Home

Tuesday 26 January 2021

திசை தேடும் பறவை - சிறுகதை


தாத்தாவின் முடிவு குறித்து யாருக்கும் திருப்தி இல்லை. அபரிமிதமான சோர்வும் துக்கமும் கொண்டிருந்தார் அப்பா. தத்தளிக்கும் உணர்ச்சிகளை அவர் முகம் அப்பட்டமாய் வெளிக்காட்டியது. கண்டமங்கலம் சித்தப்பாவும், பாக்கியம் அத்தையும் எதுவும் பேசமுடியவில்லை. புடவை முந்தானையால் வாயை மூடிக்கொண்டு, கதவுக்குப் பின்பக்கம் நின்றுகொண்டு அம்மா அழுதாள். தாத்தாவோ மகிழ்ச்சி, துக்கம் எதையும் காட்டிக்கொள்ளாத முகத்துடன் இருந்தார். புரிதல்களுக்கு அப்பாற்பட்ட ஒரு மர்மச் சித்திரமாய் இருந்தது அவர் முக உணர்ச்சி. பொங்கல், தீபாவளி சமயங்களில் காலில் விழுந்து வணங்கி எழுகிற மாதிரி அன்றைய தினம் எல்லாரும் விழுந்து கும்பிட்டோம். எல்லோரின் தலையையும் ஆதரவுடன் தொட்டு ஆசிர்வாதம் செய்துவிட்டு தாத்தா விடை பெற்றுக்கொண்டார்.

 

ஒரு ஜோடி மாற்று வேட்டி, சட்டை, கொஞ்சம் பணம் எல்லாவற்றையும் ஒரு ஜவுளிப் பையில் வைத்துச் சுருட்டியிருந்தார். வேறு உணவையோ, எங்கள் ஞாபக அடையாளங்களாய் எந்தப் பொருள்களையோ தொடவில்லை அவர். மென்மையாய்த் திரும்பி எங்களைப் பார்த்து உதிர்த்த சிரிப்புதான் தாத்தாவின் ஞாபகமாய் இன்னும் இருப்பது. எந்த இடம் நோக்கிய பயணம் என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை அப்போது. தாத்தாவுக்கே தெரியாத விஷயம் அது. காசியை நோக்கி என்பது உத்தேசமான எல்லைதானே தவிர, அங்கேயே இருப்பது குறித்தோ அல்லது வேறு இடம் செல்வது குறித்தோ அவருக்கே நிரந்தரமான அபிப்பிராயம் இல்லை. மனம் எங்கே ஆசுவாசமாய் உணர்கிறதோ அங்கேயே பயணத்தை முடித்துக் கொள்வதாய் மட்டும் சொன்னார். துயரத்தின் நீளமான நிழல் ஒரு யானையைப்போல எங்கள் வீட்டையே அமுக்கித் துவைத்திருந்தது. தேம்பும் முகத்துடன் தாத்தா புறப்பட்டுச் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தோம். ஆயா இறந்து கருமாதி முடிந்த மறுநாள் நடந்தது அது.

 

தாத்தா தெருமுனைக்கு திரும்பும் வரையில் பார்த்தபடியே ஒவ்வொருவரும் சிலைபோல நின்றுகொண்டிருந்தார்கள். அப்போது தான் நான் அந்தக் காரியத்தைச் செய்தேன். எனக்குள் பெருகிய வேகத்தின் விளைவு அது. ஒரு கட்டளைபோல தாத்தா திரும்பத் திரும்ப ஏற்கனவே சொல்லி வைத்திருந்தாலும் மீறலைப் பற்றிய அச்சம் எதுவுமின்றி அதைச் செய்தேன். எனக்குள் பெருகிய வேகத்தின் விளைவு அது. ஒரு கட்டளைபோல தாத்தா திரும்பத் திரும்ப ஏற்கனவே சொல்லி வைத்திருந்தாலும் மீறலைப் பற்றிய அச்சம் எதுவுமின்றி அதைச் செய்தேன். முதுகுக்குப் பின்னால் என்னை அழைக்கும் குரல்களையெல்லாம் புறக்கணித்தபடி, கிடுகிடுவென்று ஓடி அவர் பின்னால் நின்றேன். தாத்தாவின் விரல்களைச் சட்டென்று பற்றிக் கொண்டேன். சமீபத்தில் ஆயாவை இழந்தபோது நேர்ந்த துக்கத்தைக் காட்டிலும் அதிகமான துக்கத்தை உணர்ந்தேன். தாத்தா சிறிது நேரத்துக்கு என்னைப் பார்த்து விட்டு என் கண்ணங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டு தலையைக் கோதி ஒரு முத்தம் கொடுத்தார். நானும் வரட்டா தாத்தாஎன்ற என் கெஞ்சுதல்களை அவர் பொருட்படுத்தவே இல்லை. நான் கேட்டது எதையுமே அவர் இல்லை என்று சொன்னதில்லை. ஆனபோதிலும் அன்றைய தினம் என் கேள்வியைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாத மாதிரி தட்டிக் கொடுத்துத் திரும்பிப் போகச் சொன்னார். குமுறிக் குமுறிப் பெருகும் ஆழுகையோடு திரும்பினேன்.

 

அடுத்த ஒரு வாரம் வரைக்கும் வீட்டு ஜனங்கள் மத்தியில் பேசும் பொருளானது, தாத்தாவின் விஷயம். பழைய அனுபவங்களையெல்லாம் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருந்தனர். வெளியூரில் இருந்து வந்த உறவினர் எல்லாம் மீண்டும் புறப்பட்டுப் போய் விட்டார்கள். விட்டில் அப்பா, அம்மா, தங்கை, நான் மாத்திரமே. நினைத்து நினைத்துப் பல நேரங்களில் அழுதாள் அம்மா.

 

ஜன்னலையொட்டிய ஒரு ஈச்சரில் தாத்தா உட்கார்ந்திருப்பார். பக்கத்தில் ஒரு ஸ்டூல் இருக்கும். அதன் மேல் தாத்தாவுக்குத் தேவையான பொடி, விசிறிமட்டை, கண்ணாடி, ஏதாவது ஒரு பழைய புராண புத்தகம் இருக்கும். நாலெட்டில் நடந்து சேர்க்றி மாதிரி நீளவாக்கில் பெஞ்ச் போட்டு அதன் மேல் படுக்கை விரித்திருக்கும். தாத்தாவின் புழங்குமிடம் இந்தசி சிறிய பரப்பளவுக்குள்ளேயே அடங்கிவிடும். பல நேரங்களில் தூணில் சாய்ந்தபடி அப்பா ஈச்சரையும் பெஞ்சையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தேன். அவர் முகம் சிவந்து கனிந்திருந்தது. பார்வையில் அளவிட முடியாத துக்கம் கவிந்திருந்தது. வலியை அடக்கிக் கொண்டு தவிக்கிற தோற்றம் அது. அப்பாஎன்று பக்கத்தில் சென்று நான் போய் கூப்பிடும்போது கூட அது அவர் காதுகளில் விழுந்ததில்லை. அந்த சமயங்களில் எல்லாம் அம்மா, என்னை அழைத்து தின்ன ஏதாச்சும் கொடுத்து வெளியே அனுப்பி வந்தாள்.

 

ஈச்சர் பக்கதிலோ, பெஞ்ச் பக்கத்திலோ அப்பா என்னையோ, தங்கையையோ விளையாட அனுமதித்ததில்லை. இரண்டுக்குமான இடைவெளியைக் குறைத்து நெருக்கி வைத்து ஞாபகக் சின்னமாக்கி இருந்தார். தாத்தா புறப்பட்டுச் சென்ற தினத்தின் போது வர இயலாத உறவினர்களும், நண்பர்களும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் வந்து போனார்கள். எல்லார் முகங்களிலும் ஒரு திகைப்பிருந்தது. வெறுமையான பார்வையை தாத்தாவின் பொருள்கள் இருந்த மூலையில் வீசிவிட்டு கோயிலில் நிற்கிற மாதிரி மௌனமாய் நின்றிருந்தார்கள்.

 

தாத்தாவின் பிரிவில் நானும், தங்கையும் பல விதங்களில் பாதிக்கப்பட்டிருந்ததோம். முதலாவது எங்களுக்குப் பேசி விளையாட ஆள் இல்லை. மூன்றரை மணிக்குப் பள்ளிக்கூடம் விட்டு வருகிற நாங்கள் அம்மாவும் அப்பாவும் வேலை விட்டு திரும்புகிற ஏழு அல்லது ஏழரை மணி வரைக்கும் ஊமைக் கோட்டான்கள் மாதிரி ஒருவரை ஒருவர் பார்த்தபடி உட்கார வேண்டியிருந்தது. சகிக்க முடியாத அளவுக்குப் பெரிய இம்சையாய் இதை உணர்ந்தோம். அடுத்தபடி ஏரிக்கோ, தோப்புக்கோ, ரயில்வே ஸ்டேஷனுக்கோ எங்களை அழைததுப் போக யாருமில்லை. சாயங்கால வாக்கிங் என்கிற அத்தியாயமே முந்து தேய்ந்தது. அதற்கடுத்து இரவில் எங்களுக்குக் கதை சொல்ல யாருமில்லை. செய்தித்தாளையோ, வாராந்திர பத்திரிகையையோ புரட்டிப் பார்த்தபடி அம்மாவும் அப்பாவுமிருக்க, மீண்டும் நாங்கள் தனிமையில் தவித்தோம். தாத்தாவின் பிரிவால் எங்களுக்கு நேர்ந்த நஷ்டக்கணக்கு பெரியவர்களின் நஷ்டங்களுக்குக் குறைந்ததில்லை.

 

தாத்தாவிடமிருந்து ஏதாவது தகவல் வரும் என வாரக்கணக்கில் அப்பாவும், அம்மாவும் எதிர் பார்த்திருந்தார்கள். தினசரி வரும் மடல்களுக்கு நடுவில் தாத்தாவின் கையெழுத்துக்கு ஏங்கிக் கிளறிப் பார்த்து ஏமாற்றம் அடைந்தார்கள். ஆனால் இதை யாரும் வெளியே சொல்லவில்லை. விஷயமறியாத யாராச்சும் புதியவர்கள் வந்து தாத்தா பற்றி விசாரிக்கும்போது தான் பதில சொல்ல சங்கடப்பட்டார்கள். போன ஜன்மத்திலோ அல்லது அதற்கும் போன ஜன்மத்திலோ குடும்பத்தின் மீது ஏவப்பட்டுள்ள சாபமாகத் தான் இது இருக்கக்கூடும், என்று சிலர் சொன்னார்கள். செத்துப்போன ஆயா தான் தாத்தாவின் மனசில் புகுந்து இப்படியெல்லாம் நிகழ்த்தியிருக்கக்கூடும் என்று சிலர் சொன்னார்கள். கடைசிக் காலத்தில் கிழவனுக்குப் பிள்ளைகளோடு இருந்து சாகக் கொடுத்து வைக்கவில்லை என்று குறை சொல்லவும் செய்தார்கள் சிலர். இப்படி ஒரு நல்ல பிள்ளையும், மருமகளும் இருக்கும் போது கும்பலோடு கும்பலாக இருந்து சந்தோஷமாய் இருக்கத் தெரியாத மனுஷனுக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்க வேண்டும் என்றும் சொன்னார்கள் சிலர். நாக்கு சப்புக் கொட்டிக் கொண்டு குறுக்கில் எந்த பதிலும் சொல்லாமல் அம்மாவும் அப்பாவும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

 

ஆறுமாசம் கழித்து தாத்தாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அப்பாவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம் கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு கண்கள் தளும்ப உட்கார்ந்து விட்டார். என்னைப் பற்றியும், தங்கையைப் பற்ம் தாத்தா இரண்டுமுறை கடிதத்தில குறித்திருந்ததில் அளவு கடந்த சந்தோஷம் எனக்கு. காசிக்குப் போகாமல் ராஜஸ்தானுக்குப் பக்கத்தில் ஓர் ஆசிரமத்தில் தங்கி இருப்பதாகவும் மன அமைதியோடு இருப்பதாகவும் தனது முடிவு குறித்து யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், மன நிறைவோடு இருக்கிற சொச்ச காலத்தையும் ஆசிரமத்தில் கழித்துவிடுவதாகவும் எழுதியிருந்தார் தாத்தா. கடைசியில் எல்லார்க்கும் ஆசீர்வாதங்களை சொல்லி முடித்திருந்தார்.

 

ஆசிரமத்திலேயே தங்கிவிடுவது என்ற தாத்தாவின் வார்த்தைகள் தந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. அப்பா ஒரு குழந்தை போல குலுங்கிக் குலுங்கி அழுதார். இரவு வெகு நேரம் வரைக்கும் அப்பாவை அம்மா சமாதானம் செய்தாள். அன்று இரவு ஒரு கனவு கண்டேன் நான். கனவில், வீட்டுக்குப் பக்கத்தில் எங்கள் பள்ளிக்கூட அகலத்துக்கு பெரிய ஆசிரமத்தை நான் கட்டுகிற மாதிரியும், அதில் தாத்தாவைத் தங்க வைத்துவிட்டு அவரைச் சுற்றிச் சுற்றி நானும் தங்கையும் ஆடுகிற மாதிரியும் இருந்தது. விடிந்து தங்கையோடு பள்ளிக்குப் போகும் போது சொன்னதும் அவளுக்கும் ஏராளமான சந்தோஷம்.

 

வருடாந்திர விடுப்பு வரும்போது தாத்தா இருக்கிற ஊருக்குப் போய்வரலாம் என அப்பா அறிவித்தபோது நாங்கள் குதூகலத்தில் அரையடி உயரமாய் வளர்ந்து போனோம். அப்போதிருந்தே விடுப்பு ஆரம்பம் குறித்து கணக்கிடத் தொடங்கினோம். ஒவ்வொரு நாள் கழிந்ததும் காலண்டரில் சிவப்பு மையால் ஒவ்வொரு தேதியையும் குறுக்காக அடிக்க ஆரம்பித்தோம். கணக்கு தப்பிவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் கண்டுபிடித்த குறுக்கு வழி அது. நடுவில் எங்கள் திட்டம் குறித்து அப்பா தாத்தாவுக்கு நான்கு மடல்கள் எழுதினார். ஒன்றுக்குக் கூட அங்கிருந்து பதில் இல்லை. எனினும் நாங்கள் புறப்படுகிற திட்டத்தில் எந்த மாற்றமும் நேரவில்லை. டிக்கட்டுக்கள்கூட பதிவு செய்து விட்டார் அப்பா. அம்மாவும் தன் ஆபீஸில் சொல்லி விடுப்புக்கு தயாராகி விட்டாள். நாளை புறப்பட வேண்டும் என்ற கட்டத்தில் அப்பாவுக்கு அவர் ஆபீஸில் இருந்து அவசர உத்தரவு வந்தது. காக்கிச்சட்டை போட்ட ஒரு பியூன் வந்து அழைத்துப்போனான். போய் திரும்பிய அப்பா இறுகிய முகத்துடன் வந்தார். துக்கத்தில் உதட்டைக் கடித்தபடி தாத்தாவின் ஈச்சரையே வெறித்தபடி ரொம்ப நேரத்துக்கு உட்கார்ந்திருந்தார். வற்புறுத்திக் கேட்ட அம்மாவுக்கு கண்களில் ஈரம் மினுமினுக்க அன்றைய ராத்திரியில் இருந்து தேசம் முழுக்க புதுசாக ஒரு சட்டம் போட்டிருப்பதாகவும் அதிகாரிகளுக்குத் தந்திருக்கிற விடுப்பு எல்லாம் அவசர உத்தரவின் பேரில் ரத்து செய்யப்பட்டு வேலைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் சொன்னார். எங்கள் ரயில் பயணம் ரத்தானது குறித்து அளவு கடந்த வருத்தம் எங்களுக்கு. தாத்தாவின் போட்டாவையே பார்த்தபடி தூங்கிப் போனோம். விடிந்ததும் அம்மா அடுத்த வருஷம் பெரிய லீவுக்கு அவசியம் தாத்தாவைப் பார்க்க அழைத்துப் போவதாய் சமாதானம் செய்தாள்.

 

‘‘முதல் கோணல் முற்றும் கோணல்’’ என்பது அனுபவித்தவனின் வசனமாய்த்தான் இருக்கவேண்டும். நாங்கள் நினைத்த மாதிரி எந்த வருஷமும் பெரிய லீவில் கிளம்ப இயலவில்லை.

 

ஒரு வருஷம் அம்மாவின் தம்பிக்கு திருமணம் இருந்தது. இன்னொரு வருஷம் ஆபீஸ் பதவி உயர்வு சம்பந்தமாய் ஒரு தேர்வுக்குப் படிக்க வேண்டியிருந்தது. அடுத்த வருஷம் நாங்கள் எல்லோருமே இன்னொரு ஊருக்கு அப்பாவின் மாற்றலால் மாற வேண்டியிருந்தது. அதற்கடுத்த வருஷம் அப்பா ஆபீஸ் லோன் வாங்கி வீடு கட்ட ஆரம்பித்தார். அப்புறம் வந்த வருஷத்தின் போது அம்மாவுக்குச் சுகவீனமாகி அறுவை சிகிச்சை வரைக்கும் வந்துவிட்டது. பதட்டமான சூழல்களுக்கு நடுவில் பிரயாணம் தள்ளிக்கொண்டே போனது. நானும் காலேஜில் சேர்ந்திருந்தேன். அதிவேகத்தோடு ஓடிக்கொண்டிருந்தது காலம்.

 

முடியை ஒருபக்கமாய் தள்ளிச் சீவிக்கொண்டு நான் கிளம்பும் போது என் முகம் தாத்தாவின் முகத்தைப் போல இருக்கிறதாய் அம்மா சொன்னாள். அது எனக்குப் பெருமையாய் இருந்தது. தாத்தா மீதான அன்பும் ஞாபகமும் வளர்ந்து கொண்டே இருந்தன. தாத்தா ஏன் அப்படிச் செய்தார் என்கிற கேள்வி மாத்திரம் பதில் தெரியாமல் ஒரு பரிசல்போல மனம் தத்தளித்துக்கொண்டிருந்தது.

 

சாலை விபத்தில் அப்பா ஒரு முறை மோசமாய் காயமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்தார். ஒருவார காலம் வலியில் முனகிக்கொண்டு தூக்கமின்றித் தவித்தார். அமைதியான முழு உறக்கத்தை அவர் எதிர்கொள்ள பத்துப் பதினைந்து நாள்களாயின. தூங்கி எழுந்ததும் ஒரு நாள் எங்களையெல்லாம் பக்கத்தில் அழைத்து தாத்தா, தன் கனவில் வந்து தலையைத் தடவிக் கொடுத்ததாய் சொன்னார். சொல்லும்போது அவர் முகத்தில் மிகுந்த பரவசம். அதே தருணம், குற்ற உணர்வும் மெல்லமெல்லப் பரவியது. குனிந்து கொண்டார் அப்பா. சிறிது நேர யோசனைக்குப் பின்பு, தான் மாத்திரம் சென்று தாத்தாவைப் பார்த்துவரப் போவதாய் சொன்னார். சரிதான், வழக்கமான திட்டம்தான் இது என்று சிறிது அலட்சியமாகவே நான் இருந்தேன். ஆனால், நிஜமாகவே குணமானதும் புறப்பட்டு விட்டார். சென்னை சென்ட்ரலிலிருந்து அப்பா கொண்டுவரும் தாத்தாவின் தகவல்களுக்காக ஏங்க ஆரம்பித்தேன். தாத்தா எங்களைப் பற்றி என்னென்ன நினைப்பார் என்று கற்பனை செய்து விவாதம் செய்தோம்.

 

ஒரு வாரத்திற்குப் பிறகு அப்பா திரும்பினார். அவர் முகத்தில் பேரானந்தம், திருப்தி. போன வந்த கதையைப் பற்றி அடுக்கிக் கொண்டே போனார். தாத்தா ஆசிரமத்தில் சௌக்கியமாய் இருப்பதாகவும், தன்னை ஆனந்தத்தோடு தழுவிக் கொண்டதாகவும், எல்லோரையும் விசாரித்ததாகவும் சொன்னார். ஆள், அடையாளம், பெயர் சொல்லி விசாரித்ததாகவும், ஒரு சின்ன சாமியார் தன்னை ஆசிரமத்துக்குள் அழைத்துக்கொண்டு போய் நிறுத்தி இவர் தான்என சுட்டிக்காட்டியபோது தாத்தா ஒரு கழிப்பறையைத் தூய்மை செய்துகொண்டிருந்தார் என்றும் சொன்னார். அன்றிரவு தூங்கவே இல்லை நாங்கள். அப்பாவைத் தூண்டித் தூண்டி தாத்தாவைப் பற்றி கேட்டுக்கொண்டிருந்தோம். பையில் இருந்து ஒரு பழைய புத்தகத்தை எடுத்து தாத்தா எனக்கேத் தரச் சொன்னதாய் என்னிடம் தந்தார் அப்பா. அது வடநாட்டுக் கோயில் பற்றிய ஒரு புத்தகம். தாத்தாவின் கையெழுத்து உள்ளே. நான் சந்தோஷத்தில் குளிர்ந்து போனேன். ஆனந்தத்தில் என் கண்கள் தளும்பியது. பெரிய பொக்கிஷம் போல அப்புத்தகத்தைக் கட்டிக் கொண்டேன். புறப்படும் முன்பு ஏதாவது உதவி தேவையா என்று கேட்டதாகவும், தனக்கு எதுவும் தேவையில்லை என்றும் முடிந்தால் ஆசிரமத்தின் பெயரில் மாசா மாசம் நூறு ரூபாய் அனுப்பி வைக்குமாறும் சொன்னதாக கண்ணில் நீர் கசிய சொன்னார் அப்பா.

 

அப்பா மாசாமாசம் தொடர்ந்து பணம் அனுப்பச் சொன்னார். மணி ஆர்டரில் கூப்பனின் நுμக்கிப் பொடி எழுத்துகளில் நானும், சகோதரியும் போட்டி போட்டுக் கொண்டு தாத்தாவுக்கு தகவல் எழுதினோம். காலம் மிக வேகமாய் நகர்ந்துகொண்டிருந்தது. இன்னொரு தரம் தாத்தாவின் ஆசிரமத்துக்கு குடும்பத்தோடு போய் வர நினைத்தும் எங்களால் அது முடியாத காரியமாகவே இருந்தது.

 

என் சகோதரி திருமணத்துக்காக தாத்தாவுக்குப் பத்திரிகை அனுப்பியிருந்தோம். பத்திரிகையோடு தாத்தாவுக்கு நான் நீளமாய் ஒரு மடல் எழுதி வைத்திருந்தேன். தாத்தாவோடு நான் பேச நினைத்த பற்பல விஷயங்களில் ஒரு சிறுபகுதிதான் அந்த மடல். கல்யாணத்துக்கு தாத்தா வரக்கூடும் என்று ஆவலோடு எதிர்பார்த்தது ஏமாற்றத்தில்தான் முடிந்தது. சீர், செட்டோடு புருஷன் வீட்டுக்கு சகோதரியை வண்டியேற்றுகிற வரைக்கும்கூட தாத்தா வரவில்லை. புதுமணத் தம்பதியின் புகைப்படத்தை தாத்தாவுக்கு அனுப்பினார் அப்பா.

 

அப்பாவுக்கும் வயசாகிக்கொண்டிருந்தது. ஏறத்தாழ பாதித் தாத்தா போல இருந்தார். கசக்கிப் பிழியும் அரசாங்க உத்தியோகக் கெடுபிடிகளில் தலை நரைத்து உடல் தளர்ந்திருந்தது. திடும்திடுமென தாத்தா பற்றிய பேச்சு மூளும் போதெல்லாம் அப்பாவின் முகம் மேலும் தளர்ந்து போனது. ஓர் இரவில், மிகவும் நெகிழ்ந்த குரலில் தன்னைத் தொடர்ந்து தாத்தாவுக்கு நான் மாசாமாசம் பணம் அனுப்பவேண்டுமென்றும், அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் நிறுத்தக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். எத்தனையோ வருஷங்கள் ஓடி விட்ட பிறகும் தாத்தாவை எங்கள் மனதிலிருந்து நீக்க முடியவில்லை. ஏதாவது ஒரு பேச்சு அவர் சம்பந்தமாய் வந்துகொண்டுதான் இருந்தது. அப்போதும் தாத்தாவின் முடிவுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவே இல்லை.

 

எம்.எஸ்.சி., முடித்த கையோடு எனக்கு டில்லியில் வேலை கிடைத்தது. குடும்பத்தை விட்டு பிரிகிற இந்த வேலையே வேண்டாம் என்று சொன்னாள் அம்மா. ‘‘உன் இஷ்டம்’’ என்று சொல்லிவிட்டார் அப்பா. டில்லிக்குப் போனால் ராஜஸ்தானுக்குப் போய் தாத்தாவைப் பார்ப்பது சுலபம் என்கிற விஷயம் எனக்குள் உற்சாகத்தை பெருக்கியிருந்தது. என் முடிவு குறித்து & அம்மாவுக்கு சின்ன வருத்தம்தான். என் சகோதரி வந்து, தனது, குழந்தையின் படத்தைக் கொடுத்து தாத்தாவைச் சந்திக்கும்போது அவசியம் சேர்க்கவேண்டும் என்றாள். ஒரு நாள் இரவு எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன்.

 

டில்லியின் சூழல் விசித்திரமாய் இருந்தது. நகரின் சந்தடி மூச்சுத் திணறவைத்தது. இடம், மொழி எல்லாம் பிடிபட இரண்டு, மூன்று மாதமானது. கம்பெனியில் லீவ் எடுப்பதும் நான் நினைத்ததுபோல சுலபமாய் இல்லை. என் ஒவ்வொரு மணி உழைப்பும் அவர்களுக்குத் தேவையாய் இருந்தது. என்னையே வெட்டிப் பலி கொடுத்தாலும் சந்தோஷமாய் வாங்கிக்கொள்ளும் ராட்சகக் கம்பெனி அது. தொடர்ந்த என் தொந்தரவுகளின் காரணமாய் ஆஸ்தியையே எழுதி வைக்கிற மாதிரி ஒருவாரம் விடுப்பு தந்தது. அன்றைய இரவே ராஜஸ்தானுக்குப் புறப்பட்டேன்.

 

நிறைய முயற்சிகளுக்கும் அலைச்சல்களுக்கும் பிறகுதான் அந்த ஆசிரமத்தைக் கண்டுபிடித்தேன். அந்தக் கணத்தை, வாழ்வின் மிகப்பெரிய வெற்றியாய் நினைத்தேன். வாசலில் இருந்தவரிடம் அரை குறை இந்தியில் என் ஆவலையெல்லாம் கொட்டினேன். தாத்தாவின் அறையைக் கண்டுபிடிப்பது தான் பாக்கி என்கிற மனநிலை எனக்கு, நான் சொன்ன பெயர், உருவ அடையாளம் அவருக்குப் புரியவில்லை போலும். என்னை அழைத்துக்கொண்டு போய் பெரிய சாமியார் முன் நிறுத்தினார். மீண்டும் அவர்முன் எனது ஆர்வத்தைச் சொன்னேன். எத்தனை தெளிவாய் விஷயத்தைச் சொல்ல முடியுமோ, அதற்குத் தகுந்த இந்தி வார்த்தைகளாய் தேர்ந்தெடுத்து அடுக்கிக்கொண்டே போனேன். மாத மணியார்டர் விஷயத்தை சொன்னதும், அவருக்கு விளங்கிவிட்டது. நான் அவர் பதிலுக்குத் துடித்துக் கொண்டிருந்தேன்.

 

பெரிய சாமியார் எழுந்து நின்றார். நேராக வந்து என் தோள்களைத் தொட்டார். அவர் உதடுகள் துடித்தன. அவர் உடலில் சிறு நடுக்கத்தை உணர்ந்தேன். என்னை அழைத்துக் கொண்டு சில கதவுகளைக் கடந்து நடந்தார். இனம் புரியாத உணர்வு என் மனசில். ஓர் அறை முன் நின்று கதவைத் தள்ளி கொண்டு நுழைந்தார். 102 s பாவண்ணன் தொகுப்பு பாகம் 1

என் நெஞ்சு துடித்தது. தாத்தாவின் உருவத்தை ஞாபகத்துக்கு வரவழைத்துக்கொண்டேன்.

 

ஆளற்ற வெறும் அறை அது, நான் சுழன்று சுழன்று பார்த்தேன். கண்களைத் திகைப்புடன் கசக்கினேன்.

 

‘‘இதுதான் அவரோட அறை’’

 

‘‘தாத்தா’’

 

அவர் காலமாகி நாலஞ்சு வருஷம் இருக்கும்.’’

 

பலத்த அதிர்ச்சியில் உருவாகும் துக்கத்தை ஒரு கணத்தில் அனுபவித்தேன் நான். என் கால்கள் நடுங்கின. பெரிய சாமியார் தாத்தா பற்றியும், அவர் பணிவுபற்றியும், ஆசிரம வேலைகளில் அவர் செலுத்திய ஈடுபாடுபற்றியும் சொல்லிக்கொண்டே போனார். அவர் கேட்டுக்கொண்டதன் பேரில்தான் சாவு யாருக்கும் தெரியப்படுத்தவில்லை என்றும் சொன்னார். நிலையிழந்து பொங்கிப்பொங்கி அழுதேன் நான். ரொம்ப நேரம் தாத்தாவின் கல்லறைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கிடந்தேன்.

 

மறுநாள் ஆசிரமத்தை விட்டுப் புறப்பட்டு வண்டியில் உட்கார்ந்தபோது மனசு கனத்திருந்தது. இதை எப்படி என் வாயால் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவது என்பதை நினைக்கும் போதே சங்கடமாயிருந்தது. கூடவே தாத்தா தன் முடிவை ஏன் இப்படித் தேடிக்கொண்டார் என்கிற கேள்வியும் திசை தெரியாத பறவையாய்ச் சிறகடித்துக்கொண்டிருந்தது.

 

( பொன்மலர் – 1991 )