Home

Tuesday, 14 March 2017

பிரசாதம் - சிறுகதை



இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் பெயரைத் தாங்கி அந்தத் தொடக்கப்பள்ளி இயங்கிக்கொண்டிருந்தது. ஏழைப் பிள்ளைகளுக்கு கட்டணம் இல்லாத பள்ளிக்கூடம். நாலரைக்கு கடைசி மணி அடித்ததும் பிள்ளைகள் எல்லோரும் கன்றுக்குட்டிகள்போல வாசலை நோக்கி ஓடினார்கள். விதவிதமான உயரங்களில் விதவிதமான ஓசைகளை எழுப்பியபடி அவர்கள் ஓடியது விசித்திரமாக இருந்தது. குதிரை, யானை, பூனை, கோழி, ஆடு என எல்லாவிதமான விலங்குகளின் சத்தங்களும் அப்போது கேட்டது. ஆனால்  ஐந்தாவது வகுப்பு பி செக்‌ஷன் வீரமுத்து மட்டும் ஓடவில்லை. சத்தம் போடவும் இல்லை. கடைசி மாணவன் ஓடி வெளியேறுகிறவரைக்கும் வகுப்பு வாசலில் நின்று வேடிக்கை பார்த்தான்.

Friday, 10 March 2017

பேதமையும் பிரியமும் - கட்டுரை

  
கலாப்ரியாவின் ”பிரிவுகள்”

எட்டுப் பிள்ளைகள் கண்முன்னால் சீரும் சிறப்புமாக வாழ்ந்தாலும் எப்போதோ ஒரு காலத்தில் பிறந்து சில நாட்களே உயிருடன் இருந்து, பிறகு மரணமெய்திவிட்ட  ஒன்பதாவது பிள்ளையை நினைத்துநினைத்து தினமும் ஒரு சொட்டு கண்ணீராவது விட்டு அழும் அல்லது பேசிப்பேசி துயராற்றிக்கொள்ளும்  ஒரு தாய் எல்லா இடங்களிலும் இருப்பாள்அளவற்ற செல்வம் புரள்கிற நிலையில்கூட என்றோ ஒருநாள் தன் கவனக்குறைவால் பறிகொடுத்துவிட்ட சிறுதொகையின்  இழப்பைத் துயரத்துடன் பகிர்ந்துகொள்ளும் நண்பன் நம் எல்லாருக்குமே இருக்கக்கூடும்பிரிவு உறுதி என உணர்ந்த ஆணின் அல்லது பெண்ணின்  உறக்கத்தையும் உயிர்ப்பையும் பலிவாங்கிவிடுகிறது இழப்புணர்ச்சிஇழப்பின் வலி பெரிது. சின்னதோ பெரியதோ, வாழ்வில் எந்த இழப்பும் ஈடுசெய்ய முடியாத ஒன்று.

மனநிறைவும் மனச்சுமையும் - கட்டுரை


வண்ணநிலவனின் "குளத்துப்புழை ஆறு"
 

      முதன்முறையாக தாஜ்மகாலைப் பார்த்தபோது அதன் அழகில் மனம் பறிகொடுத்து அப்படியே ஒருகணம் நின்றுவிட்டேன்தொடர்ந்து பார்த்தபடியே இருக்கும் ஆசையில் யாருக்கும் தொந்தரவு தராதவகையில் நடைபாதையை விட்டுவிலகி நின்று பார்க்கத் தொடங்கினேன்திரும்பிய கணத்தில் கைக்குட்டை விற்கிற ஒரு சிறுமியின்மீது பார்வை படிந்ததுபயணியர் அனைவரும் வளாகத்தில் நுழைந்த கணத்திலிருந்து தாஜ்மகாலின்மீது வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்தபடியே இருக்க, அவள் பார்வை மட்டும் அந்தப் பயணிர்மீதே இருந்தது. "மூணு ரூபாய்க்கு ஒன்னு, பத்து ரூபாய்க்கு நாலு" என்று மந்திரம்போல திரும்பத்திரும்பச் சொன்னபடி புதுப்புதுப் பயணியரை நாடி நடந்துகொண்டே இருந்தாள்பார்வையாளர்கள் அனைவரையும் ஈர்த்திழுக்கிற உலக அதிசயம் அவனை ஒரு விழுக்காடு அளவுகூட அசைக்கவில்லைஅந்தத் திசையைக்கூட அவள் திரும்பிப் பார்க்கவில்லைகைக்குட்டைகளை வாங்கும் முகத்தை அந்தக் கூட்டத்தில் கண்டுபிடிப்பதிலேயே அவள் பார்வை குறியாக இருந்தது

Friday, 24 February 2017

மௌனம் என்னும் புகலிடம்



     ஒரு குடும்பத்தில் தலைவன் பொருள்வயின் பிரிவது தவிர்க்கமுடியாத ஒரு செயல்.  குடும்பம் நடத்தும் ஊரில் ஒரு தலைவனால் தொழில்செய்து சம்பாதிக்கமுடியாத சூழல் சங்க காலத்திலிருந்து இன்றுவரை ஒரு வரலாற்றுச் சங்கிலியாக நீண்டபடியே இருக்கிறது.  தன் உழைப்பையும் அறிவையும் திறமையையும் தாராளமாக வழங்கித்தான் ஒருவனால் பொருளைச் சம்பாதிக்கமுடியும். இப்படி எழுதிச் செல்லும் அளவுக்கு பொருளும் உழைப்பும் எல்லா இடங்களிலும் ஓர் எளிய சமன்பாடாக இருப்பதில்லை.  சில இடங்களில் சொல்லடி பட நேரலாம். சில இடங்களில் கல்லடியும் பட நேரலாம்.  அத்தகு அவமானங்களை உயிருக்குயிரான இல்லறத்துணை நேருக்குநேர் பார்ப்பதை எந்த ஆண்மனமும் ஏற்றுக்கொள்வதில்லை.  எங்கோ கண்காணாத இடங்களில் படும் துன்பங்களையும் அவமானங்களையும் பெரிதாக நினக்காத மனம் தன் உற்ற துணைவி அல்லது பெற்றறெடுத்த தாய் அல்லது பிள்ளைகள் முன்னிலையில் அவற்றை எதிர்கொள்வதை மனம்கூசும் செயலாக நினைக்கிறது.  இவற்றை முற்றிலும் தவிர்க்கவே ஒவ்வொரு ஆணும் நினைக்கிறான்.  எப்பாடு பட்டாவது பொருளிட்ட ஏதோ ஓர் ஊரும் துணைவியும் பிள்ளைகளும் நிம்மதியாக வாழ இன்னொரு ஊருமாக தன்னுடைய வாழ்வை வடிவமைத்துக்கொள்வது பல ஆண்களுக்கு தவிர்க்க இயலாத முடிவாகவே இருக்கக்கூடும்.  பிரிந்திருக்கும் காலத்தில் ஆண்கள் சம்பாதிக்கும் பொருள் குறைந்த கால அளவுக்கே கஞ்சி குடித்து பசியாறும்படி இருக்கக்கூடும். மனைவி அல்லது பிள்ளைகளின் பசியைக் காணப் பொறுக்காத தலைவன் மறுபடியும் பொருள்வயின் ஊரைவிட்டுச் செல்லக்கூடும்.  முடிவற்ற இத்தொடர்கதையின் அவலம் இலக்கிய வெளிமுழுக்க அடர்ந்திருக்கிறது.

Tuesday, 21 February 2017

தாய்மையின் அழகு



                மானுட வாழ்க்கையைக் குறிக்கும் படிமங்களை தமிழ்க்கவிதைப் பரப்பில் ஏராளமாகக் காணலாம். சிலருடைய கவிதைகளில் அது மகாநதி. சிலருடைய கவிதைகளில் அது மாபெரும் கடல். இன்னும் சிலருடைய கவிதைகளில் அது இனிய தென்றல். வெவ்வேறு தருணங்களில் சுவைத்த வாழ்வின் குணங்களை அவை அடையாளப்படுத்துகின்றன. வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட ஒரு சிற்பத்தின் நிழற்படங்களைப்போல.

Sunday, 19 February 2017

ஒற்றைமரம் - சிறுகதை


ஆழ்கவனச் சிகிச்சைப் பிரிவு வளாகத்தைத் தேடி உள்ளே சென்ற இரண்டு மூன்று நிமிடங்களுக்குள்ளாகவே திரும்பி படிக்கட்டுகளில்
இறங்கி வருவதை நம்பமுடியாமல் ஆச்சரியத்தோடு பார்த்தான் சிவா. அவன் கைப்பேசியில் பொழுதுபோக்குக்காக ஒலிக்கவிட்ட இசை அதிர்ந்தபடியே இருந்தது.  அதை அணைக்காமலேயே நிமிர்ந்து “என்னடா, போன வேகத்துலயே திரும்பிட்ட? சந்திரிகா இல்லயா?என்று சிரித்துக்கொண்டே கேட்டான். ஒருகணம் அவனை முறைத்துவிட்டு முதுகில் தட்டினேன். 

Friday, 3 February 2017

பொய்யொன்றே வாழ்வின் மெய்யோ - குணா.கவியழகனின் ’விடமேறிய கனவு’


முதல் உலகப்போரையும் இரண்டாம் உலகப்போரையும் தொடர்ந்து வெளிவந்த இலக்கியங்களும் திரைப்படங்களும் அப்போர்களின் சாட்சியங்களாக இன்றும் விளங்குகின்றன. இரு தரப்பினரும் கொன்று குவித்த மக்களின் வலியையும் துயரங்களையும் இன்றளவும் அவை உலகத்துக்கு பறைசாற்றியபடி இருக்கின்றன. சீனப்புரட்சியையும் ரஷ்யப்புரட்சியையும் தொடர்ந்து அந்நாடுகளில் நிலவிய கடுமையான கண்காணிப்புகளையும் மீறி புரட்சியின் விளைவுகளைப்பற்றி எழுதப்பட்ட இலக்கியங்கள் மானுடத்தின் உலராத கண்ணீர்த்தடத்தை அடையாளப்படுத்தியபடி இருக்கின்றன. ரத்தத்தையும் கண்ணீரையும் சிந்தவைத்த போர்களும் புரட்சிகளும் அதிகாரத்தை அடைந்துவிட்டால் வெற்றியின் வரலாறாக மாறிவிடும். அதிகாரத்துக்கு அடிபணிந்துவிடும்போதோ அல்லது தன்வசம் இருக்கும் அதிகாரத்தை இழந்துவிடும்போதோ, அனைத்தும் தோல்வியின் வரலாறாக மாறிவிடும். உலகம் உருவான காலத்திலிருந்து மீண்டும்மீண்டும் நிகழும் மாறாத உண்மை இது.