கடந்த சில ஆண்டுகளில் ’சர்வோதயம் மலர்கிறது’ இதழிலும் பிற இதழ்களிலும் அவ்வப்போது எழுதிய பதினான்கு கட்டுரைகளைத் தொகுத்து பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் இப்போது ஒரு புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையையும் வெளிவந்த காலத்திலேயே நான் படித்திருக்கிறேன் என்றபோதும் ஒரு நூல் வடிவில் இப்போது அனைத்துக் கட்டுரைகளையும் ஒருங்கே படிப்பது நல்ல அனுபவமாக இருந்தது. நண்பர் விஜயராமலிங்கம் தம் மனத்தில் அண்ணல் காந்தியடிகளுக்கு எந்த அளவுக்கு இடமளித்திருக்கிறார் என்பதை இந்த நூல் வழியாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
காந்தியடிகளின்
வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் ஒருவர் அவருடைய காலத்தைச் சேர்ந்த சில ஆளுமைகளும் சில
பத்திரிகையாளர்களும் சில ஆய்வாளர்களும் தொடர்ச்சியாக எப்படி அவர் மீது பழி சுமத்தியபடி
இருந்தனர் என்பதையும் மீண்டும் மீண்டும் சொல்லி அந்த அவதூறுகளை அவர்கள் எப்படி வரலாற்றில்
நிலைநிறுத்தினர் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.
இளைஞரான
பகத்சிங் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டபோது, அவரைக் காப்பாற்ற காந்தியடிகள்
முயற்சி செய்யவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டு. நேதாஜி காங்கிரஸிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வெளியேறுவதற்கு காந்தியடிகளே
காரணமாக இருந்தார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. வ.உ.சி.க்குத் தரவேண்டிய பணத்தை உரிய
காலத்தில் கொடுக்காமல் காந்தியடிகள் காலம் தாழ்த்தினார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு.
இப்படி அவர் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளின் பட்டியல் நீளமானது. காந்தியடிகளின் சமகாலத்தில்
வாழ்ந்த ஆய்வாளர்களும் அதற்குப் பிறகு தோன்றிய
பிற ஆய்வாளர்களும் அவற்றையெல்லாம் உரிய சான்றுகளோடு மறுத்திருக்கிறார்கள். ஆயினும்
அவற்றையெல்லாம் கிஞ்சித்தும் மதிக்காமல் அந்த அவதூறுகளையே உண்மை என அடித்துப் பேசும்
மனிதர்கள் இன்றும் நம்மிடையில் வசிக்கிறார்கள்
என்பதுதான் துயரமளிக்கிறது. அதை நம்புவதற்கும் ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள்.
இது மிகவும்
துரதிருஷ்டவசமான சூழல் என்றபோதும், காந்தியடிகளின் கொள்கைகள் மீது நம்பிக்கை கொண்டவர்கள்
அனைவரும் ஒவ்வொரு காலத்திலும் அந்த அவதூறுகளை மீண்டும் மீண்டும் மறுத்துப் பேசவேண்டிய
கடமையை ஆற்றியவண்ணம் இருக்க நேர்கிறது. இப்படி இந்தியா முழுதும் ஒவ்வொரு மொழியிலும்
ஒருசிலர் தன்னிச்சையாக இத்தகு கடமையைத் தன் தலையாய பணியாகக் கொண்டு செயல்படுகிறார்கள்.
தமிழ்ச்சூழலில் அந்த வரலாற்றுக் கடமையை யாரும் சொல்லாமலேயே தானே இழுத்துப் போட்டுக்கொண்டு
செய்திருக்கிறார் விஜயராமலிங்கம். அவருடைய கட்டுரைத்தொகுதியைப் படித்து முடித்ததும்
அந்த எண்ணமே என் நெஞ்சில் முதலில் எழுந்தது. அவதூறுகள் எழுந்த சூழலில் என்ன நடந்தது
என்பதை பல்வேறு குறிப்புகள் வழியாகவும் சான்றுகள் வழியாகவும் ஒரு வழக்கறிஞருக்கே உரிய
நுட்பத்தோடு தகவல்களைத் திரட்டித் தொகுத்து இருளில் மறைந்திருக்கும் உண்மையை வெளிச்சத்துக்குக்
கொண்டுவந்திருக்கிறார்.
இக்கட்டுரைகளைப்
படித்துக்கொண்டிருந்த நேரத்தில் இருபதாண்டுகளுக்கு முன்பு எங்கள் குடியிருப்பில் நடந்த
நிகழ்ச்சியொன்று நினைவுக்கு வந்தது. ஓய்வு பெற்ற பள்ளிக்கூட ஆசிரியரொருவரும் அவர் மனைவியும்
ஒரு வீட்டில் தனியாகக் குடியிருந்தனர். எங்கள் தெருவில் வசிக்கும் பலரோடும் அவர் நட்போடு
பழகிவந்தார். அவர்களுடைய இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் இருந்தார்கள்.
முதுமையின்
காரணமாக வீட்டு வேலைகளைச் செய்ய அவர்களுக்கு ஒரு
துணை தேவைப்பட்டது. பக்கத்து வீட்டில் வேலை செய்துவந்த ஒரு பணிப்பெண்ணிடம் தம்
தேவையைத் தெரிவித்தார். அவர் இரண்டு நாள் இடைவெளியிலேயே ஓர் இளம்பெண்ணை அழைத்துவந்து
வேலையில் சேர்த்துவிட்டார். காலை எட்டு மணிக்கு வந்து மாலை ஆறு மணி வரை அந்த முதியவர்களுக்கு
உதவி செய்வதுதான் அப்பெண்ணின் வேலை. அவள் அதை மகிழ்ச்சியோடு செய்துவந்தாள்.
எதிர்பாராத
விதமாக ஒருநாள் அந்த முதிய பெண்மணி குளியலறையில் தடுமாறி விழுந்ததால் கை உடைந்து படுத்த
படுக்கையானார். அதனால் இரவு நேரத்திலும் அவருக்கு ஒரு துணை தேவைப்பட்டது. அவர்கள் அந்த
இளம்பெண்ணையே உதவியாக இருக்குமாறும் கூடுதலாக சம்பளம் கொடுத்துவிடுவதாகவும் கேட்டுக்கொண்டனர். அந்தப் பெண்ணும் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டாள்.
மாலையில் அல்லது காலையில் அவள் விருப்பம்போல ஏதேனும் ஒரு சமயத்தில் சில மணி நேரங்கள்
தன் வீட்டுக்குச் சென்றுவருவதற்கும் அனுமதி வாங்கிக்கொண்டாள். கூடுதல் வேலையைப்பற்றியும்
கூடுதல் சம்பளம் பற்றியும் அந்தப் பெண்ணுடைய பெற்றோரிடமும் அந்தப் பெரியவர் தெரிவித்துவிட்டார்.
ஒருசில
மாதங்கள் எல்லாம் நல்லபடியாகவே சென்றுகொண்டிருந்தது. ஒருநாள் மாலை தன் வீட்டுக்குச்
சென்றுவருவதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டுச் சென்ற இளம்பெண் திரும்பி வரவில்லை. இரவும்
வரவில்லை. அடுத்த நாள் காலையிலும் வரவில்லை. என்ன காரணம் என்று புரியாமல் அந்தப் பெரியவர்
குழம்பினார். மறுநாள் காலையில், அந்தப் பெண்ணின் அப்பா வீட்டு வாசலுக்கு வந்து தன்
பெண்ணை அனுப்பிவைக்கும்படி கேட்டபோது அந்தப் பெரியவருடைய குழப்பம் மேலும் அதிகமானது.
நடந்த
விவரத்தை அந்தப் பெரியவர் எடுத்துச் சொன்னார். ஆயினும் அந்த அப்பா அதை நம்பத் தயாராக
இல்லை. வாய்க்கு வந்தபடி பேசத் தொடங்கி அவர் மீது பழி சுமத்தினார். வேகமாகச் சென்று
காவல் நிலையத்தில் தன் பெண் கடத்தப்பட்டுவிட்டதாகப் புகார் கொடுத்து காவலர்களையும்
அழைத்துவந்துவிட்டார். அவர்கள் அந்தப் பெரியவரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச்
சென்றுவிட்டனர்.
அன்று
மாலை வரையில் அவர் திரும்பி வரவில்லை. அதனால் கலவரமுற்ற நாலைந்து நண்பர்களும் நானும்
காவல் நிலையத்துக்குச் சென்றோம். அந்தப் பெரியவர் காவல் நிலையத்துக்குள் ஆதரவில்லாதவர்
போல முகம் வெளுத்து சோர்வோடு நின்றிருந்தார். ஒரே நாளில் பத்து வயது முதிர்ந்தவர்போல
அவர் நடுங்கிக்கொண்டிருந்தார். ஒரு தம்ளர் தண்ணீர் கூட அவர் அருந்தவில்லை. அந்தப் பெண்ணை
அவர் கடத்திவிட்டார் என்னும் கோணத்திலேயே விசாரணை போய்க்கொண்டிருந்தது.
காவல்
துறையிலேயே மூத்த அதிகாரியாக இருந்தவரோடு நட்புகொண்டிருந்த நண்பர் ஒருவர் தன் செல்வாக்கைப்
பயன்படுத்தி அவரோடு உரையாடி தகவலைத் தெரிவித்தார். அந்த அதிகாரி நிலையத்தில் இருந்தவர்களை
அழைத்து உரையாடினார். அதற்குப் பிறகுதான், காவலர்கள் எங்களிடம் முகம் கொடுத்துப் பேசத்
தொடங்கினர். அழைப்பு வரும் தருணத்தில் விசாரணைக்கு வருவதாக வாக்குறுதி வாங்கிக்கொண்டு
அந்தப் பெரியவரை விடுவித்தனர்.
அவரைக்
கைத்தாங்கலாகப் பிடித்து ஒரு வாகனத்தில் ஏற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்றார் ஒருவர்.
இன்னொருவர் கடைக்குச் சென்று சாப்பிடுவதற்கு ஏதோ வாங்கிவந்தார். அவரால் பேசவே முடியவில்லை.
அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடியே இருந்தது. “எங்க பொண்ணு மாதிரி நாங்க அவளைப்
பார்த்துக்கிட்டோம்” என்று சொல்லிச் சொல்லி அழுதார்.
அன்று
முழுக்க அந்தப் பெண்ணைப்பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. மறுநாள் காலையில் அவள்
தன் வீட்டுக்குத் திரும்பிவிட்டதாகவும் தன் காதலனுடன் ரகசியப் பயணமாக வெளியூருக்குச் சென்றிருந்ததாகவும்
தெரியவந்தது. ஆக்ரோஷமாகப் பழி சுமத்திய அந்தப் பெண்ணின் தந்தை நாகரிகம் கருதிக் கூட
வந்து பெரியவரிடம் வருத்தம் தெரிவிக்கவில்லை. அந்தப் பெண்ணும் எட்டிப் பார்க்கவில்லை.
விசாரணை என்கிற பெயரில் துன்பமளித்த காவலர்களும் தலைகாட்டவில்லை. அனைவரும் அத்தருணத்தை
மெத்தனமாக அப்படியே கடந்துபோய்விட்டனர். ஆயினும், உண்மையற்ற அந்தப் பழிச்சொல் மட்டும்
அப்படியே நிரந்தரமாகத் தங்கிவிட்டது. ’அந்தப் பொண்ணு கடத்தல் வழக்குல விசாரணைக்குப்
போய் வந்தவர் வீடு’ என்று சர்வசாதாரணமாக அந்த வீட்டின் மீது முத்திரை குத்திவிட்டனர்.
சொல்லிச்சொல்லி அதுவே ஓர் அடையாளமாக நிலைத்துவிட்டது. அந்தப் பழியோடு அப்பகுதியில்
வாழ விரும்பாத அவர் அந்த வீட்டையே விற்றுவிட்டு எங்கோ புறநகரை நோக்கிச் சென்றுவிட்டார்.
ஒருவர்
மீது பழி சுமத்துவது எவ்வளவு எளிதாக அனைவருக்கும் கைவந்த கலையாக இருக்கிறது என்பதை
உணர்த்துவதற்காக இந்த நிகழ்ச்சியை இங்கு குறிப்பிட்டேன். எல்லாக் காலத்து மனிதர்களும்
இக்கலையில் தேர்ச்சி பெற்றவர்களாகவே இருந்தனர் என்பதற்கு காந்தியடிகள் எதிர்கொண்ட பழிச்சொற்களே
எடுத்துக் காட்டுகளாக உள்ளன. இங்கே பழி சுமத்துவர்கள் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை.
ஆனால் அது உண்மையல்ல என்று சொல்பவர்கள்தான் சாட்சி, சந்தர்ப்பங்களையெல்லாம் விளக்கி
நிரூபிக்கவேண்டியிருக்கிறது. அந்த நிரூபணத்துக்கு அப்பாலும் அந்தப் பழி ஆலமரத்தின்
விழுதென உறுதியாக நின்றுகொண்டே இருக்கிறது.
வ.உ..சி.யின்
புகழைப் பரப்புவதற்காகப் புத்தகம் எழுதிய அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி என்பவர் அப்புத்தகத்துக்கு
‘காந்தி கணக்கு’ என்று தலைப்பிட்டிருப்பதற்குப் பின்னால் அவருடைய மனத்தின் இயங்குதளம்
என்னவாக இருந்திருக்கும் என்பது சிந்தனைக்குரியது. காந்தியடிகள் வ.உ.சி.க்குச் சேரவேண்டிய
தொகையைத் தராமல் ஏமாற்றிவிட்டார் என்னும் குற்றச்சாட்டுதான் அப்புத்தகத்தின் உள்ளடக்கமாக
உள்ளது என்பது வேதனைக்குரியது. பலருடைய பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு நடந்தது என்ன
என்பது இப்போது எல்லாமே தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. வரவுக்கணக்கைச் சரிபார்ப்பதில்
ஏற்பட்ட தாமதத்தால் பணத்தை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதே தவிர, வேறெந்த காரணமும் இல்லை
என்பதும் ’தொகையைப் பெற்றுக்கொண்டேன்’ என வ.உ.சி.யே மடலெழுதி அந்த விவகாரத்தை முடித்துவைத்துவிட்டார்
என்பதும் இன்று தெளிவுபடுத்தப்பட்ட உண்மைகளாகிவிட்டன.
ஆனால் இன்றும் கூட காந்தியடிகளால் வ.உ.சி. ஏமாற்றப்பட்டார் என்னும் பழிச்சொல்லே பல
இடங்களில் நீடித்துவருகிறது. ’காந்தி கணக்கு’ நூல் எழுதிய அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி
தான் எழுதிய பிழையான தகவலுக்காக வருத்தமெதுவும் தெரிவித்தாரா என்பது தெரியவில்லை.
ஒருவர்
மீது சுமத்தப்படும் பழிச்சொல் என்பது நிலத்தில் விழுந்த விதை மரமென முளைத்தெழுவதற்கு
இணையானது. அது உண்மையல்ல என்று நிறுவப்பட்ட பிறகும் அந்த மரம் அப்படியே நின்றுகொண்டிருக்கும்.
இந்தத் தலைமுறைக்கு விஜயராமலிங்கம் போன்று, எதிர்காலத்திலும் பல விஜயராமலிங்கங்கள்
தோன்றி அந்த உண்மையை மீண்டும் மீண்டும் எடுத்துரைத்தபடி இருக்கவேண்டும்.
தென்னாப்பிரிக்காவுக்குச்
சென்று காந்தியடிகள் வாழ்ந்த இடத்தையும் அவர் உருவாக்கிய பண்ணையையும் அவர் தள்ளிவிடப்பட்ட
ரயில் நிலையத்தையும் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்திய திடலையும் பார்த்துவிட்டுத்
திரும்பிய அனுபவங்களைக் குறித்து விஜயராமலிங்கம் எழுதியிருக்கும் கட்டுரை இத்தொகுதியில்
மிகமுக்கியமானது. தென்னாப்பிரிக்காவுக்குச் செல்ல இயலாத பலருக்கும் இக்கட்டுரை ஒரு
கையேடாகப் பயனளிக்கலாம். குருவாயூர் ஆலய நுழைவு சத்தியாகிரகம் தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை
விஜயராமலிங்கம் தொகுத்திருக்கும் விதம் அந்தக் காலகட்டத்தையே நம் கண்முன்னால் கொண்டுவந்து
நிறுத்துகிறது. ‘மகாத்மா காந்தியைக் காப்பாற்றத் தவறினேன்’ என்று மனம் நொந்து தவித்த
பேராசிரியர் ஜெகதீஷ் சந்திர ஜெயினின் வாக்குமூலக் கூற்றைப் பற்றிய செய்திகளை வாசிக்கும்போது
மனம் வேதனையில் தவிக்கிறது. அரிதின் முயன்று திரட்டிய பல தகவல்களைத் திறம்படத் தொகுத்துக்
கட்டுரையாக்கிறார் விஜயராமலிங்கம்.
அவர்
எழுதியிருக்கும் பதினான்கு கட்டுரைகளும் ஒவ்வொரு விதத்தில் மிகமுக்கியமானவை. ஒவ்வொரு
வாசகரும் தெரிந்துகொள்ள வேண்டிய பல முக்கியமான உண்மைகளை அவர் தேடித்தேடித் தொகுத்துள்ளார்.
அவருடைய உழைப்பு பாராட்டுக்குரியது. ’காந்தியத் தடம்’ விஜயராமலிங்கத்தின் உழைப்பையும்
ஆர்வத்தையும் பறைசாற்றும் அடையாளமாக விளங்கும் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை. விஜயராமலிங்கம்
அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
(10.12.2025 அன்று தஞ்சையில் வெளியிடப்பட்ட
பேராசிரியர் விஜயராமலிங்கம் எழுதிய காந்தியத்தடம் என்னும் நூலுக்கு எழுதிய முன்னுரை)