Home

Saturday 16 January 2021

சாயா - சிறுகதை

 பார்ப்பதற்குச் சாயா மாதிரிதான் தெரிந்தது. வேறு யாராவது இருக்கக்கூடுமோ என்றும் சந்தேகம். அம்பாரமாய் இளநீர்க்காய்களைக் குவித்துவைத்துக்கொண்டு பின்புறம் மாத்திரம் தெரிய நின்றுகொண்டிருந்தவளைச் சட்டென்று அடையாளம் கண்டுபிடிக்கச் சிரமப்பட்டேன். சுந்தரிக்குக் காட்டியதும் அவளுக்கும் சந்தேகம் தட்டியது. மனசுக்குள் ஒரு மாதிரியான ஆவல் உந்த, நிற்கிற பஸ்ஸை விட்டு இறங்கிக் கிடுகிடுவென்று பக்கத்தில் போய்ப் பார்த்தால், சாயாதான் அவள்.

அக்கா...

கையில் இருந்த கத்தியையும் காயையும் போட்டுவிட்டு டக்கென்று நகர்ந்து சுந்தரியின் கையைப் பிடித்துக் கொண்டாள். சென்னாகிதீரா சாரு..?’ என்று என்னைப் பார்த்துக் கேட்டாள். எந்தப் பதிலுக்கும் காத்திராத சந்தோஷம் அப்பிய முகத்துடன் தாவிப் பையனை வாங்கிக் கொண்டாள். அவளின் கன்னடக் கொஞ்சலுக்கு நடுவில் பையன் நெளிந்து சிரித்தான்.

சிரிப்பும் சந்தோஷமுமாகவே தெரிந்தாலும் சாயாவின் மெலிவிலும் கருத்துப்போன தேகத்திலும் சிரத்தையின்றி அள்ளிக் கட்டியிருந்த கொண்டையிலும் அவள் பலவீனமாய்க் குலைந்திருப்பது தெரிந்தது. இரண்டு வருஷத்துக்கு முன்பு ஹோஸ்பெட்டில் ஏழுமாசமோ எட்டுமாசமோ இருந்துவிட்டு அப்புறம் ஹுப்ளிக்கு மாற்றலாகிப் போனபோது பார்த்த குலைவைக் காட்டிலும் இன்னும் மோசமாகி நலிந்துபோய் இருந்தாள். கண்களில் பளபளக்கிற வெளிச்சமும் பெரிய உதடுகளுக்கு நடுவில் பட்டுத்துணிமாதிரி நெளிகிற சிரிப்பும்மட்டும் சாயாவின் சொந்த அடையாளமாய் இருக்க மற்றபடி யாரோ ஒரு குச்சியான பெண் மாதிரி தெரிந்தாள்.

தெரிந்த முகம், தெரியாதமுகம் என்ற வித்தியாசத்தைத் தாண்டி முதல் வார்த்தையிலேயே ஒட்டிப் பிரியமான சுபாவத்தினால் தன்னோடு நேசம்கொள்ளவைத்துவிடுகிற குணம் ரொம்பவும் விசித்திரமானது. சொந்த வாழ்வில் எத்தனையோ சங்கடங்களும் வருத்தங்களும் அரித்து அரித்து நிம்மதியை விழுங்கிக் கொண்டிருக்கும்போது கூட வேலிப்படலைத் தள்ளுகிறமாதிரி அவற்றையெல்லாம் தள்ளிவிட்டு மனிதர்களோடு மடமடவென்று பேசிச் சம்பந்தத்தை உருவாக்குகிற போக்கும் விசித்திரமானதுதான். வாழவந்த இடத்தில் படுகிற அவமானத்துக்காகவும் சிரமத்துக்காகவும் பரிதாபப்பட்டு சோகத்தோடும் ஆதுரத்தோடும் பிறர் பேசத்தொடங்கும்போது குறையையும் தாழ்வையும் கேட்டுக்கொண்டிருப்பதில் சங்கடப்பட்டவள்போல மெல்லமெல்ல பேச்சின் திசையையே மாற்றிவிடுகிற அவசரமும் எல்லாவற்றையும் காட்டிலும் விசித்திரமானதுதான். நாங்கள் ஹோஸ்பெட்டில் இருக்கிற காலம்வரைக்கும் தினசரி காலையும் மாலையும் பால் ஊற்றுகிறவளாக நின்று கொண்டிருப்பதும்கூட விசித்திரமாய்த்தான் இருந்தது.

விசித்திரமான முறையில்தான் சாயாவை முதன்முதலில் நாங்கள் எதிர்கொண்டோம்.

ஹோஸ்பெட் லாட்ஜில் நாலு நாள் தங்கி வாடகைக்கு வீடு பிடித்து வாங்கி வந்த ஓட்டல் பலகாரங்களைச் சாப்பிட்ட பிறகு பாத்திரமூட்டையைப் பிரித்து அடுக்கிக் கொண்டிருக்கிற சமயத்தில் ஈ மனெகே நீவே ஹொஸதாகி பந்திதீரா?’ என்ற சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தால் புதுசாக அடித்த பெயிண்ட் வாசனை மாறாத கதவைப் பிடித்துக்கொண்டு அவள் நின்றிருந்தாள். கேள்வியைத் தொடர்ந்து அந்த முகத்தில் சின்ன சிரிப்பு. மெலிதான கூச்சம். வாசல் தோட்டத்தில் வேப்பமரமும் புதர்புதராய் கனகாம்பரச் செடிகளும். பலாமரமும் அழகான விரிப்பாய் இருக்க, ஒரு உயரமான கொடிமாதிரி அவள் தோற்றமிருந்தது. கன்னட வார்த்தையின் புரியாமை சில கணங்களுக்குத் தாக்கினாலும் முதல்முறையாக ஒரு விருந்தாளியை எதிர்கொள்கிற நேசமான புன்னகையைச் சிந்தித் தலையசைத்தாள் சுந்தரி. கன்னடக்காரங்கள்ளாம் எப்படி இருக்காங்களோ?’ என்று பெங்களூரில் பஸ் ஏறின சமயத்தில் இருந்து தவித்துத்தவித்துப் புலம்பிக்கொண்டே வந்தவளுக்கு வாசலில் இறங்கிய கையோடு ஒரு சிநேகிதம் காத்துக்கிடக்கிறதைக் கண்டதும் உள்ளுக்குள் நிம்மதி புரளச் சிரித்துக்கொண்டேன்.

வாங்க.

தமிழிலேயே சுந்தரி சொன்னாலும் அறிமுகத்துக்குப் பாஷையெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்கிற மாதிரி ரொம்ப இயல்பாய் உள்ளே வந்தவள் பேச ஆரம்பித்தாள்.

ஊரு புடிச்சிருக்கா ஒங்களுக்கு? பிரமாதமான ஊரு. இங்க வந்த யாருக்கும் இத உட்டுப் போக மனசு வராது. கங்கா ஸ்நானம் துங்கா பானம்னு வசனமே உண்டு. துங்கபத்ரா தண்ணிக்கு அப்படி ஒரு ராசி. ஒரு தம்ளர் குடிச்சா போதும். இன்னம் கொண்டா இன்னம் கொண்டான்னு கேக்கும். இந்த ஊட்லே நீங்க சந்தோஷமா இருக்கலாம். நாங்கள்ளாம் ஒத்தாசயா இருக்கம். இதே தெரு கடைசில எங்க ஊடு. எல்லார்க்கும் நான்தான் பாலு ஊத்தறன். அரலிட்டரா ஒரு லிட்டரா சொல்லுங்க, அசல் பசும்பாலு. நா கொண்டாந்து ஊத்தறன்..

காசு இறைத்தமாதிரி படபடவென்று அவள் பேசிக்கொண்டே இருந்தாள். அவளுகே பாஷெ கொத்தில்லாஎன்று நடுவில் நான் சொன்னதும்தான் நிறுத்தினாள். சட்டென்று நாக்கைக் கடித்துக் கூச்சத்துடன் சிரித்துக் கொண்டாள்.

சார் பேசறிங்களே..!

நா மூனு வருஷமா கர்நாடகத்துலதான் சுத்தறன்

இவுங்க?’

இனிமேதா கத்துக்கணும்

கவலயே படாதீங்க. ஒரே மாசத்ல நா பேசற பேச்சுல அக்காவுக்குத் தானா வந்துரும்

பாயில் கிடந்த குழந்தையைத் தூக்கி முத்தமிட்டுத் தோள்மீது போட்டபடி நகர்ந்து சுந்தரியின் கையை வாங்கித் தன் கையோடு வைத்துக்கொண்டு ஆதரவோடு சொன்னவளை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சுந்தரியும் அள்ளிச் செருகியிருந்த புடவையைச் சரிப்படுத்திக்கொண்டு பிளாஸ்க்கில் மிச்சமிருந்த காப்பியை ஊற்றி அவளிடம் நீட்டினாள். எனக்கா?’ என்பதுபோல் ஆச்சரியம் படர நெஞ்சில் கைவைத்து கேட்டு வாங்கிக் குடித்தாள் அவள். உணர்த்தமுடியாத பரவசமும் நெகிழ்ந்து உருகும் பார்வையுமாய் அமைதியுடன் நின்றிருந்தாள்.

என்ன பேரு?’

சாயா

சாயா புறப்பட்டுப்போய் வெகுநேரத்துக்கு சுந்தரி சொல்லிச்சொல்லிச் சிரித்தாள். அவளைப் பொருத்த வரைக்கும் சாயா என்பது டவுன் டீக்கடையில் புழங்குகிற ஒரு வார்த்தையாகவே மட்டும் மனசில் பதிந்திருப்பதை உடைத்து சாயாவின் அர்த்தம் நிழல் என்று சொன்னேன். ஏற்கனவே கன்னடத்தில் தேர்ந்திருந்த சொற்ப அறிவின் துணை கொண்டு டீசாயாவுக்கும் நிழல்சாயாவுக்கும் இருக்கிற உச்சரிப்பு வித்தியாசத்தை எடுத்துச் சொன்னேன். பேருக்கேத்த பொண்ணுதாஎன்று சந்தோஷப்பட்டாள், சுந்தரி.

சுந்தரியின் கன்னட வழிகாட்டியாக அத்த நாளே மாறிவிட்டாள் சாயா. பால் ஊற்றி முடித்து, மாடு குளிப்பாட்டி, தொழுவம் கழுவி, புல்லை உதறிப்போட்டு, தொட்டியில் தண்ணீரை நிரப்பிவிட்டு பத்து பத்தரைக்கு வந்தால் மத்தியான சாப்பாடு வரைக்கும் கூடவே இருந்தாள். சமையலுக்கு ஒத்தாசை செய்து, குழந்தையைக் குளிப்பாட்டுவது, பேசிக்கொண்டே புட்டுக்கு மாவிடிப்பது என்று எல்லாக் காரியங்களிலும் துணையிருந்தாள். வீட்டில் இருக்கிற பாத்திரங்கள், காய்கறிகளில் தொடங்கி ஒவ்வொன்றுக்கும் சமமான கன்னட வார்த்தைகளைச் சொல்லித்தந்தாள். கடை, பஸ் ஸ்டாண்ட், தியேட்டரில் நிகழ்த்தவேண்டிய சம்பாஷணையைச் சமாளிக்கிற விதத்தைத் தெளிவாக்கினாள். நடைவண்டி உருட்டுகிற பையனைப் பலவந்தமாய் இழுத்து விதம்விதமான ஆட்டம் சொல்லித் தந்து கிச்சுமுச்சு மூட்டினாள். சொள் ஒழுக அவன் சிரிக்கும்போது எடுத்து நெற்றியில் முத்தமிட்டாள். அத்தைக்கு கண் அடி, அத்தைக்கு கண் அடிஎன்று அவனைச் சீண்டிவிட்டு, முகத்தை ஒரு தினுசாய்ச் சுருக்கி கண்களை மூடித் திறக்கிறதைக் கண்டு அவளும் குழந்தைபோலச் சிரித்தாள்.

தீபாவளி சமயம் நானும் சுந்தரியும் வெளியே போய் விட்டு சாயங்காலம் திரும்பி வாசலைத் திறந்த கையோடு அக்கடா என்று தரையில் உட்கார்ந்த சமயம் சாயா வந்து நின்றாள். முன் தலையில் ஆஸ்பத்திரிக்கட்டு இருந்தது.

என்னாச்சி சாயா...?’

அடிச்சிட்டாரு...

வார்த்தைகள் பொங்கிக்கொண்டு வந்தன அவளுக்கு. காலம் காலமாய் அனுபவித்து மனசைப் பாரமாக்கிய சுமையையெல்லாம் கொட்டிவிடப்போகிற மாதிரி விசும்பல்களோடும் கண்ணீர்ப் பெருக்கோடும் வளர்ந்த கதை வாழ்ந்த கதையையெல்லாம் சொன்னாள். அகன்று ஜொலிக்கும் அவள் கண்கள் களையிழந்து துக்கத்தில் மிதந்து கிடந்தன. பேச்சைத் தொடர்ந்து சில நிமிஷங்கள் மௌனமாய் இருந்தாள். அப்புறம் என்னைக் கேட்டாள்.

அக்காவ நீங்க அடிக்கமாட்டிங்களா...?’

ம்ஹும்...

எப்பயுமே அடிச்சது கெடையாதா...?’

ம்ஹும்...

திட்டக்கூட மாட்டிங்களா?’

ம்ஹும்..

கோவமே வராதா...?’

ம்ஹும்...

ரொம்ப குடுத்துவச்சவங்க நீங்க...

ஆசப்பட்டு கல்யாணம் பண்ணிட்டு அடிச்சிக்னு கெடக்கலாமா சாயா? மனுஷங்கறதுக்கு ஒரு அர்த்தம் வேணாமா

நான்லாம் ஆடுமாடுதா இங்க...

கண்ணீரைத் தேய்த்துத்தேய்த்துத் துடைத்துக்கொண்டு கசப்போடு சொல்லும்போது அவள் கண்கள் இருண்டன. சாயாவின் குணத்துக்கும் பேச்சுக்கும் வாழ்வு அவளைச் சேர்த்திருக்கிற இடத்தை நினைத்துத் துக்கமாயிற்று. நானும் பேசினேன். சுந்தரி எதையோ குடிக்கக் கொடுத்து பேச்சை மாற்றினாள். இது புதுசில்லை என்றும் வாழ்க்கைப்பட்டு வந்த நாளில் இருந்து நிறைய அனுபவித்தாகிவிட்டது என்றும் கதைகதையாய்ச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள் சாயா.

புதுவருஷப் பிறப்புக்கு இரண்டு நாளோ மூன்று நாளோ இருந்த சமயம். கலர் தாள்களில் கொடி நறுக்கி வாசல் கதவுக்கும் அறை ஜன்னலுக்கும் நடுவே குறுக்குக்கயிறு கட்டி ஒட்டிக்கொண்டிருந்தபோது சாயா வந்தாள். வர்ணத்தாள்களைப் பார்த்ததும் அவள் கண்களில் பிரகாசம் ஏறியது. முட்டையும் உருளைக்கிழங்கும் போட்டுப் பிசைந்து பையனுக்கு ஊட்டியபடி சுந்தரி அறைக்காலுக்கு அந்தப்பக்கம் உட்கார்ந்திருக்க, இந்தப்பக்கம் உட்கார்ந்தாள் சாயா. வாய் நிறைய சாப்பாட்டை வைத்துக்கொண்டு அவளைப் பார்த்ததும் பழக்க தோஷத்தால் முகம் சுருக்கிக் கண்களை மூடிமூடித் திறந்து அழகு காட்டினான். அத்தைக்கு கண்ணடிக்கிறயா..? வா.. வாஎன்று கைநீட்டி வாங்கித் தானே ஊட்ட ஆரம்பித்தாள். பத்து நிமிடமோ, பதினைந்து நிமிடமோ போயிருக்கும். வாசலில் இருந்து சாயாஎன்று கூப்பிடும் கடூரமான குரல் கேட்டுது. வாசல் தடுப்புக்கு அந்தப்பக்கம் நின்றிருந்தான் அவள் புருஷன். கன்னம் உப்பி மயிரெல்லாம் சிலுப்பிக்கிடந்தது. ஒரு முரட்டுக்குதிரை மாதிரி நின்றிருந்தான். குழந்தையைச் சுந்தரியிடம் கொடுத்துவிட்டுத் திரும்புகிற அவகாசத்தைக் கூட சகித்துக்கொள்ளமுடியாத மாதிரி சடக்கென்று வாசல்படலைத் தள்ளிக்கொண்டு ஒரே தாவாகத் தாவிவந்து சாயாவை இழுத்தான். ‘..ஸ்.. உடு வரன்என்று சொல்லிக்கொண்டே கையை விலக்கிய சாயாவிடம் என்னடி வரன்புரன்னு...என்று சீறி விழுந்தது அவன் வார்த்தை. சளார் என்று கன்னத்தில் அறைந்தான். தாள்களையெல்லாம் உதறிவிட்டு சார் சார்என்று எழுந்து ஓடினேன் நான். என்னைக் கடுகடுப்போடு பார்த்துவிட்டு மீண்டும் சாயாவின் தோள் மீதும் கன்னங்களிலும் மாறி மாறி அடித்தான். ஊடு தங்காதாடி ஒடம்பு. ஊரு மேஞ்சிக்கேன இருக்கணுமாஎன்று துப்பினான். கன்னடா புருஷன் கசந்துட்டானாடி? தமிழ் புருஷன் கேக்குதா?’ என்று விலாவில் இடித்தான். எனக்கு எரிச்சல் எல்லை மீறியது. நான் அவனை நெருங்கினேன். அவிழ்ந்த கூந்தல் அவன் கைப்பிடியில் இருக்க சோகம் நிறைந்த சாயாவின் கண்கள் என்னைப் பேசாமல் இருக்கும்படி கெஞ்சின. கெஞ்சிக்கெஞ்சி மயிர உடுய்யாஎன்று கேட்டும்கூட தரதரவென்று அவன் இழுத்தபடியே நடக்க கூடவே போய்விட்டாள் சாயா. அதிர்ச்சியில் உறைந்துகிடந்தோம் நாங்கள்.

மறுநாளே எல்லாவற்றையும் கழுவிவிட்டமாதிரி சாயா வந்து வாசலில் நின்றாள். குழந்தைக்காக உதறிப்போட்ட போர்வையையும், தலையணையையும் பாதி மாத்திரமே இஸ்திரி செய்து மின்சாரம் நின்றதும் அப்படியே கிடந்த துணிக்குவியலையும் நகர்த்தி ஓரமாக்கிவிட்டு ஜன்னலோரம் உட்கார்ந்தாள். கன்னத்திலும் கழுத்திலும் இன்னும் வீங்கி இருந்தது. கைத்தடம்கூட மாறாமல் இருப்பதுபோலத் தெரிந்தது. ஏன் சாயா இப்பிடி? என்று உட்கார்ந்தபடியே கேட்ட சுந்தரியையும், மூலையில் இம்மெர்ஷன் ஹீட்டரை பிரித்துப் பழுதுபார்த்துக்கொண்டிருந்த என்னையும் பார்த்தபடியே சுரத்தில்லாமல் சிரித்தாள். இந்தச் சிரிப்பைத் தொடர்ந்து அவள் சன்னமான குரலில் அழுது விடுவாள் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

நாலு வருஷமாச்சி, கல்யாணமாயி. எப்பவும் இந்தப் பாடுதா. அந்தக் காலத்துல இன்னமோ அரசாங்க வேல கெடச்சிதாம். ஐயாயிரமோ பத்தாயிரமோ கட்டச் சொன்னாங்களாம். இவுங்க ஊட்டுல பணம் தரலயாம். பத்தாயிரத்த அவங்கிட்ட குடுத்துட்டு கைகட்டி நிக்கறதவிட ஊட்டுல பத்து மாடு இருக்குது. புத்தியா பாத்துகிட்டா மாசம் ஆயிரம் கெடைக்கும்ன்னாங்களாம். அழகா ஒழுங்கா சட்டை போட்டுக்னு கௌரவமா இருந்திருப்பனே, இந்த அப்பனால பாழப்போய்ட்டனேன்னு ஒரு ஆத்தரம் ஒரு ஆங்காரம், அப்பத்தான் இப்பிடி கொணம் மாறிடுச்சாம்..

முழங்காலுக்கு நடுவில் கன்னத்தைக் கொடுத்த நிலையில் முந்தானையால் கண்ணீரைத் துடைத்தபடி அவள் தொடர்ந்து சொன்னாள்.

கல்யாணம் பண்ணா சரியாய்டும்ன்னு நெனச்சி கட்டி வெச்சாங்களாம். தப்புக்குப் பரிகாரம் மாதிரி செஞ்சிட்டாங்க. நடுவுல நான்தான் அடுப்புல உழுந்த கோழிக்குஞ்சுமாதிரி கெடந்து சாவறன். தொல்லயே ஆங்காரம். இந்த லட்சணத்துல நாலு வருஷமா புள்ள இல்லயா, அதுவேற அசிங்கம். எந்த ஆம்பளய பார்த்தாலும் இன்னம் கொஞ்சம் ரோஷம் ஏறிக்கும். காலம்பூரா கேவலப்படணும்ன்னு ஆய்ட்டுது...

சாயாவின் குரல்கேட்டு தோட்டத்தில் ஆடிக்கொண்டிருந்த பையன் மெதுமெதுவாக நடந்து வந்து அத்தஎன்றான். சூழலின் சுமை புரியாமல் காணாததைக் கண்டுவிட்ட மாதிரி அரையும் குறையுமாய் முளைத்திருந்த பல்லைக்காட்டிச் சிரித்துக் கண்ணடித்தான். ஐயோ என் செல்வமேஎன்று வாரிக் கட்டிக்கொண்டாள், சாயா.

அப்புறம் ஒரு மாசமோ இரண்டு மாசமோதான் ஹோஸ்பெட்டில் இருந்தோம். ஹுப்ளிக்குப் போக வேண்டியிருந்தது. முன்கூட்டிப்போய் வீடு பார்த்து வந்து சாமான்களையெல்லாம் கட்டிக்கொண்டிருந்தபோது சாயா வந்தாள். மடிநிறைய சுந்தரிக்குப் பிடித்தமான கனகாம்பரப்பூக்களைக் கட்டி எடுத்துவந்தாள். சாயாவின் உபகாரத்தால் ஓரளவு கன்னடம் பேசக் கற்றுக்கொண்ட சுந்தரி, ‘யாக்கே இஷ்டு ஹுவுஎன்றபடி சாயா மறுக்கமறுக்க அவளை உட்கார்த்தித் தலைபின்னிப் பாதிப் பூவைச் செருகினாள். ஏற்கனவே எடுத்துவைத்திருந்த இரண்டு நைலக்ஸ் புடவைகளையும் ரவிக்கைத் துணிகளையும் மஞ்சள் குங்குமத்தோடு தந்தபோது வேணாங்க்கா... வேணாங்க்காஎன்று தயக்கமான குரலிலேயே மறுத்தாள் சாயா. அந்த ஆளுக்கு எதுனாச்சிம் சந்தேகம் வந்தாலும் வருங்க்காஎன்று தரையைப் பார்த்தபடி சொன்னாள். ஒண்ணும் வராது சாயா, கடவுள் ஒன்ன நல்லபடியா வச்சிருப்பான். ஒன் கூடப்பொறந்தவ குடுத்தா வாங்கிக்க மாட்டியா?’ என்று அவள் கையைப் பிடித்துக் கொடுத்தாள்.

வண்டியில் ஏறி உட்கார்ந்த நேரம் சாயா ரொம்பவும் கலங்கி விட்டாள். முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டாள். காற்றில் சரிந்து கண்ணில் விழுந்த முடியை ஒழுங்குசெய்தபடி என்னிடமிருந்து பையனை வாங்கி மாறிமாறி முத்தம் கொடுத்தாள்.

எப்பனா ஹோஸ்பெட் வந்தா ஊட்டுப்பக்கம் வரணும் சார். அக்காவையும் புள்ளயயும் கண்டிப்பா கூட்டி வரணும்

சின்ன கோரிக்கை மாதிரியும், கண்டிப்பாய் நான் அதன் படி செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பவள் மாதிரியும் நிறுத்திநிறுத்திச் சொன்னாள் சாயா. வண்டி தெருமுனை திரும்பும்வரை அங்கேயே நின்றிருந்து கையசைத்தாள்.

கைமெலிந்து, கண்கள் இருண்டு புழுதி அடைந்த பித்தளை செம்புபோல மாறிக் கிடந்தாலும் கூட, அந்தப் பிரியம் பொழிகிற குணமும், பூ அவிழ்கிறமாதிரி இதழ் வார்த்தைகளைச் சலிக்காமல் பேசுகிற வீச்சும், முகத்துக்கு ஒரு அற்புதமான தெளிவைக் கூட்டிவிடுகிற இளஞ்சிரிப்பும் சாயாவிடம் இன்னும் இருந்தன. சுந்தரியின் கையைப் பிடித்ததைத் தொடர்ந்து நிறைய பேசிக்கொண்டே இருந்தாள். கேட்பதும் விவரம் சொல்வதும் மாறிமாறி நடந்தது. ஒரு ராத்திரியில் மாட்டுக்கொட்டகை தீப்பிடித்துக் கொண்டதாம். ஒரு மாட்டைக்கூடக் காப்பாற்ற முடியவில்லையாம். பூட்டுப்போட்ட படலுக்கும், முள் நெருங்கக் கட்டிய வேலிக்கும் நடுவில் எல்லாமே செத்துப்போச்சாம். புருஷனே செய்திருக்கக்கூடும் என்று சந்தேகமாம். வயிற்றுப்பாட்டுக்காக இளநீர் வியாபாரமாம். சாயா சொல்லும்போதே நானே கஷ்டப்பட்ட மாதிரி துக்கமும் அதிர்ச்சியுமாய் இருந்தது!

பொருள் போனாபோவுது. இப்பயாவது ஒன் புருஷன் ஒழுங்கா வெச்சிருக்கானா?’

என்ன சொல்றதுக்கா. நா பட்ட அடி ஒதைக்கு என்னிக்கோ ஓடிப் போயிருக்கணும். இங்க கொட்டற ஒழப்புக்கு எங்க போனாலும் ராணி மாதிரி வாழலாம். இவ்ளோ காலமா இல்லாம இப்ப வயித்துல வேற ஒன்னு. இதுக்கோசரமாச்சிம் பல்லக்கடிச்சிக்கினு இருக்கணும். மாறினாலும் சரி, மாறாட்டாலும் சரி, ஆத்தா ஒரு பக்கம் அப்பன் ஒரு பக்கம்னு துண்டுதுண்டா கெடக்கறத பாக்க இதும் மனசு இன்னா இம்சப்படுமோ, நம்மால ஒரு புள்ள சந்தோஷமா இருக்குதோ இல்லியோ துக்கமில்லாமலாவது இருக்கணும்ல்ல...

அப்போதுதான் சிறுசரிவாய் இருந்த அவள் வயிற்றைப் பார்த்த மாதிரி கண்விரிய வீதி என்றுகூடப் பார்க்காமல் சட்டென்று கையில் முத்தமிட்டுத் தலையை ஆதரவாய்த் தன்மீது சாய்த்துக்கொண்டாள் சுந்தரி. பஸ்வரைக்கும் சின்னக்குரலில் பேசினபடி நடத்தியே அழைத்துப்போய் பையில் இருந்து ஒரு டஜன் வாழைப்பழத்தையும், ஏழெட்டு ஆப்பிள்களையும் தார்வாட் பேடா பாக்கெட்டையும் எடுத்து அவளிடம் நீட்டினாள். சாயா மறுக்கமறுக்க சீ... அக்கா ஊட்டு சீருடி பெண்ணே. வேணாம்ன்னு சொல்லக்கூடாதுஎன்று செல்லமாய் அவளது மடிச்சேலையில் வைத்துக்கட்டினாள். குழந்தை புரளும் வயிற்றில் சுந்தரியின் விரல் தீண்டலில் மிகவும் சிலிர்ப்புற்றவளாய்க் கண்களில் நீர்கசிய நின்றாள் சாயா.

ஹோஸ்பெட் வந்துட்டு ஊட்டுக்கு வராமலியே போறிங்களாக்கா..

இல்ல சாயா. அவசரமா மெட்ராஸ் போறம். குண்டக்கல் போய் வண்டி புடிக்கணும். அதான்...

புள்ள பொறந்தப்புறம் வறீங்களாக்கா?’

கண்டிப்பா. எத்தினி மாசம் இது

அஞ்சி

குபுக்கென்று கண் நிறைந்தது சாயாவுக்கு. பார்வை, ஒரு கணத்துக்கு ஜொலித்தது. திரும்பிப் பையனின் பக்கம் குனிந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

என்னடா, வளந்துட்டதும் தெரிலியா, அத்தைக்கு கண் அடிப்பியே மறந்துட்டியா. இப்ப அடி பாப்பம். அடி.. அடி...

வெட்கமுற்றுக் குனிந்துகொண்டான் பையன்.

நீயாவது பொண்டாட்டிய அடிக்காம வச்சிக் காப்பாத்து ராஜா.

கண்டக்டர் விசில் சத்தம் கேட்டு கதவுப்பக்கம் நகர்ந்தோம். விடை கொடுக்கிறது மாதிரி ஜன்னலோரமாக நடந்து வந்து நின்றாள், சாயா. உள்ளே இருக்கையில் உட்கார்ந்த எங்களுக்கு முகம் தெரிகிறபடி.

நான் சுந்தரியின் முகத்தைப் பார்த்தேன். அவள் கண்கள் தளும்புவது தெரிந்தது. இறுதியாய் பையனைப் பார்த்துச் சொன்ன சாயாவின் வார்த்தை மனசில் ஓடிக் கொண்டிருந்தது.

போய்ட்டு வரம் சாயா...

முகத்தை வெளியே துருத்தி பஸ் அடிஅடியாய் நகர்ந்து வேகமெடுத்து சாயாவின் உருவத்தை மறைக்கிறவரை கையசைத்துக்கொண்டே இருந்தோம்.

(அரும்பு -1989)