Home

Sunday, 29 May 2022

வெளியேற்றப்பட்ட குதிரை - சிறுகதை

 பாண்டிச்சேரி கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான தியாகராஜன் சிங்காரம் ஒயின்ஸ் ஷாப் வரைக்கும் தன்னைத் தேடிக்கொண்டு வருவார் என்று ராஜசேகரன் நினைக்கவே இல்லை. “எப்படி இருக்கிங்க ராஜசேகரன்?” என்றபடி தனக்கு அருகில் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தபோது அவனால் நம்பவே முடியவில்லை. யாரோ தெரிந்த பழைய நண்பர் பேசுகிறார் என்றுதான் அக்கணத்திலும் நினைத்தான். ஆனாலும் முகம் குழம்பியது. சிறிது நேரம் தடுமாறினான். பதிலே பேசாமல் இரண்டு மூன்று தரம் கண்களைச் சிமிட்டியபடி உற்று உற்றுப் பார்த்தான். “என்ன ராஜசேகரன்? என்னைத் தெரியலையா? நான்தான் தியாகராஜன் என்று அவனுடைய மணிக்கட்டைப் பிடித்து அழுத்தினார்.

அழிவின் சித்திரம்

 

கடந்த நூற்றாண்டின் முப்பதுகளில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருவாடானைக்குக் கிழக்கே வலையக்குடிகள் வாழ்ந்த காட்டுப்பகுதியான பண்ணவயல் என்னும் சிற்றூருக்கு உழைப்புக்குத் தயங்காத பொய்யார் என்னும் பெயருடைய இளைஞரொருவர் குடியேறினார். கள்ளிக்காட்டையும் கருவேலங்காட்டையும் அழித்து தன் உழைப்பால் மண்ணை உயிர்பெறச் செய்தார். அவருடைய கொடிவழியினர் அனவரையும் அந்த ஊருக்கு வரவழைத்தார். அவரால் பண்ணவயல் செழித்தது. அவர் குடும்பமும் செழித்து ஓங்கியது. தக்க பருவத்தில் தன்னைப்போலவே உழைப்புக்குப் பின்வாங்காத பெண்ணைப் பார்த்து மணம்புரிந்துகொண்டார் பொய்யார். அவருக்குப் பிள்ளைகள் பிறந்து வளர்ந்து பெரியவர்களானார்கள். படித்த பிள்ளைகள் பண்ணவயலைவிட்டு வெளியேறி அருகிலிருக்கும் நகரங்களுக்கு வேலை தேடிச் சென்றார்கள். படிப்பில் நாட்டமின்றி பெற்றோருடன் விவசாயத்தைமட்டுமே பழகியவர்கள் பண்ணவயலிலேயே தங்கி அப்பாவுக்குத் துணையாக பயிர்த்தொழிலிலேயே ஈடுபட்டனர்.

Sunday, 22 May 2022

எட்டுத் திரைக்கதைகளும் ஒரு நேர்காணலும்

 

“அங்க பாருங்க சார் வானவில். என்ன அழகு. என்ன வர்ணம். நம்பவே முடியாதபடி நமக்கு வேண்டப்பட்ட ஒருத்தவங்க திடீர்னு வாசல்ல வந்து நின்னு சிரிக்கற மாதிரி இருக்குது பாருங்க. மழைச்சாரல்தான் உலகத்துலயே சந்தோஷம்னா, அந்தச் சாரல் நேரத்துல இப்படி வானவில் பாக்கறதுதான் ரொம்பரொம்ப சந்தோஷம், என்ன சொல்றீங்க நீங்க?”

“உண்மைதான், வானவில்ல எப்பப் பாத்தாலும் ஒடனே வயசு கொறஞ்சி சின்னப் புள்ளயா மாறிடுது மனசு, ரொம்ப உற்சாகமா இருக்குது.”

மீரா பெஹன் : இமயத்தின் திருமகள்

 

1921ஆம் ஆண்டில் முதலாம் உலகப்போர் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து நாட்டினர் ஜெர்மனியின் மீது ஒருவித வெறுப்பை வளர்த்துக்கொண்டிருந்த சூழலில், அதே இங்கிலாந்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண் ஜெர்மனியின் இசைக்கலைஞரான பீத்தோவனின் இசையில் மனம் பறிகொடுத்து, மீண்டும் மீண்டும் அந்த இசையைக் கேட்பதில் பொழுதுகளைக் கழித்துவந்தார். பீத்தோவனைப்பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்காக ஓராண்டு காலம் செலவழித்து ஜெர்மன் மொழியைக் கற்றுத் தேர்ந்தார். பீத்தோவனைப்பற்றி அதுவரை ஜெர்மன் மொழியில் வெளிவந்திருந்த நூல்களையும் அவருடைய சமகால ஆளுமைகள் எழுதிய பல்வேறு நினைவுக்குறிப்புகளையும் கடிதங்களையும் தேடித்தேடிப் படித்தார். இறுதியாக பீத்தோவன் பிறந்த ஊரான வியன்னாவுக்குச் சென்று தனிமையில் தன்னை மறந்த நிலையில் பீத்தோவன் நினைவுகளிலும் இசையிலும் சிறிது காலம் மூழ்கியிருந்தார். தன் தேடலின் தொடர்ச்சியாக பீத்தோவன் வாழ்க்கையை ஆதாரமாகக்கொண்டு பிரெஞ்சு எழுத்தாளரான ரொமன் ரொலான் எழுதிய பத்து தொகுதிகளைக் கொண்ட ழான் கிரிஸ்தோபிஃப் என்னும் நாவலைப் படித்தார்.

Sunday, 15 May 2022

குமாரவனம் - சிறுகதை

 தாகத்தால் தொண்டை வறண்டது. எச்சில் கூட்டி விழுங்குவதும் வறண்ட உதடுகளை நாக்கால் நனைத்துக் கொள்வதுமாக இருந்தான் இளன். குதிரையும் கடும் சோர்வின் காரணமாக மெதுவாக நடந்தது. சுற்றியும் வனப்பறவைகளின் ஒலியும் காற்றில் மரக்கிளைகள் உரசிக்கொள்கிற சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தன. எங்கோ ஒரு நீர்நிலை இருப்பதுபோல மின்னும். கண்கள் கூசும் அளவுக்கு நீரலைகள் நெளிவது போலத் தெரியும். சட்டென ஒரு நம்பிக்கை நெஞ்சில் துளிர்க்கும். உடல் வலியையும் அசதியையும் பொருட் படுத்தாமல் சில கணங்கள் வேகவேமாக நடப்பான். எவ்வளவு தொலைவு நடந்தாலும் அந்த நீர்நிலையை அவனால் நெருங்க முடிவதில்லை. கண்பார்வையிலிருந்து அந்த நீர்நிலை திடுமென மறைந்துவிடும். மறுகணமே அளவுக்கு அதிகமான சோர்வு அவனை அழுத்தும்.

முற்றுகை - சிறுகதை


மாலை ஏந்திய தாதியைத் தொடர்ந்து வாயில் திரையை விலக்கியபடி மண்டபத்துக்குள் நுழைந்தாள் தமயந்தி. அதுவரை நிலவியிருந்த மண்டபத்தில் சலசலப்பு சட்டென்று அடங்கிப் பேரமைதி உருவானது. அனைவருடைய கண்களும் தமயந்தியின் பக்கம் திரும்பின. காலமெல்லாம் நதிக்கரையிலும் தோட்டத்திலும் மட்டுமே தோழிகள் சூழப் பொழுதைக் கழித்துப் பழகியவளுக்கு அந்நிய ஆட்கள் நிறைந்த மண்டபத்தில் நிற்பதே சங்கடமான செயலாக இருந்தது. அக்கணம் மிகவும் வலியும் பரவசமும் கலந்ததாகத் தோன்றியது. முதலில் இந்தச் சுயம்வரம் எவ்வளவு பெரிய அவஸ்தை என்ற எண்ணம் எழுந்தது. உடனடியாக, நளனின் கவர்ந்திழுக்கும் காந்தக் கண்கள் பளிச்சிட்டன. சட்டென ஆனந்தம் புரளத் தொடங்கியது. தட்டுடன் நின்றிருந்த தாதி தமயந்தியை நெருங்கித் தோளைத் தொட்டாள். “நிற்க வேண்டாம், வாருங்கள்என்றாள்.

Sunday, 8 May 2022

நினைவுக்கு அப்பால் - சிறுகதை

 

ஏழாம் எண்  பேருந்துக்காக காத்திருந்த நேரத்தில் அது நடந்தது. ஏற்கனவே நின்றிருந்த பேருந்து கடக்கும்வரை காத்திருக்கும் பொறுமையற்ற ஆட்டோ ஒன்று பக்கவாட்டில் என் பக்கமாக வேகமாக சட்டென இறங்கி சிறிது தொலைவு ஓடி மீண்டும் தார்ச்சாலையில் வளைந்த நிலையில் ஏறிப் பறந்தது. ஆட்டோவுக்குள் யாரோ இளைஞனொருவன் கைநிறைய புகைப்படங்களைப் புரட்டியபடி இருந்ததை மட்டுமே நான் ஒரே ஒரு கணம் பார்த்தேன். ஆனால் முகமோ, அணிந்திருந்த ஆடைவிவரமோ எதுவுமே என் மனத்தில் பதியவில்லை. ஆட்டோவின் எதிர்பாராத நடத்தையால் என் மனம் அச்சத்தில் ஒடுங்கியது. மறுகணம் அதன் குலுக்கலால் அந்த இளைஞனின் பிடியிலிருந்து நழுவிய ஒரு புகைப்படம் காற்றில் அலைந்துஅலைந்து அடுத்த கணத்தில் என் மார்பில் வந்து படிந்தது.