Home

Sunday 2 June 2024

கோபாலகிருஷ்ண பாரதியார் : ஆடிய பாதங்களின் தரிசனம்

  

மாயூரத்துக்கு அருகில் உள்ள கிராமம் ஆனந்தத்தாண்டவபுரம். அங்கே உள்ள அக்ரகாரத்தில் அண்ணுவையர் என்றொரு பண்ணையார் வாழ்ந்துவந்தார். அறநெறி சார்ந்த சிந்தனையும் இசையின் மீது நாட்டமும் உள்ளவர். அவருக்குச் சொந்தமாக ஏராளமான நிலபுலன்கள் இருந்தன. வீடு தேடி வரும் ஏழைகளுக்கு இல்லையென்று சொல்லாமல் அன்னதானம் செய்யும் பழக்கம் கொண்டவராகவும் அவர் வாழ்ந்து வந்தார்.

ஒருநாள் அண்ணுவையர் வீட்டில் ராமநவமி விழா சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த பல இசைக்கலைஞர்கள் பாடி அனைவரையும் மகிழ்வித்து பரிசில் பெற்றுச் சென்றனர். அருணாசலக்கவிராயரின் சீடர் ஒருவரும் அவ்விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தார். சுந்தரகாண்டத்தில் அனுமார் வாலில் அரக்கர் வைத்த தீ இலங்கையை எரித்தபோது, சீதை அனுமனிடம் ஒரு வேண்டுகோளை முன்வைப்பதுபோல ’அக்கினி பகவானே வருத்தாதே – அனுமனை நீதானே’ என்று தொடங்கும் ஒரு கீர்த்தனையை அவர் பாடத் தொடங்கினார். ஆனந்த பைரவி ராகத்தில் ஆதி தாளத்தில் அந்தக் கீர்த்தனை அமைந்திருந்தது. கூடத்தில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் அந்தக் கீர்த்தனையின் அமைதியில் மூழ்கியிருந்தனர்.

அப்போது நெற்றியில் திருநீறு பூசிய, வாடிய முகம்கொண்ட இளைஞரொருவர் அந்தக் கூடத்துக்கு அருகில் வந்து நின்றார். சிறிது நேரம் கீர்த்தனையின் வரிகளைக் கேட்டார். “நீங்கள் பாடுவது உண்மைதான். ஜாடாராக்கினி பகவான் என்னை வருத்துகிறார். சோற்றுக்கவலையே எனக்குப் பெரிய கவலையாகிவிட்டது. சோற்றுக்குப் பிறகே பாட்டு. அக்கினி பகவானே, என்னை வருத்தாதே” என்று  கசந்த புன்னகையுடன் அதே தாளத்தில் பாடலாக முணுமுணுத்தார்.

அங்கே அமர்ந்திருந்த அண்ணுவையர் அந்த இளைஞருடைய குரலைக் கேட்டுத் திரும்பினார். “யார் நீங்கள்? என்ன வேண்டும்?” என்று விசாரித்தார். “பசிக்கிறது. அதைத்தான் பாட்டாகப் பாடினேன். உணவு கிடைக்குமா?” என்று கேட்டார் அந்த இளைஞர். மேற்கொண்டு எந்தக் கேள்வியும் கேட்காமல் அவரை உள்ளே அழைத்துச் சென்று உணவுண்ணச் செய்தார் அண்ணுவையர். அவர் உண்டு முடித்து வெளியே வரும் சமயத்தில் அந்தச் சீடர் கீர்த்தனைகளைப் பாடி முடித்திருந்தார்.  உடனே, அண்ணுவையர் அந்த இளைஞரைப் பார்த்து “நீங்கள் விரும்பினால், எங்களுக்காக ஒரு கீர்த்தனை பாடவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். உடனே மடைதிறந்த வெள்ளமென ஒரு கீர்த்தனையைப் பாடினார் அவர். கூடத்தில் அமர்ந்திருந்தவர்களும் அண்ணுவையரும் தம்மை மறந்து கேட்கத் தொடங்கினார். ஒன்றை அடுத்து ஒன்றென எண்ணற்ற கீர்த்தனைகளைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார் அந்த இளைஞர். அவர் கோபாலகிருஷ்ண பாரதியார்.

இளமைப்பருவத்திலேயே பெற்றோரை இழந்ததால், முறையான பள்ளிப்படிப்பு இல்லாமலேயே வளர்ந்தவர் அவர். தந்தை வழியாக அவருக்குக் கிடைத்த வீணைப்பயிற்சியும் இசைஞானமும் சிவபக்தியும் அவரைக் கவிஞனாக மலர வைத்திருந்தது. ஆனால் வறுமையின் காரணமாக அது உள்ளடங்கியிருந்தது.  சிறிது காலம் அவரை ஆதரித்து வளர்த்த உறவினர் சிறுவனுக்கிருந்த கொஞ்ச சொத்தையும் அபகரித்துக்கொண்டு விரட்டியடித்துவிட்டார். மனம்போன போக்கில் நெஞ்சில் உதிக்கும் சொற்களை தாளக்கட்டோடு பாடியபடியும், பசித்தால் பிச்சையெடுத்து உண்டபடியும், சிவநாமத்தைச் சொன்னபடியும், ஊரூராகத் திரிந்தவாறு ஒரு நாடோடி வாழ்க்கையை அவர் வாழ்ந்துகொண்டிருந்தார்.

மாயூரத்தில் வசித்துவந்த  கோவிந்த சிவம் என்னும் ஞானியை அண்டி வாழ்ந்து அத்வைதத்தையும் வேதாந்தத்தையும் யோகத்தையும் கற்றுக்கொண்டார். தமிழிலக்கியங்களையும் வடமொழி இலக்கியங்களையும் படித்துத் தேர்ச்சி பெற்றார். தாயுமானவர் பாடல்களையும் கைவல்ய நவநீதம், பிரபோத சந்திரோதயம், தத்துவராயர் பாடுதுறை போன்ற நூல்களையும் விரும்பிப் படித்தார்.

அவருடைய நாடோடி வாழ்க்கையே இசைத்துறையில் போதுமான பயிற்சியை அடைய அவருக்கு உதவியாக இருந்தது.   ராமலிங்க சுவாமிகளைச் சந்தித்து, அவரோடு தங்கியிருந்து அவருடைய அருள்வாக்கையும் கேட்டார். ஞான நூல்களைத் தேடித்தேடிப் படித்தார். இறைவனின் நினைவில் தோய்ந்திருந்தார்.  திருவிடைமருதூருக்குச் சென்று, அமரசிம்ம மகாராஜாவின் அரண்மனையில் ஆஸ்தான வித்வானாக இருந்த கனம் கிருஷ்ணய்யரைச் சந்தித்துப் பழகி கீர்த்தனைகளைக் கட்டமைக்கும் நுட்பங்களை அறிந்துகொண்டார். கிருஷ்ணய்யர் தாமே இயற்றிய பல பதங்களை கோபாலகிருஷ்ண பாரதியாருக்குக் கற்பித்தார்.

திருவிடைமருதூரில் அரண்மனை வித்வான்களில் ஒருவராக இருந்த இந்துஸ்தானி இசைக்கலைஞரான இராமதாஸ் என்பவரும் வசித்துவந்தார். கோபாலகிருஷ்ண பாரதியார் அவரையும் சந்தித்துப் பழகினார். அவருடைய ஞானத்தையும் பணிவையும் அறிவுநாட்டத்தையும் கண்ட இராம்தாஸ் அவருக்கு இந்துஸ்தானி இசை மார்க்கத்தையும் கற்பித்தார். அக்காலத்தில் பாரதியார் ஒருவரே கர்னாடக இசைமுறையிலும் இந்துஸ்தானி இசைமுறையிலும் கசடற தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார்.

கோபாலகிருஷ்ண பாரதியாருடைய ஆழ்ந்த சிவபக்தி அவரிடம் இல்லற வாழ்வின் மீதான நாட்டத்தையே இல்லாமலாக்கிவிட்டது. வாழ்நாள் முழுதும் பிரும்மச்சரிய விரதத்தை மேற்கொண்டு வாழ முடிவெடுத்தார். கீர்த்தனை அமைப்புகளை ஆய்வு செய்து, தாமே புதிய கீர்த்தனைகளை எழுதும் முயற்சியில் ஈடுபட்டார். தன் ஞானகுருவான கோவிந்த சிவத்தை நினைத்து ‘எங்கள் குருநாதருடைய இணையடி தொழுவாய் மனமே’ என்னும் கீர்த்தனையை எழுதி சுருட்டி ராகத்தில் மனமுருகப் பாடினார்.  அதுவே அவர் பாடிய முதல் கீர்த்தனை.

திருவிடைமருதூரில் அனந்தபாரதியார் என்னும் வைணவ சங்கீத வித்வான் ஒருவரும் தங்கியிருந்தார். அவரிடமும் நெருங்கிப் பழகி இசைநுட்பங்களைக் கற்றுக்கொண்டார் கோபாலகிருஷ்ண பாரதியார். அவ்வப்போது தாம் இயற்றிய கீர்த்தனைகளை அவரிடம் பாடிக் காட்டி அவருடைய கருத்தை அறிந்துகொள்வார். ஒருநாள் நடராஜரின் அருளைப் புகழும் விதமாக நாதநாமக்கிரியை என்னும் ராகத்தில் ’இனி இனிமேலெனக்கென்ன விசாரம் இருக்குதையா’ என்னும் தொடங்கும் ஒரு புதிய கீர்த்தனையை இயற்றிமுடித்தார்.

தனிமையில் அந்தக் கீர்த்தனையைப் பாடிப் பாடி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அனந்தபாரதியார் வந்துவிட்டார். புதிய இசையமைப்பைக் கேட்டதும் வியந்து அதைப்பற்றி விசாரித்துவிட்டு முழுமையாகப் பாடுமாறு கேட்டுக்கொண்டார். அவருடைய வருப்பத்தை நிறைவு செய்யும் விதமாக கோபாலகிருஷ்ண பாரதியார் முதலிலிருந்தே அக்கீர்த்தனையைப் பாடிக் காட்டினார். சாகித்தியத்தின் அழகும் மெட்டின் அமைப்பும் அனந்தபாரதியாரின் உள்ளத்தைக் கவர்ந்தன. அவர் பாடப் பாட, இவருடைய உள்ளத்தில் பக்தியுணர்வு ஊற்றெடுத்துப் பெருகுவதையும் தன்னையறியாமல் கண்ணீர் பெருகி வழிவதையும் உடல் சிலிர்ப்பதையும் உணர்ந்தார். மிக நீண்ட அக்கீர்த்தனையை கோபாலகிருஷ்ண பாரதியார்  பாடிமுடித்ததும் மனமாரப் பாராட்டிவிட்டுச் சென்றார்.

அக்காலத்தில் இசைப்பாடல்களுக்கு முன்னோடிகளாக இருந்த முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக்கவிராயர் போன்றோரின் இசைப்பாடல்கள் பெரிதும் நிகழ்த்துகலைகளுடன் தொடர்புடையவையாக இருந்தன. பேச்சுமொழிக்கு நெருக்கமாக அவை அமைந்திருந்தன. மரபான பண்ணிசையில் ஏற்கனவே எழுதப்பட்ட சைவ வைணவப் பாடல்கள் பழமை மிக்க செய்யுள் கட்டுமானத்தில் அமைந்திருந்தன. கோபாலகிருஷ்ண பாரதியார் இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட மக்கள் மொழியை தம் பாட்டுமுறைக்காகத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்.  புராணக்கதைகளின் நாடகத்தருணங்களை மையப்படுத்தி அவர் தம் பாடல்களை இயற்றினார். அவர் தேர்ந்தெடுக்கும் அழகான சொல்நயத்தால் உருவாகும் கவித்துவம் மக்கள் மனத்தை எளிதாகக் கவர்ந்தது. 

திருவிடைமருதூரில் சில ஆண்டுகள் வசித்த பிறகு அவர் மீண்டும் மாயூரத்துக்குத் திரும்பி வந்தார்.  அவருடைய கீர்த்தனைகள் வெகுவேகமாக எல்லா இடங்களிலும் பரவத் தொடங்கின. மாயூரத்தில் வசித்துவந்த வித்துவான்களும் மற்றவர்களும் அவருடைய கீர்த்தனைகளைக் கேட்டு மனப்பாடம் செய்து பாடிப் பாடி பரப்பினர்.  இசைநிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் இவருடைய கீர்த்தனைகளைப் பாடுமாறு சபையினர் விரும்புவதும் பாடகர்கள் அவற்றைப் பாடுவதும் வழக்கமாயின. நடராஜமூர்த்தியை முன்வைத்து அவர் எழுதிய கீர்த்தனைகள் எங்கெங்கும் பரவின.

திருமணக்கூடங்களில் பாடுவதற்கு ஏற்றவகையில் நலுங்குப்பாடல்களையும் ஊஞ்சல் பாடல்களையும் கும்மிப்பாடல்களையும் கோலாட்டப்பாடல்களையும் அவர் இயற்றினார். அவற்றையும் அவர் நடராஜரையே முன்னிறுத்தி எழுதினார். இத்தகு தருணங்களில் இதற்குமுன் தெலுங்குப் பாடல்களைப் பாடிவந்த பெண்களுக்கு கோபாலகிருஷ்ண பாரதியாருடைய பாடல்கள் மிகவும் பிடித்துவிட்டதால், அவற்றைப் பாடிப் பயிற்சி செய்து, திருமணக்கூடங்களில் பாடத் தொடங்கினர். நடராஜரின் புகழ் எங்கெங்கும் பரவவேண்டுமென்றும் இளம்பருவத்திலேயே கடவுள் வாழ்த்துப்பாடல்களைப் பாடிப் பழகுவதன் வழியாக சிறுவர்களுக்கு எல்லாவித நன்மைகளும் உண்டாகுமென்றும் எண்ணிய கோபாலகிருஷ்ண பாரதியார் தம்மை அணுகும் பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்பியபடியே சலிப்பில்லாமல் பாடல்களைக் கற்பித்து அனுப்பினார்.

கோபாலகிருஷ்ணன் தங்கும் ஊர்களில்   மாலைப் பொழுதுகளில் அவரைச் சந்தித்து உரையாடுவதற்காக இசைக்கலைஞர்கள் வருவதுண்டு.  அத்தருணத்தில் தாம் அறிந்த புதிய கீர்த்தனைகளை ஒருவருக்கொருவர் பாடிக் காட்டி மகிழ்ச்சியடைவார்கள். சிற்சில சமயங்களில் அவர்கள் தெலுங்கு மொழியில் அமைந்த சில கீர்த்தனைகளைப் பாடுவார்கள். அவற்றில் வெளிப்படும் பக்தியும் சுவையான சொல்லழகும் கோபாலகிருஷ்ண பாரதியாரைப் பெரிதும் கவர்ந்தன. அவற்றைப் பாடியவர் பெயர் தியாகையர் என்றும் அவர் திருவையாற்றில் வசித்துவருகிறார் என்பதையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். ஒருநாள் அவரைச் சந்திக்கும் ஆவலில் திருவையாற்றுக்குப் புறப்பட்டுச் சென்றார். இருப்பிடம் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொண்டு வீட்டுக்குச் சென்று வணங்கினார்.

பதில்வணக்கம் சொன்ன தியாகையர் “எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?” என்று விசாரித்தார். கோபாலகிருஷ்ண பாரதியார் மாயூரத்திலிருந்து வருவதாகப் பணிவுடன் பதில் கூறினார். அதைக் கேட்டதும் உடனடியாக தியாகையர் ”அங்கே கோபாலகிருஷ்ண பாரதியார் என்ற ஒரு சங்கீத வித்வான் இருக்கிறாராமே, உங்களுக்குத் தெரியுமா? அவர் நலமாக இருக்கிறாரா?” என்று விசாரித்தார். பாரதியார் உளமகிழ்ச்சியோடு “தாசன்தான் அது” என்று பதில் கூறினார். அதைக் கேட்டதும் மகிழ்ந்த தியாகையர் அவரை அருகில் அமரவைத்து உரையாடத் தொடங்கினார். அவரைச் சுற்றி அமர்ந்திருந்த மாணவர்களுக்கு கோபாலகிருஷ்ண பாரதியாரை அறிமுகப்படுத்தி அவருடைய தமிழ்க்கீர்த்தனைகளைப்பற்றி பெருமையுடன் எடுத்துரைத்தார்.

உரையாடலைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் ஒரு கீர்த்தனையைப் பாடினர். அது ஆபோகி ராகத்தில் தியாகையரே இயற்றிய ‘ஸ்ரீராமசீதா அலங்காரஸ்வ ரூபா’ என்னும் கீர்த்தனை. பாடல் முடிந்ததும் தியாகையர் கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் “ஆபோகி ராகத்தில் நீங்கள் ஏதேனும் கீர்த்தனை இயற்றியிருக்கிறீர்களா?” என்று கேட்டார். கோபாலகிருஷ்ண பாரதியார் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். பிறகு மாணவர்கள் வேறு சில கீர்த்தனைகளைப் பாடி முடித்தனர். முதியவரான தியாகையர் தம் மாணவர்கள் சூழ எப்போதும் ராமபிரானின் சிந்தனையிலேயே வாழ்க்கையைக் கழிப்பதைப் பார்த்து மனமுருகினார் கோபாலகிருஷ்ண பாரதியார். அவருடைய உண்மையான பக்தியின் சிறப்பினாலேயே அவருடைய கீர்த்தனைகள் நாடெங்கும் பரவியிருப்பதை அவர் புரிந்துகொண்டார். இறைவனுடைய பெரும்புகழை கீர்த்தனை வடிவில் இயற்றும் தொண்டைக்காட்டிலும் சிறந்த தொண்டு வேறிலை என்னும் எண்ணம் அவர் மனத்தில் வேரூன்றியது.

தியாகையரிடம் விடைபெற்றுக்கொண்டு ஆலயத்துக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டு தங்குமிடத்துக்குச் சென்றார் பாரதியார். ஆபோகி ராகத்தில் கீர்த்தனை ஏதேனும் எழுதியதுண்டா என தியாகையர் எழுப்பிய கேள்வி அவருடைய மனத்தில் மீண்டும் எழுந்தது. அதையே மனத்துக்குள் அசைபோட்டபடி இருந்தார். அவர் நெஞ்சில் சட்டென ஒரு சொல் எழுந்து நல்ல தொடக்கம் கிடைத்தது. உடனே அவர் ’சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?’ என ஒரு கீர்த்தனையை இயற்றினார். அந்த மாணவர்கள் பாடிய தாளக்கட்டில் அந்தக் கீர்த்தனையை மனத்துக்குள் பாடிப் பார்த்தார். அனைத்தும் கச்சிதமாகப் பொருந்தி வந்ததை அறிந்து மனத்துக்குள் மகிழ்ச்சியடைந்தார். அதற்குப் பிறகே அவர் உறங்கச் சென்றார்.

அடுத்தநாள் காலையில் எழுந்ததும் தியாகையரின் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்து வணங்கினார். “தாசன் இயற்றிய கீர்த்தனையொன்றை இப்போது பாடிக் காட்டலாமா?” என்று பணிவோடு கேட்டார். தியாகையர் மகிழ்ந்து “தாராளமாகப் பாடுங்கள். கேட்பதற்குக் காத்திருக்கிறேன். இதற்கு முன்பு வேறு சிலர் உங்களுடைய கீர்த்தனைகளைப் பாடியதைக் கேட்டிருக்கிறேன். இப்போது உங்கள் கீர்த்தனையை நீங்களே பாடுவதைக் கேட்க ஆவலாக உள்ளது. பாடுங்கள்” என்று சொன்னார். உடனே கோபாலகிருஷ்ண பாரதியார் ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?’ கீர்த்தனையைப் பாடிமுடித்தார்.

கீர்த்தனையைக் கேட்டு மனமகிழ்ந்த தியாகையர் அவரைப் பாராட்டினார். “நேற்று நான் கேட்டபோது ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தீர்களே?” என்று வியப்போடு கேட்டார். “இதற்கு முன் ஆபோகி ராகத்தில் நான் எந்தக் கீர்த்தனையையும் எழுதியதில்லை. அதனாலேயே அமைதியாக இருந்தேன். இந்தக் கீர்த்தனையை நேற்று இரவு எழுதினேன்” என்றார். அவருடைய சாகித்திய  சக்தியையும் சங்கீத ஞானத்தையும் நடராஜ பக்தியையும் உணர்ந்து மகிழ்ந்த தியாகையர் பாராட்டி ஆசி வழங்கி அனுப்பிவைத்தார்.

அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு மாயூரத்துக்குத் திரும்பிவந்தார் கோபாலகிருஷ்ண பாரதியார். உற்சாகத்தோடு ஏராளமான கீர்த்தனைகளை எழுதினார்.  நாட்டை, வராளி, கெளளை, ஆரபி, ஸ்ரீ ஆகிய ஐந்து ராகங்களிலும் ஐந்து கீர்த்தனைகளை தியாகையர் எழுதியிருந்தார். பஞ்சரத்தினம் என்னும் பெயரில் அவை மக்களிடையில் பரவியிருந்தது. அவற்றின் வழியில் தாமும் எழுதவேண்டும் என நினைத்தார் கோபாலகிருஷ்ண பாரதியார். நாட்டை ராகத்தில் ‘ஹரஹரசிவ சங்கரகரு ணாகரபர மேஸ்வர ஆனந்தத் தாண்டவராயா’ என்னும் கீர்த்தனையையும் கெளளை ராகத்தில் ‘சரணாகதியென்று நம்பி வந்தேன்’ என்னும் கீர்த்தனையையும் ஸ்ரீ ராகத்தில் ‘மறவாமல் எப்படியும் நினைமனமே’ என்னும் கீர்த்தனையையும் ஆரபி ராகத்தில் ‘பிறவாத முக்தியைத் தாரும்’ என்னும் கீர்த்தனையையும் எழுதினார். சிவனை நினைத்து அவர் இயற்றிய அக்கீர்த்தனைகள் பக்தர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தன. பலர் அவற்றை மனப்பாடம் செய்து செல்லுமிடங்களிலெல்லாம் பாடிக் காட்டி மகிழ்ந்தனர். 

நாளடைவில் மாயூரத்திலிருந்தும் பிற ஊர்களிலிருந்தும் மாணவர்கள் சேர்ந்து வந்து கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் சங்கீதம் பயிலத் தொடங்கினர். அவருடைய கீர்த்தனைகளை மனப்பாடம் செய்து செல்லுமிடங்களிலெல்லாம் பாடிக் காட்டி மகிழ்ந்தனர். அவருடைய முக்கியமான மாணவர்களாக சிதம்பரம் பொன்னுசாமி தீட்சிதர், சிதம்பரம் ராஜரத்தின தீட்சிதர், மாயூரத்தைச் சேர்ந்த இராமசாமி ஐயர், நடேச ஐயர், சுப்பிரமணிய ஐயர் போன்றோரைச் சொல்லலாம். அவர்கள் பாரதியாரின் கீர்த்தனைகளைப் பாடிப்பாடி சிவபக்தி பரவ துணையாக நின்றனர்.

அடிக்கடி சிதம்பரத்துக்குச் சென்றுவரும் சூழலில் ஒருநாள் பாரதியாருக்கு சிவசங்கர தீட்சிதர் என்பவருடைய அறிமுகம் கிடைத்தது. அவர் தம் தலையில் ருத்ராட்சங்களாலான சிவலிங்கத்தை வைத்துக்கொண்டு வாகுமாலைகளைத் தரித்துக்கொண்டு காலில் சலங்கைகட்டி நாள்தோறும் நடராஜரின் சன்னதியில் அவரே இயற்றிய கீர்த்தனைகளைப் பாடியபடி நடனமாடுவார். அவருடைய பக்தியையும் சங்கீதஞானத்தையும் பார்த்து மகிழ்ந்து அவரோடு பழகி நண்பரானார். பாரதியாரின் பக்திநிலையையும் சங்கீத சாகித்திய ஞானத்தையும் கண்டு தீட்சிதரும் அவரை விரும்பினார்.

சிதம்பரம் கோவிலுக்குச் செல்லும்போதெல்லாம் பாரதியார் பொன்னம்பலத்துக்குத் தெற்குப் பக்கத்தில் நிருத்தசபையின் வெளிமண்டபத்தில் அமர்ந்து தியானத்தில் மூழ்கியிருப்பது வழக்கம். சில சமயங்களில் தெற்குச் சுவரோரமாக இருக்கும் நந்தனார் உருவத்துக்கு அருகில் அமர்ந்து பாடிக்கொண்டிருப்பதும் உண்டு. நடராஜ மூர்த்திக்கு நேராக அம்மூர்த்தியைத் தரிசித்தவண்ணம் நந்தனாரின் உருவம் அமைக்கப்பட்டிருந்தது. பாரதியார் நந்தனாருடைய பக்தியை நினைத்து நினைத்து உருகுவதற்கு அந்த உருவம் ஒரு தூண்டுகோலாக இருந்தது. பாரதியார் அடிக்கடி நந்தனாரைப்பற்றி வியந்து பேசுவதைக் கேட்ட தீட்சிதரும் வேறு சில அன்பர்களும்  “இந்தச் சந்நிதியிலேயே இருந்து தாம் தரிசனம் செய்யவேண்டுமென நந்தனார் பிரார்த்தனை செய்வதுபோல ஒரு கீர்த்தனை இயற்றித் தரவேண்டும்” என்று வேண்டிக்கொண்டனர். அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக பாரதியார் உடனே ஆரபி ராகத்தில் ‘எந்நேரமும் உன்றன் சந்நிதியில் நான் இருக்கவேண்டுமையா’ என்ற கீர்த்தனையை எழுதிக் கொடுத்தார்.

சிவத்தலங்கள் இருக்குமிடங்களையெல்லாம் தேடித்தேடிச் சென்று பார்த்தார் பாரதியார். அங்கங்கே நிகழும் விழாக்காட்சிகளைக் கண்டு இன்புற்று கண்டவற்றைக் கண்டவாறே கீர்த்தனைகளாகவும் சிந்துகளாகவும் பாடினார். ஒருமுறை சிதம்பரத்தில் திருவீதிக்கு எழுந்தருளிய பிட்சாடனமூர்த்தியைத் தரிசித்தபோது பெண்கள் அம்மூர்த்தியைப் பார்த்துச் சொல்வதுபோல ‘பிச்சைக்கார வேஷம் காட்டுகிறீர்’ என்றொரு கீர்த்தனையைப் பாடினார். இன்னொருமுறை திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தபோது கண்ட காட்சிகளையெல்லாம் மனத்தில் வைத்துக்கொண்டு ‘கண்ணாலே கண்டேன்  வேறொன்றும் எண்ணாமலே நின்றேன்’ என்றொரு கீர்த்தனையை இயற்றினார்.

பாரதியாரின் கீர்த்தனைகள் பெருகப்பெருக தமிழ்நாடு முழுவதும் பாகவதர்களும் வித்வான்களும் அவற்றைப் பாடிப் பரப்பினர். பாரதியாரைப் பார்க்காமலேயே பாரதியாரின் பாடல்களை ஒவ்வொருவரும் விரும்பிக் கேட்டனர். பல ஊர்களிலிருந்து வித்வான்கள் மாயூரத்துக்கு வந்து தங்கியிருந்து அவரிடம் கீர்த்தனைகளைக் கற்றுக்கொண்டு சென்றனர். பல ஊர்களிலிருந்தும் அன்பர்கள் அவரை அழைத்து சங்கீதநிகழ்ச்சிகள் செய்யுமாறு கேட்டுக்கொள்வார்கள். பாரதியாரும் அந்த இடங்களுக்கெல்லாம் சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்.

ஒருமுறை நாகப்பட்டினத்தில் வசித்த கந்தப்ப செட்டியார் என்னும் அன்பருடைய இல்லத் திருமணத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்தார். அங்கே சில நாட்கள் தங்கியிருந்து சில சிவகதைகளப் பிரசங்கம் செய்தார். அவருடைய கீர்த்தனைகளிலும் கதைகளிலும் மயங்கிய கந்தப்ப செட்டியார் யாரேனும் ஒரு நாயனார் சரித்திரத்தை நீங்கள் கீர்த்தனைவடிவில் இயற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவருக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்து தருவதாக வாக்களித்தார்.

பாரதியாருடைய மனத்திலும் வெகுநாட்களாக அப்படி ஓர் எண்ணம் ஊறியிருந்தது. செட்டியாரின் கோரிக்கை அவரை யோசிக்கவைத்தது. இறைவனே தன்னை வழிநடத்துவதாக நம்பிய பாரதியார் அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். ஆனால் யாருடைய சரித்திரத்தை எழுதலாம் என்ற கேள்விக்கு அவரால் விடைகாண முடியவில்லை. நாள் முழுதும் அந்தச் சிந்தனையிலேயே மூழ்கியிருந்தார். சிதம்பரம் கோவிலில் அவர் பார்த்த நந்தனாரின் உருவம் எதிர்பாராத விதமாக அவருடைய நெஞ்சில் எழுந்தது. நந்தனார் சரித்திரமே தம் மனோபாவங்களை வெளிப்படுத்த பொருத்தமாக இருக்குமென்று அக்கணமே முடிவெடுத்தார்.

தற்செயலாக அப்போது அவர் தங்கியிருந்த விடுதியறைக்கு கந்தப்ப செட்டியார் அவரைச் சந்திப்பதற்காக வந்தார்.  அவருடைய கையில் பாரதியாருக்காக கொண்டுவந்த பழக்கூடை இருந்தது. பழங்களைப் பார்த்ததும் பாரதியாருக்கும் நல்ல சகுனமென எண்ணி மகிழ்ந்தார். அவர் மனத்தில் பழம் வந்தமை பதிந்தது. உடனே ‘பழம் நம்மருங்கு அணையும்’ என்னும் சொல் நெஞ்சில் தோன்றியது. அதையே தாம் எழுத நினைத்த நந்தனார் சரித்திரத்தின் முதல் வரியாகக் கொண்டு ‘பழனமருங்கணையும்’ என்று எழுதத் தொடங்கினார். அண்ணுவையர் வயல்களில் வேலை செய்யும் மக்களின் வாழ்க்கையையும் பழக்கவழக்கங்களையும் நேரிலேயே கவனித்திருந்த அனுபவம் அவருக்கு நந்தனார் பிறந்த ஊர்ப்பின்னணியை எழுத மிகவும் உதவியாக இருந்தது.

தொடக்கப்பகுதி நன்றாக அமைந்துவிட்ட நிறைவோடு பாரதியார் மாயூரத்துக்குத் திரும்பி வந்தார். தொடர்ச்சியாக எழுத்து வேலைகளிலேயே மூழ்கியிருந்தார். இடையிடையில் சிதம்பரத்துக்கும் திருப்புன்கூருக்கும் சென்று தரிசனம் செய்து திரும்பினார். முன்னரே தாம் இயற்றி வைத்திருந்த சில தனிக்கீர்த்தனைகளையும் நந்தனார் சரித்திரத்தில் ஆங்காங்கே பொருத்தமாக இணைத்துக்கொண்டார். சில மாதங்களில் எழுத்துவேலை முடிந்ததும் கந்தப்ப செட்டியாருக்குத் தெரியப்படுத்தினார்.  செய்தி கிடைத்ததும் மகிழ்ச்சியில் திளைத்த செட்டியார், தக்க மனிதர் ஒருவரை அனுப்பி பாரதியாரை நாகப்பட்டினத்துக்கு அழைத்துவர ஏற்பாடு செய்தார். பாரதியாரும் தம் சீடர்கள் சூழ நாகப்பட்டினத்துக்குச் சென்றார்.

நந்தனார் சரித்திரம் அரங்கேற்றத்தை ஒரு பெரிய திருவிழாவைப்போல நடத்தத் திட்டமிட்டார் செட்டியார். அரங்கேற்றத்துக்கு ஒரு நல்ல நாள் குறித்த பிறகு, வெளியூர்களிலிருந்து பல சங்கீத வித்வான்களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் அரசு உத்தியோகஸ்தர்களுக்கும் அழைப்பு விடுத்தார். குறிப்பிட்ட நாளில் மாலைப்பொழுதில் அரங்கேற்றம் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றன. கீர்த்தனைகளில் பொதிந்திருக்கும் வேதாந்தக் கருத்துகளையும் சங்கீத மெட்டுகளையும் சிவபக்திச் சிறப்பையும் அனைவரும் பாராட்டினர்.

காரைக்காலில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் பலர் சங்கீதத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக ஒவ்வொரு நாளும் மாலையில் நாகப்பட்டினத்துக்குச் சென்று அரங்கேற்றத்தில் கலந்துகொண்டனர். இரவெல்லாம் கதை கேட்ட களைப்பில் அலுவலகத்தில் பகல் பொழுதில் அவர்கள் சோர்வோடு பணிபுரிந்தனர். அதைக் கண்ட காரைக்கால் பிரெஞ்சு கலெக்டர் சீஸே அந்த ஊழியர்களிடம் சோர்வுக்கான காரணத்தை விசாரித்தார். அவர்கள் அவரிடம் நந்தனார் சரித்திரம் அரங்கேற்றத்தைப்பற்றி எடுத்துரைத்தனர்.  இரவுப்பொழுதில் கண்விழித்து காலட்சேபம் கேட்டுவிட்டு தூக்கமின்றி அலுவலகத்துக்கு வருவதுதான் சோர்வுக்கான காரணம் என அவர்கள் தெரிவித்தனர்.  அந்தக் கலெக்டருக்கும் தமிழிலும் இசையிலும் நாட்டமிருந்தது. அதனால் ஊழியர்கள் விவரித்த செய்தியைக் கேட்ட பிறகு, அவருக்கும் அக்கதையைக் கேட்க விருப்பமெழுந்தது. இறுதிநாளில் அவர்களோடு சேர்ந்து அவரும் புறப்பட்டுச் சென்று நந்தனார் சரித்திரத்தைக் கேட்டு மகிழ்ந்தார். காலட்சேபத்தில் பாடப்பட்ட ஒவ்வொரு பாட்டும் அவருடைய மனத்தை உருக்கிவிட்டது. அந்தக் கலெக்டர் தன் செலவில் நந்தனார் சரித்திரத்தை புத்தகமாக அச்சிட்டு வெளியிட விரும்பினார். தமிழ்நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் அதைப் படிக்கவேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருந்தது.

கோபாலகிருஷ்ண பாரதியார் கலெக்டரின் விருப்பத்தை அறிந்து மகிழ்ச்சியுற்றார். புத்தக வடிவத்தில் வரும்போது மாயூரத்திலேயே வாழ்ந்துவந்த தமிழறிஞரான மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் ஒரு சிறப்புப்பாயிரம் வாங்கி இணைத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார். அதனால் ஒருநாள் மீனாட்சிசுந்தரம் பிள்ளையை நேரில் சந்தித்து தன் கோரிக்கையை முன்வைத்தார். மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு பாரதியார் மீது அன்பும் மதிப்பும் உண்டு. அவரால் அவருடைய கோரிக்கையை உதறமுடியவில்லை. பாயிரம் எழுதியளிக்க ஒப்புக்கொண்டு நந்தனார் சரித்திரத்தின் பிரதியை வாங்கி வைத்துக்கொண்டார். இருப்பினும் பெரிய புராணத்தின் கதையிலிருந்து விலகிச் சொல்லப்பட்டிருப்பதால், நந்தனார் சரித்திரத்தை அவரால் முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அந்த மன ஊசலாட்டத்தின் காரணமாக பாயிரம் எழுதாமலேயே காலம் தாழ்த்திவந்தார். பாயிரத்துக்காக வீடு தேடி வந்து நிற்கும் பாரதியாரிடம் ஒவ்வொரு நாளும் ஏதேதோ சாக்குப்போக்கு சொல்லி அனுப்பிவைத்தபடி இருந்தார். மனம் தளராத பாரதியாரும் ஒவ்வொரு நாளும் அவருடைய வீட்டுக்கு வந்து காத்திருந்துவிட்டுச் சென்றார்.

ஒருநாள் வழக்கம்போல பிற்பகல் வேளையில் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வீட்டுக்கு வந்தார் பாரதியார். பிள்ளை அவர்கள் அறையில்  ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதாக அவரிடம் சொல்லப்பட்டது. அதைக் கேட்டு அமைதியாக வெளித்திண்ணையிலேயே அமர்ந்துவிட்டார் பாரதியார். தனித்திருந்ததால், பொழுதுபோக்காக திடீரென ஒரு கீர்த்தனையை இசையோடு பாடத் தொடங்கினார். பாட்டின் வரிகளைக் கேட்டு அறையில் விழித்தெழுந்து உட்கார்ந்தார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. அந்த இசையும் பாரதியாரின் குரலும் அவரை உருக்கின. கீர்த்தனையின் இசையும் பொருளும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன. பக்தி மிகுதியால் பிள்ளை அவர்களின் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது.  அவருடைய புத்தகத்துக்கு பாயிரம் எழுதுவதைத் தாமதிப்பதை நினைத்து அவருக்குள் குற்ற உணர்வு பெருகியது. உடனே அறையை விட்டு வெளியே வந்து பாரதியாரிடம் தாமதத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.

 

கோமேவு திருத்தில்லை நடராசப் பெருமான்தான்  கூடியுய்ந்த

பூமேவு பேரன்பர் திருநாளைப் போவார்தம் புனிதச்சீரைப்

பாமேவு பலவகைய விசைப்பாட்டால் இனிமையுறப் பாடியீந்தான்

ஏமேவு கோபாலகிருஷ்ண பாரதியென்னும் இசைவல்லோனே

 

என்னும் சிறப்புப்பாயிரத்தை அக்கணமே இயற்றிக் கொடுத்தனுப்பி வைத்தார். தன்னால் தாமதம் ஏற்பட்டதற்கும் வீண் அலைச்சலைக் கொடுத்துவிட்டதற்கும் மீண்டுமொரு முறை வருத்தம் தெரிவித்தார். ஆயினும் பாரதியார் புன்னகை பூத்த முகத்துடன் ”எக்காலத்தில் எது நிறைவேற வேண்டுமோ, அப்போதுதான் அது நிறைவேறும். இப்போதாவது இதை உங்களிடமிருந்து பெற அருளிய நடராஜப் பெருமாளின் திருவருளை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்” என்று சொல்லி  விடைபெற்றார்.

அந்தப் பாயிரச் செய்யுளோடு நந்தனார் சரித்திரம் கலெக்டரின் முயற்சியால் வெகுவிரைவிலேயே புத்தகமாக வெளிவந்தது. அதற்கிடையில் பல ஊர்களில் அந்தச் சரித்திரம்  கதாகாலட்சேபமாக நிகழ்த்தப்பட்டுவிட்டது. ஒருமுறை சிதம்பரத்துக்கு வந்திருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறுமுக நாவலர் நந்தனார் சரித்திரத்தின் கீர்த்தனைகளைக் கேட்டு மகிழ்ச்சியடைந்து பாரதியாருடைய இசைஞானத்தையும் மொழிப்புலமையையும் கற்பனைத்திறனையும் பாராட்டிவிட்டு, அவருக்கு அன்பளிப்பாக பத்து ரூபாயை அளித்துவிட்டுச் சென்றார்.

நந்தனார் சரித்திரத்தைத் தொடர்ந்து இயற்பகை நாயனார் சரித்திரம், திருநீலகண்ட நாயனார் சரித்திரம், காரைக்கால் அம்மையார் சரித்திரம், ஞானச்சிந்து, ஞானக்கும்மி ஆகியவற்றையும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதிக்கீர்த்தனைகளையும் மாமி நாடகம் என்னும் நூலையும் இயற்றினார். இவற்றையெல்லாம் எழுதுவதற்காக அவர் ஆனந்ததாண்டவபுரத்தில் ஓராண்டுக்கு மேல் தங்கியிருந்தார். அப்போது தம் சீடர்களுக்கு அவர் தாம் இயற்றிய விடுதிக்கீர்த்தனைகளைக் கற்பித்தார்.  தமிழகத்தின் பல பகுதிகளுக்கு ஒரு சுற்று பயணம் செய்து எல்லாச் சரித்திரங்களையும் காலட்சேபங்கள் செய்து மக்களிடையில் பரப்பவேண்டும் என்று திட்டமிட்டிருந்த தருணத்தில் அவருக்கு ஆதரவாக விளங்கிய அண்ணுவையர் எதிர்பாராத விதமாக இயற்கையெய்தினார். தந்தையைப்போல அன்பு காட்டிய அவருடைய மறைவு அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கதாகாலட்சேப அன்பளிப்புகள் வழியாகக் கிடைத்த பணத்தையெல்லாம் சேர்த்துவைத்திருந்தார் பாரதியார். எளிமையாக வாழ்ந்ததால் அவர் முதுமையைத் தொட்ட காலத்தில் ஏறத்தாழ மூவாயிரத்தைந்நூறு ரூபாய் சேர்ந்திருந்தது. அதில் ஐநூறு ரூபாயை மட்டும் தன் செலவுக்கு வைத்துக்கொண்டு மூவாயிரம் ரூபாயை திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த சுப்பிரமணிய தேசிகரிடம் ஒப்படைத்தார். மாயூரம் சிவாலயத்தில் தாம் யோகம் செய்யும் இடத்தில் எழுந்தருளியுள்ள அகத்தீஸ்வரருக்கு நாள்தோறும் தயிரன்னமும் சம்பா அன்னமும் நிவேதனம் செய்து, தேசாந்திரிகளுக்கு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவருடைய விருப்பப்படி ஒவ்வொரு நாளும் தேசாந்திரிகளுக்கு நிவேதனம் வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார் தேசிகர்.

தாது வருஷத்தில் நேர்ந்த கொடிய பஞ்சத்தால் மாயூரத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் பலவகையான துன்பங்களை அடைந்தனர். அப்போது  மாயூரத்தில் நீதிபதியாக இருந்த வேதநாயகம் பிள்ளை தாமே பொருளுதவி செய்தும் தமக்கு அறிமுகமுள்ள செல்வந்தர்களிடம் பேசி பொருளுதவி செய்வித்தும் பல இடங்களில் கஞ்சித்தொட்டிகளைத் திறந்து ஏழைகளுக்கு ஒவ்வொரு நாளும் கஞ்சி கிடைக்க வழி செய்தார். பசித்துன்பத்தைப் போக்கும் அவருடைய செயல்களைப் பார்த்த பாரதியார் மனம் குளிர்ந்து அவரைச் சந்தித்துப் பாராட்டினார். மேலும் அவரைப் பாராட்டும் விதமாக ‘நீயே புருஷ மேரு’ என்னும் கீர்த்தனையையும் பாடினார். பாரதியார் இயற்றிய கீர்த்தனைகளில் இது ஒன்றே மனிதனை முன்வைத்துப் பாடிய பாடலாகும்.

முதுமைக்காலத்தில் அவரால் குரலெடுத்துப் பாடமுடியாதபடி அவருடைய குரலில் ஒரு நடுக்கம் வந்தமைந்தது. சிவனை நினைத்துப் பாடமுடியவில்லையே என்னும் வருத்தம் அவரை வாட்டியது.  ஒருநாள் தன்னைச் சந்திக்க வந்த ஒருவர் பிடில் வாசிப்பதைப் பார்த்ததும், அவரும் பிடில் வாசிக்கக் கற்றுக்கொண்டார். அவருடைய மனோவேகத்தின் காரணமாக சில நாட்களிலேயே அவர் பிடில் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றார். தன் மனம் நினைக்கும் பாடலை அந்தப் பிடில் வழியாக இசைவைத்து, அதையே இறைவன் முன் தன் மன்றாட்டாக ஒலிக்கவிட்டு மனநிறைவடைந்தார். 

கோபாலகிருஷ்ண பாரதியார் சிந்தையும் செயலும் ஒன்றென வாழ்ந்தவர். பொழுதெல்லாம் சிவபக்தியில் திளைத்தவர். தம் கீர்த்தனைகள் வழியாக சிவனின் பெருமையை உலகத்துக்கு உணர்த்துவதையே தன் வாழ்நாள் பணியெனக் கொண்டு மிக எளிய வாழ்க்கையை வாழ்ந்தார். அவருடைய முதுமைப்பருவத்தில் ஒருநாள் மகாசிவராத்திரி அன்று மாயூரநாதரைத் தரிசித்துவிட்டு சிவசிந்தனையுடன் படுக்கைக்குச் சென்றார். உறக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது.

 

 

கோபாலகிருஷ்ண பாரதியார் நாகப்பட்டினத்துக்கு அருகிலிருக்கும் நரிமணம் என்னும் சிற்றூரில் 1811இல் பிறந்தார். அவருடைய தந்தையார் ராமஸ்வாமி பாரதி. சங்கீதப்பயிற்சியுடைய அவருடைய முன்னோர்களைப் போலவே அவரும் சங்கீதத்தில் ஆழ்ந்த பற்று கொண்டிருந்தார். தமிழில் இறைவனைப் போற்றி இராக தாளங்களுடன் கீர்த்தனை இயற்றிய கீர்த்தனை முன்னோடிகளில் முக்கியமானவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இசைக்கலைஞர்களில் கர்நாடக இசைமுறையிலும் இந்துஸ்தானி இசைமுறையிலும் நல்ல பயிற்சி பெற்றவராகத் திகழ்ந்தவர் கோபாலகிருஷ்ண பாரதியார் ஒருவரே. அவருடைய நினைவாக ஆனந்ததாண்டவபுரத்தில் இன்றும் ஆண்டுதோறும் இசைவிழா நடைபெற்று வருகிறது. 1881இல் மறைந்தார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை உ.வே.சாமிநாத ஐயரும், சுத்தானந்த பாரதியாரும் பிரமீளா குருமூர்த்தி என்பவரும் எழுதியிருக்கின்றனர்.