Home

Sunday 13 December 2020

கனவு மலர்ந்தது - புதிய சிறுகதைத்தொகுதி

  

கவிதை என்ற தலைப்போடு தமிழில் வெளிவந்த நூற்றுக்கணக்கான கவிதைகளைப் படித்திருக்கிறேன். பெரும்பாலான வரிகள் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தியதில்லை. ஆனால் ஒரே ஒரு கவிதை மட்டும்  கல்மேல் பொறிக்கப்பட்ட எழுத்தாக படித்ததுமே நெஞ்சில் ஆழமாக வேரூன்றி இன்றுவரை நிலைத்திருக்கிறது. அது தேவதேவன் எழுதிய கவிதை.  கவிதை என்னும் தலைப்பில் பட்டுப்போய் நிற்கும் ஒரு மரத்தில் எங்கிருந்தோ வந்து அமர்ந்திருக்கும் ஒரு குருவியைப்பற்றிய சித்திரத்தை அவர் முன்வைத்திருந்தார். படித்ததுமே என் மனமும் கண்களும் நிறைந்துவிட்டன. எவ்விதமான நோக்கமோ காரணமோ இல்லாமல் மரக்கிளையில் வந்து அமரும் குருவியைப்போல கவிதைக்குரிய கணம் நிகழ்கிறது. அது தவத்தின் தருணமா அல்லது கருணையின் தருணமா என்பது ஒருபோதும் பிரித்தறிய முடியாத ரகசியம்.

நான் தேவதேவன் முன்வைத்த கவிதைக்குரிய கணத்தை  கதைக்குரிய கணமாகவும் விரிவாக்கிக்கொள்ள விழைகிறேன். மேலும் அதை கருணையின் தருணமாகவும் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். இரண்டாண்டு காலமாக முகம் காட்டாத மனிதர்கள் அனைவரும் மனத்திரையில் ஒவ்வொருவராக நெருக்கியடித்துக்கொண்டு முகம் காட்ட முட்டியதை வேறு விதமாகப் புரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. அவர்கள் கருணைக்கு நன்றி கூறி, அவர்கள் தம் மனம் போல நடக்கவும் பறக்கவும் அமரவும் வசதியாக அமைதி காத்து நின்றேன். அபூர்வமான அத்தருணங்களின் உந்துதலால் எழுதியவையே இத்தொகுதியில் உள்ள சிறுகதைகள். நோயச்ச காலத்தைக் கடந்துவர இவையே எனக்கு உற்ற துணையாக விளங்கின.


இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவர் ஜீவா ஏற்பாடு செய்திருந்த பசுமை இயக்கச் சந்திப்பில் முதன்முதலாக நான் கோபாலகிருஷ்ணனைச் சந்தித்தேன். அது எங்களுக்குள் நட்பு மலர்ந்த நாள். அப்போது அவர் சூத்ரதாரி என்னும் புனைபெயரில் கவிதைகளையும் சிறுகதைகளையும் எழுதிவந்தார். பிறகு சொந்தப் பெயரிலேயே எழுதத் தொடங்கினார்அவர் எழுதிய அம்மன் நெசவு, மணற்கடிகை, மனைமாட்சி அனைத்தும் தமிழ்நாவல் உலகத்துக்குப் பெருமை சேர்க்கும் படைப்புகள்அவருடைய ஒவ்வொரு படைப்பையும் தொடர்ந்து படித்து வருபவன் நான். அவரை இக்கணத்தில் நான் மிகவும் அன்போடும் நெகிழ்ச்சியோடும் நினைத்துக்கொள்கிறேன். பத்து சிறுகதைகள்  கொண்ட இத்தொகுதியை நண்பர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு அன்புடன் சமர்ப்பணம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இத்தொகுதியில் உள்ள சிறுகதைகள் அனைத்தும் பதாகை, சொல்வனம், புக் டே ஆகிய இணைய இதழ்களில் வெளிவந்தன. இவ்விதழ்களின் ஆசிரியர்களுக்கு என் அன்பும் நன்றியும். என் மனைவி அமுதாவின் அன்பும் துணையும் என் அனைத்துப் படைப்பு முயற்சிகளுக்கும் ஆதாரமானவை. அவரையும் இக்கணத்தில் நினைத்துக்கொள்கிறேன்.  இந்தத் தொகுதியை மிகச்சிறந்த முறையில் வெளியிட்டிருக்கும் என் அன்புக்குரிய நண்பரும் பதிப்பாசிரியருமான சந்தியா நடராஜனுக்கும் என் மனமார்ந்த நன்றி