Home

Monday 4 January 2021

அஞ்சலி - சிறுகதை


நேற்றுவரை நம்முடன் வாழ்ந்து இன்று அமரராகிப் போன பரிமளாதேவியைப்பற்றிச் சொல்ல ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு என்னிடம் விஷயங்கள் உண்டு. அவை அனைத்தையும் இந்த அஞ்சலிக் கூட்டத்தில் முன்வைப்பது பொருத்தமான செயலாக இருக்காது. அதே சமயத்தில் அவரைப் பற்றிய கச்சிதமான சித்திரத்தையாவது உங்கள் முன் தீட்டிக் காட்டாவிடில் பரிமளாதேவிக்குச் செலுத்தும் எனது அஞ்சலிப் பேச்சு முழுமையான ஒன்றாக அமைய வாய்ப்பில்லை.

பரிமளாதேவியின் மனம் எஃகுப்போன்றது. அவரைப் பற்றிய எண்ணம் எழும்போதெல்லாம் சகல திசைகளிலிருந்தும் வந்து பாய்ந்தபடியிருந்த அம்புகளைப் பிடுங்கிப்பிடுங்கி வீசியபடி வெற்றி நடை போடும் ஒரு போர்வீரனின் சித்திரமே மனத்திலெழுகிறது. அவர் சந்தித்தவை அவ்வளவு பிரச்சினைகள். அவ்வளவு போராட்டங்கள். ஆனால் ஒவ்வொன்றையும் வலிமையோடு கடந்து வந்தார் அவர். எந்தத் தடையிலும் இடறி விழாதவரை மரணம் மட்டுமே இடற வைத்தது. 52 வயது என்பது மரணத்தைத் தழுவும் வயதே அல்ல. ஆயுள் முழுக்க வாழ்வின் சவால்களை வைராக்கியத்துடன் எதிர்கொண்டு வெற்றிநடை போட்ட பரிமளாதேவியின் இயக்கத்துக்கு மரணத்தால் மட்டுமே முற்றுப்புள்ளி வைக்கமுடிந்தது.

நானும் அவரும் கல்லூரித் தோழிகள். எனக்காவது பொறியியலாளரான தந்தை, மருத்துவரான தாய் என்கிற கல்விப் பின்னணி இருந்தது. ஆனால் பரிமளாதேவிக்கு அது போன்ற எந்தப் பின்னணியும் இல்லை. சாதாரண விவசாயக் குடும்பத்தில் நாலாவதாகப் பிறந்த பிள்ளை அவர். பள்ளிக்கூடமே இல்லாத ஊர் அவர் பிறந்த ஊர். நாலுமைல் தள்ளியிருந்த அளவில் சற்றே பெரிய வேறொரு கிராமத்தில்தான் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. ஜல்ஜல்லென்று சலங்கைச் சத்தத்துடன் ஓடும் வில்வண்டியில் ஒயிலாக உட்கார்ந்துகொண்டு அடுத்த ஊர் பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் மணியக்காரரின் பிள்ளைகளைப் பார்த்துத் தானும் படிக்கவேண்டும் என்கிற ஆவலை உருவாக்கிக்கொண்டார். உள்ளூர அவர் கற்பதில் தாய் தந்தையாருக்கு எந்த விருப்பமும் இல்லை. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று அலுத்துக்கொண்டார்கள் அவர்கள். பல விதங்களில் தடுத்துப் பார்த்தும் படிப்பதில் குழந்தை பிடிவாதமாக இருந்தது. அவர் முகத்தில் தென்பட்ட உத்வேகத்தையும் ஊக்கத்தையும் கண்டு அரை மனசோடு சம்மதித்தார்கள். அடுத்த நாள் தோளில் மாட்டிய பையோடு பள்ளிக்குச் செல்லும் வில்வண்டியின் பின்னாலேயே அவரும் ஓடத் தொடங்கினார்.

இந்தக் குழந்தைப்பருவ அனுபவத்தைப் பற்றி, பரிமளாதேவியே சொன்ன ஒரு சம்பவம் ஞாபகத்தில் இருக்கிறது. வண்டியில் உட்கார்ந்திருக்கும் மணியக்காரரின் பிள்ளைகள் ஓடிவரும் இவரைப் பார்த்து ஓயாமல் கிண்டல் செய்வார்களாம். வயதில் மூத்த சிறுமி இவரைப் பார்த்து ‘‘பா... பா... பா.... ச்....ச்....ச்...’’ என்று உதட்டைக் குவித்து உச்சுக்கொட்டியபடி விரலை அசைக்குமாம். அக்கா செய்வதைப் பார்த்துத் தங்கைச் சிறுமியும் கையை நீட்டி நாய்க்குட்டியை அழைப்பதைப்போல அழைக்குமாம். சகோதரிகள் கிண்டல் எல்லை மீறிப் போனது. ‘‘தோ தோ நாய்க்குட்டி, தோட்டத்து நாய்க்குட்டி வா வா நாய்க்குட்டி வாலாட்டு நாய்க்குட்டி’’ என்று பாட்டுப்பாடத் தொடங்குவார்களாம். கோபமும் அவமானமுமாக இருந்தாலும்கூட எல்லாவற்றையும் உள்ளூர விழுங்கியபடி ஓடுவாராம் பரிமளாதேவி. கவனிமில்லாமல் சொல்லிவிடும் ஒற்றைச் சொல்லோ அல்லது புலப்படுத்தும் முகக்குறிப்போ தன் கல்விக்கே உலைவைத்து விடுமோ என்று அஞ்சுவாராம். ஒருமுறை மூத்தவள் சிறியவளிடம் ‘‘நம்ம வண்டிக்கு எத்தன மாடுங்க பூட்டியிருக்குன்னு சொல்லு பாப்பம்?’’ என்று அப்பாவித்தனமாகக் கேட்டாளாம். உடனே சிறியவள் ‘‘இரண்டு’’ என்றாளாம். ‘‘ஐயோ தப்புடி, மொத்தத்துல மூணு மாடுங்க. நல்லா கண்ண தெறந்து பாரு’’ என்று சொன்னாளாம் பெரியவள். தொடர்ந்து ‘‘முன்னால ரெண்டு மாடு, பின்னால ஒரு மாடு’’ என்று சொன்னபடி ஓடிவரும் பரிமளாதேவியின் பக்கமாக ஜாடை காட்டினாளாம். இந்தச் சம்பவத்தைக் காதால் கேட்கிற போதே மனம் பற்றியெறியத் துடிதுடித்துப் போனேன். பிஞ்சுக் குழந்தையான பரிமளாதேவியோ எந்த எதிர்வினையும் காட்டாமல் பள்ளியை நோக்கி ஓடினாராம். இலக்கு நோக்கிய இடையறாத இந்த ஓட்டத்தை அவருடைய மொத்த வாழ்வின் படிமமாகக் கொள்வதில் தவறேதும் இருக்கமுடியாது. காலம் முழுக்க ஊரும் உலகமும் அலுவலகமும் குடும்ப உறுப்பினர்களும் மாறிமாறி அவர் மீது வீசிய கிண்டல்களும் வசைகளும் அவமானக் குறிப்புகளும் அவதூறுகளும் ஏராளமானவை. அவற்றில் ஒன்றைப் பற்றிக்கூட லட்சியம் செய்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை பரிமளாதேவி.

மேற்படிப்புக்காக அவர் ஒற்றைக் காலில் நின்றபோது அவர் குடும்பத்தார் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. மீறி வெளியேறினால், பெற்றோர் மகள் உறவே அறுந்து போய்விடும் என்று அச்சுறுத்தவும் செய்தனர். அந்தத் தண்டனையை மிகவும் வேதனையோடும் வலியோடும் ஏற்றுக்கொண்டு அன்றே வீட்டை விட்டு வெளியேறினார் பரிமளாதேவி. அத்தருணத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவரே அவருக்குத் துணையாக இருந்திருக்கிறார். அனாதை என்கிற பெயருடன் ஒரு விடுதியில் சேர்க்கப்பட்டு மேற்படிப்பைத் தொடர வைத்தவர் அவரே. ஆதரவு காட்டிய அந்த ஆசிரியையை அவர் கடவுளாக மதித்தார். எனக்குத் தெரிந்தவரையில் பரிமளாதேவிக்கு எவ்விதமான பக்தி நாட்டமும் இருந்ததில்லை. எந்தத் தெய்வத்தையும் வணங்கியதில்லை. எந்தக் கோயிலுக்கும் போனதில்லை. ஆனால் கண்கண்ட தெய்வம் என்று அந்த ஆசிரியையைப் பற்றிப் பலமுறை குறிப்பிட்டதைக் கேட்டிருக்கிறேன்.

கல்லூரியில்தான் நாங்கள் தோழிகளானோம். அவருடைய ஆத்மார்த்தமான உழைப்பும் சிரத்தையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. ஒரு செயலில் இறங்கிய பிறகு நூறு சதம் உழைப்பைச் செலுத்துகிற அவருடைய ஈடுபாடு ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயமாகும். சகமாணவிகள் அவரை ‘‘மிளகாய்ப்பட்டாசு’’ என்பார்கள். ‘‘நாட்டுவெடி’’ என்று கிண்டல் செய்வார்கள் சில குறும்புக்காரிகள். எதையுமே லட்சியம் செய்ததில்லை அவர். தொணதொணத்த அவர் வாய்களையெல்லாம் பட்டப் படிப்பில் பல்கலைக்கழகத்திலேயே முதலாவதாக வந்து தங்கப்பதக்கம் பெற்று மூடவைத்தார். பட்டப்படிப்பில் நாங்கள் பௌதிகத்தைப் பிரதான பாடமாக எடுத்திருந்தோம். அதே துறையில் முதுகலைப் பட்டத்துக்கும் படிக்க விரும்பினார் அவர். ஆனால்

நான் எம்.ஐ.டி. படிக்கப் போகிறேன் என்றதுதம் ‘‘நீதானடி எனக்கு இருக்கிற ஒரே தோழி. உன்னை எக்காரணத்தை முன்னிட்டும் இழந்துவிடக் கூடாதடி’’ என்று தன் முடிவை மாற்றிக்கொண்டு என்னோடு எம்.ஐ.டிக்கு வந்தார்.

ஒருவேளை பௌதிகத்துறையிலேயே மேற்படிப்பைத் தொடர்ந்திருந்தால் பெரிய விஞ்ஞானியாகவோ ஆராய்ச்சியாள ராகவோ அவர் மாறியிருக்கலாம். உலகமே வியக்கிறமாதிரி எதையேனும் கண்டு பிடித்திருக்கலாம். ஆவேசமான ஒரு காட்டாறத்தைத் திசை மாற்றி விட்டேனோ என்கிற குற்ற உணர்வு நெடுங்காலம் எனக்குள் இருந்தது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பரிமளாதேவியிடமேயே எனக்குள் அடங்கிக் கிடந்த அக்குற்றஉணர்ச்சியைப் பற்றிச் சொல்ல நேர்ந்தபோது ‘‘என்னை நெறிப்படுத்தியது நீ என்று நான் தெம்பாக இருக்கிறேன். பாதை மாற்றி அழைத்து வந்த பாவத்தைச் செய்தவளாக நீ ஏன் உணர்கிறாய்?’’ என்று தட்டிக்கொடுத்தார் அவர். நீண்ட நாட்களாக என் மனத்தைக் கனக்க வைத்துக் கொண்டிருந்த பாரம் அன்றுதான் கரைந்தது.

படிப்பைத் தொடர்ந்து இருவருக்கும் விமானத்துறையிலேயே ஒரே சமயத்தில் வேலை கிடைத்ததை அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். விமானங்களைப் பழுது பார்ப்பதில் அவரளவுக்கு வேகம் காட்டக் கூடியவர்கள் யாரும் இல்லை. மற்றவர்கள் கண்களை மாதக் கணக்கில் ஏமாற்றுகிற பழுதுப்பகுதிகள் ஒரு சில மணிநேரங்களிலேயே அவர் கண்களில் விழுந்து விடும்.

சாகசங்களில் அவருக்கு அளவுகடந்த நாட்டமிருந்தது. விமானத்தில் பறப்பது அவர் வேலையே அல்ல. ஆனாலும் தன்னந்தனியே பல மணிநேரங்கள் விமானத்தில் பறந்து கொண்டிருப்பார். இராணுவத்தின் விமானப்பிரிவில் விருப்பச்சேவையின் அடிப்படையில் ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் உழைப்பதைக் கடமையாகக் கொண்டிருந்தார். ஒரு சில ஆண்டுகள் பிரதமரின் தனிவிமானத்துக்கு தொழில்நுட்ப ஆலோசகராகவும் பணிபுரிந்தார். சமீபத்தில் கார்கில் யுத்தத்தின் போது அவர் ஆற்றிய சேவைக்காகப் பிரதமரின் விசேஷ விருது கிடைத்ததையும் தமிழ், ஆங்கிலச் செய்தித்தாட்கள் அந்த ஆண்டின் சிறந்த பெண்மணியாக அவரை அறிவித்துக் கௌரவித்ததையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆங்கில வார ஏடு ஒன்று நாட்டின் சிறந்த 25 பேர்கள் என்ற பட்டியலை அறிவித்தபோது அதில் பரிமளா தேவியைப்பற்றிய குறிப்பும் இருந்தது.

கல்வியிலும் தொழிலிலும் தன் முன் முளைத்த எல்லா இடர்களையும் விலக்கி மேற்கொண்டு பயணத்தைத் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டி எல்லோரும் பின்பற்றத்தக்க ஆதர்சப் பெண்மணியாக வாழ்ந்த பரிமளாதேவியின் சொந்த வாழ்வின் பக்கங்கள் பெருமைப்படத்தக்க விதத்தில் இல்லாமல் போனது துரதிருஷ்டவசமானதாகும்.

அவர் கணவர் திரு. சுந்தரேசன் பால்வளத்துறையில் உயர் அதிகாரி. இருவரும் விரும்பித்தான் திருமணம் செய்துகொண்டார்கள். ஆனாலும் நிரப்பமுடியாத ஒரு இடைவெளி இருவருக்குமிடையே தொடக்கம் முதலே இருந்தது. ஆனாலும் இருவருமே பரஸ்பரம் அடுத்தவர்களுக்குள்ள சுதந்திரத்தை மதித்தார்கள் என்று தாராளமாகச் சொல்லலாம். பல மன வேறுபாடுகளைக் கடந்தும் இறுதிவரையில் இணைந்தே வாழ்ந்ததற்கு இதுவே காரணம்.

பரிமளாதேவிக்கு ராகுல், அஜித் என்கிற இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். இருவரையுமே செல்லமாக வளர்த்து வந்தார். மிக உயர்ந்த பள்ளியில் சேர்த்து நல்ல கல்வி கிட்டுவதற்கும் வழி செய்தார். இராணுவச் சேவைக்காகவும் பயிற்சிச் சேவைக்காகவும் ஆண்டில் பல மாதங்களில் வெவ்வேறு இடங்களில் சுற்றிக்கொண்டே இருப்பது அவருக்குத் தவிர்க்க முடியாததாக இருந்தது. அவர் கணவரும் அலுவல் நிமித்தமாக மாநிலம் முழுக்க அலைந்துகொண்டே இருப்பவர்தான். இருவராலுமே குடும்பத்தின்மீது தனிப்பட்ட விதத்தில் கவனம் செலுத்த இயலாமல் போனது. திரு. சுந்தரேசனுடைய பெற்றோரின் குடும்பம் வேறொரு ஊரில் வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தது. பிள்ளைகளைக் கவனித்துக்கொண்டு பதற்றம் மிகுந்த நகரில் முதுமையைக் கழிக்க அவர்களுக்கு விருப்பமில்லை. யாரோ ஒரு தூரத்துச் சொந்தக்காரத் தம்பதியினரைக் குழந்தைகளின் பொருட்டு தேடி அழைத்து வந்தார் சுந்தரேசன். அவர்களுடைய கவனிப்பில்தான் குழந்தைகள் வளர்ந்தார்கள். ஒருநாள் அல்ல, இருநாள் அல்ல, பதினெட்டு வருஷங்கள்.

வடக்கே இராணுவச் சேவைக்காக பரிமளாதேவி சென்றிருந்த நேரம். அவர் கணவரும் கன்னியாகுமரியில் முகாமிட்டிருந்தார். மூன்றாவது வருஷம் பொறியியல் படித்துக்கொண்டிருந்த ராகுல் கல்லூரியில் தன்னோடு படித்த முஸ்லீம் பெண்ணொருத்தியைக் காதலித்து வந்த செய்தி கசிந்து எப்படியோ தாத்தாவின் கவனத்துக்கு வந்துவிட்டது. தற்செயலாக அந்தப் பெண்ணின் படங்களையும் அவள் எழுதிய கடிதங்களையும் ராகுலின் அறையில் கண்டெடுத்தார் தாத்தா. ஏதோ ஒரு வகையில் தோல்வி உணர்வில் அவர் நிம்மதி இழந்து போனார். தம்மை நம்பியிருக்கிற பரிமளாதேவி & சுந்தரேசன் தம்பதியினரின் முன்னால் சங்கடப்பட்டு நிற்கவேண்டி வந்துவிடுமோ என்று கலங்கினார். ரகசியமாக அப்பெண்ணுடைய வீட்டைக் கண்டுபிடித்து அவளுடைய பெற்றோர்களிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டார். அதிர்ச்சியில் உறைந்துபோன அவர்கள் முதல் நடவடிக்கையாகத் திடுதிப்பென்று பெண்ணைக் கல்லூரியிலிருந்து நிறுத்தினார்கள். ஏன் நிறுத்தப்பட்டோம் என்கிற விவரம் அவளுக்குத் தெரியும் முன்னரேயே மும்பைப் பக்கத்திலிருந்து ஒரு பையனைக் கண்டு பிடித்துத் திருமணத்தை ரகசியமாக முடித்து அனுப்பி வைத்துவிட்டனர்.

விஷயமறிந்த ராகுல் துடித்துப் போனான். வேளைக்கு உண்ணாமலும் கல்லூரிக்குச் செல்லாமலும் துக்கத்தில் நொறுங்கிக் கிடந்தான். எல்லாவற்றுக்கும் தாத்தாதான் காரணம் என்று தெரிந்ததும் அவன் நடத்தை விபரீதமானதாக மாறிவிட்டது. வெறுப்பும் மூர்க்கமும் வெளிப்படத் தொடங்கின. தூக்க மாத்திரைகள் சாப்பிட்டும் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டும் மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டும் தற்கொலைக்கு முயற்சிகள் செய்தான். ஒவ்வொரு முறையும் சிரமப்பட்டு காப்பாற்றினார் தாத்தா. சமாளிக்க முடியாத நிலையில் இருவரோடும் தொலைபேசியில் பேசி வரவழைத்தார். ராகுல் நிலைமை அதற்குள் முற்றிவிட்டது. மனம் பேதலித்திருந்தான். மருத்துவமனையில் சேர்ப்பது தவிர வேறு வழியில்லை. ஆறுமாத கால மருத்துவத்துக்குப் பிறகு ராகுலின் உடல்நலம் தேறியதே தவிர மனநலம் தேறவில்லை. மீட்கவே முடியாத அளவுக்கு அவன் மூளைப்பகுதி சேதாரமாகிவிட்டது. அறைக்குள் முடங்கிக் கிடக்கக் கூடியதாக மாறிவிட்டது அவன் நடமாட்டம். வெறித்த பார்வை, கள்ளமற்ற சிரிப்பு, மௌனம், அர்த்தமற்ற பிதற்றல் ஆகியவையே அவன் உலகமானது. பெற்றெடுத்த பிள்ளையை இக்கோலத்தில் கண்டு துடித்துப் போனார் பரிமளாதேவி. தன் செல்வாக்கால் இந்தியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவர்களிடம் மகனை அழைத்துச் சென்று காட்டிச் சரியாக்கிவிட தீவிரமான முனைப்பு காட்டினார் அவர். ஆனாலும் அவனைச் சோதித்த மருத்துவர்கள் அனைவருமே ஹி ஈஸ் இன் கேட்டெட்டோனியா ஸ்டேஜ். நத்திங் ஈஸ் பாஸிபிள் நௌ மேடம்’’ என்று கைவிரித்து விட்டனர்.

அவர் குடும்ப வாழ்வில் இந்தக் காலத்தைப் பூசல்களின் காலம் என்றுதான் சொல்ல வேண்டும். சுந்தரேசனுக்கும் பரிமளாதேவிக்கும் இடையேயான பள்ளம் ஆழமானபடியே இருந்தது. ஒவ்வொருவரும் அடுத்தவர் தரப்பிலிருந்த குற்றங்குறைகளை முன்வைத்துப் பேசத் தொடங்கினர். குற்ற உணர்வில் மனம் நொந்துபோன தாத்தாவும் பாட்டியும் ஊருக்குத் திரும்பிச் சென்று விட்டனர். ராகுலைப் பார்த்துக் கொள்ள சம்பளத்துக்கு ஆள்வைக்க நேர்ந்தது.

ஒருநாள் அஜீத்தின் கல்லூரியிலிருந்து அவசரக் கடிதம் வந்தது. பரிமளாதேவிதான் முதல்வரைச் சந்திக்கச் சென்றார். அஜித்துக்கு இருந்த கஞ்சாப்புகைப் பழக்கத்தைப் பற்றிக் கவலையுடன் பிரஸ்தாபித்தார் முதல்வர். கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இலைமறை காய்மறையாக இருப்பதைத் தான் அறிந்தே இருப்பதாகவும் பலர் முன்னிலையில் பகிரங்கமாக அப்பழக்கத்துடன் அஜித் நடமாடுவது நிர்வாகத்துக்கு விடுக்கிற சவாலைப்போல உள்ளதென்றும் நடவடிக்கை எடுப்பதைத் தவிரவேறு வழியில்லை என்றும் பொறுமையாக எடுத்துரைத்தார் அவர். ‘‘உங்கள் மீதும் உங்கள் பதவியின் மீதும் எனக்குத் தனிப்பட்ட விதத்தில் கௌரவம் உண்டு என்றாலும் உங்களுக்கு உதவ முடியாத துர்ப்பாக்கியசாலியாக இருக்கிறேன்’’ என்று தலை கவிழ்ந்தபடி சொன்னவாறு கல்லூரியிலிருந்து அஜித்தை நீக்கும் உத்தரவைக் கொடுத்தார் முதல்வர். இதற்குள் செய்தியைக் கேள்விப்பட்டு முதல்வரின் அலுவலகத்தின் முன்பு ஓடிவந்த அஜித் கேவலமான வார்த்தைகளை உதிர்த்து எல்லோரையும் அவமானப்படுத்தினான். ஆதரவோடு அவனை நெருங்கி வீட்டுக்கு அழைத்த தருணத்தில் ‘‘யாரு நீ? என்ன எதுக்கு கூப்புடற? உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? வந்த வேலைய பாத்துட்டு ஒழுங்கா போயிடு’’ என்று எகிறினான். ஆத்திரத்துடன் கஞ்சாத்தூள் நிரப்பிய சிகரெட் புகையை இழுத்துத் தாயின் மீதே ஊதினான் அஜித்.

இரண்டு பிள்ளைகளும் வீட்டுக்குள் முடங்கிய ஐந்தாவது நாள் முதல்முறையாக பரிமளாதேவிக்கு நெஞ்சுவலி வந்தது. விமானத்துக்குள் ஏதோ சோதித்துக்கொண்டிருந்த தருணம் அது. சட்டென நெஞ்சை அடைப்பதையும் உடம்பு முழுக்க வியர்வை பொங்கி வழிவதையும் இடது கையைத் தூக்கமுடியாத அளவு வலி பரவுவதையும் வேதனையுடன் உணர்ந்திருக்கிறார். தன்னுடைய உதவியாளரை அழைத்தவாக்கில் மயங்கிச் சரிந்துவிட்டார். வேறொரு ஆய்வுப்பிரிவில் இருந்த என்னை அவசரமாக அழைத்துச் செய்தியைச் சொன்னார்கள்.

அதற்குள் ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. பரிமளாதேவி வண்டிக்குள் ஏற்றப்பட்டார். நானும் ஓடிச்சென்று வண்டிக்குள் அமர்ந்தேன். மருத்துவமனையில் தீவிரச்சிகிச்சை தரப்பட்டது. உடனே நான் திரு. சுந்தரேசனுக்கத் தகவலைச் சொன்னேன். என்ன காரணத்தாலோ

அவர் மருத்துவமனைப் பக்கம் வரவே இல்லை. பாடுபட்டு அவர் உயிரை மீட்டெடுத்தார்கள் மருத்துவர்கள். பல சோதனைகளுக்குப் பிறகு, இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்களில் இரு இடங்களில் அடைப்பு இருக்கிறதென்று தெரிவிக்கப்பட்டது. ஒரு அடைப்பின் அளவு தொண்ணூறு சதம் என்றும் அடுத்த அடைப்பின் அளவு எழுபது சதம் என்றும் சொன்னார்கள். அவருக்குச் சர்க்கரைநோய் இருப்பதையும் அப்போதுதான் கண்டறிந்தார்கள். சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த தனிப்பட்ட மருத்துவமுறை மேற்கொள்ளப்பட்டு மறுவாரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பரிமளாதேவி மருத்துவமனையில் இருந்தகாலம் வரையில் சுந்தரேசனோ பிள்ளைகளோ எட்டிக்கூடப் பார்க்காமல் இருந்தது அவரை வெகுவாகப் பாதித்துவிட்டது. ஏறத்தாழ ஒரு மாத மருத்துவமனை வாசத்துக்குப் பிறகு நான் என்னுடைய வீட்டுக்கே அவரை அவழைத்துச் செல்லப் பிரியப்பட்டேன். ஆனாலும் அவர் தம் வீட்டுக்குச் செல்லவே விரும்பினார். ‘‘உன் இதயம் இருக்கிற சூழலில் யாராவது ஏதேனும் சொன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் போகலாம், எதுக்கு ரிஸ்க்?’’ என்றேன். ‘‘வித்தவுட் ரிஸ்க் தேரீஸ் நோ அச்சீவ்மென்ட்’’ என்று வழக்கமான பல்லவியையே சிரித்துக்கொண்டே சொன்னபடி தன் வீட்டுக்கே காரைச் செலுத்தும்படி சொன்னார்.

அவருடைய வீட்டில் எல்லோரும் இருந்தார்கள். ஒருவரும் அருகில் வந்து எட்டிப்பார்க்கவில்லை. என்ன நடந்தது என்றுகூடக் கேட்கவில்லை. அந்நியர்களைப் போல நடந்து கொண்டார்கள். எனக்கு ஆச்சரியமாகவும் கோபமாகவும் இருந்தது. பரிமளாதேவியை அவருடைய அறையில் விட்டுவிட்டு சோகமுடன் வெளியேறினேன்.

ஆச்சரியத்தக்க விதத்தில் அடுத்த நாளே வேலைக்கு வந்து விட்டார் அவர். எங்கள் துறைத் தலைவருக்கும் ஆச்சரியம். நேராக அவரே பரிமளாதேவியின் அறைக்குள் நுழைந்து ‘‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நீங்கள் கட்டாயமாக ஒரு மாதமாவது படுக்கையில் உறங்கி ஓய்வெடுக்கவேண்டும் என்பது தெரியாதா?’’ என்று ஆதங்கப்பட்டார். சற்றும் யோசிக்காமல் ‘‘எனக்கு வேலைக்கு வருவதுதான் பெரிய ஓய்வு சார். வீட்டிலிருந்தால் ஒரே நாளில் செத்துப் போவேன்’’ என்றபடி தலைகுனிந்தார் பரிமளாதேவி. அதிர்ச்சியில் நானும் துறைத் தலைவரும் வாயடைத்து நின்றோம்.

ஒரு மயக்க மருந்தை உட்கொள்வதைப் போலவே வேலையில் சதாகாலமும் மூழ்கிக் கிடந்தார் பரிமளாதேவி. பேசாத கணவன், பிதற்றும் ஒரு மகன், புகையில் மூழ்கிய மற்றொரு மகன், வீடு மெல்லமெல்ல ஒரு நகரமாக மாறிவிட்டது அவருக்கு. அலுவலகத்திலேயே ஒரு அறையை ஒதுக்கிச் சிற்சில சமயங்களில் தங்கத் தொடங்கினார்.

மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவர் காலில் பெரிய புண்ணிருப்பதைப் பார்த்தேன். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் புண்கள் எளிதாக ஆறுவதில்லை என்பது தெரிந்த விஷயம்தான். நெடுங்காலமாகக் கவனிக்காமல் அவர் அதை உதாசீனப்படுத்தி வந்திருக்கிறார் என்பதை அறிந்தபோது வருத்தமாக இருந்தது. வலுக்கட்டாயமாக அவரை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றேன். மருத்துவர்களோ காலை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆகாயமெல்லாம் பறந்து திரிந்த பறவை அவர். லட்சியப்பறவை. காலில் ஊனம் உள்ளவராக அவரைக் கற்பனை செய்துகூடப் பார்க்க இயலவில்லை. ஆனால் அந்த மருத்துவத்துக்கு இசையவில்லை பரிமளாதேவி. ‘‘வேறு ஏதேனும் செய்யுங்கள். காலை எடுக்கக்கூடாது’’ என்றார். அவர் பிடிவாதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘‘இந்தக் காலோடு வாழ முடியாது என்று தெரிந்தும் இப்படித்தான் வாழ்வேன் என்று முடிவெடுப்பது முட்டாள்தனம்’’ என்று சத்தமிட்டார் மருத்துவர். சிரித்தபடி பொறுமையாக ‘‘நானும் இதையேதான் சொல்வேன். முப்பதாண்டுகளுக்கு முற்பட்ட சிறுமியாக இருந்தால்’’ என்றார் பரிமளாதேவி. ஒருகணம் எதுவும் புரியாமல் திகைத்தேன் நான். மறுகணம் அவர் சுட்டும் பொருள் புரிந்தது. வெற்றி இலக்கை நோக்கி எல்லாவற்றையும் வெட்டியெறிந்து விட்டு வெளியேறிய இளமையையும் எதையும் வெட்டியெறிய முடியாமல் தடுமாறுகிற முதுமையையும் இணைத்துப் பார்த்துச் சொல்லப்பட்டவையே அவ்வார்த்தைகள்.

விருப்பமே இல்லாமல் காலுக்கு மருத்துவம் செய்தார் மருத்துவர். முழங்காலுக்குக் கீழே ஓரடி நீளத்துக்குக் கிழிக்க வேண்டியிருந்தது. கலந்துவிட்ட சீழ் முழுக்க அகற்றப்பட்டது. பத்து நாட்களில் வாக்கர் வைத்துக்கொண்டு நடமாடும் நிலை திரும்பியது. அந்தக் கோலத்தோடு அவர் அலுவலகத்துக்கு வந்ததைப் பார்க்க யாருக்குமே தெம்பில்லை. துறை முழுக்க அவருக்காக அனுதாபப்பட்டது. அவரைப் பார்த்து விடுப்பில் செல்லுமாறு வற்புறுத்தும் துணிவற்ற வர்களாக இருந்தார்கள் எல்லாரும் நேற்று மாலை நானும் அவரும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். தான் கண்ட கனவொன்றைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார் அவர். எட்டாத உயரத்தில் வானத்தின் உச்சியில் ஆகாய விமானத்தில் பறந்துகொண்டிருப்ப தாகவும் ஒரு தருணத்தில் எந்த முயற்சியும் இல்லாமலேயே மேலும் மேலும் உயரத்தை நோக்கி விமானம் தானாகப் பறக்கத் தொடங்கிவிட்டதாகவும் என்றுமே அனுபவித்தறியாத இன்பத்தை அந்தப் பயணம் கொடுத்த தென்றும் பரவசத்தோடு சொன்னார். செல்லமாக அவரைப் பார்த்து சரியான ‘‘பறக்கும் பைத்தியம்’’ என்ற கடிந்து கொண்டேன். சாயங்காலமாகத்தான் கட்டு மாற்றிக் கட்டுவதற்காக மருத்துவமனைக்குச் சென்றோம். நானும் அப்போது அவரோடு இருந்தேன். செவிலியர்கள் அவரை மரியாதையோடு வரவேற்று உட்கார வைத்தனர். பழைய கட்டுகளைப் பொறுமையாக அகற்றிச் சுத்தப்படுத்திப் புதுமருந்திட்டுப் புதுக்கட்டுகளைச் சுற்றினர்.

அப்போதுதான் செவிலியர் மேசையில் வைக்கப்பட்டிருந்த கட்டமிட்ட தாளொன்றைக் காட்டி என்ன இது என்று கேட்டார் பரிமளாதேவி. ‘‘அனாதை ஸ்கூலுக்கு நிதிஉதவி திரட்டறாங்களாம் மேடம். எங்க பையன் ஸ்கூல்ல ஆளுக்கொரு சீட்டு கொடுத்தனுப்பி வசூல் செய்யச் சொல்லிட்டாங்க. அவன் எங்க போவான் மேடம். இங்க யாருகிட்டயாவது கேக்கலாம்ன்னுதான் நானே வாங்கியாந்துட்டேன் மேடம்’’ என்று இழுத்தார் அந்தச் செவிலி. ‘‘அதைக்கொடு’’ என்று கேட்டு வாங்கிய பரிமளாதேவி ஒரு கட்டத்தில் தன் பெயரை எழுதிப் பக்கத்தில் பத்தாயிரம் ரூபாய் என்று நிரப்பினார். ஒன்றுக்குப் பக்கத்தில் சேர்ந்துகொண்டே போகிற சைபர்களைப் பார்த்து அந்தச் செவிலிக்குப் பயமே வந்துவிட்டது. பதற்றத்தில் ‘‘மேடம்’’ என்று சத்தமெழுப்பினாள். பதில் எதுவும் சொல்லாமல் சிரித்தபடியே தன் கைப்பையைத் திறந்து காசோலைப் புத்தகத்தை எடுத்து ‘‘பேர நீயே எழுதிக்கோம்மா’’ என்றபடி தொகையை மட்டும் நிரப்பிக் கையெழுத்திட்டுக் கிழித்துத் தந்தார். உறைந்து போனவளின் தோளைத் தட்டிய படியே ‘‘சரி, நா வரட்டுமா’’ என்றபடி காலைக் கீழே சிரமத்துடன் இறக்கிச் செருப்புக்குள் நுழைக்க முயற்சி செய்த தருணத்தில் நிலை பிசகி செவிலியின் மீதே சாய்ந்தார். மேடம் மேடம் என்று அதிர்ச்சியில் அவள் அலற அருகில் நின்றிருந்த நானும் அலற உடனே அங்கே கூட்டமே கூடிவிட்டது. அதற்குள் மூச்சுப் பேச்சு இல்லாமல் ஆகிவிட்டார் பரிமளாதேவி. அமைதியான அந்தப் புன்னகை மட்டும் அப்படியே அவர் உதடுகளில் உறைந்திருந்தது. ஓடிவந்த மருத்துவர் அவரை ஸ்ட்ரெச்சரில் கிடத்தி உள்ளே அழைத்துச் சென்றார். பத்துப்பதினைந்து நிமிடத்துக்குப் பிறகு தலையைத் தொங்கப்போட்டபடி வெளியே வந்தவர் ‘‘ஸாரி, ஷி ஈஸ் நோமோர்’’ என்று கைவிரித்தார்.

என் அஞ்சலிப் பேச்சை எப்படி முடித்துக்கொள்வது என்று தெரியவில்லை. எவ்வளவோ சரிவுகளும் கசப்புகளும் நிறைந்திருந்த போதிலும் பரிமளாதேவி ஒரு வெற்றிப்பறவை என்பதில் சந்தேகமே இல்லை. உச்சிக்கு, மேலும் உச்சிக்கு என்று பறந்து கொண்டே இருந்த பறவை. அப்பறவைக்கு ஒரு காலத்தில் தோழியாக நான் இருந்தேன் என்பதே எனக்கு மனநிறைவான அனுபவமாகும். நன்றி.

(தினமதி ஆண்டுமலர் -2002)