Home

Sunday 9 June 2024

மகத்தான ரசிகர்

 

”சிவராத்திரி முடிஞ்ச பிறகு குளிர்காலம் சிவசிவான்னு மறைஞ்சி போயிடும்” என்று பெங்களூரில் பொதுவாகப் பேசிக்கொள்வார்கள். நான் முதலில் அதை ஏதோ காலம்காலமாக புழக்கத்தில் இருக்கும் ஒரு நம்பிக்கை என்றுதான் நினைத்தேன். ஆனால் அதில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் ஆணித்தரமான உண்மை என்பதை பெங்களூருக்கு வந்த ஒருசில ஆண்டுகளிலேயே புரிந்துகொண்டேன்.

எல்லாமே சொல்லிவைத்தது மாதிரி நடக்கும். சிவராத்திரிக்கு முதல் நாள் வரை மாலை ஆறு மணிக்கெல்லாம் அஸ்தமனமாகிக்கொண்டிருந்த சூரியன், சிவராத்திரிக்கு அடுத்த நாள் ஆற அமர ஆறரை வரைக்கும் அடிவானத்திலேயே வட்டமிட்டுக்கொண்டிருக்கும். காற்றில் அதுவரை கலந்துவந்த ஈரப்பதம் திடீரென இல்லாமலாகிவிடும். இலைகள் உதிரத் தொடங்கும். வீட்டிலிருக்கும் குளிராடைகள், கம்பளிகள், போர்வைகள் எல்லாவற்றையும் துவைத்து காயவைத்து மூட்டைகட்டி பரணில் ஏற்றிவிடுவார்கள். மருந்துக்குக்கூட குளிர் இருக்காது. வெப்பம். வெப்பம். வெப்பம். எங்கெங்கும் அதுவே நீக்கமற நிறைந்திருக்கும். ஒரே நாளில் இயற்கையின் கோலம் மாறிவிடும்.

சிவராத்திரி அன்று இரவு தேர் இழுக்கத் தொடங்கும் நேரத்துக்குச் சரியாக அரைமணி நேரம் மழை பொழியும். வழக்கமாக சிறு தூறலுக்கே ஓடி ஒளிகிறவர்கள் அன்று ஆனந்தமாக மழையில் நனைந்தபடி தேரை இழுப்பார்கள். அது முதல் மழை. அந்த மழைக்கு அனைவரும் சேர்ந்து அளிக்கும் மரியாதை அது. அதற்குப் பிறகு இரண்டுநாளுக்கு ஒருமுறை அல்லது மூன்று நாளுக்கு ஒருமுறை என அடுத்தடுத்து அரைமணி நேரம் அந்த மழை தொடர்ந்து பொழியும். அதுவரை நீடித்திருந்த வெப்பத்தை அந்த மழை தணித்துவிடும். தூங்கிவிடலாம். பிரச்சினை இருக்காது. அந்த மழை அப்படியே தொடர்ந்து யுகாதி வரைக்கும் பொழியும். கோடைக்காலம் வந்ததும் தெரியாமல் போவதும் தெரியாமல் போய் முடிந்துவிடும்.

அது ஒரு காலம். இன்று அப்படி இல்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய செய்தி. அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த சிவராத்திரி மழை இந்த முறையும் பொய்த்துவிட்டது. அடுத்தடுத்து ஒவ்வொருநாளும் வெப்பம் பெருகிக்கொண்டே சென்றது. பகல் வெப்பத்தைவிட இரவு வெப்பம்தான் மிகவும் கொடுமையானது.

கட்டிலில் படுப்பதை நிறுத்திவிட்டு முதலில் தரையில் படுக்கையை விரித்து படுக்கத் தொடங்கினேன். இரண்டுமூன்று நாட்களுக்குத்தான் அந்த ஏற்பாடு உதவியாக இருந்தது. பிறகு அதுவும்  வெப்பமாக இருந்ததால், படுக்கையைச் சுருட்டி வைத்துவிட்டு பாய் மீது போர்வையை மட்டும் விரித்து படுக்கத் தொடங்கினேன். இரண்டே நாளில் அதையும் வெப்பமென உடல் உணர்ந்தது. பிறகு போர்வையைச் சுருட்டி வைத்துவிட்டு வெறும் பாயில் படுத்தேன். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. பாயே இல்லாமல் வெறும் தரையில் படுப்போம் என ஒருநாள் ஏதோ கிறுக்குத்தனமாக ஓர் எண்ணம் நெஞ்சில் உதித்தது. அன்று இரவு தரையில் படுத்து உறங்கினேன்.

காலையில் எழுந்தபோது வழக்கமான உற்சாகமில்லை. களைப்பாக இருந்தது. பல் தேய்த்துவிட்டு சூடாக ஒரு தேநீர் அருந்தினால் சரியாகிவிடும் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் தேநீருக்குப் பிறகும் நிலைமை மாறவில்லை.

வாசலில் செய்தித்தாள் கொடுப்பவர் மணியடிக்கும் சத்தம் கேட்டது. எழுந்துபோய் கதவைத் திறந்தேன். வழக்கமாக இருவரும் குட்மார்னிங் சொல்லிக்கொள்வோம். அன்றும் சொன்னேன். ஆனால் என் குரல் எனக்கே கேட்கவில்லை. பலமுறை செருமி சரிப்படுத்திக்கொள்ள முயற்சி செய்தபோதும் என்னால் முழுமையாக குட்மார்னிங் சொல்லமுடியவில்லை. ”வீட்டுல மாத்திரை இருந்தா போடுங்க சார், இல்லைன்னா நிலவேம்பு கஷாயம் வச்சி குடிங்க. ரெண்டு வேளையில சரியாயிடும்” என்று சொல்லிவிட்டுச் சென்றார் செய்தித்தாள்காரர்.

என் மனைவி எழுந்துவந்ததும் விஷயத்தைச் சொன்னேன். நெற்றியில், கழுத்தில், முதுகில் எல்லாம் கைவைத்துப் பார்த்தார். “காய்ச்சல் இல்லை. தொண்டைதான் அடைச்சிகிச்சி. ஒருவேளை உள்சளியாவும் இருக்கலாம்” என்று பொதுவாகச் சொன்னார். பிறகு சிற்றுண்டிக்கு முன்னால் ஒருமுறை, சிற்றுண்டிக்குப் பிறகு ஒருமுறை என இருவேறு கஷாயங்கள் கொடுத்தார். அதற்கு ஒரு பலன் இருந்தது. அடுத்த ஒரு மணி நேரத்தில் கீச்சுகீச்சென்று குருவிக்குரலில் பேச முடிந்தது. ஆனால் பேசத் தொடங்கினால் கூடவே இருமலும் வந்தது.

அன்று மாலை நான் விட்டல்ராவைச் சந்திக்கவேண்டியிருந்தது. அவரிடமிருந்து பெற்று வந்த சில புத்தகங்களைத் திருப்பிக் கொடுக்கவேண்டியிருந்தது. சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்பதால் புறப்பட்டுச் சென்றுவிட்டேன்.

“வணக்கம் சார். எப்படி இருக்கீங்க?” என்று கேட்டபோது வெளிப்பட்ட குரலை வைத்தே அவர் கண்டுபிடித்துவிட்டார். “என்னாச்சி தொண்டைக்கு? திடீர்னு ஏன் இப்படி ஆச்சு?” என்று கேட்டார். நான் நடந்ததையெல்லாம் சொன்னேன். அவருக்கு வருத்தமாக இருந்தது.

“ராத்திரி நேரத்துல புழுக்கம் தாங்கலைன்னா எனக்கும் அப்படித்தான் தோணும் பாவண்ணன். நான் மெதுவா கட்டிலை விட்டு இறங்கி வந்து இந்த ஈசிசேர்ல சாஞ்சிடுவேன். ஃபேன அஞ்சில வச்சி ஓடவிட்டுட்டு அப்படியே கண்ண மூடிக்குவேன். ஏதோ ஒரு நேரத்துல அப்படியே தூங்கிடுவேன். பருவ மழை தொடங்கற வரைக்கும் சமாளிச்சிட்டோம்னா, அதுக்கப்புறம் இந்த வருஷத்தை சுலபமா தாண்டிடலாம்”

நான் எதையோ சொல்ல வாய் திறந்தேன். அதற்குள் இருமல் வந்துவிட்டது. “வேணாம் பாவண்ணன், வேணாம். நீங்க பேசாதீங்க. நான் பேசறேன். நீங்க சும்மா கேளுங்க. அது போதும்” என்று தடுத்தார் விட்டல்ராவ். அவர் சொல் எனக்கு ஆறுதலாக இருந்தது. “சரிங்க சார்” என்று தலையசைத்தபடி கீச்சுக்குரலில் சொன்னேன்.

“இந்தக் கோலத்துல உங்கள பார்க்கும்போது, இதே மாதிரியான கோலத்துல பல வருஷங்களுக்கு முன்னால நான் சந்திச்ச ஒரு எழுத்தாளருடைய ஞாபகம் வருது. அவரைப் பத்தி சொல்றேன் கேளுங்க” என்று உற்சாகத்தோடு தொடங்கினார் விட்டல்ராவ்.

ஆவலைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் “யார் சார் அவர்? அசோகமித்திரனா?” என்று வேகமாகக் கேட்டேன். கூடவே இருமல் வந்துவிடுவதுபோல தொண்டைக்கடியில் ஒரு கரகரப்பு எழுந்தது. எப்படியோ கமறியும் செருமியும் இருமலுக்கு வழிவிடாமல் தடுத்துவிட்டேன்.

“அசோகமித்திரன் இல்லை. க.நா.சு.”  என்று சொல்லிக்கொண்டே விட்டல்ராவ் இருக்கையிலிருந்து எழுந்துபோய் சமையலறைக்குள் சென்று ஒரு தம்ளர் வெந்நீர் கொண்டுவந்து கொடுத்தார். அதை வாங்கிப் பருகிய பிறகு தொண்டைக்கு சற்றே இதமாக இருந்தது. என் பையில் ஸ்டெரிப்ஸில்ஸ் இருந்தது. ஒன்றை எடுத்து நாக்கில் வைத்துக்கொண்டேன்.

“க.நா.சு.வா?” என்று ஆச்சரியம் ததும்ப அவரைப் பார்த்தேன்.

“டில்லிக்குப் போய் பல வருஷ காலம் இருந்துட்டு எண்பத்து நாலு எண்பத்தஞ்சி வாக்குல சென்னைக்குத் திரும்பி வந்து சில வருஷங்கள் தங்கியிருந்தாரு க.நா.சு.. தினமணி கதிர், குங்குமம்னு எல்லாப் பத்திரிகைகளுக்கும் அப்ப எழுதினாரு. பித்தப்பூ, கோதை சிரித்தாள் கதையெல்லாம் அப்ப வந்ததுதான். குங்குமம் ஆசிரியர் பாவை சந்திரன்தான் அவருக்கு மைலாப்பூர்ல வாடகைக்கு ஒரு வீடு பார்த்துக் கொடுத்தாரு. அப்ப நான் மைலாப்பூர் எக்சேஞ்ச்ல வேலை செஞ்சிட்டிருந்தேன். நேரம் இருக்கும்போது அவரைப் பார்த்து ரெண்டு மூனு மணி நேரம் பேசிட்டிருப்பேன். அப்படியே நடந்துபோய் ராயர் காப்பி கிளப்ல காப்பி சாப்பிடுவோம். அவரு பேசறத கேக்கறது ரொம்ப இனிமையான அனுபவம். படிச்சி தெரிஞ்சிகிட்ட பல விஷயங்களை நமக்குச் சொல்வாரு. ஒருநாள் அவரைப் பார்க்க போயிருந்தேன். வழக்கமா என்னைப் பார்த்ததுமே சிரிச்சிகிட்டே வாங்க வாங்கன்னு சொல்றவரு வாங்கவாங்கன்னு சொல்ற மாதிரி தலையை மட்டும் ஆட்டினாரு. என்னடா இது வரவேற்பு புதுதினுசா இருக்குதேன்னு நெனச்சிகிட்டேன். எனக்கு ஒன்னும் புரியலை. அதிர்ச்சியோடு என்ன சார், என்னாச்சின்னு கேட்டேன். அவர் உடனே விரலால வாயைத் தொட்டு பேச முடியலைன்னு சைகை செஞ்சார். என்னால அந்த சைகையைச் சரியாகப் புரிஞ்சிக்க தெரியலை. குழப்பத்தோடு அவரைப் பார்த்து என்ன சார் சொல்றீங்க, புரியலையேன்னு கேட்டேன்.”

“ம்”

”அந்த நேரத்தில் கதவுக்கு மறுபுறத்தில உட்கார்ந்திருந்த க.நா.சு.வின் மனைவி பேச முடியலையாம். தொண்டை கட்டிகிச்சி. அதை உங்களுக்கு விளக்கறதுக்காக சைகை செய்றாரு. சைகையைக்கூட ஒழுங்கா செய்யத் தெரியலை இவருக்குன்னு கொஞ்சம் இடிக்கிறமாதிரி கிண்டலா குரல் கொடுத்தாங்க. அதுக்கப்புறம்தான் எனக்கும் புரிஞ்சது. க.நா.சு.வை பார்க்க பாவமா இருந்தது. இருபத்தி நாலு மணி நேரமும் ஓயாம பேசிட்டே இருந்த ஒரு மனுஷன் ஒரு வார்த்தை கூட பேசமுடியாதபடி உட்கார்ந்திருக்கிறத பார்க்கிறதுக்கு பரிதாபமா இருந்தது. ஐயையோ, ஏன் சார் இப்படி ஆச்சு? குளுமையா ஏதாச்சிம் சாப்பிட்டீங்களான்னு பொதுவா விசாரிச்சேன். அவரால ஒரு வார்த்தை கூட பதில் சொல்லமுடியலை. அவுங்க மனைவி அவரைப் பத்தி எடக்குமுடக்கா பேசறத ஆனந்தமா ரசிச்சி கேட்டுகிட்டே, அவுங்க முகத்தையே பார்த்துட்டிருந்தாரு. ம், நீ சொல்லுங்கறமாதிரி அவங்க பக்கமா திரும்பி தலையை அசைச்சாரு”

என்னால் அந்தக் காட்சியை உடனடியாக மனத்துக்குள் ஓர் ஓவியமாக எழுதிப் பார்க்கமுடிந்தது. அந்த மாதிரியான சிக்கல்களில் சிக்கிய பல அனுபவங்கள் எனக்கும் உண்டு என்பதால், க.நா.சு சார்ந்த அனுபவத்தைக் கேட்க ஆவலோடு இருந்தேன்.

“இது குளுமை, இது வெப்பம்னு எதயாச்சிம் விட்டுவைக்கிற மனுஷனா இவரு? என்ன நாக்கோ அது? ஆதிசேஷன் மாதிரி ஆயிரம் நாக்கு.  எல்லாத்தயும் கொண்டா கொண்டான்னு உள்ள இழுத்துக்கும்னு அந்த அம்மா ஆரம்பிச்சாங்க. தன்னைப் பத்திதான் சொல்றாங்கன்னு தெரிஞ்சாலும் அத ரொம்ப சந்தோஷமா, ஏதோ கதை கேட்கிற குழந்தை மாதிரி முகத்தை வச்சிகிட்டு அவுங்களயே பார்த்தாரு க.நா.சு.”

“ம்”

“நாரத்தங்காய் தெரியுமில்லையா உங்களுக்குன்னு மாமி என்னைப் பார்த்து கேட்டாங்க. நல்லா தெரியுமே மாமின்னு சொன்னேன்.. ரெண்டு நாள் முன்னால இவரைப் பார்க்கிறதுக்காக வெளியூருலேர்ந்து ரெண்டு பேரு வந்தாங்க. ஒரு பை நிறைய நாரத்தங்காய் கொண்டுவந்து கொடுத்துட்டு போனாங்க. அவுங்க அந்தப் பக்கம் போனதுமே இவரு அந்தப் பையில இருந்த நாரத்தங்காய்கள ஒரு முறத்துல கொட்டினார். ஒவ்வொன்னும் நல்லா ஆரஞ்சுப்பழம் சைஸ்ல பெரிசா இருந்தது. நாரத்தங்காய் கூடவே சரிபாதி கொழிஞ்சிக்காயும் கலந்திருந்தது. யாரோ கடைக்காரன் அவுங்கள நல்லா ஏமாத்திட்டிருக்கான். ரெண்டுக்கும் வித்தியாசம் தெரியாம அவுங்களும் வாங்கியாந்திட்டாங்க. இருக்கறதுலயே பெரிய காயா பார்த்து நாரத்தங்காய்ல ரெண்டு, கொழிஞ்சிக்காய்ல ரெண்டு தனியா எடுத்தாரு. எதுக்குன்னு கேட்டேன். ஜூஸ் போடப்போறேன். உனக்கும் வேணுமான்னு கேட்டாரு. இந்த நேரத்துல எதுக்கு ஜூஸ், அப்படியே வைங்க, ஊறுகாய்க்கு ஆகும்னு சொல்லச்சொல்ல, சின்னப்புள்ளை மாதிரி இருக்கட்டும் இருக்கட்டும்னு சொன்னபடியே நாலையும் வெட்டி துண்டாக்கி ஒரு தம்ளர் நிறைய ஜூஸ் போட்டுட்டாரு. ஒரு விரலால தொட்டு நாக்குல வச்சிப் பார்த்தாரு. நல்ல புளிப்பா இருந்ததுபோல. நாலஞ்சி கரண்டி சர்க்கரையை அள்ளி போட்டு கலக்கி ஒரு சொட்டு கூட மிச்சம் வைக்காம குடிச்சி முடிச்சிட்டாரு. அதுக்கப்புறம்தான் அவர் முகம் மலர்ந்ததுன்னு சொல்லி நிறுத்தினாங்க. நான் திரும்பி க.நா.சு. முகத்தைப் பார்த்தேன். தனக்கும் அந்தக் கதைக்கும் சம்பந்தமே இல்லைங்கற மாதிரி மாமிய பெருமையா பார்த்திட்டிருந்தாரு அவரு.”

“தொண்டை கட்டிகிட்டதுக்கு அதுதான் காரணமா?” பொறுமையாக ஒவ்வொரு சொல்லாகக் கோர்த்து நான் அந்தக் கேள்வியை முன்வைத்தேன்.

“இதே கேள்வியைத்தான் நானும் மாமிகிட்ட கேட்டேன். இப்பதான் கதையே ஆரம்பிக்குது, இன்னும் மிச்சமிருக்கறது கதையையும் கேளுங்கன்னு மாமி அந்தக் கதையை அன்னைக்கு ஒரு புராணம் மாதிரி சொன்னாங்க. அதை என்னால மறக்கவே முடியாது.”

“என்னதான் நடந்தது?”

“ஆசைக்கு நாலு காயை எடுத்து ஜூஸ் போட்டு குடிச்சதோடு க.நா.சு. விட்டிருந்தா பரவாயில்லை பாவண்ணன். ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சி மறுபடியும் நாலு காயை எடுத்து இன்னொரு தரம் ஜூஸ் போட்டு குடிச்சிருக்காரு. அந்த கிறக்கத்துல அப்படியே கொஞ்ச நேரம் கண்ண மூடி தூங்கிட்டாரு. நாலு மணிக்கு எழுந்ததுமே வீட்டுலயே ஒரு காப்பி குடிச்சிருக்காரு. அப்புறம் கொஞ்ச நேரம் ஏதோ படிச்சாராம். அந்த நேரம் யாரோ ஒரு சிநேகிதக்காரங்க வந்திருக்காரு. வாய்யா வெளியே போகலாம்னு அவர அழச்சிட்டு ராயர் காப்பி கிளப்க்கு போயி காப்பி சாப்ட்டிருக்காரு. அப்புறம் கொஞ்ச தூரம் நடை. பேச்சு. திரும்பி வந்து மறுபடியும் ஒரு காப்பி. வீட்டுப் பக்கமா நடந்து வரும்போது தெருவோரத்துல கோன் ஐஸ் விக்கறவன் ஒருத்தன பார்த்திருக்காரு. அவன் வண்டிக்குப் பக்கத்துல நின்னு ஒரு கோன் ஐஸ் வாங்கி சாப்ட்டாராம். அவரு எதிர்பார்த்த மாதிரியே நல்லா ஜில்லுனு இருக்கவே, இன்னொரு ஐஸ்கிரீம் குடுப்பான்னு வாங்கி, அதயும் சாப்ட்டாராம். இப்படி ஒரு வகைதொகை இல்லாம சாப்ட்டா என்னாகும் சொல்லுங்க, வீட்டுக்குத் திரும்பி வந்த ரெண்டு மணி நேரத்துக்குள்ள தொண்டை கட்டிகிச்சி. அந்தக் கதையை கோவில் கதாகாலட்சேபம் மாதிரி நல்லா இழுத்து இழுத்து மாமி வக்கணையா சொன்ன விதம் அப்படியே ஒரு டாக்குமென்ட்ரி படம் மாதிரி என் கண் முன்னால இருக்குது.”

கேட்கக்கேட்க எனக்கு வாய்விட்டு சிரிக்கவேண்டும் போல இருந்தது.  அதே சமயத்தில் கட்டுப்பாடில்லாத சிரிப்பு எங்கே இருமலில் கொண்டுபோய் விட்டுவிடுமோ என நினைத்து அச்சமாகவும் இருந்தது. வாய்க்குள்ளேயே சிரித்துக்கொண்டேன். தொடர்ந்து கேட்பதற்காக “ம், அப்புறம்?” என்றேன்.

“எல்லாத்தயும் சொல்லிட்டு கடைசியா அந்த மாமி புத்தியே இல்லைங்க இவருக்குன்னு அவர் பக்கமா கையைக் காட்டி சொன்னாங்க. ஏதோ கோபத்துல சொல்றமாதிரி கொஞ்சம் அழுத்தம் கொடுத்து சொன்னாங்களே தவிர, ரொம்ப செல்லமாதான் சொன்னாங்க. அதைக் கேக்கறபோது எனக்குத்தான் அதிர்ச்சியா இருந்தது. ஆனா அந்த வார்த்தைய க.நா.சு. ஏதோ ஒரு நேஷனல், இன்டர்நேஷனல் அவார்ட யாரோ தனக்கு அறிவிக்கிறதை கேக்கறமாதிரி சந்தோஷமா லயிச்சி கேட்டுகிட்டிருந்தாரு. க.நா.சு.வைப் பார்த்து அப்படி ஒரு வார்த்தையை தைரியமா பேச  இந்த உலகத்துல மாமியால மட்டும்தான் முடியும்.

“புடிச்சதயெல்லாம் தேடித் தேடி படிக்கிற மாதிரி, புடிச்சத தேடித் தேடி சாப்புடறதுகூட ஒரு ரசனைதான் சார். என் கூட ஜே.இ.யா இருந்த ஒருத்தர் தினமும் காலையில டிபன் சாப்புட நாலு கடைக்கு போவாரு. முதல்ல ஒரு கடைக்குப் போய் ரெண்டு இட்லி சாப்புடுவாரு. அதுக்கப்புறம் இன்னொரு கடைக்கு போய் ஒரு தோசை சாப்புடுவாரு. மறுபடியும் இன்னொரு கடைக்கு போய் ஒரே ஒரு வடைமட்டும் வாங்கி சாப்புடுவாரு. கடைசியா ஒரு கடைக்குப் போய் ஒரு காப்பி சாப்புடுவாரு. ஒரே ஒரு நாள் நான் அவருகூட கம்பெனிக்கு போனேன். அடுத்தநாளே இது நமக்கு சரிவராதுன்னு ஒதுங்கிட்டேன். ஆனா அவரு தன்னை மாத்திக்கவே இல்லை. அவரு நெனச்சமாதிரியேதான் சாப்ட்டாரு.”

“நீங்க சொல்றது உண்மைதான் பாவண்ணன். க.நா.சு. அப்படிப்பட்ட ஆள்தான். எந்தக் கடையில எது நல்லா இருக்கும்ன்னு ஒரு பெரிய சர்வே எடுத்து வச்சிருப்பாரு. அப்படியே தேடித் தேடிப் போய் சாப்புடுவாரு. அப்படி ஒரு ரசனை அவருக்கு சின்ன வயசிலயே வந்திட்டுது”

“அந்த ரசனை கூட ஒரு வரம்தான் சார்”

“ஆமாம். அதுல சந்தேகமே இல்லை. அவருக்கு இந்த உலகத்துல எழுத்தத் தவிர வேறு எந்த கவனமும் கிடையாது. எழுத்தாளனாவணும்ங்கற எண்ணத்தோடு ஒரு டைப்ரைட்டர தூக்கிகிட்டு சென்னைக்கு வந்து சேர்ந்தவர் அவரு. ஒரு பெரிய ஆங்கில எழுத்தாளரா ஆகணும்ங்கறதுதான் இளமையில அவருடைய கனவா இருந்திருக்குது. ஆங்கிலத்துல நல்ல தேர்ச்சி இருந்தது. எழுதவும் முடிஞ்சது. இருந்தாலும், அவர் நெனைச்ச அளவுக்கு பெரிய எழுத்தாளரா ஆகமுடியலை. ஆனா, எந்தத் திட்டமிடலும் இல்லாமலேயே தமிழ்ல பெரிய எழுத்தாளரா வளர்ந்துட்டாரு. அது ஒரு தற்செயல். ஒரு தரம் அவருடைய கதை ஒன்னு நியூயார்க்கர் டைம்ஸோ என்னமோ, ஒரு வெளிநாட்டு பத்திரிகையில வெளிவந்தது. அவுங்க அவருக்கு சன்மானமா எழுபது டாலர் அனுப்பினாங்களாம்.”

“எழுபது டாலரா?”

“ஆமாம். அந்த காலத்துல அது ஒரு பெரிய தொகை. ஆனா, க.நா.சு. அந்தப் பணத்தை வாங்கி என்ன செஞ்சாரு தெரியுமா? தெனமும் ரெண்டு வேளை மசால்தோசை, காப்பி சாப்ட்டே செலவு செஞ்சிருக்காரு”

“குடும்பத்துக்கு ஒன்னும் செய்யலையா?”

“குடும்பத்துக்கா? இந்தக் கதையை எனக்கு சொன்னதே மாமிதான். டாலரை ரூபாயா மாத்திட்டு வந்ததும் ஒரு அஞ்சி ரூபாயை எடுத்து மாமிகிட்ட கொடுத்து இப்ப இதை வச்சிக்கோ, நான் கேக்கற சமயத்துல கொடுன்னு சொல்லி கொடுத்தாராம். மிச்சத்தையெல்லாம் மாசம் முழுக்க மசால் தோசை வாங்கி சாப்ட்டே கரைச்சிட்டாராம்”

ஒரு கணம் அதைக் கேட்டு உறைந்துவிட்டேன். அடுத்த கணமே புன்னகை வந்துவிட்டது. உலகமே பணத்தை மதித்து, பணத்தை தெய்வமாக மதித்துக் கொண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு தோசை வாங்கும் அளவுக்குத்தான் உனக்கு மதிப்பு என்று அவர் மனம் பணத்தைப் பார்த்து காலமெல்லாம் சொல்லாமல் சொல்லிக்கொண்டே இருந்ததுபோலத் தோன்றியது. உடனே அதை விட்டல்ராவிடம் தெரிவித்தேன். அவரும் அதைக் கேட்டு “அப்படியும் இருக்கலாம். அப்படி நினைக்கக்கூடிய மனிதர்தான் அவர்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.

க.நா.சு.வை நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால் சுந்தர ராமசாமி முதல் பாரதி மணி வரை பல ஆளுமைகள் வழியாக அவரைப் பற்றிய தகவல்களைக் கேட்டுக்கேட்டு ஒரு சித்திரத்தை என் நெஞ்சில் உருவாக்கி வைத்திருக்கிறேன். விட்டல்ராவ் வழியாக அறிந்துகொண்ட தகவல் அச்சித்திரத்தை மேலும் ஒளிகொள்ள வைத்தது.

”பெரிய ரசிகர்தான் சார் அவர்” என்று கீச்சுக்குரலில் சொன்னேன். அதைச் சொல்லாமல் இருக்கமுடியவில்லை. “உண்மைதான் பாவண்ணன். அதுல சந்தேகமே இல்லை” என்றார் விட்டல்ராவ்.

 

(அம்ருதா – ஜூன் 2024)