Home

Tuesday 7 July 2020

ரோஜாப்பூக்கள் - சிறுகதை



மொட்டைமாடியிலிருந்து ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு பூந்தொட்டியை விளிம்பைப் பிடித்தபடி எடுத்துக்கொண்டு படியிறங்கி வந்தவனைப் பார்த்து ஒனக்கு எதுக்குடா சுப்பையா இந்த வீண்வேல?” என்று கேட்டார் கந்தசாமி. 
தண்ணி ஊத்தி வளத்தவனே செடியும் வேணாம் கொடியும் வேணாம்னு உட்டுட்டு போயிட்டான். அத காப்பாத்தணும்னு ஒனக்கு என்ன தலயெழுத்தா? ஒனக்கு என்ன மனசுல பெரிய பாரிவள்ளல்னு நெனப்பா?”
வாசலில் இருந்த இரும்புக்கதவு இடித்துக் கழற்றப்பட்டு ஏற்கனவே ஓரமாக அடுக்கப்பட்டிருந்த ஜன்னல் சட்டகங்களோடு சேர்த்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அகலமாகத் திறந்திருந்த வாசல் சுவரை ஒட்டியபடி  வெளியே தொட்டிகளை வைத்தான் சுப்பையா. பிறகு அசட்டுச் சிரிப்போடு அப்டிலாம் ஒன்னுமில்லண்ணே. போறவங்க வரவங்க கண்ணுல படட்டுமேனுதான் கீழ எறக்கி வச்சேன்.  காயற வெயில்ல மேலயே கெடந்து தண்ணியில்லாம வாடி செத்துப் போவறதவிட வேணும்கறவங்க எடுத்துட்டு போய் பொழைக்கவச்சா நல்லதுதானண்ணேஎன்றான்.

அதத்தான்டா நானும் கேக்கறேன். அதுங்க செத்தா நமக்கென்ன, பொழச்சா நமக்கென்ன?”
பாவம்ண்ணே, அதுவும் ஒரு உயிர்தானண்ணே.”
வடலூர் கோயில்ல சாமியாரா இருக்கவேண்டிய ஆளு நீ. மேஸ்திரி ஒன்ன இழுத்தாந்து இங்க நிக்க வச்சிட்டாரு.”
சுப்பையா சிரித்துக்கொண்டே மாடிப்படிக்கட்டில் ஏறினான். மாரிமுத்துவும் செல்லப்பாவும் ஆளுக்கு ஒரு பக்கமாக ஜன்னல் சட்டகத்தைப் பிடித்தபடி  இறங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தடையில்லாமல் இறங்குவதற்குத் தோதாக சுப்பையா அவசரமாக தரைக்கு இறங்கி வழிவிட்டு  நின்று அவர்களைப் பார்த்தான்.
இருவருக்கும் தோள் தசைகள் இறுகி முறுக்கேறியிருந்தன.  படிக்கட்டில் கவனமாக அடியெடுத்து வைத்து இறங்கியபடி சுப்பையாவின் பக்கம் திரும்பாமலேயே என்ன எம்ஜியாரே. மொட்டமாடிய காலி பண்ணிட்டியா?” என்று கிண்டலுடன் கேட்டார் மாரிமுத்து.
ஒருநாள் மதிய வேளையில் எல்லோரும் வட்டமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வாசலில் வயதான ஒரு ஆயாவும் தாத்தாவும் வந்து ரொம்ப பசிக்குதுங்க, சாப்படறதுக்கு ஏதாச்சிம் குடுங்க சாமிஎன்று கேட்டார்கள். அப்போது சுப்பையா கொஞ்சம் கூட யோசிக்காமல் எழுந்து சென்று தன் தட்டில் இருந்த சாப்பாட்டை அவர்களுக்குக் கொடுத்துவிட்டுத் திரும்பினான். ஆயாவும் தாத்தாவும் அடுத்த வீட்டைப் பார்த்துச் சென்றபிறகு அனைவரும் அவனை கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். அந்தக் கிண்டல் பேச்சுகளின் முடிவில் மாரிமுத்து அவனுக்கு எம்ஜிஆர் என்று பட்டப்பெயர் சூட்டிவிட்டார். பிறகு அதுவே பழக்கமாகிவிட்டது.
மின்விசிறி, விளக்குகள், கடிகாரம் போன்றவையெல்லாம் ஏற்கனவே கழற்றி அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன. பத்து நாட்களாக நடந்துகொண்டிருந்த கதவு, ஜன்னல் போன்ற மர இரும்பு சாமான்களை அகற்றியெடுக்கும் வேலைகள் முடிவடையும் கட்டத்தில் இருந்தன. அந்த வீட்டில் மொத்தம் இரண்டு மாடிகள்.  மொத்தமாக பதினைந்து அறைகள். மூன்று குளியலறைகள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கதவுகள். சின்னதும் பெரிதுமாக இருபத்தைந்து ஜன்னல்கள். சுவரோடு ஒட்டிய நான்கு அலமாரிகள். கழற்றப்பட்ட இடத்திலேயே சுவரோடு சாய்த்து வைக்கப்பட்டிருந்த எல்லாச் சட்டகங்களையும் ஒன்றுவிடாமல் கீழே கொண்டு வரும் வேலை நடந்துகொண்டிருந்தது. ராஜா, கோபால், ஏழுமலை, ராமச்சந்திரன், கணேசன், ஆறுமுகம், மாரிமுத்து, செல்லப்பா, சுந்தரம், ஜெயபாலன், சாதிக் எல்லோருமே அந்த வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். காற்று சுத்திரமாக உள்ளே வந்து செல்வதால் ஒவ்வொரு அறையிலும் தூசு பறந்தது.
அவன் வீட்டை நிமிர்ந்து பார்த்தான். காற்றில் அசையும் ஒரு கந்தல் துணியைப்போல சுவர்கள் இடிபாடுகளுடன் காணப்பட்டன. வண்ணப்பூச்சோடு உதிர்ந்து நொறுங்கிய செங்கற்களின் குவியலும் புழுதி படிந்த தரையும் ஒரு பாழடைந்த வீட்டுக்குள் நின்றிருப்பதுபோன்ற உணர்வை எழுப்பியது.  
நீ என்னடா பண்ற இங்க?” அதட்டிக்கொண்டே ஒரு அறையிலிருந்து வெளியே வந்தார் ரங்கநாதன் மேஸ்திரி.
பூந்தொட்டிங்கள எறக்கி வச்சிட்டு வரேன்.”
கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும், மொதல்ல கெழவன தூக்கி மனயில உக்காரவைன்னு சொல்றமாதிரி இருக்கற வேலைய உட்டுட்டு தொட்டி சட்டினு அலயறயே. மொதல்ல ஒவ்வொரு ரூமா பாத்துட்டு வா. ஒரு இரும்புத்துண்டு, ஒரு நட்டுபோல்ட்டு கூட உட்டுடக்கூடாது. அப்பறம் மொதலாளிக்கு நம்மால பதில் சொல்லமுடியாது. போ.”
 முதலாளியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் மேஸ்திரி. மேஸ்திரியின் பேச்சை முதலாளி ஒரு நாளும் தட்டியதில்லை.  எங்காவது வீட்டை இடிக்கும் வேலை புதுசாக வருகிறது என்று தெரிந்தால் மேஸ்திரியை அழைத்துச் சென்று இருவருமாக முதலில் சுற்றிப் பார்ப்பார்கள். அப்புறமாக மேஸ்திரிதான் ஒரு விலையை முதலாளிக்குத் தெரிவிப்பார். அவர் அந்த விலையை கான்ட்ராக்டரிடம் சொல்வார். அவர் கணக்கு ஒருபோதும் பிசகியதே இல்லை. முதலாளியின் லாபக்கணக்கு ஒருநாளும் குறைந்ததில்லை.
நெல்லித்தோப்பு மீன்மார்க்கெட் பக்கத்திலிருந்த ஒரு பெரிய வீட்டுத்திண்ணையில் ஒருநாள் இரவு படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான்  சுப்பையா. இடிப்பதற்காக மேஸ்திரியும் ஆட்களும் அங்கு தங்கியிருந்த வீடு அது. இரவு சினிமாவுக்குப் போய்விட்டு வந்த மேஸ்திரி திண்ணையில் தூங்குபவனை எழுப்பி யாருடா தம்பி நீ? எதுக்கு இங்க வந்து படுத்திருக்க?” என்று கேட்டார். அவன் எழுந்து தலையைச் சொரிந்துகொண்டே அழத் தொடங்கினான்.
அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம எதுக்குடா அழற? ஒழுங்கா பதில் சொல்லப்போறியா இல்லயா?” என்று அதட்டினார்.
சித்தி என்ன வெளிய போடானு கழுத்த புடிச்சி தள்ளிட்டாங்க.”
எதுக்கு?”
மாடு மிதிச்சி கால் வீங்கிட்டுது. என்னால வேல செய்ய முடியல. வேல செய்யலைன்னா சோறு கெடையாது வெளிய போடானு தள்ளிட்டாங்க.”
மேஸ்திரி அவன் காலைப் பார்த்தார். வீங்கியிருந்தது. ஏதோ அழுக்குத் துணியால் சுற்றியிருந்தான்.
அம்மா அப்பா இல்லியா?”
போன வருஷம் எங்க ஊடு நெருப்பு புடிச்சி எரிஞ்சிட்டுது. அப்ப ரெண்டு பேருமே செத்துட்டாங்க.”
சரி, இப்ப சாப்படறியாடா?” என்று கேட்டார் மேஸ்திரி. அவன் முதலில் அஞ்சி வேண்டாம் என்பதுபோல தலையசைத்தான். பிறகு அவருடைய கனிந்த கண்களைப் பார்த்துவிட்டு ம்என்றான். கண்களில் வழிந்த கண்ணீரை சட்டை விளிம்பை உயர்த்தி அழுத்தித் துடைத்துக்கொண்டான்.
வாடாஎன்று அவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். உள்ளே கூடத்தில் நிறைய பேர் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார்கள். படிக்கட்டுகள் வழியாக அவர் அவனை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கு மாடிச்சுவர் ஓரமாக ஒரு கட்டில் போடப்பட்டிருந்தது. அதற்குப் பக்கத்தில் சில பாத்திரங்கள் மூடிவைக்கப்பட்டிருந்தன. அவர் ஒரு பாத்திரத்தைத் திறந்தார். இரவு சாப்பிட்டு எஞ்சிய சோற்றில் தண்ணீர் ஊற்றிவைத்திருந்தார். ஒவ்வொரு கையாக பிழிந்தெடுத்து ஒரு தட்டில் போட்டு குழம்பூற்றி அவனிடம் கொடுத்தார். அவன் அதை வாங்கி அவசரமாக பிசைந்து உருண்டையாக உருட்டி வாயில் போட்டு மென்றான். விழுங்கும்போது புரைக்கேறிவிட்டது. விக்கினான்.
பொறுமையா சாப்புடுஎன்றபடி மேஸ்திரி ஒரு தம்ளர் தண்ணீரை குடத்திலிருந்து மொண்டு அவனுக்கு முன்னால் வைத்தார். இரண்டுவாய் தண்ணீர் அருந்திய பிறகு அவன் சற்றே நிதானத்துக்கு வந்தான்.
ஒன் பேரு என்னடா?”
சுப்பையா
அவர் அவனை தன்னோடு வைத்துக்கொண்டார். தொடக்கத்தில் அவன் அங்கு வேலை செய்பவர்களுக்கு தேவைப்படும் உதவிகளைச் செய்யும் ஆளாகவும் அவ்வப்போது அலுமினியம் போணியை எடுத்துச் சென்று கடையிலிருந்து டீயும் வடையும் வாங்கிவந்து கொடுப்பவனாகவும் இருந்தான்.
அந்த நெல்லித்தோப்பு வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கும் வேலை கிட்டத்தட்ட ஒரு மாதம் நடந்தது. அச்சமயத்தில் ஒருநாள் கூட யாரும் அவனைத் தேடி வரவில்லை. அவனும் வீட்டைவிட்டு இறங்கி எங்கும் செல்லவில்லை.
ஒருநாள் இரவில் மேஸ்திரிக்குத் தேவையான உணவை அவனே சமைத்துக் கொடுத்தான். அவன் சமையல் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. “இந்த சின்ன வயசில இவ்ளோ ருசியா சமைக்க எப்பிடிடா கத்துகிட்ட?” என்று கேட்டார். “சித்தி ஊட்டுல நான்தான்ணே சோறாக்குவன்என்றான் அவன்.
அந்த வீட்டுவேலை முடிந்து வேறு வீட்டைநோக்கி அவர்கள் சென்றபோது அவனும் அவர்களோடு சேர்ந்துகொண்டான். நான்கு வருஷங்களாக ஒன்றை அடுத்து ஒன்றென அவர்களோடு போய்க்கொண்டே இருந்தான்.
பிரெஞ்சு குடியுரிமை பெற்று பிரான்ஸில் வசிக்கும் பலர் பொதுவாக பாண்டிச்சேரியிலும் வீடுகள் வைத்திருப்பார்கள். முதல் தலைமுறையினர் அங்கு வசிப்பார்கள். இரண்டாவது தலைமுறையினர் பிரான்ஸிற்குச் சென்றதும் அவை பயன்படுத்தாத சொத்தாக நீடித்திருக்கும். மூன்றாவது தலைமுறையினருக்கு அப்படி ஒரு சொத்து இருப்பதே பெயரளவில் மட்டுமே தெரிந்திருக்கும். யாராவது சொந்தக்காரர்கள் வழியாக வாடகைக்கு விட்டுவைத்திருப்பார்கள். ரியல் எஸ்டேட்காரர்கள் இப்படிப்பட்ட வீடுகளைத் தேடித்தேடி வாங்கி கான்ட்ராக்டர்களுக்கு நல்ல லாபத்துடன் விற்றுவிடுவார்கள்.
பத்திரம் எழுதப்பட்டதும் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கும் வேலைக்கு ஒரு தொகை முடிவான பிறகு முதலாளி மேஸ்திரியையும் ஆட்களையும் அங்கு அனுப்பிவைப்பார்.  கட்டடங்களின் அமைப்புக்கேற்ப  அந்த வேலை மூன்று நான்கு வாரங்களில் முடிவடையும். அவர்கள் அங்கேயே கூட்டமாகத் தங்கி அந்த வேலையை முடிப்பார்கள். முதலில் மின்சாரப் பொருட்கள் வெளியேறும், பிறகு இரும்புச்சாமான்களும் மரச்சாமான்களும் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அகற்றப்பட்டு அடுக்கிவைத்திருப்பார்கள். அனைத்தும் முடிந்தன என்னும் நிலையில்  லாரி வந்து அவற்றை நாலைந்து நடையாக ஏற்றிக்கொண்டு வெளியேறும். இறுதியாக பொக்லைன் வைத்து இடிக்கப்பட்ட கற்குவியல்கள் அகற்றப்படும். ஒரு கட்டடம் அங்கே இருந்தது என்பதற்குச் சாட்சியாக எந்தச் சுவடும் இல்லாதபடி ஒரு கட்டாந்தரையாக மாற்றி கான்ட்ராக்டரிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும்.
ஒவ்வொரு பொருளையும் வாங்கிக்கொள்ள  தனித்தனியாக ஒரு கூட்டமே நகரத்துக்குள் இருந்தது. நீண்ட காலமாக அந்த வேலைகளில் ஈடுபட்டுப் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு கூட்டத்தோடும் ஒரு தொடர்பை தக்கவைத்துக் கொண்டிருந்தார் முதலாளி. அந்தத் தொடர்பின் வழியாக அந்த வியாபாரம் ஒரு தடையுமில்லாமல் சீராக போய்க்கொண்டிருந்தது.
பதினாறு தொட்டிகளையும் ஜோடிஜோடியாக எடுத்துவந்து வைக்கும் வேலையை முடித்தான் சுப்பையா.
அங்கயே ஒரு பாய போட்டு ஒக்காந்துக்குடா சுப்பையா. எது எடுத்தாலும் அம்பது ரூபா எது எடுத்தாலும் அம்பது ரூபானு கூவி வித்தா, நல்ல லாபம் கெடைக்கும்டா ஒனக்குஎன்று சொல்லிவிட்டுச் சிரித்தார் செல்லப்பா.
நீ இப்பவே அவன கான்ட்ராக்டராக்கிடுவ போல
மேஸ்திரி சிஷ்யன் மேஸ்திரியாகக் கூடாதா என்ன?”
லாபத்த ஒரே ஆளா அழுத்திக்காதடா. எங்களுக்கும் பங்கு கொடுக்கணும் புரிதா?”
சும்மா இருங்ணே. இதுங்கள யாராவது எடுத்தும் போவமாட்டாங்களானு நானே வெசனத்துல இருக்கன். நீங்க வேற.”
அந்த வீட்டுக்கு வந்த முதல் நாள் மேஸ்திரியின் கயிற்றுக்கட்டிலையும் பாய்களையும் சமையல் சாமான்களைக் கொண்ட பைகளையும் வைப்பதற்கு மொட்டை மாடிக்கு எடுத்துச் சென்றபோதே அங்கிருந்த பூந்தொட்டிகளை அவன் பார்த்தான். எல்லாமே ரோஜா செடிகள். வெள்ளை, சந்தனம், இளஞ்சிவப்பு, சிவப்பு நிறங்களில் ஒவ்வொரு செடியிலும் பூத்துக் குலுங்கும் நாலைந்து பூக்கள்.
ஐயையோ, இந்த தொட்டிங்கள மறந்துட்டு போயிட்டாங்கண்ணேஎன்று சுப்பையா பதறினான்.
மறந்துட்டு போகலடா. வேணான்னு விட்டுட்டு போயிட்டாங்க.”
செடிங்க பாவம்ண்ணே
முதலாளிகிட்ட அட்ரஸ் வாங்கி குடுக்கறேன். வண்டியில எடுத்தும் போயி குடுத்துட்டு வரியா?”
இங்க இருந்த ஆளுங்க தோ காலி பண்றேன் தோ காலி பண்றேன்னு இழுத்துகினே இருந்தானுங்க. காசி குடுத்து வாங்கனவன் எவ்ளோ நாள்தான் பொறுத்திருப்பான். பிரான்ஸ்காரன ஃபோன்ல கூப்ட்டு சத்தம் போட்டான். ஐயோ பாவம்னு பாத்தா எனக்கே மோசம் பண்றியேனு இவன பாத்து அவன் சத்தம் போட்டான். அப்பவும் இவன் இதோ இதோனு இழுத்திருக்கான். இதெல்லாம் வேலைக்கி ஆவாதுனு சின்னதா ஒரு ரேட் பேசி சங்கிலி ஆல்பர்ட்கிட்ட வேலய ஒப்படைச்சிட்டாங்க. அவன் எறங்கி எல்லாத்தயும் ரெண்டே நாள்ல இழுத்து வெளிய கெடாசிட்டான். அவுதியோ புவுதியோனு ஓடறவன் தொட்டிய பாப்பானா சட்டிய பாப்பானா. மானத்தோட பொழச்சா போதும்னு ஓடிட்டானுங்க.”
என்ன எம்ஜியாரு. இந்தக் கத ஒனக்குத் தெரியாதா?”
சமைப்பதற்காக கீழேயிருந்து பானையில் தண்ணீர் எடுத்து வந்தபோது ஒரு பானை தண்ணீரை வெயில் பட்டு வாடியிருந்த அந்தச் செடிகளுக்கு ஊற்றினான். ஒவ்வொரு நாளும் அதை ஒரு வேலையாகவே வைத்துக்கொண்டான் அவன்.
அவனைப் பார்த்து கிண்டல் செய்வதும் வேடிக்கைப் பேச்சு பேசுவதும் சீண்டிவிட்டு வேலை வாங்குவதும் எல்லாச் சமயங்களிலும் இயல்பாக ஒரு விளையாட்டு போல நடைபெறும். ஆனால் எல்லோருக்கும் அவன் செல்லப்பிள்ளை. அவன் செய்வதை யாரும் தடுப்பதில்லை. ஒவ்வொருவரும் அந்த வேலையில் தமக்குத் தெரிந்த சூட்சுமங்களை அவனுக்குச் சொல்லிக் கொடுப்பார்கள்.
இடிக்கறது ஒன்னும் சாதாரண வேல கெடயாது தம்பி. கட்டறவன் எந்த அளவுக்கு கவனமா இருந்து வேல செய்யணுமோ அதே அளவுக்கு கவனமா இடிக்கறவனும் வேல செய்யணும். எல்லாத்துலயும் சிரமம் இருக்குது. கொஞ்சம் ஏமாந்தாலும் கையில கால்ல ஏதாவது சரிஞ்சி உழுந்து ஆள படுக்கவச்சிடும்.”
ஒரு வைத்தியனுக்கு ஒடம்புல எங்கெங்க எலும்பு இருக்குது எங்கெங்க சத இருக்குதுனு தெரியறமாதிரி இடிக்கறவனுக்கும் ஒரு ஊட்டுல எங்கெங்க கம்பி இருக்குது, எங்கெங்க மரம் இருக்குதுனு தெரியணும். புதையல் எடுக்கறமாதிரிதான் இந்த வேல.”
கண்ணுக்குப் புலப்படாத இடங்களிலிருந்தெல்லாம் தட்டித்தட்டி உடைத்து கம்பிகளை உருவி எடுக்கும்போதெல்லாம் சுப்பையா திகைத்து நின்றுவிடுவான். ஒவ்வொரு கட்டுமானத்திலும் இரும்புக்கம்பிகளும் மரச்சட்டங்களும் இருக்கவேண்டிய அளவுக்கு உள்ள கணக்கு ஒரு பெரிய புதிர். ஒரு வீட்டைக் கட்டுபவன் தனக்கு எந்த அளவுக்கு காற்றும் வெளிச்சமும் வேண்டும் என்று நினைக்கிறானோ அந்த அளவுக்குத்தான் ஜன்னல்களையும் கதவுகளையும் திட்டமிடுவான். அது அவனுடைய கணக்கு. கணக்கு இல்லாத வாழ்க்கையே இல்லை.
அப்ப ஒரு கணக்கும் தெரியாதவங்களுக்கு வாழ்க்கயே இல்லயா?”
உண்டு உண்டு. ஏற்கனவே ஒருத்தன் கணக்கு போட்டு வச்சிருப்பானில்ல. அதுல மாட்டி சிக்கி சீரழிவாங்க.”
சிக்கிக்க விருப்பமில்லாதவங்க கதி?”
இதோ, இந்த மாதிரி மொட்டைமாடிதான் கதி. இல்லைன்னா ப்ளாட்ஃபார்ம்.”
அது நம்ம படச்ச கடவுள் போடற கணக்கு. யார் கணக்கிலேர்ந்து வேணும்னாலும் தப்பிச்சிக்கலாம். ஆனா அவன் கணக்கிலேந்து தப்பிக்கவே முடியாது.”
மணி ஒன்றரை ஆகும்போது மேஸ்திரி கையை உயர்த்தி இதோட நிறுத்துங்கப்பா. சாப்புட்ட பிறகு மிச்சத்த பாக்கலாம்என்றார். சுப்பையா இரண்டு வாளி நிறைய தண்ணீரையும் தேங்காய்நாரும் விம் பவுடரும் வைத்திருக்கும் சின்ன கூடையையும் கொண்டு சென்று மதிலோரமாக வைத்துவிட்டு துடைப்பத்தை எடுத்துவந்து கூடத்தில் வெளிச்சமான இடத்தில் பெருக்கி சுத்தப்படுத்தினான். ஒவ்வொருவராக சென்று கைகளையும் முகத்தையும் கழுவிக்கொண்டு வந்தார்கள். அனைவருக்கும் இறுதியாகச் சென்று கை கழுவிக்கொண்டு வந்த சுப்பையா அறைக்குள் பலகை போட்டு மூடி, அதன் மீது கல் வைத்து பாதுகாப்பாக வைத்திருந்த சோற்றுப் பாத்திரத்தையும் குழம்புப் பாத்திரத்தையும் கொண்டுவந்து வைத்தான் சுப்பையா. கழுவி கவிழ்த்திருந்த தட்டில் சோறும் குழம்பும் ஊற்றி ஒவ்வொருவரிடமும் கொடுத்தான். மொச்சைப்பயிறும் முருங்கைக்காயும் போட்ட காரக்குழம்பு.
ஒரு முருங்கமரம் ஒனக்கு கெடச்சாலும் கெடச்சிது. சாம்பார வச்சாலும் முருங்கக்காய போட்டுடற.  காரக்கொழம்பு வச்சாலும் முருங்கக்காய போட்டு கலக்கற.”
எதுவா இருந்தாலும் வாய்க்கு ருசியா இருக்குதா இல்லயா, அத சொல்லு.”
எம் பொண்டாட்டிக்கு கூட இவ்வளவு ருசியா கொழம்பு வைக்கத் தெரியாது. அவ்ளோ ருசியா வகவகயா வச்சி குடுக்கறான். இவனாலயே இப்பலாம் நாக்குக்கு கூடுதலா ரெண்டு புடி சோறு கேக்குது.”
சுப்பையாவ கட்டிக்க எந்த மகராசிக்கு குடுத்து வச்சிருக்கோ.”
வர மகராசிக்கு வாய்க்கு ருசியா விதவிதமா ஆக்கி போட்டு அழகு பாப்பான் நம்ம சுப்பையா. அவளுக்கு சமையல்கட்டு பக்கமே வேல இருக்காது.”
பொண்டாட்டிய உள்ளங்கையில வச்சி தாங்குதாங்குனு தாங்குவான்.”
அவன் இன்னும் சின்ன பையன்டா செல்லப்பா, அவன்கிட்ட போயி பொண்டாட்டி கிண்டாட்டினு பேசாத
யாரு, இவனா சின்ன பையன்? நல்லா பாரு. கருகருனு மீச வந்துடுச்சி பாரு. இப்ப கல்யாணம் பண்ணி வச்சா போதும், அடுத்த வருஷம் ஒரு கொழந்தய பெத்து காட்டுவான்.”
மொதல்ல தொழில கத்துகிட்டு உறுதியா நிக்கட்டும். அதுக்கப்பறம்தான் பொண்ணு, கல்யாணம் எல்லாம்.”
அதான் மேஸ்திரி இருக்காரே, எல்லாத்தயும் அவரு பாத்துக்குவாரு.”
இங்க பாரு சுப்பையா, நான் சொல்றமாதிரி செய். மாசத்துக்கு ஒரு எடம்னு சுத்தற ஆளுங்க நாம. போற எடத்துலயெல்லாம் நீ தூண்டில போட்டுகினே இரு. எங்கயாவது ஒனக்குனு ஒரு மீனு வந்து சிக்குனு மாட்டும். அப்பிடியே தூக்கிடு. புரியுதா? மத்தத நாங்க பாத்துக்கறம்.”
அவர்களோடு பழகத் தொடங்கிய நாட்களில் ஒவ்வொரு நாளும் அவர்களுடைய பேச்சால் அவன் புண்பட்டு தூக்கம் வராமல் வருத்தத்தில் மூழ்கியிருந்தான். வில்லியனூர் பக்கத்தில் ஒரு வீட்டுவேலையில் அவர்கள் தங்கியிருந்த சமயத்தில் கொசுக்கடியில் அவனுக்கு மலேரியா வந்துவிட்டது. அச்சமயத்தில் அவர்கள் அனைவரும் கூடப் பிறந்த சகோதரர்கள்போல பக்கத்திலேயே இருந்து கவனித்துக்கொண்டார்கள். ஊசி போட அழைத்துச் செல்வதிலிருந்து வேளாவேளைக்கு மருந்து எடுத்துக் கொடுப்பதுவரை ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தார்கள். அவர்களின் ஆழ்நெஞ்சில் படிந்திருந்த பாசத்தை அவன் அன்று புரிந்துகொண்டான். அதற்குப் பிறகு அவர்கள் என்ன சொல்லி கிண்டல் செய்தாலும் போங்கண்ணேஎன்று புன்னகையோடு கடந்துசெல்லத் தொடங்கினான்.
அவன் முதன்முதலாக கடப்பாரையையும் சுத்தியலையும் கையாள்வதற்கு அவர்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டான். கடப்பாரையை எவ்வளவு வேகமாக குத்தவேண்டும், எவ்வளவு ஆழத்துக்குக் குத்தவேண்டும் என்பதையெல்லாம் பழகிக்கொண்டான்.  மாரிமுத்துவும் செல்லப்பாவும் அவனை தம் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு ஒரு வேலைக்காரனாக பட்டை தீட்டி உருவாக்கினார்கள்.
சுப்பையா சோற்றுப்பானையிலிருந்து தட்டுநிறைய சோற்றை நிறைத்து எடுத்துச் சென்று ஒவ்வொருவருடைய தட்டிலும் அன்னக்கரண்டியால் சோற்றை எடுத்து வைத்து மோர் ஊற்றினான்.
என்ன சுப்பையா, மோர்ல உப்பு கொறவா இருக்குதே. இன்னும் கொஞ்சம் உப்பு போடக்கூடாதா?..”
எனக்கு சரியாதான் இருக்குது. அவனுக்கு மட்டும் குடு
உப்பு உப்புனு அள்ளி போட்டுக்காதடா. உப்பயும் ஊறுகாயயும் அளவா சாப்படணும்.”
பொண்டாட்டி கூட இருக்கறமாதிரி உப்பும் அளவா இருக்கணும். அளவு மிஞ்சினா எல்லாமே ஆபத்துதான்.”
இவன் ஒருத்தன். எத பேசனாலும் பொண்டாட்டி பேச்ச கொண்டாந்து சேத்துடறான். ஊட்ட உட்டு வந்து பன்னெண்டு நாள்தான்டா    ஆச்சி. அதுக்குள்ள தொரைக்கி பொண்டாட்டி ஞாபகம் வந்துட்டுதா?”
தட்டுகளை கையில் ஏந்தியபடி அவர்கள் சிரித்த சிரிப்பொலியைக் கேட்டு சுவரோரமாக வந்து உட்கார்ந்திருந்த காக்கைகள் திகைத்து எழுந்து பறந்தன.
ஒரு விஷயம் உங்களுக்கு சொல்ல மறந்துட்டன். தப்பா இருந்தா மேஸ்திரிதான் திருத்தணும்என்று தொடங்கினார் ஆறுமுகம். ஊறுகாயை வழித்து நாக்கில் வைத்தபடி திரும்பிப் பார்த்தார் ராமச்சந்திரன்.
போன வாரம் கடைத்தெருவுல என்ன எறக்கி உடுங்கனு சொல்லி நம்ம மொதலாளி கூட கார்ல போனனே, ஞாபகம் இருக்குதா?” என்றபடி மற்றவர்களை ஒருகணம் கவனித்தார் ஆறுமுகம். “மேல சொல்லுடா, ஞாபகம் இருக்குதுஎன்று அவசரப்படுத்தினார் ராமச்சந்திரன்.
அன்னைக்கு என்ன எறக்கி உட்டுட்டு மொதலாளி நேரா சிட்டிக்கு போகல. கொஞ்ச தூரம் போயி லெஃப்ட்டுல திரும்பி ஒரு தெருவுல போய்ட்டாரு. எனக்கு எதுவுமே புரியல. நம்ம மொதலாளி எதுக்கு இந்த தெருவுக்குள்ள போறாருனு ஒரே கொழப்பம். சரி, எங்கதான் போயிருக்காரு போயி பாப்பம்னு நெனச்சி பின்னாலயே போனன். ரொம்ப தூரம் தள்ளி ஒரு புங்கமரத்துங் கீழ நம்ம வண்டி நின்னிட்டிருந்திச்சி. பக்கத்துல ஒரு பெரிய பங்களா. போய் விசாரிச்சிதான் பாப்பமேனு மெதுவா போயி நம்ம டிரைவர்கிட்ட பேச்சு குடுத்தன்.”
அவன் எல்லா விஷயத்தயும் கக்கிட்டானா?”
ஒரு வாரமா இந்த கத ஓடுதுன்னு சொல்லி ரொம்ப சங்கடப்பட்டாரு. இதெல்லாம் எங்க போயி நிக்கும்னே தெரியலையேனு அழுவறாரு.”
யாரு ஊடு அது?”
அது ஒரு சினிமாக்காரி ஊடு. ஒரு மணி நேரம் அந்த டிரைவர் என்கிட்ட பொலம்பித் தள்ளிட்டாரு
அதுவரைக்குமா மொதலாளி திரும்பி வரலை?”
ம்ஹூம். அதுக்கு மேல நாம அங்க நின்னா நல்லா இருக்காதுனு நான் திரும்பி வந்துட்டன்.”
பணம் இருக்கறவனுக்கும் அதிகாரத்த வச்சிருக்கறவனுக்கும் திடீர்னு நடுவயசில இப்பிடி ஒரு கிறுக்கு வரும். பல எடங்கள்ள நான் அத பாத்திருக்கேன். பொம்பளைகள வளச்சி புடிக்கறத ஒரு பெரிய சாதனைனு ஒவ்வொரு ஆம்பளயும் நெனச்சிக்க ஆரம்பிச்சிடுவான். அந்த கெட்ட எண்ணம் இருக்குதே, அது புலிவால புடிச்சமாதிரி. ஒருதரம் புடிச்சிட்டா உடவே முடியாது. அத புடிச்சிகினே காலம் பூரா ஓட வேண்டிதுதான். கிளிமாதிரி பொண்டாட்டியும் கொழந்தைங்களும் இருக்கும்போது இதெல்லாம் நம்ம மொதலாளிக்கு தேவையா?”
எல்லோரையும் வாயைப் பிளக்கவைத்துவிட்டோம் என்று ஆறுமுகம் நினைத்திருந்த சமயத்தில் மேஸ்திரி இங்க பாரு ஆறுமுகம், ஒரு விஷயம் முழுசா தெரிஞ்சாதான் பேசணும். அரகொறயா தெரிஞ்சிகிட்டு வந்து பேசக்கூடாது. புரிதா?” என்று அழுத்தமாகச் சொன்னார்.
நான் கண்ணால பார்த்தத்தான் சொன்னன் மேஸ்திரி
கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரித்து அறிவதே மெய்னு சொன்னத கேட்டதில்லயா நீ?”
மேஸ்திரி அதட்டியதும் எல்லோரும் ஒருகணம் அமைதியாக அவரையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
அந்த அம்மா காளாபட்டுல ஆறாயிரம் சதுர அடியில ஒரு பழய ஊட்ட வாங்கியிருக்குது. அத இடிச்சி ஒரு பங்களா கட்டற ப்ளான் அதும் மனசில ஓடிட்டிருக்குது. அத இடிக்கற கான்ட்ராக்ட்ட நம்ம மொதலாளி வாங்கறாரு. அதும் விஷயமாத்தான் ஒரு வாரமா பேச்சுவார்த்த ஓடுது, புரிஞ்சிக்கோ. எல்லாம் நல்லபடியா முடிஞ்சா அந்த ஊட்டுலதான் நம்ம அடுத்த வேலை.”
சாப்பிட்ட பிறகு கையைக் கழுவிக்கொண்டு எல்லோரும் எழுந்துபோய் முருங்கை மரத்தடியில் நின்றுகொண்டு பீடியைப் பற்றவைத்து புகைக்கத் தொடங்கினார்கள். எல்லாத் தட்டுகளையும் எடுத்துச் சென்று எஞ்சியிருந்த சோற்றை வழித்து மதிலோரமாக வைத்துவிட்டு கழுவி முடித்தான். அவன் திரும்புவதற்காகவே காத்திருந்தமாதிரி காக்கைகள் கூட்டமாக இறங்கிவந்தன. அவை கூடி பருக்கைகளைக் கொத்தித் தின்பதைத் திரும்பிப் பார்த்தான் சுப்பையா. ஒரு தட்டில் கொஞ்சம் சோற்றை அள்ளிப் போட்டு குழம்பூற்றிப் பிசைந்துகொண்டு வந்து  உருண்டையாக உருட்டி காக்கைகளுக்கு நடுவில் வைத்தான்.
சோற்றுப்பானையில் எஞ்சியிருந்த சோற்றை தட்டில் நிரப்பிக்கொண்டு காக்கைகளை வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்து சாப்பிட்டான். வயிறு நிரம்பிய காக்கைகள் ஒவ்வொன்றாக பறந்து சென்றதும் முருங்கைமரத்தின் திசையிலிருந்து குருவிகள் வந்து கொத்தித் தின்றன. அதற்குப் பிறகு அணில்கள் வந்து உண்டன.
வாங்கப்பா சீக்கிரம்என்ற மேஸ்திரியின் குரலைக் கேட்டு அனைவரும் வேலையைத் தொடங்கினார்கள். இரண்டாவது மாடியிலிருந்தும் முதல் மாடியிலிருந்தும் எல்லாச் சட்டகங்களும் இறக்கப்பட்டுவிட்டன. தரைத்தளம் மட்டுமே மிச்சமிருந்தது.
ஒனக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேணும் சுப்பையா, என்கிட்ட சொல்லுஎன்று பேச்சைத் தொடங்கினார் கோபால்.
மறுபடியும் அவன்கிட்டயே ஆரம்பிச்சிட்டிங்களா? வேற வேல இல்லயாடா ஒங்களுக்கு?”
எதாச்சிம் பேசனாதான அலுப்பில்லாம வேல ஓடும்?”
அதுக்கு அவன்தான் கெடச்சானா?”
நம்ம கதைலாம் நாத்தம் புடிச்ச கதைங்க. அதுல எதப் பேசறது? அவன் கதை புத்தம்புதுசான கதை. கேக்கக்கேக்க ஒரு கிறுகிறுப்பு வரும்.”
எதயாவது பண்ணுங்க போங்க. லாரி வரதுக்குள்ள எல்லாத்தயும் எடுத்தாந்து வெளிய அடுக்கி வச்சா சரி.”
நீ சொல்லு சுப்பையா, ஒனக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேணும்?”
எனக்கு பொண்ணே வேணாம்ண்ணே. நான் கல்யாணமே செஞ்சிக்கமாட்டன்.”
இப்பிடி சொல்றவன்லாம் ஒன்னுக்கு ரெண்டா செஞ்சிகினு ஊருல லோல்பட்டு லொங்கழியறானுங்க. நான் அப்பிடி பல பேர பாத்திருக்கேன்.”
உண்மையாவே எனக்கு கல்யாணமே வேணாம்ண்ணே. பொண்ணுங்க எல்லாருமே ரொம்ப மோசம்.”
அப்படி ஒரேடியா சொல்லிட்டா எப்பிடி சுப்பையா? நம்ம மேஸ்திரி இருக்காரே, அவருக்கு நாலு பொண்ணுங்க, ரெண்டு பசங்க. எனக்கு மூனு பொண்ணுங்க. மூனு பசங்க. தோ, ராஜா இருக்கானே, அவனுக்கு நாலும் பசங்க. நம்ம மொதலாளிக்கு கூட மூனு பசங்க. இப்பிடி எல்லாருமே குடும்பமும் கூட்டமுமா வாழறப்போ, நீ மட்டும் தனியா இருக்கணும்னு ஏன் நெனைக்கற? நல்லதோ கெட்டதோ ஒரு ஆம்பளைக்கு ஒரு குடும்பம்னு ஒன்னு இருக்கறதுதான் அழகு.”
நீ எதுக்குடா அவன நொய்நொய்னு அரிக்கற? அவன் ஒன்கிட்ட சொல்லமாட்டான். போ. என்கிட்டதான் சொல்லுவான்என்றான் ராஜா. தொடர்ந்து நீ சொல்லு சுப்பையா? நான் ஒனக்கு அண்ணன்மாதிரிதான? சொல்லு, எப்படிப்பட்ட பொண்ணு வேணும்?” என்று கேட்டான்.
சுப்பையா ஒருகணம் அவனை அமைதியாகப் பார்த்தான். பிறகு மெதுவான குரலில் நம்ம சின்னத்தம்பி படத்துல மனோரமா அம்மா வருவாங்க இல்ல, அப்பிடி இருக்கணும்என்றான்.
உடனே எல்லோரும் வெடிப்பதுபோலச் சிரித்தார்கள். “என்ன சிரிப்பு, என்ன சிரிப்புடா, சும்மா இருங்கஎன்று எல்லோரையும் அடக்கினான் ராஜா. பிறகு சுப்பையாவின் பக்கம் திரும்பி ஏன் மனோரமா அம்மா மாதிரி இருக்கணும்னு நெனைக்கற?” என்று கேட்டான்.
அவுங்கதான் புள்ள எப்படி இருந்தாலும் ஒக்கார வச்சி சோறு போடுவாங்க
அப்ப குஷ்பு?”
அவுங்களும் மனோரமா மாதிரி நல்லவங்கதான்.”
நல்லா யோசிச்சி சொல்லுடா சுப்பையா, ஒனக்கு மனோரமா மாதிரி வேணுமா, குஷ்புமாதிரி வேணுமா?”
அவன் சிறிது நேரம் ஆழமாக யோசித்தான். பிறகு ரெண்டுபேரு மாதிரியும் வேணும்  என்றான்.
மறுபடியும் சிரிப்பலை எழுந்தது. கண்ணில் நீர் தளும்ப எல்லோரும் சிரித்தார்கள்.
அப்போது லாரி வந்து நிற்கும் ஓசை கேட்டது. மேஸ்திரி வெளியே சென்று பார்த்துவிட்டு வந்து நம்ம லாரிதான், ஒரு நாலு பேரு வாங்கப்பா  என்றார். இருவர் வெளியே நின்று சட்டகங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்தார்கள் இரண்டு பேர் லாரிக்குள் நின்று வாங்கி அடுக்கினார்கள். ஒரு லோடு நிரம்பியதும் லாரியின் பக்கவாட்டிலிருந்த கொக்கியில் கயிற்றை மாட்டி இழுத்துக் கட்டினார்கள். அந்த நான்கு பேரும் லாரியோடு சென்று பழைய பலகைகளை வாங்கும் இன்னொரு கான்ட்ராக்டரின் குடோனில் இறக்கிவிட்டு வந்தார்கள். லாரி திரும்பியதும் அந்த நான்கு பேரும் இறங்கிவிட, வேறொரு நான்கு பேர்கள் இரண்டாவது லோடை எடுத்துக்கொண்டு சென்றார்கள். அச்சமயத்தில் தரைத்தளத்துச் சட்டகங்கள் அனைத்தும் ஒரு துண்டுகூட பாக்கியில்லாமல் வெளியே வந்துவிட்டன. கடைசி லோடை ஏற்றிக்கொண்டு எஞ்சிய நான்கு பேர் சென்றார்கள்.
அந்தி நெருங்கியது. அனைவரும் வீட்டுக்குப் பின்பக்கம் குழாயில் குளிக்கச் சென்றார்கள்.
சுப்பையா ஒரு சின்ன வாளியில் தண்ணீரை நிரப்பி எடுத்துச் சென்று வாசலில் வைத்த ரோஜாத் தொட்டிகளில் தண்ணீர் ஊற்றிவிட்டு சிறிது நேரம் அதையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். எதிர்பாராத கணத்தில் பக்கத்தில் ஏதோ அசைவை உணர்ந்து திரும்பினான். அவன் வயதையொத்த ஒரு பெண் அங்கே நின்றிருந்தாள். அவள் அணிந்திருந்த தாவணி நிறம் மங்கியிருந்தது.  மெலிந்து கருத்த உடல். காதுத்துளையில் குச்சி செருகப்பட்டிருந்தது. கழுத்தில் ஒரு கருப்புக்கயிறு தொங்கியது. அவன் திடுக்கிட்டு என்ன என்பதைப்போல அவளைப் பார்த்தான்.
இது உங்க வீடா?”
அதைக் கேட்டு அவனுக்கு சிரிப்பு வந்தது. அவசரமாக இல்லை என்பதுபோல தலையசைத்தான். “லேபர். லேபர். இந்த வீட்ட இடிக்கற லேபர்
ஏன் இடிக்கறாங்க?”
இத வாங்கனவங்க புதுசா வேற மாடல்ல கட்ட போறாங்க.”
ரோஜா செடிங்க ரொம்ப அழகா இருக்குது. சிவப்பு ரோஜா அப்பிடியே அல்வாத்துண்டு மாதிரி இருக்குது. எனக்கு செடின்னா ரொம்ப ரொம்ப புடிக்கும்.”
வேணும்ன்னா எடுத்தும்போ.”
அவன் சொன்ன சொல் அவள் காதில் விழவே இல்லை. அவள் வேறொரு உலகத்திலிருந்து பேசுவதுபோல பேசினாள். “எங்க ஊட்டுல நான் நாலு சாமந்தி செடி வச்சிருந்தேன். மஞ்சமஞ்சளா அழகா பூக்கும்.”
அப்படியா?”
ஒவ்வொன்னும் குடைமாதிரி, ஒரு பந்த ரெண்டா வெட்டி வச்ச மாதிரி, கொட்டாங்குச்சிக்கு சிங்காரம் பண்ணமாதிரி அழகழகா இருக்கும்.”
நீ வச்சிக்குவியா?”
ஆமா. நானும் வச்சிக்குவன். பள்ளிக்கூடத்துல என் கூட படிக்கற பொண்ணுங்களுக்குலாம் எடுத்தும் போயி குடுப்பன். எங்க டீச்சர் என்ன பேர் சொல்லியே கூப்புடமாட்டாங்க. ஏ சாமந்தினு பூ பேர சொல்லித்தான் கூப்புடுவாங்க.”
என்ன படிக்கற நீ?”
இப்ப படிக்கல. அப்ப படிச்சேன். எட்டாங்கிளாஸ். திருக்கனூருல
அப்பறம் ஏன் படிக்கலை?”
ஒம்பதாம் க்ளாஸ்க்கு சின்ன பள்ளிக்கூடத்திலேர்ந்து பெரிய பள்ளிக்கூடம்தான் போவணும். எங்க அப்பா போவவேணாம்னு சொல்லிட்டாரு.”
நானும் எட்டாங்கிளாஸ்தான் படிச்சேன்.”
அதுக்கு மேல நீயும் படிக்கலயா?”
இல்ல. எங்க ஊடு எரிஞ்சி போச்சி. அம்மா அப்பா செத்துட்டாங்க. எங்க சித்தி படிக்கவேணாம்ன்னு சொல்லிடுச்சி. திருக்கனூருனு சொன்ன, இங்க எதுக்கு வந்தீங்க?”
அதோ, அந்த இருவாட்சி மரத்தடியில டேபிள் போட்டு இஸ்திரி போட்டுகினு இருக்காரே, அவருதான் எங்க அப்பா.”
ஊடு?”
எல்லாமே மரத்தடியிலதான். இன்னும் ரெண்டு தம்பி ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க..”
எல்லாருமா மரத்தடியில தங்கிக்கறிங்க?”
ஆமா. மழ பேஞ்சா அதோ அந்த பேங்க் வாசலுக்கு ஓடிடுவம். அந்த செக்யூரிட்டி தாத்தா ரொம்ப நல்லவரு. வண்டி நிக்கற எடத்துல எல்லாரயும் படுத்துக்க சொல்வாரு.”
சரி, எத்தன தொட்டி வேணும்னாலும் எடுத்துக்கோ. உன் சாமந்திச்செடி மாதிரி நெனச்சி வளத்துக்கோ.”
அவள் ஒருகணம் யோசித்தாள். பிறகு நாக்கை சப்புக்கொட்டியபடி வேணாம்என்று தலையசைத்தாள்.
மரத்தடியிலயே வச்சி வளக்கலாம்.”
ம்ஹூம். வேணாம். எங்க அம்மா திட்டுவாங்க.”
வேற யாருக்காவது எடுத்தும் போயி குடு
இந்த ஊருல எனக்கு யாருமே இல்ல.”
அவள் பெருமூச்சுடன் செடிகளைத் திரும்பிப் பார்த்தாள். சிவப்பாக, வெள்ளையாக, மஞ்சளாக பூத்திருந்த ஒவ்வொரு பூவின் மீதும் அவள் பார்வை பதிந்து திரும்பியது. ஒரு வெள்ளை ரோஜா இதழ்போல அவள் கண்கள் உருண்டு அழகாக இருந்தன. அவள் தலைமுடியை அள்ளிச் சுருட்டி கொண்டையாகக் கட்டியிருந்தாள். அவள் கழுத்து ஒரு குருத்துபோல அழகாக இருந்தது.
அவள் மெளனமாக ஒருகணம் அவனைப் பார்த்துவிட்டு பதில் சொல்லாமல் நடக்கத் தொடங்கினாள். ஆறேழு அடி சென்ற பிறகு எதையோ நினைத்து மீண்டும் திரும்பி வந்து நின்றாள். மிகுந்த தயக்கத்துடன் அவனிடம் நான் ஒரே ஒரு பூவ மட்டும் பறிச்சிக்கிடவா?” என்று கேட்டாள்.
ஒன்னு என்ன, ஒம்போது கூட பறிச்சிக்கோ.”
இல்ல இல்ல. ஒன்னு போதும்.” என்றபடி அவள் கவனமுடன் வெள்ளை ரோஜா பூத்திருக்கும் செடிக்குப் பக்கத்தில் சென்றாள். அந்தப் பூ மலர்ந்திருக்கும் கிளையைப் பற்றித் தாழ்த்த கைநீட்டித் தொட்டு, ஸ் என்றபடி உடனே விரலை இழுத்துக்கொண்டாள்.
என்னாச்சி?” என்று அவன் பதற்றத்துடன் கேட்டான். ”முள்ளு பட்டுடுடிச்சி  என்றபடி விரலை உதறியபடி வாய்க்குள் எச்சில் படும்படி வைத்துக்கொண்டாள்.
ரத்தம் வருதா?”
ம்
கழுத்தில் தசை அசைந்தது. சில கணங்களுக்குப் பிறகு விரலை எடுத்து நீட்டிப் பார்த்தாள். ஒரு சிவப்புப்புள்ளி தெரிந்தது. இடது தோளில் விரலை வைத்துத் தேய்த்தபடி மீண்டும் ரோஜாவுக்கு அருகில் சென்றாள். இந்த முறை கவனமுடன் கிளையைத் தாழ்த்தி பூவின் அடிக்காம்பைப் பற்றிக் கிள்ளி எடுத்துக்கொண்டாள். வரட்டுமா என்பதுபோல அவன் பக்கம் ஒருகணம் திரும்பிப் பார்த்துவிட்டு சாலையில் இறங்கி நடந்தாள்.

(16.06.2020 கனலி இணைய இதழில் வெளிவந்த சிறுகதை)