Home

Sunday 19 May 2024

உண்மையும் வருத்தமும்

 

வளவனூரிலிருந்து புதுச்சேரிக்கு பேருந்துகளிலும் செல்லலாம். ரயிலிலும் செல்லலாம். விழுப்புரத்திலிருந்து ஒவ்வொரு பத்து நிடத்துக்கும் ஒருமுறை வரும் ஏதேனும் ஒரு பேருந்து புதுச்சேரிக்குச் செல்வதாகத்தான் இருக்கும். அது வளவனூரிலும் நின்று செல்லும். ஆனால் பல சமயங்களில் நின்றபடி பயணம் செய்யக்கூட அந்தப் பேருந்துகளில் இடம் இருக்காது. ஆனால் அவசரத்துக்கு வேறு வழியில்லை. அதில்தான் செல்லவேண்டும். எவ்விதமான அவசரமும் இல்லையென்றால் ரயிலில் வசதியாகச் செல்லலாம். ஆனால் காலையில் பத்துமணிக்கு ஒரு ரயில் வரும். பிறகு மாலையில் ஐந்தரை மணிக்கு ஒரு ரயில் வரும். அதற்குப் பிறகு சேவை கிடையாது.  அது ஒன்றுதான் குறை. ஆயினும் எனக்கு பேருந்துப் பயணத்தைவிட ரயில் பயணம் பிடிக்கும். அதனால், பல நேரங்களில் அந்த நேரத்துக்குக் காத்திருந்து ரயிலில்தான் செல்வேன்.

ஒருமுறை மாலை ரயிலில் ஏறி பயணம் செய்துகொண்டிருந்தேன்.  ஜன்னலோர இருக்கை. இதமான காற்று முகத்தைத் தீண்டிச் சென்றதில் பரவசமாக இருந்தது. கண்முன்னால் நகர்ந்துசெல்லும் வயல்வெளிக்காட்சிகளில் மனம் தோய்ந்து வேடிக்கை பார்த்தடி இருந்தேன்.

“அண்ணன் என்னடா தம்பி என்னடா” என்று கணீரென்ற குரலில் பெட்டிக்குள் யாரோ பாடத் தொடங்கிய சத்தம் கேட்டது. பாடிப்பாடி பொருத்தமான ஏற்ற இறக்கங்கள் படிந்துவிட்ட குரல். அதற்குப் பொருத்தமாக சப்ளாக்கட்டைகளின் சத்தம்.

திரும்பிப் பார்த்தேன். தலைநரைத்த கிழவர் ஒருவர் ஓர் இருக்கைக்கு அருகில் நின்றபடி பாடிக்கொண்டிருந்தார். பார்வைத்திறன் இல்லாதவர். அழுக்கான வேட்டியும் சட்டையும் அணிந்திருந்தார். தோளில் ஒரு பை தொங்கியது. அதன் வாய் திறந்திருந்ததால் பைக்குள் இருந்த தட்டுகளும் தம்ளர்களும் கிண்ணங்களும் தெரிந்தன. ஒரு கையில் சப்ளாக்கட்டைகள் இருந்தன. மறு கையை ஒரு சிறுமி பிடித்திருந்தாள். அவள் கையில் ஒரு தட்டை ஏந்தி வந்தாள். அதில் கொஞ்சம் சில்லறைக்காசுகள் இருந்தன.

இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்கள் சிலர் திரும்பிப் பார்த்துவிட்டு  பாட்டின் தாளத்துக்குத் தலையசைத்தபடி, சில சில்லறை நாணயங்களை அந்தச் சிறுமி ஏந்தியிருந்த தட்டில் போட்டனர். சிலர் தனனைச் சுற்றி உலகத்தில் எதுவுமே நிகழவில்லை என்பதுபோன்ற எண்ணத்தில் தன் கைப்பேசியிலேயே மூழ்கியிருந்தனர். அவர்களுடைய விழிகள் எந்தத் திசையிலும் ஏறிட்டுப் பார்க்கவில்லை. சிலர் அச்சிறுமியின் மீது பதிந்திருந்த பார்வையை அவசரமாகத் திருப்பி ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.

பெரியவர் அந்தப் பாட்டை முடித்துவிட்டு “அம்மம்மா, தம்பி என்று நம்பி” என்று இன்னொரு பாட்டைத் தொடங்கினார். என் இருக்கையை அவர் நெருங்கியதும் ஒரு பத்து ரூபாய் நோட்டை அந்தச் சிறுமியிடம் கொடுத்தேன்.  இந்த மாதிரி பயணநேரங்களில் சாப்பிடுவதற்கென என் பையில் பிஸ்கட் பாக்கெட்டுகளும் கடலை உருண்டை பாக்கெட்டுகளும் வைத்திருப்பது வழக்கம். அவற்றிலிருந்து ஒரு பாக்கெட்டை எடுத்து  அச்சிறுமியிடம் கொடுத்தேன். அதைப் பார்த்ததும் அவள் முகத்தில் ஒரு புன்னகை படர்ந்தது. தெத்துப்பல் தெரிய அழகாகச் சிரித்துக்கொண்டே அதை வாங்கிக்கொண்டாள் அச்சிறுமி.

அச்சிறுமியின் வயதொத்த இன்னொரு சிறுமி என் இருக்கைக்கு வலது புறமாக இருந்த இருக்கையில் அமர்ந்தபடி அவளையே பார்த்துக்கொண்டிருப்பதை அப்போதுதான் கவனித்தேன். நீல நிறச் சட்டையில் அவளைப் பார்ப்பதற்கு ஒரு சிற்பம்போல  இருந்தாள். அவளுக்கு அருகில் அச்சிறுமியின் தாயார் அமர்ந்திருந்தார். ஆனால் அவர் குனிந்தவாக்கில் கைப்பேசியை காதருகில் வைத்தபடி யாரிடமோ மெதுவாக உரையாடிக்கொண்டிருந்தார். அக்கம்பக்கத்து நிகழ்ச்சிகள் எதுவும் அவர் மனத்தில் பதியவில்லை.

தன் அம்மாவின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக அச்சிறுமி அவருடைய முழங்கையில் தொட்டு அசைத்தாள். பிறகு புடவை நுனியைப் பற்றி இழுத்தாள். அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் கன்னத்தைத் தொட்டு ”அம்மா …..” என்று கொஞ்சியபடி அவர் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்ப முயற்சி செய்தாள்.

அக்கணத்தில் விசையோடு சீற்றத்துடன் முகத்தைத் திருப்பிய அவர் “என்னடி?” என்று அதட்டுவதுபோல கேட்டார். சிறுமி எந்தப் பதிலையும் சொல்லாமல் தனக்கு அருகில் நின்றிருந்த தட்டேந்திய சிறுமியைச் சுட்டிக் காட்டினாள்.  அத்தருணமே அந்த அம்மாவின் முகம் போன போக்கு சரியாக இல்லை. சட்டென ஆட்காட்டி விரலை உதட்டின் மேல் குவித்து ”ஷ்” என்று  எச்சரித்துவிட்டு மீண்டும் கைபேசியில் உரையாடைத் தொடங்கிவிட்டார்.

ஏமாற்றத்தோடு தம் இருக்கையைக் கடந்து செல்லும் தட்டேந்திய சிறுமியை ஒருவித வாட்டத்தோடும் இயலாமையோடும்  பார்த்து நின்றாள் நீலநிறச் சட்டையணிந்த சிறுமி. சில கணங்களுக்குப் பிறகு கடைசி முயற்சியாக ”அம்மா, ஏதாவது சில்லறை குடும்மா. அந்தத் தாத்தாவுக்கு குடுக்கலாம்” என்று கெஞ்சுவதுபோலக் கேட்டாள். அதட்டுவதுபோல முறைத்தபடி “த்ச்” என்று சத்தமாக நாக்குச் சப்புக்கொட்டியவாறு அச்சிறுமியின் பக்கம் திரும்பினார் அச்சிறுமியின்  தாயார். “சும்மா இருக்கமாட்டியா நீ?” என்று எரிச்சலோடு குரல் கொடுத்தார் அவர். அதைக் கேட்ட கணத்திலேயே அச்சிறுமி  அடங்கி அமைதியடைந்துவிட்டாள். பிறகு ஜன்னல் பக்கமாகத் திரும்பி வேதனை படிந்த முகத்துடன் வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.

பாட்டு பாடியபடியே சென்ற அக்கிழவர் ஒவ்வொரு இருக்கையாகக் கடந்துபோய் அந்தப் பெட்டியைக் கடந்து பக்கத்துப் பெட்டிக்குச் சென்றுவிட்டார்.

சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த அம்மா அச்சிறுமியிடம் பேசும் குரல் கேட்டது. நான் எதற்கோ திரும்புவதுபோல வேறு பக்கம் திரும்பி ஒரு கணம் அவரைக் கவனித்தேன். அச்சிறுமியின் முகவாயைத் தொட்டுத் திருப்பி  அந்த அம்மா எதையோ சொல்லிக்கொண்டிருந்தார். அடங்கிய குரல் என அவர் நினைத்திருந்தாலும் அவர் சொன்ன சொற்களை என்னால் கேட்கமுடிந்தது.  

“காலையில கோவிலுக்குப் போன சமயத்துல நீயும்தான அம்மா கூட வந்தே. கோவில் வாசல்ல உட்கார்ந்திருந்த பிச்சைக்காரங்களுக்கெல்லாம் அம்மா காசு போட்டதை நீயும்தான் பார்த்த? அவுங்க எல்லாரும் கை இல்லாதவங்க. கால் இல்லாதவங்க. அந்த மாதிரி இருக்கறவங்களுக்குத்தான் நாம கொடுக்கணும். புரியுதா? இந்த மாதிரி இருக்கறவங்களுக்கு என்ன கேடு? கையும் காலும் நல்லாதான இருக்குது? எங்கனா வேலை செஞ்சி பொழைக்கலாமில்ல? அதனாலதான் அம்மா உன்கிட்ட சும்மா இருன்னு சொன்னேன்”

அவர் இன்னும் என்னென்னமோ சொல்லிக் கொண்டிருந்தார். அச்சிறுமியும் அமைதியாக எல்லாவற்றுக்கும் தலையசைத்தபடி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தது. அதற்குமேல் அந்த உரையாடலைக் கேட்க எனக்கு நாட்டமில்லை. அதனால் திரும்பி விட்டேன்.

ஈகை தொடர்பான திருக்குறள் வரிகள் அக்கணத்தில் எதற்காகவோ நினைவுக்கு வந்தன. வறியார்க்கொன்று ஈவதே ஈகை என்னும் வாசகத்தோடுதான் அந்த அதிகாரமே தொடங்குகிறது. மானுடனின் அடிப்படைப்பண்பாக ஈகை இருக்கவேண்டும் என வள்ளுவர் எதிர்பார்க்கிறார். அது சிலரிடம் இருக்கிறது. சிலரிடம் இல்லை.

அனைவருமே இறைவனை கருணாமூர்த்தியாகவே கருதி வணங்குகிறார்கள். இறைவனின் கருணையை யாசிக்காதவர்களே இல்லை. எந்தச் செயலையும் வெற்றிகரமாக நடத்தி முடிக்க இறைவனின் கருணை அவசியமாக இருக்கிறது. நம்மையும் நம் பிள்ளைகளையும் நம் உறவினர்களையும்  இறைவன் கருணையுடன் காத்தருள வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம். அதையே இறைவனின் முன் வேண்டுகோளாக முன்வைத்து யாசிக்கிறோம். நம் செயல் வெற்றி கிடைத்துவிட்டால், நமக்கு இறைவனின் கருணை கிடைத்தது என்று சொல்லிக்கொள்கிறோம். ஒருவேளை தோல்வியுறும் நிலை நேர்ந்துவிட்டால், இறைவன் இன்னும் கண் திறக்கவில்லை, அவன் கருணை கிடைக்கவில்லை என்று சொல்லிக்கொள்கிறோம்.   நமக்காக இறைவனின் கருணையை யாசிக்கும் நாம் சிற்சில சமயங்களில் பிறரிடம் கருணையோடு இருப்பதில்லை.  கருணை காட்ட விழையும் பிள்ளைகளைத் தடுத்து நிறுத்துவதில் நமக்கு தயக்கமே இருப்பதில்லை.

இறைவன் கருணையின் இருப்பிடம் என நம்பும் நாம் நம் மனத்தையும் கருணையின் இருப்பிடமாக வைத்துக்கொள்ள முடியும் என நம்புவதில்லை. யாரும் எடுத்துச் சொல்லாமலேயே இயற்கையாகவே நம் பிள்ளைகளின் மனம் கருணையின் இருப்பிடமாக மலர்ந்திருப்பதைப் பார்த்து மகிழ்வதற்கும் நமக்குத் தெரியவில்லை. குழந்தை வடிவில் இறைவனே நமக்கு அருகில் வளர்வதை நாம் கடைசி வரை அறிந்துகொள்வதே இல்லை. குழந்தைகள் என்பவர்களை நாம் அடித்து, உதைத்துத் திருத்தி நிலைநிறுத்தவேண்டியவர்களாகவும், நம் விருப்பத்துக்கேற்ப வளைத்து நிறுத்திவைக்க வேண்டிய செடிகளாகவும் நினைத்துக்கொள்கிறோம்.

இப்படி என் யோசனை பல திசைகளில் அலைபாய்ந்துகொண்டிருந்த போது, அவற்றின் தொடர்ச்சியாக புதுமைப்பித்தன் எழுதிய ‘மகாமசானம்’ சிறுகதையை நினைத்துக்கொண்டேன். உயிர் பிரியப்போகும் ஒரு பிச்சைக்காரனின் கடைசிக்கணங்களை புதுமைப்பித்தன் சித்தரிப்பதை நாம் அச்சிறுகதையில் பார்க்கமுடியும்.  

நகரத்தில் நிலவும் அவசரகதியிலான வாழ்க்கையின் கோலங்களை எள்ளி நகையாடி விமர்சனத்துக்குட்படுத்திய வரிகளுடன்தான் அக்கதையைத் தொடங்குகிறார் புதுமைப்பித்தன். அச்சிறுகதையின் தலைப்பே விமர்சனம் தொனிக்கும் ஒரு சொல்.

எல்லா இடங்களையும் விட நகரம் உயிர்த்துடிப்பு மிகுதியான இடம். அதை ஏன் புதுமைப்பித்தன் மகாமசானம் என்று குறிப்பிடுகிறார் என்பது முதலில் புரிவதில்லை. ஆனால் கதையைப் படித்து முடித்ததும் அவர் நினைத்திருக்கும் காரணத்தை நம்மால் எளிதில் புரிந்துகொள்ளமுடியும்.

அவர் மசானம் என்று குறிப்பிடுவது அந்த நகரத்தையோ, இடத்தையோ அல்ல. மனித மனத்தையே அவர் மசானம் என்று குறிப்பிடுகிறார். மனத்தை உயிர்ப்போடு வைத்திருப்பது கருணை ஒன்றே. கருணை இல்லாத மனம் அல்லது கருணையைத் துறந்துவிட்டுச் செல்லும் மனம் என்பது ஏறத்தாழ சடத்தன்மை கொண்டது. பெரும்பாலானோர் கருணையை ஆழ்நெஞ்சில் புதைத்து விட்டவர்களாக இருக்கிறார்கள். உயிரோடு இருந்தும் உயிரற்றவர்களாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

நகரத்தைப்பற்றிய பல விவரங்களை எள்ளல் அடங்கிய தொனியில் முதலில் விரிவாக அளிக்கிறார் புதுமைப்பித்தன்.  பிறகு, நகரத்தின் மையமான இடத்தில் ஒரு பிச்சைக்காரக் கிழவன் மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் காட்சியைச் சித்தரிக்கிறார். அவன் வாழ்க்கை முடியப்போகிறது. அவனுக்குப் பக்கத்தில் இன்னொரு பிச்சைக்காரன் வருகிறான். சாகப் போகிறவனின் முதுகைப் பிடித்து உட்காரவைத்து தகரக்குவளையில் இருக்கும் தண்ணீரை அவன் அருந்துமாறு செய்கிறான்.

அப்போது டிராம் பிடிப்பதற்காக அந்த இடத்துக்கு ஒருவர் வருகிறார். அவரோடு அவருடைய சின்ன மகளும் வருகிறாள். சாலைக்கு மறுபுறத்தில் யாரோ ஒரு மாம்பழ வியாபாரி நிற்பதை அந்தச் சிறுமியின் அப்பா  பார்க்கிறார். உடனே கடை வரைக்கும் போய்வருவதாகவும் நின்ற இடத்தைவிட்டு நகராமல் நிற்கவேண்டும் என்று சொல்லிவிட்டுச் செல்கிறார் அவர்.

தனியாக நின்றிருந்த நேரத்தில் அந்தச் சிறுமி பாதையோரமாக செத்துக்கொண்டிருந்த கிழவனைப் பார்க்கிறாள். எதையும் வேடிக்கை பார்க்கும் குணமுடைய அவளுக்கு அக்காட்சியை நெருங்கிச் சென்று பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது. அதனால் கிழவன் இருக்கும் இடத்துக்கு அருகில் சென்று பார்க்கிறாள். கிழவனின் வாய்க்குள் தண்ணீர் ஊற்றும் போது “மெதுவா மெதுவா” என்று தன்னையறியாமல் சொல்கிறாள். அப்போதுதான் அவளைக் கவனித்த இளைய பிச்சைக்காரன் அவளை அங்கிருந்து போகுமாறு கேட்டுக்கொள்கிறான். ஆயினும் அச்சிறுமி அங்கேயே அசையாமல் நிற்கிறாள். அந்தக் கிழவனுக்கு பசிமயக்கம் என அவள் நினைத்துக்கொள்கிறாள். கையிலிருக்கும் ஒரு தம்பிடியை எடுத்துக் கொடுத்து ”போய் பட்டாணி வாங்கிக் குடு” என்று சொல்கிறாள். அதை வாங்கிக்கொள்கிறான் அந்தப் பிச்சைக்காரன். அந்த நேரத்தில் பாதசாரி ஒருவரின் கையிலிருந்து சில்லறை நாணயங்கள்  கீழே தரையில் விழுந்து சிதறுகின்றன. அதையும் அவசரமாக எடுத்துக்கொள்கிறான் பிச்சைக்காரன். பிறகு கடைக்குச் சென்று சோடா வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடுகிறான்.

பக்கத்தில் யாரும் இல்லாத துணிச்சலில் செத்துக்கொண்டிருக்கும் கிழவனின் அருகில் சென்று உற்றுப் பார்க்கிறாள் சிறுமி. அவன் முகத்தில் ஒவ்வொரு ஈயாகப் பறந்து வந்து உட்கார்வதும் அவன் அசைவே இல்லாமல் கிடப்பதும் அவளுக்கு வேடிக்கையாக இருக்கிறது. சின்ன பிச்சைக்காரன் அழைப்பதுபோல ஒருமுறை அழைத்துப் பார்க்கிறாள் அச்சிறுமி. உள்ளூர பயமாக இருந்தாலும் நெருங்கிச் சென்று பார்க்கிறாள். அவரிடம் அசைவே தென்படவில்லை.

மாம்பழத்தை வாங்கிக்கொண்டு திரும்பி வந்த அப்பா அச்சிறுமியை அதட்டி தன்னோடு அழைத்துக்கொண்டு செல்கிறாள். அவர் கொண்டுவந்திருந்த மாம்பழத்தைப் பார்த்ததும் கிழவனை மறந்துவிட்டு, மாம்பழத்தைப்பற்றிப் பேசத் தொடங்குகிறாள்.

அவ்வளவு பெரிய நகரத்தில் வயதான ஒரு கிழவன் பிழைத்திருக்க வழியில்லாமல் போவது பெரிய சோகம். ஒருவேளை வயிற்றுக்கு வேளாவேளைக்கு உணவு கிடைத்திருந்தால் அவன் உயிருடன் இருந்திருக்கக்கூடும். ஆனால் அதற்கு வழியில்லாமல் போய்விட்டது. வாழ வந்த நகரம் அவனுக்கு மசானமாகிவிட்டது. ஏதோ ஒரு வகையில் மனிதர்களின் கருணையற்ற போக்கு அவனுடைய மரணத்துக்குக் காரணமாகிவிட்டது.

அத்தனை பெரிய மாநகரத்தில் ஒரே ஒரு சிறுமிக்கு மட்டுமே ”பட்டாணி வாங்கிக் குடு” என்று சொல்லிக்கொண்டே சில்லறையை அந்தப் பிச்சைக்காரனுக்காக கொடுக்கத் தோன்றுகிறது. விளையாட்டுச்சிறுமியாக இருந்தாலும் அவள் மட்டுமே கருணையின் உறைவிடமாக இருக்கிறாள். “ஏன் இங்க வந்து நிக்கற?” என்று கேள்வி கேட்கிற அச்சிறுமியின் தந்தையாருக்கு அந்தக் கிழவரின் பக்கம் திரும்பிப் பார்க்கக்கூட நேரமில்லை. அந்தப் பிச்சைக்காரன் விழுந்திருக்கும் இடத்திலிருந்து இரண்டடி தொலைவில் நடக்கிற எந்த மனிதருக்கும் அந்தத் திசையில் திரும்பிப் பார்க்க நேரமில்லை.

புதுமைப்பித்தன் கதையைத் தொடர்ந்து பிச்சைக்காரன் மீது கருணை காட்டும் சிறுமியை முன்வைத்திருக்கும் மற்றொரு சிறுகதையும் நினைவுக்கு வந்தது. அது சு.வேணுகோபால் எழுதிய ’நிரூபணம்’ என்னும் சிறுகதை.

இச்சிறுகதையில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான பாத்திரங்கள் எபி என்னும் பள்ளிச்சிறுமியும் அவளுடைய அம்மா கிறிஸ்டியும். எபி ஏற்கனவே படித்துக்கொண்டிருந்த பள்ளி வேறு. அவளுடைய பெற்றோர் அந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து புதிய பள்ளிக்கு மாற்றுகிறார்கள். புதிய பள்ளியின் நடைமுறை அவளுக்கு இன்னும் பிடி கிடைக்கவில்லை. தடுமாற்றத்தோடு இருக்கிறாள். அதன் விளைவாக மாதாந்திரத் தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைந்துவிடுகின்றன.

சோகமுடன் வீட்டுக்குத் திரும்பி வந்த காரணத்தைத் தெரிந்துகொண்டதும் சிறுமியின் தாயார் அவளுக்கு ஆறுதலாக இருப்பதற்குப் பதிலாக கண்டிக்கத் தொடங்குகிறார். அப்பா கோபம் கொண்டு அடிக்கவும் செய்கிறார்.

அன்றைய இரவுப் பிரார்த்தனை நேரத்தில் அம்மா தன் மகளுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறார். பிறகு மகளுக்கு வழக்கம்போல ஒரு கதை சொல்லி உறங்கவைக்கிறார்.

அம்மா இறைநம்பிக்கை உள்ளவர். சிறுமியும் இறைநம்பிக்கை உள்ளவளாக வளரவேண்டும் என்பதற்காக இறைநம்பிக்கை சார்ந்த கதைகளையே சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஏழைக்கு உதவும் இன்னொரு ஏழைக்கு இறைவன் காட்சியளித்து வரமளிக்கும் கதை. அந்த ஏழை கருணை நிறைந்தவன் என்பதால், பக்கத்துவீட்டில் வசிக்கும் பணக்காரர்களுக்கெல்லாம் காட்சியளிக்காத இறைவன் அவனுக்கு மட்டும் காட்சியளிக்கிறார் என்பது போன்ற கதை. இப்படி கருணையுடன் நடப்பவர்களுக்கு கடவுள் காட்சியளிப்பார் என்றும் கடவுள் அனைவருக்கும் வாழ்க்கையை அளிக்கும் கருணையுள்ளவர் என்றும் அடுத்தடுத்து கதைகளைச் சொல்லிச் சொல்லி அச்சிறுமியின் மனத்தில் ஒரு நம்பிக்கையைப் பதிய வைத்தபடி இருக்கிறார்.

சிறுமி இயல்பிலேயே கருணை நிறைந்தவளாக இருக்கிறாள். அம்மாவின் கதைகள் அவளை மேலும் கருணை கொண்டவளாக மாற்றுகிறது. 

ஒரு விடுமுறை நாளில் அம்மாவும் சிறுமியும் தேவாலயத்துக்குச் செல்கிறார்கள். தேவாலயத்தின் வாசலில் ஒரு பிச்சைக்காரன் உட்கார்ந்திருக்கிறான். அவன் உடலில் அங்கங்கே புண்கள் காணப்படுகின்றன. அந்த ரணத்தைப் பார்த்து அச்சிறுமியின் தாயார் அருவருப்படைகிறார். அவனைப் பாராததுபோல முகத்தைத் திருப்பிக்கொண்டு தேவாலயத்துக்குள் சென்றுவிடுகிறார்.  

அதே பிச்சைக்காரனை அம்மாவுடன் செல்லும் சிறுமி கருணையோடு பார்க்கிறாள். அவனுக்கு எதையாவது கொடுக்கவேண்டும் என்று அவள் நினைக்கிறாள். ஆனாலும் அம்மாவின் இழுத்த இழுப்புக்குக் கட்டுப்பட்டு அவர் பின்னாலேயே சென்றுவிடுகிறாள்.

தேவாலயத்தில் பிரார்த்தனை நடைபெறுகிறது. அம்மா கண் மூடித் தொழுகிறார். சிறுமியின் நினைவில் பிச்சைக்காரனின் முகம் மீண்டும் மீண்டும் வந்தபடி இருக்கிறது. தேவாலய உண்டியலில் போடுவதற்காக அம்மா கொடுத்த பத்து ரூபாய் அச்சிறுமியிடம் இருக்கிறது. சிறுமி மெதுவாக இருக்கையிலிருந்து எழுந்து சத்தமில்லாமல் தேவாலயத்தை விட்டு வெளியே வருகிறாள். பக்கத்தில் இருந்த கடைக்குச் சென்று தன்னிடம் இருந்த பத்து ரூபாயைக் கொடுத்து ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்குகிறாள். பிச்சைக்காரனிடம் சென்று அந்த பிஸ்கட் பாக்கெட்டைக் கொடுக்கிறாள். அவன் புன்னகைப்பதைப் பார்த்து அவளும் புன்னகைக்கிறாள். வேகமாக மீண்டும் தேவாலயத்துக்குள் செல்கிறாள். அப்போதுதான் அம்மா அந்தப் பணத்துக்கு கணக்கு கேட்டால் என்ன சொல்வது என்று யோசிக்கிறாள். அக்கணமே உண்டியலில் போட்டுவிட்டதாகச் சொல்லிக்கொள்ளலாம் என்ற எண்ணமும் அவள் நெஞ்சில் ஓடுகிறது. உடனே அவள் பதற்றம் மறைந்துவிடுகிறது.  அம்மாவின் அருகில் செல்ல நடந்துபோகிறாள்.

கருணையே வடிவான தெய்வத்தை எல்லா நேரமும் நினைத்துக்கொண்டிருக்கும் தாயார் தன் மகளின் கருணையை உணர்ந்துகொள்ளும் திறனற்றவராக இருக்கிறார். ஏதோ ஒன்று அவர் கண்களை மூடிவிடுகிறது. விவேகசிந்தாமணியில் ’தண்டாமரையின் உடன்பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்’ என்றொரு வரி உண்டு. அதுபோல குழந்தையின் வடிவத்தில் இருக்கும் தெய்வத்தைக் கண்டறியமுடியாதவராக இருக்கிறார் அவர்.

யோசனையில் மூழ்கியபடியே பயணம் செய்ததில் புதுச்சேரி நிலையம் வந்ததே தெரியவில்லை. ரயில் நின்றதும் ஒவ்வொருவராக இறங்கிச் செல்லத் தொடங்கினர். எல்லோரும் போகும் வரை காத்திருந்துவிட்டு கடைசியாக இறங்கி நிலையத்தைவிட்டு பொறுமையாக வெளியே வந்தேன்.

கடற்கரை அங்கிருந்து நடந்துசெல்லும் தொலைவில்தான் இருந்தது. சிறிது நேரம் காற்றாட அமர்ந்து அலைகளை வேடிக்கை பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று நினைத்து, கடலை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

வேணுகோபாலின் சிறுகதையில் பிச்சைக்காரன் முணுமுணுக்கும் ஆங்கிலச்சொற்றொடர் ஒன்றுண்டு. He Lives with Children என்பதுதான் அந்தத் தொடர். மீண்டும் மீண்டும் அத்தொடரை மனத்துக்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டேன். குழந்தைகள் நெஞ்சில் இறைவன் குடியிருக்கிறான் என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை. என் நேரடி அனுபவமும் கதைகள் வழியாகப் பெற்ற வாசிப்பனுபவமும் அந்த உண்மைக்கு நெருக்கமாகவே உள்ளன.

இன்றைய தாயாரோ, தந்தையாரோ நேற்றைய குழந்தைகள் அல்லவா? அப்படியென்றால் அவர்களுடைய குழந்தைப்பருவத்தில் அவர்கள் நெஞ்சில் குடியிருந்த இறைவன் அப்பருவத்தைக் கடந்ததும் எங்கே சென்றான் என்றொரு கேள்வி எழுந்தது.  குழந்தைகள் வளரவளர தன் நெஞ்சிலிருக்கும் இறைவனை ஏதோ பென்சிலைத் தொலைப்பதுபோல அல்லது புத்தகத்தைத் தொலைப்பதுபோல எப்படியோ தொலைத்துவிடுகிறார்கள் போலும் என நானாகவே ஒரு பதிலையும் கண்டுபிடித்தேன். நினைப்பதற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதுதானே உண்மை.

 

(சங்கு – ஏப்ரல் 2024)