Home

Monday 7 December 2020

ஆனந்த நிலையம் - ரவிசுப்பிரமணியனின் முன்னுரை

 

நாம் இப்போ என்ன செய்யலாம்?

ரவிசுப்பிரமணியன்


ரெண்டு மாமாங்கமாய் நண்பர் பாவண்ணனை நான் நேரிலும் அறிவேன். அவர் அதே இலக்கிய இளமை மாறாது இன்றும் இருக்கிறார் என்பதற்கு இந்த சிறுகதைத் தொகுப்பும் கட்டியம் கூறி வந்து நிற்கிறது.

 

பாவண்ணன் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பது பலருக்கும் தெரியும். அவர் ஒரு தேர்ந்த கதைசொல்லி என்பது அவரோடு நெருங்கி பழகிய வெகு சிலருக்கே தெரியும். தன் கதைகளையே பல எழுத்தாளர்களுக்கு விவரணையாக சொல்லத் தெரியாது. ஆனால் பாவண்ணன் பல எழுத்தாளர்களின் கதைகளை அவ்வளவு ஞாபகமாகவும் எழுதியவரே யோசித்திராத பல உப பிரதிகளோடும் சுவாரஸ்யமாகவும் காட்சிப் பூர்வமாகவும் சொல்லி நம் கண்முன் நிறுத்திவிடுவார்.

 

தம்மைப் பற்றியும் தம் படைப்புகளைப் பற்றியும் மட்டுமே பெரும்பாலும் சளசளக்கும் பல படைப்பாளிகள் மத்தியில் நான் சந்தித்த பல தருணங்களிலும் அவர் தன் முன்னோடிகளின் கதைகளையும் சக கலைஞர்களின் ஆக்கங்களையும் இளம் எழுத்தாளர்களின் படைப்புகளையும் தானென்ற தன்மையின்றி சிறு மாச்சர்யமுமின்றி அவ்வளவு கரைந்து கரைந்து எனக்குச் சொல்லியிருக்கிறார்.

 

பெங்களூர் பார்க்குகளில் சந்தித்த தருணங்களிலும் சாகித்ய அகாடமி கூட்டத்திற்காக தங்கியிருந்த அறைகளில் பார்த்து உரையாடிய சமயங்களிலும் அ.முத்துலிங்கம், வண்ணதாசன், அசோகமித்திரன், திலீப்குமார் போன்ற பல எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் கன்னடச் சிறுகதைகளையும் அவர் சொன்னபோது அவருடைய நெருங்கிய சகாக்களோடு நானும் ஒரு வாசகனாய் வியந்து கேட்டிருக்கிறேன். எப்எப்போதோ அவர் சொன்ன அந்தக் கதைகளில் சில கதைகள் இதை எழுதும் இவ்வேளையிலும் என் ஞாபகத்தில் நிழலாடுகின்றன. அவர் சொன்ன அரவிந்த மாளகத்தியின் கெவர்மென்ட் பிராமணன் கதை போல்.

 

ஒரு தேர்ந்த வாசகனால், சாரத்தை உணர்ந்து உள்வாங்கிக்கொள்கிற சஹிர்தயனால்தான் சிறந்த படைப்பாளி ஆகமுடியும் என்பதற்கான சாட்சிகளில் பாவண்ணனும் ஒருவர். தஞ்சை பிரகாஷ் எனக்கு தெரிந்து கதைகள் சொல்லவே தஞ்சாவூரில் சில பெயர்களில் கூட்டங்கள் நடத்தி சொல்லிக்கொண்டு வந்தார். இப்போது நண்பர் பவா. செல்லத்துரை அருமையாக கதை சொல்லி வருகிறார். அவர்களுக்கு இணையாக கதைகளைச் சொல்லுவதிலும் திறமைகொண்டவர் நண்பர் பாவண்ணன்.

 

அவரது கதைமாந்தர்கள் பெரும்பாலும் அவரைப்போலவே எளிமையானவர்கள்தான். சாலையில் நடை பயிற்சி போகிறவர்கள், சாலையோர தேநீர்கடையில் தேநீர் அருந்துபவர்கள், கடன் வாங்குபவர்கள், பேருந்தில் பயணிப்பவர்கள். கல்மிஷமற்றவர்கள். அனைவரும் நாம் பார்த்த, பார்க்கிற சக மனிதர்களே. சில சமயம் நாம் பார்த்தேயிராத அபூர்வர்களும்.

 

பெங்களுர் சென்ற பின் தன் சொந்த ஊர் தன் நிலத்து மனிதர்கள் என்பதை எல்லாம் கடந்து மொழி நில இடைவெளிகளை எல்லாம் கடந்து கணியன் பூங்குன்றன் கவிதையின் அர்த்தச்செறிவாய் பயணிக்க ஆரம்பித்துவிட்டது பாவண்ணனின் படைப்புலகம். அவருக்கு பாண்டிச்சேரியில் வாழும் மனிதனும் கர்நாடகத்தின் குக்கிராமத்தில் வாழும் மனிதனும் ஒருவர்தான். தன் புலம் கடந்தும் தன் படைப்புகளை அதன் கம்பீரத்தால் நிலைநிறுத்தும் சாத்தியம் சில எழுத்தாளர்களுக்கே வாய்க்கிறது. அது பெங்களூரில் வாழும் பாவண்ணனுக்கும் வாய்த்திருக்கிறது.

 

நான் பார்த்த, படித்த, கேட்ட பாவண்ணன் எனக்கு சொன்னதெல்லாம் புகாரில்லை. பொச்சரிப்பு இல்லை. பொறாமை இல்லை. அவதூறில்லை. காசிப் இல்லை. எல்லா இடங்களிலும் அவர் புன்னகையோடும் பூங்கொத்தோடும் பணிந்து நின்றபடி வரவேற்கக் காத்திருக்கிற மனிதராகவே இருந்தார். இருக்கிறார். அவருடனான இவ்வளவு ஆண்டுகாலப் பழக்கத்தில் அவர் கருத்துக்களோடு நான் என்றும் முரண்பட நேர்ந்ததில்லை. அவரின் மேன்மைமிகு குணங்களுக்கும் படைப்புகளுக்கும் இடையில் நான் எந்த வேறுபாட்டையும்கண்டதில்லை.

 

கருணையும் வாத்சல்யமுமே அவர் படைப்பின் ஆதார ஸ்ருதி. அந்தத் தம்பூரின் பின்னணியில்தான் கானமிசைக்கின்றன அவரின் கதைகள். அந்த அனாதி சங்கீதத்தை அந்த சுநாதத்தை உள்வாங்குபவனின் மனம் களங்கமற்றதாக இரக்கம் ததும்புவதாக மாறிவிடுகிறது. பஞ்சாகி மிதக்கிறது. சில வேளைகளையில் நம்மையே உள்நோக்கிப் பார்க்கச் சொல்கிறது. குற்ற உணர்ச்சியில் கசிந்து மல்க வைக்கிறது. படிகாரத்தை உள்விட்டு எடுத்த தண்ணீர்ப்பாத்திரத்தில் அழுக்கு வண்டல் கீழேகி தூய தண்ணீர் மட்டும் மேல் நிற்பதாய் நம்மை மாற்றிவிடுகிறது. இவை அனைத்தும் உரத்த சப்தமோ, ஆடம்பரமோ, அலங்காரங்களோ, உத்தி குயுத்திகளோ ஏதுமில்லாமல் இயல்பாய் நிகழ்கிறது. இது ஒரு எளிய ரசவாதம்.

 

உண்மையான அர்த்தத்தில் வாழும் துறவி ஒருவர் ஆசீர்வாதங்களோடு தரும் பச்சைக் கற்பூரம் கலந்த துளசி தீர்த்தமாய் தேடி வருபவர்களுக்கு பிரசாதத்தை வழங்கிக் கொண்டேயிருக்கிறார் பாவண்ணன். நான் அதை உணர்ந்து கரத்தின் மேல் கரம்படிய ஏந்தி வாங்கினேன். என் மகன் வாங்கிக்கொண்டான். என் பேரனும் வருவான். தலைமுறைகள் துலங்க இன்னும் நீங்கள் வழங்கிக்கொண்டேயிருங்கள் பாவண்ணன்.

 

இந்தத் தொகுப்பின் கதைகளைப்பற்றி உணர்ந்ததையெல்லாம் சொல்லப் புகுந்தால் இது நீண்ட நெடுங்கட்டுரையாய்ப் போய்விடும். அதனால், சில செய்திகளை மட்டும் சொல்லி முடிக்கிறேன்.

 

ஏற்கனவே சொன்னது போல இந்தத் தொகுப்பின் கதைகளிலும் வரும் பாத்திரங்களையும் கவனித்தால் ஏன் இவர் அவர்களை முன்வைக்கிறார், யார் பக்கம் நிற்க விரும்புகிறார், யாரை மேலேற்ற விழைகிறது அவர் கலை என்பது நமக்கு புரிந்துவிடுகிறது. பிரபுக்களையும் பெருந்தனக்காரர்களைப் பற்றி இவை பேசவில்லை. வீட்டு ப்ரோக்கர், அவனது உதவியாளன், கிட்டிப்புள் விளையாடும் சிறுவர்கள், அவித்த கடலை விற்கும் ஆயாக்கள், ஆப்பக்கடை நடத்தும் பெண், வைத்தியன், டெலிபோன் துறையின் அடிமட்டத் தொழிலாளிகள், சுற்றுலாத்தலத்தில் புகைப்படம் எடுப்பவன், வேலைக்காரிகள், துணிக்கடையில் வேலை செய்பவர்கள், கிளாரிநெட் மற்றும் டிரம்ஸ் வாசிப்பவர்கள், சினிமாப்பாடல்களை நமக்காகப் பாடிக் காட்டும் மனிதர்கள் என்று நீள்கின்றன அவருடைய கதைப்பாத்திரங்கள்.

 

இந்த எளிய மனிதர்களின் வழியேதான் வாழ்வை அதன் புதிர்களை, வியப்பை, மதிப்பீட்டை, குரூரத்தை, அல்பத்தை, அபத்தத்தை என பலவித கூறுகளையும் சம்வாதம் செய்கிறார் பாவண்ணன். சொல்ல வேண்டியதையெல்லாம் பாத்திரங்களிடம் சொல்லி பேசவிட்டுவிட்டு பல சமயம் தள்ளி நின்றுகொள்கிறார். கரிசனம் கொண்ட கலைஞனுக்கு கதையும் ஒரு வாகனம்தானே.

 

கதை நிகழும் காலத்தை சொல்ல அவர் ஆண்டுகளைக் குறிக்கவில்லை. போகிற போக்கில் சில தகவல்களை அவர் சொல்கையில் காலம் நமக்கு புரிந்துவிடுகிறது. எம்.ஜி.ஆர். துப்பாக்கிச் சூடு. எம்.ஆர்.ராதா விசாரணை. இந்திரா காந்தி மீட்டிங், ரஜினிகாந்த் ஸ்ரீதேவி நடித்த- ப்ரியா திரைப்படம், சுதேசமித்திரன், பாரதி என்றெல்லாம் சிற்சில குறிப்புகள் மூலம் அந்தக் கால கட்டத்தை நமக்குச் சுட்டிவிடுகிறார். குறிப்புகள் மட்டுமல்ல மறைவாய் சில குறியீடுகளும் சில கதைகளில் துலங்குகின்றன. ஒரு எழுத்தாளனை பற்றிய கதையின் தலைப்பு வத்திக்குச்சி கோபுரம். இப்படி பூக்காத மரம், உத்தமன் கோயில் போன்றவையும் குறியீட்டுத் தலைப்புகளே.

 

பாவண்ணன் கவிஞனும் அல்லவா. அதற்கு ருசு வேண்டாமா. அவற்றிற்கு எடுத்துக்காட்டாக கதைகளில் வரும் சில வரிகள் இவை.

 

சைக்கிளை தென்னந்தோப்புக்குப் பக்கத்தில் இருந்த ஒரு கட்டுமரத்தில் சாய்த்து நிறுத்தி பூட்டிவிட்டுத் திரும்பியபோது இன்னும் மறையாத நிலவின் வெளிச்சத்தில் கடற்கரை மணற்பரப்பு சர்க்கரைபோல பளபளப்பாக மின்னிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் அலைகள் பொங்கியெழுந்து வந்து கரையைத் தொட்டுத் திரும்பும்போதெல்லாம் ஒரு நீளமான பூச்சரத்தை இழுத்துவந்து ஒதுக்குவதுபோலத் தோன்றியது”.

 

இவை எல்லாம் வெறும் அழகுக்கு சேர்த்த உள்ளீடற்ற வர்ணனைகள் அல்ல. கதையின் அங்கம். வார்த்தைகளால் சொல்ல இயலாத கூறுகளை சங்கப்புலவனாய் காட்சிகளில் ஏற்றி நம்மை அய்யோவென கூவ வைக்கிறார் பாவண்ணன். சங்கராபரணி என்ற காதல் கதையில் வரும் மூன்று வர்ணனைகளை மட்டும் சொல்கிறேன். அவற்றைக் கதையோடு சேர்த்துப் படித்துக்கொள்ளுங்கள்.

 

அரைவட்ட வடிவில் ஏராளமான நாரைக்கூட்டம் மேற்குநோக்கி பறந்து சென்றது. ஒரு காட்டுவாகை மரத்தின் எல்லாக் கிளைகளிலும் கொக்குகள் அமர்ந்திருந்தன. ஒற்றையடிப்பாதையில் கலப்பைகளைச் சுமந்தபடி உழவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் காளைகள் நடந்துவந்தன. அவற்றின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணிகளின் ஓசை அலையலையாய் எழுந்து வந்தது. வானத்தின் ஒளி குறைந்து வந்தது. வெம்மை தணிந்து காற்றில் ஒருவித குளிர்ச்சி பரவத் தொடங்கியது”.

 

சைக்கிளை மீண்டும் மிதிக்கத் தொடங்கினான். வானத்தின் நிறம் ஒவ்வொரு கணமும் மாறியபடியே இருந்தது. வெண்மை படர்ந்திருந்த இடம் சில கணங்களிலேயே நீலமானது. பிறகு மஞ்சள் படிந்தது. மஞ்சள் பொன்னாக சில கணங்கள் சுடர்விட்டு மாறி செந்தாமரையின் நிறத்தைக் கொண்டது. வானத்தின் நிறம் மாறும் மாயம் மயக்கத்தைக் கொடுத்தது. சத்தம் என்பதே எங்குமில்லாததால் நிறைந்திருக்கும் அமைதி, அந்த மயக்கத்தை மென்மேலும் அதிகமாக்கியது. எங்கோ தோப்பில் ஒரு குயில் கூவிய குரல் கேட்டது. அக்குரலும் தன் நெஞ்சில் ஒலிப்பதுபோல அபிராமி அபிராமி என ஒலிக்கிறதோ என்று தோன்றியது”.

 

ஒரு பக்கம் வாழைத்தோப்புகள். மறுபக்கம் தென்னந்தோப்புகள். பச்சைப்பசேலென எல்லாம் தியானத்தில் மூழ்கி காற்றில் திளைத்திருந்தன. சாலையின் விளிம்பில் தும்பைச்செடிகளும் நெருஞ்சிச்செடிகளும் அடர்ந்திருந்தன. மஞ்சளும் வெண்மையும் கலந்து நெய்த துணிப்பரப்பென அச்செடிகள் விரிந்திருந்தன. அவற்றின் விளிம்பிலாடிய கோழிகள் கூவிக்கொண்டே மதிலையொட்டி ஓடின. பூவுருண்டைகள்போல சின்னச்சின்ன குஞ்சுகள் கோழிகளின் பின்னால் ஓடின. காகங்கள் மதில்மேலிருந்து கரைந்தன.

 

உத்தமன் கோயில் கதை ஊமைப்படக்காலத்தில் நடக்கிறது. படம் ஆரம்பிக்கும் முன் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்யும் சாண்டோ ஒருவருக்கு பாரதி பாண்டிச்சேரி கடலில் கோவணத்தோடு நீச்சல் அடித்துவிட்டு கவிதை பாடி காண்பிக்கிறார். பாரதியின் வரலாற்றில் எங்கு உள்ளது இது? எங்கும் இருக்காது. பாரதியின் மீதான அதீத அன்பில் அவன் கவிதைகள் தந்த சுதந்திரத்தோடு கலைஞன் விளையாடும் விளையாட்டு இது.

 

இந்தத் தொகுப்பில் இல்லாத அவருடைய ரோஜாப்பூக்கள் என்ற கதையில் இப்படி ஒரு விஷயம் வருகிறது. ஒருநாள் மதிய வேளையில் எல்லோரும் வட்டமாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது வாசலில் வயதான ஒரு ஆயாவும் தாத்தாவும் வந்து ரொம்ப பசிக்குதுங்க, சாப்படறதுக்கு ஏதாச்சிம் குடுங்க சாமிஎன்று கேட்டார்கள். அப்போது சுப்பையா கொஞ்சம் கூட யோசிக்காமல் எழுந்து சென்று தன் தட்டில் இருந்த சாப்பாட்டை அவர்களுக்குக் கொடுத்துவிட்டுத் திரும்பினான். ஆயாவும் தாத்தாவும் அடுத்த வீட்டைப் பார்த்துச் சென்றபிறகு அனைவரும் அவனை கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். அந்தக் கிண்டல் பேச்சுகளின் முடிவில் மாரிமுத்து அவனுக்கு எம்ஜிஆர் என்று பட்டப்பெயர் சூட்டிவிட்டார். பிறகு அதுவே நிலைத்துவிட்டது. ஏன் எம்.ஜி.ஆர் பெயரை அவனுக்குச் சூட்ட வேண்டும்? தினம் தினம் உணவை தானம் செய்கிற ராமசாமி என்ற கூட வைத்திருக்கலாம். ஏன் எம்.ஜி.ஆர் என சொல்ல வேண்டும்? அவர் ரசிகரா? கட்சிக்காரரா? ஏன் பசிக்கிறவனுக்கு நாம் எல்லோருமே உதவ வேண்டும்? எல்லோருக்கும் தெரிந்த ஒரு மாதிரி மூலம் அவர் சூசகமாக மெல்லிய அங்கத்தோடு சொல்லிச்செல்கிறார். இப்படி கதையெங்கும் பல ஆச்சரியங்களை பொதிந்து வைத்திருக்கிறார் இத்தொகுப்பின் ஆகச்சிறந்த கதையாக நான் முறிமருந்து சிறுகதையைக் குறிப்பிடுவேன். இதில் வரும் தாத்தா ஒருவர் பாம்பு கடித்து வைத்தியமின்றி இறந்து போகிறார். மகள் நடத்தும் ஆப்பக்கடையில் உதவியாய் இருக்கிறாள் அந்தப் பாட்டி. வைத்தியர் ஒருவர் சிறியாநங்கை இலை கிடைக்காமல் திண்டாடுவதை அறிந்து பெரும்பாடு பட்டு அதை பல நாட்களாகத் தேடி கண்டுபிடித்து வைத்தியருக்காக எடுத்துவந்து கொடுக்கிறாள். தாத்தா பாம்பு கடித்து செத்ததுபோல் யாரும் சாகக்கூடாது என்று விரும்பி அவர் ஞாபகமாய் இலை தேடி பறித்து தந்தபடி இருக்கிறாள். ஊதியம் தரும்போதும் மறுக்கிறாள். மருமகன் திட்டும் போதும் மூலிகை இலைகளைத் தேடி எடுத்துவந்து தருவது தொடர்கிறது. பாட்டி ஒரு பாடலை தாத்தா பாடியதாக சதா பாடிக்கொண்டிருக்கிறாள். என்ன பாவம் செய்தேனோஎன்ற அந்தப் பாடல் என்னை உலுக்கிவிட்டது. எத்தனை தடவை கேட்ட பாடல் அது. தர்பாரி கானடா ராக ராக சாயலில் முழையூர் சதாசிவம் உருக்கும் குரலில் பாடிய இந்த ராமலிங்கசுவாமிகளின் பாடலை எத்தனை முறை கேட்டு நான் கண் கசிந்திருப்பேன். ஒரு நாள் பாட்டி இறந்துவிடுகிறாள். வைத்தியர் நாடியெல்லாம் பார்க்கிறார். ஆயாவின் கையில் பச்சை படிந்திருக்கிறது. போதும்னு போயிட்டாங்கஎன்கிறார் வைத்தியர். இவ்வளவுதான் நான் முகப்பில் சொல்ல முடியும். அனுபவித்து நீங்கள்தான் வாசிக்க வேண்டும்.

 

எந்தப் பாத்திரத்தில் இந்தச் சிறுகதை மையம் கொள்ளப் போகிறது அல்லது எந்த பிரச்சினையில் என்று சற்று போக்கு காட்டி உள் கூட்டிச் செல்கிறார் சில கதைகளில். சில கதைகள் சொல்ல ஆரம்பிக்கும்போது ஒரு கதையாகவும் போகப்போக மேலும் சில கதைகளைச் சேர்த்துக்கொண்டு மடிப்பு மடிப்பு அடுக்குகளாகவும் அவிழ்கின்றன.

 

வாழ்ந்து பார்த்த, பார்க்காத, கேட்ட, கேட்காத கதைகள்தான் எல்லாம். சிலர் எழுதிவிட முடிகிற கதைகள் தான். கிட்டத்தட்ட அதே அருஞ்சொற்கள்தான். ஆனால் இவர் எழுதும்போது வேறென்னனமோ சேர்ந்து வேற்றுரு காட்டி நிற்கிறதே அது எப்படி?

 

எப்போதும் கேட்கிற இசைதான் அதென்ன இஞ்சிகுடி சுப்ரமண்யமோ, பிஸ்மில்லா கானோ, ரவிஷங்கரோ, லால்குடியோ வாசிக்கும்போது திடீரென்று அது வரை கேட்டிராத ஒரு பிரயோகம் வந்து நனவா பிரமையாவென திகைக்கவைத்து சட்டென நம்மை கவ்விவிடுகிறது. அது வாத்தியத்திலில்லை. ராகத்தில் இல்லை. வித்துவத்திலும் இல்லை. வாசிக்கிறவன் எப்போதோ அடைந்த உணர்ச்சியும் கற்பனையும் தோ ஒரு கணத்தில் சேர்ந்து முயங்குகிறபோது தோன்றுகிற ஒரு உணர்வு மின்னல் அது. ஏதோவொரு விதமாய் அந்த ஒலிக்கீற்று தீண்டுகையில் விதிர்க்கிறதே அது பாவண்ணனுக்கும் சில கதைகளில் வசப்பட்டுவிடுகிறது.

 

மூன்று கேள்விகளைத்தான் எனக்குக் கேட்கத்தோன்றுகிறது. சில கதைகளை ஏன் நமக்கு சற்று நீளமாக எழுதிக்காட்டுகிறார் பாவண்ணன். அதில் ஏதும் நோக்கம் உள்ளதா.

 

மனசுக்குள் பாண்டிச்சேரியின் மகரந்தங்களை இவ்வளவு சுமந்துகொண்டு திரியும் இந்த இலக்கியப் பட்டாம்பூச்சி ஏன் அந்த அரசாங்கத்தின் கண்களில் இன்னும் படவேயில்லை?

 

கலை ஒரு விட்டேத்தியான நாடோடி மனதிலிருந்துதான் வரும். அந்த நாடோடிக்குள் ஒரு கலைஞனும் இருந்துவிட்டால் சகல அதிகாரங்களையும் பணிந்து வணங்கச் செய்துவிடுகிறது கலை. அந்தக் கலை நம் பாவண்ணனிடமும் இருப்பதால் நாம் இப்போ என்ன செய்யலாம்?