Home

Sunday, 25 January 2026

எங்கள் பாட்டி எங்கள் தாத்தா - சில பாடல்கள்

 

சென்னை புத்தகக்கண்காட்சியை ஒட்டி பாரதி புத்தகாலய வழியாக வெளிவந்திருக்கும்எங்கள் பாட்டி எங்கள் தாத்தாதொகுதியிலிருந்து சில பாடல்கள்.

 

அன்புத்தாத்தா

 ஆடச் சொன்னால் ஆடுவார்

பாடச் சொன்னால் பாடுவார்

சிரிக்கச் சிரிக்கப் பேசுவார்

சிரிப்புக் கதைகள் கூறுவார்

 

உப்பு மூட்டை தூக்குவார்

ஊர்வலமாகச் சுற்றுவார்

திண்ணை மீது இறக்குவார்

செல்லமாகத் தட்டுவார்

 

யானை சவாரி ஏற்றுவார்

அசைந்து அசைந்து திரும்புவார்

கையைத் தூக்கிச் சுழற்றுவார்

ஆசி வழங்கிப் பிளிறுவார்


அருமருந்து

தலையை வலிக்குது என்று சொன்னால்

தலையில் முத்தம் கொடுப்பார்

கண்ணை வலிக்குது என்று சொன்னால்

கண்ணில் முத்தம் கொடுப்பார்

 

கையை வலிக்குது என்று அழுதால்

கைக்கு முத்தம் கொடுப்பார்

காலை வலிக்குது என்று அழுதால்

காலில் முத்தம் கொடுப்பார்

 

வாயை வலிக்குது என்று சொன்னால்

வாயில் முத்தம் கொடுப்பார்

வயிற்றை வலிக்குது என்று சொன்னால்

வயிற்றில் முத்தம் கொடுப்பார்

 

எல்லா வலிக்கும் முத்தம் ஒன்றே

பாட்டி அளிக்கும் மருந்து

இன்னும் இன்னும் வேண்டும் என்றே

எண்ண வைக்கும் மருந்து

 

அப்பா பாட்டியும் அம்மா பாட்டியும்

அப்பா பாட்டி வீட்டுக்குப் போனால்

அதிரசங்கள் கொடுப்பார்

ஆசையோடு தின்னத் தின்ன

அடுக்கிக் கொண்டே இருப்பார்

 

ஆனைக் கதை பூனைக் கதை

ஆயிரம் சொல்லிக் கொடுப்பார்

ஆந்தைப் பாட்டு காக்கைப் பாட்டு

பாடிக் காட்டிச் சிரிப்பார்

 

அம்மா பாட்டி வீட்டுக்குப் போனால்

அடையும் முறுக்கும் கொடுப்பார்

ஆவலோடு தின்னத் தின்ன

தட்டை நிறைத்து வைப்பார்

 

ராஜா கதை ராணி கதை

ரசித்து ரசித்துச் சொல்வார்

ராகத்தோடு பாட்டுப் பாடி

ஆனந்தமாகச் சிரிப்பார்.


தாத்தாவுக்குச் சவால்

பந்தை வீசி எறிந்தால்

பிடிக்க முடியுமா தாத்தா?

கோட்டைக் கடந்து போனால்

எடுக்க முடியுமா தாத்தா?

 

கிளையில் தொங்கும் பழத்தை

பறிக்க முடியுமா தாத்தா?

பறித்த பழத்தை நறுக்கி

கொடுக்க முடியுமா தாத்தா?

 

வண்ணத் தாளில் பட்டம்

செய்ய முடியுமா தாத்தா?

வானில் அலைந்து பறக்க

வைக்க முடியுமா தாத்தா?

 

ஏரி வரைக்கும் ஓடி

திரும்ப முடியுமா தாத்தா?

எனக்கும் உனக்கும் பந்தயம்

ஓடலாமா தாத்தா?