Home

Sunday, 29 June 2025

பாம்பு - சிறுகதை

 

சத்திரத்துக் கல்திண்ணையும், ரெட்டியார் வாங்கிப் போட்ட தினத்தந்தியும் பொது அறிவுப் பொக்கிஷங்களாக இருந்த நாட்கள் அவை.   வாயில் வெற்றிலையை மென்று குதப்பியபடி ரெட்டியாரும், கிராமணியும் அரசியல் பேசுவார்கள். சூடு குறையும்போதெல்லாம் சுந்தரவேலு நாயுடு குத்திக்கிளறி விடுவார். வார்த்தைகள் சரம்சரமாய் விழும். கேள்விகள், பதில்கள், எக்களிப்புகள், பரிகாசங்கள், நடுநடுவே சோடாக்கடை கிராமபோனில் புறப்பட்டு வரும் என் அபிமான நடிகரின் லட்சிய கீத வரிகள். என் ரத்தத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் விறுவிறுப்பு ஏறும். படு கிளர்ச்சியான மனநிலையில் இருப்பேன். மரத்தடியில் எவனாவது ஒருவன் அதே நடிகரின் அங்க அசைவுகளோடு ஆடிக்காட்டி வித்தை செய்வான். இறுதியில் விழும் காசுகளைக் கும்பிட்டுவிட்டு பொறுக்கிக்கொள்வான்.

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - 9 (பகுதி - 1)

 


இரண்டு புல்லாங்குழல்கள்

ஒரு ஊரில் ஒரு விறகுவெட்டி வசித்துவந்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரைச் சேர்ந்த சந்தைக்குச் சென்று விறகு வெட்டிக் கொடுத்து சம்பாதித்து வந்தான். ஒருமுறை அவனுடைய ஊரை அடுத்து இருந்த இன்னொரு ஊரின் வாரச்சந்தைக்குச் சென்றிருந்தான். அங்கு பூக்கடை வைத்திருந்த ஒரு பெண்ணைப் பார்த்து மனத்தைப் பறிகொடுத்தான். அதற்குப் பிறகு அவளைப் பார்ப்பதற்காகவே அந்த ஊரில் நடைபெற்ற சந்தைக்குச் ஒவ்வொரு வாரமும் செல்லத் தொடங்கினான். அந்தப் பெண்ணிடம் எப்படியோ பேச்சுக் கொடுத்து அவள் மனத்தில் இடம் பிடித்துவிட்டான்.

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - 9 (பகுதி - 2)

 

ஏறத்தாழ இப்படியே ஒரு ஆண்டுக்கும் மேல் காலம் நகர்ந்துவிட்டது. ஒருநாள் அந்த மலைத்தொடரின் வேறொரு பக்கத்தில் ஆட்சி செய்துவந்த ஒரு சிற்றரசனின் மகள் தன் தோழிகளோடு விளையாடிபடியே அந்த மலையடிவாரத்துக்கு வந்தாள்.  அங்கே ஒரு கிணறு இருந்தது. விளையாடிய களைப்பில் அனைவரும் அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அருந்தினர். ஒருத்தி வாளியைச் சாய்த்து நீரை இறைக்க இன்னொருத்தி கைகளைக் குவித்து அந்த நீரை வாங்கி அருந்தினாள். இளவரசி நீரருந்த வந்தபோது அவளுடைய நெருங்கிய தோழி வாளியைச் சாய்த்து நீரை ஊற்றினாள்.

Sunday, 22 June 2025

என்.ஜி.ராஜன்: தியாக வாழ்க்கையின் அடையாளம்

 

அரிஜன சேவா சங்க வேலைகளில் ஈடுபட்டிருந்த தொண்டர்களை ஊக்கப்படுத்தவும் அரிஜன மேம்பாட்டுக்கான நிதியைத் திரட்டுவதற்காகவும் 23.01.1934 முதல் தமிழ்நாட்டில் ஒரு நீண்ட பயணத்தை காந்தியடிகள் மேற்கொண்டார். சென்னை, கோவை, மதுரை, கன்னியாகுமரி, திருச்சி என பல இடங்களுக்குச் சென்று பொதுமக்களிடையில் உரையாடிவிட்டு 15.02.1934 அன்று நாகப்பட்டினத்துக்கு வந்து சேர்ந்தார். அன்று காந்தியடிகளுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் சுயமரியாதை இயக்கத்தினர் கருப்புக்கொடி தாங்கி ஊர்வலம் நடத்தினர். ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல் மிகப்பெரும் எண்ணிக்கையில் அக்கம்பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் காந்தியடிகளின் உரையைக் கேட்கத் திரண்டு வந்தனர்.

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - 8 (பகுதி - 1)

 

திருவிளையாடல்

ஓர் ஊரில் ஒரு ராஜாவும் ராணியும் இருந்தனர். வாழ்நாள் முழுதும் வசதியாக வாழ்வதற்குத் தேவையான அளவுக்கு அவர்களிடம் செல்வம் இருந்தது. அரண்மனையில் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடிவந்து அவர்களுக்குச் சேவை செய்ய ஏராளமான சேவகர்கள் காத்திருந்தனர்.  அவர்களுடைய அரண்மனைக்குப் பின்னால் மாபெரும் தோட்டமொன்று இருந்தது. அங்கு ஏராளமான மரம் செடி கொடிகள் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. அவற்றுக்கு நடுவில் காகம், குருவி, கொக்கு, குயில் என ஏராளமான பறவைகள்  பறந்து விளையாடின. தாமரைப்பூக்கள் பூத்திருக்கும் பெரிய குளமொன்றும் இருந்தது. எல்லாம் இருந்தும் அவர்களுக்கு ஒரே ஒரு குறை இருந்தது. பேர் சொல்லி அழைக்கவும் ஓடி விளையாடவும் ஒரு பிள்ளை இல்லை என்பதுதான் அந்தக் குறை.

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - 8 (பகுதி -2)

 

ஆவேசத்துடன் காட்டுக்குள் புகுந்த சென்னா முதலில் ஒரு முயல்களின் கூட்டத்தைப் பார்த்தான். சிறிது நேரம் அவை துள்ளியோடும் அழகைப் பார்த்து ரசித்தான். பிறகு குறிபார்த்து ஒவ்வொன்றாகக் கொன்று வீழ்த்தினான். பிறகு தன் வெற்றியைப்பற்றிய தகவல் தன் தாய்க்குத் தெரியவேண்டும் என்பதால் வீழ்த்தப்பட்ட முயல்களையெல்லாம் ஒரு வண்டியில் ஏற்றி அரண்மனைக்கு ஓட்டிச் சென்று ராணியிடம் காட்டுமாறு சொன்னான். முயல்களின் உடல்களைச் சுமந்த வண்டியை ஒரு வேலைக்காரன் ஓட்டிக்கொண்டு அரண்மனைக்குத் திரும்பினான்.

Sunday, 15 June 2025

கிடைக்க மறுக்கிற நீதி - ஹஸினா – கன்னடத்திரைப்பட அனுபவம்

  

ஒரு தாய் தொடர்ந்து பெண்குழந்தைகளைப் பெறுவதால் கணவனால் வெறுக்கப்படுகிறாள் என்பது முஸ்லிம் சமூகத்துத் தாய்க்குமட்டுமே நேரக்கூடிய விஷயமல்ல. எல்லாத் தரப்புத் தாய்களுக்கும் நேரக்கூடியதுதான். செய்தித்தாள் படிக்கும் பழக்கமுள்ள ஒவ்வொருவரும் வாரத்துக்கு ஒருமுறையோ இரண்டுமுறைகளோ நாட்டில் ஏதோ ஒரு மூலையில் பெண்குழந்தை காரணத்தால் பெண்கள் ஒதுக்கிவைக்கப்படுவதும் மணவிலக்கு வழங்கப்படுவதும் மறைமுக வழிகளால் தந்திரமாகக் கொல்லப்படுவதும் நடந்தபடியிருப்பதை அறிந்தவர்களாகவே இருப்பார்கள்.

வெள்ளை யானை - கைவிடப்பட்டவர்களின் கதை

 

பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பது வாய்வழக்கில் உள்ள ஒரு வாக்கியம். பறந்துபோகக்கூடிய பத்து குணங்களைப் பட்டியலிட்டு  ஒளவையார் ஒரு வெண்பா எழுதியிருக்கிறார். அவை எல்லாமே பசிக்கு ஆட்பட்டுத் தவிக்கிறவர்கள் ஒவ்வொன்றாக துறப்பதற்குச் சாத்தியமான குணங்கள். ஆனால், வரலாற்றில் ஒரு காலகட்டத்தில், துறப்பதற்கு ஒன்றுமே இல்லாதவர்களாக பசித்தவர்கள் காக்கை குருவிகளைப்போல செத்து விழ, அந்தப் பஞ்சத்துக்குக் காரணமானவர்கள் அந்த மரணங்களுக்கும் தமக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லாதவர்கள் போல நடந்துகொண்டார்கள்.

Sunday, 8 June 2025

கூண்டு - சிறுகதை

 

அழுவுணி ஆட்டம் ஆடியது அவர்கள்தான்என்றேன்  நான்.

நான்தான் என்றார்கள் அவர்கள்.  ஏற்கனவே நாய்த்தோல் பந்தால்

முதுகு சிவக்க அடிவாங்கிய வேதனை எனக்கு. பட்டாளமாய்

எல்லாரும் சேர்ந்துகொண்டு குற்றம் சாட்டியபோது அவமானத்தில்

அழுதுவிடுவேன் போலிருந்தது. ஒரு கணத்தில் கேலிச்சொற்களின்

கனம் தாங்காமல் பதிலளிக்க இயலாமல் நின்றதும் மிகுந்த

எக்காளத்துடன் அத்தனை பேரும் சிரித்தபடி என்னையே சுற்றி

வந்துதோத்தாங்குளிபாட்டுப் பாடிவிட்டு ஓடினார்கள்.  

சிவாவும் ஹரியும் பழைய புத்தகங்களும்

  

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னையில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சிக்கு நானும் விட்டல்ராவும் சேர்ந்து செல்வதாகத்தான் முதலில் திட்டமிட்டிருந்தோம். அதற்கு இசைவாக பயணச்சீட்டுகள் கூட பதிந்துவைத்திருந்தேன். எதிர்பாராத விதமாக அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஒரு வாரம் முன்னாலேயே சென்னைக்குச் செல்லும் வேலை வந்துவிட்டது. முதலில் பதிவு செய்த பயணச்சீட்டுகளை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தனியாக பயணச்சீட்டு பதிவு செய்துகொண்டு போய் வந்தேன். விட்டல்ராவ் மட்டும் தொடக்கத்தில் திட்டமிட்ட வகையிலேயே கண்காட்சிக்குச் சென்று ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு திரும்பினார்.

Sunday, 1 June 2025

சுய சரிதை புத்தகங்களுக்கு வசீகரம் - தினமணி கதிர் நேர்காணல்


கேள்விகள்: அருள்செல்வன்

‘காலவரிசையைப் பின்பற்றாமல் அவ்வப்போது நினைவுக்கு வரும் நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது நினைவுக்கு வரும் பாத்திரங்களைப்பற்றிய சித்திரங்களையும் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்.  அவை அனைத்தும் தொகுக்கப்படும்போது அதற்கு ஒரு சுயசரிதைத்தன்மை அமைந்துவிடுகிறது. அத்தகு புத்தகங்களுக்கு ஒரு வசீகரத்தையும் ஏற்படுத்திவிடுகிறது’ என்கிறார் எழுத்தாளர் பாவண்ணன். 

என்றென்றும் வாழும் இலட்சியவாதம்

  

சர்வோதயம் மலர்கிறது இதழின் ஆசிரியராகவும் மதுரை காந்தி நினைவகத்தின் செயலாளராகவும் நீண்ட காலம் பணியாற்றிய க.மு.நடராஜன் அண்ணாச்சி 24.05.2021 அன்று இயற்கையெய்தினார். நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன என்பதை நம்பவே முடியவில்லை. இன்றும் நண்பர்களோடு உரையாடும் சமயத்தில் அவர் தொடர்பான சில செய்திகளும் அடிக்கடி இடம்பெற்று வருவதால், அவருடைய மறைவு மனத்தில் பதியவே இல்லை.