Home

Tuesday 29 December 2020

தியாகம் போற்று - கட்டுரை

  

சுதந்திரத்துக்கும் சமத்துவத்துக்கும் பாடுபட்ட காந்தியடிகள்  இந்தியர்கள் அனைவரும் நேர்மையோடும் தன்மானத்தோடும் வன்முறையற்ற நல்லிணக்கத்தோடும்  தம் வாழ்க்கையை வாழவேண்டும் என்பதற்காகவும் பாடுபட்டார். அபூர்வமான அந்த மகத்தான ஆளுமையால் ஈர்க்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் நாடெங்கும் தேச சேவையிலும் அவருடைய நிர்மாணப்பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார்கள். அதற்காக தம் வாழ்க்கையையே  அர்ப்பணித்தார்கள்.  

அவர்களுடைய தொண்டுகளைக் கண்டு வியந்து போற்றியவர்கள், அந்தத் தொண்டர்களை காந்தியடிகளின் மறு உருவமாகவே பார்த்தார்கள். பல இடங்களில் அவர்களையும் காந்தி என்ற அடைமொழியோடு அழைப்பது வழக்கமாக இருந்தது. என்.எம்.ஆர்.சுப்பராமன் மதுரை காந்தி என்று அழைக்கப்பட்டார். அரங்கசாமி நாயக்கர் காரைக்கால் காந்தி என்று புகழப்பட்டார். நாராயணன் தேவகோட்டை காந்தி என்று பாராட்டப்பட்டார். ஒரு காந்தியிலிருந்து இப்படி ஏராளமான காந்திகள் தோன்றி இந்தியாவை தலைநிமிர்ந்து நிற்கவைத்தார்கள்.

மெய்வருத்தம் பார்க்காமல் பசிநோக்காமல் கண்துஞ்சாமல் மற்றவர்கள் தமக்கு இழைக்கும் தீங்குகளைப் பொருட்படுத்தாமல் காலநேரம் பார்க்காமல் பிறருடைய அவமதிப்புகளைக் கண்டு மனம் சோர்ந்துபோகாமல் நீதிநெறி விளக்கப் பாட்டுக்கு இலக்கணமாக கருமமே கண்ணாக இந்த மண்ணில் அத்தொண்டர்கள் வாழ்ந்து மறைந்தார்கள். அவர்களைப்பற்றிய வரலாறுகளை எழுதவேண்டியது இன்றைய தலைமுறையினரின் கடமை. அவர்களுடைய பங்களிப்பைப்பற்றிய உரையாடல்கள் சமூகத்தில் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் இருக்கவேண்டும். ஒருவகையில் அவர்களுடைய தியாகம் விதைநெல்லுக்கு நிகரானது. அவர்களைப்பற்றிய உரையாடல்களும் நினைவலைகளும்தான் அவர்களைப்போன்றவர்களை உருவாக்க வழிவகுக்கும்.

காந்தியடிகள் உருவாக்கிய அகில இந்திய சர்க்கா சங்கத்தில் ஐதராபாத் கிளையின் பொறுப்பையேற்று கதரியக்கத்துக்காக பாடுபட்டவர் கே.வைத்தியநாதன். திருச்சிக்கு அருகில் உள்ள மனச்சநல்லூரில் பிறந்தவர். பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்திலிருந்தே  காந்தியின் மீதும் காங்கிரஸ் மீதும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. திருச்சியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஓய்வு நேரத்தில் காங்கிரஸ் அலுவலகத்துக்குச் செல்பவராக இருந்தார் அவர். ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய காந்தியடிகள் பரப்புரைக்காக திருச்சிக்கு வந்திருந்தபோது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்ட காங்கிரஸ் ஊழியர்களில் அவரும் ஒருவர். ஒன்பது நாட்கள் சிறைவாசத்தின் காரணமாக அவர் கல்லூரிப்படிப்பைத் தொடர முடியாதவரானார்.

மருத்துவமோ சட்டமோ  படிக்க நினைத்திருந்த கனவுகள் நொறுங்கிச் சரிந்தன. ஒரு நண்பரின் உதவியால் அவருக்கு ஐதராபாத் நகரத்தில் ரயில்வே துறையில் வேலை கிடைத்தது. அதனால் அவர் அந்த நகரத்தில் குடியேறினார். குடும்பத்தைக் காப்பாற்ற ரயில்வே துறையில் வேலை செய்தாலும் அவர் தன் மனநிறைவுக்காக தொடர்ச்சியாக கதர்ப்பணிகளில் ஈடுபட்டார். ஆறரை ஆண்டுகள் மட்டுமே ரயில்வே பணியில் அவர் நீடித்தார். உப்பு சத்தியாகிரகம் தொடங்கப்பட்ட போது அவர் அந்த வேலையிலிருந்து விலகி சென்னைக்குச் சென்று சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றார்.

விடுதலைக்குப் பிறகு மீண்டும் ஐதராபாத்துக்குத் திரும்பி கதர்ப் பிரச்சாரத்திலும் கதராடைகளைச் சுமந்து சென்று விற்பதிலும் ஈடுபட்டார். பிறகு காந்தியடிகளின் வழிகாட்டுதலின்படி ஐதராபாத் சர்க்கா சங்கத்தில் முழுநேர ஊழியராக இணைந்தார். அவருடைய இடைவிடாத பயணங்களாலும் பிரச்சாரங்களாலும் எண்ணற்ற கிராமங்களில் நூல்நூற்கும் மையங்களும், வாரங்கல், மகபூப்நகர், கம்மம், கரீம்நகர், ஜகதியால் போன்ற நகரங்களில் விற்பனை மையங்களும் உருவாகின.  1950 வரைக்கும் சர்க்கா சங்கத்துக்காக அவர் பாடுபட்டார். அதைத்தொடர்ந்து மேலும் சில ஆண்டுகள் காதி சமிதியிலும் காதி கிராமோதய ஆயொகிலும் பணிபுரிந்தார்.

கதர் விற்பனையை மட்டுமன்றி கிராமக் கைத்தொழில் மேம்பாட்டுக்காகவும் வைத்தியநாதன் ஆற்றிய தொண்டு குறிப்பிடத்தக்கது.  ஒவ்வொரு கிராமத்திலும் இயற்கையான முறையில் கிடைக்கும் மூலப்பொருட்களை முதலில் அவருடைய அமைப்பு கண்டறிந்தது. பிறகு அவற்றைப் பயன்படுத்தும் வகையில் ஒரு தொழிலையும் கண்டறிந்தது. அதைத்தொடர்ந்து அத்தொழிலில் கிராமத்தினருக்குப் பயிற்சியளித்து, அவர்களுடைய உற்பத்திப் பொருட்களுக்கு சந்தைவாய்ப்புகளை உருவாக்கிக்கொடுப்பதன் வழியாக கிராமப்பொருளாதரத்தை மேம்படுத்தியது. தேனீ வளர்ப்பு, சோப்பு செய்தல், காகிதம் செய்தல், கருப்பஞ்சாறிலிருந்தும் பனஞ்சாறிலிருந்தும் வெல்லம் தயாரித்தல், மண்பாண்டம் செய்தல், கயிறு திரித்தல் போன்ற பல வழிமுறைகளை கிராம வளர்ச்சிக்காக வைத்தியநாதன் உருவாக்கியளித்தார்.

103 வயது வரைக்கும் வாழ்ந்த வைத்தியநாதனின் மகள் சீதாலட்சுமி அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற முக்கியமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து எழுதியிருக்கும் இந்தப் புத்தகம் மிகமுக்கியமான ஆவணம். இதை எழுதுவதற்காக ஓர் ஆய்வு மாணவியைப்போல அவர் மேற்கொண்டிருக்கும் பயணங்களைப்பற்றிய குறிப்புகள் சுவாரசியமாக உள்ளன. தன் நினைவிலிருந்து எழுதுவதே போதும் என நினைக்காமல், ஒவ்வொரு செய்தியையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தன் தந்தை கால்பதித்த ஒவ்வொரு இடத்துக்கும் நேரிடையாகவே சென்று உயிர்த்திருப்பவர்களிடம் நேரடித் தகவல்களைப் பெற முயற்சி செய்திருக்கிறார். ஒருவரும் இல்லாதபோது வைத்தியநாதன் எழுதிய கட்டுரைகளும் அவரைப்பற்றிய பிறர் எழுதிய கட்டுரைகளும் வெளிவந்த இதழ்களை வாங்கிப் பார்த்து குறிப்பெடுத்திருக்கிறார். நூலாக்கத்துக்காக சீதாலட்சுமி மேற்கொண்டிருக்கும் முயற்சி பாராட்டுக்குரியது.

கதர் மீது வைத்தியநாதன் கொண்டிருந்த பற்று மகத்தானது. ஒவ்வொரு நாளும் அவரும் வீட்டில் வசித்த மற்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு சிட்டம் நூல் நூற்கவேண்டும் என்பது எழுதாத விதியாக இருந்ததாக. சீதாலட்சுமி நினைவுகூர்கிறார். குறிப்பிட்ட அளவு நூலை யாரேனும் நூற்றுமுடிக்கவில்லை என்றால், அதற்குப் பிராயச்சித்தமாக அவர் அன்றைய தினம் உணவைத் தொடாமலேயே உறங்கச் சென்றுவிடுவார் என்றும் அதனாலேயே குடும்பத்தினர் அனைவரும் ஒவ்வொரு நாளும் அளவு குறையாமல் நூற்கத் தொடங்கினர் என்றும் குறிப்பிடுகிறார். அப்பகுதியை வாசிக்கும்போது நல்ல நோக்கத்துக்காக நம் மீது அன்பும் பாசமும் கொண்டவர்களிடம் மனமாற்றத்தை உருவாக்க உண்ணாவிரதத்தைக் கடைபிடிக்கும் காந்தியடிகளின் கருத்து நினைவுக்கு வருகிறது.

சீதாலட்சுமியின் குடும்பம் வாழ்க்கை முழுதும் கதர்த்தொண்டராக வாழ்ந்த வைத்தியநாதனை எப்படியெல்லாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறது என்பதற்கு இந்தப் புத்தகமே சாட்சி. எந்த இடத்திலும் வைத்தியநாதன் மீது புகாரோ, குற்றச்சாட்டோ இல்லை. அவருடைய நேர்மையும் அர்ப்பணிப்புணர்வும் அன்பும் பெருமையுடன் நினைவுகூரப்படுகின்றன. மகளின் எழுத்தாக்கத்துக்கு பேரப்பிள்ளைகள் ஓவியம் தீட்டியிருக்கிறார்கள். தன் தந்தையின் தியாக வாழ்க்கையைப் பற்றி அக்குடும்பத்தினரிடம் இருக்கும் பெருமித உணர்வும் நிமிர்வும்  இந்த உலகத்துக்கு ஒரு செய்தியைச் சொல்லாமல் சொல்கின்றன. தியாகம் போற்று என்பதே அச்செய்தி.

 

(கே.வைத்தியநாதன் : காதி தொழிலாளி. ஒரு முழு வாழ்க்கையின் சிறுசிறு துளிகள். ஆர்.சீதாலட்சுமி. D-9, NEELAM PARK, NEAR PREMCHAND NAGAR, JUDGES BUNGELOW ROAD, AHMEDABAD – 380 015 )