Home

Friday 21 February 2020

கோபிசெட்டிப் பாளையம் லட்சுமண ஐயர் - எளிமையும் நெருக்கமும் - கட்டுரை




1944 ஆம் ஆண்டு. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறைத்தண்டனையை அனுபவித்துவிட்டு சொந்த ஊரான கோபிச்செட்டி பாளையத்துக்குத் திரும்பி வந்திருந்தார் இருபத்தேழு வயதான இளைஞரொருவர். ஒருநாள் தன் வயதையொத்த நண்பர்களுடன் சிறையனுபவங்களைப் பகிர்ந்தபடி உரையாடிக்கொண்டிருந்த தருணத்தில் கிரி என்னும் நண்பர் பேச்சோடு பேச்சாக காந்தியடிகளைச் சந்திக்கச் செல்லலாமா?” என்று கேட்டார். இளைஞரின் ஆழ்மனத்தில் கருவாக இருந்த அதே விருப்பம் அக்கணமே சுடர்விட்டு பெரிதானது. சென்னையில் உடல்நலம் குன்றியிருக்கும் நண்பரொருவரைப் பார்த்துவிட்டு வருவதாக வீட்டினரிடம் தெரிவித்துவிட்டு இருவரும் புறப்பட்டனர். நேராக சென்னைக்குச் சென்று அங்கிருந்து வண்டி மாறி வார்தாவுக்குப் போனார்கள்.

வார்தா நிலையத்தில் அவர்கள் இறங்கியபோது இரவு கவியத் தொடங்கிவிட்டது. அங்கிருந்து ஆசிரமத்துக்குச் செல்ல அவர்களுக்கு எந்த வண்டியும் கிடைக்கவில்லை. அதனால் இருவரும் உரையாடியபடியே ஆசிரமத்துக்கு நடந்து சென்றனர். அவர்கள் சென்று சேர்ந்த நேரத்தில் இரவுணவை முடித்துவிட்டு அனைவரும் உறங்கச் சென்றுவிட்டிருந்தனர். உணவும் கிடைக்கவில்லை.  ஆசிரமத்தில் தங்கியிருப்பவர்களுக்குத் தேவையான அளவு மட்டுமே சமைக்கப்படுமென்று சொல்லப்பட்டது. மறுநாள் காலையில்தான் காந்தியடிகளைச் சந்திக்கமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. வேறு வழியில்லாமல் இருவரும் மீண்டும் வார்தா நிலையத்துக்கு நடந்துவந்தார்கள்.
மறுநாள் அவர்கள் மீண்டும் ஆசிரமத்துக்குச் சென்றனர். காந்தியடிகளைச் சந்தித்து சத்தியாக்கிரகியாகத் தொண்டாற்றும் விருப்பத்தைத் தெரியப்படுத்தினர். காந்தியடிகள் தன்னோடு உரையாடிய இளைஞரை சிறிதுநேரம் கூர்ந்து நோக்கினார். பின்பு அவரைப்பற்றியும் அவருடைய ஊரைப்பற்றியுமான விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். பிறகு அமைதியான குரலில் அவரிடம் தேசத்துக்குத் தேவையான அளவில் சத்தியாகிரகிகள் தயாராக இருப்பதாகவும் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றத்துக்கு உழைப்பவர்களுக்கான தேவையே தற்சமயம் மிகுதியாக உள்ளதென்றும் தெரிவித்தார். தொடர்ந்துஊருக்குத் திரும்பிச் செல். அங்கு வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சேவை செய். அவர்களுடைய பிள்ளைகள் படிப்பதற்கு பள்ளிக்கூடம் நடத்து. இச்செயல்களே இந்தக் காலத்துக்கு மிகமிக முக்கியம்என்று தெரிவித்தார். அக்கணத்தில் காந்தியடிகளின் ஒவ்வொரு சொல்லையும் தனக்கு விதிக்கப்பட்ட கட்டளையாக எடுத்துக்கொண்டு உத்வேகத்துடன் திரும்பினார் அந்த இளைஞர். அந்த இளைஞரின் பெயர் லட்சுமண ஐயர்.
காந்தியடிகளைச் சந்திக்கச் செல்வதற்கு முன்பேயே சமூக சேவையில் ஆர்வமும் சுதந்திரப் போராட்ட வேட்கையும் நிறைந்தவராக இருந்தார் லட்சுமண ஐயர். அவர் தந்தையார் சீனிவாச ஐயர் வழியாக அக்குணங்கள் அவரிடம் இடம்பெற்றிருந்தன. மனிதர்களிடையே மேல் கீழ் பாகுபாடு பார்க்கும் எண்ணத்தை அறவே உதறிவிட்டு அனைவரோடும் சரிசமமாகப் பேசிப் பழகியவர் அவர். அவர் மட்டுமல்ல, அவருடைய குடும்பத்தினர் அனைவருமே அதேபோன்ற எண்ணமுடையவர்களாக இருந்தனர். கோபிசசெட்டிப் பாளையம் வழியாக பயணம் செய்யும் நேரு, வினோபா பாவே, சத்தியமூர்த்தி, இராஜாஜி     என பல தலைவர்கள் வந்து தங்கி உரையாடிவிட்டுச் செல்லும் இடமாக அவருடைய வீடு இருந்ததால் சுதந்திரம் பற்றிய உரையாடல்களைக் கேட்டுக்கேட்டு அவரிடமும் அந்த நாட்டம் உருவானது.
1931 ஆம் ஆண்டு கோபிசெட்டிப் பாளையத்தில்  சுதந்திரப்போராட்டம் பற்றி சொற்பொழிவாற்றுவதற்காக ஒருமுறை சத்தியமூர்த்தியை அழைத்திருந்தார் சீனிவாச ஐயர். அந்தக் கூட்டத்துக்கான அறிவிப்புச் செய்தியை சிறுவனாக இருந்த லட்சுமண ஐயரே ஊர்முழுக்க பறையடித்துத் தெரிவித்தபடி நடந்து சென்றார். பிராமண வகுப்பைச் சேர்ந்த சிறுவன் ஊர்முழுக்க பறையடித்துக்கொண்டு செல்வதைப் பார்த்து முகம் சுளித்த பலர் சீனிவாச ஐயரைத் தேடிவந்து சந்தித்து புகாரளித்தனர். “இதற்காக ஏன் பதற்றமடைகிறீர்கள். இதில் குற்றம் சொல்ல ஒன்றுமில்லையே, அவன் என்னிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றிருக்கிறான். நீங்கள் சென்று உங்கள் வேலையைப் பாருங்கள்என்று எடுத்துரைத்து அனுப்பிவைத்துவிட்டார் அவர். அதே நேரத்தில் காவலர்கள் அந்தச் சிறுவனைக் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். சிறுவன் என்றும் பாராமல் அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றச் சொல்லிவிட்டு அடித்துக் கொடுமை செய்தனர். ஆயினும் வாய்தவறிக் கூட அச்சிறுவன் தன்னைப்பற்றிய எந்த விவரத்தையும்  அவர்களிடம் சொல்லவில்லை. ஆனாலும் வேதனையாலும் அச்சத்தாலும் சிறுநீர் வந்துவிட்டது. அதனால் அருவருப்படைந்த காவலர்கள் ஆடைகளை எடுத்து வீசியெறிந்து ஓடிப் போய்விடு என்று சிறுவனை அனுப்பிவைத்துவிட்டனர்.
காந்தியடிகளைச் சந்தித்துவிட்டுத் திரும்பிய லட்சுமண ஐயர் தண்ணீர்த்தேவைக்காக அங்குமிங்கும் அலைந்து திரியும் தாழ்த்தப்பட்டோரின் நிலையைப் பார்த்து பெரிதும் மனம் வருந்தினார். அந்த ஊரில் மொத்தம் இருபத்தாறு பொதுக்கிணறுகள் இருந்தன. ஆனால் அவ்விடங்களில் வசித்துவந்த உயர்வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அக்கிணறுகளைப் பயன்படுத்தி வந்தனர். அக்கிணறுகளில் தண்ணீர் எடுக்கவரும் தாழ்த்தப்பட்டவர்களைத் தடுத்து திருப்பியனுப்பினார்கள். வாய்வழி உத்தரவாக அந்தத் தடை எல்லா இடங்களிலும் நிலவியது. அதனால் தாழ்த்தப்பட்டோர் ஊரைத் தாண்டி வெகுதொலைவு நடந்து சென்று கிடைக்கும் நீரைக் கொண்டுவந்து பயன்படுத்தும் நிலைக்கு ஆளானார்கள். அவர்களை அழைத்த லட்சுமண ஐயர் தமக்குச் சொந்தமான கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்லுமாறு சொன்னார்.
லட்சுமண ஐயரின் செய்கை ஊராரைக் கொதிக்கவைத்தது. உடனே அனைவரும் சேர்ந்து கடுமையான குரலில் அவரை வசைபாடத் தொடங்கினர். தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் எடுக்க அனுமதிக்கக்கூடாது என்று மிரட்டினார்கள். தமக்குச் சொந்தமான இடத்தில் தம் தேவைக்காக அமைத்த கிணற்றுநீரை தம் விருப்பம்போல மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் உரிமை தனக்கு இருக்கிறது என்றும் அதைத் தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்றும் தெரிவித்துவிட்டு அமைதியாக இருந்தார் லட்சுமண ஐயர். ஐயரைத் தடுக்கமுடியாத ஊரார் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் அக்கணமே சாதிவிலக்கம் செய்வதாகத் தெரிவித்தனர். அதைக் கேட்டு லட்சுமண ஐயர் மனம் சிறிதும் தளர்ந்துவிடவில்லை. இருபத்தாறு பொதுக்கிணறுகளிலும் தண்ணீர் எடுத்துக்கொள்ளும் உரிமை தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதனால் மேலும் சீண்டப்பட்ட ஊரார் அவர் மீது தீராத பகைமை கொண்டவர்களாக மாறினர். அவருடைய சகோதரி புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டுக்குத் உடனடியாக திருப்பி அனுப்பப்பட்டார். ஆயினும் வழக்கைத் தொடர்ந்து நடத்தி வெற்றி பெற்றார் லட்சுமண ஐயர். அந்தத் தீர்ப்பின் வழியாக எல்லாக் கிணறுகளிலிருந்தும் தண்ணீர் எடுத்துக்கொள்ளும் உரிமையை சட்டப்படி பெற்றனர் தாழ்த்தப்பட்டோர்.
கோபிசெட்டிப் பாளையத்தை ஒட்டி புதுப்பாளையம் என்னுமிடத்தில் தாழ்த்தப்பட்டோர் கூடி வசிக்கும் ஒரு குடியிருப்பு இருந்தது. ஏறத்தாழ இருநூறு குடும்பங்கள் அங்கு வசித்துவந்தார்கள். அப்பகுதிக்கு அருகில் மேல்வகுப்பினருக்குச் சொந்தமான விளைநிலங்கள் இருந்தன. அவர்கள் ஏதோ ஓர் அவசரத் தேவையை முன்னிட்டு அக்குடியிருப்புக்கு அறுநூறு ரூபாய் கொடுத்து உதவினர்.  நாளடைவில் தம் நிலங்களில் மட்டுமே அவர்கள் வேலை செய்யவேண்டும் என்றும் வாரத்தில் இரண்டு நாட்கள் செய்யும் வேலைக்கு கூலி தரப்படமாட்டாது என்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகைக்கான வட்டியாக அந்தக் கூலி எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தந்திரமாகச் சொல்லப்பட்டது. அதனால் மெல்ல மெல்ல அடிமைமுறையில் வேலை செய்பவர்களாக அவர்கள் மாறத் தொடங்கினர். கோபியைச் சுற்றி இப்படிப்பட்ட பதினொரு குடியிருப்புகள் அமைந்திருந்தன. சிறுசிறு தொகையை கடனாகப் பெற்றுவிட்டு, காலமெல்லாம் அவர்கள் அடிமைகளாக வேலை செய்துவந்தனர்.
அடிமை முறையிலிருந்து அக்குடியிருப்புகளை விடுவிக்க லட்சுமண ஐயர் ஒரு திட்டத்தை அங்கு குடியிருப்பவர்களுடன் பகிர்ந்துகொண்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாரமும் தம் ஊதியத்திலிருந்து அரையணா கொடுக்கவேண்டுமென்று சொல்லி, அதை அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி செய்தார். ஒவ்வொரு குடியிருப்பிலும் அந்தப் பணத்தை வசூல் செய்ய ஒருவரை நியமித்தார். சில மாதங்களிலேயே கடனை அடைக்கத் தேவையான தொகை திரண்டுவிட்டது. உடனே தொகை வழங்கிய பெரிய மனிதரிடம் திருப்பியளித்து, அடிமை முறையிலிருந்து அனைவரும் விடுபட்டனர். அதற்குப் பிறகு சுதந்திரமாக ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு விருப்பப்பட்ட நிலத்துக்கு வேலை செய்யச் சென்றார்கள். தமக்குரிய நியாயமான கூலியையும் கேட்டுப் பெற்றார்கள்.
1932ஆம் ஆண்டில் காந்தியடிகள் ஹரிஜன சேவா சங்கத்தைத் தொடங்கினார். நாடெங்கும் அதற்குக் கிளைகள் உருவாகின. அக்கிளைகளில் பணியாற்றியவர்கள் ஊரெங்கும் அலைந்து திரிந்து தீண்டாமையைப் பற்றிய பார்வை மாறும் வகையில் பரப்புரை செய்வதில் ஈடுபட்டார்கள். மேலும் பல இடங்களில் தாழ்த்தப்பட்டோர்கள் படிப்பதற்கு பள்ளிகளையும் தங்குவதற்கு விடுதிகளையும் தொடங்கி நடத்தினார்கள். லட்சுமண ஐயரின் தந்தையாரான சீனிவாச ஐயர் கோபிசெட்டிப் பாளையத்திலேயே டி.எஸ்.ராமன் மாணவர் விடுதியையும் சரோஜினிதேவி விடுதியையும் தொடங்கி தாழ்த்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த சிறுவர்களும் சிறுமிகளும் தங்குவதற்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தனர்.
காந்தியடிகளைச் சந்தித்துத் திரும்பிய லட்சுமண ஐயருக்கு தம் குடும்பத்தினர் நடத்திவரும் பள்ளிகளின் எண்ணிக்கையும் விடுதிகளின் எண்ணிக்கையும் போதாது என்று தோன்றியது. எனவே, முதற்கட்டமாக அவற்றை விரிவாக்கும் வேலைகளில் மூழ்கினார். அவருடைய இலக்கு தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பிள்ளைகள் என்பதால், அவர்கள் எளிதாக வந்து செல்வதற்குத் தோதான இடங்களை முதலில் தீர்மானித்துக்கொண்டார். பிறகு அந்தக் குறிப்பிட்ட கிராமத்தில் தம் குடும்பத்துக்குச் சொந்தமாக உள்ள இடங்களை பள்ளிக்காக இலவசமாக ஒதுக்கினார். அடுத்து, அந்த இடத்தில் கட்டடங்களை எழுப்பி, புதிய பள்ளிகளும் விடுதிகளும்  தடையின்றி இயங்க வழிவகுத்தார். ஊருக்கு அருகிலேயே இருக்கும் கல்வி வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளும்படி ஊர்க்காரர்கள் அனைவரையும் சந்தித்து கேட்டுக்கொண்டார். தம் வீட்டுச் சிறுவர்களையும் சிறுமிகளையும் பள்ளிக்கு அனுப்பும்படி மன்றாடிக் கேட்டுக்கொண்டனர். தொடக்கத்தில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்தார்கள். பிறகு படிப்படியாக அந்த எண்ணிக்கை உயரத் தொடங்கியது.
சிறுவர் சிறுமியருக்கு விடுதிகளை உருவாக்கிக் கொடுத்ததை அடுத்து தாழ்த்தப்பட்டோர் குடும்பங்களில் உள்ள குழந்தைகளைப்பற்றியும் யோசிக்கவேண்டும் என்று லட்சுமண ஐயருக்குத் தோன்றியது. வயல்வேலைகளுக்குச் செல்லும் பெண்கள் தம் குழந்தைகளை விட்டுவிட்டு வர பாதுகாப்பான இடமென எதுவும் இல்லாமையால் தொடர்ச்சியாக வேலைக்குச் செல்வதில் அவர்களுக்குச் சில இடர்கள் இருந்தன. குழந்தைகளுக்கென தனியாக ஒரு காப்பகத்தைத் தொடங்கவேண்டுமென லட்சுமண ஐயருக்கு அப்போது தோன்றியது. தொடக்கத்தில் பெரிய மொடச்சூர், சிவசண்முகம் பிள்ளை வீதி ஆகிய இடங்களில் இரு காப்பகங்களை உருவாக்கினார். காலை முதல் இரவு வரை குழந்தைகளைப் பாதுகாப்பதில் தொடங்கி, ஆட்டமும் பாட்டும் சொல்லிக்கொடுத்து அவர்களை மகிழ்ச்சியாகப் பார்த்துக்கொள்வது, வேளைக்குச் சரியாக உணவு கொடுப்பது, வேலை முடிந்து பெற்றோர்கள் திரும்பிவரும்போது குழந்தைகளை ஒப்படைப்பது வரைக்குமான வேலைகளைச் செய்ய அவர்களுக்கு ஆட்கள் தேவைப்பட்டார்கள். ஒவ்வொரு காப்பகத்துக்கும் இரு ஆசிரியர்களையும் மூன்று உதவியாளர்களையும் நியமித்து, அவை சிறப்பான முறையில் செயல்படும்படி பார்த்துக்கொண்டார். வேறொரு பகுதியில் தமக்குச் சொந்தமாக இருந்த நிலங்களை விற்பனை செய்ததன் வழியாக கிட்டிய பணத்தை வைத்துக்கொண்டு கட்டடங்களின் கட்டுமானச்செலவுகளைச் சமாளித்தார்.
நாளுக்குநாள் செலவுத்தொகை பெருகிக்கொண்டே போனது. விடுதிகளில் தங்கிப் படிக்கும் பிள்ளைகளுக்கு சத்தான உணவு போடவேண்டியிருந்தது. ஒருமுறை செலவுத்தொகையை ஈடுகட்டும் பொருட்டு ஒருவரிடம் கடனாகக் கேட்டிருந்த தொகை கைக்கு வரவில்லை. விடுதியில் அன்று இரவு உணவு சமைப்பதற்குத் தேவையான பொருட்களை இனிமேல்தான் கடைக்குச் சென்று வாங்கிவரவேண்டும் என்கிற நிலைமை. மேற்பார்வையாளர் தகவலைத் தெரிவித்துவிட்டு லட்சுமண ஐயரையே பார்த்தபடி இருந்தார். பொழுது கழியக்கழிய ஒருவருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. பணம் கொண்டு வருவதாகச் சொன்னவர் வந்தபாடில்லை. பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் ஒவ்வொருவராக திரும்பிக்கொண்டிருந்தனர். அதற்குமேல் பொறுக்கமுடியாது என்பதுபோல லட்சுமண ஐயர் தன் கைவிரலில் அணிந்திருந்த தங்க மோதிரத்தைக் கழற்றி மேற்பார்வையாளரிடம் கொடுத்து, உடனடியாக அதை அடகுவைத்து பணம் வாங்கி செலவைச் சமாளிக்குமாறு சொல்லி அனுப்பினார். எக்காரணத்தை முன்னிட்டும் காந்தியடிகளின் ஆணைப்படி நடைபெற்றுவரும் சேவைகளில் குண்டுமணி அளவு கூட குறைந்துவிடக்கூடாது என்பதில் லட்சுமண ஐயர் எப்போதும் உறுதியாக இருந்தார்.
நாட்கள் செல்லசெல்ல அவர் மனம் மேலும் விரிவடைந்தது. ஒரு கட்டத்தில் நன்றாக படிக்கும் பிள்ளைகளுக்கு தம் வீட்டு மாடியிலேயே ஒரு அறையை ஒதுக்கிக்கொடுத்து தங்கவைத்துக்கொள்ளத் தொடங்கினார். அவர்களுக்கு உணவும் உடையும் கொடுத்து படிக்கவைத்தார். நாளடைவில் அவர் வீடே ஒரு விடுதியாக மாறிவிட்டது.
அந்தக் காலத்தில் சாதியடுக்கில் மேல்நிலையில் உள்ளவர்களுடைய வீடுகளில் நடைபெறும் திருமணங்களுக்கும் காதணி விழாக்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் ஊரில் உள்ள அனைவரையும் அழைத்து விருந்தளிப்பது வழக்கம். அவர்கள் அனைவரும் விருந்துக்கூடத்துக்குச் சென்று உணவை உண்ணுவார்கள். பந்தல் போடுவதில் தொடங்கி, வேலி கட்டுவதுவரைக்கும் எல்லா வேலைகளுக்கும் அவர்களுக்குத் துணையாக இருக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் அழைப்பிதழ்கள் கொடுக்கப்படுவதில்லை. சுவையான உணவை நாடி அங்கு செல்பவர்களும் விருந்துக்கூடத்துக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் அனைவரும் கைகளில் பாத்திரங்களை ஏந்திக்கொண்டு வீதியில் வரிசையாக நிற்கவேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் வீட்டுக்குள் கால்வைக்க முடியாது. நிகழ்ச்சி நிறைவு பெற்று, அனைவரும் விருந்துண்டு முடித்த பிறகு உணவுப்பாத்திரங்களை வாசலுக்கு எடுத்துவந்து வரிசையில் நிற்கும் தாழ்த்தப்பட்டவர்களின் பாத்திரங்களில் கைபடாமல் போட்டு நிரப்பி அனுப்புவார்கள். அதை வாங்கிய வேகத்தோடு அவர்களை வாழ்த்திவிட்டு வேகவேகமாக தம் குடியிருப்புகளை நோக்கி தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் ஓடிவிடுவார்கள். சில நேரங்களில் இந்த விருந்தோம்பல் நள்ளிரவையும் கடந்துவிடும். வரிசையில் நிற்பவர்கள் அலுத்து இடம்மாறி கலைந்து நிற்பதையோ, சலிப்பை மறக்க எதையாவது பேசிச் சிரிப்பதையோ, கட்டுப்பாட்டை இழந்து முண்டியடிப்பதையோ காண நேர்ந்தால் மோனைக்காரர் எனப்படும் மேல்சாதிக்காரரின் கையாள் கையில் வைத்திருக்கும் வாழைமட்டையாலேயே அவர்களை அடித்து சரிப்படுத்துவது வழக்கம்.
ஒருநாள் இக்காட்சியைக் கண்ட லட்சுமண ஐயர் மனம் வருந்தினார். மறுநாள் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புக்கே நேராகச் சென்று அழைப்பில்லாமல் இனி எந்த நிகழ்ச்சிக்கும் யாரும் போகக்கூடாது என்று எடுத்துரைத்துப் புரியவைத்தார். தன்மானத்துக்கும் கெளரவத்துக்கும் இழுக்கு நேராதவகையில் வழங்கப்படும் விருந்துணவை மட்டுமே உண்ணவேண்டும் என்றும் எடுத்துரைத்தார். அவர் சொல்வதில் உள்ள உண்மையை அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொண்டார்கள்.  பிறகு தம்மைத்தாமே கட்டுப்படுத்திக்கொண்டு விழாக்களுக்குச் சென்று உணவைப் பெற்று வரும் வழக்கத்தை அவர்கள் அன்றே விட்டொழித்தார்கள்.
கோபிசெட்டிப்பாளையம் பகுதியில் ஹரிஜன சேவா சங்கத்தைத் முதமுதலாகத் தொடங்கி திறம்பட செயலாற்றிவந்தவர் லட்சுமண ஐயரின் தந்தையாரான சீனிவாச ஐயர். அவரைத் தொடர்ந்து ஸ்ரீகண்டய்யா என்பவர் செயலாற்றினார். அடுத்து சங்கத்தின் பொறுப்பை 1946இல் ஏற்றுக்கொண்ட லட்சுமண ஐயர் 2005 வரைக்கும் செயலாற்றிவந்தார்.
லட்சுமண ஐயரைப்போலவே அவருடைய மனைவி இலட்சுமி அம்மையாரும் சமூக சேவைகளில் ஆர்வம் கொண்டவர். வழக்கறிஞரான அவருடைய தந்தையார் சுந்தரராஜ ஐயரின் வழியாக அந்த ஆர்வம் இலட்சுமி அம்மையாரிடமும் ஊறி வளர்ந்தது. ஹரிஜன நலநிதி திரட்டும்பொருட்டு தமிழகத்துக்கு வந்த காந்தியடிகள் பழனி நகருக்கு வந்தபோது சுந்தரராஜ ஐயரின் வீட்டில்தான் தங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காந்தியடிகளைக் காணும்பொருட்டு சுந்தரராஜ ஐயரின் வீட்டுக்கு முன்னால் ஏராளமானோர் கூடியிருந்தார்கள். அவர்களோடு சில நிமிடங்கள் உரையாடிய காந்தியடிகள் அவர்களுக்கு முன்னால் தன் தோளில் இருந்த துண்டை விரித்துப் பிடித்துக்கொண்டு தெய்வத்துக்கு கொடுக்கிற காணிக்கையாக நினைத்து ஹரிஜன மக்களின் மேம்பாட்டுக்காக நிதி கொடுக்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். அனைவரும் தம்மிடம் இருந்த பணத்தை அன்பளிப்பாக அளித்தனர். சில பெண்கள் உடனடியாக தாம் அணிந்திருந்த ஆபரணங்களைக் கழற்றி மனமுவந்து அளித்தனர். சுந்தரராஜ ஐயர் வீட்டிலிருந்த தங்க நகைகளையும் தங்க நாணயங்களையும் கொண்டுவந்து கொடுத்தார். அவருடைய மனைவி தாம் அணிந்திருந்த வளையல்களைத் தவிர மற்ற எல்லா அணிகலன்களையும் கழற்றி அவரிடம் வழங்கினார். சிறுமியான இலட்சுமி தன் கைகளில் அணிந்திருந்த எல்லா வளையல்களையும் கழற்றி காந்தியடிகள் விரித்த துணியில் வைத்தார். இதைக் கவனித்த காந்தியடிகள்நீங்கள் இருவரும் ஆளுக்கொரு அணிகலனை வைத்துக்கொண்டு மற்றவற்றைக் கொடுத்தீர்கள். உங்கள் மகளோ தானாகவே அனைத்தையும் கொடுத்துவிட்டாள். இயற்கையிலேயே கருணையுள்ளம் கொண்டவளாக இவளை நீங்கள் வளர்த்திருக்கிறீர்கள்என்று சொல்லிப் பாராட்டி மகிழ்ந்தார்.
அங்கு கூடியிருந்தவர்கள் பழனி முருகனின் பெருமையைச் சொல்லி, அத்தெய்வத்தைத் தரிசிக்க வருமாறு அழைத்தார்கள். “நீங்கள் சொல்லும் இந்தப் புகழ்பெற்ற ஆலயத்தில் ஹரிஜன மக்கள் அனுமதிக்கப்படுகிறார்களா?” என்று கேட்டார். பெரும்பாலானோர் அமைதியாக நிற்க, ஒருசிலர் மட்டும் இல்லை என்பதுபோலத் தலையசைத்தனர். உடனே காந்தியடிகள்முதலில் அவர்கள் அனுமதிக்கப்படட்டும். அதற்குப் பிறகு நான் வருகிறேன்என்று சொல்லிவிட்டார். 1946இல் காந்தியடிகள் மீண்டும் பழனிக்கு வருகை தந்தபோது அன்று நடந்ததை அவருக்கு நினைவூட்டிஇப்போது ஆலயத்துக்குள் ஹரிஜனர்கள் தாராளமாக சென்று வரும் அளவுக்கு காலம் மாறிவிட்டது. இப்போதாவது நீங்கள் அவசியமாக வந்து முருகனைத் தரிசிக்கவேண்டும்என்று கேட்டுக்கொண்டனர். அதைக் கேட்டு மகிழ்ந்த காந்தியடிகள் அனைவரோடும் ஆலயத்துக்குள் சென்று வணங்கிவிட்டுத் திரும்பினார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு கோபிச்செட்டி பாளையத்தின் நீர்த்தேவைக்காக ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியைக் கட்டியெழுப்ப வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. அதற்குப் பொருத்தமான இடத்துக்காக அரசு அலைந்தபோது, பவானி ஆற்றின் கரையோரத்திலிருந்த தனக்குச் சொந்தமான நிலத்தை மனமுவந்து இலவசமாக அரசுக்கு வழங்கினார் லட்சுமண ஐயர். மூன்றாண்டு காலம் அந்த வேலை நடைபெற்று முடிந்ததும் அந்த நீரேற்று நிலையம் உடனடியாக பயன்பாட்டுக்கு வந்தது. அந்த நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீர் கோபிசெட்டிப் பாளையத்துக்கு மட்டுமன்றி நகரையொட்டிய லக்கம்பட்டி, கள்ளிப்பட்டி, கரட்டடிபாளையம் போன்ற இடங்களுக்கும் சென்றது.
காந்தியடிகளின் மறைவுக்குப் பிறகு லட்சுமண ஐயரின் சேவையுணர்வு மிகவும் தீவிரமுற்றது. அவருடைய எண்ணம் முழுதும் தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டிலேயே மையம் கொண்டிருந்தது. விடுதியில் தங்கிப் படிக்கும் பிள்ளைகள் வயிறார உண்ண வேண்டும் என்பதிலும் அவர்கள் அனைவரும் நல்ல கல்விமான்களாக உயரவேண்டும் என்பதிலும் அவர் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தார். எந்தக் குடும்பமாக இருந்தாலும், அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் படித்து பட்டம் பெற்று வேலைக்குச் செல்வது என்பது பொருளாதார நிலையில் அக்குடும்பத்தை சற்றே மேம்பட்ட உயரத்துக்கு அழைத்துச் செல்லும்.  இது பொதுவான உண்மை. தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் இந்த உயரத்தைத் தொடும்போது, பொருளாதார நிலையை உயர்த்துவதோடு மட்டுமன்றி சமூக கெளரவ நிலையையும் உயர்த்தும் என்பது லட்சுமண ஐயரின் கருத்து. அதனால் தன் பார்வையில் படும் தாழ்த்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த சிறுவர்களை நன்றாகப் படிக்கும்படி எப்போதும் ஊக்கப்படுத்தியபடியே இருப்பார்.
ஒருமுறை அவருடைய சொந்த மகன் சுந்தரவடிவேல் புகுமுக வகுப்பில் தேர்ச்சி பெற்றதும் பொறியியல் படிப்பைப் படிக்க விரும்பினார். பி.எஸ்.ஜி. குழுமத்தின் கல்லூரியில் படிக்கவேண்டும் என்பது அவர் விருப்பம். பொறியியல் படிப்புக்குத் தேவையான அளவுக்கு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அவருக்கு தானாகவே கூட அந்த இடம் கிடைக்கக்கூடும். ஆயினும் நிர்வாகத்தலைமையைச் சந்தித்து லட்சுமண ஐயர் ஒரு சொல் சொல்லவேண்டும் என்று சுந்தரவடிவேல் எதிர்பார்த்தார். லட்சுமண ஐயருக்கு அப்படி பரிந்துரைப்பதில் உடன்பாடில்லை. எனவே மகனுடைய கோரிக்கையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. தினமும் மகன் கேட்டுக்கொண்டே இருந்ததால் வேறு வழியின்றி ஒருமுறை சென்று நிர்வாகத்தலைமையைச் சந்தித்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு தனியாகப் புறப்பட்டார். பிறகு மாலையில் திரும்பி வந்து பொறியியல் படிப்புக்கான சேர்க்கை முடிந்துவிட்டதெனச் சொன்னதாகத் தெரிவித்துவிட்டு அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பைப் படிக்கும்படி மகனுக்கு ஆலோசனை வழங்கினார். வேறு வழியின்றி அடுத்தநாளே கல்லூரிக்குச் சென்று அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பில் சேர்ந்துவிட்டார்.
ஓராண்டுக்குப் பிறகு அதே கல்லூரியில் ஆண்டுவிழா நடைபெற்றது. அவ்விழாவுக்கு லட்சுமண ஐயர் சிறப்பு விருந்தினராக்க் கலந்துகொள்ளச் சென்றிருந்தார். பார்வையாளர் அரங்கில் மாணவர்களிடையில் அவர் மகன் சுந்தரவடிவேலும் அமர்ந்திருந்தார். அப்போது அவருக்கு அருகில் அமர்ந்திருந்த வேறொரு மாணவர் எழுந்து லட்சுமண ஐயரைப் பார்த்து புன்னகையுடன் வணங்கிவிட்டு அமர்ந்தார். எதற்காக இந்தச் சிறப்புவணக்கம் என்று புரியாத சுந்தரவடிவேல் அவரிடமே வணங்கியதற்கான காரணத்தைக் கேட்டார். “அவர் இல்லாவிட்டால் நான் இந்தக் கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர்ந்திருக்கவே முடியாது. அவர் சொன்னதால்தான் எனக்கு இங்கு இடம் கிடைத்ததுஎன்று தெரிவித்தார் அந்த மாணவர். சுந்தரவடிவேலுக்கு ஒன்றும் புரியவில்லை. ”எப்படி?” என்று குழப்பத்தோடு கேட்டார்.
அந்த மாணவர் தொடர்ந்துஒருநாள் இங்கே வந்து இடம் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற குழப்பத்துடன் என் மதிப்பெண் பட்டியலோடு தயக்கத்தோடும் அச்சத்தோடும் நின்றிருந்தேன். உள்ளே சென்று கேட்கலாமா கூடாதா என்று குழப்பம் வேறு. அப்போதுதான் ஐயா என்னை நெருங்கி வந்து அவராகவே விவரம் கேட்டார். ஒரு வேகத்தில் நான் எல்லாவற்றையும் அவரிடம் கொட்டிவிட்டேன். பிறகு என் பெயர், ஊர், மதிப்பெண் விவரங்களையெல்லாம் எழுதிக் கொடுக்கும்படி கேட்டு வாங்கிக்கொண்டு இங்கேயே நில், எங்கும் போய்விடாதே என்று சொல்லிவிட்டு நிர்வாக அறைக்குள் சென்றுவிட்டார். சிறிது நேரத்துக்குப் பிறகு அவர் வெளியே வந்து உனக்கு இடம் கொடுக்கும்படி சொல்லிவிட்டேன். நீ போய் சேர்ந்து படி. அக்கறையாகப் படித்து பட்டம் வாங்கு என்று சொன்னபிறகு என் முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். அப்போது அவர் யார் என எனக்குத் தெரியாது. நான் நிர்வாக அறைக்குள் சென்று நின்றதும் எனக்கு அவர்கள் உடனே இடம் கொடுத்துவிட்டார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. உடனேயே கல்லூரியில் சேர்ந்துவிட்டேன். பிறகுதான் ஐயாவைப்பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டேன். பாடம், படிப்பு என்று நாட்கள் கடந்துவிட்டன. அவரை நேரில் சென்று சந்திக்கவே முடியவில்லை. ஓராண்டு கழித்து இன்றுதான் அவரைப் பார்க்கிறேன். பார்த்ததுமே வணக்கம் சொல்லத் தோன்றியது. எனக்கு வழிகாட்டிய தெய்வம் அவர்என்று சொன்னார். தனக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்பை தன் தந்தை இன்னொரு மாணவருக்கு ஏற்படுத்திக் கொடுத்த காரணம் புரியாமல் சுந்தரவடிவேல் குழம்பினார்.
அன்று இரவு வீட்டுக்குத் திரும்பியதும் அப்பாவும் மகனும் இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டார்கள். லட்சுமண ஐயர் கனிவுடன்அந்த மாணவன் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவன். ஒரு பொறியியல் பட்டம் என்பது அவன் வாழ்க்கையை மட்டுமல்ல, அவனோடு தொடர்புள்ள பலருடைய வாழ்க்கையை கெளரவமுள்ளதாக மாற்றும். உன் நிலையில், நீ எந்தப் பிரிவில் பட்டம் வாங்கினாலும் ஒன்றுதான். நீ வாங்கும் பட்டம் பட்டமாக மட்டுமே இருக்கும். அவன் வாங்கும் பட்டம் பட்டமாகவும் இருக்கும், கெளரவமாகவும் இருக்கும். புரிந்துகொள்என்று சொன்னார்.
1952 முதல் 1955 வரை நகராட்சித் தலைவராக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார் லட்சுமண ஐயர். அப்போது துப்புரவுப்பணியாளர்கள் குடியிருப்பதற்காக இலவசமாக ஒரு குடியிருப்பை உருவாக்கி அளித்தார். அந்தப் பெருமை லட்சுமண ஐயருக்கே உரியது. 1986ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அவர் மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்றார். அப்போது நகரத்தில் உள்ள அனைத்து உலர்கழிப்பறைகளையும் ஒழித்துக் கட்டினார். இதன் வழியாக மனித மலத்தை மனிதரே கையால் அள்ளும் அவலநிலை முடிவுக்கு வந்தது. நாட்டிலேயே அப்பழக்கத்தை ஒழித்த முதல் நகராட்சி கோபிசெட்டிப் பாளையம்தான்.
கோபிசெட்டிப் பாளையத்திலும் அதைச் சுற்றியிருந்த கிராமங்களிலும் லட்சுமண ஐயர் குடும்பத்துக்குச் சொந்தமாக ஏறத்தாழ அறுநூற்றைம்பது ஏக்கர் நிலம் இருந்தது. பள்ளிக்கூடங்கள் கட்டவும் பள்ளிக்கு விளையாட்டு மைதானங்கள் அமைக்கவும் அரசு அலுவலகங்கள் கட்டவும் கரட்டடிபாளையத்திலும் ஸ்ரீராமபுரத்திலும் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளை உருவாக்கவும் பல ஏக்கர் நிலங்களை இலவசமாக வழங்கினர். ஏற்கனவே உருவாக்கிய பள்ளிகளின் செலவுக்காகவும் விடுதிகளின் செலவுகளுக்காகவும் இன்னும் பல ஏக்கர் நிலங்களை விற்கவேண்டியிருந்தது. வங்கியில் வாங்கியிருந்த கடன் அடைக்கப்படாததால் வங்கி நிர்வாகம் அவருக்குச் சொந்தமாக எஞ்சியிருந்த நிலங்களையும் அவர் குடும்பம் வாழ்ந்த வீட்டையும் ஏலத்துக்குக் கொண்டுவந்தது. ஏலம் எடுத்த மனிதர் அவருடைய பண்புகளை அறிந்து ஏலத்தில் எடுத்த வீட்டை மட்டும் அவரிடமே கொடுத்துவிட்டார். காந்தியடிகளின் கட்டளைப்படி தான் உருவாக்கிய கல்வி நிலையங்களையும் விடுதிகளையும் பார்த்தபடி அந்த வீட்டிலேயே இறுதிமூச்சுள்ள வரைக்கும் வாழ்ந்து மறைந்தார்.


(அம்ருதா - பிப்ரவரி 2020 இதழில் வெளிவந்த கட்டுரை)