Home

Wednesday, 3 February 2016

சிறந்த மனிதர்கள் - கட்டுரை

     தொலைக்காட்சியில் மாலைச் செய்திகள் வாசிக்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. மாநில அரசியல் நிகழ்ச்சிகள்மத்திய அரசின் சில புதிய திட்டங்கள்அங்கங்கே நிகழும் மக்கள் போராட்டங்கள், வெடிகுண்டு வன்முறைகள், கலவரங்கள், அடக்குமுறைகள், கைதுகள், விசாரணைகள், உயிர்ப்பலிகள் என ஒன்றை அடுத்து ஒன்றென காட்சிகள் நகர்ந்துகொண்டே இருந்தன. அவற்றின் தொடர்ச்சியாக கர்நாடகத்தின் சிறந்த மனிதராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை மேடை நடுவே அமரவைத்து முதல்வரும் மற்ற அமைச்சர்களும் மாலை மரியாதைகள் செய்து விருதையளிக்கும் காட்சி ஒளிபரப்பானது. செய்தியின் மையம் மனத்தை ஈர்க்கவே கூடுதலான கவனத்துடன் பார்த்தேன்.
     ஏறத்தாழ நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க அவர் பெயர் சென்னபசப்பா சிவப்பா காம்ப்ளி. ராணெபென்னூர் என்னும் பகுதியில் உள்ள குன்றுகள் சூழ்ந்த ஒரு சிற்றூரைச் சேர்ந்தவர். வறட்சியால் பாதிக்கப்பட்ட தன்னுடைய கிராமத்தை ஓரளவாவது வளம் நிறைந்ததாக மாற்றவேண்டும் என்கிற கனவுகளோடு திரிந்தவர். பள்ளிப்படிப்போடு கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய குடும்பச்சூழல் காரணமாக விவசாயியாக மாறியவர். கிராமமே விவசாயத்தை நிறுத்திவிடலாம் என்று மனம்நொந்து ஒதுங்கியிருந்த நேரம் அது. கிணற்றில் நீர் தேங்கியிருக்கும்போதுமட்டுமே அங்கே விவசாயம் செய்யமுடியும். மற்ற நாட்களில் அருகிலிருக்கும் பெரிய நகரங்களுக்குச் சென்று சின்னச்சின்ன கூலிவேலைகள் பார்த்துச் சம்பாதித்துக்கொண்டு வரவேண்டும்.
     பலநு¡று அடிகள் ஆழத்துக்கு தோண்டப்பட்டிருந்தாலும் தண்ணீரற்றுப் போன கிணறுகளை நம்பி எதையும் விதைக்கமுடியாத நெருக்கடியான சூழலால் ஒவ்வொருவராக கிராமத்தைவிட்டு நகரைநோக்கி வெளியேறியபடி இருந்தார்கள். அவர்களுடைய பயணத்தைத் தடுக்கவியலாத கையறுநிலையில் சோர்ந்து நின்றார் காம்ப்ளி. அவருடைய பெற்றோர்கள்கூட வெளியேறிவிடும் முடிவில் இருந்தார்கள். வெகுநேரம் வாதாடியபிறகுதான் அவர்களுடைய முடிவைமட்டுமாவது அவரால் மாற்றமுடிந்தது. தூங்காத அன்றைய இரவில் அவருடைய மனத்தில் ஒரு திட்டத்தின் விதை விழுந்தது.
     அக்கிராமத்தில் இருபத்திரண்டு கிணறுகள் இருந்தன. நீர்மட்டம் வெகு ஆழத்துக்குச் சென்றுவிட்டதால் எல்லாமே கோடையில் வறண்டிருந்தன. கிராமத்தைச் சுற்றி ஏராளமான குன்றுகள் நின்றுகொண்டிருந்தன. குன்றுகளின் இடையிடையே உள்ள மடிப்புகள் வாய்க்கால்களைப்போல நீண்டிருந்தன. மழை நாட்களில் குன்றுகளில் பொழியும் மழைநீர் அந்த வாய்க்கால்கள் வழியாக உடனடியாக வேகவேகமாகக் கீழே இறங்கி ஓடி மறைந்துவிடுகிறது. இந்தக் குன்றுகளின் மடிப்புகளையும் கிணறுகளையும் தனித்தனி கால்வாய்கள் மூலம் இணைத்தால் மழைநீர் முழுதையும் கிணற்றுகள் சேமித்துவிடமுடியும் என்றும் அதன்மூலம் இறங்கிவிட்ட நீர்மட்டத்தை மேலே உயர்த்திவிடமுடியும் என்றும் அவர் கனவுகண்டார்.
     ஒரு வார காலம் தன்னந்தனியாக அலைந்து கிராமத்திலிருந்த இருபத்திரண்டு கிணறுகளுக்கும் வெவ்வேறு குன்று மடிப்புகளிலிருந்து கால்வாய்கள் வெட்டுவதற்குப் பொருத்தமான தடங்களைக் கண்டறிந்து குறித்துக்கொண்டார். ஒவ்வொன்றும் ஒரு கிலோமீட்டர் முதல் இரண்டு கிலோமீட்டர் வரை நீளம் கொண்டதாக இருந்தது. இருபத்திரண்டு கால்வாய்கள் கிராமத்தின் தலையெழுத்தையே மாற்றிவிடும் என்று நம்பினார். முதலில் தன் திட்டத்தைப்பற்றி அவர் தன் பெற்றோர்களிடம் சொன்னார். அவர் சொன்ன விஷயத்தின்மீது அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. நகரத்தைநோக்கிச் சென்றுவிடாதபடிக்கு வேண்டுமென்றே ஏதேதோ திட்டம் தீட்டிப் பேசுகிறார் என்று  சொன்னார்கள். பூனாவுக்கோ பெல்காமுக்கோ சென்று கைக்குக் கிடைத்த வேலைகளில் அமர்ந்து கைநிறையச் சம்பாதித்து தாமும் உண்டு, தம் பெற்றோர்களையும் காப்பாற்றுகிற மற்ற பிள்ளைகளைப்போல தம் பிள்ளை இல்லையே என்ற வருத்தமும் துக்கமும் அவநம்பிக்கையும் அவர்களை     வாட்டின. கால்வாய்த் திட்டத்தை அவர் கனவு நிறைந்த கண்களோடு விவரிக்கவிவரிக்க, அவருடைய தோற்றம் அவர்களுக்கெல்லாம் ஒரு மனம் பேதலித்தவனுடைய தோற்றமாகத் தெரிந்தது. ஆயினும் சற்றும் மனம்தளராத காம்ப்ளி மீண்டும்மீண்டும் பேசி ஒருவழியாக தம் பெற்றோர்களை சம்மதிக்கவைத்தார். கிணறுகளுக்குச் சொந்தமான மற்றவர்களில் நான்கைந்து பேர்கள்மட்டுமே அவருடைய திட்டத்தின்மீது நம்பிக்கை கொண்டனர்.
     நீளம் குறைந்த ஒரு கால்வாயை வெட்டும் முயற்சியில் உடனடியாக இறங்கினார் காம்ப்ளி. அவருடைய திட்டத்துக்கு சற்றும் உடன்படாத ஒருவருடைய கிணற்றுக்குத்தான் அந்தக் கால்வாய் நீண்டது. அவரே கடப்பாறையை எடுத்து வெட்டினார். தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து கூலிகொடுத்து மேலும் மூன்று ஆட்களை வைத்துக்கொண்டார். நான்கு பேர்கள் இடைவிடாமல் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வேலை செய்து அந்தக் கால்வாயை வெட்டி முடித்தனர். வெற்றிகரமாக ஒரு கால்வாய் வேலை முடிந்தது. அதைப் பார்த்த பிறகுதான் உண்மையிலேயே அத்திட்டத்தால் ஏதேனும் பயன் விளையக்கூடும் என்ற நம்பிக்கை  ஊர்க்காரர்களில் சிலருக்குப் பிறந்தது. உழைக்கும் அணியில் தம்மையும் அவர்கள் இணைத்துக்கொண்டார்கள். அடுத்த இரண்டு மாதங்களில் அந்தக் கால்வாய் வேலையும் முடிவடைந்தது.
     முதல்மழை ஆரவாரமாகப் பொழிந்தது. குன்றுகளின் மடிப்புகளிலிருந்து வெள்ளம்போலப் பாய்ந்துவந்த மழைநீர் கால்வாய் வழியாக ஓடிவந்து கிணற்றுக்கள் பாயும் காட்சியைப் பார்த்தபோது அவர்கள் மனம் பரவசத்தால் சிலிர்த் தது. ஒரு வார மழையில் பாதி உயரத்துக்கு கிணற்றின் நீர்மட்டம் உயர்ந்தது. ஒரு திருவிழாவைப் பார்க்க வருவதைப்போல அந்த ஊர்க்காரர்களும் அடுத்த ஊர்க்காரர்களும் கூட்டம்கூட்டமாக வந்து அக்கிணறுகளைப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். அதிசயத்தைக் கண்டதைப்போல ஒருவரிடம் ஒருவர் சொல்லிக்கொண்டனர். ஊரைவிட்டு வெளியேறியிருந்த அக்கிணறுகளுக்குச் சொந்தக்காரர்கள் மறுபடியும் கிராமத்துக்கு வந்து விவசாயத்தைத் தொடங்கினார்கள்.
     மழைக்காலம் முடிந்து மீண்டும் கோடை தொடங்கியதும் கால்வாய் வெட்டும் வேலை மறுபடியும் தொடங்கியது. அனைவருமே சொந்த வேலையைப்போல கால்வாயை வெட்டினார்கள். வேலையை விரைவில் முடிப்பதற்காக கூலிக்காக வேறு சிலரையும் அழைத்துவந்தார்கள். மூன்றாண்டுகளில் இருபத்திரண்டு கிணறுகளுக்கும் தனித்தனியாக இருபத்திரண்டு கால்வாய்கள் அமைக்கப்பட்டன. அதற்கடுத்துப் பொழிந்த மழையில் குன்றிலிருந்து வழிந்துவரும் நீர் கொஞ்சம்கூட வீணாகாமல் வாய்க்காலில் இறங்கி வழிந்தோடி கிணறுகளைத் தஞ்சமடைந்தன. கிணறுகளின் நீர்மட்டம் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த நிலத்தடி நீர்மட்டத்தையே உயர்த்திவிட்டது. முற்றிலுமாக அழிவின் புள்ளியைநோக்கிச் சரிந்துவிட்ட விவசாயம் மறுபடியும் தழைக்கத் தொடங்கியது. ஊர்க்கிணறுகளையெல்லாம் முதலில் கால்வாய்களில் இணைத்த காம்ப்ளி தன்னுடைய சொந்தக் கிணற்றுக்கு இறுதியாகத்தான் கால்வாய் இணைப்பை உருவாக்கிக்கொண்டார். ஆரம்பத்தில் மனநிலை பிசகியவனாக மகனை நினைத்த காம்ப்ளியின் பெற்றோர்கள் அப்போது தம் மகன் எவ்வளவு பெரிய மகத்தான செயலைச் செய்து முடித்திருக்கிறான் என்று பெருமை மிளிர நிமிர்ந்து நடந்தார்கள்.
     ஆண்டுதோறும் மிகச்சிறந்த மனிதரைத் தேர்ந்தெடுத்து கெளரவிக்கும் கன்னடப்பிரபா நாளிதழ் கடந்த ஆண்டுக்குரிய சிறந்த மனிதராக அவரைத் தேர்ந்தெடுத்து மாநில முதல்வர்வழியாக விருதளித்துச் சிறப்பித்தது. முதல்வர் அவருடைய தன்னலமற்ற செயலை மனந்திறந்து பாராட்டினார். விருதுத்தொகையான ஒரு லட்சருபாயோடு தன்னுடைய பங்காகவும் ஒரு தொகையைக் கொடுத்து வாழ்த்தினார். விருதைப் பெற்றுக்கொண்ட காம்ப்ளி அதே மேடையில் அந்தத் தொகையை முதல்வரிடமே சற்றும் தயங்காமல் கொடுத்துவிட்டு "ஐயா, எங்க கிராமத்துப் பக்கம் எந்த வளர்ச்சியும் இல்லை. இந்தப் பணத்த வச்சிகிட்டு ஏதாச்சிம் வளர்ச்சிய உண்டாக்குங்க ஐயா..." என்று கேட்டுக்கொண்டார். நெகிழ்ந்துபோன முதல்வர் அக்கிராமத்தில் வளர்ச்சிப்பணிகளை அவசியம் மேற்கொள்வதாகவும் அதை அரசுப்பணத்திலேயே செய்துமுடிப்பதாகவும் அந்த அன்பளிப்புத்தொகையை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளும்படியும் மேலும்மேலும் வலியுறுத்தினார். ஆனால் காம்ப்ளி தன்னடக்கத்தோடு அரசு செலவு செய்ய நினைத்திருக்கிற தொகையோடு இந்தத் தொகையையும் சேர்த்துச் செலவு செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டு கைகுவித்து வணங்கினார். மிகவும் மேடைக்கூச்சம் கொண்டவராகக் காணப்பட்ட அவருடைய ஏற்புரைகூட மிகவும் சுருக்கமாகவே இருந்தது.
     மறுநாள் எல்லாச் செய்தித்தாட்களிலும் அவரைப்பற்றிய செய்திகள் வெளிவந்தன. வாரப்பத்திரிகைகளில் அவருடைய பேட்டிகள், புகைப்படங்கள் பிரசுரமாகியிருந்தன. தொலைக்காட்சியில் மீண்டும் அவரைப்பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.  அவரையொட்டிய ஒரு பெருமையுணர்ச்சி என் மனத்துக்குள் இடம்பெற்றது. "ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்" என்னும் திருக்குறள் வரிகள் மனத்தில் ஒருகணம் மின்னி மறைந்தன. ராணெபென்னூர் வழியாக சிலமுறை நான் பயணம் செல்ல நேர் ந்ததுண்டு. அடுத்தமுறை அப்படி ஒரு வாய்ப்பு வரும்போது காம்ப்ளியின் கிராமத்துக்குச் சென்று அந்தக் கால்வாய்களை நேரில் காணவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
     அன்றைய இரவில் காம்ப்பளியைப்பற்றிய எண்ணங்கள் மீண்டும்மீண்டும் மனத்தில் அலைமோதியபடி இருந்தன. பஞ்சம் பிழைப்பதற்காக எல்லாரையும்போல அவரும் மும்பையைநோக்கியோ பூனாவைநோக்கியோ அவர் சென்று பிழைத்திருக்கலாம். ஆனாலும் ஏதோ ஒன்று அவரைத் தடுத்து நிறுத்தி அந்த மண்ணை வாழும் இடமாக மாற்றிவிட்டது. அந்த மனத்தூண்டுதலுக்கு என்ன பெயரிடுவது? எப்படி அந்த உத்வேகம் உருவாகிறது? அந்த கேள்விக்கான விடைதான் சின்னச்சின்ன திட்டங்கள் முதல் பெரியபெரிய தியாகங்கள் வரைக்குமான ஆதாரப்புள்ளி. எது அது?
     எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தவர் முல்லைப்பெரியாற்றின் குறுக்கில்  மக்கள் நலனுக்காக அணைகட்டத் திட்டமிட்டு வேலையைத் தொடங்கிவிட்ட நிலையில் கூடுதல் நிதியை ஒதுக்க அரசு மறுத்ததும் சற்றும் மனம்குலையாமல் வெளிநாட்டில் தனக்குச் சொந்தமான சொத்துகளையும் ஆபரணங்களையும் விற்று அணைகட்டுமான வேலையை வெற்றிகரமாக முடித்த ஆங்கில அதிகாரியான பென்னி குக். இன்னொருவருடைய பெயரும் நினைவுக்கு வந்தது. பாண்டிச்சேரியை அடுத்த கடலூரில் வாழ்ந்தவர் அவர். அந்த ஊரில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் இயங்கிவந்த நகராட்சிப் பள்ளிக்கு எதிர்பாராத விதமான நெருக்கடியொன்று முளைத்தது. அதுவரை மாதவாடகையாக வசூலித்துவந்த முந்நூறு ரூபாய்க்குப் பதிலாக திடீரென ஆறாயிரம் ரூபாய் வாடகைகேட்டு நெருக்கியது கோயில் நிர்வாகம். இருபது மடங்கு உயர்த்தப்பட்ட வாடகையைத் தரஇயலாது என நகராட்சி கைவிரித்துவிட்டது. அப்பள்ளியில் படித்துவந்த ஏழை மாணவமாணவிகளைப் பற்றியும் அவர்களுடைய எதிர்காலத்தைப்பற்றியும் யாரும் கவலைப்படவில்லை. பள்ளியை இழுத்துமூடவேண்டிய நிலையில் எல்லாரும் கையைப் பிசைந்துகொண்டிருந்தார்கள். செய்தியைக் கேள்விப்பட்ட முதியவர் ஒருவர் அதே பகுதியில் பள்ளி தொடர்ந்து இயங்கும்வகையில் ஏறத்தாழ அறுபது லட்சருபாய் மதிப்புள்ள தனக்குச் சொந்தமான பன்னிரண்டாயிரம் சதுரஅடி நிலத்தை இலவசமாக பள்ளிக்கு வழங்கிவிட்டு ஒதுங்கிக்கொண்டார். இப்படி பலருடைய முகங்களும் பெயர்களும் மனத்தில் தோன்றின. இவர்களுடைய அக்கறைகளையும் பணிகளையும் தொகுத்துப் பார்ப்பதன்மூலம் என் கேள்விக்கான விடையைக் கண்டடையமுடியும் என்று தோன்றியது.
     இறுதியாக நான் இப்படி வரையறுத்துக்கொண்டேன். தம்மைப்பற்றிய சிந்தனைகளுக்கு நடுநடுவே பிறரைப்பற்றியும் எண்ணிப்பார்ப்பதற்கான ஆர்வத்துக்கும் அவர்களுடைய மனத்தில் இடமிருக்கவேண்டும். மற்றவர்களுடைய துயரங்களை தன்னுடைய துயரங்களாக நினைத்துப் பார்க்கிற கருணையுள்ளம் வேண்டும். ஈகையிலும் அடுத்தவருக்காக உழைப்பதிலும் சலிப்பற்ற ஊக்கம் வேண்டும். இவையனைத்தும் நிறைந்திருக்கும்போதுதான் இத்தகு மனத்து¡ண்டுதல் உருவாகிறது. இதுவே எளிய மனிதர்களை சிறந்த மனிதர்களாகவும் மாமனிதர்களாகவும் உருவாக்குகிறது என்று சொல்லிக்கொண்டேன். அக்கணத்தில் அப்படிச் சொல்லிக்கொண்டேனே தவிர, அந்த வரையறையில் என் மனம் முழுநிறவை உணர்ந்ததாகச் சொல்லமுடியாது. இன்னும் சில முக்கியமான அம்சங்கள்  என் வரையறையில் விடுபட்டிருக்கக்கூடும் என்றே தோன்றியது. இவையனைத்தும் இணைந்த ஓர் உணர்வெழுச்சியே இந்த உத்வேகமாக மாறக்கூடும்.