Home

Monday 4 January 2021

நெருப்பு வளையங்கள் - சிறுகதை

 

நெருப்பு வளைத்துக்குள் ஒரு பறவையைப்போல புகுந்து தாவினாள் ராணி. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்துக்கும் வலது பக்கத்திலிருந்து இடது பக்கத்துக்கும் தாவி செருகப்பட்ட அம்புபோல நின்றாள். முதல் சுற்று முடிந்தது. பார்வையாளர்களைப் பார்த்து இரண்டு கைகளையும் அசைத்தாள். பதற்றமாக இருந்தது. வளையத்தைச் சுற்றி கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு கண்களைக் கூச வைத்தது. ஒவ்வொரு முறையும் அது தன்னை விழுங்கத் தயாராக வாயைத் திறந்து காத்திருப்பதுபோலவும் அதன் பற்களில் விழாமல் தப்பித்து வருவதுபோலவும் ஒருகணம் அவளுக்குத் தோன்றியது. சட்டென அவள் மனத்தில் கசந்துபோன தன் இல்லற வாழ்க்கையின் சித்திரம் எழுந்தது. ஒரு வகையில் அதுவும் விழுங்கக் காத்திருந்த நெருப்பு வளையம்தான். விழாமல் மீண்ட விதம் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் விடாமல் கைதட்டிக் கொண்டிருந்தார்கள்.

அரங்கத்தைச் சுற்றிப் பார்வையைப் படரவிட்டாள் ராணி. எங்கெங்கும் மக்கள் வெள்ளம். சுற்றிலும் வெள்ளைத் துணியாலான உட்கூடாரமும் இடையிடையே பல நிறங்களில் அமைந்த துணித்தொங்கல்களும் அலங்கார விளக்குகளின் வெளிச்சத்தில் வேறொரு உலகில் இருப்பதைப்போன்ற பிரமையைக் கொடுத்தது. அனைவருடைய கண்களும் மேடையின் மையத்தில் குவிந்திருந்தன. அங்கங்கே பலரின் கைகள் அவளை நோக்கி அசைந்தன. சிலர் தம் முத்தங்களைக் காற்றில் தூது விட்டார்கள்.

அவள் அடுதத சுற்றுக்குத் தயாரானாள். இப்போது இன்னொரு நெருப்பு வளையமும் அரங்குக்குள் வந்துவிட்டது. ஓர் அடி வித்தியாசத்தில் அடுத்தடுத்து இரண்டு வளையங்கள். சுழலும் நெருப்பு அலை. சட்டென விலகிப் போன அவள் கணவனின் நினைவு வந்தது. அவனை நினைத்ததும் கைதட்டல்களால் சேகரித்துக்கொண்ட உற்சாகம் மெல்ல வடியத் தொடங்கியது. அதை வடியவிடக்கூடாது என உள்மனம் எச்சரித்தது. இனி அடுத்தடுத்து வரும் எல்லா வளையங்களையும் இந்த உற்சாகத் துணையுடன்தான் தாவ வேண்டும். இன்றோடு இந்த வளையம் தாண்டும் காட்சியை முடித்துக்கொள்ளலாம் என முதலாளி சொல்லியிருந்தார். வரவர இந்தக் காட்சிகளில் புதுமை இல்லை என்பதால் புதிய காட்சிக்குப் புதிய இளம்பெண்ணைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சிகள் நடந்தபடி இருந்தன. இறுதிக் காட்சி என்பதால் வளையங்களின் எண்ணிக்கையில் கூடுதலாக ஒரு வளையத்தையும் அவளாகவே சேர்த்துக்கொண்டாள். நாளை முதல் வேறு வாழ்வைத் தொடங்கவேண்டும். எதையாவது கண்டுபிடித்து எப்படியாவது செய்யவேண்டும். அதுவரை இந்த ஊக்கத்தைத்தான் ஒரு மருந்தைப்போல ரத்தத்தில் கலந்து ஓடி வைக்கவேண்டும்.

அவள் ஓடித் தாவ முதல் அடியை வைத்தாள். பார்வையாளர்கள் கைத்தட்டத் தொடங்கினார்கள். அவள் கால் நிலத்தில் பதியும் ஒவ்வொரு முறையும் கைத்தட்டல்கள் ஒலித்தன. அவள் பாதத்துக்கும் அவர்கள் கைகளுக்கும் ஏதோ லயம் கூடி வந்திருந்தது.

அவள் கண்கள் அந்த வளையத்தையே பார்த்தன. ஒரு கணம் அந்த வளையத்தில் தன் கணவனின் சிவந்த கண்ணின் சித்திரம் தெரிந்தது. உடனே அச்சித்திரத்தை அழித்தாள். ஒருகணம்கூடத் தடுமாறக்கூடாது என்று உறுதிகொண்டாள். அங்கே நெருப்பு வளையம். இங்கே நான். உலகில் இந்த இரண்டைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதை ஞாபகப்படுத்திக்கொண்டாள். ஒரு பறவை போல தாவுவதற்காக அவள் காலை எடுத்த தருணத்திலேயே தாவி முடிக்கலாம் என்கிற நம்பிக்கை பிறந்தது. சரியாகச் செய்துவிடுவோம் என்கிற உத்வேகம் மூண்டது. சரசரவென்று ஒரு அம்பைப்போல வளையத்துக்குள் புகுந்து மறுபக்கம் குதித்தாள். கைதட்டல் அரங்கத்தை நிறைத்தது. ஒரே துள்ளலில் திரும்பி மறுபடியும் ஒரு சிறுநடை. அப்புறம் ஓட்டம். அதற்கப்புறம் தாவல். கைதட்டல் மேலும் பெருகியது. அவள் புன்னகை மாறாத முகத்துடன் அரங்கத்தை நோக்கிக் கைகளை நன்றியுடன் அசைத்தாள்.

தன் பதற்றத்தை எண்ணி அவளுக்கு வருத்தம் மிகுந்தது. ஆபத்தாக ஏதாவது நடந்துவிடும் என எதிர்பார்க்கிறேனோ எனத் தன்னையே கேட்டுக்கொண்டாள். ஆதாரமாக இருந்த இல்வாழ்வைத் துறந்தபோது உருவான பதற்றம் இப்போது ஏன் தொற்றத் துடிக்கிறதோ என்று கசப்புடன் மனத்துக்குள் சொல்லிக்கொண்டாள். அடுத்த நாள் முதல் புதிய ஒரு வாழ்வை வெட்டவெளியிலிருந்து உருவாக்கிக்கொள்ள வேண்டுமே என்கிற எண்ணமே பதற்றத்துக்குக் காரணம் எனத் தோன்றியது. இத்தனை காலமும் கிட்டியிருந்த சர்க்கஸ் அரங்கின் அடைக்கலம் கலையப் போகிறது என்கிற உண்மையாலும் நேர்ந்த பதற்றம் அது.

அவள் அரங்கை மறுபடியும் சுற்றிப் பார்த்தாள். தன் எண்ணத்தில் குழப்பம் ஒரு திரைபோலப் படிவதை உணர்ந்தபடி நின்றாள். மூச்சு முட்டுகிற அளவுக்கு அத்திரையைப் போர்த்திக்கொண்டிருப்பதை நினைத்துத் தன்னையே நொந்து கொண்டாள். அதை வீசு வீசு என்று மறைத்துக் கட்டளையிட்டபடி அரங்கை ஒரு தரம் சுற்றி வந்தாள். அதற்கு இசைவாக இசைத்தட்டு ஒலிக்கத் தொடங்கியது. மிக அருகில் தன் பார்வையில் பட்டுப்போகும் அவள் மீது ஆவலுடன் பார்வையைப் படரவிட்டது அரங்கம். ஜிகினா பொருந்திய இறுக்கமான சோளி. தொடை வரைக்கும் கால்சட்டை. வாளிப்பான உடல்கட்டு. பத்து ஆண்டுகளாக அரங்கைச் சுற்றிவரும் ஒவ்வொரு முறையும் அவளுள் உருவாகும் மனக்கிளர்ச்சி சற்றும் குறையாமல் இருப்பது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. பாரத் சர்க்கஸ் மதுரையில் கூடாரமடித்தபோது அதில் சேர்ந்தாள் அவள். ஆனால் திருநெல்வேலியில்தான் அவள் நிகழ்ச்சிக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அதுவரை கடினமான பயிற்சிகள் மட்டுமே. அந்த உடல்வாகு குறைந்துவிடாமலே இன்னமும் தனக்கு இருப்பதாக எண்ணினாள். அதே கணம் இது தன்னுடைய விழைவுதானோ என்கிற எண்ணம் எழுந்தபோது அந்தக் கற்பனை சரிந்தது. மனத்தில் ஒரு முள் இடறியபடி இருந்தது. அப்போதுதான் அரங்கில் நாலாவது வரிசையில் இறுக்கமான முகத்துடன் தன்னையே உற்றுப் பார்க்கும் அவனைக் கண்டாள். குமரேசன். அவளோடு வாழ்ந்துவிட்டு விலகிப் போனவன். சட்டென உற்சாகத்தையெல்லாம் இழந்து வெறுமையுற்றது அவள் மனம். உற்றுப் பார்க்கும் அவன் கண்கள் மீண்டும் மீண்டும் நெஞ்சிலெழுந்தன. தன்னை விழுங்க நினைக்கிற வெறி அதில் ததும்புவதை உணர்ந்தாள். ஆசைவலையை விரித்து விட்டு அப்பாவித் தோற்றம் காட்டி விழுங்கக் காத்திருக்கும் பார்வை.

அவனுடன் சேர்ந்திருந்த சிறிது காலத்தில் எத்தனையோ தருணங்களில் அந்தப் பார்வையை எதிர்கொண்டிருக்கிறாள் அவள். அந்த அனுபவமே அவளை எச்சரிக்கையின் விளிம்புக்குத் தள்ளியது. தனக்கும் அவனுக்கும் எத்தொடர்வும் இல்லை என்று அறுத்து உதறிப் பல காலத்துக்குப் பிறகும் இந்த எச்சரிக்கை சட்டெனப் படர்ந்துவிட்ட வேகத்தை நினைத்து அவள் வெட்கம் கொண்டாள். அவன் உன் கணவனல்ல, யாரோ ஒருவன். சர்க்கஸ் பார்க்க வந்து கூடியிருக்கும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களில் அவனும் ஒருவன் என்று மனத்தைத் திருப்பினாள். மீண்டும் அரங்கத்தின் மையத்துக்கு வந்து நின்றாள். அரங்கம் கைத்தட்டலில் அதிர்ந்தது. அதை ஏற்று மூன்றாம் சுற்றுக்குத் தயாரானாள். இப்போது அவள் முன்னிலையில் மூன்று வளையங்கள் ஒளிர்ந்தன. பார்வை மீண்டும்மீண்டும் குமரேசனின் பக்கம் செல்ல முயன்றது. இது நெருப்பு வளையம். வளையங்களின் இடைப்பட்ட பாதைதான் தனக்கு இருக்கும் ஒரே வழி. இதில் புகுந்து மீள்வது தான் எனக்கு இருக்கும் ஒரே வழி. நெருப்பின் மீதல்ல. இடையிலிருக்கும் வழியில் கவனத்தைக் குவி. மீண்டும் மீண்டும் மனத்தில் சொல்லிக்கொண்டாள். அவள் கால்கள் லயம் பிசகாமல் அடியெடுத்து ஓடிவரத் தொடங்கின. மனித உருவிலிருந்து பறவையாக மாறும் கணத்தை நோக்கி வேகவேகமாகத் தாவிக்கொண்டிருந்தாள். அரங்கத்தில் கைதட்டல் உச்சத்துக்குச் சென்று கொண்டிருந்தது. தாவும் புள்ளியில் கச்சிதமாக அவள் கால்கள் மேலெழ அவள் தோள்களில் இறகுகள் முளைத்தன. மறுகணமே அவள் அடுத்த பக்கம் இறங்கி மெல்லமெல்ல ஓடி மீண்டும் திரும்பி வளையத்தை நோக்கி ஓடி வந்து தாவி இந்தப் பக்கம் வந்தாள். கைதட்டல்கள் அவள் மனத்தை அதிரவைத்தன. புன்னகை தவழும் முகத்துடன் அவள் அரங்கத்தை நோக்கிக் கையசைத்தாள். அரங்கின் இசை முழங்கத் தொடங்க, மறுசுற்றுக்கான தயாரிப்பு வேலைகள் தொடங்கின.

நாலாவது சுற்றுக்கு வளையம் தயாராகி விட்டது. பழைய எந்தப் பதற்றமும் அவளுக்குள் இப்போது இல்லை. அவள் அரங்கை ஒருமுறை மீண்டும் சுற்றிப் பார்த்தாள். அரங்கம் அப்போதே கைதட்டத் தொடங்கியிருந்தது. வளையத்துக்குள் புகுந்து தாவுவதையே கண்டு பழகிக் கைதட்டி இதே கூட்டம் வளையத்துக்குள் விழநேரும் கணத்தில் என்ன செய்யும் என்று ஒருகணம் யோசித்தாள். அதையும் ஒரு ஆடடம்தானோ என நினைத்து அப்போதும் கைதட்டினாலும் கைதட்டும் என்று தோன்றியது. கசப்பான சிரிப்புப் படர்ந்தது. யாருமே தட்டாவிட்டாலும் குமரேசன் தட்டுவான் என்று தோன்றியது. ஒரு பெண்ணின் ¢தோல்வியில் ஆணின் அகங்காரம் மேலும் வலிமையுடன் வளர்ந்து பெருகும். தவிர்க்க இயலாமல் அவள் பார்வை அவன் பக்கம் சென்றது. அப்போது அவன் அருகில் உட்கார்ந்திருந்த சர்க்கஸ் முதலாளியைப் பார்த்து ஆச்சரியம் கொண்டாள். இருவரும் சிரித்துப் பேசுவது தெரிந்தது. ஒருகணம் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு சந்தேகத்தின் முளை மனத்தில் உதித்தது. அதை நம்பமுடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. கொந்தளித்த மனத்துடன் சுற்றுக்குத் தயாரானாள்.

என்ன குழப்பம் இது என்று தவிப்புடன் மனத்தின் எண்ணங்களை வேகவேகமாக உதறினாள். அடுத்தடுத்து நான்கு வளையங்கள். அவற்றைமட்டும் பார் என்று மனத்துக்குக் கட்டளையிட்டாள். ஒரு நீண்ட குழாய்போலப் புகுந்து செல்லும் பாதை வட்டமாக இருந்தது. சுற்றிலும் நெருப்பு அலைகள் தாவின. தொடையின் தசைநார்களில் இறுக்கமேறியது. கைகள் சிறகுகளாக மாறத் தயாராயின.

அடிமைப்படுத்த நினைக்கிற எண்ணங்கள்தாம் நெருப்பு வளையம் போலும். நிஜமான நெருப்பைத் தாண்டுவதையே தொழிலாகக் கொண்டவள் அவள். அவன் தன் முன்னால் பிடித்த ஒவ்வொரு வளையத்தையும் லாவகமாகத் தாண்டித்தாண்டி வந்தாள். இன்றில்லாவிடினும் என்றாவது தடுமாறி விழக்கூடும் என்று வளையங்களை ஏந்தியபடி காத்திருந்தான் அவன். அவளுடைய சாமர்த்தியமும் நிதானமும் அவனைப் பொறுமையின் விளிம்புக்கே தள்ளியதில் அவனுடைய உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது. உனக்கும் எனக்கும் ஒத்துவராது என்று உதறிவிட்டுப் போய்விட்டான்.

அவள் கால்மாற்றிக் கால்மாற்றி வளையங்களையே பார்த்தபடி இருந்ததைக் கண்டு கொறுமையிழந்த பார்வையாளர்கள் ‘‘கமான் கமான்’’ என்று உத்வேகத்தோடு கூவத் தொடங்கினார்கள். சட்டெனத் தன்னை மீறி மனத்தில் நுழைந்துவிட்ட காட்சிகளை உதறினாள். தழலின் விரல்கள் எட்டுத் திசையிலும் விரிந்து அலைந்தன. தீயின் உக்கிரத்தை மேலும் பெருக்குவதற்காக பெட்ரோலில் நனைத்த குச்சியால் தூண்டிவிட்டான் பணியாளன். சட்டென வெறிகொண்ட விலங்குபோல நெருப்புச்சுடர் பரவியலையத் தொடங்கியது. அரங்கிலிருந்த பார்வையாளர்கள் கைதட்டியும் சத்தம் போட்டும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அவர்கள் அழைப்பு அவள் ரத்த நாளங்களில் படிந்து உத்வேகமூட்டியது.

அவள் வளையத்தை நோக்கி முன்னேறினாள். வழக்கமான புள்ளியில் துல்லியமாக வானில் எழுந்தாள். ஒரு பறவைபோல அவள் உடல் மிதந்து வளையத்துக்குள் புகுந்து மறுபக்கம் சென்று வட்டமடித்த பறவை திரும்புவதுபோல இந்தப் பக்கம் மீண்டு வந்தாள். அரங்கத்தின் கைதட்டல் நெடுநேரம் ஒலித்தது.

இறுதிச்சுற்றுக்கு ஏற்பாடுகள் தொடங்கின. பணியாளர்கள் புதிய வளையத்தைச் சுற்றிய பஞ்சுப்பொதியில் பெட்ரோலை நனைத்து நெருப்பைப் பற்றவைத்தார்கள். பார்வையாளர்கள் அனைவரும் இருக்கையிலிருந்து எழுந்து நின்றுகொண்டார்கள்.

அரங்க மையத்திலிருந்த ராணி உதவியாளர்கள் அறையைப் பார்த்து தண்ணீருக்காகக் சைகை செய்தாள். சில நெடிகளில் தேவி தண்ணீர்ப் பாட்டிலுடன் வெளிப்பட்டாள். ராணி அதை எதிர்பார்க்கவில்லை. அவள் மீது தொடக்கத்தில் சிறு மனத்தாங்கல் எழுந்திருந்தது உண்மை. நாளடைவில் அதைத் தாங்கி ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொண்டாள். அவள் நெருங்கித் தந்த தண்ணீரை நன்றியுடன் வாங்கி நாலைந்து மிடறுகள் பருகிவிட்டுத் தந்தாள்.

‘‘அக்கா, ஒங்க ப்ரோக்ராம் பிரமாதம்.’’

ராணி அவளைப் பார்த்து மெல்லச் சிரித்தாள்.

‘‘ஒங்களுக்கு ஈடா நாளைலேர்ந்து என் ப்ரோக்ராம் எப்படி அமையுமோ தெரியலை. அதை நெனைச்சா இப்பவே எனக்கு அடிவயிறு கலங்குது.’’

தேவியை நிமிர்ந்து பார்த்தாள் ராணி. நிஜமாகவே அவள் கலவரத்துடன் இருப்பது தெரிந்தது. பத்து ஆண்டுகளுக்கு முந்தைய தன் இளம் உருவமாக அவள் நின்றிருப்பதைப் போலப் பட்டது.

‘‘உன்னால முடியும் தேவி. வீணா மனசைப் போட்டுக் கொழப்பிக்காதே.’’

‘‘உண்மையா சொல்றீங்களா அக்கா?’’ அவள் பதற்றத்துடனும் ஒருவித ஏக்கத்துடனும் கேட்டாள்.

‘‘சத்தியமா’’ நிறுத்திச் சொன்னாள் ராணி.

அவள் கண்களில் நிம்மதி படர்வதைப் பார்த்தாள் ராணி. அவள் தோள்களைத் தட்டி அனுப்பினாள். தண்ணீர்ப் பாட்டிலோடு அவள் விலகி ஓடியதும் அவள் பார்வை வளையங்களின் ஒருமையில் பதிந்தது. தேவையில்லாமல் இந்த ஐந்தாவது வளையச் சுற்றை அவளாகவே உருவாக்கிக் கொண்டாள். அது மீண்டும் மீண்டும் அறிவிப்பாக ஒலித்துக்கொண்டிருந்தது. ஏற்பாடுகள் செய்யச் சொல்லிவிட்டாளே தவிர வளையத்தின் முன்னால் நிற்கிற இந்தக் கணம் எல்லாமே வேடிக்கையாகப்பட்டது. தன் திறமையை எவருக்கும் நிரூபிக்கவேண்டிய அவசியமில்லாத சூழலில் ஏன் இந்த பரபரப்பு என்று தோன்றியது. நெருப்பு வளைத்தின் இறுதி ஆட்டத்தின் இறுதி வளையம். விறுவிறுப்பு கூடும் என்பதைத் தவிர இதற்கு என்ன பொருள் என்று தன் மனத்தையே கேட்டுக்கொண்டாள்.

இன்றுதான் இறுதி ஆட்டம் என்று முதலாளி முடிவுசெய்ததும் அவளாகவே இந்தக் கூடுதல் வளையத்துக்குத் தயாரானாள். ஐந்து வளையங்கள் என்பது சாதாரண விஷயமல்ல. மொத்தம் நாலடி தூரம் உடல் நேராக அம்பு போலப் போய்க்கொண்டேஇருக்கவேண்டும். ஒரே ஒரு அங்குலம்கூட வளையவோ மடியவோ கூடாது. மடிந்து விட்டதெனில் அதுவே இறுதியாகிவிடும். எச்சரிக்கையுணர்வுகள் கூர்மை பெற்றுக்கொண்டிருந்த அதே கணத்தில் மடியாமல் தாவினாலும்கூட இதுவே இறுதியாட்டம் என்ற எண்ணம் எழுந்ததில் அவள் மனத்தில் கசப்பும் சலிப்பும் படர்ந்தன. தொடர்ந்து விரக்தி படிந்தது. சட்டென இந்த வாழ்க்கைக்கெல்லாம் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா என்று கேள்வி விழுந்து தளரச் செய்தது.

அவள் தன் மன ஓட்டத்தின் விபரீதத்தை நொடியில் உணர்ந்தாள். உடனே அனைத்தையும் உதறி உத்வேகம் பெறப் பார்வையாளர்கள் பகுதியில் பார்வையைப் படரவிட்டாள். கைதட்டல் உச்சத்தில் இருந்தது. முதல் வரிசையில் ஒரு இளம் தம்பதிகள் நெருக்கமாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் ஒருவரையொருவர் அடிக்கடி பார்த்துச் சிரித்தபடி கைதட்டினார்கள். பின்புறம் இன்னொரு தம்பதிகள். அவர்கள் கைதட்டும் விதம் வினோதமாக இருந்தது. மூன்று முறை சொல்லி வைத்த மாதிரி இருவரும் தனித்தனியே கைதட்டினார்கள். நாலாவது முறை இருவருடைய கைகளும் இணைந்து தட்டின தொடர்ந்து பல ஜோடிகள் கைதட்டினார்கள். அனைவரின் பார்வையும் அவள் மீது இருக்க அவர்கள் யாரையும் அரைக்கணத்துக்கு மேல் பார்க்க இயலவில்லை. தாள இயலாத நிலையில் தானாக அவள் பார்வை குமரேசன் பக்கம் குவிந்தது. அவன் இன்னும் அதே இறுக்கமான முகத்துடன் இருந்தான். அதுவரை அவன் பக்கத்திலிருந்த முதலாளி அவன் பக்கத்தில் இல்லை.

வளையங்கள் தயாரானதையொட்டி இசை முழங்கத் தொடங்கி வயிற்றைப் பரபரக்க வைத்தது. முதல் முழக்கத்தில் அவள் அடி வயிற்றுச் சதை அதிர்ந்தது. தொடைகள் இறுகின. கெண்டைக்கால் சதைகள் முறுக்கேறின. முழக்கம் மெல்ல மெல்ல உச்சத்தை நோக்கி ஏறியதும் அவள் கால்கள் ஓடத் தொடங்கின. கண்கள் செங்குத்தான அந்த வளையத்தின் மையத்தில் பதிந்தன. தாவ வேண்டிய தருணத்தில் மிகச் சரியாக அவள் உடல் பறவையாக மேலெழுந்து உள்நுழைந்து மீண்டும் திரும்பிப் பறந்து வந்து தரையில் இறங்கியது. தரையில் கால் பதித்த கணம் அவள் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தாள். கடவுளை நினைத்து மனத்துக்குள் நன்றி சொன்னாள். பிறகுதான் பார்வையாளர்களைப் பார்த்தாள். நம்ப முடியாத பரவசத்தில் கூட்டம் தொடர்ந்து கைதட்டிக்கொண்டிருந்தது. அந்தக் கணத்தில் மனத்தை நிறுத்தி உள்வாங்கினாள். அந்தப் பரவசத்தை அவளால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அந்தக் கைதட்டல் ஒவ்வொன்றையும் தன் மனத்தின் குரலாக மாற்றி உணர்ந்தாள். நாளை முதல் இந்தப் பாராட்டுகள் இருக்காது எனத் தோன்றிய கணத்தில் அவள் கண்கள் தற்செயலாகக் கலங்கின. அவள் தொண்டை அடைத்தது. தலைவணங்கி அரங்கின் பாராட்டுகளை ஏற்ற ராணி ஒப்பனை அரங்கை நோக்கித் திரும்பினாள்.

அறைக்குள் நுழைந்து தேவி அவளைக் கட்டித் தழுவினாள். சூழலையே பொருட்படுத்தாமல் அவள் கன்னத்தில் பரபரப்புடன் முத்தமிட்டாள். மற்ற ஆட்டக்காரர்கள் கும்பலாக வந்து அவளை மகிழ்ச்சியுடன் பாராட்டினார்கள்.

‘‘பிரமாதம் ராணி, பிரமாதம்.’’

‘‘எல்லோருக்குமே உயிர் போய் உயிர் வந்த மாதிரி இருந்தது.’’

‘‘இந்த ஷோவே உங்களுக்காகத்தான் ராணி. என்ன க்ளாப்ஸ் பாத்தீங்களா?’’

‘‘இவளோ நல்ல ப்ரோக்ராமை மொதலாளி எதுக்கு நிறுத்தறாரோ தெரியலை.’’

அடுத்த ஆட்டத்துக்கு மணியடிக்கவே கும்பல் அரங்கை நோக்கி ஓடியது. தேவியும் ராணியும் தனித்திருந்தார்கள். ராணியின் மனம் அடங்கி விட்டது. இப்போது எந்தச் சீற்றமும் இல்லை. உடைகளைக் களைந்து மாற்று உடை அணிந்தாள். இறுக்கமான ஜிகினா உடைகளைக் களையும்போது இனி இந்த உடைகளைத் தான் அணியப் போவதில்லை என்கிற எண்ணம் எழுந்து அவள் மனத்தைக் கரைக்கத் தொடங்கியது. தாடைகளை இறுக்கி அந்த எண்ணத்தைக் களைந்தாள். தேவியிடம் ஏதாவது பேசவேண்டும் என்று அவள் மனம் உள்ளூர விரும்பியது. ஆனால் வார்த்தைகள் வரவில்லை. ‘‘தேவி, அந்தத் தண்ணி பாட்டில் எங்க?’’ என்று கேட்டாள். அவள் மூலையில் கண்ணாடியின் பக்கத்தில் இருந்த பாட்டிலை எடுத்துக் கொடுத்தாள். தாகத்தால் தவித்தவள்போல எல்லாத் தண்ணீரையும் ஒரே மூச்சில் குடித்து முடித்தாள் ராணி.

‘‘ராணி மொதலாளி கூப்படறாரு’’ என்று ஒருவன் வந்து அழைத்தான். அவள் ‘‘எதுக்கு?’’ என்றாள். அவன் ‘‘தெரியலை. உடனே கூப்புடுன்னு சொன்னாரு’’ என்று தயங்கி நின்றான். ‘‘சடைசி செட்டில்மென்ட்’’ என்று கசப்புடன் மனத்துக்குள் முணுமுணுத்தபடி அவனுடன் சென்றான்.

முதலாளி அறையில் உட்கார்ந்திருந்தார். அரங்கத்துக்குள் குமரேசன் அருகில் உட்கார்ந்திருந்த அதே தோற்றம். ராணியின் முகத்தைக் கண்டதும் அவர் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது. அதை அவள் எதிர்பார்க்கவில்லை.

‘‘ராணி, உன் ப்ரோக்ராமை முடிச்சிக்கப் போறேன்னு சொன்னதை நெனைச்சி ரொம்பவும் மனசு கஷ்டப்பட்டுட்டியா?’’ என்றார் சிரித்தபடி.

‘‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை மொதலாளி’’ என்றாள் ராணி மெதுவாக.

‘‘எந்த ப்ரோக்ராமா இருந்தாலும் ஜனங்களுக்கு அலுக்கறதுக்கு முன்னால நாமளே மாத்திடணுங்கறது என்னுடைய கொள்கை. இன்னிக்கு உன் ப்ரோக்ராமுக்குக் கெடைச்ச கைதட்டலைப் பாத்தியா?’’ நானும் உள்ள புகுந்து புகுந்து அவுங்க பேசிக்கறத கேட்டேன். அதுவும் என்னைக்கும் இல்லாத திருநாளா அந்த அஞ்சாவது வளையத்த வச்சி தாவனே பாரு, ரொம்ப சூப்பர். ஜனங்க எல்லாருமே அப்படியே மெய் மறந்துட்டாங்க. எல்லாம் ஒன் திறமைதான் காரணம்.’’

ராணி முறுவலித்தபடி அவர் முகத்தையே பார்த்திருந்தாள்.

‘‘ப்ரோக்ராமை இப்ப நிறுத்தறதா இல்ல ராணி. நீ எதப்பத்தியும் கவலைப்படாம தொடர்ந்து செஞ்சிட்டே இருக்கணும். கம்பெனி ஆதரவு உனக்கு எப்பவும் உண்டு. அதச் சொல்லத்தான் உன்னக் கூப்பிட்டேன். அந்த தேவி ப்ரோக்ராமையும் நல்ல டைம் ஸ்லாட்டா பார்த்து சேக்கணும். அது ஷோ வருதுங்கறதுக்காக நீ போவத் தேவயில்லையம்மா’’ அவர் முகத்தில் பளபளப்பு கூடிக்கொண்டே போனது.

‘‘நிறுத்திடலாம்ன்னு போனவாரம் சொன்னீங்களே.’’ அவரை கேள்வியுடன் பார்த்தாள் ராணி.447 பாவண்ணன் தொகுப்பு பாகம் 1 s

‘‘சொன்னது வாஸ்தவம்தான். இல்லன்னு சொல்லல. இப்ப ஜனங்க அபிப்பராயத்தை பார்த்தப்புறம் மனசை மாத்திக்கிட்டேன். நீ எதுக்கும் கவலப்படாத. போய் வேலையக் கவனிம்மா ராணி’’ அவர் ஆதரவான குரலில் சொன்னார்.

ராணி சிரித்தாள். ‘‘இல்ல மொதலாளி. தொடர்ந்து ஷோ செய்ய முடியாது. நான் நின்னுக்கறேன்’’ என்று சொன்னாள்.

‘‘என்னம்மா சொல்ற நீ?’’ நம்பமுடியாமல் பதறினார் முதலாளி. தாக்குண்டவர்போல எழுந்து நின்றார். ‘‘ராணி ராணி’’ என்று சொன்னபடி தடுமாறினார். ஏதேதோ சொற்கள் வாய்வரைக்கும் வந்ததை அப்படியே விழுங்கினார். ராணியின் தோற்றம் தன் முடிவை மாற்றிக்கொள்ளமாட்டாள் என்பதைக் கறாராகத் தெரிவித்தது.

‘‘ராணி யோசித்தித்தான் பேசறியா, இல்ல அன்னிக்கு நான் அவசரப்பட்டு பேசன மாதிரி நீயும் அவசரப்பட்டு பேசிறயா?’’ என்றார் அதிர்ச்சியுடன் முதலாளி.

‘‘நாலையும் யோசிச்சித்தான் சொல்றேன் முதலாளி. நான் நின்னுக்கறேன். இதுவே கடைசி ஷோவா இருக்கட்டும்.’’

அவர் கண்களைப் பார்த்துச் சொன்னாள் ராணி. அவர் கண்கள் எரியும் வளையங்களைப்போல இருந்தன. கச்சிதமாக அவற்றுக்குள் புகுந்து கடந்துவிட்டதைப்போல உணர்ந்தாள் ராணி.

(கல்கி -தீபாவளி மலர் -2002)