Home

Monday 3 February 2020

தரிசனமும் ரகசியமும் - கட்டுரை



எண்பதுகளில் என் பணியின் நிமித்தமாக கர்நாடகத்தில் பெல்லாரி, ஹோஸ்பெட், கொப்பள், கதக், ஹூப்ளி, சித்ரதுர்கா, ஷிமோகா என பல இடங்களுக்கு மாறிமாறி அலைந்துகொண்டிருந்தேன்.  அப்போது தமிழில் வெளிவந்த எல்லாச் சிறுபத்திரிகைகளுக்கும் சந்தா கட்டி வரவழைத்துப் படித்தேன்.  ஏதாவது ஒரு பத்திரிகையில் இன்னொரு பத்திரிகையின் முகவரியும் விவரங்களும் இருக்கும். அவற்றை வைத்து அவர்களோடு தொடர்புகொண்டு பத்திரிகைகளை வரவழைத்துக்கொள்வேன். அவ்வகையில்தான் பெங்களூரிலிருந்து வெளிவந்த படிகள் இதழோடு எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. பெங்களூரில் நடைபெற்ற எழுபதுகளில் கலைஇலக்கியம் என்னும் கருத்தரங்கம் பற்றிய செய்திகள் அதில் இடம்பெற்றிருந்தன. எழுபதுகளின் இலக்கியச்செய்திகளைத் தோராயமாக அறிந்துகொள்ள அக்கருத்தரங்கத்தில் பங்கேற்க வேண்டும் என நினைத்தேன். அதற்கான பயணத்திட்டங்களையும் வகுத்துவைத்திருந்தேன். ஆனால், எதிர்பாராதவிதமாக பணியில் விடுப்பெடுக்க முடியாதபடி ஒரு சிக்கல் வந்துவிட்டது. அதனால் கருத்தரங்கத்துக்குச் செல்லவில்லை. அந்த ஏமாற்றம் எனக்கு அளவற்ற வருத்தத்தைக் கொடுத்தது.

சிறிது நாட்களுக்குப் பிறகு அக்கருத்தரங்கத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் நூலாகத் தொகுக்கப்பட்டு வந்திருக்கும் செய்தியைப் படிகள் இதழில் படித்து மகிழ்ந்தேன்.  காவ்யா வெளியீடு என்று அக்குறிப்பில் பார்த்தேன். உடனே பணம் செலுத்தி புத்தகத்தை வரவழைத்துப் படித்தேன். நல்ல அச்சமைப்பு. எளிமையும் நவீனமும் பொருந்திய அட்டை வடிவமைப்பு. அதைத் தொடர்ந்து சில மாதங்களுக்குப் பிறகு தமிழவன் எழுதியஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்என்னும் நாவல் வெளிவந்தது. புதுமையான அட்டைப்படத்துடன் அந்தப் புத்தகத்தின் அமைப்பும் அழகாக இருந்தது. புத்தகங்களைப் படித்துமுடித்ததும் என் எண்ணங்களை ஒரு கடிதமாக எழுதி காவ்யா பதிப்பகத்துக்கு அனுப்பிவைத்தேன். சில நாட்களிலேயே பதிப்பகத்திடமிருந்து எனக்குப் பதில் வந்தது. அதை எழுதியிருந்தவர் காவ்யா சண்முகசுந்தரம். இப்படித்தான் அவருடனான நட்பு தொடங்கியது.
சண்முகசுந்தரம் பச்சையப்பன் கல்லூரியில் தமிழில் முதுகலைப்படிப்பை முடித்து பேராசிரியர் சஞ்சீவியின் வழிகாட்டலில் நாட்டுப்புறவியலில் ஆய்வு செய்து  முனைவர்  பட்டம் பெற்றவர் என்றும் பெங்களூரில் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக பணிபுரிகிறார் என்றும் தெரிந்துகொண்டேன். இதற்கிடையில் படிகள் இதழ் நின்றது. இங்கே இன்று என புதிய இதழ் தொடங்கப்பட்டு, அதுவும் ஓராண்டுக்குள்ளேயே நின்றுபோனது. ஆயினும் எங்களுக்கிடையில் கடிதப்போக்குவரத்து மட்டும் இடைவிடாமல் தொடர்ந்தது. இங்கே இன்று இதழில் நான் இரு சிறுகதைகளை எழுதியிருந்தேன். இந்த இடைப்பட்ட காலத்தில் வெவ்வேறு இதழ்களிலும் என் கதைகள் பிரசுரம் கண்டிருந்தன. என் கதைகளைத் தொடர்ந்து படித்துவருவதாகவும் தனக்குப் பிடித்திருப்பதாகவும் சண்முகசுந்தரம் ஒரு கடிதத்தில் எழுதியிருந்தார். அந்த வரிகள் எனக்கு மிகவும் ஊக்கமளிப்பவையாக இருந்தன.
ஒருமுறை அவரைச் சந்திக்க பெங்களூருக்குச் செல்ல்லாம் என நினைத்தேன். உடனே அவருக்குக் கடிதம் எழுதி தகவலைத் தெரிவித்தேன். அது கல்லூரிக்காலம் என்பதால் ஊரில் இருப்பதாகவும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றும் தெரிவித்தார் அவர். அடுத்த வாரமே நான் விடுப்பெடுத்துக்கொண்டு பகல்நேர வண்டியொன்றில் பயணம் செய்து பெங்களூரை அடைந்தேன். பிறகு நகரப்பேருந்தைப் பிடித்து அவருடைய வீட்டுக்குச் செல்லும்போது மாலைப் பொழுதாகிவிட்டது. அவர் இன்னும் கல்லூரியிலிருந்து திரும்பியிருக்கவில்லை. அவருடைய துணைவியாரும் பிள்ளைகளும் இருந்தார்கள். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். “சொன்னாரு. வர நேரம்தான். உட்காருங்கஎன்றார் அவர். சூடான தேநீர் கொடுத்தார். அவர் சில பத்திரிகைகளைக் கொண்டுவந்து மேசையில் வைத்து புரட்டிக்கொண்டிருக்குமாறு சொன்னார். எனக்கு வெளியே காலாற சிறிது தொலைவு நடந்து ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என்று தோன்றியது. அதையே அவரிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.
அவர் வீட்டிலிருந்து சிறிது தொலைவிலேயே ஒரு அழகான பூங்கா இருந்தது. அதைச் சுற்றிப் பார்த்தேன். மீண்டும் பிரதான சாலைக்கு வந்து வேடிக்கை பார்த்தபடி நடக்கத் தொடங்கினேன். இருபுறமும் உயிர்வேலி போல அடர்த்தியான மழைமரங்கள். மரங்களின் வரிசைக்குப் பின்னால் வீடுகள். தோட்டங்கள். வீட்டு மாடிகளிலும் தொட்டிகளில் வளர்ந்து நிற்கும் செடிகள். எண்ணற்ற நிறக்கலவையில் பூக்கள். ஒருவீட்டின் சுற்றுச்சுவர் முழுதும் படர்ந்திருந்த கொடியில் சின்னச்சின்ன மணிகள் தொங்குவதுபோல நீலக்குழல் பூக்கள் அடர்ந்திருந்தன. எந்தக் கோடையிலும் அந்தத் தெருவின் தரையில் வெயில் பட வாய்ப்பில்லை என்று தோன்றியது. நேர்ச்சாலை என்பதால் வெகுதொலைவு நடந்து விட்டேன். அதன் முடிவுப்புள்ளி வரைக்கும் சென்றுவிட்டு, பிறகு திரும்பி நடந்து வந்தேன்.
சண்முகசுந்தரம் கல்லூரியிலிருந்து திரும்பியிருந்தார். அவருடைய இருசக்கர வாகனம் வாசலில் நின்றிருந்தது. நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். “நான் நினைச்சதவிட ரொம்ப சின்ன வயசா இருக்கிங்க. கல்யாணமாயிட்டுதா?” என்று கேட்டார். நான் சற்றே வெட்கத்துடன் தலையசைத்தபடிஇப்பதான் ஒரு வருஷம் முடியப்போவுதுஎன்றேன். அடுத்துஅங்கயே ஊடு பார்த்து குடியேறிட்டீங்களா, இல்ல ஊருல விட்டு வந்துட்டீங்களா?” என்று கேட்டார். “வாடகைக்கு ஒரு வீடெடுத்து ரெண்டு பேரும் ஒன்னாதான் இருக்கோம்என்றேன். “எப்பவும் அதான் நல்லது பாவண்ணன். கஷ்டமோ நஷ்டமோ ரெண்டு பேரும் ஒன்னாவே இருக்கணும். புது ஊரு, புது மொழி, புது எடம், பொண்டாட்டிக்கு ஏதாச்சும் கஷ்டம் வந்தா என்ன செய்றதுன்னு ஏதேதோ யோசனையில கல்யாணம் முடிஞ்ச கையோட பல பேரு ஊருலயே விட்டுட்டு வந்துருவாங்க. ரெண்டு பேரும் ஒன்னா இருந்துதான் எல்லாத்தயும் சமாளிக்கணும். அதுதான் வாழ்க்கைஎன்றார். பிறகு சிரித்துக்கொண்டேநாங்க இந்த ஊருக்கு வந்த சமயத்துல எனக்கும் கன்னடம் தெரியாது. என் மனைவிக்கும் கன்னடம் தெரியாது. சமாளிச்சிக்கலாம்னு வந்துட்டோம்என்றார். ”அடுத்த முறை வரும்போது  வீட்டுக்காரம்மாவையும் அழச்சிகிட்டு வாங்க. ரெண்டு மூணு நாள் தங்கி பெங்களூர சுத்திப் பார்த்துட்டு போவலாம்என்று சொன்னார். அந்த அன்பு நெஞ்சைத் தொட்டது.
அன்று இரவு அவர்கள் வீட்டிலேயே தங்கினேன். அவர் வீட்டு அடுக்குகளில் ஏராளமான புத்தகங்களும் பழைய சிறுபத்திரிகைகளின் தொகைநூல்களும் இருந்தன. நான் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து புரட்டினேன். ”படிகள், இங்கே இன்று பத்திரிகைகள் ஏன் நின்றுவிட்டன?” என்று நான் உரையாடலைத் தொடங்கினேன். “ஒரு எடத்துலேருந்து கூட பணம் வரலை. எவ்வளவு காலம் கைப்பணத்த போட்டு பத்திரிகை நடத்தறது? ஒரு எல்லைக்கு மேல போடமுடியலை. வேற வழியில்லாம முற்றுப்புள்ளி வைக்கவேண்டியதா போச்சிஎன்றார் சண்முகசுந்தரம். ”இங்கே இன்று வெளிவந்த புதிதில் ஒருமுறை தமிழ்நாட்டுக்குப் போயிருந்தேன். ஊருல முக்கியமான ஒரு புத்தகக்கடைக்குப் போய் ஒரு இங்கே இன்று கொடுங்கன்னு கேட்டேன். அந்தக் கடைக்காரர்  என்ன மேலயும் கீழயும் பார்த்துட்டு என்ன கேட்டீங்கன்னு சந்தேகமா கண்ண சுருக்கிகிட்டு கேட்டாரு. நான் மறுபடியும் இங்கே இன்றுன்னு சொன்னேன். அதெல்லாம் இங்க கெடையாது. இருக்கறதுல என்ன வேணும்ன்னு பார்த்து வாங்குங்க  சார்னு மூஞ்சியில அடிக்காத குறையா சொல்லிட்டு வேற வேலைய பார்க்க போயிட்டாரு. எனக்கு ரொம்ப அசிங்கமாயிட்டுது. அந்த ஊருல இருந்த ஏஜெண்டுக்கு மாசாமாசம் கட்டுங்க போயிட்டிருந்த நேரம் அது. பத்திரிகை பேரு பிரபலமாகலைங்கறது ஒரு பக்கம் இருந்தாலும், பத்திரிகையே அந்தக் கடைக்கு போகலைங்கறது திகைப்பா இருந்தது. பல ஏஜெண்டுங்க அப்படித்தான் இருந்தாங்க. அந்த விநியோகத்துல எங்களுக்கு அனுபவமே இல்ல. சந்தாவுல கிடைக்கிற தொகை ரொம்ப குறைவு. மாசாமாசம் ஸ்டாம்புங்க வாங்கவே சரியா இருக்கும். ஒரு கட்டத்துல போதும்ன்னு எல்லாத்தயும் விட்டுட்டோம்என்று சொல்லிமுடித்தார்.
அவருடைய உரையாடலில் அடிக்கடி ஏராளமான கிளைக்கதைகள் திடீரென முளைத்துவருவதைக் கவனித்தேன். ஏதேனும் ஒரு சம்பவம் அல்லது ஒரு சொல்லின் வழியாக கிளைக்கதை முளைத்து வேகவேகமாக வளர்ந்து நெடுமரங்களாகிவிடும். அனுபவம் சார்ந்தும் படித்த புத்தகங்கள் சார்ந்தும் ஆளுமைகளின் சந்திப்புகள்சார்ந்தும் சொல்வதற்கு எப்போதும் அவரிடம் சில சங்கதிகள் இருப்பதைக் கண்கூடாகக் கண்டேன். கசப்பைக்கூட இனிமை படர்ந்ததாக மாற்றிச் சொன்னார் சண்முகசுந்தரம். நகைச்சுவை உணர்வு அவரிடம் இயற்கையாகவே ஊற்றென பொங்கிக்கொண்டே இருந்தது.
மறுநாள் காலை என்னை அவர் பணிபுரியும் கல்லூரிக்கு அழைத்துச்சென்றார். செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகம் ஒரு நூற்றாண்டு பழைமை வாய்ந்தது. உயர்ந்த தளங்கள். தூய்மையான வளாகம். அங்கே படிக்கும் ஒரு மாணவனாக என்னை நானே ஒருகணம் கற்பனை செய்துகொண்டேன். எல்லா வகுப்பறைகளையும் வேடிக்கை பார்த்தபடி நடந்தேன். அவருடைய வகுப்புவேளை வந்தது. அவர் வகுப்புக்கு என்னையும் தன்னோடு அழைத்துச் சென்றார். அவ்வகுப்பில் ஏறத்தாழ நூறு பிள்ளைகள் இருந்தார்கள். வேறுவேறு துறை சார்ந்து பிரதான பாடங்களைப் படிக்கும் மாணவமாணவிகள் அவர்கள். தாய்மொழிப்பாடத்துக்காக அனைவரும் ஒன்றாகத் திரண்டு வந்திருந்தனர். அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார். எனக்குக் கூச்சமாக இருந்தது. நான் புன்னகையோடுஅனைவருக்கும் வணக்கம்என்று சொல்லிவிட்டு ஆசிரியர் அறைக்குத் திரும்பி மேசைமேல் இருந்த புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கத் தொடங்கினேன்.
அன்று இரவு ஊருக்குத் திரும்பும்போது அந்த ஒருநாள் அனுபவங்கள் அனைத்தையும் தொகுத்துப் பார்த்துக்கொண்டேன். சண்முகசுந்தரம் பற்றிய ஒரு கோட்டோவியத்தை மனத்துக்குள்ளேயே தீட்டிப் பார்க்கத் தொடங்கினேன். நல்ல மனிதர். ஆழ்ந்த நினைவாற்றல் மிக்கவர். துயரங்களையும் கசப்புகளையும் நெஞ்சிலிருந்து பொங்கிவரும் நகைச்சுவை உணர்வால் ஒரே கணத்தில் கடந்து செல்லக்கூடியவர் என்று அவரை வகுத்துக்கொண்டேன்.
நகைச்சுவை வழியாக அவர் அடைவது ஒருவகை விடுதலை. அந்த விடுதலையை அவர் ஒவ்வொரு கணமும் உணர்வதாலேயே ஒவ்வொரு நாளையும் ஒரு புதுநாளாக எண்ணிக்கொள்கிறார். ஒவ்வொரு மனிதரையும் ஒரு புது மனிதராகவே நினைத்து எதிர்கொள்கிறார். அந்த உணர்வின் வழியாக அவர் மனம் பெறும் இன்பம் மகத்தானது. அந்த இன்பத்தை நகைச்சுவையுணர்வால் கொண்டாடிக்கொண்டாடி பல மடங்காகப் பெருக்கி நிறைவடைகிறார். காலம் அவர் மீது ஏற்றிவைக்கும் ஒவ்வொரு சுமையையும்  அவர் ஒருநாளும் எதிர்ப்பதில்லை. காலத்துக்குத் தலைவணங்கி ஏற்றுக்கொள்ளவே செய்கிறார். ஆனால் இச்சுமையை என்ன செய்வது எனத் தெரியாமல் மற்றவர்களைப்போல வாழ்நாளெல்லாம் தலைமீது சுமந்துகொண்டு திரியவில்லை. மாறாக, சில கணங்களிலேயே ஏற்றிவந்த சுமைகளை உப்புமூட்டையை ஆற்றுநீரில் கரைப்பதுபோல கரைத்துவிட்டு விடுதலை அடைந்துவிடுகிறார். அந்த விடுதலை அவரே கண்டறிந்த வாழ்க்கைமுறை.
அவர் படிக்கும் காலத்தில் முதுகலைப் பட்டப்படிப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றவர். அந்தப் புகழ்ச்சுமையைக்கூட அவர் கரைத்துவிட்டார். ஆய்வு செய்த காலத்தில் நாட்டுப்புறவியல் (அந்தக் காலத்தில் நாட்டாரியல் என்னும் சொல் புழக்கத்தில் இல்லை) துறையில் முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்றார். அந்த அறிவுச்சுமையையும் அவர் கரைத்துவிட்டார். அவர் பெற்ற பட்டத்தையும் புகழையும் பற்றி பேசவோ, உணரவோ கூட ஆளில்லாத இன்னொரு மாநிலத்துக்கு வந்து ஏதோ ஒரு கண்மறைவு வாழ்க்கை வாழ்வதுபோல வாழ்வதில் அவருக்கு எந்தப் புகாரும் இல்லை.
1986ஆம் ஆண்டில் கதக் என்னும் ஊரிலிருந்து திருப்பதிக்கு மாற்றினார்கள். புதுமுகவரி மாற்றத்தை அஞ்சலட்டை வழியாக அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்தினேன். என் கடிதத்துக்கு சண்முகசுந்தரம் பதில் எழுதியிருந்தார். “நீங்கள் என்ன பாவண்ணனா, விக்கிரமாதித்யனா? நாடாறு மாதம் காடாறு மாதம் போல ஆறாறு மாதங்களுக்கு ஒருமுறை இடம்மாறிக்கொண்டே இருக்கிறீர்கள். நதி பாய்ந்தோடுவதுபோல நீங்களும் பாய்ந்து பரவிக்கொண்டிருங்கள்என்று அவர் குறிப்பிட்டிருந்த வாசகம் இன்னும் என் நினைவில் உள்ளது.
1987ஆம் ஆண்டில் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி அனுப்பியிருந்த சண்முகசுந்தரம் தன் கடிதத்தில்ஒரு தொகுப்புக்குப் போதுமான சிறுகதைகளை எழுதியிருப்பீர்கள் என நினைக்கிறேன். எழுதியவற்றில் சிறந்தவற்றை நீங்களே தேர்ந்தெடுத்துத் தொகுத்துக்கொண்டு ஒருமுறை பெங்களூருக்கு வாருங்கள்என்று குறிப்பிட்டிருந்தார். அவ்வப்போது சிறுபத்திரிகைகளில் கதைகளை எழுதி வந்த இளம் எழுத்தாளன் நான். தமிழகச்சூழலுக்கு வெளியே வாழ்பவன். ஒரு தொகுப்பு என்பது அந்தக் காலத்தில் ஒரு எழுத்தாளனுக்கு மிகப்பெரிய கனவு. அதற்கெல்லாம் வழியில்லை என நினைத்துக்கொண்டு நான் என் போக்கில் எழுதிக்கொண்டே இருந்தேன். அப்படிப்பட்ட சூழலில் சண்முகசுந்தரத்தின் கடிதம் எனக்கு விண்ணிலெழுந்து பறக்கும் உணர்வைத் தந்தது. தமிழுலகத்துக்கு முதன்முதலாக என் முகம் தெரியப்போகிறது என்ற எண்ணமே எனக்குள் ஒருவித பரவசத்தையும் பதற்றத்தையும் அளித்தன.
மறுநாளே என் கையெழுத்துப் பிரதிகளின் கோப்பைத் திறந்து ஒருமுறை எல்லாக் கதைகளையும் வேகமாகப் படித்து தொகுப்புக்குப் பொருத்தமான வகையில் பதினான்கு கதைகளை மட்டும் தனியே பிரித்தெடுத்துக்கொண்டேன். பிறகு எல்லாக் கதைகளையும் நகலெடுத்து என் வசம் வைத்துக்கொண்டு, கையெழுத்துப்பிரதிகளைத் தொகுத்து அவருக்கு அனுப்பிவைத்தேன்.  தொகுப்புக்கு என்ன பெயரிடுவது என்று புரியாமல் குழப்பமாக இருந்தது. அக்கணத்தில் பதினான்கு கதைகளின் தலைப்புகளுமே தொகுப்புக்கு பொருத்தமான பெயர்களாகவே தோன்றின. என் மனைவியிடம் காட்டி ஒரு பெயரைத் தேர்ந்தெடுக்கும்படி சொன்னேன். அவர் ஒருமுறை எல்லாத் தலைப்புகளையும் வேகவேகமாக மனத்துக்குள் படித்துவிட்டு, “வேர்கள் தொலைவில் இருக்கின்றன தலைப்பு நன்றாக இருக்கிறதுஎன்று ஒரே கணத்தில் முடிவைச் சொல்லிவிட்டார். நான் இரண்டுமூன்று முறைகள் மனத்துக்குள் அத்தலைப்பைச் சொல்லிப் பார்த்தேன். புதுமையாகவும் வசீகரமாகவும் இருந்ததால் அந்தக் கதையின் தலைப்பையே தொகுப்புக்குச் சூட்டிவிட்டு கையெழுத்துப் பிரதியை பெங்களூருக்கு அனுப்பிவைத்துவிட்டேன்.
மறுவாரமே சண்முகசுந்தரம் தொகுப்பு கிடைத்த தகவலை  எழுதியிருந்தார். ”முதல் தொகுப்பு என்பதால் யாராவது ஒரு முக்கிய எழுத்தாளர் முன்னுரை எழுதினால் நன்றாக இருக்கும். உங்களுக்கு அறிமுகமான ஒருவரிடமிருந்து வாங்கி அனுப்பினால் தொகுப்பில் சேர்த்துவிடலாம் என்று ஆலோசனை வழங்கியிருந்தார். யாரிடம் போய் கேட்பது என்று புரியாமல் குழம்பி சில நாட்கள் அமைதியாக இருந்துவிட்டேன். அதற்குள் சண்முகசுந்தரம் இன்னொரு மடலெழுதி நினைவூட்டினார்.
அன்று இரவு உணவு உட்கொண்டபிறகு வாங்கிவந்திருந்த குமுதம் இதழைப் புரட்டிப் படிக்கத் தொடங்கினேன். அந்த இதழில் பிரபஞ்சனின் கதை பிரசுரமாகியிருந்தது. அவர் குமுதம் இதழில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். குமுதம் குவார்ட்டர்ஸிலேயே அவருக்கு ஒரு வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. நான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்திலிருந்தே அவர் எனக்கு அறிமுகமானவர். கணையாழியில் அவருடைய கதைகளைப் படித்துவிட்டு அவரைச் சென்று சந்தித்துப் பேசியிருக்கிறேன். அவரிடம் முன்னுரை கேட்டால் எழுதித் தருவார் என்று தோன்றியது. மறுநாளே என் விருப்பத்தைத் தெரிவித்து அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். பிரபஞ்சன் உடனே பதில் போட்டிருந்தார். கதைகளின் பிரதியை எடுத்துக்கொண்டு இரண்டு நாட்கள் தங்கிச் செல்லும் வகையில் சென்னைக்கு வருமாறு எழுதியிருந்தார். அந்த வார இறுதியில் சென்னைக்குச் சென்று நான் அவரைச் சந்தித்தேன். அவர் என்னை தன்னோடு வீட்டில் தங்கிக்கொள்ளச் சொன்னார். கையெழுத்துப்பிரதியை வாங்கிப் பைக்குள் வைத்துக்கொண்டார். இரவுகளில் கிட்டும் ஓய்வுப்பொழுதுகளிலும் அலுவலகத்தில் கிட்டும் ஓய்வுப்பொழுதுகளிலுமாக இரண்டு நாட்களில் படித்து முடித்துவிட்டார். அவருடைய அறையில் வைத்திருந்த புத்தகங்களைப் படித்தபடி நான் பொழுதுபோக்கினேன். அன்று மாலை அலுவலகத்திலிருந்து திரும்பிய பிரபஞ்சன் தொகுப்பு தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றும் உங்களுக்கு இத்தொகுப்பு அழகான தொடக்கமாக இருக்கும் என்றும் சொல்லி தட்டிக்கொடுத்தார். அவர் குளித்து முடித்து அருகிலிருந்த காப்பிக்கடைக்கு என்னை அழைத்துச் சென்றார். இருவரும் அங்கே காப்பி அருந்தினோம். கதைகளைப்பற்றி பல புதிய கோணங்களில் அவர் சில கருத்துகளைச் சொன்னார்.
அன்றிரவு நான் விரைவில் உறங்கச் சென்றுவிட்டேன். மறுநாள் காலையில் எழுந்திருந்தபோது அவர் மேசையில் வைத்திருந்த தாள்களை எடுத்து என்னிடம் கொடுத்தார். இரவோடு இரவாக அவர் அந்த முன்னுரையை எழுதியிருந்தார். அடித்தல் திருத்தல் எதுவுமில்லாமல் அச்சுக் கோர்த்ததுபோல நேர்க்கோட்டில் இருந்தன அவர் வாக்கியங்கள்.  நான் அவர் கைகளைப்பற்றி நன்றி சொன்னேன். பிறகு குளித்துவிட்டு இருவரும் சிற்றுண்டி சாப்பிட்டோம். அவர் அலுவலகத்துக்குச் செல்ல, நான் புதிய முன்னுரையோடு திருப்பதிக்கு வந்து சேர்ந்தேன். பேருந்து நிலையத்திலிருந்து நேராக அஞ்சல் நிலையத்துக்குச் சென்று முன்னுரையை சண்முகசுந்தரத்துக்கு அனுப்பிவைத்தேன்.
அந்த ஆண்டு ஜூன் மாதத்தில் என் முதல் தொகுப்பு வெளிவந்தது. அஞ்சலில் வந்த நூல்களை ஒரு குழந்தையை அள்ளியெடுப்பதுபோல எடுத்து கையில் வைத்து புரட்டியபடி இருந்தேன். பார்க்கப்பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. உடனே சண்முகசுந்தரத்துக்கு நன்றி சொல்லி ஒரு கடிதம் எழுதினேன்.
இரண்டு ஆண்டுகள் கழித்து நான் பெங்களூருக்கு மாற்றல் பெற்றுச் சென்றேன். முதலில் குடியிருப்பதற்கு வாடகைக்கு ஒரு வீடு தேட வேண்டும்.  நகரில் எந்தப் பகுதியில் வீடு பார்ப்பது, அறிமுகமில்லாதவர்களிடம் வீட்டுக்காக அணுகுவது எப்படி என்பதெல்லாம் எனக்குக் குழப்பமாக இருந்தது. பெங்களூரில் அவரைத் தவிர வேறு யாரையும் தெரியாது. விடுதியில் அறை எடுத்து தங்கிக்கொண்டு நான் அவரைச் சந்திக்கச் சென்றேன். இன்னும் இரு தினங்களில் அவர் புதிதாகக் கட்டி முடித்திருந்த வீட்டுக்கு கிரகப்பிரவேசம் நடக்கவிருந்தது. அந்த வேலைகளில் அவர் மும்முரமாக இருந்தார். விழாவுக்கு வந்து கலந்துகொள்ளும்படி என்னிடம் சொன்னார். வேறு எந்தப் பகுதிக்கும் செல்லவேண்டாமென்றும் தன் வீட்டுக்கு அருகிலேயே வீடு பார்த்துக் கொடுப்பதாகவும் சொன்னார். நானும் பொறுமையோடு காத்திருந்தேன். புதுமனை புகுவிழா சிறப்பாக நடந்தது. அடுத்த சில நாட்களிலேயே அவர் அந்த வீட்டுக்குக் குடியேறிவிட்டார். அதற்கு அடுத்த நாளே எனக்கும் ஒரு வாடகைவீடு பார்த்துக் கொடுத்துவிட்டார். அவர் வீட்டிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி அந்த வீடு இருந்தது. ஒரு கூடம், ஒரு சமையலறை  கொண்ட சிறிய வீடு. நானும் என் மனைவியும் குழந்தையும் வசிக்க போதுமான இடம். அடுத்த வாரமே நான் ஊருக்குச் சென்று குடும்பத்தை அழைத்துவந்தேன்.
தினந்தோறும் அல்லது ஒன்றுவிட்டு ஒருநாள் மாலை வேளைகளில் நாங்கள் சந்தித்துக்கொள்வோம். படித்த புத்தகங்கள், பத்திரிகைகள் பற்றி உரையாடுவோம். ஒருநாள் அவர் என்னை அழைத்துச் சென்று வீட்டிலிருந்து சிறிது தொலைவில் இருந்த திருக்குறள் மன்றம் என்னும் நூலகத்தில் உறுப்பினராகச் சேஎர்த்துவிட்டார். அங்கு பழையதும் புதியதுமாக ஏறத்தாழ இருபதாயிரம் புத்தகங்கள் இருந்தன. எல்லா வார, மாத இதழ்களும் கிடைத்தன. ஒவ்வொரு நாளும் நானும் என் மனைவியும் அங்கு சென்று புத்தகங்கள் எடுத்துவந்தோம்.
சின்மயா மிஷன் மருத்துவமனைத் தெருவில் எதிரும்புதிருமான பக்கங்களில் எங்கள் வீடுகள் இருந்தன. அந்தத் தெரு நடைப்பயிற்சிக்குப் பொருத்தமான தெரு. தினமும் அத்தெருவில் காலை வேளையில் நாங்கள் இருவரும் சேர்ந்து நடப்போம். இட்லி குண்டானைத் திறந்ததும்  பறந்தலையும் புகைக்குவியல்போல ஒவ்வொரு வீட்டின் கூரை மீதும் படிந்து விலகும் பனிப்புகையைப் பார்ப்பது ஓர் அற்புதமான அனுபவம். அப்போதெல்லாம் அவர் புத்தகங்கள் போட்ட அனுபவங்களையும் அவற்றை விற்பனைக்கு அனுப்பும் அனுபவங்களையும் சுவையாகச் சொல்லிக்கொண்டே வருவார். அப்புறம் அவருடைய பள்ளிக்கால அனுபவங்கள், கிராமத்து அனுபவங்கள், வில்லுப்பாட்டு கேட்ட கதைகள், சென்னை வாசத்து அனுபவங்கள், கதைகளையும் பாடல்களையும் திரட்ட கிராமங்களில் அலைந்து திரிந்த கதைகள் என ஒவ்வொன்றையும் சுவாரசியமாகவும் விரிவாகவும் சொல்வார். ஒவ்வொரு அனுபவத்தையும் ஒரு சிறுகதையைப் போல விவரிப்பார் அவர்.
ஏறத்தாழ பதிமூன்று ஆண்டுக்காலம் நாங்கள் இருவரும் அந்தத் தெருவில் ஒன்றாக நடந்தோம். எங்கள் கண்முன்னாலேயே சின்மயா மிஷன் மருத்துவமனைத்தெரு கொஞ்சம்கொஞ்சமாக மாறிக்கொண்டே வந்தது. எட்டுமணி வரைக்கும் ஆளரவமே இல்லாமல் ஒரு ஓவியத்தைப்போல காணப்படும் அந்தத் தெரு மெல்ல மெல்ல அதிகாலை வேளையிலேயே சந்தடி மிக்கதாக மாறியது. மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. ஏராளமான வீடுகள் தோன்றின. அந்தத் தெருவைக் கடந்து எண்ணற்ற புறநகர்கள் வேகவேகமாக வளர்ந்தெழுந்ததால், அந்தத் தெரு ஓர் இணைப்புச்சாலையாக மாறத் தொடங்கியது. அதிகாலையிலேயே அச்சமூட்டும் வேகத்தில் சீறிச் செல்லும் வாகனங்களை அஞ்சி நாங்கள் ஓரமாக நடக்க வேண்டியிருந்தது.  சாலையை நோக்கியிருக்கும் வீடுகள் ஒவ்வொன்றாக கடைகளாக மாற்றம் கொள்ளத் தொடங்கின. முன்புபோல சுதந்திரமாக பேசிக்கொண்டும் கைவீசிக்கொண்டும் நடக்க சாத்தியமில்லாமல் போயிற்று. ஒரு கட்டத்தில்  நாங்கள் அந்தத் தெருவையே தவிர்த்து அருகிலிருந்த பூங்காக்களில் நடைச்சுற்றுப் பாதையில் விருப்பமில்லாமல் நடக்கத் தொடங்கிவிட்டோம்.
பேசிக்கொண்டே நடக்கிற எங்கள் சுபாவத்துக்கு அந்தப் பூங்கா நடை சரிவரவில்லை. முன்னால் பத்து பேர், பின்னால் பத்து பேர் நடக்க, நடுவில் நடப்பது ஏதோ ஒருவகையில் நடைப்பந்தயத்தில் நடப்பதுபோல  சங்கடம் அளிக்கக்கூடியதாக இருந்தது. வேடிக்கை பார்த்தபடி நடக்கத் தோதான தெருக்களே எங்களுக்குத் தேவையாக இருந்தது. அந்த நேரத்தில் அவருடைய கல்லூரியில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. தமிழ் படிக்கும் மாணவமாணவிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. கற்பித்தலுக்குத் தொடர்பில்லாத வேலைளை நிர்வாகம் அவர்மீது சுமத்தி நெருக்கடியளித்தது. இதனால் சற்றே மனம் சோர்ந்த சண்முகசுந்தரம் முதலில் காவ்யா பதிப்பகத்தை சென்னையில் இடம் பார்த்து மாற்றினார்.  பிறகு குடும்பத்தையும் சென்னைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். ஒருசில மாதங்கள் வாடகைக்கு ஓர் அறையெடுத்துத் தங்கி கல்லூரிக்குச் சென்றுவந்தார். வாரந்தோறும் அலைச்சலால் அவர் உடல்நிலை கெட்டது. வேறு வழியில்லாமல் விருப்ப ஓய்வுபெற்று சென்னைக்கே இடம்பெயர்ந்து சென்றார். நான் என் நடைத்துணையையும் பேச்சுத்துணையையும் இழந்தேன். இடைப்பட்ட காலத்தில் அவர் என்னுடைய ஏழு சிறுகதைத்தொகுதிகளையும் ஒரு நாவலையும் மூன்று மொழிபெயர்ப்புகளையும் தொடர்ந்து வெளியிட்டார்.
சில சமயங்களில் அவர் வசித்த வீட்டின் பக்கம் இப்போதும் செல்வதுண்டு. என் மனைவி இன்னும் அதைகாவ்யா வீடுஎன்று அழைப்பதுதான் வழக்கம். நிமிர்ந்து நிற்கும் அந்த வீட்டைப் பார்க்கும்போதெல்லாம் மாடியில் கதவோரம் நாற்காலி போட்டு உட்கார்ந்துகொண்டு அவர் எழுதியபடி இருக்கும் காட்சிதான் முதலில் மனத்திலெழும். அவர் அங்கே உட்கார்ந்திருப்பதுபோலவே ஒரு கணம் நினைத்துக்கொள்வேன். மறுகணமே அதன் வெறுமை உறைக்கும். தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலத்தோடு காணப்பட்ட அந்த வீட்டின் தோற்றம் இன்னும் என் கண் முன்னாலேயே இருக்கிறது. கதவைத் திறந்துகொண்டு நான் வீட்டுக்குள் செல்லும் ஒவ்வொரு முறையும்லச்சு, பாவண்ணன் வந்திருக்காரும்மாஎன்று அவர் குரல் கொடுப்பதும் அவருடைய துணைவியார் தேநீர்க்கோப்பையோடு வருவதும் ஒரு நாள் கூட தவறியதில்லை. உண்மையிலேயே சண்முகசுந்தரத்துக்குக் கிடைத்த அன்னலட்சுமி அவர். இன்று அந்த வீடு பல கைகள் மாறி, ஏதோ சரக்குக்கூடமாக எல்லாச் சமயங்களிலும் பூட்டப்பட்டே இருக்கிறது.
இன்று அவருக்கு எழுபது வயது நிறைகிறது. அவரை நினைக்கும்போதெல்லாம் இயல்பாக பொங்கிவரும் அவருடைய நகைச்சுவை உணர்வே முதலில் என் மனத்தில் மிதந்தெழுகிறது. நான் முதன்முதலாக அவரைப் பார்த்துவிட்டுச் சென்றபோது எனக்குள் உருவான எண்ணம் மேலும் மேலும் இன்று வலுப்பெற்றுவிட்டது. விடுதலையின் வழியாக அவர் நகைச்சுவையைக் கண்டுகொண்டார். அதுவே அவர் வாழ்வின் தரிசனமாகவும் ரகசியமாகவும் தோற்றம் தருகிறது. அவருக்கு என் வணக்கங்கள்.

(காவ்யா சண்முகசுந்தரம் அவர்களுக்கு எழுபது வயது நிறைவடைவதை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை)