Home

Tuesday 14 November 2017

கலவரத்தின் பன்முகங்கள்


1998 ஆம் ஆண்டில் கோவை நகரில் மதக்கலவரம் நிகழ்ந்தது. 19 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். அக்கம்பக்கத்தில் இருந்த பல இஸ்லாமியக் குடியிருப்புகள் சிதைக்கப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன. பல வீடுகள் எரிக்கப்பட்டன. சிறுகச்சிறுக சேர்த்த செல்வத்தை ஒரு சில மணி நேரங்களில் இழந்து மனிதர்கள் தெருவில் நிற்கும் நிலை உருவானது. அனைத்தும் ஆறா வடுக்களாக மாறி பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்தக் கலவரத்தை களமாகக் கொண்ட பல்வேறு சிறுகதைகளைத் தொகுப்பாக்கியிருக்கிறார் அ.கரீம் என்னும் இளம் எழுத்தாளர்.


தாழிடப்பட்ட கதவுகள் அவருடைய முதல் தொகுப்பு. ஒரு சில கதைகள் கலவரம் நிகழ்ந்த தருணத்தையே நேரடிக்களமாகக் கொண்டவை. இன்று உள்ள ஒரு வாழ்வை முன்வைப்பதன் வழியாக, அன்று நிகழ்ந்த கலவரம் எத்தகைய வலிகளையெல்லாம் நிகழ்த்தியிருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக எழுதப்பட்ட சில கதைகளும் இத்தொகுதியில் உள்ளன. ஒவ்வொன்றும் வாசகனின் நெஞ்சோடு ஒரு நேரடி உரையாடலை நிகழ்த்தும்வண்ணம் எழுதப்பட்டுள்ளது. அவருடைய நிதானமும் பக்குவமான மொழியும் நம்பகத்தன்மை மிக்க வகையில் கதைச்சூழலை அமைத்திருக்கும் விதமும் பாராட்டுக்குரியவை. நம்பிக்கையூட்டும் இளம்படைப்பாளியாக இத்தொகுதியின் வழியாக அ.கரீம் வெளிப்பட்டிருக்கிறார்.

மொகல்லாவின் மய்யத்துகள் சிறுகதையில் இடம்பெற்றுள்ள சிறியதொரு புறக்காட்சியின் சித்தரிப்பு மிகமுக்கியமானது. ஒருவகையில் இந்த மொத்தத் தொகுப்பின் உலகத்தையே படிமமாகக் காட்டும் விதமாக அது அமைந்திருக்கிறது. அது ஒரு தயிர்வடைப்பூச்சியின் சித்திரம். வேப்பமரத்தின் கொழுந்து இலையைப் பற்றிக்கொண்டு சிறகுவிரித்து பறந்து பழகும் சின்னஞ்சிறிய பூச்சி. உற்சாக மிகுதியில் தனது சிறகுகளைப் படபடவென அடித்துக் கிளம்பிப் பறந்து தொப்பென்று தார்ச்சாலையில் விழுந்துவிடுகிறது.  பிறகு ஒவ்வொரு அடியாய் நகர்ந்து தனக்கு முன்னால் இருக்கும் வேகத்தடையின் மீது ஏறி நின்று மீண்டும் பறக்க முயற்சி செய்யும் தருணத்தில் அந்தப் பக்கமாக வேகமாக வந்த காவல் துறையின் வாகனத்தின் சக்கரம்  அதை நசுக்கிவிட்டுப் போகிறது. நசுங்கிப்போன தயிர்வடைப்பூச்சிகளின் குரல்களாலும் வேதனைகளாலும் நிறைந்திருக்கின்றன அ.கரீமின் கதைகள்.

அன்புள்ள அத்தாவுக்கு இத்தொகுப்பின் மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்று. கலவரம் முடிந்து நிலைமை மெல்ல மெல்ல சீரடையத் தொடங்கிய காலத்தில் வாடகைக்கு வீடெடுத்து தங்க வருகிறது ஒரு குடும்பம். அம்மாவும் மகனும் மட்டுமே கொண்ட சிறிய குடும்பம். அவன் பெயர் அப்துல் ரசாக். ஒரு முறை அப்துல் சுக்கூர் என்னும் பெயருக்கு எழுதப்பட்ட கடிதத்தை அவனிடம் கொடுத்துவிட்டுச் செல்கிறார் அஞ்சல்காரர். எழுதப்பட்ட முகவரி சரியாக இருந்தாலும், பெயர்க்குழப்பத்தின் காரணமாக அவன் அதை அப்படியே வைத்திருக்கிறான். சரியான ஆளைக் கண்டுபிடித்து அக்கடிதத்தைச் சேர்த்துவிடவேண்டும் என முயற்சி செய்கிறான். அவன் முயற்சிகள் தோல்வியடைகின்றன. இறுதியில் விவரம் தெரிந்துகொள்வதற்காக கடிதத்தைத் திறந்து படிக்கிறான். ஒரு தந்தை மகனுக்கு எழுதிய கடிதம் அது. ஓர் இந்துப்பெண்ணைத் திருமணம் புரிந்துகொண்டு வந்த மகனை ஏற்றுக்கொள்ள முடியாத கசப்பில் வசைபாடி வீட்டைவிட்டு வெளியேற்றி பழைய செயலுக்காக வருத்தம் தெரிவித்து எழுதப்பட்ட கடிதம். உடனே திரும்பி வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. ரசாக் மீண்டும் அந்தச் சரியான இளைஞனைத் தேடியலைகிறான். இதற்கிடையில் நாட்கள் நகர்ந்துவிடுகின்றன. அதற்கிடையில் அடுத்த கடிதமும் வந்துவிடுகிறது. இனியும் தாமதம் செய்யவேண்டாம் எனக் கருதி சுக்குராக உருமாறி அவனே ஒரு பதில் கடிதத்தை எழுதி அனுப்பிவைத்துவிடுகிறான். சில நாட்கள் கழித்து மீண்டும் ஒரு கடிதம் அவனுக்கு வருகிறது. சுக்குரின் நண்பர் ஆறுமுகம் என்பவர் அதை எழுதியிருக்கிறார். சுக்குரின் தந்தை இறந்துவிட்டார் என்று குறிப்பிட்டுவிட்டு வயதானவரின் மனவேதனையைப் போக்கும் விதமாக அவன் எழுதிய கடிதத்துக்கு நன்றி தெரிவித்திருக்கும் கடிதம். ஒரு காலத்தில் அவனும் சுக்கூரும் சேர்ந்து அந்த நகரில் தங்கியிருந்ததாகவும் கலவரத்தில் ஆளுக்கொரு திசையில் பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தான். புதுமணத்தம்பதியாக அங்கு வாழ்ந்த குடும்பத்துக்கு என்ன நிகழ்ந்ததென அவனுக்கும் தெரியவில்லை.

ஓர் இந்துப் பெண்ணும் இஸ்லாமிய இளைஞனும் திருமணம் செய்து கொண்டு வாழவும் ஓர் இந்து இளைஞனும் இஸ்லாமிய இளைஞனும் நட்புடன் சேர்ந்து திரியவும் எவ்விதமான தடையுமற்றதாகவே இச்சமூகம் இதுவரை முன்னேறி வந்திருக்கிறது. திடீரென மூண்டெழுந்த மதக்கலவரம் எல்லாவற்றையும் சீர்குலைத்துவிட்டுப் போய்விடுகிறது. நல்லிணக்கம் என்பது இம்மண்ணில் காலம்காலமாக வாழ்ந்து வரும் பண்பு. மானுடகுலமே கண்டெடுத்து வளர்த்துக்கொண்ட உணர்வு. மண்ணுக்கடியில் ஆழமாக வேரூன்றியிருக்கும் மரம் அது. வெட்டி வீழ்த்த முனைந்தாலும், எங்கேனும் ஒரு மூலையிலிந்து மீண்டும் துளிர்த்து தழைத்துப் பெருகி நிறைவதை யாராலும் தடுத்துவிட முடியாது. சாரமான அப்புள்ளியைத் தொட்டு மீள்கிறது இச்சிறுகதை. கடிதத்தைப் படித்ததும் இளம்வயதிலேயே மறைந்துபோன தன் அப்பாவை அவன் நினைத்துக்கொள்வதையும் அவருக்காக அவன் தொழுவதையும் மிகவும் நுட்பமாகச் சித்தரித்துள்ளார் கரீம்.

 கடைவாசலைக் கூட்டி, குற்றேவல்கள் செய்து பிழைத்துவரும் சொர்ணத்தம்மாள் என்னும் மூதாட்டியின் கோணத்திலிருந்து விரிவடையும் வந்தாரை சிறுகதை முக்கியமானதொரு புள்ளியை நோக்கி நம் கவனத்தை ஈர்க்கிறது. சொர்ணத்தம்மாள் ஒரு காலத்தில் இட்லிக்கடை வைத்து பிழைத்தவள். உடலாற்றல் குறைந்தபிறகு இயலாமையின் காரணமாக கடைவாசலைப் பெருக்கித் தூய்மைப்படுத்திப் பிழைக்கத் தொடங்குகிறாள். அவள் அண்டியிருக்கும் கடை சலீமுக்குச் சொந்தமானது. சின்ன வயதில் கேரளத்திலிருந்து பிழைக்க வந்து, தொழில் கற்று ஒரு கடையைச் சொந்தமாக நடத்தும் அளவுக்கு உயர்ந்திருப்பவன் அவன். அத்தருணத்தில் விநாயகர் சதுர்த்தி வருகிறது. நன்கொடை வசூல் செய்கிறார்கள். கோவிலுக்கு அருகிலிருக்கும் மைதானத்தில் சில இளைஞர்கள் கூடி உடற்பயிற்சி செய்கிறார்கள். இருட்டும் வரைக்கும் உரையாடிவிட்டு கலைந்து செல்கிறார்கள். ஒருநாள் திடீரென கலவரம் வெடிக்கிறது. எங்கோ நிகழ்ந்த கலவரத்தை சாக்காகக் கொண்டு கடைகள் சூறையாடப்படுகின்றன. சலீம் கடை தீக்கிரையாகிறது. எப்படியோ உயிர்தப்பி ஓடும் சலீம் தன் மனைவியுடன் சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றுவிடுகிறான். கலவரம் ஓய்ந்த பின்பு கடை திறக்கப்படலாம் என ஏமாற்றத்துடன் காத்திருக்கிறாள் பாட்டி. வழக்கமாக கடையோரம் ஒதுங்கும் காவல் நாய் காத்திருக்கிறது. கடையில் வேலை செய்துவந்த இரு தொழிலாளர்கள் காத்திருக்கிறார்கள். பால் பாக்கெட் போட்டு மாதத்துக்கு நூறோ இருநூறோ சம்பாதித்து வந்த சிறுவன் காத்திருக்கிறான். அதுவரைக்கும் வந்தாரை வாழ வைத்த ஊர் வாழ்கிறவர்களை விரட்டும் ஊராக மாறிவிடுகிறது.

தாழிடப்பட்ட கதவுகள் குறிப்பிடத்தக்கதொரு முயற்சி. நகரில் செருப்புக்கடை வைத்துப் பிழைக்கும் இளைஞன் அமானுல்லா. அவனும் அவன் மனைவியும் சிறுவயது மகனும் சேர்ந்து வசிக்கிறார்கள். அவனோடு நெருக்கமாகப் பழகிவந்த இந்து இளைஞன் திடீரென நட்பை முரித்துக்கொள்கிறான். அவனை எதிரியாக நினைத்து வன்மம் கொள்கிறான். நகரம் கலவரத்துக்கு இலக்கானதும், அதையே சாக்காகக் கொண்டு கடைவீதிகளும் வீடுகளும் சூறையாடப்படுகின்றன. மரத்தடியில் இளநீர் விற்ற பெரியவர் ரத்த வெள்ளத்தில் மிதக்கிறார். அதை வாங்கிப் பருகிக்கொண்டிருந்த அமானுல்லா காயங்களோடு தப்பிக்கிறான். அவன் கண்ணெதிரிலேயே கடை தீக்கிரையாகிறது. உயிர்பிழைக்கும் பொருட்டு வீட்டைநோக்கி ஓடுகிறான் அவன். நகரத்தில் நிகழ்ந்த சூறை அவன் வசிக்கும் தெருவையும் விட்டுவைக்கவில்லை. வீடு உட்பக்கமாக தாழிட்டுக்கொண்டு அவன் மனைவியும் மகனும் உள்ளே அஞ்சி ஒடுங்கியிருக்கிறார்கள். யாரும் பாராத வண்ணம் பின்பக்கக் கதவை திறக்கச் செய்து அவனும் உள்ளே சென்று ஒளிந்துகொள்கிறான். கலவரக்காரர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துவிடக் கூடும் என்ற எண்ணத்தால் ஒரு பெரிய பூட்டை எடுத்துச் சென்று வெளிப்பக்கமாக கதவைப் பூட்டிவிட்டு உள்ளே மறைந்துகொள்கிறான். ஐந்து நாட்களை அவர்கள் அந்தத் தாழிடப்பட்ட வீட்டுக்குள் மறைந்து வாழ்கிறார்கள். காதில் வந்து விழும் ஓலங்களையும் வசைக்குரல்களையும் இரைச்சல்களையும் கேட்டபடி அச்சத்தில் நடுங்கி உறைந்துவிடுகிறார்கள். ஒவ்வொரு வேளையும் முருங்கைக்கீரையை வதக்கி அந்தக் குடும்பம் சாப்பிடுகிறது. நல்லிணக்கம் என்னும் மனக்கதவைப் பூட்டிக்கொண்ட ஒரு சாராரால் தாழிடப்பட்ட வீட்டுக்குள் வாழவேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் மற்றொரு சாரார்.

குற்றமே செய்யாத ஒருவனை குண்டுவீச்சு வழக்கோடு தொடர்புபடுத்தி கைது செய்து பதினேழு ஆண்டுகள் சிறையில் வைத்திருந்துவிட்டு, இறுதியாக நிரபராதி என அறிவித்து விடுதலை செய்கிறது அரசு. சிறைக்குச் சென்ற அப்பாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் தான் பள்ளியிலும் தெருக்களிலும் அனுபவித்த அவமானங்களை மறக்கமுடியாதவளாகத் தவிக்கிறாள் அவனுடைய மகளான எட்டு வயதுச் சிறுமி. ஆறாத வடுவாக பதினேழு ஆண்டுகளாக அந்த அவமானத்தைச் சுமந்து வளர்கிறாள் அவள். அவளுக்குத் திருமணம் நிகழும் தருணத்தில் அவள் அப்பா விடுதலை பெறுகிறான். முதுமையெய்தி  தளர்ந்து வரும் அவனோடு அவள் எக்காரணத்தை முன்னிட்டும் நல்லுறவை விரும்பவில்லை. பாராமுகமாகவே இருக்கிறாள். யாருடைய சொல்லுக்கும் அவள் செவி திறக்கவில்லை. தன் உடல் சக்தியை மீறி எல்லாத் திருமண வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு  செய்யும் அந்த அப்பா மகளின் அழைப்புக்காகக் காத்திருக்கிறார். திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்குப் புறப்படும் தருணத்தில் முதன்முதலாக வாயைத் திறந்து அப்பா என அழைத்தபடி அவர் கைகளைப் பற்றிக்கொள்கிறாள். வெடிப்புக்குப் பின் காலம் எந்த அளவுக்குக் கொடுமையானது என்பதை ஒரு சின்ன உலகியல் காட்சி வழியாக உணர்த்துகிறார் கரீம். ஒருவன் வாழ்வில் பொருளை இழக்கலாம். பொன்னை இழக்கலாம். அப்பா என வாய்நிறைய அழைக்கக்கூடிய ஒரு சொல்லையும் அன்பையும் பாசத்தையும் இழந்த ஒருவனுடைய துயரம் உலகத்திலேயே பெரிய துயரம்.

இதழியலைத் தேர்ந்தெடுக்கும் ஒரு இளைஞன் பழைய கலவரத்தையொட்டிய நிகழ்ச்சிகளைப்பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்கான தகவல்களைத் திரட்டத் தொடங்குவதில் ஆரம்பிக்கும் 144 என்னும் சிறுகதை, அந்தக் கலவரத்தில் கரிந்துபோன ஒரு காதல் கதையை முன்வைக்கிறது. பொறியியல் பட்டதாரிகளான ஆணும் பெண்ணும் உயிருக்குயிராகக் காதலிக்கிறார்கள். பெங்களூர் சென்று வாழ்க்கையைத் தொடங்கலாம் என்பது அவர்கள் திட்டம். இருவரும் ஸ்டேஷனில் சந்தித்துக்கொள்கிறார்கள். தன் முதல் பயணத்தை நினைத்துப் பரவசம் நிறைந்த மனநிலையில் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்தபடி இருந்த தருணத்தில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்கிறது. காதலனின் கண்முன்னாலேயே காதலி துண்டுதுண்டாகக் கரிந்துபோகிறாள். அவன் இரு கால்களையும் இழந்துவிடுகிறான். மிக்ஸி பழுது பார்ப்பவனாக எஞ்சிய வாழ்க்கையைக் கழிக்கிறான் அவன்.

கலவரத்தின் பன்முகங்களை வாசகர்களுக்குக் காட்சிப்படுத்துகின்றன கரீமின் சிறுகதைகள். எந்த இடத்திலும் மிகையான சொல் என எதுவும் தோன்றிவிடாதபடி ஒவ்வொரு கதையையும் கட்டுக்கோப்பாக எழுதியிருக்கும் கரீம் சமீப காலமாக எழுதிவரும் இளைஞர்களில் மிகவும் நம்பிக்கையூட்டுபவராக தெரிகிறார்.

(தீராநதி- செப்டம்பர்2017  மாத இதழில் வெளிவந்த கட்டுரை)  (தாழிடப்பட்ட கதவுகள். அ.கரீம். சிறுகதைகள். பாரதி புத்தகாலயம், இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை -18. விலை.ரூ.140)