Home

Tuesday 7 July 2020

வண்டல் - சிறுகதை



ஆய் ஆய் என்று தலைக்கு ஒருபுறம் இழுக்கும் மாடுகளை அதட்டும் முனுசாமி மாமாவின் குரல் வீட்டு வாசல் வரைக்கும் கேட்டது. அதற்கப்புறம் நாலைந்து நிமிடங்கள் கழிந்த பிறகுதான் எருவேற்றிய வண்டி வந்தது. கருப்பு சிவப்பு கொடியையே மாமா தலைப்பாகையாக கட்டியிருந்தார். வலது கை வண்டிக்கயிற்றைப் பிடித்திருக்க இடதுகையால் ஒரு மாட்டின் முதுகைத் தட்டிக்கொடுத்தபடி இருந்தார்.
என்ன மாப்ள, யாரயோ எதிர்பார்த்து நிக்கற மாதிரி இருக்குது.”
தயிர்க்கார அத்தைக்காக நிக்கறேன் மாமா.”
யாரு, அந்த சாலையாம்பாளையத்து கொண்டக்காரம்மாதான? அது எங்க இப்ப வரப்போவுது? அங்க டாக்டரூட்டமா ஊட்டுல இப்பதான் ஒரு கதைய ஆரம்பிச்சிருக்குது. இங்க வந்து சேர இன்னும் நேரமாவும். நீ எதுக்குடா வெயில்ல நின்னு வீணா கருத்துப் போற.”

நான் பதில் பேசாமல் வேண்டாவெறுப்பாக நடந்துபோகும் இடதுபக்க மாட்டையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
சாப்ட்டியாடா?”
ம். ஒரு குண்டான் நெறய பழய சோறு. பூண்டு ஊறுகாய்இரு மணிக்கட்டுகளையும் ஒட்டவைத்து கைகளை மட்டும் விரித்துக் காட்டி சிரித்தேன்.
வெளிய சொல்லாதடா மாப்ள. யார் கண்ணாவது பட்டுடப் போவுது.” மாமாவும் சிரித்தார். கருத்த முகத்தில் அவருடைய பல்வரிசை பளிச்சென்றிருந்தது. “அது சரி, எப்படி இருக்குது ஒன் அங்காளம்மா அத்த?” என்று கேட்டபடி முகத்தை அசைத்தார்.
நல்லா இருக்காங்க. அவுங்க தோசை சாப்ட்டாங்க.”
தலையை அசைத்துக்கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டு போய்விட்டார் மாமா. வண்டிக்குப் பின்னால் இரண்டு நாய்கள் கோவில் மதில் வரை சென்றுவிட்டு ஓடி வந்தன.
நான் கதவு வரைக்கும் திரும்பிச் சென்று அங்கிருந்தபடியேஅம்மா, தயிர்க்கார அத்த இப்பதான் டாக்டரு ஊட்டுங்கிட்ட வருதாம். இங்க வர இன்னும் நேரமாவுமாம். என்ன செய்றது?” என்று செய்தியைக் கூவிச் சொன்னேன். பதில் எதுவும் வரவில்லை. பின்கட்டுப் பக்கம் மீனாட்சி அத்தை தொட்டியில் புண்ணாக்கு கரைப்பது தெரிந்தது. அவர் ஒருகணம் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் மீண்டும் குனிந்துகொண்டார். பவுனு அத்தை என் பக்கம் திரும்பவே இல்லை. அண்டாவிலிருந்து தவிட்டை அள்ளி அள்ளி தொட்டிக்குள் போட்டபடி இருந்தார். இன்னும் உரத்த குரலில் நான் மீண்டும் அம்மாவை அழைத்து செய்தியைச் சொன்னேன். அம்மா அப்போதுதான் சமையலறையிலிருந்து வெளியே வந்தார்.
அங்க ரெண்டு கல்லு இருக்கும். தூக்கி தலயில வச்சிகினு நில்லுடா. யாரு வேணாம்னு சொல்றா?” ஈரக்கையை புடவையில் துடைத்துக்கொண்டே வாசலுக்கு வந்தாள். “நிம்மதியா ரெண்டு வாய் சோறு துன்ன உடறியா? நுப்ப நாழியும் பச்சப்புள்ளயாட்டம் அம்மா அம்மான்னுட்டுஎன்று  செல்லமாக சிரித்துக்கொண்டே நெருங்கி வந்து கன்னத்தைக் கிள்ளினாள்.
இப்ப நீ என்ன உள்ள வந்து கலெக்டரு வேலயா பாக்கப்போற? இங்கயே நில்லுடா. ஒனக்கு நெய்வண்டல் வேணுமா வேணுமா?”
நெய்வண்டல் பேச்சை எடுத்ததுமே எனக்கு நாக்கில் எச்சில் ஊறியது. “இல்லம்மா, முனுசாமி மாமா….” என்று தணிந்த குரலில் தொடங்கும்போதே இடைமறித்துபோதும் நிறுத்துடா. அவன்தான் அண்டாமாதிரி வாயத் தெறந்தானே. அவன் சொன்னது எனக்கும் கேட்டுதுஎன்று அடக்கினாள். ”எவ்ளோ நேரமானாலும் இன்னைக்கு அவள புடிச்சே ஆவணும். பன்னெண்டு பல்லா வெண்ணெ வச்சிருந்தேன். ஏற்கனவே நாலு பல்லாவ தூக்கி குடுத்துட்டு நிக்கறன். இருக்கறத இன்னைக்கு காய்ச்சனாதான் உண்டு. இல்லன்னா இதயும் யாருக்காச்சிம் தூக்கி குடுக்க வேண்டிதுதான். அப்பறம் நெய்யும் கெடயாது. கிய்யும் கெடயாது. ஒனக்கு வண்டலும் இல்ல சுண்டலும் இல்ல.”
வாசல் வழியாக உப்புவண்டியைத் தள்ளிக்கொண்டு வந்த தாத்தா அம்மாவிடம்உப்பு வாங்கலியா தாயி?” என்று கேட்டபடி நின்றார். ”வேணும். கொஞ்சம் நில்லுங்க தாத்தாஎன்றபடி உள்பக்கமாக திரும்பிஅம்சவேணி, அந்த மொறத்த கொஞ்சம் எடுத்துகினு வாம்மாஎன்று குரல்கொடுத்தபடி முந்தானையில் இருந்த முடிச்சை அவிழ்த்துஎட்டணாவுக்கு போடுங்கஎன்றபடி நாணயத்தை எடுத்து உப்புக்காரரிடம் கொடுத்தார். காலை வெயிலிலேயே அவர் உடம்பில் வேர்வை ஊறி மழையில் நனைந்ததுபோல காணப்பட்டார். தலைப்பாகையாக சுற்றியிருந்த துண்டைக் கழற்றி உடலைத் துடைத்துக்கொண்டார்.
அம்சவேணி அத்தை முறத்தை எடுத்துவந்து கொடுத்துவிட்டுச் சென்றாள். இடுப்புவரை ஊசலாடிய அத்தையின் தலைமுடியிலிருந்து தேங்காய் எண்ணெய் மணம் வீசியது. உள்ளே சென்று ரேடியோ பக்கத்தில் போட்டிருந்த நெல்மூட்டைமீது உட்கார்ந்தாள். விவிதபாரதி பாடிக்கொண்டிருந்தது.
தாத்தா இரண்டுபடி உப்பை அளந்துபோட்டுவிட்டு, கூடுதலாக ஒரு கை மூட்டையிலிருந்து உப்பை அள்ளிப் போட்டார். “ஏன் தாயி, திருபுவன பக்கம் கட்டிக் குடுத்தீங்களே, அந்தப் பொண்ணுதான இது? ஏதாச்சிம் விசேஷமா?” என்று அடங்கிய குரலில் கேட்டார். அம்மா ஒருகணம் முகம் உறைந்து தளர வலதுகை ஆட்காட்டி விரலையும் இடதுகை ஆட்காட்டி விரலையும் கத்தரிக்கோல் மாதிரி வைத்துக் காட்டினாள். தாத்தா புரிந்துகொண்டதுபோல தலையசைத்தார். “ஏற்கனவே மூனு. இப்ப இதுவுமா? இப்பிடி வெளிய போனதுங்கள்ளாம் ஊட்டுக்கே திரும்பி வந்திச்சின்னா, குடும்பம் என்னம்மா ஆவறது?” என்று அடங்கிய குரலில் சொன்னபடி உதட்டைப் பிதுக்கினார் தாத்தா. அம்மா பக்கத்திலிருந்த கோவில் கோபுரத்தின் பக்கமாக கையை நீட்டிக் காட்டிவிட்டு முந்தானையால் கழுத்தில் படிந்திருந்த வேர்வையைத் துடைத்தாள்.  
தாத்தா பெருமூச்சு வாங்கியபடிஒரு சொம்பு நீராகாரம் இருந்தா குடு தாயி, கத்தி கத்தி தொண்டதண்ணி வத்திப் போச்சிஎன்றார். “கொஞ்சம் இருங்க, தோ வரேன்என்று சொன்னபடி அம்மா உள்ளே சென்றாள்
தாத்தா அப்போதுதான் என்னை கவனித்தவர்போலநீ எதுக்கு தம்பி மேல்சட்ட போடாம நிக்கற? நாள பின்ன படிச்சிட்டு வேலைக்கு போவும்போது நல்லா நெறமா எம்ஜியாருமாரி இருந்தாதான, நாலு பேரு ஒன்ன திரும்பி பாப்பாங்கஎன்று சொன்னார்.
நான் தாத்தாவிடம் ஆறுவிரலைக் காட்டிநான் அஞ்சாவதிலேருந்து ஆறாவதுக்கு போவ போறேன். சின்ன பள்ளிக்கூடத்திலேந்து பெரிய பள்ளிக்கூடத்துல என்ன சேக்க போறாங்கஎன்று பெருமையுடன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சொன்னேன். “நல்ல புள்ளஎன்றபடி தாத்தா என் தோளில் தட்டினார்.
அம்மா கொண்டுவந்து நீட்டிய சொம்பை வாங்கி அண்ணாந்து குடித்தார் தாத்தா. நாலைந்து மிடறுகள் குடித்த பிறகு நிறுத்திவிட்டுஅமுதமா இருக்குது தாயி. மோர் கலந்திருக்கியா?. அடியில பருக்கை கூட கெடக்குதுஎன்றபடி சொம்புக்குள் பார்த்தபடி ஒருகணம் நின்றார். சிறிது நேரத்துக்குப் பிறகு அடங்கிய குரலில்அந்தக் காலத்துல என் ஊட்டுக்காரி இப்பிடித்தான் குடுப்பா. பேச்சுதான் கொஞ்சம் வெடுக்குவெடுக்குனு சண்டக்காரியாட்டம் பேசுவா. ஆனா எள்ளுன்னா எண்ணெயா நிப்பா. நாப்பது வருஷம் என்கூட இருந்தா. பொட்டுனு ஒருநாள் என்ன தனியா உட்டுட்டு போயிட்டாஎன்று தரையில் உட்கார்ந்திருக்கிற யாரோ ஒருவரிடம் சொல்வதுபோல சொல்லிவிட்டு நிறுத்தினார். நாக்கை நீட்டி ஒருகணம் உலர்ந்த உதடுகள் மீது படரவிட்டு ஈரப்படுத்திக்கொண்டபடி மீண்டும் சொம்பை உயர்த்தி மிச்சமிருந்த நீராகாரத்தை குடித்துவிட்டு அம்மாவிடம் சொம்பைக் கொடுத்துவிட்டு வண்டியைத் தள்ளிக்கொண்டு போனார்.
அம்மா உள்ளே சென்றதும் வாசலோரமாக நின்றிருந்த பன்னீர் மரத்துக்கடியில் சென்று நின்றுகொண்டேன். நிழலும் காற்றும் இதமாக இருந்தன. தொங்கட்டான்போல ஏராளமாக விழுந்து கிடக்கும் பூக்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒரே சீராக காம்புகளைத் தொகுத்துப் பிடித்தேன்.  செண்டுபோல விரிந்திருக்கும் முன்பகுதி வெள்ளைக்குடைபோல இருந்தது. மழைக்குப் பிடிப்பதுபோல ஒரு நொடி தலைக்கு மேலே உயர்த்திப் பிடித்தபடி அண்ணாந்து பார்த்தேன். பன்னீர் மரக்கிளைகளின் இடைவெளி வழியாக கசிந்துவந்த சூரியக்கதிர்கள் கண்களை கூசவைத்தன.
என்ன மருமவனே. சூரியன போட்டா புடிக்கறியா?”
குரலைக் கேட்டு திரும்பியபோது தயிர்க்கார அத்தை நின்றிருந்தாள். “அத்த, ஒனக்காகத்தான் அரமணி நேரமா நிக்கறேன் தெரியுமா?” என்றபடி அவளுக்கு அருகில் ஓடினேன். “வாவாவா. ஒனக்காவத்தான் அம்மா காத்துகினிருக்காங்கஎன்றபடி அவள் கைவிரல்களைப் பிடித்தேன். அத்தை நடந்து வந்து தலையில் சுமந்திருந்த தயிர்க்கூடையை இறக்கி திண்ணையில் வைத்தாள். நாங்கள் இரண்டு பேருமாக வீட்டுக்குள் சென்றோம்.
வாடி வள்ளி. இப்பதான் வழி தெரிஞ்சிதா?என்று சொல்லிக்கொண்டே சமையல்கட்டிலிருந்து வெளியே வந்தாள் அம்மா.
நாளைக்கி வரேன்னு சொல்லிட்டு போன வாரம் போனவ இன்னைக்குத்தான் எட்டிப் பார்க்கற. ஒன் நாளைக்கி இன்னைக்குதான் வந்துதா? நாளைக்கின்னு நீ சொல்றத எங்கனா ஓடற தண்ணியிலதான்டி எழுதணும்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலை அண்ணி. நான் என்ன செய்யமுடியும் சொல்லு.”
ஆமான்டி நீ பெரிய இந்திராகாந்திதான். எனக்குத் தெரியாதா? இந்தப் பையன்தான் வண்டல் வண்டல்னு பெனாத்திகிட்டே கெடந்தான்
என்ன அண்ணி இப்பிடி சொல்லிட்ட? நான் என்ன இந்திராகாந்தியாயி நாட்டயா ஆளப் போறேன்.”
ஏன்டி, பால தயிராக்கி, தயிர வெண்ணெயாக்கி, வெண்ணய நெய்யாக்கறவ நாட்ட ஆளமுடியாதா என்ன? எல்லாமே பக்குவம் பாத்து செய்யற வேலைதான்.”
அது சரி, அண்ணிக்கு என்ன, சுலபமா சொல்லிட்ட. பக்குவம் கூடி வரணுமே. எல்லாத்துக்கும் மொதல்ல நமக்கு பக்குவம் வேணும்.”
திண்ணையில் வைக்கப்பட்ட தயிர்க்கூடையை நான் மெதுவாக இரண்டு கைகளாலும் பிடித்து தூக்கிவந்து கூடத்தில் சாய்வுநாற்காலிக்கு பக்கத்தில் வைத்தேன். ஈரத்துணி சுற்றி மூலையில் வைக்கப்பட்டிருந்த பானையிலிருந்து தம்ளர் நிறைய தண்ணீர் மொண்டு கடகடவென்று குடித்துமுடித்த தயிர்க்கார அத்தைஎன் மருமவனுக்கு இருக்கற அறிவு யாருக்கு வரும்? சொக்கத்தங்கம்டா நீஎன்று என்னைப் பார்த்து சிரித்தாள். அங்கிருந்தபடியே கைகளை நெற்றியின் இரு புறங்களிலும் வைத்து நெட்டி முரித்தாள். கூழாங்கல் விழுவதுபோல சொடக்சொடக்கென்று சத்தம் வந்தது. “நீதான்டி மெச்சிக்கணும் அவன. சரியான தீனிப்பண்டாரம்டி அவன். ஒரு தட்டு சோத்துக்கு நாலுகரண்டி நெய் கேக்கறான்என்று சொல்லிக்கொண்டே சிரித்தாள் அம்மா. சிரிப்பில் அவளுக்கு புரையேறி இருமல் வந்துவிட்டது. தன் தலையை தானே தட்டிக்கொண்டாள்.
அம்மா பவுனு, அந்த வெண்ண பல்லாங்கள உறியிலேந்து எடுத்து வாம்மாஎன்று அறையைப் பார்த்துச் சொன்ன அம்மாவிடம் தயிர்க்கார அத்தையின் பக்கம் திரும்பிதோட்டத்துல தொழுவத்துக்குப் பின்னால நாரத்தமரம் பக்கமா போயிடலாமாடி. கொஞ்சம் நெழலா இருக்கும்என்றாள்.
தயிர்க்கார அத்தை தோட்டத்துக்கு நடந்தாள். அவள் பின்னாலேயே நானும் சென்றேன்.
அவ முந்தானய புடிச்சிகினே போடா. வள்ளி, பேசாம அவன் தலயிலயும் ஒரு கூடைய தூக்கி வச்சி உடுடி. போற எடமெல்லாம் தயிரே மோரேன்னு ஒன் கூடயே வித்துட்டு வருவான்
படிக்கிற புள்ளய இப்பிடிலாம் கிண்டல் செய்யாதண்ணி. சும்மா இரு
மீனாட்சி அத்தை நாலைந்து சாக்குகள் கொண்டுவந்து நாரத்தை மர நிழலில் உட்காரத் தோதான இடத்தில் விரித்தாள். பவுனு அத்தை கைக்கு ஒரு வெண்ணெய்ப்பல்லாவை எடுத்துவந்து வைத்தாள். ”அத்த கூட போய் நீயும் பல்லாவ எடுத்துகினு வா.  ராஜாவாட்டம் உக்காந்து காலை நீட்டிகினஎன்று அம்மா என்னை விரட்டினாள்.
மொத்தம் எட்டு பல்லாவாண்ணி? நான் என்னமோ பத்து பாஞ்சி இருக்கும்ன்னு நெனச்சேன்.” நெய்க்கார அத்தை வேலியோரமாக இருந்த வெற்றிலைக்கொடியிலிருந்து கருகருவென நீண்டிருந்த இரண்டு வெற்றிலைகளைப் பறித்து வந்து குடத்திலிருந்து தண்ணீரை எடுத்து சுத்தமாகக் கழுவி உதறிக்கொண்டே வந்து சாக்கில் உட்கார்ந்து காலை நீட்டினாள். உரலோடு சாய்த்துவைக்கப்பட்ட கரிய உலக்கையைப்போல உருண்டு தெரிந்த கெண்டைக்காலை புடவையை இழுத்து மறைத்துவிட்டு வெற்றிலையை தொடைமீது வைத்துத் தேய்த்துத் துடைத்துவிட்டு உதட்டுக்கருகில் கொண்டுசென்று ஊதினாள். பிறகு செல்லப்பிள்ளையை தடவிக்கொடுப்பதுபோல நான்கு தடவை தடவிக்கொடுத்தபடி காம்பையும் நடுநரம்புகளையும் கிள்ளி வீசினாள். சுருக்குப்பையைப் பிரித்து சுண்ணாம்புக் கரண்டவத்திலிருந்து ஒரு பொட்டுக்கடலை அளவுக்கு சுண்ணாம்பைத் தொட்டெடுத்து வெற்றிலையின் முதுகில் தடவினாள். வெண்கலக்கரண்டவம் வெயிலில் மின்னியது.
அம்மா அதையே பார்ப்பதை அறிந்துகோலினூரு சந்தையில  தரவுக்கு போன நேரத்துல யாரோ ஒருத்தன் வித்தான்டின்னு ஒருநாள் எங்க ஊட்டுக்காரருதான் வாங்கியாந்து குடுத்தாருண்ணி. பாக்கறதுக்கு தங்கமாட்டம் பளபளன்னு இருக்குதில்லஎன்றபடி வெற்றிலையைத் தடவியதுபோலவே ஒருநொடி கரண்டவத்தை மூடி தொடையில் வைத்து உருட்டியெடுத்தாள். ஒரு துணுக்கு புகையிலையையும் பாக்கையும் எடுத்து  வெற்றிலையின் மடிப்புக்கிடையில் ஒதுக்கி மூடி வாய்க்குள் வைத்துக்கொண்டாள். அவள் மெல்லுவதற்கேற்றபடி ஒருபக்கத் தாடைமட்டும் மேலும் கீழும் அசைந்தது.
அங்காளம்மா அத்தை மதிலோரமாக இருந்த செங்கல் அடுக்கிலிருந்து செங்கற்களை எடுத்துவந்தாள். முக்கோணத்தில் மூன்று புள்ளிகளென அவை வைக்கப்பட்டு அடுப்பாக மாறியது.
பவுனு, சாமி மாடத்துங் கீழ வாணல கவுத்து வச்சிருப்பன் பாரு, அத கொஞ்சம் எடுத்தாம்மா. அப்படியே ஒரு கரண்டியயும் எடுத்துக்கோ.
வாணல் வந்ததும் அம்மா அதை வாங்கி புடவை முந்தானையாலே உள்பக்கத்தைச் சுத்தமாகத் துடைத்துவிட்டு அத்தையிடம் கொடுத்தாள்.  கல்லடுப்பின் மீது வாணலை வைத்த அத்தை சமநிலை பார்த்தாள். ஒருபக்கம் சாய்ந்தது. “ஒரு கல்லு ஈடும் தாழ்த்தியா இருந்தா கூட அடுப்பு அவ்ளோதாண்ணி. நெய் நெருப்புல கவுந்துரும்என்றாள் அத்தை.
அம்மா எழுந்துபோய் சமையல்கட்டுக்குச் சென்று இன்னும் தணல் அடங்காத நெருப்புத்துண்டுகளை ஒரு எருமுட்டையின் மீது வைத்து எடுத்துவந்தாள். அதை வாங்கி கல்லடுப்புக்கு நடுவில் வைத்தாள் தயிர்க்கார அத்தை. அம்சவேணி அத்தை எடுத்துவந்த சவுக்கை மிளாரை அருகில் கொண்டுவருவதற்கு முன்னாலேயேஅது வேணாம் தாயிஎன்று தடுத்தாள். “தூசிய கெளப்பிடும்மா அது. அப்பறம் எல்லாமே நெய்யில எறங்கிடும். கட்டயா பாத்து எடுத்தாம்மாஎன்றாள். “வாத்யார, நீ என்ன நாட்டாமயா பண்ற? போய் மண்ணெண்ணெ பாட்டல கொண்டாந்து குடு, போஎன்று அம்மா விரட்டினாள் அம்மா. நான் ஒரே ஓட்டமாக உள்ளே ஓடிச் சென்று பாட்டிலோடு திரும்பி வந்தேன்.
அடுப்பு எரியத் தொடங்கியதும் எல்லோருடைய பார்வையும் வாணல் மீதே படிந்திருந்தது. நெருப்பு பிடித்து எரிந்ததும் வாணலில் சூடேறத் தொடங்கியது. கடைசிக்கட்டமாக கையிலிருந்த துணியை சூடான வாணலிக்குள் வைத்து ஒரு சுழற்று சுழற்றியெடுத்தாள். சில கணங்களுக்குப் பிறகு அம்மாவின் பக்கம் திரும்பிய தயிர்க்கார அத்தைஎன்னண்ணி ஆழம்பிச்சிடழாமா?” என்று வெற்றிலை குதப்பிய வாயை மூடியவாக்கில் மெல்ல முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு கேட்டாள். அம்மாம்என்றதும் முதல் பல்லாவை எடுத்து வாயை மூடியிருந்த துணியை அகற்றி உள்ளிருந்த வெண்ணெயை வாணலுக்குள் சாய்த்தாள். வெண்கரைசலென தேங்கியிருந்த வெண்ணெய் கூழென வெளியேறி வாணலுக்குள் விழுந்தது. விழுந்த வேகத்தில் அது குழைந்து நுரையெனப் பொங்கித் ததும்பியது.
இரண்டாவது பல்லா வெண்ணெயையும் வாணலில் சரித்துவிட்டு எழுந்துபோய் வேலியோரமாக வெற்றிலைச்சக்கையைத் துப்பிவிட்டு வாயைக் கழுவிக்கொண்டு வந்தாள் அத்தை. தன்னிச்சையாக தன் நாக்கை வெளியே நீட்டி அதில் படிந்திருக்கும் ரத்தச்சிவப்பை ஒருகணம் பார்த்துக்கொண்டன அவள் கண்கள்.
வாணலுக்கருகில் உட்கார்ந்து விறகை சற்றே வெளியே இழுத்து பாதியளவு அனல்மட்டும் வாணல்மீது படும்படி வைத்தாள். பிறகு மேலும் இரண்டு பல்லாக்களை எடுத்து வெண்ணெயை வாணலுக்குள் கவிழ்த்தாள். பிறகு அம்சவேணி அத்தையைப் பார்த்துஅண்ணி, வாய் பெரிசா இருக்கற ஒரு தேவுசாவ எடுத்தாங்க. அப்படியே கேவுருமாவும் எடுத்தாங்க. மருமவ புள்ளைக்கு வண்டல் கிண்டனுமில்லஎன்று சிரித்தாள். அம்மா எழுந்து போனதும் அம்சவேணி அத்தையைப் பார்த்துஅந்த முருங்க மரத்துல கொழுந்து எலையா பாத்து ஒரே ஒரு கொத்து உருவி கழுவி எடுத்துகினு வாம்மாஎன்று சொன்னார்.
அத்தை மிச்சமிருந்த பல்லாக்களிலிருந்த வெண்ணெயை  முழுதும் வாணலுக்குள் ஊற்றினாள்.  வெண்ணெய்க்கட்டிகள் பிரிந்து தனித்தனி உண்டையாக வாணலுக்குள்ளேயே சுற்றி வந்தன.
தண்ணி தொட்டியில காயிதக்கப்பல் சுத்தறமாதிரி சுத்துது அத்தஎனக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை. அதன் மீது விரலை வைத்து சுற்றி ஓடவைக்கவேண்டும் போல இருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒவ்வொரு கட்டியும் கரைந்து மறைந்தது.
கேழ்வரகு மாவுப் பாத்திரத்தோடும் தேவுசாவோடும் அம்மா வந்து சாக்கில் உட்கார்ந்துகொண்டு வாணலைப் பார்த்தாள். எலுமிச்சை சாறுபோல வாணலுக்குள் கரைசல் கொதித்து மிதந்தது. குமிழ்கள் புரண்டு வெடித்தன. ஒருகணம் பார்ப்பதற்கு மஞ்சள் குழம்புபோல இருந்தது. தோட்டம் முழுக்க நெய்மணம் நிறைந்தது. கொதி ஏறும்தோறும் அத்தை விறகை அங்குலம் அங்குலமாக வெளியே இழுத்தபடி இருந்தாள்.
போன வாரமே ஏன் வரலைன்னு கேட்டிங்களே. அது ஏன்னு இப்ப சொல்றேன் கேளுங்கஎன்று அடுப்பிலிருந்து கண்களைத் திருப்பாமலேயே அத்தை சொன்னாள்.
நம்ம பெருமாள் கோயில் தெருவுல ஒரு ஐயரூட்டம்மா வழக்கமா என்கிட்டதான் தயிர் வாங்கும். எருமைத்தயிர்தான் அதுக்கு புடிக்கும். அதுக்காவே தனியா கொண்டாருவன். போன வாரம் ஒரு கிலோ வெண்ணெ வேணும்டி இவளே, கொண்டாறியான்னு கேட்டாங்க. நெய் உருக்கறதுக்கு கேக்கறாங்கன்னு நெனச்சி நா வேணும்னா உருக்கித் தரட்டுமாம்மான்னு கேட்டேன். நெய்க்காக இல்லடி, அங்கனூரு ஆஞ்சநேயருக்கு படைக்கறதுக்குன்னு சொன்னாங்க.”
அடுப்பிலிருந்து ஒரு விறகை முழுதாகவே வெளியே இழுத்து அணைத்தாள் அத்தை. அதன் புகை அருகில் படர்ந்துவிடாதபடி கைக்கு எட்டுகிற தொலைவுக்கு தள்ளிவிட்டாள். பக்கத்திலிருந்த முருங்கை இலையை உருவி கொதிக்கும் நெய்ப்பரப்பின் மீது தூவினாள். ஒவ்வொரு இலையும் பொரிந்து சுருண்டு நெளிந்து நெய்க்குள் ஆழ்ந்து மேலே வந்து மிதக்கத் தொடங்கியது. ஒருவித பச்சைமணம் வீசியது.
அவங்களுக்கு நல்லா வெண்ணெயாட்டம் அஞ்சி பொண்ணுங்க அண்ணி. ஒரு பொண்ணுக்கும் இன்னும் முடிச்சு உழல. பெத்தவங்க என்ன செய்ய முடியும்? எத்த தின்னா பித்தம் தீரும்னு கோயில்கோயிலா போறாங்க. அவுங்களுக்காகத்தான் அன்னைக்கு வெண்ணெ கொண்டு போனன்.   நான் போன நேரத்துக்கு ஊடு பூட்டியிருந்தது. எங்க போனாங்க, எப்ப வருவாங்கன்னே அக்கம்பக்கம் யாருக்கும் தெரியலை. ரெண்டுமூணு மணி நேரம் உக்காந்து பாத்துட்டு திரும்பி போயிட்டேன். அடுத்தநாள் போன சமயத்துலதான் அந்த அம்மா எல்லாக் கதையையும் சொல்லிச்சி. யாரோ சொன்னாங்கன்னு சிறுவந்தாட்டுல நரசிங்கர் கோயிலுக்கு போயிருந்தாங்களாம். சரின்னு வெண்ணெய கொடுத்திட்டு கதய கேட்டுட்டு வந்தன்
முருங்கையிலையின் மணம் பரவி அடங்கிய கணத்தில் அத்தை அடுப்பிலிருந்த இரண்டாவது விறகை இழுத்து வெளியே தள்ளிவிட்டாள்.
அடுத்த நாளாச்சிம் வந்துடலாம்ன்னு நெனச்சேன். என் நேரம், நம்ம ரெட்டியார் ஊட்டம்மா ஊட்டுல புடிச்சிகிட்டாங்க. அங்க ஒரு பஞ்சாயத்து. ரெண்டு வருஷத்துக்கு முன்னால வில்லினூருல கட்டி கொடுத்தாங்களே, அந்தப் பொண்ணு ஊட்டோட வந்து இருக்குது. அத அழச்சிகிட்டு போவறதுக்கு ஊட்டுக்காரன் வந்திருக்கான், இது போவமாட்டுது.  நான் போன நேரத்துல பஞ்சாயத்து நடக்குது. இது ஒன்ன சொல்ல, அவன் ஒன்னு சொல்ல பேச்சுதான் நீண்டுகினே போவுது. என்ன பாத்துட்டு அந்த அம்மா ஓன்னு அழுவுது. யாருக்குன்னு நான் பேசமுடியும்? ரெண்டு பக்கமும் மாறிமாறி கத கேட்டுகினே இருந்துட்டு வந்தன்.”
மஞ்சள் நிறம் முற்றிலுமாக மறைந்து குழைவான புதிய நிறம் வாணலுக்குள் உருவாகித் தெளிந்தது. உருகிய நெய்யில் வானம் தெரிந்தது. அத்தை கடைசி விறகையும் வெளியே இழுத்து தள்ளிவிட்டாள்.  வாணலுக்குள் நெய் மெல்ல மெல்ல பொங்கித் தணிந்தது.
அத்தை ஒரு கணம் அமைதியாக பவுனு அத்தையைப் பார்த்துவிட்டு வாணலின் பக்கம் திரும்பினாள்.
ஒவ்வொரு இடத்துலயும் ஆயிரம் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும்ண்ணி. கஷ்டம் இல்லாத இடம் உலகத்துல எங்க இருக்குது சொல்லுங்க? நான் கூட என்னை கட்டிக்கிடறவன் அரசாங்கத்துல எடுபுடி வேலை செய்யறவனா இருந்தாலும், மாச சம்பளம் வாங்கறவனா இருக்கணும்ன்னு நெனச்சிட்டிருந்தேன். ஆனா எங்கப்பன் அவனமாதிரியே ஒரு தரவுக்காரனுக்கு புடிச்சி கட்டி வச்சிட்டான். என்ன செய்ய முடியும்? பால் முரிஞ்சிபோற மாதிரி ஆரம்பத்துல கொஞ்சம் இழுபறியாதான் கெடந்தம். போவபோவ சரியாச்சின்னு வைங்க. தோ இருவது வருஷமா அந்த மாரியாத்தா புண்ணியத்துல நல்லாதான் இருக்கோம்.”
குமிழ்கள் அடங்கி தெளிந்த குளம்போல இருந்தது நெய். அந்த மணத்துக்கு எங்கிருந்தோ ஒரு பூனை ஓடிவந்து வேலிக்கருகில் எட்டிப் பார்த்தது.  அதைப் பார்த்ததும்  இரு கைகளையும் வேகமாகத் தட்டி ஓசையெழுப்பி விரட்டினாள் அத்தை.
அண்ணி, தேவுசாவ ஒரு நிமிஷம் கெட்டியா புடிச்சிகிங்க  என்றபடி கரித்துணியால் வாணலைப் பிடித்து இறக்கி தேவுசாவுக்குள் உருகிய நெய்யை மெதுவாக ஊற்றினாள். தகடுபோல மிதந்து முருங்கை இலைகள் முன்னால் ஓடோடி வரும்போதெல்லாம் வாயாலேயே ஊதி வேறு திசையில் திருப்பிச் சுழலவிட்டாள்.
நெய்யின் மணம் பெருகப்பெருக பசி எடுப்பதுபோல இருந்தது. எதையாவது எடுத்துச் சாப்பிடவேண்டும்போல தோன்றியது. நான் வயிற்றைத் தடவிக்கொண்டேன்.
வயித்த தடவாத மருமவனே. தோ ஒன் வண்டல் ரெடியாவப் போவுது பாரு
அத்தை சிறிதளவு எஞ்சிய நெய்யோடும் கரிந்த முருங்கையிலைகளோடும் வாணலை நிமிர்த்தி தரையில் வைத்துவிட்டு கையைத் துடைத்தாள். பிறகு கேழ்வரகு மாவுப் பாத்திரத்திலிருந்து  நாலைந்து கை மாவை அள்ளி வாணலுக்குள் தூவிவிட்டு கரண்டியால் கிளறிக்கொண்டே இருந்தாள். நெய் படிந்திருந்த இடமெங்கும் அவள் கரண்டி சுழன்று வந்தது. முற்றிலும் சூடு தணிந்துவிட்டது என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு கையாலேயே மாவைப் பிசைந்தாள்.
அண்ணி, இன்னும் ஒரு கை கொஞ்சம் மாவ அள்ளிப் போடுங்க
ஏற்கனவே இருந்த மாவோடு புதிய மாவையும் சேர்த்துப் பிசைந்ததும் அந்தக் கலவை சரியான பதத்துக்கு வந்துவிட்டது.
மருமவனே, கொஞ்சம் வாயத் தெற
நான் ஆவென்று திறந்தபோது அம்மா என்னைப் பார்த்து சிரித்தாள். ‘அங்க பாரு. தீனின்னு சொன்னதும் காக்காமாதிரி வாயத் தெறக்கறான்என்றாள்.
சும்மா இருங்கண்ணி, புள்ளமேல நீங்களே கண்ணு வைக்கறீங்கஎன்று செல்லமாக அதட்டிய அத்தை ஒரு வாய் மாவை உருட்டி என் வாய்க்குள் வைத்தாள். நாக்கின்மீதே அந்த உருண்டையை வைத்து தானாகக் கரையும்வரை வாயை மூடி அந்தச் சுவையை அனுபவித்தேன். பிறகு மெதுவாக பல்லால் அரைத்து கரைசலாக்கி  வாயிலேயே சில கணங்கள் நிறைத்துவைத்திருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அதை விழுங்க, இறுதியாக அது தொண்டையைக் கடந்து வயிற்றுக்குள் போய் விழுந்தது. அதுவரை அத்தையும் மற்றவர்களும் என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அப்போதுதான் நான் உணர்ந்தேன். ஒருகணம் கூச்சத்தில் கண்களை மூடிக்கொண்டேன்.
என்ன மருமவனே, இன்னொரு உண்ட வேணுமா?” என்று கேட்டாள் அத்தை. நான் வேகமாக ம் என்று தலையசைத்தபடி வாயைத் திறந்தேன்.
அத்தை மறுபடியும் ஒரு உருண்டை மாவை உருட்டி என் வாய்க்குள் போட்டாள். அத்தைகளுக்கும் அம்மாவுக்கும் கூட வண்டல் உருண்டைகளைக் கொடுத்தாள். அம்மாவிடம்அண்ணி, மாவு வைக்க பெரிசா ஒரு வட்டா கிட்டா எடுத்தாங்க. அப்படியே சின்னதா பாத்து ஒரு டபராவும் எடுத்தாங்க. நம்ம மருமவனாட்டம்தான் என் ஊட்டுக்காரனும். வயசுதான் கழுத வயசு ஆவுதே தவிர இன்னும் ருசி கேக்கற நாக்கு அதுக்கு. அதுவும் இந்த வண்டல வாரிவாரித் தின்னும். கொண்டும் போயி குடுத்தன்னு வைங்க, ஒரே வாய்ல அப்பிக்கும்என்று சத்தம் கொடுத்தாள் அத்தை.
அத்தை நான் கேட்காமலேயே ஒரு வாய் வண்டலை எடுத்து எனக்கு ஊட்டிவிட்டாள். நான் ரசித்து சாப்பிடுவதைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே மாவு படிந்த கைவிரல்களாலேயே என் கன்னத்தில் கிள்ளினாள்.
நெய் சாய்ங்காலம் வரைக்கும் நல்லா ஆறட்டும்ண்ணி. அப்பறமா தேவுசாவுலேர்ந்து பாட்டில்ங்கள்ல ஊத்தி வச்சிக்குங்கஎன்றபடி அம்மா எடுத்து வந்த பாத்திரங்களில் வண்டலை நிரப்பிவிட்டு எஞ்சியிருந்த மாவோடு வாணலை என் பக்கம் தள்ளினாள் அத்தை. “நல்லா வழிச்சி தின்னு மருமவனே. கொஞ்சம் கூட மிச்சம் வச்சிடாத
அத்தைகள் என்னோடு போட்டிபோட வாணலுக்குள் கையை நீட்டினார்கள். நான் ஆச தோச அப்பளம் வடஎன்று அழகு காட்டியபடி வாணலைத் தூக்கிக்கொண்டு மரத்தடிக்கு ஓடிவிட்டேன்.
சிரித்தபடியே எழுந்த அத்தை முகம் கைகால்களைத் தேய்த்துத் தேய்த்துக் கழுவினாள். புடவை முந்தானையை உதறி முகத்தைத் துடைத்தபடிஎன்ன கொழம்பு வச்சிங்கண்ணிஎன்று கேட்டாள். “நெத்திலி கொழம்புடி. சாப்படறியா?” என்றாள் அம்மா.
போடுங்கண்ணி, தோ பின்னாலயே வரேன்என்று சொன்னபடி வண்டல் டபராவோடு அத்தையும் நடந்தாள். ஒருகணம் திரும்பி என்னைப் பார்த்துமருமவனே, வண்டல அளவா சாப்பிடணும். புடுங்கிகிட்டா என்னத்தான் எல்லாரும் திட்டுவாங்க. ஞாபகம் வச்சிக்கஎன்று சிரித்துக்கொண்டே சொன்னாள். வாணலில் இருப்பதையெல்லாம் அதற்குள் தின்று தீர்த்துவிட்டிருந்தேன் நான். நிதானமாக விரல்களில் ஒட்டியிருக்கும் வண்டலை நாக்கைச் சுழற்றி சுவைக்கத் தொடங்கினேன்.
(அந்திமழை – ஜூன் 2020)