சராசரி மனிதர்களின் எளிய
வாழ்க்கையே நவீன இலக்கியத்தின் மையமாக விளங்குகிறது என்பது ஒரு பொதுவான இலக்கணம். தொடக்ககாலப் படைப்புகளில் ஏராளமான அன்றாடக்காட்சிகளின்
தொகுப்பு தோராயமாக முன்வைக்கப்பட்டன. மெல்ல
மெல்ல அதே அன்றாடக்காட்சிகள் துல்லியத்தை நோக்கி நகர்ந்தன. மாபெரும் தருணங்கள் கதைவெளிக்குள்
நிகழ்ந்தன. ஒரு காலகட்டத்தில் எளிய மனிதர்களுக்குள் ஒளிந்து சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சிகளும்
சிறகு விரித்து விண்வெளியில் நீந்திச்செல்லும் பறவைகளும் சித்தரிக்கப்பட்டன. இன்னொரு
காலகட்டத்தில் யானைகளின் பிளிறலும் அஞ்சி வளைகளுக்குள் ஓடோடி ஒளிந்துகொள்ளும் எலிகளின்
நடுக்கமும் காட்சிப்படுத்தப்பட்டன. கையறுநிலையில் துன்பம் கொண்டு தவிப்பதையும் சின்னஞ்சிறு
புன்னகையையே ஒரு துடுப்பாகக் கொண்டு அதே துன்பத்தைக் கடந்துபோகும் அற்புதத்தையும் மற்றொருகாலகட்டம்
பதிவுசெய்தது.
இப்படி காலம்தோறும் நமது
அன்றாடங்களிலிருந்து சலித்துச்சலித்து புதியனவற்றைக் கண்டெடுத்தபடி இருக்கிறது இலக்கியம்.
அன்றாடங்களில் படிந்திருக்கும் நெகிழ்ச்சியைக் கண்டெடுத்த கண்கள் அதே அன்றாடங்களில்
படிந்திருக்கும் வன்மத்தை இன்று முன்வைக்கின்றன. இதுவும் ஒரு கட்டம். இந்தக் கட்டம்
உருவாக்கிய முக்கியமான இளம்படைப்பாளிகளில் ஒருவர் ஜி.கார்ல்மார்க்ஸ். அவருடைய படைப்புகளை
வன்மத்தைக் கலையாக்கும் எழுத்து என்று வகைப்படுத்தலாம்.
வருவதற்கு முன்பிருந்த வெயில் தொகுப்பில் பத்து கதைகள்
உள்ளன. ஆட்டம் என்னும் முதல் சிறுகதை மேல்தளத்தில்
சம்பவங்கள் சார்ந்து நகர்வதுபோலத் தோற்றமளித்தாலும் அதன் நிழல்தளத்தில் மனம் சார்ந்து
நகர்ந்து செல்கிறது சிறுகதை. இரண்டு நகர்வுகளையும் திறமையோடு இணைத்துப் பின்னிச் செல்கிறார்
காரல்மார்க்ஸ். தனிக்கட்டையாக வாழும் ஐம்பது வயதைக் கடந்த மனிதர் ஓர் இளம்பெண்ணைத்
திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவந்த நிலையில் திடீரென இறந்துவிடுகிறார். சிறுகதை இப்படித்
தொடங்கினாலும் கதை அந்த மனிதரைப்பற்றியதல்ல. மெல்ல நகர்ந்து, கருவுற்ற வேகத்தில் கணவனை
இழந்து நிற்கும் இளம்பெணின் திசையில் திரும்பினாலும், அவளைப்பற்றியதாகவும் அது வளரவில்லை.
பிறகு இறந்துபோனவருடைய மகளின் திசையில் திரும்பினாலும் அவளுடைய தரப்பையும் அது முன்வைக்கவில்லை.
தொடர்ந்து இறுதிக்கடனைச் செலுத்த அந்த வீட்டுக்கு வந்து சேரும் தெருக்காரர்களையும்
சொந்தக்காரர்களையும் காட்டி, அவர்கள் மது அருந்தும் காட்சியாகவும் விரிந்து சென்றாலும்,
கதையின் மையமாக அது வளரவில்லை. சாவுச்சடங்குக்காக குறவன் குறத்தியாட்டம் ஆடுவதற்கு
என ஒரு குழு வந்து இறங்கி ஆடத் தொடங்குகிறது. அது மரண வீடு என்பதையும் மறந்து, பலரும்
அந்த ஆட்டத்தை ரசிக்கிறார்கள். ஆட்டக்காரிகளின் உடலமைப்பைக் கண்களால் பருகித் திளைக்கிறார்கள்.
எனினும் அந்தக் கண்ணோட்டமும் கதைக்குள் முதன்மை பெறவில்லை.
இளைய ஆட்டக்காரி சமீபத்தில்
பிள்ளை பெற்றவள். பாலருந்தும் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு ஆட வந்திருக்கிறாள்.
ஆட வந்த இடத்தில் பால் கட்டிக்கொண்டு நெஞ்சுவலியில் தவிக்கிறாள். உடனடியாக பாலைப் பீய்ச்சி
வெளியேற்ற ஒரு தனியிடம் தேடி அலைகிறாள். சாவு வீட்டைச் சுற்றி எல்லாத் திசைகளிலும்
மனிதர்களே நிறைந்திருக்கிறார்கள். வழியறியாமல் தவியாய்த் தவிக்கும் அவர்களுக்கு ஆறுதலாக
ஒலிக்கிறது இறந்துபோனவருடைய மனைவியின் குரல். பிள்ளை பெற்றவளுக்கு, பிள்ளையைக் கருவுற்றவள்
கனிவு காட்டுகிறாள். ஆட்டக்காரியை வீட்டுக்குள் அழைத்து அறைக்குள் அனுப்பிவைக்கிறாள்.
சாவு வீடு என்னும் ஒற்றைக்களத்தில் கூடியிருக்கும் பலவிதமான மனிதர்களுடைய மனவோட்டங்களை
பொம்மலாட்டமாக மாற்றித் தொகுத்தளிக்கிறார் கார்ல்மார்க்ஸ். ஒன்று ஏளனம். இன்னொன்று
கோபம். மற்றொன்று பாசம். பிறிதொன்று கொண்டாட்டம். அனைத்துக்கும் அடியில் கருணையும்
கனிவும். கிளைக்குக்கிளை தாவும் குரங்கென மனம் ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்குத்
தாவியபடி இருக்கிறது. மனத்தின் பயணத்தைப் பின்தொடர்ந்து செல்வதை, தன் முதல் சிறுகதையிலிருந்தே
தொடங்கிவிட்டார் மார்க்ஸ்.
செவப்பு ஓணான் இன்னொரு முக்கியமான சிறுகதை. பள்ளிக்கூடத்தில்
படிக்கும் மகனுடைய கல்விக்கட்டணத்தைச் செலுத்த பணம் புரட்டமுடியாமல் தவிக்கிறார் ஒருவர்.
நேரில் சென்று கடன் கேட்க மனம் இடம்கொடுக்காததால், பள்ளி விடுமுறை நாளில் விளையாட்டுத்
தோழர்களோடு ஓணான் பிடித்து ஆடிக்கொண்டிருக்கும்
பன்னிரண்டு வயது மகனை பேருந்தில் ஏற்றி அனுப்பிவைக்கிறார். போன இடத்தில் கடன் கிடைக்கவில்லை.
வெறும் கையோடு மகன் திரும்பி வந்துவிடுகிறான். ஒருகணம் அவர் நிலைகுலைந்தாலும் அதை வெளியே
காட்டிக்கொள்ளவில்லை. வீட்டுக்குத் திரும்பி வருகிறார். வீட்டிலிருக்கும் மனைவி தன்
மூக்குத்தியைக் கழற்றித் தருகிறாள். அவர் அதை அடகுவைத்துப் பணம் வாங்க மீண்டும் கடைத்தெருவுக்குச்
செல்கிறார். இதுதான் கதையின் கோடு. இது ஓர் எளிய சூத்திரம். இப்படி பல கதைகள் இறந்த
காலத்தில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் காரல்மார்க்ஸ் அப்படி எழுதவில்லை. வீட்டுக்குத் திரும்பும்
பயணத்தில் ஒரு சிறிய மாற்றத்தை உருவாக்குகிறார். சற்றே நிலைகுலைந்த நிலையில் காணப்பட்டாலும்
அந்த அப்பா மெல்ல மெல்ல தன் நிதானத்தின் வழியாக அதை கடந்து வருகிறார். பேருந்து நிலையத்திலிருந்து
அவர் நேராக வீட்டுக்குச் செல்லவில்லை. வழியில்
ஒரு மாந்தோப்பிலிருந்து மகனுக்கு மாங்காய் பறித்து தின்னக் கொடுக்கிறார். பிறகு ஏரிக்குள்
இறங்கி இருவரும் நீந்திக் குளிக்கிறார்கள். மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கிறார்
அவர். பொழுது கழியக்கழிய அவர் பதற்றத்திலிருந்து தன்னை மீட்டெடுத்துக்கொள்கிறார். ஆனால்
இக்கட்டங்கள் வாசகனைப் பதற்றமுற வைத்துவிடுகின்றன. இந்த இடைச்செருகல் ஓர் எளிய கதையை
அழகான கதையாக மாற்றிவிடுகிறது.
காட்டாமணக்கு, உப்புச்சுவை, மகிழம்பூ மூன்றும் வேறு விதமான
கதைகள். மனம் நிறைந்த கசப்புணர்வோடு வாழும் எளிய ஒரு வேலையில்லாத பட்டதாரியின் கதையெனத்
தொடங்குகிறது காட்டாமணக்கு. சகோதரன் வேலைக்குச் செல்கிறான். சகோதரியும் வேலைக்குச்
செல்கிறாள். அவனுக்கு மட்டும் வேலை கிடைக்கவில்லை. வீடு ஒருவித நுட்பமான வகையில் அவனை
அவமானப்படுத்துவதாக அவன் நம்புகிறான். அதனால்தான் அந்தக் கசப்பு.
ஒரு நாள் நள்ளிரவில் தூக்கம்
கலைந்து வீட்டைவிட்டு வெளியே வந்து நிற்கிறான். இவனைப்போலவே பக்கத்துவீட்டிலிருந்தும்
ஒரு இளைஞன் வந்து நிற்கிறான். புகைபிடிக்கச் செல்லலாமா என்று இவனைப் பார்த்து அழைக்கிறான்
அவன். அன்று முழுக்க சிகரெட் வாங்க பணம் கிடைக்காமல் அலைந்து சோர்ந்த இவன் அந்த அழைப்புக்காகவே
காத்திருந்ததுபோல புறப்படுகிறான். ஊரைக் கடந்து சென்று ஒரு தோப்பின் பக்கம் ஒதுங்கி
புகைத்தபடி பேசிக்கொண்டிருக்கிறார்கள். நீண்ட நேரத்துக்குப் பிறகு, அவன் அப்படியே தன்
வயலுக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு புறப்பட்டுப் போய்விடுகிறான். எழுந்து செல்ல மனமில்லாத
இவன் காட்டாமணக்குச் செடியோரமாக படுத்துவிடுகிறான். மனம் கசப்பான நினைவுகளால் நிறைந்திருக்கிறது.
அத்தருணத்தில் எதிர்பாராதவிதமாக சற்றே தொலவில் வயல்வெளி வரப்புக்கு அருகில் வந்து நின்று
காத்திருக்கும் ஒரு பெண்ணைப் பார்க்க நேர்கிறது. அக்கணத்திலிருந்து அவன் மனத்தின் விசையால்
செலுத்தப்படும் பொம்மையாகிவிடுகிறான். முதலில் அவள் யார் என அறிந்துகொள்ளும் ஆவல் எழுகிறது.
அவள் முகத்தைப் பார்த்ததும் அவள் யாருக்காக வந்து காத்திருக்கக்கூடும் என அறியும் ஆவல்.
பிறகு அவளை நெருங்கிப் பார்த்தாலென்ன என்னும் துணிச்சல் தூண்டிவிடுகிறது. ஓர் இரையை
நெருங்கும் விலங்கென அவளை அவன் நெருங்கிச் செல்கிறான். அவள் திகைத்து விலகியோட முனையும்போது
ஒரு விலங்கைப்போல தாக்கி வீழ்த்துகிறான். தீராத வெறியோடு அவளைப் புசித்து முடித்து
வீசுகிறான். அவள் நிலைகுலைந்து எழுந்தோட அவன் ஒருவித கசப்புணர்வோடு பழைய காட்டாமணக்குச்
செடியோரமாக வந்து படுத்துக்கொள்கிறான். குறியிடத்துக்கு தாமதமாக வந்து சேர்ந்து காத்திருக்கும்
இளைஞனைத் தன் மறைவிடத்திலிருந்து பார்க்கின்றன அவன் கண்கள். எவ்வளவு எளிதாக தொட்டுவிடும்
தொலைவில் இந்த வன்மம் இருக்கிறது என்பதை திகைக்கத்திகைக்க காட்சிப்படுத்துகிறார் கார்ல்மார்க்ஸ்.
உணர்ச்சிவேகமே இல்லாத ஒருவித உலர்நடையில் அந்த வன்மத்தைப் படிக்கும்போது நாமும் திகைத்து
உறைந்துவிடுகிறோம்.
காட்டாமணக்கு சிறுகதையைப்
போலவே இரவில் நிகழும் இன்னொரு சிறுகதை உப்புச்சுவை.
இக்கதையின் அடுக்கடுக்கான திருப்பங்கள் திகைக்கவைக்கின்றன. சொந்த ஊரைவிட்டு வந்து
இன்னொரு ஊரில் உள்ள காதலியைப் பார்க்க வந்தவன் ஊரே அறிய அகப்பட்டுக்கொள்கிறான். இருவருமே
ஏற்கனவே திருமணமானவர்கள். பிடித்தவர்கள் இருவரையும்
மரத்தில் கட்டிப் போட்டு அடிக்கிறார்கள். ரத்தமும் வேர்வையும் முகத்தில் வழிகிறது.
ரத்தத்தால் மட்டும் எழுவதல்ல உப்புச்சுவை. வாழ்வில் காமமும் ஒருவிதத்தில் உப்பே. இரவில்
ஊரே கூடி பஞ்சாயத்து நடத்துகிறது. அந்தப் பெண்ணின் பெற்றோருக்கும் அந்த ஆணின் குடும்பத்துக்கும்
தகவல் போகிறது. பெண்ணின் பெற்றோர் வர மறுத்துவிடுகிறார்கள். ஆணின் குடும்பம் வந்து
புலம்புகிறது. தன் மனைவியையும் மகனையும் ஏறிட்டுப் பார்க்ககூட அவன் கூசுகிறான். அவள்
பஞ்சாயத்தாரிடம் பேசி அவனை விடுவிக்கிறாள். யாரும் எதிர்பாராத விதமாக அந்தப் பெண்ணையும்
விடுவித்து தன்னோடு அழைத்துச் செல்கிறாள். தன் தாய்மையாலும் பெருந்தன்மையாலும் வன்மத்தை
அவள் கடந்து செல்லும் விதம் முக்கியமானதொரு திருப்பம்.
இந்த வன்மம் மானுடத்தையே
திகைக்கவைக்கிறது. தலகீழாகக் கவிழ்த்து உருட்டிவிட முனைகிறது. சேகரித்து வைத்திருக்கும்
அறிவையும் அனுபவத்தையும் பொருளற்றதாக்கிவிடுகிறது. ஆனால் அந்த வன்மம் வேறெங்கோ ஒரு
புள்ளியில் முளைத்து நம்மை நெருங்கி வரவில்லை, நமக்குள்ளிருந்தே முளைத்தெழுந்து நம்மைப்
பொசுக்கிச் சாம்பலாக்கிவிடுகிறது என்பதுதான் பெருந்துயரம்.
ஒவ்வொரு கதையும் நிறுத்தி
நிதானமாக செதுக்கி முடிக்கப்பட்ட சிற்பம்போல நேர்த்தியாக உள்ளது. முதல் தொகுப்பின்
கதையாசிரியர் என்னும் வகையில் கார்ல்மார்க்ஸ்க்கு இது பெரிய வெற்றி என்றே சொல்லவேண்டும்.
தமிழ்ச்சிறுகதையுலகம் இவருடைய பங்களிப்பால் மேலும் சில உயரங்களைத் தொடக்கூடும்.
(தீராநதி - அக்டோபர் மாத இதழில் வெளிவந்த கட்டுரை)
( முன்பிருந்த
வெயில். சிறுகதைகள். ஜி.கார்ல் மார்க்ஸ். எதிர் வெளியீடு. 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி.
விலை.ரூ100)