Home

Monday 21 December 2020

மாபெரும் தரிசனம் - ‘பேரருவி’ நாவலுக்கான முன்னுரை


கலாப்ரியா நம் காலத்து முதல்வரிசைக் கவிஞர்களில் ஒருவர். கவிஞருக்கே உரிய கவனிக்கும் கண்களைக் கொண்டவர். வேடந்தாங்கல் சரணாலயத்தில் நிறைந்திருக்கும் பறவைகள்போல அவருடைய கவியுலகில் துண்டுதுண்டான எண்ணற்ற காட்சிகள் நிறைந்திருக்கின்றன. ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு தருணத்தில் ஒவ்வொருவிதமான எண்ணங்களை எழுப்பும் ஆற்றல் கொண்டது.

ஒரு மரக்கிளையிலோ மதிலோரத்திலோ வேலிப்படலிலோ அமர்ந்திருக்கும் ஒரு பறவையைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு உடனடியாக அவருடைய ஒரு கவிதை நினைவுக்கு வருவதுண்டு.

சுற்றாத

காற்றாலைச் சிறகில்

உட்கார்ந்திருக்கிறது

ஒரு பறவை

அந்தந்த தருணத்துக்கு ஏற்றவகையில் அந்தப் பறவையை நான் உருமாற்றிக்கொள்வேன். ஒரு பெண்ணாக, மூதாட்டியாக, சிறுவனாக, தியாகியாக, குற்றம் சுமத்தப்பட்ட கைதியாக மாற்றிக்கொண்டே இருப்பேன். ஒவ்வொரு மாற்றத்தையும் ஒட்டி ஒரு சித்திரம் தோன்றும். படிக்கிற நமக்கே இத்தனை சித்திரங்கள் தோன்றும்போது எழுதுகிற அவர் மனச்சுவரில் எத்தனை எத்தனை சித்திரங்கள் உருவாகியிருக்கும் என்று நினைத்துக்கொள்வேன்.

கவிதை ஊடகத்திலிருந்து உரைநடை ஊடகத்துக்கு இடம்பெயர்ந்த கலாப்ரியா, அதுவரை எழுதாத எண்ணற்ற நினைவுச்சித்திரங்களைத் தீட்டத் தொடங்கினார். நினைவின் தாழ்வாரங்கள், உருள்பெருந்தேர் என தொகைநூல்களாக அவை வெளிவந்தன. வானில் விழுந்த கோடுகள் என சிறுகதைத்தொகுதியாக வெளிவந்தது. வேனல் என நாவலாகவும் வெளிவந்தது. அவற்றின் தொடர்ச்சியாக பேரருவி என்னும் இந்த நாவலை எழுதியிருக்கிறார் கலாப்ரியா. விறுவிறுப்பான நடையில் ஆர்வமூட்டும் வாசிப்புத்தன்மையுடன் வாழ்க்கையை மதிப்பிடும் கோணத்தில் அமைந்திருக்கும் இந்த நாவலை நான் பெரிதும் விரும்பி வாசித்தேன். எதார்த்தவாத அழகியலைக் கொண்ட இந்த நாவலை முதன்முதலில் வாசித்தவன் என்கிற வகையில் நாவலின் சில அழகுகளைப்பற்றி மட்டுமே முன்வைக்க விரும்புகிறேன்.

அருவிகளின் ஊரான குற்றாலத்தின் பின்னணியில் ஓய்வாக அமர்ந்து திரைக்கதையை உருவாக்கும் எண்ணத்துடன் வந்திறங்கும் நண்பர்களின் வருகையோடு நாவல் தொடங்குகிறது. திரைக்கதையாக்கம் என்பது ஒரு காரணம் மட்டுமே. நாவலின் அடுத்தடுத்த காட்சிகளுக்கு இந்தக் காரணம் தேவைப்படுகிறது. உண்மையில் இது அறிந்துகொள்வதில் இருக்கும் ஆர்வத்தைப்பற்றியும் அறிந்துகொண்ட பிறகு உருவாகும் விடுதலையைப்பற்றியுமான நாவல். அதுவும் அடுத்தவரைப்பற்றி அறிந்துகொள்ள மேற்கொள்ளும் முயற்சிகள் வழியாக தற்செயலாக தன்னைத்தானே அறிந்துகொள்ள நேரும் அரியதொரு தருணத்தை முன்வைக்கும் நாவல்.

காதலியின் மரணத்தை கண்முன்னால் பார்த்த திகைப்பிலிருந்து மீளாது அதே நினைவில் மூழ்கியிருக்கும் முத்துக்குமார் என்னும் கவிஞன் திரைத்துறையில் தன்னை ஓர் ஆளுமையாக நிலைநிறுத்திக்கொள்வதற்காக  மேற்கொள்ளும் முயற்சி என்பது நாவலின் ஒரு முக்கியமான கட்டம். கவிஞன் என்பதாலேயே தான் கவனிக்கும் ஒவ்வொரு புள்ளியையும் தன் கற்பனையால் விரிவாக்கிக்கொள்வதன் வழியாக புரிதலை நோக்கிய பயணம் அவனுக்கு எளிதாகிறது. விரிவாக்கும் பயிற்சி இருப்பதாலேயே அவன் திரைக்கதை எழுதும் ஆவலும் ஆற்றலும் நிறைந்தவனாக இருக்கிறான். ஆனால் காதலில் ஏற்பட்ட தோல்வி அவனுக்குள் தாழ்வுணர்ச்சியை நிறைத்துவிட்டது. அவற்றை உதற அவனால் இயலவில்லை. அந்தப் பெரும்பாறையைச் சுமந்தபடியே அவன் ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்கிறான். அதனால் எந்தக் கட்டத்திலும் தன் முழு ஆளுமையை வெளிப்படுத்த இயலாதவனாக இருக்கிறான்.

திரைக்கதை எழுத வந்த நண்பர்களை தம் வீட்டிலேயே தங்கவைத்து உபசரித்து மகிழ்கிறான் நாகராஜன். அருவிக்குளியல், உணவு, உரையாடல், மான்கறி, மது, தடபுடலான விருந்து என ஒவ்வொரு பொழுதும் இனிமையாக கழிகிறது. எதிர்பாராத விதமாக பெளர்ணமி அன்று செண்பகாதேவி அருவிக்குச் செல்லும் நாகராஜனின் அப்பா எல்லோருடைய பார்வையிலிருந்தும் மறைந்து காணாமல் போய்விடுகிறார். அதுதான் நாவலின் திருப்பம். முதலில் அவர் அருவியில் தவறி விழுந்து மறைந்திருக்கலாமோ என்று துயருறுகிறார்கள். நண்பர்களைத் தேடிச் சென்றிருக்கலாமோ என்று குழம்புகிறார்கள். வாடகைக்காரில் அவர் ஒரு பெண்மணியுடன் சென்றதைப் பார்த்ததாக பிறர் சொன்னதைக் கேட்கும்போது அவர்கள் குழப்பம் மென்மேலும் அதிகரிக்கிறது. அப்போதுதான் அவரைப்பற்றி அவர்கள் ஒவ்வொருவரும் முழுமையாக அறிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள்.

நண்பன் நாகராஜனின் மனைவியான ஆனந்தியின் அடர்த்தியான கூந்தலைக் கண்டு தன் காதலியை நினைத்துத் தடுமாறும் முத்துக்குமார், அவளுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்த்துப் பார்த்து நாவல் நெடுக தடுமாறிக்கொண்டே இருக்கிறான். ஒருபுறம் நாகரிகம் அவனை அடக்கிவைத்தாலும் மறுபுறம் தன் குறிப்பேட்டில் அவளைப்பற்றி சிலாகித்து ஏராளமான கவிதை வரிகளை எழுதிவைக்கும் அளவுக்கு சுதந்திரமனம் கொண்டவனாகவும் இருக்கிறான். கட்டுப்பாட்டுக்கும் சுதந்திரத்துக்கும் இடையில் ஊடாடிக்கொண்டே இருக்கிறான் அவன்.

கவிதைகளில் ஆர்வமும் கவிதையெழுதும் திறமையும் உள்ள ஆனந்திக்கு கவிஞன் என்கிற வகையில் இயல்பாகவே முத்துக்குமார் மீது முதல் சந்திப்பிலேயே விருந்துக்கூடத்தில் ஓர் ஈர்ப்பு உருவாகிவிடுகிறது. தற்செயலாக மறதியால் அவன் விட்டுவிட்டுச் சென்ற நாட்குறிப்பைப் படித்துவிடும் ஆனந்தி கட்டுப்பாடுகளின் எல்லையை உடைத்துச் செல்லும் ஒரு வேகத்துக்கு ஆட்பட்டவளாக இருக்கிறாள். சொற்களால் அவனைச் சீண்டுவதிலும் யாரும் கவனிக்காத சமயத்தில் முதுகில் இடிப்பதிலும் அது வெளிப்படவும் செய்கிறது. அவளும் கட்டுப்பாட்டுக்கும் சுதந்திரத்துக்கும் இடையில் ஊடாடியபடி இருக்கிறாள்.

இயல்பாகவே சுதந்திரத்தை நாடிச் செல்லும் வேகம் கொண்டவளாக வருபவள் சைலந்திரி. அவர்கள் உருவாக்கவிருக்கும் திரைப்படத்தில் நடிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவள். காலம் கனிந்த ஒரு தருணத்தில் முத்துக்குமாருக்கு ஒருநாள் அவள் தன்னையே வழங்குகிறாள். அந்த முதற்காமத்தின் இனிமை அவனை விடுதலை கொண்டவனாக மாற்றுகிறது. 

அடுத்தடுத்த நாட்களில் பெரியவருடைய ரகசியங்களைப்பற்றிய முழுத்தகவல்களும் அவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது. அதுவரை அவர்களை அழுத்திக்கொண்டிருந்த ஒரு பெரிய பாரத்திலிருந்து விடுதலை பெறுகிறார்கள். மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து அவர்கள் பாணதீர்த்த அருவிக்குப் பயணம் செல்கிறார்கள். படகில் பயணம் செய்து அருவிக்கு அருகில் சென்று குளித்து மகிழ்கிறார்கள். அந்தக் குளியல் அவர்கள் அடைந்த விடுதலையின் சித்திரத்தை அளிக்கத் தொடங்குகிறது. விடுதலையின் வழியாக காமத்தைத் தொட்டுக் காட்டும் இந்நாவல் முக்கியமான படைப்பாக ஆகிறது. 

இப்படிப்பட்ட கதைக்கருவை எழுதுவதில் உள்ள சிரமங்கள் ஏராளம். கலாப்ரியா ஒரு தேர்ந்த கதைசொல்லிக்கே உரிய ஆற்றலுடன் கதையை நேர்த்தியாக முன்வைத்திருக்கிறார். எண்ணற்ற திரைப்படப் பாடல்வரிகளும் கவிதை வரிகளும் அவருக்குப் பெரிதும் உதவியாக உள்ளன.

குற்றால அருவியில் தொடங்கி பாணதீர்த்த அருவியில் முடிகிறது இந்த நாவல். பொங்கி வழியும் அருவியை கண்ணாரப் பார்த்துக் கொண்டிருப்பது என்பது பேரனுபவம். அழகே உருவம் கொண்டு வந்து பொழிவதுபோன்றது அதன் தோற்றம். அதன் சாரல் இயற்கையின் ஆசி. அந்தத் தீண்டல் பேரின்பம். எங்கெங்கோ அலைந்து சென்று வளைவுகளில் திரும்பி செடிகளையும் மரங்களையும் பாறைகளையும் பள்ளங்களையும் பார்த்தபடியே நடந்து சென்று சட்டென்று ஒரு அருவியின் முன்னால் நிற்பது ஒரு மாபெரும் தரிசனம். அந்த மாபெரும் தரிசனத்தை தன் நாவலில் காமமென்னும் படிமமாக மாற்ற முயற்சி செய்கிறார் கலாப்ரியா. யமுனாவில் தன்னைக் கரைத்துக்கொண்டு இசையை நோக்கிச் செல்லும் பாபுவைப்போல சைலந்திரியில் தன்னைக் கரைத்துக்கொண்டு திரைக்கதை ஆக்கங்களை நோக்கிச் செல்கிறான் முத்துக்குமார்.

காமம் ஒரு பெரும்புதிர். பாபுவுக்கு வாய்த்ததுபோல, முத்துக்குமாருக்கு வாய்த்ததுபோல எல்லோருக்கும் அது விடுதலையைக் கொடுத்துவிடுவதில்லை. அதன் கருணைக்குத் தகுதியானவரை நோக்கியே அது பொங்கிப் பாய்ந்துவருகிறது.

குற்றாலக்குறவஞ்சியில் காகமணுகா மலையை மேகநிரை சாயும் என்றொரு வரி உண்டு. இதைப் படிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் நான் ஒரு புதிரை உணர்வதுண்டு. காகம் பறந்து நெருங்க முடியாத மலையை மேகம் நெருங்கிச் சென்று தீண்டுகிறது என்ற காட்சியிலேயே புதிர் நிறைந்திருக்கிறது. காகத்துக்குச் சிரமமான ஒன்று மேகத்துக்கு மட்டும் எளிமையானது எப்படி? இக்காட்சியை இன்னும் நான் சற்று விரித்தெடுத்து எவ்வளவோ மேகங்கள் சென்று மலையில் மோதினாலும் ஏதோ ஒரு மேகம் மட்டுமே மோதி மழையாக மாறி மலையைத் தழுவிக்கொண்டு அருவியென இறங்கிவருகிறது என்று நினைப்பதுண்டு. எப்படி அது சாத்தியமானது? இந்த இயற்கை எப்படி புதிரானதோ, காமமும் அதே அளவுக்குப் புதிரானது.

ஹரினாட்சிப் பாட்டி, காசி, ஆதீனம், இளங்கோ, சிவக்குமார், கல்யாணி, பொன்னுத்தாயி என்கிற செவப்பாயி, காக்கையன் என எண்ணற்ற பாத்திரங்கள் நாவலெங்கும் வந்துகொண்டே இருக்கிறார்கள். ஒரே ஒரு தருணத்தில் வந்து செல்பவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் வாசிப்பவர்களின் நினைவில் நிற்பவர்களாகவும் தனித்தன்மை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு உயிர்த்தன்மையோடு படைத்திருக்கிறார் கலாப்ரியா.

யாரோ ஜன்னலுக்கு வெளியே துளசியோ ஓமவல்லி இலையோ கிள்ளிப் பறிக்கும்போது உள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கு வாசனை வருவதுபோலஎன்று நாவலில் ஓரிடத்தில் எழுதிச் செல்கிறார் கலாப்ரியா. இந்த நாவல் பிரதியை வாசிக்கும்போது நான் நுகர்ந்த வாசனையைத்தான் இந்த முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். இது முன்னுரை என்பதால் இதற்குமேல் சொல்வதும் அழகல்ல. நான் நுகராத பல வாசனைகளை வாசகர்கள் தம் வாசிப்பின் வழியாக நுகரக்கூடும்.

(சந்தியா பதிப்பகத்தின் வழியாக சமீபத்தில் வெளிவந்த ‘பேரருவி’ நாவலுக்காக எழுதிய முன்னுரை)