ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு கவிஞராக எழுத்துலகில் அடியெடுத்துவைத்தவர் விஜயானந்தலட்சுமி. அதைத் தொடர்ந்து இன்றைய இணையகால வாசகர்கள் எளிதாக உள்வாங்கிக்கொள்ளும் வகையில் கலித்தொகை, மலைபடுகடாம், பட்டினப்பாலை ஆகிய சங்க இலக்கிய நூல்களுக்கு அழகான விளக்கநூல்களை எழுதினார். தேனி என்னும் நகரத்தின் வெவ்வேறு பரிமாணங்களை அழகான சொற்சித்திரங்களாகத் தீட்டி நூலாக வெளியிட்டார். இவான் துர்கனேவ், ஓ ஹென்றி ஆகியோரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இவ்வாறாக, தன் படைப்புலகத்தை மெல்ல மெல்ல விரிவாக்கிக்கொண்டே செல்லும் விஜயானந்தலட்சுமி இப்போது தன் முதல் சிறுகதைத்தொகுதியை வெளியிட்டிருக்கிறார்.
இத்தொகுதியில் உள்ள பதினோரு சிறுகதைகளும் வாசிப்பு இன்பம் அளிப்பவையாகவும் சிந்தனையைத் தூண்டும் கருப்பொருளைக் கொண்டவையாகவும் அமைந்துள்ளன. கதையின் போக்கில் இடையிடையே மின்னலென பளிச்சிடும் சில வரிகளின் கவித்துவம் கதையை வாசித்துமுடித்த பிறகும் நினைவில் நிழலாடியபடி உள்ளன. மழைமுகம் சிறுகதையில் இடம்பெற்றிருக்கும் ஒரு வரியை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ‘தேர்ந்த தட்டச்சுக்காரியாகக் கையெடுக்காமல் நீர் பொத்தான்களைத் தட்டித்தட்டி நிலத்தின் மேல் பெரும் கவிதையை அச்சாக்கிக்கொண்டிருந்தது மழை’ என்னும் வரியின் கற்பனையும் கவித்துவமும் பாராட்டுக்குரியது.
மழைமுகம்
சிறுகதை, அந்தக் கதை நிகழும் தருணத்தால் மட்டுமன்றி, கைதேர்ந்த ஓர் ஓவியனின் கோட்டோவியங்களைப்போல
கதையைச் சித்தரிக்கும் விதத்தாலும் சிறந்த
கதையாக மனத்தில் இடம்பெறுகிறது. ஒரு தொகுப்பின் தலைப்புக்கதையாகத் திகழ்வதற்கு எல்லா
விதங்களிலும் பொருத்தமான கதை அது.
வணிக
விளம்பரங்களை எடுத்துக் கொடுக்கும் ஒரு நிறுவனத்தில் நிகழும் சிக்கலை முன்வைக்கிறது
கதை. கிழக்குக் கடற்கரைச் சாலையில் சிறுசிறு தூறல்களுக்கிடையில் மிதமான வேகத்தில் வாகனத்தை
ஓட்டிவரும் மீனலோச்சனியின் பயணத்தோடு அக்கதை தொடங்குகிறது. கடற்கரைச்சாலை என்பது வாகனநெரிசல்
மிக்க சாலை. அங்கு நிதானம் என்பதற்கோ, மிதமான வேகம் என்பதற்கோ இடமே இல்லை. பரபரப்பாக
எப்போதும் பறந்துகொண்டே இருக்கவேண்டும். நாம் செல்லக்கூடிய வேலையில் அவசரம் இல்லாமல்
இருக்கலாம். ஆனால் வேகம், வேகம் என்பதுதான் அந்தச் சாலையில் வாகனம் ஓட்டுகிறவர்களுக்கு
இருக்கும் ஒரே விதி. அந்த விதியைப் பின்பற்றாதவர்கள் பிற வாகன ஓட்டிகளிடமிருந்து வசைகளைப்
பெற்றபடி செல்வதை ஒருபோதும் தவிர்க்கமுடியாது.
கிட்டத்தட்ட
வணிக உலகத்தின் இயங்கு விதியும் அதுதான். வெற்றி மட்டுமே அங்கே அளவுகோல். வெற்றிக்குத்
துணைநிற்பவர்களை மட்டுமே அந்த உலகம் தன்னோடு இணைத்துவைத்திருக்கும். ஒவ்வொருவரும் அவரவருக்கு
ஒதுக்கப்படும் வேலையை மட்டும் செய்யவேண்டும். அந்த விதியைப் பின்பற்றாதவர்களைத் தயக்கமில்லாமல் விலக்கிவைத்துவிட்டு யாருக்காகவும்
காத்திராமல் போய்க்கொண்டே இருக்கும். .
நிர்வாகத்தின்
தலைமைப்பொறுப்பில் இருக்கும் ஒருவன் நிறுவனத்தில் ஓர் ஊழியர் தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும்
வேலைக்கு அப்பால் இன்னொருவர் வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்ததை விதிமீறல் என்று
முடிவெடுக்கிறான். யாருக்காக அவன் உதவி செய்தானோ, அவள் வழியாகவே அவனை வேலையிலிருந்து
நீக்கும் கடிதத்தைத் தட்டச்சு செய்துவாங்கித் தயார்நிலையில் வைத்துக்கொள்கிறான். அது
ஓர் உணர்ச்சிவேகத்தில் எடுக்கும் முடிவு. அவசரமாக வாகனத்தை ஓட்டிச் செல்கிறவன் நிதானமாக
வாகனத்தை ஓட்டிச் செல்பவனைப் பார்த்து வசைச்சொற்களைப் பொழிவதற்கு நிகரான செயல் அது.
இரக்கமே
இல்லாத நிர்வாகியுடைய அணுகுமுறையால் மனவேதனை அடைகிறாள் அந்தத் தட்டச்சுப் பெண். பாதிக்கப்படப்
போகிறவனை நினைத்து வருந்தியபடி வீட்டுக்குப் புறப்படுகிறாள். நடுவில் மழை குறுக்கிட்டதால்
ஓரிடத்தில் ஒதுங்கி நிற்கிறாள். இடைப்பட்ட
நேரத்தில் தோல்வி எனக் கருதிய ஒன்று வெற்றிக்கான வாய்ப்பாக மாறியதும் பணிநீக்க ஆணைக்கு
மாறாக பாராட்டு வரிகளைக் குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கிறான் நிர்வாகி. தனக்கு வந்த
செய்தியைப் படித்த அந்த நண்பன் அவளை அழைத்து தகவலைத் தெரிவிக்கிறான். அவளுக்கு அது
புரியாத புதிராக இருக்கிறது. வெற்றியின் வேட்கையில் அவசரமுடிவை எடுக்கிறவனாக நிர்வாகி
செயல்பட்டான் என்பது பிழையெனில் நட்பின் அடிப்படையில் தவறான கோணத்தில் யோசித்த தன்
அவசரச்செயலும் பிழை அல்லவா என்பதை ஒரு குழப்பத்துக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ளத்
தொடங்குகிறாள்.
போக்குவரத்தைப்போலவே
இக்கதையில் மழையும் வலிமையானதொரு படிமமாக விளங்குகிறது. வாகனத்தைப்போலவே மழைக்கும்
ஒருபோதும் சீரான வேகம் என்பதே இல்லை. ஒருகணம் தூறல். ஒருகணம் நிதான மழை. மறுகணம் பெருமழை.
மனிதமனம் போல கணந்தோறும் அதுவும் மாறிக்கொண்டே இருக்கிறது.
’அம்மாவின்
புகைப்படம்’ இத்தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று. எளிய குடும்பப்பெண்ணின் ஆவலையும்
எதிர்பார்ப்பையும் அவளைச் சுற்றி வாழ்கிறவர்கள் பலரும் கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல்
நடந்துகொள்ளும் அணுகுமுறையை அடையாளம் காட்டுவதுதான் கதையின் கரு. நல்ல முகவெட்டும்
உயரமான கழுத்தமைப்பும் கொண்டவள் அம்மா. அவளுக்குப் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்
என்கிற ஆசை உண்டு. ஆனால் அந்த எளிய ஆசை நிறைவேறவில்லை. அவளுக்குத் திருமணம் நிகழ்ந்தபோது
திருமண நிகழ்ச்சிகளைப் படம் எடுத்த போட்டாகாரர் படங்களைக் கொடுக்காமல் ஊரைவிட்டே சென்றுவிடுகிறார்.
ஊரில் அவ்வப்போது நடைபெறுகிற சொந்தக்காரர்களின் திருமணங்களுக்குச் செல்லும்போதெல்லாம்
அவளும் மற்றவர்கள் போல மணமக்களுக்கு அருகில் நின்று போட்டோ எடுத்துக்கொள்கிறாள். ஆனால்
இறுதிக்கட்டமாக அந்தத் திருமண ஆல்பம் தயாராகும்போது அவளுடைய படம் அதில் இருப்பதில்லை.
அதை நினைத்து வருத்தப்படாமல் அவளும் ஒவ்வொரு திருமணத்துக்கும் சென்று போட்டோ எடுக்கும்
தருணத்தில் கூட்டத்தில் ஒருத்தியாக நின்றுவிட்டு வருகிறாள். எல்லாருடைய வீட்டுத் திருமணங்களுக்கும்
அவள் சென்றிருந்தாலும் எந்த வீட்டு ஆல்பத்திலும் அவளுடைய படம் இல்லை.
அவளுக்கு
இரு பிள்ளைகள் பிறந்து வளர்ந்து அவர்களுக்கும் திருமணம் நிகழ்கிறது. அந்த ஆல்பங்களிலும்
அவள் முகம் இல்லை. பேரப்பிள்ளைகள் பிறந்து வளர்ந்து வீட்டைச் சுற்றி ஆடிக் களிக்கிறார்கள்.
அவர்களுடைய படங்களை வகைவகையாக எடுப்பவர்கள் ஒருவரும் அவளுடைய படத்தை எடுப்பதில்லை.
அம்மாதானே என்கிற அலட்சியம் அனைவருடைய நெஞ்சில் நிறைந்திருக்கிறது. ஒருமுறை குடும்பத்தாரோடு
வெளியே சென்றிருக்கும் இடத்தில் இயற்கைக்காட்சி நிறைந்த பின்னணியில் தன்னை நிற்கவைத்து
படம் எடுக்கும்படி மகனிடம் கேட்கிறாள். மகன் அதை விளையாட்டாக நினைத்து “ஒனக்கு வேற
வேலையே இல்லையாம்மா? போம்மா” என சிடுசிடுத்து அனுப்பிவைத்துவிடுகிறான்.
ஒருநாள்
திடீரென அவள் மறைந்துவிடுகிறாள். அந்த மரணத்துக்கான சடங்கு செய்யும் நேரத்தில் அவளுடைய
படத்தை வைத்து பூசை செய்யவேண்டும் என ஒவ்வொருவரும் குறிப்பிடுகின்றனர். அப்போதுதான்
அவளுடைய படமே வீட்டில் இல்லை என்பது அனைவருக்கும் உறைக்கிறது. வீட்டு உறுப்பினர்கள்
ஒவ்வொருவருடைய கையிலும் விலையுயர்ந்த கைப்பேசிகள் இருந்தபோது, ஒவ்வொரு கைப்பேசியிலும்
நூற்றுக்கணக்கான படங்கள் இருந்தபோதும், ஒருவரிடம் கூட அம்மாவின் படம் இல்லை.
நம் குடும்பத்தில்
அம்மாவை நாம் எப்படி நடத்துகிறோம், காரணமே இல்லாமல் ஏன் புறக்கணிக்கிறோம் என்னும் கோணத்தில்
சிந்திக்கவைக்கிறது இக்கதை. அன்பின் பெயரால் அவளை அனைவரும் பயன்படுத்திக்கொள்கிறவர்களாகவே
இருக்கிறார்களே தவிர, அவளுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் ஒருவரும் இல்லை என்பதுதான்
கசப்பான உண்மை. அதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் விஜயானந்தலட்சுமி.
அன்பைப்
புறக்கணிப்பது எந்த அளவுக்குப் பிழையோ, அதைப்போல அன்பைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதும்
பிழையே. ’அழகர் நாயகி’ என்னும் கதையில் அத்தகு வாழ்க்கைச்சித்திரத்தை நாம் பார்க்கலாம்.
நாயகியை உறவினரும் ஊராரும் அவள் கணவன் அழகரை ஆட்டிப் படைக்கும் சூத்திரதாரியாகப் பார்க்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் அழகரே அப்படி நினைக்கத் தொடங்கி, அதற்குப் பழக்கப்பட்டுவிடுகிறான்.
சொந்த ஊரில் விவசாயத்துக்கு வழியில்லாமல் போய்விடும் சூழலில் மூன்று ஆண்டு கால ஒப்பந்தத்தின்
அடிப்படையில் பூனாவுக்குச் சென்று வேலை பார்க்கும் முடிவை அவன் எடுக்கும்போது அவள்
சொல்லும் சொற்கள் அவன் கண்களைத் திறக்கின்றன. அவளுடைய அன்பின் ஆழத்தை அவன் அக்கணத்தில்
உணர்ந்துகொள்கிறான்.
விஜயானந்தலட்சுமி
தன் ஒவ்வொரு சிறுகதையிலும் வாழ்க்கையில் சந்திக்கும் நெருக்கடியின் புதிய கோணங்களை
அழகான கோட்டோவியங்களாகத் தீட்டியிருக்கிறார். முதல் முயற்சியிலேயே மனத்தைத் தொடும்
கதைகளை அவரால் எழுதமுடிந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விஜயானந்தலட்சுமிக்கு வாழ்த்துகள்.
(மழைமுகம் – விஜயானந்தலட்சுமி. சிறுகதைகள்.
சந்தியா பதிப்பகம், 77, 53வது தெரு, 9வது அவென்யு, அசோக்நகர், சென்னை -600083. விலை.
ரூ.130)
(புக் டே இணையதளம் - 24.01.2026)
