Home

Monday 7 December 2020

ஆனந்த நிலையம் - புதிய சிறுகதைத்தொகுதி முன்னுரை

  

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் வண்ணதாசன் எழுதியிருந்த ஒரு கவிதைத்தொகுதியைப் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு கவிதையில் நின்றுகொண்டிருப்பதைவிட சென்றுகொண்டிருப்பது மேல் என்னும் வரியைப் படித்ததும், அது எனக்காகவே எழுதப்பட்ட ஒரு வரியைப்போலவே தோன்றியது.

ஒன்றைச் செய்யமுடியவில்லையே என தேங்கியும் திகைத்தும் நிற்பதைவிட, செய்யமுடிந்த வேறொன்றைத் தொடங்கி செய்துகொண்டே இருப்பது நல்லது என அக்கவிதை வரியை எனக்குரியதாக மாற்றிக்கொண்டேன். தொடரும் செயல்கள் வழியாக நமக்குள் திரளும் ஆற்றலால் என்றோ நிறுத்திய செயலையும் செய்துமுடிக்கும் வேகமும் கைகூடும் என்னும் நம்பிக்கையையும் அந்த வரி விதைப்பதாக நினைத்துக்கொண்டேன். அன்றுமுதல் என் வாழ்வில் அவ்வரியை நினைத்துக்கொள்ளாத நாளே இல்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு நாவலை எழுதத் தொடங்கி, ஏதோ ஒரு காரணத்தால் அதை முடிக்காமல் திகைத்து நின்ற வேளையில் சற்றே நிலைகுலைந்து போனேன். ஏன் அப்படி நேர்ந்தது என்று புரியவில்லை. அந்தப் புள்ளியிலேயே திசை தெரியாமல் வெகுகாலம் நின்றுகொண்டிருப்பதில் பொருளில்லை என சிறுகதைகளின் திசையில் செல்லத் தொடங்கினேன். என்றேனும் ஒருநாள் பழைய புள்ளிக்கு வந்து சேர்ந்துவிடலாம் என என்னை நானே தேற்றிக்கொண்டேன்.


2017வரை சீராகவே போய்க்கொண்டிருந்த எழுத்துப்பயணத்தில் மீண்டும் திகைத்து நிற்கவேண்டிய நிலை உருவானது. நல்ல வேளையாக, அந்த நேரத்தில் வாசித்த சத்தியசோதனை புத்தகத்தை ஓர் ஊன்றுகோலாகப் பிடித்துக்கொண்டேன். காந்தியத்தையும், காந்திய ஆளுமைகளைப்பற்றியும் அறிந்துகொள்வதும் எழுதுவதுமான இன்னொரு திசையில் செல்லத் தொடங்கினேன். என் செயலூக்கம் சிறிதும் குன்றாத வகையில் காந்தியமே துணையாக நின்றது.

நோயச்சத்தின் காரணமாக 2020 மார்ச் மாதம் 25 ஆம் நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டிய நிலை. வழக்கம்போல ஏரிக்கரையை ஒட்டி நடைப்பயிற்சி மேற்கொள்ளவோ, நூலகத்துக்குச் செல்லவோ, நண்பர்களைச் சந்திக்கவோ முடியவில்லை என்பதைத் தவிர, எனக்கு அது ஒரு பெரிய துன்பமாகவே தெரியவில்லை. இடைவெளியின்றி படிக்கலாம் என அதை நான் நேர்மறையாகவே எடுத்துக்கொண்டேன். ஒவ்வொரு நாளும் ஒன்று அல்லது இரண்டு புத்தகங்கள் என படித்துக்கொண்டே இருந்தேன். ஒரு மாறுதலுக்காக காலையில் ஆங்கிலப்புத்தகம் என்றும் மாலையில் தமிழ்ப்புத்தகம் என்றும் மாறிமாறிப் படித்தேன்.

02.04.2020 அன்று அதிகாலையில் எழுந்து வீட்டு வளாகத்துக்குள்ளேயே நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது என் மனத்தில் ஓர் அலை எழுந்து பொங்குவதை உணர்ந்தேன். ஒரே நேரத்தில் குழந்தைகள் கூடிநின்று கதவைத் தட்டுவதுபோல என்றுமில்லாத வகையில் ஏராளமான கதைக்கருக்கள் மனத்தில் முட்டிமுட்டி மோதின. சட்டென ஒரு திரை கிழிந்து, என்னால் அதுவரை பார்க்கமுடியாமல் இருந்த பல காட்சிகள் தெரியத் தொடங்கின. நான் நடக்கவேண்டிய பாதை என் முன்னால் விரிந்திருந்தது.

அவசரமாக வீட்டுக்குத் திரும்பி குளித்துமுடித்து எழுதத் தொடங்கினேன். ஏற்கனவே மனப்பாடம் செய்துவைத்திருந்த பதிலை  விடைத்தாளில் எழுதும் மாணவனைப்போல தடையின்றி கணிப்பொறியில் எழுதியபடியே இருந்தேன். காட்சிகள் ஒன்றையடுத்து ஒன்றாக வந்துகொண்டே இருந்தன. ஆறுமணி நேரம் போனதே தெரியவில்லை. தொடங்கிய வேகத்தில் எழுதி முடித்தேன். வண்டல் என்று தலைப்பிட்டு மீண்டுமொரு முறை படித்து கதையை ஒழுங்கு செய்த பிறகே எழுந்தேன். அக்கணம் என் மனம் கொண்ட நம்பிக்கையும் பரவசமும் சொல்லில் விரிக்கமுடியாதவை.

ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு என் சிறுகதையை கணிப்பொறித்திரையில் பார்ப்பது எனக்கு இனிய அனுபவமாக இருந்தது. காகா காலேல்கர் எழுதிய காந்தி காட்சிகள் என்னும் நூலில் இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சியை அப்போது நினைத்துக்கொண்டேன். காந்தியடிகள் ஒருமுறை சென்னைக்கு வந்திருந்தபோது நடேசன் என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவருடைய இளையமகன் காந்தியடிகளுக்கு ஒரு பென்சிலை தன் அன்பின் அடையாளமாக அளிக்கிறான். ஏற்கனவே எழுதி எழுதித் தேய்ந்துபோன சின்னஞ்சிறு பென்சில் அது. சிறுவன் அளித்த அன்பளிப்பை காந்தியடிகள் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறார். சபர்மதி ஆசிரமத்துக்குத் திரும்பிய பிறகும் அதை ஒவ்வொருவரிடமும் காட்டிக்காட்டி மகிழ்கிறார் அவர். ஒருநாள் அந்தப் பென்சில் காணாமல் போய்விடுகிறது. காந்தியடிகள் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துவிடுகிறார். வேறொரு சமயத்தில் அந்தப் பென்சில் அவருக்குக் கிடைத்துவிடுகிறது. அதை ஆனந்தத்துடன் தொட்டுத்தொட்டுப் பார்த்து மகிழ்கிறார் காந்தியடிகள். தொலைந்த ஒரு பொருள் மீண்டும் கைக்குக் கிடைக்கும்போது எப்படி இருக்கும் என்பதை நானும் வண்டல் சிறுகதையை எழுதிமுடித்த கணத்தில் உணர்ந்தேன்.

நின்றுகொண்டிருப்பதைவிட சென்றுகொண்டிருப்பது மேல் என்ற வரியை அப்போதும் நினைத்துக்கொண்டேன். சென்றுகொண்டே இருந்தவன் ஒரு புதிய பாதையைப் பார்க்கும் பரவசம் எத்தகையதாக இருக்கும் என்பதையும்  உணர்ந்தேன். அக்கணம் உண்மையிலேயே என் அகத்தைத் தூண்டிக்கொண்டே இருக்கும் வண்ணதாசன் வரிகளுக்குச் சமர்ப்பிக்கப்படவேண்டிய கணம் என்று தோன்றியது. அப்போதே அவருக்கு அச்சிறுகதையை மின்னஞ்சல் வழியாக அனுப்பிவைத்தேன். சில மணி நேரங்களிலேயே வாழ்த்துச் செய்தியுடன் அவரிடமிருந்து ஒரு மடல் வந்தது. அன்று தொடங்கிய பயணத்தில் எழுதிய கதைகள் அனைத்தையும் அவர் வாசித்துவந்தார். ஒவ்வொரு கதையையும் ஒட்டி அவர் எழுதிய மடல்கள் எனக்கு ஊக்கமளிப்பவையாக இருந்தன. அவரை இக்கணத்தில் நான் மிகவும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். பத்து சிறுகதைகள்  கொண்ட இத்தொகுதியை மதிப்புக்குரிய  வண்ணதாசன்  அவர்களுக்கு வணக்கத்துடன் சமர்ப்பணம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இத்தொகுதியின் சிறுகதைகளை முன்வைத்து நண்பரும் கவிஞருமான ரவி சுப்பிரமணியன் நல்லதொரு முன்னுரையை எழுதியளித்தார். இச்சிறுகதைகளைப் படித்து முடித்ததும் அவற்றின் பின்னணியாக அமைந்திருக்கும் வெவ்வேறு காலகட்டத்தை ஒட்டிய தன் பழைய நினைவுகளை மீட்டி மீட்டி  அவர் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் எண்ணற்ற கதைகளுக்கான ஒரு பெருங்களஞ்சியம் என்றே சொல்லவேண்டும். அவருக்கு என் நன்றி.

வண்டல் சிறுகதை மட்டுமே அந்திமழை என்னும் அச்சிதழில் வெளிவந்தது. மற்றவை பதாகை, சொல்வனம், புக் டே என்னும் இணைய இதழ்களில் வெளிவந்தன. இவ்விதழ்களின் ஆசிரியர்களுக்கு என் அன்பும் நன்றியும். என் மனைவி அமுதாவின் ஒத்துழைப்பும் அன்பும் என் எல்லா எழுத்து முயற்சிகளிலும் துணையாக விளங்குபவை. அவரையும் இகணத்தில் நினைத்துக்கொள்கிறேன்.  இந்தக் கட்டுரைத்தொகுதியை மிகச்சிறந்த முறையில் வெளியிட்டிருக்கும் என் அன்புக்குரிய நண்பரும் பதிப்பாசிரியருமான சந்தியா நடராஜனுக்கும் என் மனமார்ந்த நன்றி