Home

Thursday, 11 February 2016

புதைந்த காற்று – மறுபதிப்புக்கு எழுதிய முன்னுரை

  





தற்செயலாக கர்நாடகத்தின் உள்பகுதியில் அமைந்த ஓர் ஊரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது ஏராளமானவர்கள் கூட்டமாக கூடி நின்று ஒரு வீதி நாடகத்தைப் பார்ப்பதைக் கவனிக்க நேர்ந்தது. அந்த வீதி நாடகக்குழுவினர் பாடிய பாடல்கள் வழியாகவே நான் முதன்முதலாக கவிஞர் சித்தலிங்கையாவைப்பற்றித் தெரிந்துகொண்டேன். அவருடைய பாடல் தொகுதியைப் படித்த பிறகு, இன்னும் அவரை நெருக்கமாக அறிந்துகொள்ளமுடிந்தது. தலித்துகள் வாழ்நிலை, தலித்துகள் படும் அவமானம், தலித்துகள் வேதனை, தலித்துகளின் கனவு, தலித்துகள் எழுச்சி ஆகியவை அவருடைய பாடல்களின் மையப்புள்ளிகளாக இருந்தன. நூற்றுக்கணக்கிலான மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் அப்பாடல்கள் பாடப்படும்போது உருவாகும் மன எழுச்சியை பலமுறை நான் கண்ணாரப் பார்த்ததுண்டு. மின்சாரம் பாய்ந்ததுபோல அந்த எழுச்சி மானுடரின் நெஞ்சினூடாக பாய்ந்து செல்லும். அவரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்றெல்லாம் அப்போது நான் நினைத்தே பார்த்திராத செய்தி. பத்தாண்டுகள் கழித்து எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்து, அவரைச் சந்திக்கச் சென்றபோது அப்பாடல்களின் அனுபவங்களை அவருடன் பகிர்ந்துகொண்டேன். அன்பானதொரு புன்னகை வழியாகவும் கண்மலர்தல் வழியாகவும் அவர் அதை உள்வாங்கியபடி என் கைகளைப்பற்றிய கணத்தில் அவரை நான் மேலும் நெருக்கமாக உணர்ந்தேன். அன்றைய எங்கள் உரையாடலை உற்சாகத்துடன் தொடங்க அக்கணம் மிகவும் உதவியது. அந்த நேர்காணல் அப்போது வெளிவந்துகொண்டிருந்த ’நிறப்பிரிகை’ என்னும் இதழில் பிரசுரமானது.

அச்சமயத்தில் கன்னடத்தில் வெளிவந்துகொண்டிருந்த இலக்கிய இதழ்களான ’ருஜுவாது’, ’அங்கண’, ’சூத்ர’ ஆகியவற்றையும் இலக்கியமும் அரசியல் செய்திகளும் அடங்கிய வார இதழான ’லங்கேஷ் பத்ரிகெ’யையும்  நான் படித்து வந்தேன். அவற்றில் வெளிவந்த சில முக்கியமான படைப்புகளை தனியாக எடுத்துவைத்து சேமித்துவைத்திருந்தேன். அச்சேமிப்பிலிருந்தே நான் அவ்வப்போது மொழிபெயர்ப்பதற்கான படைப்புகளை எடுத்துக்கொண்டேன்.
’சோமன துடி’ சிவராம காரந்த் எழுதிய முக்கியமான நாவல். சமூகத்தில் தலித் பிரக்ஞை உருவாகும் முன்பாகவே ஒரு தலித்தின் வாழ்க்கையை இந்த நாவலில் சிவராம காரந்த் முன்வைத்திருந்தார். ஒரு பெரிய பண்ணையில் விவசாயக்கூலியாக வேலை செய்கிறான் ஒருவன். சாதி அடிப்படையில் தாழ்த்தப்பட்டவன். அவனுக்கு மூன்று பிள்ளைகள். ஒரு மகள்.  காட்டில் திசைமாறி வந்து அலைந்துகொண்டிருந்த ஒரு மாட்டைக் கண்டுபிடித்து தன் குடிசைக்கு அழைத்துவந்து வளர்க்கிறான் அவன். உழுவதற்கு சொந்தமாக ஒரு மாடு கிடைத்திருப்பதுபோல, சொந்தமாக ஒரு துண்டு நிலமும் கிடைத்தால் விவசாயம் செய்து பயிரிடலாம் என அவன் விரும்புகிறான். மெல்லமெல்ல அது அவன் கனவாகவும் வெறியாகவும் மாறிவிடுகிறது. ஆனால் விவசாயத்துக்குரிய எல்லா நிலங்களுக்கும் சொந்தமானவன் அவனுடைய பண்ணையார். அவன் கொடுக்க மறுக்கிறான். அவனைவிட, அவனுடைய தாயாருக்கு கொடுக்கக்கூடாது என்பதில் உறுதி அதிகமாக இருக்கிறது. கூலிக்காரனுக்கு சொந்தத் தொழில் அமைந்துவிட்டால் சமூகத்தை மதிக்கமாட்டான் என்று அவள் நினைக்கிறாள். நான் கன்னடத்தில் படித்த முதல் நாவல் இது. இதைப் படித்துவிட்டுத்தான் அவரைச் சந்திப்பதற்காக அவருடைய வீடுவரைக்கும் சென்று பார்க்காமலேயே திரும்பி வந்தேன்.
பி.டி.ஜான்னவி எழுதிய ஒரு சிறுகதையை லங்கேஷ் பத்ரிகெயில் படித்தேன். ஒரு விருந்தை மையமாகக் கொண்ட சிறுகதை. விருந்தைக் கொடுப்பவரும் அந்த விருந்துக்காக ஓடி ஓடி வேலை செய்கிற ஒரு சிறுவனும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்றாலும் வசதி வாய்ப்புகளின் அடிப்படையில் வேறுவேறு முனைகளில் இருப்பவர்கள். மேல்முனையில் இருப்பவர்கள் கீழ்முனையில் இருப்பவர்களை நுட்பமான விதத்தில் அவமானப்படுத்துகிறார்கள். ஒரு குறிப்பிட்ட தருணத்தில் “உங்களுக்கெல்லாம் வெளியே ஒக்கார வச்சி தொடாமலயே மேல தூக்கி சோத்த போடறாங்களே, அவுங்கதான் சரி…. அங்க இருக்கறதுக்குத்தான் நீங்க லாயக்கு” என்று சொல்லிக்காட்டுகிறது ஒரு பாத்திரம். அந்தத் தருணத்தைக் கடக்கும்போது சோமனதுடி நாவலை நினைத்துக்கொண்டேன். பண்ணையாரின் தாயார் சொன்ன வாசகம் என் நெஞ்சில் நகர்ந்தது. ஒன்று சாதிக்கு வெளியே நிகழும் அவமானம். இன்னொன்று சாதிக்கு உள்ளே நிகழும் அவமானம்.
இப்படி படிக்க நேர்ந்த சிறுகதைகளில் சிலவற்றை நேரம் கிட்டும்போதெல்லாம் மொழிபெயர்த்து வைத்திருந்தேன். என் நண்பரும் பேராசிரியருமான கிருஷ்ணசாமி வழியாக எனக்கு அறிமுகமான கன்னடப் பேராசிரியர் சீனிவாச ராஜு மிகவும் அருமையான மனிதர். என் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு புதிதாக வெளிவந்திருந்த சில சிறுகதைத் தொகுதிகளை எனக்குப் படிக்கக் கொடுத்தார். அவற்றிலிருந்தும் ஒரு சில சிறுகதைகளை நான் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தேன். பிரசுர சாத்தியம் பற்றியெல்லாம் நான் எப்போதுமே யோசிப்பவன் அல்லன். படிக்கும் தருணத்தில் எது என் மனத்தைத் தொடுகிறதோ, அதை முறையான அனுமதியுடன் மொழிபெயர்த்து வைத்துவிடுவேன். தற்செயலாக ஊருக்குச் சென்றிருந்த ஒரு நாளில், இந்தப் படைப்புகளைப்பற்றி நண்பர் ரவிக்குமாருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அவரே இப்படைப்புகளை நூலாக்கும் திட்டத்தை முன்வைத்து, விடியல் வழியாக உடனடியாக பிரசுரம் பெறவும் உதவியாக இருந்தார். ரவிக்குமார், சிவா இருவரையும் இத்தருணத்தில் மிகவும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். இப்படைப்புகளை மொழிபெயர்க்க அனுமதி அளித்த படைப்பாளர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும். என்னுடைய எல்லா முயற்சிகளிலும் பின்னணிச்சக்தியாக இருந்து எனக்குத் துணையாக இருப்பவர் என் அன்பு மனைவி அமுதா. அவர் அளிக்கும் ஊக்கமே என்னை வழிநடத்தும் ஆற்றல்.  அவரையும் இக்கணத்தில் நினைத்துக்கொள்கிறேன்.
பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, மறுபதிப்புக்காக இப்புத்தகத்தை மறுபடியும் படித்துப் பார்க்கும்போது பழைய நினைவுகள் அலைமோதுகின்றன. அதே சமயத்தில், காலத்தின் பழைமைத்தூசுக்கு இடம் தராமல், எல்லாப் படைப்புகளும் இன்றும் ஒளியுடனும் படைப்பூக்கத்துடனும் விளங்குவதை அறியும்போது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நல்ல படைப்புகளையே நான் மொழிபெயர்த்திருக்கிறேன் என்பதை நினைத்து இக்கணம் என் மனம் நிறைவுறுகிறது. இத்தொகுப்பை மிகச்சிறந்த முறையில் வெளிக்கொண்டு வரும் என்.சி.பி.எச். நிறுவனத்துக்கும் என் அன்பார்ந்த நன்றி.