Home

Tuesday 26 January 2021

அப்பாவின் குரல் - கட்டுரை

 

இந்திரா நகரின் பேரழகே அதன் செறிவான வடிவமைப்புதான். ஒவ்வொரு குறுக்குத்தெருவும் முடியும் இடத்தில் ஒவ்வொரு பூங்காவைப் பார்க்கலாம். பல நேரங்களில் எந்தத் தெரு, எந்தப் பூங்கா என்பதே குழப்பமாக இருக்கும். அந்த அளவுக்கு ஒவ்வொன்றும் ஒரே மாதிரியான தோற்றத்துடன் காட்சியளிக்கும். எல்லாப் பூங்காக்களும் குறைந்தபட்சமாக இருபதாயிரம் சதுர அடியிலிருந்து அதிகபட்சமாக நாற்பதாயிரம் சதுர அடி வரைக்கும் நீண்டு விரிந்தவை.  பதின்மூன்றாம் குறுக்குத்தெருக்கும் பதினைந்தாம் குறுக்குத்தெருக்கும் இடையில் மூன்று பூங்காக்கள் உண்டு.  அவற்றில் முதலில் உருவானது பிரியதர்ஷினி அடுக்ககத்துக்கு எதிரில் உள்ள பூங்கா. எழுபதுகளின் இறுதியில் உருவானதாக பேசிக்கொள்வார்கள். நான் எண்பதுகளின் இறுதியில் வந்தபோது அந்தப் பூங்கா ஒரு சின்ன லால்பாக் போல எனக்குக் காட்சியளித்தது.

அப்பூங்காவில் குறைவான இடப்பரப்பில் நான்குவிதமான தோட்டங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. ரோஜா, சாமந்தி, குரோட்டன் செடிகள், குட்டைச்செம்பருத்தி என ஒவ்வொரு தோட்டத்திலும் பல நிறங்களில் பூக்கள் மலர்ந்திருக்கும் காட்சியைப் பார்ப்பது இனிய அனுபவம். களையெடுப்பதும் செடிகளைச் சுற்றி வட்டமாகப் பள்ளமெடுத்து தண்ணீர் நிரப்புவதுமாக ஓயாமல் வேலை செய்துகொண்டே இருப்பார் தோட்டக்காரர்.

தோட்டத்துக்கு வெளியே ஓரமாக ஒரு கல்பெஞ்சில் அமர்ந்து, புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமாகப் புரட்டி படம் பார்ப்பதுபோல தோட்டத்தில் பூத்திருக்கும் ஒவ்வொரு பூவாகப் பார்ப்பேன். அது நான் ரசிக்கும் வழிமுறை. துளித்துளியாக அக்காட்சியில் தோய்வது சொட்டுச்சொட்டாக தேனைச் சுவைப்பதுபோன்ற அனுபவம்.

தோட்டங்களுக்கு எதிர்ப்புறத்தில் பலவிதமான மரங்கள் உயர்ந்து நின்றிருக்கும். சுற்றுவேலியை ஒட்டி மழைமரங்களும் கல்யாணமுருங்கைகளும் காற்றில் அசையும். நடுவில் புங்கமரங்களும் வேப்பமரங்களும் வாதுமை மரங்களும் நாவல் மரங்களும் மாறிமாறி இருக்கும். நான்கு பக்க நுழைவாயில்களின் இருபுறங்களிலும் தென்னைமரங்களைப் பார்க்கலாம். மைனாக்களும் குருவிகளும் குயில்களும் மரக்கிளைகளில் அமர்ந்து பாடிக்கொண்டிருக்க, மரத்தடியில் சிறுவர்களும் சிறுமிகளும் இரைச்சலுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஆறடி அகலத்துக்கு மழமழப்பான வண்ணக்கற்கள் பதிக்கப்பட்டு நீண்டிருக்கும் சுற்றுவட்ட நடைபாதை பூங்காவுக்கு வெளியே நின்றிருப்பவர்களைக் கூட வாவா என்று அழைக்கும். பூங்காவுக்கு நடுவில் கூட்டல் குறிபோல அமைந்திருக்கும் கல்பதித்த கூடுதல் பாதைகளால் எந்த இடத்தில் வேண்டுமானாலும் நடையைத் தொடங்கவும் நடையை முடித்துக்கொள்ளவும் வசதியாக இருக்கும்.

நடைபாதைக் கற்களை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில்  அவசியமே இல்லாமல் மாற்றும் காரணத்தை ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது.  ஏற்கனவே இருக்கும் செம்மண்நிறக் கற்களை அகற்றிவிட்டு புதிதாக சாம்பல்நிறக் கற்களைக் கொண்டுவந்து பதிப்பார்கள். அல்லது சாம்பல்நிறக் கற்களை அப்புறப்படுத்திவிட்டு செம்மண்நிறக் கற்களைப் பதிப்பார்கள்.  .“என்ன சார் இது, அடுக்கனமா எழுந்தமான்னு இல்லாம வீட்டுக் கூடத்துல  ஸ்லாப் போடறமாதிரி ஒவ்வொன்னா வச்சி வேலைய இழுத்துகிட்டே இருக்காங்கஎன்று என்னோடு நடைப்பயிற்சிக்கு வரும் சண்முகசுந்தரத்திடம் சொல்லி வருத்தத்தை ஆற்றிக்கொள்வேன். ”ஒவ்வொன்னயும் அழகா வச்சிக்கணும்ன்னு அரசாங்கம் என்னத்தையோ செய்யுது, எதுக்கு எல்லாத்தயும் கேள்வி கேக்கறீங்க, பேசாம வாங்கஎன்று என்னை அடக்குவார் அவர்.

என்ன ஒரு வழவழப்பு. இஸ்கான் கோவிலில் கழுவித் துடைத்துவிட்ட தரைபோல இருக்கும். அதில்தான் சிறுவர்கள் ஓடுவார்கள். நடப்பார்கள். துள்ளிக் குதிப்பார்கள். விளையாடுவார்கள். “டேய் ஜாக்கிரதைடா ஜாக்கிரதைடாஎன்று பெஞ்சில் அமர்ந்து மேற்பார்வை பார்க்கும் பெற்றோர்கள் தம் அச்சத்தை வெளிப்படுத்துக்கொண்டே இருப்பார்கள். ஒருமுறை என்னோடு வந்த காளிதாஸ்பளிங்குத்தரை மாதிரி இருக்குது. தைரியமாக ஸ்கேட்டிங் போவலாம்  என்று ஆச்சரியத்தைப் புலப்படுத்தினார். உண்மையாகவே அன்று இரு சிறுமிகள் கால்களில் ஸ்கேட்டிங் பலகைகளைக் கட்டிக்கொண்டு கைகளைப் பின்பக்கமாகக் கோர்த்து கட்டியபடி குனிந்த நிலையில் ஸ்கேட்டிங் சென்றார்கள். ”வண்ணத்துப்பூச்சிங்க பறந்துபோகிறமாதிரி இருக்குதுஎன்று சிரித்தார் காளிதாஸ்.

ஒருமணி நேர நடைப்பயிற்சியை முடித்துவிட்டு பெஞ்சில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். சாம்பல் நிறக்கற்பரப்பில் எங்கெங்கும் கருநீல நாவல் பழங்கள் முத்துகள் போல உருண்டிருந்தன. நடக்க வந்தவர்களின் செருப்புக்காலடி பட்டு கூழாக நசுங்கித் தேய்ந்த கறைகள் மரத்தடியில் படிந்திருந்தன. நான் மரத்தை அண்ணாந்து பார்த்தேன். காதுக்குழைபோல தொங்கும் பழங்களின் மினுமினுப்பைப் பார்க்கப் பார்க்க ஆசையாக இருந்தது. என்றாவது ஒருநாள் காற்றில் ஒரு பழம் விழும்போது, அதை அப்படியே கையில் ஏந்தி வாங்கிக்கொள்ளவேண்டும் என்றொரு ஆசை பிறந்தது. காற்றில் அசையும் கிளைகளையும் பழங்களையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஒருகணம் சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டபடி வேலன் ஆடும் கிளைகளுக்கும் நடுவில் அமர்ந்திருப்பதைப்போல நினைத்துக்கொண்டேன்.

நாவல் பழத்தின் சுவை எனக்கு மிகவும் பிடிக்கும். நன்றாகக் கழுவியெடுத்து உப்புத்தண்ணீரில் மணிக்கணக்கில் ஊறவைத்து எடுத்துச் சுவைப்பது ரொம்பரொம்பப் பிடிக்கும். சில பழக்கடைகளில் பேரீச்சம்பழங்களின் அளவுக்குப் பெருத்திருக்கும் நாவல் பழங்களைப் பார்த்திருக்கிறேன். பண்ணைப்பழங்கள் என அவை விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றின் கொட்டைகளே சாதாரண நாவல் பழத்தின் அளவில் இருக்கும்.

அம்மாவின் கைவிரலைப் பற்றியபடி நடந்துபோன ஒரு சிறுமி தரையில் விழுந்து கிடந்த நாவல்பழக்குவியலைப் பார்த்துவிட்டு  சட்டென குனிந்து ஒரு பழத்தை எடுத்து ஊதிய பிறகு வாய்க்குள் வைப்பதைப் பார்த்தேன். அதற்குள் அச்சிறுமியின் தாயார் வேகமாக நெருங்கிவந்து அப்பழத்தைப் பிடுங்கி எறிந்தாள். “எவ்ளோ அழுக்கு. எவ்ளோ அசுத்தம். இத எடுத்து வாயில வைக்கறியே, உனக்கு அறிவில்லையா? சுகாதாரமில்லாத உணவுப்பழக்கம்தான் எல்லா நோய்க்கும் காரணம்ன்னு உனக்குத் தெரியாதா? ஸ்கூல்ல உங்க மிஸ் இதயெல்லாம் உனக்குச் சொல்லித் தரலையா?” என்று சத்தம் போட்டாள். அச்சிறுமி அவளுடைய சீற்றத்தைக் கண்டு அஞ்சி அடங்கிவிட்டாள். “முட்டாள் முட்டாள்என்றபடி சிறுமியின் கையைப் பற்றி கைக்குட்டையால் ஒவ்வொரு விரலையும் சுத்தப்படுத்திவிட்டு தன்னோடு அழைத்துக்கொண்டு வேகமாக நடக்கத் தொடங்கினாள்.

அந்தச் சிறுமியின்மீது பொழிந்த வசைமொழிகள் மீண்டும் மீண்டும் என் காதுகளில் ஒலித்தபடியே இருந்தன. அச்சிறுமியை நினைக்க பாவமாக இருந்தது. அக்காட்சியின் விளைவாக என்னை அறியாமலேயே தன்னிச்சையாகத்ச் பாவம்என்ற சொற்கள் வெளிப்பட்டுவிட்டன.  மரத்தடியில் வேறொரு பெஞ்சில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி என் பக்கமாகத் திரும்பிரொம்ப சுத்தம் பார்க்கறாங்க, இல்லையா சார்?” என்றார்.

அவரைத் திரும்பிப் பார்த்தேன். நடுவகிடை ஒட்டி சாம்பல் நிறத்தால் ஒரு கோடு இழுத்ததுபோல தலைமுடி. எங்கெங்கும் நரைத்திருந்தது. அடர்த்தியான தலைமுடியைச் சுருட்டி உருட்டி கொண்டை போட்டிருந்தார். காதோரம் நரைகுழல் காற்றில் பறந்தது. அவரும் என்னைப்போலவே அந்தச் சிறுமியைக் கவனித்திருக்கவேண்டும் என்று தோன்றியது.

ஆமாம்என்றேன். “பாவம், எவ்ளோ ஆசையா எடுத்து ஊதிச்சி.  ஆனா ருசி பாக்க கொடுத்துவைக்கலை. புடுங்கி போட்டுட்டு போய்ட்டா மகராசி

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலைன்னு சொல்வாங்களே, அது மாதிரி இருக்குது.”

நாம என்னங்க செய்ய முடியும்? அவுங்க பிள்ளை. அவுங்க கண்டிக்கறாங்க. குறுக்குல புகுந்து கேள்வி கேக்க நமக்கு என்ன உரிமை இருக்குது, சொல்லுங்க

மரத்திலேருந்து விழறத எடுத்து சாப்பிட்டா என்ன தப்புன்னு அந்த அம்மாவயே நிறுத்தி ஒரு கேள்வி கேக்கணும்ன்னு எனக்கும் ஒரு வேகம்  வந்தது. அப்பறம் தெரியாதவங்ககிட்ட என்ன பேச்சுன்னு நெனச்சி விட்டுட்டேன்.”

அந்த அம்மா பேசும் ஆர்வத்தில் இருப்பதைப்போல தெரிந்ததால் நானும் உரையாடலை வளர்த்த விரும்பினேன்.

அந்த காலத்துல ஏழைங்க எல்லாம் ஆப்பிள கண்டாங்களா, ஆரஞ்ச கண்டாங்களா? எல்லாருக்கும் தெரிஞ்ச பழம் நாவப்பழமும் கொய்யாப்பழமும்தான்என்று பொதுவாகச் சொன்னேன்.

அவர் உடனே தடையில்லாமல் பேசத் தொடங்கிவிட்டார். “எதயாவது தின்னாதான் பசி அடங்கும்ங்கற சூழ்நிலையில  வளந்தவங்களுக்கு கண்பார்வையில படறதெல்லாம் சாப்படற பழம்தான் சார். கள்ளிச்செடியில முள்ளுக்கு நடுவில கத்திரிக்கா கலர்ல குண்டுகுண்டா ஒரு பழம் இருக்கும். கையில முள்ளு குத்திக்காம அத எடுத்து கழுவிட்டு சாப்புடுவம். வேலிப்புதர்ல கொண்டைக்கடலை அளவுல மூக்குச்சளிப் பழத்த பார்த்தா கூட நாங்க விடமாட்டோம். ஓடிப் போய் பறிச்சி சாப்பிட்டுடுவம்என்றார்.

அதைக் கேட்டதும் எனக்கும் என்னுடைய இளமைக்காலத்து நினைவுகள் மனத்தில் அலைமோதின.

நான் கிராமத்துல இருக்கும்போது எங்க ஊரு ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல ரெண்டு மூனு நாவல் மரம் இருக்கும். லீவ் விட்டுட்டு ஸ்கூல் ஆரம்பிக்கிற மாசத்துலதான் மரத்துல பழம் பழுத்து உழும். நான் காலையில தூங்கி எழுந்ததுமே கொட்டாஞ்சி எடுத்துகினு அந்த மரத்துங்கிட்டதான் ஓடுவேன். இருட்டு கூட முழுசா கரைஞ்சிருக்காது. ஆனா எனக்கு முன்னால நாலு புள்ளைங்க ஏற்கனவே அங்க வந்து பழம் பொறுக்கிட்டிருப்பாங்க. அந்தக் கூட்டத்தோடு சேந்து நானும் பொறுக்குவேன். ஒன்னொன்னா தேடி எடுத்தாலும் எனக்கும் ஒரு கொட்டாஞ்சி பழம் கெடைச்சிடும்.”

அவர் ஒரு கசப்பான புன்னகையைச் சிந்தினார். ”இப்ப காலம் ரொம்ப மாறிப் போயிட்டுது சார். எதுவா இருந்தாலும் பணம் கொடுத்து வாங்கி சாப்படறதுதான் நல்ல பழக்கம். மரத்துல பறிச்சி சாப்படறதும் மரத்தடியில விழுந்து கெடக்கறத சாப்படறதும் கெட்ட பழக்கம்ங்கற எண்ணம் எப்படியோ உறுதியா மனசுல ஊறிட்டுது. இதெல்லாம் அதனால வரக்கூடிய தடுமாற்றம்தான்.”

நான் ஒருகணம் பதில் சொல்லாமல் அமைதியாக நடைபயிற்சி செல்பவர்களை வேடிக்கை பார்த்தேன். “பணம் நம்ம கண்ணு முன்னாலயே மிகப்பெரிய சக்தியா வளர்ந்து நிக்கறது நாம செஞ்ச அதிருஷ்டமா துரதிருஷ்டமான்னு சரியா தெரியலை. என்னைக்காவது நாம ஆய்ஞ்சு ஓஞ்சு கணக்கு போட்டு பாக்கும்போதுதான் அது புரியும்

முதலில் சென்ற அம்மாவும் சிறுமியும் அடுத்த சுற்றுக்காக எங்களைக் கடந்து நடந்து சென்றார்கள். அப்பாதையின் திருப்பத்தைக் கடக்கும் வரைக்கும் அவர்களையே பார்த்தபடி இருந்த அந்த அம்மா என் பக்கமாகத் திரும்பி இதே மரத்தடியில அந்தப் பொண்ணு வயசுல நானும் எங்க அண்ணனும் பழம் பொறுக்கி சாப்பிட்டிருக்கோம் சார்என்றார்.

நான் ஆச்சரியத்துடன் அவரைத் திரும்பிப் பார்த்தேன்.

உண்மைதான் சார். ஒரு அம்பது வருஷத்துக்கு முன்னால நடந்த கதை அது.”

நீங்க இங்க இருந்தீங்களா அப்ப?”

அவர் ஆமாம் என்பதுபோல தலையசைத்தார்.

இந்திரா நகரா நீங்க?”

இந்திரா நகர்ல இருக்கறவங்கதான் இந்த மரத்தடியில பழத்த எடுத்து சாப்புடணுமா என்ன?”

அப்படியெல்லாம் இல்ல. நீங்க இந்திரா நகர்க்காரங்களோன்னு நெனச்சி கேட்டேன். இதுவரைக்கும் நான் உங்கள பார்த்ததில்லையேன்னு ஒரு குழப்பம்.”

எந்த ஊருன்னு நான் என்ன சொல்லிக்கறது? அப்பாவுக்கு வாணியம்பாடி பக்கம். அம்மாவுக்கு திப்பெசந்த்ரா. அவுங்களுக்கு அண்ணன், நானு, எனக்கு கீழ ஒரு தம்பி, ஒரு தங்கச்சின்னு நாங்க நாலு புள்ளைங்க.”

என் மனம் வேகமாக அரைநூற்றாண்டை உருட்டிவிட்டு அதற்கப்பால் சென்று நின்றது.

அப்பா இங்கதான் ஒரு கவுன்சிலர் வீட்டுல தொடக்கத்துல வேலை செஞ்சாரு. இதெல்லாம் அந்த காலத்துல பெரிய பெரிய தோப்பா இருந்த இடம். திரும்பற எடம்லாம் கொய்யாத்தோப்பு. தென்னந்தோப்பா இருக்கும். அதத்தான் இந்திரா நகர்னு தெரு தெருவா பிரிச்சி ஊடு கட்டினாங்க. ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு பூங்காவ உண்டாக்கனாங்க. இந்திரா நகருல இந்த பூங்கா உண்டானபோது அந்த கவுன்சிலர் எங்க அப்பாவ இதுல சேத்து உட்டாரு. அவுங்களே பூங்காவுக்குள்ள ஒரு ரூம கட்டி குடுத்தாங்க. வாடகை இல்லாம கெடைக்குதேனு நெனச்சி இந்த வேலைக்கு வந்துட்டாரு அப்பா.”

இந்த நாவல்மரம் அப்பவே இருந்ததா?”

ஆமாம். இதுவும் அதோ அந்த மூலையில இருக்கற தேக்குமரமும் ரெண்டும் மட்டும் அப்பவே இந்த எடத்துல இருந்தது. மத்த எல்லா மரங்களும் நாங்க வச்சி வளத்தது. புங்கமரங்களயும் வேப்பமரங்களயும் எங்க அண்ணன் வச்சான். அந்த தென்னங்கன்னுங்களெல்லாம் நான் வச்சது.”

அவர் பூங்காவின் நுழைவாயிலில் ஓங்கி நின்றிருந்த தென்னைமரங்களின் பக்கமாகத் திரும்பிப் பார்த்தார். அரைக்கண நேரத்துக்கும் குறைவான பொழுதில் அவர் கண்களில் மின்னி மறைந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் நான் பார்த்தேன். தென்னை மரங்களையும் பூந்தோட்டங்களையும் அவர் மாறிமாறிப் பார்த்தபடி இருந்தார்.

வேலி போட்டு கொடுக்கும்போது இந்த இடம் ஒரே பள்ளமும் மேடுமா இருந்தது. ராத்திரியும் பகலுமா தனி ஆளா கொத்தி கொத்தி அப்பா இந்த இடத்த சரியாக்கினாரு. சின்ன சின்ன கூடைக்குள்ள வச்சி வளர்த்த கன்னுங்கள வண்டில கொண்டாந்து எறக்கிட்டு போவாங்க. அதயெல்லாம் சரியான எடத்த பாத்து அப்பா பள்ளம் தோண்டி நடுவாரு. அஞ்சி வருஷம் இங்க இருந்தம். என் தம்பியும் தங்கச்சியும் இங்கதான் பொறந்தாங்க. அப்பாவுக்கு இந்த குளுரு சுத்தமா ஒத்துக்கலை. டிபி வந்து உடம்புக்கு முடியாம ரொம்ப கஷ்டப்பட்டு செத்துட்டாரு.”

ஆஸ்பத்திரிக்கு போகலையா?”

மருந்தால கட்டுப்படுத்தாத எல்லைக்கு போயிடுச்சி அவருடைய வியாதி. அவரு படுத்திருக்கற சமயத்துல நானும் எங்க அண்ணனும்தான் இந்த செடிகளுக்கு தண்ணி ஊத்துவம். நான் பூங்காவ பெருக்கி எப்பவுமே சுத்தமா வச்சிக்குவேன். அப்ப இந்த சலவைக்கல்லுங்க கெடையாது. சுத்தமான தரை. ஒரு நாளைக்கு மூனு தரம் பெருக்கணும்.”

உங்க பேரு?”

பார்வதி. எங்க அப்பா சுருக்கமா பாரு பாருன்னு கூப்புடுவாரு

அதைச் சொல்லும்போது வயதை மீறி அவர் முகம் சிவந்தது. அவர் முதுமை மறைந்து ஒருவித குழந்தைமை படிந்து நிறைந்தது.

இங்க நிக்கும்போது பாரு பாருன்னு எங்க அப்பா கூப்புடறமாதிரியே இருக்குது. இங்க வந்து இந்த பெஞ்சில உக்காந்து கண்ண மூடிக்கும்போது அவரு குரல் காதுல கேக்குது. அவருடைய மூச்சுக்காத்து இங்கயே சுத்தி சுத்தி வர மாதிரி இருக்குது

என்ன பேச என்று எதுவும் தோன்றாமல் நம்பமுடியாதவனாக அவரையே பார்த்தபடி இருந்தேன்.

அப்பாவுக்கு அப்புறமா அம்மா இந்த வேலைய பாத்துகிட்டாங்க. எலெக்ஷன்லாம் வந்து ஆட்சி மாறிட்டதும்  எங்கள போவ சொல்லிட்டாங்க. லட்சுமிபுரத்துல ஒரு குடிசைக்கு மாறிப் போயிட்டோம். அம்மா ஊட்டுவேலைக்கு போயி எங்கள கஷ்டப்பட்டு வளத்தாங்க. அண்ணன் ஒரு மெக்கானிக் ஷாப்ல வேலைக்கு போனான். நான் ஒரு ரெடிமேட் சட்டை தைக்கற ஒரு கம்பெனியில வேலைக்கு போனேன். பத்து பாஞ்சி வருஷம் கழிச்சி அம்மாவும் செத்துட்டாங்க...”

நீங்க கல்யாணம் பண்ணிக்கலையா?”

அவர் பதிலே பேசாமல் சில நொடிகள் அந்த நாவல் மரத்தையே ஆழமாகப் பார்த்தபடி மூச்சை வேகமாக இழுத்தார்.

அண்ணன் ஒரு தெலுங்கு பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டு தனியா போயிட்டான். அவன் போன மாதிரி நானும் போயிட்டா என் தம்பியயும்  தங்கச்சியயும் யாரு பாத்துக்கறது? நான் பொறந்ததே அவுங்களுக்காகத்தான்னு நெனச்சி அவுங்கள வளத்து ஒரு ஆளா நிறுத்தினேன். அது போதும் இந்த கட்டைக்கு.”

அவர் தன் விழியோரம் திரண்ட நீர்முத்துகளை தன் ஆட்காட்டி விரலால் தொட்டெடுத்து சுண்டிவிட்டு என்னைப் பார்த்தார்.

ஆலமரத்த விழுதுகள் தாங்குதுன்னு சொல்றதெல்லாம் கதையிலதான்  சார் நடக்கும். உண்மையில விழுதுகளைத்தான் ஆலமரம் தாங்கி நிக்கவேண்டியிருக்குது.”

அவரை அந்தத் துயரத்தின் கோட்டிலிருந்து வெகுவிரைவில் அப்புறப்படுத்தி அழைத்துவந்துவிட வேண்டும் என்று எனக்குப் பதற்றமாக இருந்தது. வேகமாகஅவுங்கள்ளாம் இப்ப எப்பிடி இருக்காங்க?” என்றேன்.

மாரியாத்தா புண்ணியத்துல ரெண்டு பேருமே நல்லா நிமுந்துட்டாங்க சார். தம்பி கவுர்மெண்ட் ஸ்கூல்ல ட்ரில் மாஸ்டரா இருக்கான். தங்கச்சி ஒரு மருந்துக் கம்பெனியில வேலை பாக்கறா. ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணியாச்சி. அவுங்கள பாத்துகிட்டது போக, அவுங்க புள்ளைங்கள பாத்துக்கறதுல இப்ப காலம் போவுது.”

அவர் பெஞ்சிலிருந்து இறங்கி தரையில் விழுந்து உடையாமல் உருண்டிருக்கும் நாவல் பழங்களைத் தேடித்தேடி எடுத்து அவற்றின் மீது படிந்திருக்கும் மண்துகளை ஊதிவிட்டுச் சேகரித்தார்.

தெனம் வாக்கிங் வருவீங்களா?”

காலையில நாலரை மணிக்கு எழுந்து குளிச்சிட்டு அஞ்சுமணிக்கு கெளம்பி அஞ்சே முக்கால்க்கு நான் வேலை செய்யற வீட்டுக்கு போவேன். பத்தரைக்கு திரும்பிவருவேன். அப்புறம் மூன்ற மணிக்கு போயி ஏழு மணிக்கு வருவேன். போவ மூனு கிலோமீட்டர் திரும்ப மூனு கிலோமீட்டர். ஒரு நாளைக்கு பன்னெண்டு கிலோமீட்டர் நடக்கறேன். இதுக்கு மேல வாக்கிங் போய் நான் எந்த கொழுப்ப கொறைக்கபோறேன்?”

தன் கேள்வியை சிரித்தபடி கேட்டுக்கொண்டே எனக்கு அருகில் வந்தார் அவர். தன் கையில் இருந்த நாவல்பழங்களில் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு எஞ்சியதை என்னிடம் கொடுத்தார். அந்த ஒரு பழத்தை ஓரமாகக் கடித்து அதன் சாற்றை நாக்கில் சிறிதுநேரம் தேக்கி லயித்து விழுங்கிய பிறகு முழுப்பழத்தையும் வாய்க்குள் போட்டு சதைப்பகுதிகளை பற்களாலேயே பிரித்தெடுத்து சுவைத்தபடி கொட்டையைத் துப்பினார். 

பழத்தின் சுவையில் ஆழ்ந்து நாக்கைத் தட்டியபடி எப்பவாச்சும் எங்க அப்பா ஞாபகம் வந்துடும் சார்என்று என்னைப் பார்த்துச் சொன்னார். ”அப்ப இந்த பூங்காவுக்கு வந்து ஒரு அரமணி நேரமோ ஒருமணி நேரமோ இங்க உக்காந்துருவேன். என் கண்ணு முன்னால எங்க அப்பா நிக்கறமாதிரியும் நடமாடறமாதிரியும் இருக்கும். பாரு பாருன்னு அவர் கூப்புடற குரல் கேக்கும். அவருடைய மூச்சுச்சத்தம் கூட கேக்கும். அது கேக்கக் கேக்க மனசெல்லாம் நிறைஞ்சிடும்.”

சொல்லிக்கொண்டே ஒருகணம் அவர் கண்களை மூடிக்கொண்டார்.  பிறகு மெல்ல விழி திறந்து எங்க அப்பாவுடைய குரல் இருக்கே, அது வெங்கலமணி அடிக்கற மாதிரி கணீர்கணீர்னு இருக்கும்என்றார்.

புன்சிரிப்பு படர்ந்த அவர் முகத்தைப் பார்க்கப் பார்க்க எனக்கே பரவசமாக இருந்தது. அறுபது வயதைத் தொட்ட பெண்மணி மறைந்து அவருக்குள்ளிருந்து இரட்டைச்சடைகளோடும் தெத்துப்பற்களோடும் ஒரு சிறுமி எழுந்து வந்து நிற்பதை என்னால் பார்க்கமுடிந்தது. அவர் குரலும் கணீர்கணீர் என ஒலிக்கும் மணியோசையைப் போலத்தான் இருந்தது. 

ஆனா கடைசி காலத்துல ஒருதரம் பேர சொல்லி கூப்பிட்டு முடிக்கறதுக்குள்ள நூறுதரம் இருமுவாரு. இங்க வந்தா அந்த இருமல் சத்தமும் சேந்து கேக்குது சார்

பெருமூச்சுடன் சொன்னாலும் அவர் குரலில் படிந்திருந்த கனிவையும் பாசத்தையும் என்னால் உள்வாங்கிக்கொள்ள முடிந்தது.

 

(இருவாட்சி – பொங்கல் மலர் – 2021 )