Home

Monday 7 December 2020

ஓமந்தூரார் : எளிமையும் துறவும் - கட்டுரை

 


1919இல் இந்தியாவின் தலைமைச்செயலராக இருந்த மாண்டேகுவும் தலைமை ஆளுநராக இருந்த செம்ஸ்போர்டுவும் இணைந்து இந்திய மாகாண நிர்வாகங்களில் இந்தியர்களுக்கு சுயாட்சி வழங்கும் வகையில் தயாரித்து அனுப்பிய அறிக்கைக்கு இங்கிலாந்து அரசு உடனடியாக ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில் இந்திய அரசுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி சென்னை, வங்காளம், பம்பாய், மத்திய மாகாணங்களுக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் சட்டமன்றங்கள் நிறுவப்பட்டன. அதற்கான தேர்தலும் உடனடியாக அறிவிக்கப்பட்டது.

மாகாண அரசுகள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் மாகாண ஆளுநரின் ஒப்புதல் பெறவேண்டும் என்பது அன்றைய நெறி. அவருடைய ஒப்புதலின்றி எந்த முடிவையும் நடைமுறைப்படுத்தமுடியாது என்பது இச்சட்டத்தின் முக்கியமான சாரம். எனவே 1920இல் அரசு அறிவித்த தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்று காந்தியடிகள் தெரிவித்தார். காங்கிரஸ் மட்டுமன்றி, நாட்டில் உள்ள எல்லாக் கட்சிகளும் ஒட்டுமொத்தமாக இணைந்து தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்று குரல்கொடுத்தார். தந்தையின் எதிர்பாராத மறைவையொட்டி உயர்நிலைப்பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு குடும்பத்தையும் விவசாயத்தையும் கவனித்துக்கொள்வதற்காக சென்னையிலிருந்து தன் சொந்த ஊரான ஓமந்தூருக்கே செல்ல நேர்ந்த இளைஞரொருவருக்கு காந்தியடிகளின் குரல் பொதுவாழ்க்கையை நோக்கிய அழைப்பாகவே தோன்றியது. காந்தியடிகளின் கோரிக்கையை ஏற்று தேர்தலில் வாக்களிக்காதீர்கள் என ஊர்தோறும் சென்று பரப்புரை செய்வதை தன் தலையாய கடமையாகக் கருதி செயல்படத் தொடங்கினார் அவர். தனித்தனியாக வாக்காளர்களச் சந்தித்து தேர்தல் சாவடிக்குச் செல்லவேண்டாம் என்றும் ஆங்கில அரசுக்கு தன் எதிர்ப்பைத் தெரிவிக்க அதுவே சிறந்த வழியென்றும் எடுத்துரைத்தார். அவர் பெயர் ஓமந்தூரார் என அழைக்கப்பட்ட ராமசாமி ரெட்டியார்.

தேர்தல் முடிவடைந்த பிறகும் ஓமந்தூரார் அமைதியடையவில்லை. கிராமம்தோறும் சென்று தமுக்குப் போட்டு கதரணியவேண்டும் என்றும் அயல்நாட்டுத் துணிகளைப் புறக்கணிக்க வேண்டுமென்றும் தீண்டாமையைக் கைவிட வேண்டுமென்றும் காந்தியடிகளின் கொள்கைகளைப் பரப்புவதில் ஈடுபட்டார். அவருடைய தொடர்ச்சியான தீவிரப்பரப்புரையினால் திண்டிவனம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட தென்னார்க்காடு மாவட்டப் பகுதிகளில் காங்கிரஸ் ஆழமாக வேரூன்றியது.

ரெளலட் சட்டத்தையும் ஜாலியன்வாலாபாக் படுகொலையையும்   எதிர்த்து 05.09.1920 அன்று காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்தார். மாணவர்கள் கல்லூரிகளைப் புறக்கணித்தனர்.  வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணித்தனர். அரசுக்கு ஒத்துழைக்க மறுப்பதன் வழியாக தம் எதிர்ப்பைப் புலப்படுத்தினர். அயல்நாட்டு ஆடைகளையும் பொருட்களையும் கூட புறக்கணித்தனர். இந்த ஒத்துழையாமை நடவடிக்கை இந்திய இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தது. ஏற்கனவே எளிமையையே தன் வழியாகக் கொண்ட ஓமந்தூராரை காந்தியக் கொள்கைகள் பெரிதும் கவர்ந்தன. அந்த வேகத்தில் கதர்த்துணி மூட்டைகளை சுமந்துகொண்டு ஒவ்வொரு ஊருக்கும் சென்று விற்பனை செய்தார். கதர் சுதந்திர இந்தியாவின் அடையாளம் என முழங்கினார். விற்பனைக்குச் செல்லும் இடங்களில் மக்களைக் கூட்டி இராட்டையில் நூல் நூற்பதன் வழியாக நம் ஆடைத்தேவைகளை நாமே நிறைவேற்றிக்கொள்ளும் வழிமுறைகளை விளக்கி உரையாற்றினார். நூல்நூற்றலுக்கும் சுயராஜ்ஜியத்துக்கும் உள்ள தொடர்பை விரிவாக எடுத்துரைத்தார். கள்ளுக்கடை வாசலிலும் சாராயக்கடை வாசலிலும் நின்று மதுவின் தீமைகளை கேட்போர் நெஞ்சில் பதியும் வகையில் சொல்லத் தொடங்கினார். ஓமந்தூராரின் முகம் தென்னார்க்காடு மாவட்டத்தினர் அனைவருக்கும் அறிந்த முகமானது.

26.12.1920 முதல் 28.12.1920 வரை நாக்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கெடுப்பதற்காக தமிழகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற குழுவில் ஓமந்தூராரும் ஒருவர். சேலம் விஜயராகவாச்சாரி அந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். மொழி அடிப்படையிலான அமைப்புகள் முதல்முதலாக அந்த மாநாட்டில்தான் ஏற்படுத்தப்பட்டன. சட்டத்துக்கு உட்பட்ட  அகிம்சை வழியில் போராடுவதன் மூலம் சுதந்திரம் அடைவதே காங்கிரஸின் இலட்சியம் என்று காந்தியடிகள் அந்த மாநாட்டில் அறிவித்தார்.

நாக்பூரிலிருந்து திரும்பியதுமே தென்னார்க்காடு மாவட்ட அளவில் ஓர் அரசியல் மாநாட்டை ஓமந்தூராரும் மற்ற காங்கிரஸ் தொண்டர்களும் பொறுப்பேற்று நடத்தினர். நாக்பூர் மாநாட்டில் விவாதிக்கப்பட்ட கருத்துகளை மக்களுக்குத் தெரியப்படுத்துவதே அந்த மாநாட்டின் நோக்கமாகும். அசலாம்பிகை அம்மாள், கிருஷ்ணசாமி சர்மா, இந்து நாளிதழின் ஆசிரியராக இருந்த ரெங்கசாமி ஐயங்கார் போன்றோர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். மாவட்ட அளவில் ஒரு புத்துணர்ச்சி உருவாக அந்த மாநாடு காரணமாக இருந்தது. ஓயாத அவருடைய பரப்புரையின் விளைவாக தென்னார்க்காடு மாவட்டம் முழுதும் காந்திய அலை பரவத் தொடங்கியது.

இருபதுகளில் கர்நாடகப் பகுதியிலும் ஆந்திரப்பகுதியிலும் கைது செய்யப்படும் காங்கிரஸ் போராட்டக்காரர்களை கடலூரில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கும் வழக்கமிருந்தது. அப்போது அவர்களுக்கு வாயில் வைக்கமுடியாத மோசமான உணவே வழங்கப்பட்டது. சிறை அதிகாரிகளிடம் தெரிவித்த புகார்களை ஒருவரும் பொருட்படுத்தவில்லை. தற்செயலாக அவர்களைச் சந்திக்கச் சென்ற ஓமந்தூரார் அதைப் பார்த்து மனம் பதைத்தார். அது தொடர்பாக உடனடியாக வழக்குமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடுத்தார். அவ்வழக்கில் தீர்ப்பு கிட்டும் வரையில் சிறைக்கைதிகளுக்கு உணவு வழங்குவதற்கான அனுமதியையும் பெற்றார். அன்றுமுதல் தற்காலிகமாக ஒரு சமையல்கூடத்தை சிறைக்கு அருகிலேயே ஏற்படுத்தி அனைத்துக் கைதிகளுக்கும் தேவையான உணவைத் தயாரிக்கவைத்து  தினந்தோறும் இருவேளை தொண்டர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். மூன்று மாதகாலம் நடைபெற்ற வழக்கில் இறுதியாக ஓமந்தூராருக்கு வெற்றி கிடைத்தது. அந்த மூன்று மாத காலமும் உணவு வழங்கும் பொறுப்பை அவரே ஏற்றுக்கொண்டார்.

1927இல் தென்னார்க்காடு மாவட்டத்தில் சிறுவந்தாடு என்னும் கிராமத்தில் ஓமந்தூரார் ஓர் ஆசிரமத்தை உருவாக்கினார். சுற்றுவட்டாரத்தில் வசித்த பல இளைஞர்கள் ஆர்வத்துடன் அங்கு தங்கியிருந்தனர். காந்தியடிகளின் நிர்மாணத் திட்டங்கள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்த ஓமந்தூரார் அவர்களுக்குப் போதிய பயிற்சிகளை வழங்கினார். திண்டிவனம், கடலூர் பகுதிகளிலிருந்து பல காந்தியவாதிகள் வந்து இளைஞர்களுக்குப் பயிற்சியைக் கொடுத்தனர். ஆசிரமத்தில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் தினமும் அருகிலிருக்கும் கிராமங்களுக்குச் சென்று கதரின் மேன்மையைச் சொல்வதிலும் தீண்டாமை ஒழியவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைப்பதிலும் மதுவினால் உருவாகும் அழிவுகளை முன்வைப்பதிலும் ஈடுபட்டனர். இளைஞர்களின் இடைவிடாத பரப்புரையின் விளைவாக அப்பகுதி விரைவிலேயே விழிப்புணர்வடைந்தது. 

அதன் தொடர்ச்சியாக சிறுவந்தாட்டிலும் சொர்ணாவூரிலும் பெரிய மாநாடுகளை நடத்தினார். சென்னையிலிருந்து வந்த பல தலைவர்கள் அந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினர். அந்த மாநாடுகளை நடத்த விடாமல் உள்ளூர் காவல்துறையினர் பல இடையூறுகளை உருவாக்கினர். நிலத்தில் கொடிமரங்களை நடக்கூடாது என்று தடுத்தனர். அதை மீறி கொடிமரம் நட்டவர்களை காவலர்கள் கைது செய்தனர். முதலில் செய்வதறியாமல் திகைத்த ஓமந்தூரார் அக்கம்பக்கத்திலிருந்த பனைமரங்களிலும் புளியமரக்கிளைகளிலும் கொடிகளைக் கட்டி பறக்கவிடும்படி செய்தார். இயற்கையான மரங்களில் கட்டப்பட்ட கொடிகள் காற்றில் பறக்க, மரங்களுக்குக் கீழே நின்ற தொண்டர்கள் தாயின் மணிக்கொடி பாரீர்பாடலை உணர்ச்சிமயமான குரலில் பாட மாநாடு இனிதே நடைபெற்று முடிந்தது. அந்த மாநாட்டில் எஸ்.என்.சோமயாஜுலு, காமராஜர், ஜீவானந்தம். கோதைநாயகி அம்மாள், கண்ணப்பன் என பலரும் மக்களிடையே எழுச்சியுரை ஆற்றினர்.

1930இல் காந்தியடிகள் உப்பு சத்தியாக்கிரகத்தைத் தொடங்கினார். அதே சமயத்தில் இராஜாஜியின் தலைமையில் தமிழகத்திலும் உப்பு சத்தியாகிரகம் நடைபெற்றது. 12.04.1930 அன்று திருச்சியிலிருந்து நடைப்பயணமாகச் சென்ற சத்தியாகிரகிகள் 150 மைல்கள் நடந்துசென்று வேதாரண்யம் கடற்கரையை அடைந்து உப்பு காய்ச்சினர். 98 பேர் கலந்துகொண்ட சத்தியாகிரகிகள் அணியில் ஓமந்தூராரும் ஒருவர். அதில் அவருக்கு ஆறு மாத காலம் சிறைத்தண்டனை கிடைத்தது.

சிறையிலிருந்து விடுதலை கிடைத்ததும் ஓமந்தூராருடைய போராட்டச் செயல்பாடுகள் மறுபடியும் தொடர்ந்தன. அயல்நாட்டுத் துணிவணிகத்தை எதிர்த்தும் கதருக்கு ஆதரவான குரலை முன்வைத்தும் விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் ஊர்வலங்கள் நடத்துவதிலும் பரப்புரை செய்வதிலும் அவர் ஈடுபட்டார். பரப்புரையின்போது பொதுமக்களுக்கு வழங்குவதற்காக அவர் புதுமையான முறையில் அச்சிட்ட உறுதிமொழிப்பத்திரங்களை வழங்கினார். “நான் தெய்வசாட்சியாக இன்றுமுதல் கைராட்டினத்தில் நூற்ற கைத்தறியில் உற்பத்தியாகும் கதரை ஆதரித்து, காந்தியடிகள் வகுத்த திட்டத்தின்படி ஏழை மக்கள் அதன் அன்பிற்குப் பாத்திரமாகும் வண்ணம் கதரைத் தவிர வேறு ஆடைகளை அணிவதில்லை என்று பிரதிக்ஞை செய்கிறேன்என்னும் வாசகம்  அப்பத்திரங்களில் எழுதப்பட்டிருந்தது. பரப்புரைக்குழு கட்டாயப்படுத்தியதாக பழி வந்துவிடக் கூடாது என்னும் முன்னுணர்வோடு ஒவ்வொருவருக்கும் இரண்டு பிரதிகள் வழங்கப்பட்டன. கையெழுத்திட விரும்புகிறவர்கள் ஒரு பிரதியை தன்வசம் வைத்துக்கொண்டு மற்றொரு பிரதியை அனுப்புவதற்கு வசதியாக அந்தப் பத்திரத்திலேயே தன் பெயரையும் முகவரியையும் அச்சிட்டுக் கொடுத்தார். அந்த முயற்சிக்கு நல்ல பயன் விளைந்தது. தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த  பலரும் கதரியக்கத்தில் இணைந்தனர். அவர்கள் அனைவரும் இணைந்து பல ஊர்களுக்கு நடைப்பயணமாகச் சென்று பரப்புரையில் ஈடுபட்டனர்.

விழுப்புரத்தில் அந்தக் காலத்தில் சோமு செட்டியார் என்பவருடைய கடை அயல்நாட்டுத் துணி விற்பனையில் முன்னணியில் இருந்தது. அந்தக் கடையின் முன்பாக ஆறு மாத காலம் தொடர்ச்சியாக மறியல் நடத்தினார் ஓமந்தூரார். சிறுவந்தாடு, சொர்ணாவூர் பகுதிகளைச் சேர்ந்த எண்ணற்ற தொண்டர்கள்  ஓமந்தூராருக்குத் துணையாக அந்த மறியலில் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் தங்குவதற்காகவே விழுப்புரத்திலேயே வாடகைக்கு ஒரு வீட்டை ஏற்பாடு செய்தார் ஓமந்தூரார். ஆசிரமத்தைப்போலவே காலைப் பிரார்த்தனை, நூல் நூற்றல், உடலுழைப்பு, தங்குமிடத்து வேலைகளைப் பகிர்ந்துகொள்தல் என அவர்களுடைய தினசரி நடவடிக்கைகள் அமைந்திருந்தன. ஒவ்வொருநாள் காலையிலும் கஞ்சியுணவுக்குப் பிறகு  தேசியக்கொடியை ஏந்தி அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு வந்து கடையின் முன் மறியல் செய்தனர்.

அயல்நாட்டுத் துணிகளை மட்டுமல்ல, அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எந்தப் பொருளையும் இந்தியர்கள் பயன்படுத்தாமல் புறக்கணிக்கவேண்டும் என்பதே காந்தியடிகள் வகுத்த அந்தப் புறக்கணிப்புத் திட்டத்தின் ஆதார நோக்கமாகும். அந்தக் காலத்தில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜான்சிபார் என்னும் தீவிலிருந்து இந்தியாவுக்கு கிராம்பு பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. ஜான்சிபாரில் விளையும் கிராம்பு உலக உற்பத்தியில் 90 விழுக்காடாகும். அந்த உற்பத்தியில் சரிபாதி அளவு கிராம்பு இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. 1936இல் ஜான்சிபார் அரசு அங்கு வாழ்ந்த இந்தியர்களுக்கு எண்ணற்ற துன்பங்களை அளித்துவந்தது. அதைப்பற்றிய விவரங்களை பலமுறை அரசின் கவனத்துக்கு காங்கிரஸ்  எடுத்துச் சென்றது. ஆயினும் அரசு பாராமுகமாகவே நடந்துகொண்டது. இப்படிப்பட்ட தருணத்தில்தான் ஜான்சிபாரிலிருந்து கிராம்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல்  பம்பாய் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. உடனடியாக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக வல்லபாய் படேல் தலைமையில் ஒரு குழு பம்பாய் துறைமுகத்தில் மறியல் நடத்தி கிராம்பு மூட்டைகளை இறக்கவிடாமல் தடுத்தது. இதனால் அரசு பம்பாயிலிருந்த கப்பலை பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரிக்கு அனுப்பிவைத்து, அங்கு கிராம்பு மூட்டைகளை இறக்கிக்கொள்ள தந்திரம் செய்தது. அதைப்பற்றிய தகவல் கிடைத்ததும் ஓமந்தூரார் புதுச்சேரியைச் சேர்ந்த எஸ்.ஆர்.சுப்பிரமணியம், வி.சுப்பையா போன்ற தொண்டர்களுடன் இணைந்து புதுச்சேரி துறைமுகத்தில் மறியலில் ஈடுபட்டார். பல நாட்கள் தொடர்ந்து நீடித்த இந்த மறியலின் விளைவாக கப்பல் இந்தியாவைவிட்டே புறப்பட்டுச் சென்றது.

1936இல் நடைபெற்ற நகராட்சித்தேர்தலில் காங்கிரஸ் பங்கேற்றது. ஓமந்தூரார் அத்தேர்தலில் பங்கேற்கவில்லை என்றபோதும் கடலூர், விழுப்புரம், சிதம்பரம் நகராட்சிகளில் காங்கிரஸின் வெற்றிக்காக பரப்புரையில் ஈடுபட்டார். அதுபோலவே 1937இல் நடைபெற்ற சென்னை மாகாணத்தேர்தலிலும் காங்கிரஸின் வெற்றிக்குப் பாடுபட்டார்.

1940ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காந்தியடிகள் தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். அதற்கிணங்க 17.10.1940  அன்று பவனார் ஆசிரமத்தில் தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கிய வினோபா கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து தேசமெங்கும் எண்ணற்ற தொண்டர்கள் சத்தியாகிரகத்தைத் தொடங்கி சிறைசென்றனர். சென்னை மாகாணத்தில் ஓமந்தூரார் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு கைதானார். அவருக்கு ஓராண்டுக்காலம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 1941இல் அவர் விடுதலை பெற்றாலும் 1942இல் தொடங்கிய வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டு பதினைந்து மாத காலம் சிறைத்தண்டனை பெற்றார். கடலூர், தஞ்சாவூர், திருச்சி, வேலூர் என நான்கு சிறைகளில் மாறிமாறி தண்டனைக்காலத்தைக் கழிக்க நேர்ந்தது.

எந்தக் கருத்தையும் அஞ்சாமல் வெளிப்படையாகவே பேசும் பழக்கமுள்ளவர் ஓமந்தூரார். நேர்மைக்கும் உறுதிக்கும் எளிமைக்கும் பேர்போனவர் அவர். ஒழுக்கசீலர். ஆடம்பரத்தை விரும்பாதவர். தவறுகளைத் தாங்கிக்கொள்ள விரும்பாதவர். 04.02.1946 அன்று காந்தியடிகள் உளுந்தூர்ப்பேட்டையில் ஒரு பொதுநிகழ்ச்சியில் உரையாற்றினார். தீண்டாமை ஒழிப்பில் அனைவரும் ஈடுபடவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அன்று அவர் பேசினார். உரையின் இறுதிப்பகுதியில் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக்கும் பழனி முருகன் ஆலயத்துக்கும் சென்று திரும்பியதைப் பற்றி குறிப்பிட்டார். தொடர்ந்து தமிழகத்தில் ஆலயநுழைவு தொடர்பாக இராஜாஜி ஆற்றியிருக்கும் பணி மகத்தானது என்றும் அவருக்குக் கிடைத்திருக்கும் மக்கள் ஆதரவு மேலும் மகத்தானது என்றும் பாராட்டிப் பேசினார். மக்கள் ஆதரவு இல்லாமல் போயிருந்தால் பத்து இராஜாஜிகள் சேர்ந்திருந்தாலும் இத்தகு பணிகளைச் செய்திருக்கமுடியாது என்றும் சொல்லி முடித்தார். மேலும் வார்தாவுக்குத் திரும்பிய பிறகு 10.02.1946 அன்று ஹரிஜன் இதழில் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் இராஜாஜிக்குத்  திரண்டிருக்கும் மக்கள் ஆதரவைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகவும் அவருக்கு எதிராக  முட்டுக்கட்டையிடும் சிறுகுழுவின் செய்கைகளால் கவலைப்படுவதாகவும் அவர் ஒரு குறிப்பை எழுதியிருந்தார். இந்த உரையும் குறிப்பும் ஓமந்தூராரைத் திகைப்பில் ஆழ்த்தின. பொதுமக்கள் ஆதரவு காந்தியடிகளுக்குத்தானே தவிர, தேசிய அளவில் காந்தியடிகள் தொடங்கிய ஒரு பெரிய போராட்டத்தில் கருத்துவேறுபாடு காரணமாக கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருந்துவிட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கத்தில் இணைந்திருக்கும் இராஜாஜிக்கான ஆதரவல்ல என்று சுட்டிக் காட்டும் விதமாக ஒரு அறிக்கையை உடனடியாக எழுதி தன் கருத்தை வெளியிட்டார்.

இரண்டாம் உலகப்போர் ஒரு முடிவுக்கு வந்த பின்னர், 1946இல் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்காக அரும்பாடுபட்டார் ஓமந்தூரார். முதல்வராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்னும் போட்டியில் தெலுங்கு உறுப்பினர்களின் ஆதரவோடு பிரகாசம் 30.04.1946 அன்று முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். ஆயினும் அவருடைய ஆட்சிக்காலம் ஓராண்டுக்குமேல் நீடிக்கவில்லை.  உறுப்பினர்களின் அதிருப்தியின் காரணமாக அவர் பதவி  விலக நேர்ந்தது. உறுப்பினர்களிடையே மீண்டும் தேர்தல் நடத்தி 23.03.1047 அன்று ஓமந்தூரார் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

ஓமந்தூராரின் ஆட்சிக்காலத்தில் ஊராட்சித்துறையும் வேளாண்மைத்துறையும் கால்நடை மருத்துவத்துறையும் கிராம அளவில் ஒன்றிணைந்து இயங்கும் வகையில் முதன்முதலாக ஒருங்கிணைக்கப்பட்டன. விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்காக கிணறுவெட்ட உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்தார். ஊற்று நீர்ப்பாசனத்துக்கும் வழிசெய்தார். உற்பத்தி செய்யப்படும் நெல்லுக்கு தரவாரியாக விலை கிடைக்க ஏற்பாடு செய்தார். சாலையோரங்களில் அரசமரம், புளியமரம், இலுப்பைமரம், ஆலமரம் ஆகியவற்றை நடச்செய்து ஊராட்சிக்கு நிதிவருவாய் கிடைக்கவும் இயற்கையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு கிட்டவும் வழியமைத்துக்கொடுத்தார். கிராமங்கள் தோறும் புதிய குளங்களையும் ஏரிகளையும் வெட்டவும் பழைய குளங்களையும் ஏரிகளையும் தூர்வாரிச் செப்பனிடவும் முனைப்பு காட்டினார். வீடூர் அணைக்கட்டுத் திட்டத்துக்கும்  கீழ்பவானி அணைக்கட்டுத் திட்டத்துக்கும் தாமதமின்றி ஒப்புதல் வழங்கினார்.

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் நலன்களைப் பாதுகாக்க ஆதிதிராவிடர் நலத்துறை என தனித்துறையை உருவாகினார் ஓமந்தூரார். அரசு நிலங்களை பொது மக்களுக்கு வழங்கும் போது, தாழ்த்தப்பட்டோருக்கு முன்னுரிமை வழங்கவேண்டுமென உத்தரவிட்டார். 1937இல் மதுரையில் வைத்தியநாத ஐயர் முதன்முதலாக தாழ்த்தப்பட்டோரை மீனாட்சியம்மன் ஆலயத்துக்குள் அழைத்துச் சென்றார். அப்போது முதலமைச்சராக இருந்த இராஜாஜி அதற்கென தனி அவசரச்சட்டத்தை உடனடியாக இயற்றினார். அச்சட்டத்தை விரிவுபடுத்தி  ஓமந்தூரார் சென்னை மாகாணத்தில் உள்ள எல்லா ஆலயங்களிலும் தாழ்த்தப்பட்டோர் சென்றுவரும் வகையில் சட்டமியற்றினார். இராமேஸ்வரம் கோயிலுக்கு ஓமந்தூராரே முன்னின்று தாழ்த்தப்பட்ட சகோதரர்களை அழைத்துச் சென்று ஆலயப்பிரவேசம் செய்தார். தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்டிருந்த திண்டிவனம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்த குலசேகரதாஸ் என்பவரை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முதல் தாழ்த்தப்பட்டோர் டிரஸ்டியாக ஓமந்தூரார் நியமித்தார்.

ஏதேனும் நிபந்தனைகள் விதிப்பது ஓமந்தூராரின் இயல்பு. ஒருமுறை அவர் உடல்நிலை குன்றியிருந்த சமயத்தில் அவரைச் சோதிப்பதற்காக ஒரு மருத்துவர் வந்திருந்தார். எதிர்காலத்தில் எந்தத் தருணத்திலும் யாருக்காகவும் பரிந்துரைக்காக வரக்கூடாதென்றும் எவ்விதமான சலுகையையும் எதிர்பார்க்கக்கூடாதென்றும் ஒருபோதும் தன்னுடன் அரசியல் விவகாரங்கள் பேசக்கூடாதென்றும் விதித்த நிபந்தனைகளுக்கு உடன்பட்ட பிறகே மருத்துவத்துக்கு இசைந்தார்.

சட்டமும் விதிகளும் மக்களுக்காக ஏற்பட்டவையே தவிர மக்கள் சட்டத்துக்காகப் படைக்கப்படவில்லை என்பது ஓமந்தூராரின் அழுத்தமான எண்ணம். தேவைகளை ஒட்டியும் பிரச்சினைகளின் தீவிரத்தை ஒட்டியும் சட்ட விதிகளைக் கடந்து செல்லவும் அவர் தயங்கியதில்லை. அவர் ஆட்சியில் இருந்தபோது கோவில்பட்டி, சாத்தூர் மாவட்டங்களில் பஞ்சம் தாண்டவமாடியது. அக்கிராமங்களுக்கு அதிகாரிகளோடும் அமைச்சர்களோடும் நேரில் சென்று பார்வையிட்டார் ஓமந்தூரார். கடுமையான வறட்சி அவர் மனத்தை வாட்டியது. சட்டவிதிகள் இடம் தரவில்லை என்றபோதும் அதிகாரிகளின் கருத்தை மீறி ஒவ்வொரு ஏக்கருக்கும் பத்து ரூபாய் வீதம் ரொக்கமாக நிவாரணம் வழங்குமாறு உத்தரவிட்டார்.

அரசு ஒப்புதல் வழங்கும் திட்டம் சிறிதும் தாமதமின்றி உடனடியாக தொடங்கப்பட்டு உரிய காலத்தில் நிறைவேற்றப்படவேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். சிவப்புநாடா முறையை அறவே வெறுத்தவர் அவர். ஒருநாள் காலையில் ஓர் ஆதாரக்கல்வி அதிகாரி பத்து லட்சம் ரூபாய் செலவாகக்கூடிய ஒரு திட்டத்தை ஓமந்தூராரிடம் முன்வைத்தார். அது மிகமுக்கியமான திட்டம் என்பதால், அக்கணமே அவரையும் அழைத்துக்கொண்டு தலைமைச்செயலகத்துக்குச் சென்றார் அவர். அன்று நண்பகல் உணவு வேளைக்குள் அத்திட்டத்துக்கு உரிய அனுமதியையும் வழங்கிவிட்டார். பொறியாளர் குழுவை அன்றே கூட்டி, உரிய வரைபடங்களைத் தயாரிக்கவைத்து உடனடியாக கட்டுமான வேலையையும் தொடங்கி ஆறே மாதங்களில் வேலையை முடிக்க தூண்டுகோலாக இருந்தார்.

ஓமந்தூரார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி என்பதால், கிராம மக்களின் நல்வாழ்வை எப்படியெல்லாம் மது சீரழிக்கிறது என்பதை நேரில் பார்த்த அனுபவமுள்ளவராக இருந்தார். கள்ளுண்ணவேண்டாம் என இளமைக்காலத்தில் மறியல் நடத்தியவர். கால ஓட்டத்தில் ஆட்சியில் அமரும் வாய்ப்பு கிடைத்ததும் மது விலக்கை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவந்தார் ஓமந்தூரார். அவருக்கு முந்தைய பிரகாசம் ஆட்சியில் சென்னை மாகாணத்தில் எட்டு மாவட்டங்களில் மட்டுமே நடைமுறையில் இருந்த மதுவிலக்குத் திட்டத்தை எஞ்சிய பதினேழு மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தினார். இதனால் மாகாணம் முழுக்க கள்ளுக்கடைகள் இழுத்து மூடப்பட்டன.

ஓமந்தூராரின் ஆட்சிக்காலத்தில் ஜமீன்தாரி முறை ஒழிப்புச்சட்டம்  இயற்றப்பட்டது. இந்து சமய அறநிலையச் சட்டத்தையும் அவர் இயற்றினார். தேவதாசி முறை ஒழிப்புக்கான சட்டமும் இயற்றப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் தமிழே ஆட்சிமொழியாக இயங்குமென முதன்முதலாக ஆணையிட்டார். தமிழ்வளர்ச்சிக்கழகம் என்னும் துறை முதன்முதலாக உருவாக்கப்பட்டது. தமிழ்க்கலைக்களஞ்சியம் உருவாக்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. பாரதியாருடைய படைப்புகள் நாட்டுடைமையாக்கப் பட்டன. சென்னை மாகாணத்தின் அரசுச்சின்னமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் கோபுரத்தை ஓமந்தூரார் அறிவித்தார். சமயச்சின்னமாக இருப்பதால் அதற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு யோசித்தபோது, சமயச்சின்னம் என்னும் குறியீட்டுக்கும் அப்பால் அது தமிழ்ப்பண்பாட்டின் சின்னமாகவும் கட்டடக்கலையின் அடையாளமாகவும் விளங்குக்கிற சின்னமென விளக்கமளித்து அரசு ஏற்றுக்கொள்ளும்படி செய்தார். கோபுரத்துக்குக் கீழேசத்யமேவ ஜயதேஎன்ற சொற்களைப் பொறிக்கும்படி செய்தார்.

ஓமந்தூரார் பதவியேற்றபோது தமிழகத்தில் பஞ்சம் நிலவியது.  விவசாயிகள் புதிய கிணறுகளை வெட்ட ஊக்கமளித்தார். கிணறு வெட்டும் செலவில் இரண்டாயிரம் ரூபாய் வரையில் மானியமாக அளிக்க வழிவகை செய்தார். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளைத் திறந்தார். ஏரிகளிலும் குளங்களிலும் தூர் வாரப்பட்டன. கீழ்பவானித்திட்டம் நிறைவேறவும் பவானி சாகரில் ஓர் அணை கட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

விவசாயச் சீர்திருத்தமும் தொழில் சமநிலையும் என்ற தலைப்பில் ஓமந்தூரார் எழுதிய நூல் மிகமுக்கியமான ஓர் ஆவணம். விவசாயிகளுக்கும் ஆலைத் தொழிலாளர்களுக்கும் ஏனைய தொழில்களைச் செய்யும் தொழிலாளர்களுக்கும் கிடைக்கும் ஊதிய வேறுபாடுகளைக் களைந்து ஒரு சமநிலையை உருவாக்கும் பெருங்கனவு அவரிடம் இருந்தது. ஆனால் தன் ஆட்சிக்காலத்தில் அவரால் அதைச் சாத்தியப்படுத்த முடியவில்லை. அதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பும் தேவையாக இருந்தது. தன் திட்டத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் வகையில் அழுத்தம் கொடுத்து நம்பிக்கையைப் பெறும் அளவுக்கு அவர் ஆட்சிக்காலம் நீடிக்கவில்லை. அவருடைய யோசனைக்குறிப்புகள் அனைத்தும் புத்தகத்துக்குள்ளும் கோப்புகளுக்குள்ளும் ஒடுங்கி மறைந்துபோயின. விவசாயிகள் சார்ந்த இவருடைய அக்கறையினாலேயே அவர் விவசாய முதலமைச்சர் என மக்களால் அழைக்கப்பட்டார்.

எல்லாப் பிரிவினரும் தம் நலனை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் சமுதாயத்தில் வாழும் அனைவரும் நலமுடன் வாழவேண்டும் என்ற எண்ணத்தோடு பாடுபடவேண்டும் என்கிற காந்தியடிகளின் ஆலோசனைக்கு நடைமுறை வடிவம் கொடுப்பதுபோல தம் திட்டத்தை வகுத்திருந்தார் ஓமந்தூரார். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கூட்டுறவுச் சங்கம் உருவாக்கப்பட்டு கிராமத்தினர் அனைவரும் அதில் சேர்க்கப்படவேண்டும். எருவகைகள், விதைகள், உரங்கள், விவசாயக்கருவிகள் என கிராமங்களுக்குத் தேவைப்படும் அனைத்தையும் அனைத்தையும் இச்சங்கங்கள் வழங்கவேண்டும். வண்டல் மண்ணை எடுப்பது, வாய்க்கால் தோண்டுவது என பல வேலைகளில் இச்சங்கங்கள் முனைப்பு காட்டவேண்டும். ஒவ்வொரு சங்கத்துடன் ஒரு தானியக்கிடங்கு ஒரு வங்கியைப்போல இயங்கவேண்டும். கிடங்கில் டெபாசிட் செய்யப்படும் தானியத்துக்கு கூடுதலான விலை கிடைக்கவேண்டும். பருவமழை தவறும் காலங்களில் மக்களுக்கு வழங்க இந்தக் கையிருப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். விவசாயிகளுக்கு ஆண்டு முழுதும் வேலை கிடைக்க உதவியாக விவசாயத் துணைத்தொழில்கள் தொடங்கப்படவேண்டும். பஞ்சம், வெள்ளம் ஏற்படும் காலங்களில் விவசாயிக்கு உரிய இழப்பீடு கிடைக்க விவசாயக் காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்படவேண்டும். வணிகம், தொழில், அரசுப்பணிகள் ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்குக் கிடைக்கும் வருமானத்துக்குச் சமமான வகையில் விவசாயிகளுக்கும் வருமானம் கிடைக்கும்படி செய்யவேண்டும். விவசாய வளர்ச்சிக்குத் தேவையான மின்சார வசதியும் பாசன வசதியும் செய்து தரவேண்டும். பழைய கிணறுகளை ஆழப்படுத்தவும் புதிய கிணறுகளைத் தோண்டவும் வழிசெய்யவேண்டும். விவசாயியை உழைப்பவனாக மட்டுமே சுருக்கிவிடாமல் கல்வியறிவுள்ளவனாகவும் ஆய்வு மனப்பான்மை உள்ளவனாகவும் உருவாக்கவேண்டும்.

அன்றாட நிர்வாகத்தில் எக்காரணத்தை முன்னிட்டும் சட்டசபை உறுப்பினர்களின் தலையீடு இருக்கக்கூடாது என்று உறுப்பினர்களுக்கு அவர் கட்டுப்பாடு விதித்திருந்தார். உறுப்பினர்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் நியாயமான வழிகளில் மட்டுமே செயலாற்றவேண்டும் என நிர்வாக அதிகாரிகளுக்கும் அவர் கட்டுப்பாடு விதித்திருந்தார். நீதிக்கும் சட்டத்துக்கும் நேர்மைக்கும் புறம்பாக எந்த ஆணையும் பிறப்பிக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பிவைத்தார். சட்டசபை உறுப்பினர்கள் இந்த நிபந்தனைகளை வெறுத்தனர். கட்சி வளர்ச்சிக்கு இத்தகு கட்டுப்பாடுகள் தடையாக இருக்குமென கட்சியின் மேலிடத்துக்கு தகவல் அனுப்பிக்கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் ஓமந்தூரார் முதல்வராக நீடிப்பதை அவர்கள் விரும்பவில்லை என்பதை அவர் புரிந்துகொண்டார். 06.04.1949 அன்று உடனடியாக தாமாகவே பதவியிலிருந்து விலகி, அன்று மாலையே அரசு வழங்கியிருந்த வீட்டை காலிசெய்துவிட்டு சொந்த கிராமத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அரசியல் வாழ்வின் தொடக்கத்திலேயே அவர் தன் மனைவியையும்  மகனையும் இழந்துவிட்டார். கிராமத்தில் அவருடைய சகோதரர்களுடைய குடும்பங்கள் இருந்தபோதும், அவருக்குச் சொந்தமான சொத்துகள் இருந்தபோதும், எல்லாவற்றையும் துறந்து தமக்கு விருப்பமான வடலூரில் ஓர் ஆசிரமத்தை அமைத்துக்கொண்டு குடியேறிவிட்டார். அதற்குப் பிறகு ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கும் மேல் தன் இறுதிக்காலம் வரையில் அங்கேயே தங்கி மக்களுக்குத் தொண்டாற்றிவந்தார். வடலூரில் அவர் உருவாக்கிய வள்ளலார் குருகுல உயர்நிலைப்பள்ளி, அப்பர் அனாதை ஏழை மாணவர் இல்லம், இராமலிங்கர் தொண்டர் இல்லம், அப்பர் சான்றோர் இல்லம், ஆயுர்வேத வைத்திய சாலை, தியான மண்டபம், திலகவதியார் உணவுவிடுதி ஆகிய நிறுவனங்கள் அவர் பெயரைப் பறைசாற்றியபடி இன்றளவும் இயங்கி வருகின்றன. 25.08.1970 அன்று இயற்கையெய்திய அவருடைய வாழ்க்கை வரலாற்றை விவசாய முதலமைச்சர் என்னும் தலைப்பில் சோமலெ எழுதினார். கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம் அதை நூலாக வெளியிட்டது.

பக்தி யுகத்தில் தேவாரத்தையும் திருவாசகத்தையும் எழுதிய அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரையும் நான்கு சமயக்குரவர்கள் என்று பட்டப்பெயருடன் அழைப்பது ஒரு மரபு. காந்தியடிகளின் காலம் ஒரு புதுமையான காலகட்டம். ஆன்மிக மனமும் அரசியல் மனமும் இணைந்த ஒரு புதிய தலைமுறை அப்போது உருவாகி வந்தது. பற்றற்ற அந்த மனநிலையும் எளியவர்களுக்குத் தொண்டாற்றும் முனைப்பும் அவர்களுக்கு இயல்பாகவே இருந்தன. காந்தி யுகத்தில் தமிழ்மண்ணில் காந்திய நிர்மாணப்பணித் தொண்டில் ஈடுபட்டு ஆக்கப்பணிகளை ஆற்றிய  ஆளுமைகள் பலர் வாழ்ந்தனர். அவர்களில் முதன்மையானவர்களாக ..ரா.சுப்பராமன், தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார், சர்தார் வேதரத்தினம் பிள்ளை, .பி.ராமசாமி ரெட்டியார் ஆகியோரைச் சொல்லலாம். அவர்கள் நால்வரும் தமிழ்மக்களால் நான்கு அண்ணாச்சிகள் என்று பாசத்துடன் அழைக்கப்பட்டனர்.  

எளிமையே உலகவாழ்க்கையின் சாரம். எளிமையே மகிழ்ச்சி. நாம் தனித்திருக்கும் எளிமையால் மகிழ்ச்சி உருவாவதில்லை. அடுத்தவர்கள் நிறைவோடும் மகிழ்ச்சியோடும் வாழ்வதற்கு உற்ற துணையாக நாம் விளங்கும்போதுதான் மகிழ்ச்சி உருவாகிறது. அவர்கள் நம்மை நெருங்கி வருவதற்கு எளிமை வழிவகுத்துக் கொடுக்கிறது. காடுகளிலும் குகைகளிலும் தனித்திருப்பதை நாம் துறவு என்றும் எளிமை என்றும் ஒருபோதும் அழைக்கமுடியாது. நம் ஆடம்பரங்களைத் துறந்து,  மக்களிடையே ஒருவனாகவும் காட்சிக்கு எளியனாகவும்  வாழ்வதையே துறவு என்றும் எளிமை என்றும் சொல்லலாம். தமிழ்மண்ணில் அத்தகு எளிமையோடும் துறவுமனப்பான்மையோடும் வாழ்ந்தவர் ஓமந்தூரார் என்றும் .பி.ஆர். என்றும் அன்போடு அழைக்கப்பட்ட ராமசாமி ரெட்டியார்.

 

(சர்வோதயம் பேசுகிறது – டிசம்பர் 2020 இதழில் வெளியான கட்டுரை)