Home

Showing posts with label தீபாவளி மலர். Show all posts
Showing posts with label தீபாவளி மலர். Show all posts

Sunday, 17 November 2024

புன்னகையின் வெளிச்சம்

 

மீனாட்சி அக்கா ஜன்னலோரமாக தையல் மிஷினில் புடவைக்கு ஃபால்ஸ் வைத்து தைத்துக்கொண்டிருந்தாள். காமாட்சி அக்கா தூணில் சாய்ந்தபடி மடியில் முறத்தை வைத்துக்கொண்டு வேர்க்கடலையை தோல் உரித்துக்கொண்டிருந்தாள். ”வேலை விஷயமா ஒரு கம்பெனி மானேஜர பார்க்கப் போவலாம் வாடான்னு ராகவன் சொல்லியிருந்தான். நெல்லித்தோப்பு வரைக்கும் போயிட்டு வரேங்க்கா” என்று இரண்டு அக்காக்களிடமும் பொதுவாக விடைபெற்றுக்கொண்டு ’சின்னஞ்சிறு கிளியே என் சித்திரப் பூங்குயிலே’ என ஒரு சினிமாப்பாட்டை முணுமுணுத்தபடி வெளியே வந்தான் குமாரசாமி. 

Monday, 4 January 2021

நெருப்பு வளையங்கள் - சிறுகதை

 

நெருப்பு வளைத்துக்குள் ஒரு பறவையைப்போல புகுந்து தாவினாள் ராணி. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்துக்கும் வலது பக்கத்திலிருந்து இடது பக்கத்துக்கும் தாவி செருகப்பட்ட அம்புபோல நின்றாள். முதல் சுற்று முடிந்தது. பார்வையாளர்களைப் பார்த்து இரண்டு கைகளையும் அசைத்தாள். பதற்றமாக இருந்தது. வளையத்தைச் சுற்றி கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு கண்களைக் கூச வைத்தது. ஒவ்வொரு முறையும் அது தன்னை விழுங்கத் தயாராக வாயைத் திறந்து காத்திருப்பதுபோலவும் அதன் பற்களில் விழாமல் தப்பித்து வருவதுபோலவும் ஒருகணம் அவளுக்குத் தோன்றியது. சட்டென அவள் மனத்தில் கசந்துபோன தன் இல்லற வாழ்க்கையின் சித்திரம் எழுந்தது. ஒரு வகையில் அதுவும் விழுங்கக் காத்திருந்த நெருப்பு வளையம்தான். விழாமல் மீண்ட விதம் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் விடாமல் கைதட்டிக் கொண்டிருந்தார்கள்.

Thursday, 22 November 2018

படம் - சிறுகதை




பார்வையாளர்கள் நேரம் தொடங்குகிற நாலரை மணிக்கு வெளியே வருகிற முத்துசாமி அண்ணனிடமிருந்து பொறுப்பை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் ஏற்பாடு. நான் அதற்கு முன்பாகவே மருத்துவமனைக்குப் போய்விட்டேன். ஷேர் ஆட்டோவைத் தவிர்த்துவிட்டு பஸ்ஸ்டாண்டிலிருந்து ஜி.எச்.வரைக்கும் நடந்தே வந்ததில் பத்து ரூபாய் செலவு மிச்சம். நேற்றும் இப்படித்தான் செய்தேன். ஆனால் ஜி.எச். வந்து சேர சற்றே தாமதமாகிவிட்டது. பஸ் பிடித்த நேரத்தில் ஏதோ தப்பு நடந்துவிட்டது. நான் எவ்வளவோ எடுத்துச் சொன்னபோதும் கூட வாசலில் கோபத்தோடு காத்திருந்த முத்துசாமி அண்ணனுக்கு நம்பிக்கை வரவில்லை. பொறுப்பில்லாமல் தாமதமாக வந்து நிற்பதாகவே குற்றம் சொன்னார்.