக்காட்டினார்கள். அந்தப் பள்ளத்தாக்குகள் எந்த அளவுக்கு முக்கியமானவை என்பதை விளக்கிப் பேசினார்கள். இயற்கை பற்றிய புரிதலை அவர்களுடைய உரைகள் எங்களுக்கு வழங்கின.  அவர்கள் உரையாற்றிய நேரம் போக மிச்சமிருக்கிற நேரங்களில் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம் நம்மாழ்வார் அந்தக் குழுவில்தான் எங்களுக்கு  அறிமுகமானார்.  இரவு ஒன்பது மணிக்குத் தொடங்கி, எங்களிடையே இரண்டுமணி நேரம் இயற்கையைப்பற்றியும் விவசாயத்தைப்பற்றியும் தொடர்ச்சியாக அவர் உரையாற்றினார். அவர் பேசி முடித்த பிறகுதான் நாங்கள்  இரவு உணவுக்காகக் கலைந்துசென்றோம். அதைத் தொடர்ந்து  ஒரு மணி நேரம் நம் நாஞ்சில் நாடன் தன் இளமைக்கால அனுபவங்கள் சார்ந்து விவசாயத்தைப்பற்றிப் பேசினார். அதன் பிறகு  ஒரு மணி நேரம் ஜெயமோகன் பேசினார். இப்படி  ஓய்வில்லாமல் உற்சாகமாக ஒவ்வொருவரும் தம் எண்ணங்களை முன்வைத்துக்கொண்டிருந்த  அந்த இரண்டு நாட்கள் எங்கள் வாழ்வில் மிகமுக்கியமாவை. அச்சந்திப்பில் கூடியிருந்த அனைவருமே இன்றளவும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எங்கள் அனைவருக்குமே கோபால் மிகமுக்கியமானவராக இருக்கிறார்.  முதலில் அவர் திருப்பூரில் இருந்தார். பிறகு ஈரோட்டுக்கு வந்தார். அங்கிருந்து குமப்கோணத்துக்குச் சென்று சில ஆண்டுகள் பணிபுரிந்தார். இப்போது கோவையில் வசித்துவருகிறார். அவர் எங்கிருந்தாலும் எங்களுடைய கோபாலாகவே தொடர்ந்து இருந்து வருகிறார் அவர் எங்களின் மீது காட்டிய அன்பில் எள்ளளவும் குறைந்ததில்லை அவருடைய தாயார் பரிமாறி நான் சாப்பிட்டு இருக்கிறேன்.  அவருடைய துணைவியார் பரிமாறியும் சாப்பிட்டு இருக்கிறேன். அவருடைய குடும்பம் மிகவும் அன்பான குடும்பம்.  என்னுடைய ஒரு இளைய சகோதரர் போலவே நான் அவரைக் கருதுகிறேன்.

 

கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு என பல தளங்களில் தொடர்ச்சியாகப் பங்களிப்பு செய்துவருபவர் நம் கோபாலகிருஷ்ணன். அவருடைய ஆளுமையை இன்றைய தலமுறையைச் சேர்ந்த வாசகர்கள் புரிந்துகொள்வதற்கு உதவி செய்யும் வகையிலும் கோபாலகிருஷ்ணனின் இலக்கியப் பங்களிப்பைக் கெளரவிக்கும் வகையிலும் விழாக்குழுவினர் இக்கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவருடைய  படைப்புகளை தொகுத்து வைத்துக் கொண்டு நாம் அவருடைய படைப்பு மையத்துக்கு ஒற்றை வரியில் ஒரு தலைப்பு கொடுக்கலாம் என்றால் மனத்தை அறியும் கலை என்று உறுதியாகச் சொல்லலாம்.   எழுத்து என்பதே மனத்தை அறியும் கலை என்றாலும் கூட தொடர்ச்சியாக அதை ஒரு தவம் போல தன்னுடைய எழுத்து வழியாக நிகழ்த்திக் கொண்டிருப்பவர் நண்பர் கோபாலகிருஷ்ணன்.

 

கோபாலகிருஷ்ணனுடைய ஆரம்பகால கதைகளிலே அதனுடைய சுவடுகளை நாம் காணலாம். ’இரவு’ என்னும் தலைப்பில் அவர் ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார்.  இரு சகோதரர்களைப்பற்றிய சிறுகதை அது.  கைகால்கள் செயல்படாத நிலையில் ஒவ்வொரு வேலைக்கும் அடுத்தவரை நம்பியிருக்கும் சூழலில் அண்ணன் இருக்கிறான். காலையில் எழுந்ததும் அவனுக்கு ஆற்றவேண்டிய கடமைகள் அனைத்தையும் ஆற்றிவிட்டு பணிக்குச் செல்லும் நெருக்கடிகளில் இருக்கிறான் தம்பி. அப்படிப்பட்ட சூழலில் அவர்களுடைய அம்மா இளைய மகனுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று திட்டமிடுகிறாள். ஆனால் தனக்குத் திருமணம் வேண்டாம் என இளையவன் மறுக்கிறான். எனினும் அவனுடைய மறுப்பைப் பொருட்படுத்தாமல் அவனுக்குப் பொருத்தமான ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்துவைத்துவிடுகிறாள் அம்மா.

 

தன் வாழ்நாள் கடமையைச் செய்துவிட்டோம் என்ற மனநிறைவில் மகிழ்ச்சியடைந்த அம்மா, அத்திருமணத்துக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் தான் எவ்வளவு பெரிய பிழையைச் செய்துவிட்டோம் என குற்ற உணர்வில் அமைதியிழக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் சம்பவங்கள் நடைபெறத் தொடங்குகின்றன. ஒருநாள் கூட நிம்மதியாக இருக்கமுடியவில்லை. பகலைவிட இரவுப்பொழுதுகள் நரகமாகின்றன.

 

இரவு நேரத்தில் கூடத்தில் அம்மா ஒரு பக்கமாகவும் கைகால்கள் செயலிழந்த அண்ணன் ஒரு பக்கமாகவும் படுத்திருக்கிறார்கள். தம்பியும் தம்பி மனைவியும் அறைக்குள் இருக்கிறார்கள். தம்பிக்குக் கிடைத்த இன்பவாழ்க்கை தனக்குக் கிடைக்கவில்லை என்னும் பொறாமை அண்ணனின் நெஞ்சில் கொழுந்துவிட்டு எரிகிறது. தூக்கமின்றி அதே சிந்தனையில் மூழ்கிக் கிடக்கிறான். தன்னை ஒரு தாயைப்போல பரிவோடும் அன்போடும் பார்த்துக்கொள்கிறவன் என தம்பி மீது அவன் நெஞ்சில் கொண்டிருந்த மதிப்பும் பாசமும் ஒரே கணத்தில் கரைந்து காணாமல் போய்விடுகின்றன. என்றுமில்லாத வகையில் ஒருவித பொறாமையும் எரிச்சலும் ஆத்திரமும் பொங்கி வருகின்றன. அன்புக்கும் ஆற்றாமைக்கும் இடையில் அவன் மனம் ஊசலாடிக்கொண்டே இருக்கிறது. ஒருநாள் தான் என்ன செய்கிறோம் என்கிற பிரக்ஞையே இல்லாமல் எல்லோரும் உறங்கும் நள்ளிரவில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக அலறுகிறான்.  அம்மா படுக்கையிலிருந்து எழுந்தோடி வந்து விசாரிக்கிறாள். படுக்கையறையிலிருந்து தம்பி எழுந்துவந்து விசாரிக்கிறான். அண்ணனை ஆசுவாசப்படுத்துகிறான். தன்னைச் சுற்றி அனைவரும் நின்றிருக்கும் நேரத்தில் அண்ணன் மெல்ல மெல்ல அமைதியடைகிறான். அதற்குப் பிறகு அனைவரும் அவரவர் இடங்களுக்குச் செல்கிறார்கள். 

 

எல்லாமே சிறிது நேரத்துக்குத்தான். அண்ணனின் மன அமைதி மீண்டும் குலைந்துவிடுகிறது. அவனுக்குள் உறையும் மிருகம் தலையைச் சிலிர்த்து உறுமத் தொடங்குகிறது. நெஞ்சு வலிப்பதாக மீண்டும் அலறுகிறான். அனைவரும் மீண்டும் எழுந்தோடி வந்து அனைவரும் அவனுக்கு அருகில் சூழந்து நிற்கிறார்கள். அவன் வெளிப்படுத்தும் வேதனையை முதலில் உண்மை என நம்புகிற அனைவரும், அவன் நடிக்கிறான் என்பதை மெல்ல மெல்ல புரிந்துகொள்கிறார்கள். அந்த மாற்றத்தை நம்பமுடியாத அம்மா குமுறி அழுகிறாள். “இந்த மாதிரியெல்லாம் நடந்துவிடக்கூடாது என்பதால்தானே திருமணமே வேண்டாம் என்று சொன்னேன், நீங்கள் ஏன் கேட்கவில்லை?” என்று தம்பியும் சலித்துக்கொள்கிறான். தாயும் தம்பியும் அச்சூழலை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாத ஒருவித இயலாமையில் தவித்துக்கொண்டிருக்க, தனக்குள் உறையும் மிருகத்தின் பிடியிலிருந்து தப்பிக்கும் வழி தெரியாத வேறொரு விதமான இயலாமையில் அண்ணனும் தவிக்கிறான். தீமையின் பக்கம் விசைகொண்டு திரும்பிச் செல்லும் மனத்தை அவனால் இறுதிவரைக்கும் திருப்பவே முடியவில்லை. தீமை ஒரு காந்தம்போல அவன் மனத்தை இழுத்தபடி இருக்கிறது.

 

எந்த இடத்திலும் வெளிப்படையாக ஒருவரும் இதைப்பற்றி உரையாடிக்கொள்வதோ, விவாதித்துக்கொள்வதோ இல்லை. ஆனால் மௌனமாகவே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள். இந்தக் கதையில் கோபாலகிருஷ்ணன் காட்சிப்படுத்தியிருக்கும் மௌனம்  மிகவும் முக்கியமானது அந்த மௌனத்தைத்தான் அவர் கலையாக நிகழ்த்திக் காட்டுகிறார். அதையே நான்  மனத்தை அறியும் கலை என்று குறிப்பிடுகிறேன்.

மல்லி என்பது கோபாலகிருஷ்ணனுடைய தொடக்க காலக் கதைகளில் ஒன்று. ஒரு சூழலை மட்டும் அச்சிறுகதை சித்தரிக்கிறது. அச்சூழலில் ஒரு பாத்திரத்தைச் சுற்றியிருக்கும் வெவ்வேறு மனிதர்கள் எப்படியெல்லாம் எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறார் கோபாலகிருஷ்ணன். அவரவர்களுடைய மனம் போகும் போக்கை அவர்களுடைய உரையாடல் வழியாக நம்மை உணர்ந்துகொள்ளும்படி சித்தரிக்கிறார். ஏராளமான சிறுமிகள் பணிபுரியும் பனியன் கம்பெனியின் சூழலை அச்சிறுகதை முதலில் படம்பிடித்துக் காட்டுகிறது. மல்லி என்கிற மல்லிகா என்னும் சிறுமி அங்கு பணிபுரியும் பணியாளர்களில் ஒருவர். முதல்மாத விலக்கு என்னும் வேதனையை முதன்முதலாக எதிர்கொள்ளும் அச்சமும் வேதனையும் அவள் நெஞ்சை ஆக்கிரமித்திருக்கின்றன.  உடல் படும் வேதனையை காலையிலேயே உணர்ந்திருந்தாலும் அம்மாவின் சுடுசொற்களைத் தாங்கிக்கொள்ள இயலாமல் வேலைக்கு வருகிறாள். இயற்கைச்சுழற்சி யாருடைய கட்டுப்பாட்டுக்கும் காத்திருக்கவில்லை. வேலை செய்யும்போதே அதன் போக்கை உணர்ந்துகொண்டு அவள் கழிப்பறைக்கு ஓடிவிடுகிறாள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான, துர்நாற்றம் வீசுகிற  கழிப்பறைக்குள் அவளால் செல்லவும் இயலவில்லை. செல்லாமல் இருக்கவும் இயலவில்லை. திரும்பிவரும்போது அவளுடைய நடையே அவள் நிலை என்ன என்பதை அனைவருக்கும் காட்டிக்கொடுத்துவிடுகிறது. பணிச்சூழலில் அவளைச் சுற்றியிருக்கும் ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு விதமாக ஏளனம் செய்கிறான். சிலர் எரிச்சலைக் கொட்டுகிறார்கள். இலர் ஆபாசமான, இரட்டை அர்த்தம் தொனிக்கும் சொற்களைப் பேசுகிறார்கள். பெற்றெடுத்த தாயே, ஒரு பெண்ணாக இருந்தும் பெண்ணின் வேதனையைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல் வறுமையின் காரணமாக வேலைக்குச் செல்லும்படி விரட்டியடிக்கிற சூழலில், கிண்டல் செய்யக் கிடைத்த வாய்ப்புகளைத் தவறவிடாமல் ஆண்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். முற்றிலும் உரையாடலால் ஆன இச்சிறுகதையின் ஒவ்வொரு உரையாடலும் அவரவருடைய மனத்தை அறிந்துகொள்ள உதவியாக  அமைந்திருக்கிறது.  அவர்களுடைய ஆபாசக்குரல்களுக்கு மாற்றாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் கோமதி அக்காவின் அனுசரணையான குரலையும் ஒலிக்கவைத்திருப்பது ஆறுதலாக உள்ளது. நம்மைச் சுற்றி தீமைகள் குவிந்திருக்கின்றன என்பது உண்மைதான். அதே சமயத்தில் எங்கோ ஒரு நன்மையின் சுடரும் காற்றில் நடுங்கியபடி ஒளிர்ந்தபடியே இருக்கிறது. அந்த நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ளும் சாட்சியாகவே கோபாலகிருஷ்ணனின் மல்லி சிறுகதையைக் கருதுகிறேன்.

 

இந்த முப்பதாண்டுகளில் எண்ணற்ற சிறுகதைகளை கோபாலகிருஷ்ணன் எழுதிவிட்டார். அம்மன் நெசவு, மணற்கடிகை போன்ற நல்ல நாவல்களையும் எழுதியிருக்கிறார். மானுட மனம் இயங்கும் போக்குகளை வெவ்வேறு கோணங்களில் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். இரவு, மல்லி ஆகிய இரு சிறுகதைகளும் இக்கணத்தில் என் நினைவில் சட்டென எழுந்துவந்த கதைகள். அவருடைய கதையுலகம் எப்படிப்பட்டது என்பதற்கு எடுத்துக்காட்டாக அக்கதைகளைக் குறிப்பிட்டேன். அவருடைய சிறுகதைகளையும் நாவல்களையும் ஒன்றுவிடாமல் வாசிப்பவர்கள் மனத்தை அறியும் கலையில் கோபாலகிருஷ்ணன் எந்த அளவுக்குத் தேர்ச்சி மிக்கவர் என்பதை உணர்ந்துகொள்ள இயலும்.  கோபாலகிருஷ்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அவருடைய படைப்புகளை முன்வைத்து இக்கருத்தரங்கத்தைச் சாத்தியப்படுத்தியிருக்கும் நட்புவட்டத்துக்கு என் நன்றி.

 

(எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனுடைய படைப்புகள் குறித்து ’எண்ணமும் எழுத்தும்’ என்னும் தலைப்பில் 24.10.2019 அன்று கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம்.  கருத்தரங்கக்கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு சமீபத்தில் யாவரும் பதிப்பகம் வெளியீடாக சுரேஷ் பிரதீப்பின் முன்னுரையோடு வெளிவந்திருக்கிறது)