Home

Sunday 16 June 2024

கூடுவிட்டுக் கூடு பாயும் கலைத்திறன் வாய்ந்தவனாக மொழிபெயர்ப்பாளன் விளங்கவேண்டும் - கண்ணையன் தட்சிணாமூர்த்தி நேர்காணல்

 

(அசாமைச் சேர்ந்த எழுத்தாளரான மமாங் தய் ஆங்கிலத்தில் எழுதிய நாவலை ‘கருங்குன்றம்’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தமைக்காக சாகித்திய அகாதெமி வழங்கும் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருதை(2023)  பெற்றவர் கண்ணையன் தட்சிணாமூர்த்தி. அவர் ஒருங்கிணைந்த அந்நாளைய தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திருமருகல் என்னும் சிற்றூரில் கண்ணையன் – சிங்காரவள்ளி இணையருக்கு மூத்த மகனாக 1962இல் பிறந்தார். புகுமுக வகுப்பு வரையில் தமிழ்வழியிலேயே கல்வி  கற்ற அவர் பொருளாதாரத்திலும் தமிழ் இலக்கியத்திலும் முதுகலைப் பட்டங்களும் சட்டவியலில் இளநிலைப்பட்டமும் பெற்றார். இந்திய செய்திப்பணியில் இளநிலை அலுவலராகப் பணியாற்றிய காலத்தில் ஆங்கிலச்செய்திகளை உடனுக்குடன் தமிழில் மொழிபெயர்த்ததன் வழியாக அடைந்த அனுபவம் மெல்ல மெல்ல பல துறைசார் நூல்களையும் புனைவுநூல்களையும் மொழிபெயர்க்கும் ஆற்றல் கொண்டவராக மலர வைத்தது. 

புதுச்சேரி வானொலி நிலையத்திலிருந்து மூத்த அதிகாரியாக பணிநிறைவு பெற்ற கண்ணையன் தட்சிணாமூர்த்தி திருச்சியில் வசித்துவருகிறார். வாழ்க்கை வரலாறு, சட்டவியல், கல்வியியல், அறிவியல், , வாழ்வியல், சிறுகதைகள், நாவல்கள் எனப் பல வகைமைகளில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். )


தமிழ்வழிக்கல்வி மேலோங்கியிருந்த காலத்தில் பள்ளிப்படிப்பை முடித்த தலைமுறையைச் சேர்ந்தவர் நீங்கள்.  சொந்த ஆர்வத்தின் காரணமாகவே ஆங்கில மொழியறிவை வளர்த்துக்கொண்டு தேர்ச்சி பெற்று, ஒரு மொழிபெயர்ப்பாளராக கால்நூற்றாண்டுக்கும் மேலாக செயல்பட்டு வந்திருக்கிறீர்கள். ஆங்கில மொழியில் தேர்ச்சி பெறும் ஆர்வம் உங்களுக்கு எப்படிப் பிறந்தது? உங்களுடைய மொழியாளுமையை எப்படி வளர்த்துக்கொண்டீர்கள்?

என் பள்ளிப்படிப்பை முழுக்க முழுக்க தமிழ்வழியிலேயே படித்தேன். எல்லோரையும் போல ஆங்கிலத்தை நான் ஒரு பாடமாக மட்டுமே படித்தேன். அந்தக் காலத்தில் மற்ற பாடங்களைவிட எனக்குப் பிடிக்காத ஒரே வகுப்பு ஆங்கில வகுப்புதான். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால்,  ஆங்கிலம் எனக்கு வேப்பங்காயாகக் கசந்தது.  ஆங்கிலப் பாடத்தில் எந்த மாணவரும் தோல்வியடைந்துவிடக் கூடாது என்பதற்காகவும் தேர்வுகளை வெற்றிகரமாக எழுத உதவும் விதமாகவும் சில முக்கியமான பாடங்களுக்குக் கட்டுரைகளைக் கரும்பலகையில் எழுதிப் போடுவார் ஆசிரியர். அந்தக் கட்டுரைகளை ஒருவிதத்தில் சர்வரோக நிவாரணி என்றே சொல்லவேண்டும். அந்தக் கட்டுரைகளை மட்டும் மனப்பாடமாகப் படித்து வைத்துக்கொண்டால் போதும். இருபது வரிகள் அளவுக்கு அந்தக் கட்டுரையை எழுதினால், அது பத்து மதிப்பெண் கேள்விக்கான விடையாகிவிடும். தேவையான ஒரு பத்தியை மட்டும் எழுதினால் அது ஐந்து மதிப்பெண் கேள்விக்கான விடையாகிவிடும்.  அதைத் தவிர, ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் கேள்விகளுக்கும் அந்தக் கட்டுரையிலேயே ஏதாவது ஒருசில வரிகளில் பதில் இருக்கும். அந்த மாதிரி ஐந்து அல்லது ஆறு கட்டுரைகளை மனப்பாடம் செய்துவைத்துக்கொண்டாலே போதும். தேர்ச்சி பெற்றுவிடலாம். ஆனால் மனப்பாடம் செய்வது சாதாரண வேலையில்லை. அவற்றுடன் முட்டி மோதவேண்டும்.  அந்த அளவுக்குத்தான் அப்போது என் ஆங்கில அறிவு இருந்தது.

ஒன்பது, பத்து வகுப்புகளுக்குப் போன பிறகு எங்களூரில் இருந்த சிறிய நூலகத்துக்குச் செல்லத் தொடங்கினேன். அங்கே ஆங்கிலச் செய்தித்தாட்கள் வந்தன. வார, மாத இதழ்களையெல்லாம் படித்துமுடித்த பிறகு, அவற்றை எடுத்து மேலோட்டமாகப் புரட்டிப் பார்ப்பேன். அப்போது தமிழில் வரும் செய்திகளே  ஆங்கிலத்திலும் வருவதைப் புரிந்துகொண்டேன். உடனே இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கினேன். அக்காலத்தில் தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் இரு பத்திரிகைகளும் ஒரே மாதிரியான செய்திகளோடு வரும். ஒப்பிட்டுப் படிக்க அந்தப் பத்திரிகைகள் எளிதாக இருந்தன. தமிழில் படித்துவிட்டு ஆங்கிலத்தில் படித்தபோது, ஆங்கிலத்தை எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு சிக்கலான கணக்கை விடுவிக்க உதவும் சூத்திரத்தைக் கண்டுபிடித்துவிட்ட மாதிரி நான் மனத்துக்குள் மகிழ்ச்சியுற்றேன். ஒவ்வொரு தலைப்புச் செய்தியையும் ஒப்பிட்டுப் பார்த்து தமிழில் வழங்கும் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களைக் கண்டுபிடித்து மனத்தில் பதியவைத்துக்கொண்டேன். அந்த வழியிலேயே கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலத்தைக் கற்கத் தொடங்கினேன். பட்டப்படிப்பை முழுக்கமுழுக்க ஆங்கில வழியில் படிக்க வேண்டியிருந்தது. நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட பிரதான பாடம் பொருளாதாரம். கல்லூரிக்குச் சென்ற முதல் நாளே என் கண்கள் சுழன்றன. எனக்கு மிகவும் அச்சமாக இருந்தது. அப்போது நான் பிற்பட்டோர் நலத்துறையினர் நடத்திய மாணவர் விடுதியில் தங்கியிருந்தேன். பொருளாதாரத்தை தமிழ் வழியாகப் படித்த மாணவர்களைச் சந்தித்து, அவர்களுடைய புத்தகங்களை வாங்கிப் படித்து, வழக்கம்போல ஒப்பிட்டுப் பார்த்து ஆங்கிலப் புத்தகத்தின் உள்ளடக்கங்களைப் புரிந்துகொண்டேன். என்னுடைய ஆங்கில அறிவு என்பது ஆங்கில இலக்கியத்தின் வழியாகப் பெற்றுக்கொண்டதல்ல. வகுப்பறைப் பாடங்களைப்  புரிந்துகொள்ளும் தேவைக்காக நானே கண்டுபிடித்த ஒப்பிட்டு அறியும் வழிமுறையின் மூலம் பெற்றதாகும்

 

உங்கள் பள்ளிக்காலத்திலும் கல்லூரிக்காலத்திலும்  வாசிப்புக்கு இசைவான சூழல் இருந்ததா? உங்கள் நண்பர்களும் ஆசிரியர்களும் உங்களுக்கு உதவியாக இருந்தார்களா? அந்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

பள்ளியில் படிக்கும் காலத்தில் எனக்கு எவ்விதமான வாசிப்புப் பயிற்சியும் உருவாகவில்லை. ஆசிரியர்களின் ஆலோசனைகளுக்குச் செவிசாய்க்கும் அளவுக்கு எங்கள் குடும்பச்சூழல் இடமளிக்கவில்லை. எங்கள் அப்பா வீட்டோடு ஒரு மளிகைக்கடை நடத்திவந்தார். பள்ளிக்குச் சென்றுவந்த நேரம் போக, எஞ்சிய நேரம் முழுக்க அவருக்கு உதவியாக கடையில் வேலை செய்யவேண்டியிருந்தது. கல்லூரிக்குச் சென்ற பிறகுதான் சிறிது ஓய்வு கிடைத்தது. அப்போது திருவாரூரில் செயல்பட்டு வந்த இயற்றமிழ்ப் பயிற்றகம் என்னும் அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் வழியாக தனித்தமிழ் மீது ஆர்வம் பிறந்தது. இலக்கணப்பிழை இல்லாமல் தமிழில் பேசும் பழக்கம் ஏற்பட்டது.  அதனால் பிற மாணவர்களின் கிண்டல் சொற்களுக்கு எளிதான இலக்காக நான் அகப்பட்டுக்கொண்டேன். அப்போது கவிதை எழுதும் ஆர்வமும் பிறந்தது. கவிஞர் மேத்தாவின்   கண்ணீர்ப்பூக்கள் தொகுதி எனக்கு உத்வேகம் அளித்தது.  பாரதிதாசன் கவிதைகளையும் விரும்பிப் படித்தேன். பல கவிதைகளை மனப்பாடமாக படித்துவைத்திருந்தேன். அதைத் தொடர்ந்து உரைநடைப் படைப்புகளையும் தேடி எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, தி.ஜானகிராமன், ஜெகசிற்பியன், சுஜாதா ஆகியோரின் படைப்புகளை ஒவ்வொன்றாகத் தேடி எடுத்துப் படித்தேன்.

இலக்கியப்படைப்புகளை மொழிபெயர்த்ததைவிட பிற துறைசார் நூல்களை மிகுதியான அளவில் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். துறைசார் நூல்கள் உங்களுடைய மொழிவளத்தைச் செழுமைப்படுத்திக்கொள்ள பெரிதும் உதவியிருப்பதை என்னால் உணரமுடிகிறது. அந்த ஆர்வத்தை எப்படி வளர்த்துக்கொண்டீர்கள்?

முதுகலைப்பட்டம் படிக்கும் காலத்தில் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் பெற்ற வெற்றியின் காரணமாக படிப்பு முடித்த கையோடு ஒரு தொடக்கநிலை வேலை கிடைத்தது.  தொடர்ந்து படிப்பதற்கும் சென்னையிலேயே தங்கி வேறு தேர்வுகளை எழுதுவதற்கும் அந்தச் சம்பளம் எனக்குத் தேவையாக இருந்தது. அப்படி எழுதிய ஒரு போட்டித் தேர்வில் கிட்டிய வெற்றியின் விளைவாக இந்திய செய்திப் பணியின் கீழ் பத்திரிகை தகவல் அலுவலகத்தில் எனக்கு வேலை கிடைத்தது. அங்கே மொழிபெயர்ப்புதான் என்னுடைய முக்கியமான வேலை. இந்திய அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள், திட்டங்கள், அமைச்சர்களின் அறிவிப்புகள், நாடாளுமன்றத்தின் கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள் போன்றவை செய்திக்குறிப்புகளாக ஆங்கிலத்தில் எங்களுக்கு வந்து சேரும். அவற்றை உடனுக்குடன் மொழிபெயர்த்து மாநிலத்தில் உள்ள வெவ்வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும். மருத்துவம், கலை, பண்பாடு, கல்வியியல், சட்டவியல், அறிவியல் என பல துறை சார்ந்த கட்டுரைகளும் எங்களுக்கு அவ்வப்போது வருவதுண்டு. அவற்றையும் மொழிபெயர்த்து அனுப்புவேன். இப்போது யோசித்துப் பார்த்தால், அவையெல்லாம்தான் என் மொழிபெயர்ப்பு ஆற்றலை வளர்த்துக்கொள்ளவும் மொழியைத் திறம்படக் கையாளவும் உதவியாக இருந்திருக்கின்றன என்று தோன்றுகிறது.  

எனக்கிருந்த தனித்தமிழ் ஆர்வத்தின் காரணமாக, மொழிபெயர்ப்பில் பிறமொழிக் கலப்பின்றி எழுதவே முயற்சி செய்தேன். ஒருமுறை ‘தேசிய ஜவுளி கார்ப்பரேஷன்’ என எழுதிவந்த பழக்கத்தை மாற்றி ‘தேசிய துகில் கழகம்’ என்று எழுதி அனுப்பிவைத்தேன். ஒரு பத்திரிகை அலுவலகத்திலிருந்து ஒருவர் என்னை  தொலைபேசியில் அழைத்து “என்னய்யா, துகில் உரிகிறீர்களா?” என்று கிண்டல் செய்தார். ஒருமுறை Independence Day என்பதை விடுதலைநாள் என்று மொழிபெயர்த்து அனுப்பி வைத்தேன். எங்கள் உயர் அதிகாரியே அதை ஆட்சேபித்தார். சுதந்திர தினம் என என்பதுதான் சரி; Liberation Day என்பதுதான் விடுதலை நாள் என்றார். செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் நூல்வெளியீட்டுத்துறை (பப்ளிகேஷன் டிவிஷன்),7 சார்பாக அந்நாளைய  திட்டக்கமிஷன் சார்பாக ஆங்கிலத்தில் யோஜனா என்னும் இதழை வெளியிட்டு வந்தது. தற்போது அது மாத இதழாக மாறிவிட்டது.  தமிழில் திட்டம் என்று் பெயர். தமிழில் வெளியான திட்டம் இதழுக்கும்  நான் பல கட்டுரைகளை மொழிபெயர்த்துக் கொடுத்தேன்.  ஒருமுறை சூரிய ஒளி மின்சாரம் பற்றிய கட்டுரையில் ‘குக்கர்’ என்பதை ‘அடிசில் ஆக்கி’ என்று மொழிபெயர்த்து எழுதினேன். ஆனால் இதழாசிரியர் அதை ஏற்கவில்லை.  பிறகு நான் ‘சமையற்கலம்’ என திருத்திக் கொடுத்தேன். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வானொலிப் பணிக்குச் சென்ற பிறகு, இதுமாதிரியான தனித்தமிழ்ச் சொல்லாக்க முயற்சிகளை நானே நிறுத்திவிட்டேன். வானொலி நிகழ்ச்சிகளை மக்கள் பெரும்பாலும் காதால் கேட்கிறார்கள். அவர்களுக்குப் பழக்கமான சொல், அல்லது எளிதில் புரியும் சொல் மட்டுமே நம் ஒலிபரப்பின் நோக்கத்தை நிறைவேற்றும் என்ற தெளிவு பிறந்தது. 

அக்காலத்தில் ஜனாதிபதி,  உப-ராஷ்டிரபதி, ராஜாங்க மந்திரி, லோக்சபா, ராஜ்யசபா, பிராந்திய, போன்ற சொற்களே அதிக அளவில்  பத்திரிகை தகவல் அலுவலக செய்திக் குறிப்புகளில் இடம்பெற்று வந்தன.  அவற்றுக்கு, அப்போதே புழக்கத்தில் வந்திருந்த நல்ல தமிழ் சொற்களை என்னுடைய மொழிபெயர்ப்பில் பயன்படுத்தினேன். என்னோடு பணிபுரிந்த சுதா, கோவிந்தராசன் போன்றோர்களுக்கும் அதில் ஆர்வம் இருந்ததால் வடமொழிக் கலப்பிலான சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற் பட்டியல் ஒன்றைத் தயாரித்து வைத்துக்கொண்டு அதையே பயன்படுத்தினோம்.

நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் உங்கள் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளது. அவை சார்ந்த உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறீர்களா?

பத்திரிகை தகவல் அலுவலகத்தில் பணிபுரிந்த போது நேஷனல் புக் டிரஸ்ட்டின் தமிழ்ப் பதிப்பாசிரியர் சுப்புலட்சுமி என்பவருடைய அறிமுகம் கிடைத்தது. என் மொழிபெயர்ப்புப் பணிகளைப்பற்றி அறிந்த அவர் THE NATIONAL CULTURE OF INDIA என்னும் ஆங்கில நூலை மொழிபெயர்த்துக் கொடுக்கும்படி கேட்டார். நானும் அதை சிரத்தையோடு மொழிபெயர்த்துக் கொடுத்தேன். என் மொழிபெயர்ப்பு அவர்களுக்கு நிறைவை அளித்தது. ஆனால் அது நூல்வடிவம் பெற இரு ஆண்டுகள் தேவைப்பட்டன. அத்துறையின் செயல்பாடு அப்படி. தொடர்ந்து OUR CONSTITUTION என்ற நூலை மொழிபெயர்க்கும்படி கொடுத்தார்கள். நான் சட்டவியல் பட்டமும் படித்திருந்ததால் மிகவும் ஈடுபாட்டோடு அந்நூலை மொழிபெயர்த்தேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்போது திருச்சியில் சட்டக் கல்லூரி பேராசிரியராக இருந்த நிலாமுதீன் என்பவர் தமிழ்வழியில் படித்த மாணவர்களிடம் CONSTITUTION LAW என்னும் தாளுக்காக அந்தப் புத்தகத்தைப் பரிந்துரைக்கும் அளவுக்கு, நல்ல வரவேற்பு இருந்தது.  போட்டித் தேர்வு எழுதிய பலருக்கும் அந்நூல் உதவியாக இருந்தது. நேஷனல் புக் டிரஸ்ட் என்னை ஒரு நம்பகமான மொழிபெயர்ப்பாளராகக் கருதியதால் அவ்வப்போது மொழிபெயர்ப்புப் பணிகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தனர். அவை அனைத்தும் பல துறை சார்ந்த நூல்களாக இருந்தன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் அமைந்த இலங்கை எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுதியொன்றை மொழிபெயர்க்கும் பணியை அளித்தனர். அதுவே அவர்களுக்காக நான் மொழிபெயர்த்த முதல் படைப்பிலக்கிய நூலாகும். ‘உறவுப்பாலம் – இலங்கைச்சிறுகதைகள்’ என்னும் தலைப்பில் அது 2014ஆம் ஆண்டில் வெளிவந்தது.

இருவித நூல்வரிசைகளையும் வெற்றிகரமாக மொழிபெயர்ப்பவராக நீங்கள் இருக்கிறீர்கள்? இருவிதமான மொழிபெயர்ப்புகளில் நீங்கள் காணும் வேறுபாடு என்ன? எது அதிக உழைப்பைக் கோருவதாக இருக்கிறது? எது உங்களுக்கு மனநிறவை அளிப்பதாக இருக்கிறது?

புனைவுகள், புனைவுகள் அல்லாதவை என்ற இருபெரும் வகைமைகளில் புனைவுகளை மொழிபெயர்ப்பதுதான் மிகவும் உழைப்பைக் கோருவது என்பதில் ஐயமில்லை.  புனைவிலக்கியங்களில் ஊடும் பாவுமாக விரவி நிற்கும் படைப்பாளியின் ஆழ்மன ஓட்டத்தைக் கூடுதலோ குறைச்சலோ இல்லாமல் மொழிபெயர்க்க வேண்டும். அதுவே சரியான மொழிபெயர்ப்பு. கூடு விட்டுக் கூடு பாயும் கலைத்திறன் வாய்ந்தவனாக மொழிபெயர்ப்பாளன் விளங்கவேண்டும்.

ஜெர்ரிபிண்டோ ஆங்கிலத்தில் எழுதிய EM AND THE BIG HOOM கிராஸ் வேர்ட் விருது போன்ற பல விருதுகளைப் பெற்ற படைப்பாகும்.  அந்தக் கதையில் தற்கொலைக்கு முயற்சி செய்தபடியும் தாறுமாறாகப் பேசியபடியும் கற்பனையுலகில் சில நேரம் எதார்த்த உலகில் சில நேரம் என மாறிமாறி சஞ்சரித்தபடியும் இருக்கும் தன்னுடைய தாய் எவ்வாறு அந்த நிலைக்கு  ஆளானாள் என ஆராயத் தொடங்கும் மகன் மெல்ல மெல்ல தன் பெற்றோரின் காதல் வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ளத் தொடங்குகிறான். இருதுருவ மனநோயாளியான தன்னுடைய தாயே அந்த நாவலின் பிரதான பாத்திரமாக உருவெடுத்ததாக அந்த நாவலாசிரியர் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.  அதே போன்ற அனுபவம் எனக்கும் இருந்ததால் அந்த நாவலைத் தமிழில் மொழிபெயர்த்தேன். இதுவரை நான் மொழிபெயர்த்த நூல்களில் என மனத்துக்கு மிகவும் நெருக்கமானது இந்தப் புத்தகமே.

 

சிற்சில சமயங்களில் ஓர் ஆங்கிலச் சொல்லுக்கு நேர்ப்பொருள் வேறொன்றாக இருந்தாலும் விவரிக்கப்படும் சூழல் சார்ந்து புதிதாக ஒரு சொல்லை உருவாக்கிப் பயன்படுத்தவேண்டிய நிலை ஏற்படும். ஒரே ஒரு சொல்லைக் கண்டுபிடிக்க பல நேரங்களில் மணிக்கணக்கில் தலையை உடைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் அவ்வளவு துன்பமும் பொருத்தமான ஒரு சொல்லைக் கண்டுபிடிக்கும்போது காணாமல் போய்விடும். பிற்காலத்தில் நினைத்து நினைத்து  மகிழ்ச்சியடையும் தருணங்களாக அவை நம் நினைவில் நீடிக்கும். உங்கள் மொழிபெயர்ப்பில் அத்தகு தருணங்கள் நினைவிலிருக்கிறதா?

நீங்கள் சொல்வது உண்மைதான். எனக்கும் அத்தகு அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு. ஒருசில தருணங்களை மட்டும் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.  WHEN THE CHIEF JUSTICE WAS PRESENT IN THE COURT என்று தொடங்கும் வாக்கியத்தை, பொதுவாக அனைவரும் தலைமை நீதியரசர் நீதிமன்றத்தில் இருந்தபோது என்று எழுதிவிடுவார்கள்.  PRESENT என்பதை இருந்தபோது என எழுதுவதில் பிழை இல்லை. ஆனாலும் இங்கு நீதியரசரைப் பற்றிக் குறிப்பிடுகிறோம் என்பதை உணர்த்த ஒரு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதை அச்சொல் வழியாகவே நிகழ்த்தவேண்டும். எனவே நான் அதை தலைமை நீதியரசர் நீதிமன்றத்தில் வீற்றிருந்தபோது  என்று எழுதினேன். எதையும் கூட்டவில்லை, குறைக்கவும் இல்லை. ஆனால் ஒரு புதிய சொல் அந்த வாக்கியத்துக்கு ஒரு மிடுக்கை அளிப்பதைப் பார்க்கலாம்.  DEMOCRACY:  80 QUESTIONS AND ANSWERS என்னும் நூலில் DEMOCRACY என்னும் சொல்லுக்கு ஜனநாயகம் என்று எழுதலாம். ஆனால் நான் அதை மக்களாட்சி என்னும் சொல்லால் குறிப்பிட்டேன். அதே புத்தகத்தில் ஓரிடத்தில் IT IS MORE DEMOCRATIC என்னும் வாக்கியம் எதிர்ப்பட்டது. அங்கே  ‘மிகவும் ஜனநாயகமானது’ என்று  எளிதாக எழுதி விட முடியும். ஆனால், ஒரு கலைச்சொல்லை  நூல் முழுக்கவும் ஒரே மாதிரியாக எழுத வேண்டும் என்பதால் ஜனநாயகம் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்ற நிலையில், ‘மக்களாட்சி நெறி மிக்கது’ என்று எழுதினேன். சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கும்போது வேறுபடும் மொழியழகை நாம் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

சரத்பவாருடைய வாழ்க்கை வரலாற்று நூலில் சோனியாகாந்திக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தைப்பற்றிய குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. ஒரு வரியில் அவர் YOUR GRAND FATHER IN LAW என்று எழுதிச் செல்கிறார்.  FATHER IN LAW – மாமனார். GRAND FATHER – தாத்தா. GRAND FATHER IN LAW என்பதைத் தமிழில் எப்படி எழுதுவது? ‘உங்கள் மாமியாரின்  தந்தை’ என்று மூலநூல் கருத்துக்கு ஏற்பத் தமிழில் எழுதினேன். இப்படி ஏராளமான தருணங்கள் உள்ளன.

பல நல்ல மொழிபெயர்ப்புகளை அளித்திருக்கிறீர்கள். ஒருவகையில் படைப்புகளின் நுட்பமான செயல்பாடுகள் குறித்து உங்களுடைய புரிதலும் இப்போது மேம்பட்டிருக்கலாம். மொழிபெயர்ப்பை விடுத்து ஒரு கதையையோ அல்லது நாவலையோ சொந்தமாக எழுதிப் பார்க்கலாம் என எப்போதாவது உங்களுக்குத் தோன்றியதுண்டா? எழுதியிருக்கிறீர்களா?

கவிதைகள் மீது நாட்டம் பிறந்த இளமைக்காலத்தில் சில மரப்புக்கவிதைகளை எழுதியிருக்கிறேன். சில சிறுகதைகளையும் எழுதிப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவையெல்லாம் சின்னஞ்சிறு முயற்சிகள். வானொலியில் பணியாற்றியபோது பலவிதமான நிகழ்ச்சிகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்திருக்கிறேன். திருச்சி, கொடைக்கானல் நிலையங்களில் நான் எழுதி வழங்கிய நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அவையனைத்தும் நெஞ்சில் நிறைந்திருக்கும் இனிய நினைவுகள். அவ்வளவுதான். என்னைப் பொருத்தவரையில் புனைவுகளை மொழிபெயர்த்து எழுதும் அனுபவத்தையே புனைவைப் புதிதாக எழுதும் அனுபவமாக உணர்கிறேன்.  நானே மூல ஆசிரியராக மாறித் தமிழில் அவர் எழுதினால் எப்படி எழுதுவாரோ அதைப்போல நான் எழுதுவதாக நினைத்துக்கொள்கிறேன். அதுவே எனக்குப் பேரின்பமாகவும் நிறைவாகவும் இருக்கிறது.

பிற மொழிகளில் மெச்சத்தக்கவையாக உள்ள இலக்கியச்செல்வங்களை தாய்மொழிக்குக் கொண்டுவரும் மொழிபெயர்ப்பாளர்களுடைய பங்களிப்பு மகத்தான ஒன்று. பல ஆண்டுகள் கடந்தாலும் மூல ஆசிரியர்களின் பெயர்களைப் போலவே மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்களும் இந்த மண்ணில் நிலைத்திருக்கின்றன. சத்தியசோதனை புத்தகத்தை எழுதிய மகாத்மா காந்தியின் பெயரோடு இணைந்து அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மகாதேவ தேசாயின் பெயரும் தமிழில் மொழிபெயர்த்த ரா.வேங்கடராஜுலுவின் பெயரும் இன்றளவும் நிலைத்திருக்கின்றன. அந்த வரிசையில் கருங்குன்றம் நாவல் மொழிபெயர்ப்பு வழியாக உங்கள் பெயரும் நிலைத்திருக்கும் ஓர் அடையாளமாகிவிட்டது.  எதிர்காலத்தில் நீங்கள் மொழிபெயர்க்க விரும்பும் புத்தகங்கள் என்னென்ன?

இதுவரை நான் மொழிபெயர்த்துள்ள புத்தகங்களில் பெரும்பாலானவை என்னுடைய தேர்வுகளே அல்ல. நேஷனல் புக் டிரஸ்ட் என்னென்ன புத்தகங்களைத் தமிழில் கொண்டுவர வேண்டும் என நினைத்தார்களோ, அவற்றையே நான் மொழிபெயர்த்தேன். தமிழ்நாடு பாடநூல் கழகமும் அருட்செல்வர் மொழிபெயர்ப்பு மையமும் இப்படித்தான் தமது விருப்பத் தெரிவு நூல்களை எனக்கு அனுப்பி அவற்றை மொழிபெயர்த்துக் கொடுக்குமாறு கேட்டவற்றையே நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.  சாகித்திய அகாதெமியில் வெளியான நூல்கள் மட்டுமே என்னுடைய தேர்வு. நான் ஆங்கிலத்தில் மிகவும் குறைவாகவே வாசிக்கிறேன். அதனால் என்னால் நீங்கள் குறிப்பிடும் விதத்தில் ஒரு விருப்பப்பட்டியலை அளிக்கமுடியாத நிலையில் இருக்கிறேன்.

என் மகன் ஆனந்த் தட்சிணாமூர்த்தி நியூம்யார்க் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.வெளியீட்டியல் படிப்பை நிறைவு செய்துவிட்டு வெளியீட்டகம் ஒன்றைத் தொடங்கும் முயற்சியில் இருக்கிறார். இந்த ஆண்டு புக்கர் பரிசுக்கான குறும்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஸ்வீடிஷ் எழுத்தாளர் இயா ஜென்பர்க் என்பவரின் THE DETAILS  என்னும் நாவலை மொழிபெயர்க்கும் உரிமையைப் பெற்று தமிழில் மொழிபெயர்த்து அளிக்குமாறு கேட்டிருக்கிறார். அந்தப் பணியை இப்போது செய்து வருகிறேன். 

ஆங்கிலத்தில் காணப்படும் idioms , phrases ஆகியவற்றின் நேரடிப் பொருள் ஒன்றாகவும் இடம்சார்ந்த பொருள் வேறொன்றாகவும் இருக்கலாம். அவற்றை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும்போது நீங்கள் கையாளும் முறை என்ன?  தமிழ்மொழிக்கு இசைவான வகையில் நீங்கள் உருவாக்கிய மொழிபெயர்ப்பு வாசகங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

தொடக்கத்திலிருந்தே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புகள் வந்தபடி இருந்தன. க.நா.சு., புதுமைப்பித்தன் போன்ற படைப்பாளிகளே இத்துறையில் முன்னோடியாக இருந்து செயல்பட்டிருக்கிறார்கள்.  ஆங்கிலத்தில் எழுதுகிறவர்களின் மொழி பயன்பாட்டு உத்தி வியக்கவைக்கிறது.  ‘குறட்டை விட்டுத் தூங்குகிறவர்களுக்கு புதுவிதமான மருத்துவமுறை வந்திருக்கிறது’ என்ற செய்திக்கு ஆங்கில நாளேடு ‘SOUND SLEEP SANS NOISE’ என்று அழகாகத் தலைப்பிட்டிருந்தது. இங்கு SOUND SLEEP என்பது ஆழ்ந்த உறக்கம். அதில் உள்ள SOUND சத்தம் அல்ல.

ஆண்டன் செகாவ் A WOMAN IN THE CASE என்னும் தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார். நான் அதை மொழிபெயர்த்தேன். டபுள்பாஸ் எனப்படும் ஒரு பெரிய இசைக்கருவியைப் பொதிந்துவைக்கும் தோற்பெட்டிக்குள் ஆடையில்லாத கோலத்தில் ஒரு பெண் ஒளிந்துகொள்வதும் அதைத் தொடர்ந்த திருப்பங்களும்தான் கதை. ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு நான் அத்தலைப்பை ‘பேழைக்குள் ஏந்திழை’ என்று மொழிபெயர்த்தேன்.

சமீபத்தில் மொழிபெயர்த்த INDIA’S FOREIGN POLICY என்னும் புத்தகத்தின் முன்னுரையில் நூலாசிரியர் Writings assembled in a single volume have a better chance of winning recognition and are likely to have a longer shelf life என்றொரு வரியை எழுதியிருந்தார். பல்வேறு இதழ்களில் பல்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகள், கருத்தரங்குகளில் வாசித்த ஆய்வேடுகள் போன்றவை நூலாக்கம் பெறுவதன் அவசியத்தை அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இந்த வாக்கியத்தில்  longer shelf life என்னும் தொடரை நேரடியாக மொழிபெயர்க்க முடியாது. வாக்கியத்தின் போக்கில் அதன் பொருள் மிகச்சரியாக வெளிப்படும்படி அமைப்பதுதான் ஒரே வழி. நான் அத்தொடரை ’ஒரு நூலாகத் தொகுக்கப்பெறும் எழுத்துகள் அங்கீகாரம் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகுதியாவதுடன், அவை நீண்ட காலத்துக்கு உயிர்ப்புடன் இருக்கும் சாத்தியங்களும் அதிகம்’ என மொழிபெயர்த்தேன். மொழிபெயர்ப்புக்கு உயிரூட்டும்படியான சொற்களைக் கண்டடைவதே ஒரு மொழிபெயர்ப்பாளனின் வாழ்வில் மிகச்சிறந்த தருணங்கள்.

நீங்கள் ஆங்கிலத்தில் முதன்முதலாக வாசித்த புனைவிலக்கியம் எது? ஆங்கிலம் தெரிந்த ஒருவர் என்னும் நிலையிலிருந்து ஆங்கில இலக்கிய வாசகர் என்று உங்களையே உணரவைத்த புத்தகம் எது? பிறகு, அந்த நிலையிலிருந்து மொழிபெயர்க்கும் ஆர்வத்தை உங்களுக்குள் எழுப்பிய புத்தகம் எது?

என் பதில் உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். ஆயினும் அதுதான் உண்மை. பொதுவாக ஆங்கிலப் படைப்புகளைத் தேடி வாசிக்கும் நாட்டம் எனக்குக் கிடையாது. சில சமயங்களில் யாராவது வலியுறுத்திச் சொன்னால் படிப்பேன். ஒருமுறை என் அலுவலக நண்பர் செய்தித்தாளால் அட்டை போட்ட ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தார். என்ன புத்தகம் என்று கேட்டேன். அவர் அப்புத்தகத்தின் உட்பக்கத்தைத் திறந்து காட்டினார். அது சல்மான் ருஷ்டியின் SATANIC VERSES. அப்போது இந்தியாவில் அது தடைசெய்யப்பட்ட புத்தகமாக இருந்தது. என்னதான் இருக்கிறது, படிப்போமே என்று அப்புத்தகத்தைக் கேட்டேன். ரகசியம் பேணவேண்டும் என்னும் நிபந்தனையுடன் அவர் அப்புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். ஆவலுடன் படிப்பதற்குத் தொடங்கினேன் என்றாலும் என்னால் அதை முடிக்கமுடியவில்லை. திருப்பிக் கொடுத்துவிட்டேன். பல ஆண்டுகள் கழித்து படிக்கத் தொடங்கிய GOD OF SMALL THINGS புத்தகத்தையும் முழுமையாகப் படிக்கவில்லை. நீண்ட நாட்கள் கழித்து ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில்தான் முழுமையாகப் படித்தேன். விக்ரம் சேத் எழுதிய SUITABLE BOY நாவலையும் படிக்கத் தொடங்கி பாதியிலேயே விட்டுவிட்டேன். ஜெர்ரி ஃபிண்டோவின் EM AND THE BIG HOOM நாவல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை முழுமையாகப் படித்தேன். அதை மொழிபெயர்க்க விரும்பியதால் இரண்டாவது முறையும் படித்தேன்.

கருங்குன்றம் நாவலின் பின்னணி பலநூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலம் என்பதால், முதல் வாசிப்பில் கதைக்களனை உள்வாங்கிக் கொள்வதில் ஏதேனும் சிக்கல் எழுந்ததா? அதை எப்படி களைந்துகொண்டீர்கள்?

கருங்குன்றத்தின் கதை 1847 முதல் 1855 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்ததாக எழுதப்பட்டுள்ளது.  அதில் வரலாறும் உள்ளது. கிறித்துவ சமயத்தைப் பரப்பும் விழைவோடு மெய்வருத்தம் பாராமல் இன்னல்களைப் பொருட்படுத்தாமல் பயணம் செய்யும் பிரெஞ்சு சேசுசபை பாதிரியின் வரலாற்றையும் பழங்குடிச் சமூகத்தின் இரு இனக்குழு மாந்தர்களின் கற்பனைக் கதையையும் கலந்து உருவாகியுள்ள நாவல் ஆங்கிலத்தில் சரளமாக வாசிக்கும் விதத்திலேயே இருக்கிறது. பிரெஞ்சு மொழியில் அமைந்த பெயர்களை பிரெஞ்சு ஒலிப்பில் எழுதுவதற்கு புதுச்சேரி பிரெஞ்சுப் பேராசிரியரான சு.ஆ.வெங்கடசுப்புராய நாயக்கரின் உதவியைப் பெற்றேன். மற்றபடி மமாங்  தய்யின் ஆங்கில நூலை வாசிப்பதிலும் புரிந்துகொள்வதிலும் எவ்விதமான சிரமமும் ஏற்படவில்லை.

சாகித்திய அகாதெமி, நேஷனல் புக் டிரஸ்டு போன்ற நிறுவனங்களுக்காக செய்யும் மொழிபெயர்ப்புகளுக்கு அப்பால், அவ்வப்போது மணல்வீடு போன்ற பத்திரிகைகளிலும் உங்களுடை சிற்சில சிறுகதை மொழிபெயர்ப்புகளையும் நான் படித்து வருகிறேன்.  சிறுகதை, நாவல், கட்டுரை ஆகியவற்றில் உங்களுக்கு எத்துறையில் அதிக ஆர்வம் இருக்கிறது?

நான் சிறுகதைகளை மொழிபெயர்க்க வந்த சூழலே ஒரு சிறுகதைக்குரிய திருப்பங்களைக் கொண்டது. மொழிபெயர்ப்பாளரான ஜி.குப்புசாமி ஒருமுறை தன் முகநூல் பக்கத்தில் தமிழில் வரவேண்டிய அற்புதமான சிறுகதை என ஒரு ஜப்பானியச் சிறுகதையைப்பற்றி எழுதியிருந்தார். அக்கதையை மொழிபெயர்க்க தனக்குத் தயக்கமாக இருப்பதாகவும் துனிவுள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். SAYAKA MURATA என்பவர் எழுதிய A CLEAN MARRIAGE என்பதுதான் அச்சிறுகதை. இணையத்திலேயே அச்சிறுகதை கிடைத்தது. அதை நான் வாசித்தேன். மொழிபெயர்ப்பதற்கு சவாலான கதைதான். அக்கதையைப் படித்ததுமே, அதை மொழிபெயர்க்கவேண்டும் என்றொரு வேகம் எழுந்தது. உடனே உட்கார்ந்து மொழிபெயர்க்கத் தொடங்கிவிட்டேன். தமிழில் அச்சிறுகதை நன்றாகவே வந்திருந்தது. ’பரிசுத்தமான கல்யாணம்’ என்று அக்கதைக்குத் தலைப்பிட்டிருந்தேன். மொழிபெயர்த்த பிறகு பிரசுரிக்கலாமே என்ற ஆவலில் மூன்று பத்திரிகைகளுக்கு அடுத்தடுத்து அனுப்பினேன். ஒருவரும் வெளியிடவில்லை. அதற்குப் பிறகுதான் அக்கதையை மணல்வீடு இதழுக்கு அனுப்பினேன். உடனே வெளிவந்தது.  மொழிபெயர்த்த பிறகு வெளியிடுவதற்கு இப்படி அலைய வேண்டுமா என்ற எண்ணத்தால் மொழிபெயர்ப்பதற்கு யோசனையாக இருந்தது. ஆனால் நல்ல படைப்புகளைப் படிக்கும்போது, அவ்வளவு எளிதாகக் கடந்துபோக முடியவில்லை. சமீபத்தில் அசாமியக்கதை ஒன்றைப் படித்தேன். நல்ல சிறுகதை. குறிஞ்சிவேலன் வெளியிடும் திசையெட்டும் பத்திரிகைக்காக அதை மொழிபெயர்த்தேன். அக்கதை அறுபது வயதைக் கடந்த  ஒரு எழுத்தாளரின் தத்துவ விசாரம் தொடர்பானது. THE MESSENGER OF DEATH என்னும் அக்கதையை ‘மரணதூதன்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தேன். அதைப் படித்த புதுவைப்பேராசிரியர் ராஜ்ஜா பழைய ஆங்கிலச்சிறுகதைத்தொகுதி யொன்றைக் கொடுத்தார். எல்லாமே சிறந்த கதைகள். அதில் இருந்த ஒரு கதையைத்தான் நான் ‘பேழைக்குள் ஏந்திழை’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தேன். மொப்பசான், பால்சாக் போன்றோரின் கதைகளும் அத்தொகுதியில் இருந்தன. அவற்றை மொழிபெயர்த்து மணல்வீடு இதழுக்குக் கொடுத்தேன். சத்யஜித் ரே, சந்திரசேகர் ரத் எழுதிய கதைகளை காலச்சுவடு வெளியிட்டது. புத்தக வடிவில் வரும் மொழிபெயர்ப்புகளைவிட பத்திரிகைகளில் வெளிவரும் மொழிபெயர்ப்புகள் உடனடியாக கவனத்தைப் பெற்றுவிடுவதைப் பார்க்கிறேன். அதுவே சிறுகதைகளைத் தொடர்ச்சியாக மொழிபெயர்க்கத் தூண்டுகோலாக அமைகிறது.

 

(பேசும் புதிய சக்தி – ஜூன் 2024 )