Home

Monday 27 July 2020

எம்.வி.வி.யின் சிறுகதைகள் : கோணல்களின் புன்னகை



நாங்கள் பெருநகரத்துக்கு இடம்மாறி வந்தபோது ஒரு வீட்டின் முதல் தளத்தில்தான் தொடக்கத்தில் வாடகைக்குக் குடியிருந்தோம். மாடிச்சுவரை ஒட்டி ஆறு தொட்டிகள் வைத்து அவற்றில் ரோஜாக்கன்றுகளையும் செம்பருத்திக்கன்றுகளையும் நட்டுவைத்தோம். வெகுவிரைவில் அவை உயிர்பெற்று பசுமையாக வளரத் தொடங்கின. ஒவ்வொன்றும் வெகுவிரைவில் புதிய கிளைகளோடும் இலைகளோடும் செழித்தோங்கி தோள் உயரத்துக்கு நின்றன. பெரும்பாலான கிளைகள் வீட்டுப்பரப்புக்குள் வானத்தை நோக்கி நிற்க, ஒருசில கிளைகள் மட்டும் வெட்டவெளியை நோக்கி வளைந்து ஒயிலுடன் அசைந்தபடி இருந்தன. அவை ஏன் மற்ற கிளைகள்போலல்லாது தனக்கென ஒரு திசையை வகுத்துக்கொண்டு வளைந்துசெல்லத் துடிக்கின்றன என்பது புரியவில்லை.

வெயிலை நோக்கி என்றாள் மனைவி. காற்றைத் தேடி என்றாள் அம்மா. தன் வழியைத் தானே தீர்மானித்துக்கொள்ளும் சுபாவமுள்ள கிளைபோலும் என்று புன்னகைத்தாள் தங்கை. ஒவ்வொரு தோப்பிலும் மதிலைத்தாண்டி வளைந்துசெல்லும் ஒரு மரமாவது இருப்பதை நீ பார்த்ததில்லையா என்றார் வீட்டுக்கு வந்த நண்பர். பல ஆண்டுகளுக்குப் பிறகு அங்கிருந்து இடம்மாறி அடுக்ககத்துக்கு வந்து செடிவளர்க்கத் தொடங்கியபோதும் அதே கதை தொடர்ந்தது. இத்தனைக்கும் புத்தம்புதிய தொட்டிகள். புத்தம்புதிய செடிகள். ஆனாலும் இங்கும் சிற்சில கிளைகள் வளைந்து நெளிந்து கோணலாக காற்றிலாடிப் புன்னகைத்தன.
செடிகளில் கோணல் இருப்பதைப்போலவே, மனிதர்களிலும் கோணல் கொண்டவர்கள் இருக்கிறார்கள். மனக்கோணல் கொண்டவர்கள். எண்ணங்களில் கோணலானவர்கள். நடத்தையில், பேச்சில் கோணலானவர்கள். தொடக்கத்தில் நன்றாக இருந்து, சந்தர்ப்பச்சூழல்களால் கோணலாக மாறுகிறவர்களும் இருக்கிறார்கள். இயற்கையிலேயே கோணலானவர்களும் இருக்கிறார்கள். கோபம், கருணை, இரக்கம் ஆகியவற்றைப்போல கோணலும் ஒரு குணம். அதில் குற்றமெதுவும் இல்லை. மனிதமனத்தில் கோணல் படிந்து சொல் வழியாகவோ, செயல் வழியாகவோ அது வெளிப்படும் தருணத்தில் மனிதர்களில் நிகழும் உருமாற்றம் கவனிக்கத்தக்கது. விண்மீன்களை நோக்கி நிறுத்தப்படும் ஒரு தொலைநோக்கி ஒரு குறிப்பிட்ட விண்மீனின் இடத்தைத் தேடிக் கண்டறிந்து அடையாளப்படுத்தி நிறுத்துவதுபோல எம்.வி.வெங்கட்ராமின் பெரும்பாலான கதைகள்  மானுடவாழ்வில் கோணல் வெளிப்படும் தருணங்களையும் அதனால் சிதையும் கோலங்களையும் சித்தரிக்கின்றன. நல்ல மனங்களுக்கும் கோணல் மனங்களுக்கும் இடையிலான மோதல்களில் எம்.வி.வி.யின் கதைக்களம் எழுந்து நிற்கிறது.
செடிகளிலும் மரங்களிலும் காணப்படும் கோணல்களைப்போல மனக்கோணல் வெளிப்படையாகத் தெரிவதில்லை. பீரங்கியிலிருந்து வெளிப்படும் வெடிகுண்டைப்போல எதிர்பாராத ஒரு தருணத்தில் வெளிப்படுவது அது. எந்த அற்பத்தனமும் வெளிப்படையாகப் புலப்பட்டுவிடாதபடி தன்னைத்தானே மறைத்துக்கொண்டு வாழும் வித்தையும் அதற்குத் தெரியும். பாம்புபோல ஒருகணம் விடைத்து படமெடுத்து எழுந்து கொத்தி நஞ்சைச் செலுத்திவிட்டு பாதுகாப்பான இடத்தை நாடி வேகவேகமாக ஊர்ந்து செல்லும் வித்தையும் தெரியும். ஆனால் எம்.வி.வி.யின் கலைவிழிகள் மானுடக்கூட்டத்தில் கலந்து மறைந்திருக்கும் அத்தகு மனிதர்களை அடையாளம் கண்டு நமக்குச் சொல்கின்றன. எம்.வி.வி.யின் கதைகள் ஒருவகையில் மறைந்து திரியும் மனிதர்களின் வாழ்க்கை ஆவணமென்றே சொல்லலாம்.
எம்.வி.வி.யின் மிகமுக்கியமான சிறுகதை பைத்தியக்காரப்பிள்ளை. அந்தக் கதையில் ராஜம் என்னும் இளைஞன் எதிர்வீட்டில் வசிக்கும் பங்கஜத்தை மணந்துகொள்ள ஆசைப்படுகிறான். அதற்காக சிறுகச்சிறுக பணம் சேர்த்து பட்டுப்புடவையும் வளையல்களும் ரகசியமாக வாங்கிவைத்திருக்கிறான். அந்த ரகசியம் அவன் அம்மாவுக்குத் தெரிந்துவிடுகிறது. “அவ இந்த வீட்டுல கால வச்சா கொல விழுந்துரும்என்று எச்சரிக்கை விடுக்கிறாள் அம்மா. அவளோடு வாதாடி வென்று தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வது இயலாத செயல் எனக் கருதும் ராஜம் ரயில்முன்னால் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்கிறான். சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்வதற்கு முன்பாக இறுதிச்சடங்குக்காக அவன் உடல் வீட்டுவாசலில் வைக்கப்பட்டிருக்கிறது. ஊரே திரண்டு சென்று பார்த்து மாலை போட்டுத் திரும்புகிறார்கள். பங்கஜத்தின் சகோதரர்களும் கூட  பார்த்துத் திரும்பிவிட்டார்கள். “நீ போய் பாக்கலையா?” என்று கேட்கும் சகோதரனுக்குபைத்தியக்கார பிள்ள. கல்யாணத்துக்கப்பறம் இந்த வேல செய்யாம இருந்தானேஎன்று பதில் சொல்லிவிட்டு போர்வையை எடுத்துப் போர்த்திக்கொள்கிறாள். அம்மாவை எதிர்த்து வாதாடி வெல்லத் தெரியாத கோழையை மணந்துகொள்ள இருந்தோமே என்ற எண்ணமும் இந்தத் தற்கொலை திருமணத்துக்குப் பிறகு நிகழ்ந்திருந்தால் தன் விதவைக்கோலத்தைத் தவிர்க்கமுடிந்திருக்காதே என்ற எண்ணமும் கலவையாக எழ ஆறுதல் கொள்ளும் மனப்போக்கையே இத்தனை காலமும் வாசகர்களும் விமர்சகர்களும் சுட்டிகாட்டினர். அதைவிடவும் கூடுதலான சில  விஷயங்கள் இச்சிறுகதையில் உள்ளன. அவை மனக்கோணல் பற்றியவை.
முதல் கோணல் ராஜத்தின் அம்மாவுடையது. ஐந்து ஆண்குழந்தை, ஐந்து பெண்குழந்தை என பத்து பிள்ளை பெற்றவள் அவள். ஆனால் வாழ்க்கை என்றால் என்னவென்றே அறியாதவள். கணவனுடன்  ஓயாத சண்டை.  ஓயாத கொஞ்சல். ஓயாத குழந்தைபிறப்பு என்பதை வாழ்க்கையின் இலக்கணமாகப் புரிந்து கொண்டவள்.  அடுத்த கோணல் ராஜத்தின் அப்பாவுடையது. ஏதாவது ஒரு குழந்தையின் யோக ஜாதகத்தால் தன் வாழ்க்கையில் யோகம் அடித்துவிடுமென்றும் பணக்காரனாக உயர்ந்துவிடலாம் என்பதும் அவர் மனம் போடும் கணக்கு. தந்தையின் மரணத்துக்குப் பிறகு தன் உழைப்பால் மூன்று பெண்களைக் கரைசேர்த்து தன் தியாகத்தை உணர்த்திய மகனைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யாதவளாகவே வாழ்கிறாள் அவனுடைய முரட்டுத்தாய். ஒரு கோணத்தில்அவ இந்த வீட்டுல கால வச்சா கொல விழுந்துரும்என்ற சொற்களால் அவள் வழங்கும் நெருக்கடி. இன்னொரு கோணத்தில்ஒன் தங்கச்சி தறிவேலையில கூடமாட ஒத்தாசையா இருக்கணும்னா நூறு ரூபா முன்பணம் வேணும்என்று யாரோ ஓர் அயல்வீட்டுக்காரிபோல விதிக்கும் நிபந்தனையால் உருவாகும் நெருக்கடி. இந்த நெருக்கடிகளின் அழுத்தமே தற்கொலையை நோக்கி ராஜத்தைச் செலுத்துகிறது. அவன் ஆற்றிய தியாகங்களை மதிப்பில்லாமல் சரிந்துவிட்ட சூழலில் அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.
கதையின் தொடக்கத்திலிருந்தே அம்மா பாத்திரத்தின் கோணல்குணத்தை கொஞ்சம்கொஞ்சமாக மிகவும் நம்பகத்தன்மையோடு காட்சிப்படுத்துகிறார் எம்.வி.வி. தம்ளரில் சாம்பார் கொடுக்காத ஓட்டலிலிருந்து சாம்பார் வாங்கிவந்தே தீரவேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறாள். பணமில்லை என்றபோதுபொண்டாட்டியா வரப்போறவளுக்கு மட்டும் வாங்கிவைக்க பணமிருக்குதா?” என்று சொற்களால் கொக்கிபோட்டு இழுக்கிறாள். சொல்லாத வசைச்சொற்களை சொன்னதாக அதிகாலை வேளையில் ஊரே கேட்க பிலாக்கணம் வைக்கிறாள். இவ்வளவு கோணல்கள் அவளை எப்படி வந்தடைந்தன. ஆண் என்பவன் முரடன். அடிப்பவன். குடிப்பவன். குடித்துவிட்டு வந்து கொஞ்சுபவன். இப்படி நான்கு பக்கமுள்ள சதுரமாக மட்டுமே அவள் ஓர் ஆணைப் புரிந்துவைத்திருக்கிறாள். அதுதான் அவளுக்குத் தெரிந்த உலகம். தங்கைகளுக்காக பணம் சேர்த்து திருமணம் செய்து அனுப்புவது, தியாகம் செய்வது, அன்பாக இருப்பது, மதுப்பழக்கம் இன்றி குடும்பத்துக்காக உழைப்பது எல்லாமே அவளுடைய புரிதல் எல்லைகளுக்கு அப்பால் உள்ளவை. அதனாலேயே அவளால் தன் மகனைப் புரிந்துகொள்ள இயலவில்லை. தன் அனுபவம் சார்ந்த கோணல்களுக்கு நடுவில் சிக்கி, தன் எண்ணங்களையெல்லாம் சிக்கலாக்கிக்கொண்டவள் அவள். அவளால் மீண்டு எழுந்து நிற்கமுடியாத அளவுக்கு கைகளையும் கால்களையும் அச்சிக்கல் பிணைத்திருக்கிறது.
எல்லாவற்றையும்விட கொடுமையானது பங்கஜத்தின் மனக்கோணல். ஒரு சொட்டு கண்ணீரைக்கூட அவனுக்காக அளிக்க விரும்பாத அவள் மனத்தின் போக்கு முதலில் விசித்திரமானதாகத் தோன்றினாலும்பைத்தியக்கார பிள்ள. கல்யாணத்துக்கப்பறம் இந்த வேல செய்யாம இருந்தானேஎன்ற சொற்களைச் சொல்லும்போது திருமண உறவை ஒரு பாதுகாப்புக்கவசமாக மட்டுமே பார்க்கும் அவள் பார்வையைப் புரிந்துகொள்ள முடிகிறது. 
ராஜம் நேர்மையானவன். அன்பானவன். ஆனால் பெற்றவளுக்கு முன்னால் தன்னை நிரூபிக்கத் தெரியாதவன். அதை ஒரு தோல்வியாக நினைத்து உயிரை மாய்த்துக்கொள்கிறான். ஆனால் அது அவனுடைய தோல்வியல்ல. வளைகோட்டுக்கும் நேர்க்கோட்டுக்குமான மோதலில் நேர்க்கோடு சாய்க்கப்பட்டுவிட்ட துரதிருஷ்டம்.
வெயில் இன்னொரு முக்கியச் சிறுகதை. கோடை வெப்பத்தால் கொதிப்பேறிக் கிடக்கும் ஒரு தெருவைப்பற்றிய சித்தரிப்போடு இக்கதையைத் தொடங்குகிறார் எம்.வி.வி. வீட்டிலிருந்து இறங்கி சூடேறிய அந்தத் தெருவில் இறங்கி நடந்து செல்கிறார் சம்பந்தம் என்னும் பெரியவர். அவர் மனமும் வெயிலைப்போலவே கொதிப்பேறிக் கிடக்கிறது. வழக்கம்போல அவருடைய மனக்கொதிப்பைப்பற்றிய கதையென அது தோற்றமளித்தாலும் ஆழ்நிலையில் வீட்டில் வசிக்கும் அவருடைய மகனுடைய மனக்கோணலையும் மருமகளின் மனக்கோணலையும் சித்தரிக்கிறது. சம்பந்தத்தின் அப்பா தன் சொத்தை அவர் கண்ணாலேயே காணாத கொள்ளுப்பேரனுக்குச் சேரவேண்டுமென உயிலாக எழுதிவைத்துவிட்டு மறைந்துவிடுகிறார். இதைவிட லாபகரமான சொத்து கிடைத்தால் இதை விற்று அதை வாங்கிக்கொள்ளலாம் என ஒரு சின்ன விதியையும் அந்த உயிலில் சேர்த்துவிடுகிறார். மனைவி உடல்நலம் குன்றி படுத்த படுக்கையாக விழுந்துவிட்டபோது பணத்தேவைக்காக, அந்த விதிவிலக்கைப் பயன்படுத்தி சிதறிக்கிடக்கிற மூன்று வேலி நிலத்தை விற்று மருத்துவம் பார்க்கிறார் சம்பந்தம். நகரத்துக்குள் ஒரு வீட்டையும் வாங்கிக் குடியேறுகிறார். செலவு செய்ததுபோக ஆனால் எஞ்சிய பணம் மிகக்குறைவாக இருந்தது என்பதால் விதிவிலக்கில் சுட்டிக் காட்டியபடி இன்னொரு பெரிய சொத்தை அவரால் வாங்க முடியவில்லை. கால ஓட்டத்தில் மனைவி மறைந்துவிடுகிறாள். மகன் வளர்ந்து படித்து கல்லூரியில் ஆசிரியராக வேலை செய்கிறான். அவனுக்குத் திருமணம் நடத்தி அழகு பார்க்கிறார். பேரப்பிள்ளைகள் பிறந்து அவரோடு தினமும் விளையாடுகிறார்கள்.
தற்செயலாக உயில் தொடர்பான உண்மையைத் தெரிந்துகொள்ளும் மருமகள் மனத்தில் முதல் கோணல் உருவாகிறது. அவள் சொல்லிச்சொல்லி மகன் மனத்திலும் கோணல் எழுகிறது. இருவரும் சேர்ந்து பல ஆண்டுகளுக்கு முன்பாக நிலத்தை வாங்கியவர் மீது வழக்குத் தொடுக்கிறார்கள். கொள்ளுப்பேரனுக்கு என எழுதிவைத்த சொத்தை விற்பதற்கு சம்பந்தத்துக்கு உரிமையே இல்லையென அவர்கள் வாதாடுகிறார்கள். சம்பந்தம் இருதலைக்கொள்ளி எறும்பாகிவிடுகிறார். அவரால் மகனையோ, மருமகளையோ அமைதிப்படுத்த முடியவில்லை. அவர் முயற்சிகள் அனைத்தும் வீணாகின்றன. மோசக்காரர், ஏமாற்றுக்காரர், வஞ்சகர் என அவர்கள் சுமத்தும் ஒவ்வொரு பட்டத்தையும் வேறு வழியின்றி ஏற்றுக்கொள்கிறார். வழக்கு மன்றத்துக்குச் சென்று சாட்சி சொல்லவேண்டிய நாளன்று, அவரைப் புறப்படவிடாமல் செய்ய இருவரும் திட்டமிடுகின்றனர். ஆனாலும் அனைத்தையும் மீறி அவர் கொதிப்பேறிய வெயிலில் வீட்டைவிட்டுக் கிளம்பிவிடுகிறார். மனசாட்சியின் உறுத்தலை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கைவிட்டுப் போன சொத்துக்காக பொய்வழக்கு போட்டவர்கள் கொடுத்த நெருக்கடியை உதறிச் செல்கிறார் அவர். மனக்கோணலுக்கு இடமளித்தால் அது எப்படியெல்லாம் ஆட்டம்போடும் என்பதற்கு அந்த மகன் பாத்திரமும் மருமகள் பாத்திரமும் கொடுக்கும் நெருக்கடிகளே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
இனி புதிதாய் எம்.வி.வி.யின் முத்திரைக்கதைகளில் ஒன்று. சரக்கு பிடிப்பதற்காக பட்டணத்துக்குச் செல்கிற ஒருவனின் மனம் கொஞ்சம்கொஞ்சமாக வளைந்து கோணலடைவதையும் முழு கோணலின் விளைவாக அவன் எடுக்கும் முடிவையும் படம்பிடிக்கிறது இச்சிறுகதை. உச்சி வெயில் பொழுதில் பட்டணத்தில் ரயிலைவிட்டு இறங்கியவன் வந்த வேலைக்குச் செல்லாமல் இளைப்பாறிச் செல்ல ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்குகிறான். அங்கேயே முதல் கோணல் தொடங்கிவிடுகிறது. நல்ல சாப்பாட்டுக்குப் பிறகு வாழ்க்கையில் ஒருமுறை கூட பார்க்காத பஞ்சு மெத்தையில் படுத்ததும் உறக்கத்தில் ஆழ்ந்துவிடுகிறான். அது அடுத்த கோணல். மாலையில் எழுந்தாலும் வேலையை மறுநாளைக்கு தள்ளிவைத்துவிட்டு ஓய்வெடுத்து பொழுதுபோக்குகிறான். இரவு உணவை அறைகே வரவழைத்துச் சாப்பிட்டபிறகு பொழுதுபோக்குக்காக ஏதோ ஓர் அறைக்கு ஒருபோதும் ஆடிப் பழகாத சீட்டாட்டத்துக்குச் சென்று பந்தயம் வைத்து ஆடுகிறான். அது அடுத்த கோணல். சரக்கு வாங்க முதலாளி கொடுத்தனுப்பிய ஆயிரம் ரூபாயில் பெருந்தொகையை ஆடத் தெரியாமல் ஆடி இழந்து தோல்வியோடு எழுந்துவருகிறான். வழியில் இருளில் அழைக்கிற பெண்குரலில் மயங்கி அவளோடு தங்கி இன்னும் கொஞ்சம் பணத்தை இழக்கிறான். அடுத்தநாள் காலையில் எழுந்து எஞ்சிய சொற்ப பணத்தோடு விடுதியை காலிசெய்துவிட்டு வெளியே வருபவன் கொள்முதல் செல்லும் பாதையில் நடக்காமல் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் நடந்துபோகிறான். இனி ஒரு போதும் ஊருக்குத் திரும்புவதில்லை, புதிதுபுதிதாய் ஊர்களைப் பார்க்கலாம் என்ற முடிவோடு பம்பாய்க்கு ரயிலேறுகிறான். தொடக்கத்தில் முதலாளி மீது அவன் கொண்டிருந்த ஈடுபாடும் அச்சமும் அறவே நீங்கிவிட, தன்னைத்தானே ஒரு முதலாளியாக நினைத்துக்கொள்ளும் வேகத்துக்கு ஆட்பட்டுவிடுகிறான். கோணல் ஏணியில் ஒவ்வொரு படியாக ஏற ஏற, அவனிடமிருந்த நற்குணங்கள் ஒவ்வொன்றும் உதிரத் தொடங்குகின்றன. அதுதான் கோணலின் உச்சம். இனி இழக்க ஒன்றுமில்லை என்ற நிலையில்தான் அவன் புதிய நிலம்நாடிச் செல்லத் தொடங்குகிறான். கோணல் ஒரு களைபோல வளரத் தொடங்கி, பிறகு அடர்த்தியாக அவன் மனத்தையே ஆக்கிரமித்துக்கொள்கிறது.
வியாபாரத்துக்காக வெளியூர் செல்பவனைப்பற்றிய இன்னொரு கதை யாருக்குப் பைத்தியம்?. ஜரிகை நிறைந்த பெட்டியோடு சென்று பட்டு, நூல் உற்பத்தியாளர்களைச் சந்தித்து ஆர்டர் வாங்கும் தொழில். அவரும் உச்சி வெயில் பொழுதில்தான் அந்த ஊரில் பெட்டியோடு இறங்குகிறார். பசி நேரம். சாப்பிடுவதற்காக ஒரு விடுதியில் நுழைந்தபோது செளராஷ்டிர மொழியைப் பேசிக்கொண்டு ஒரு பெரியவர் அறிமுகமாகி சாப்பாடு வேண்டுமென கேட்கிறார். சாப்பிட்டு முடித்ததும் வியாபாரியின் பெட்டியைத் தூக்கிக்கொண்டு கூடவே வருகிறார் பெரியவர். விடுதிச்செலவை மிச்சப்படுத்த கோவில் திண்ணையில் அமர்ந்ததும் முன்னொரு காலத்தில் தானும் ஒரு வியாபாரியாக இருந்தவன் என்று தன் சொந்தக் கதையைச் சொல்லத் தொடங்குகிறார். வட்டிக்குக் கொடுத்த பணத்தை விசாரிக்கப் போன இடத்தில் ஒரு தாசிப்பெண்ணோடு பழகி நட்புகொண்டது,  சேர்ந்து வாழ்ந்தது, அவள் உயிர்துறக்கும் வேளையில் தன் எல்லாச் சொத்துகளையும் அவருக்கு எழுதிக் கொடுத்துவிட்டு மறைந்தது, அவற்றையெல்லாம் விற்றுக் கொண்டுவந்த பணத்தை மகன் வியாபாரத்தில் அழித்தது, ஒருவேளை சோற்றுக்கு கையேந்தும் நிலையில் வாழ்வது என அனைத்தையும் சொல்கிறார்.  வெயில் இன்னும் குறையாமல் இருந்ததால் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகவும் அங்கு படுத்து ஓய்வெடுத்த பிறகு கடைத்தெருவுக்குப் புறப்படலாம் என்றும் கேட்டுக்கொள்கிறார். அதை நம்பி அவரும் அந்தப் பெரியவரின் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு பெரியவரின் மகன் பெரியவரை வசைபாடுகிறான். பெரியவர் வீட்டுக்குள் ஓடி ஒளிந்துகொள்கிறார். அவர் மனநிலை பிசகியவர் என்று குறிப்பிட்டுவிட்டு அவன் தன் கதையைச் சொல்லத் தொடங்குகிறான். வட்டிப்பணம் வாங்கச் சென்ற அப்பாவைத் தேடிச் சென்றபோது தாசிப்பெண்ணோடு பழகியதையும் ஆறு மாத காலத்துக்குப் பிறகு ஊருக்குத் திரும்பியதாகவும் சொல்கிறான். “அப்பாவை தறியில் உட்காரவைத்துவிட்டு வருகிறேன்என்று அவன் எழுந்துபோன சமயத்தில் பதற்றத்தோடும் குழப்பத்தோடும் அவர் பெட்டியோடு அந்த வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார்.  பக்கத்து வீட்டுக்காரர் முழுக்கதையையும் கேட்டுவிட்டுஅந்தக் குடும்பமே ஒரு மாதிரிஎன்று சொல்லிவிட்டுச் செல்கிறார்.
இச்சிறுகதையில் ஒரு தாசிப்பெண்ணைப்பற்றிய அப்பா, மகன் இருவரின் பார்வைக்கோணங்களையும் மனக்கோணல்களையும் தொகுத்துக்கொள்ள வழிவகுத்துத் தருகிறார் எம்.வி.வி. ஒருவகையில் பெண்ணைப்பற்றிய ஆண்மனம் கொண்டிருக்கும் கோணல்கள் என்றும் இதை எடுத்துக்கொள்ளலாம். வழக்கமாக இன்பம் கொடுப்பவள், பணம் பறிப்பவள், ஏமாற்றுபவள், துரோகம் செய்பவள், பழி வாங்குபவள் என்னும் சொற்களே தாசிப்பெண்கள் பற்றிய சித்திரங்கள் முன்வைக்கப்படுவதுண்டு.  இதற்கு நேர்மாறாக இச்சிறுகதையில் இன்பம் கொடுப்பவள், தன் சொத்துகளையே வாரி வழங்குபவள் என்னும் சித்திரங்கள் முன்வைக்கப்படுகின்றன. தாசிப்பெண்ணின் சொத்தை தன் சொத்தாக அபகரித்துக்கொள்ள விழையும் மனம் பிறழ்ந்தவர்களின் ஆழ்மன விருப்பமாகவே இதை எடுத்துக்கொள்ளலாம். இது அடுத்தவர் சொத்துகளை நேரிடையாக எடுத்துக்கொள்வதற்கு மாறாக, கட்டுக்கதை வழியாக தன்னைச் சேர்ந்ததாகப் புனைந்து கூறும் புதுவகை மனக்கோணல்.
எம்.வி.வி.யின் தொடக்க காலக் கதைகளில் ஒன்று மாளிகைவாசம். அழகானவன், வசதியானவன், மாளிகையில் இருப்பவன் என புற அளவுகோல்களை மட்டும் சபையில் முன்வைத்து ஆணுமில்லாத, பெண்ணுமில்லாத தன் மகனுக்கு   திருமணம் செய்துவைக்கிறாள் ஒரு தாய். கணவனில்லாமல் தனிவாழ்க்கையில் பொத்திப்பொத்தி வளர்த்ததால் தன் மகன் இப்படி மாறிவிட்டான் என்றும், ஒரு திருமணம் அவனை மாற்றிவிடும் என்றும் எண்ணி இந்தத் திருமணத்தை அவள் திட்டமிடுகிறாள். திருமணமான சில நாட்களிலேயே இளம்பெண்ணுக்கு உண்மை தெரிந்துவிடுகிறது. பெண் உடைகளை அணிந்துகொண்டும் பெண்ணைப்போல ஒப்பனை செய்துகொண்டு நடமாட அவன் காட்டும் ஆசை அவளுக்கு அருவருப்பூட்டுகிறது. தன் மகனின் எதிர்காலத்தை நினைத்தவள் ஒரு பெண்ணின் எதிர்காலம் பற்றி ஏன் நினைக்க்வில்லை என்று மாமியாரைக் கேள்விகளால் துளைக்கிறாள் இளம்பெண். தன்னை பாழும் குழிக்குள் தள்ளிவிட்டதாகக் குற்றம் சுமத்துகிறாள். தன்னலம் கொண்ட அவள் மனக்கோணலை நினைத்தாலே அருவருப்பாக இருப்பதாக சத்தம் போடுகிறாள். சிறுமை தாளாமல் உடல்நலம் குன்றி மாமியார் உயிர்துறக்கிறாள். ஒரு கணம் திருநங்கையான கணவனை அவன் மனம் போன போக்கில் வாழச் செய்துவிட்டு, தனக்குக் கிடைத்திருக்கும் செல்வத்தில் திளைத்திருக்கலாமே என முடிவெடுக்கிறாள் இளம்பெண். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த வாழ்க்கையும் சலித்துவிடுகிறது. அவனைக் கொன்றுவிடலாம் என ஒரு கணம் முடிவெடுக்கிறாள். பிறகு பாவ உணர்வுக்கு அஞ்சி அவனையும் அந்த வீட்டையும் துறந்து வெளியேறிவிடுகிறாள். மகன் கொண்ட கோணலைச் சரிப்படுத்தக்கூடும் என நம்பும் ஓர் அன்னையின் மனக்கோணலுக்கு இரையாகும் வாழ்க்கையை எதைக்கொண்டு நேர்ப்படுத்த முடியும்?
இப்படி, எம்.வி.வி.யின் கதையுலகம் மானுட மனத்தின் கோணல்களைக் காட்டும் கண்ணாடியாக உள்ளது. எம்.வி.வி.யின் முதல் சிறுகதை சிட்டுக்குருவி. கருணையற்ற ஒருவன் வீசிய கல்லால் அடிபட்டு மடியில் விழுந்த குருவியை ஆதரவோடு வருடிக்கொடுத்து அதன் அச்சத்தைப் போக்குகிறாள் ஒருத்தி. குருவியை நாடி வந்து கேட்டவனுக்கு பணம்கொடுத்து அனுப்பி, சிறிது நேரம் அதனுடன் விளையாடி அமைதிப்படுத்தி, இயல்பான நிலைக்கு அது திரும்பியதும் அது தன் இனத்தோடு சேர்ந்துகொள்ளும் வகையில் வானத்தை நோக்கிப் பறக்கவிடுகிறாள் அவள். அப்பெண்ணின் சித்திரத்தில் எம்.வி.வி.யின் கதையுலக மையத்தைக் காணலாம். அந்தப் பெண்ணைப்போலவே எம்.வி.வியும் இந்த வாழ்க்கையில் தன்  மனம் கண்டடைந்த மனிதர்களின் நினைவுகளை ஆதரவுடன் அசைபோடுகிறார். அவர்களைப் பறக்கவிட்ட பிறகு, அவர் கண்ட மனக்கோணல்களைச் சொற்சித்திரங்களாக நம்மிடம் தீட்டியளிக்கிறார்.

(எம்.வி.வி. நூற்றாண்டு சிறப்புப்பகுதியாக வெளிவந்த ஜூலை 2020  மாத காலச்சுவடு பொருநை பக்கங்களில் இடம்பெற்ற கட்டுரை )