அம்ருதா மாத இதழில் இருபத்தைந்து மாதங்களாக விட்டல்ராவ் ’தொலைபேசி நாட்கள்’ என்னும் தலைப்பில் எழுதிவந்த தொடரை கடந்த ஆண்டு நிறைவுசெய்தார். 2024 ஜனவரியில் தொடங்கிய புத்தகக்கண்காட்சிக்கு முன்பாக, அவருடைய புகைப்படத்தையே அட்டைப்படமாகக் கொண்டு அந்தத் தொடர் புத்தக வடிவில் வெளியானது. நல்ல கட்டமைப்பில் 256 பக்கங்களில் அந்தப் புத்தகத்தை அம்ருதா பதிப்பகமே வெளியிட்டிருந்தது.
’தொலைபேசி நாட்கள்’ நம்
காலத்தில் வெளிவந்திருக்கும் முக்கியமானதொரு ஆவணம் என்றே சொல்லவேண்டும். தன் பணிக்கால
அனுபவங்களோடு, சென்னைக்கு தொலைபேசி வந்த வரலாற்றையும் வளர்ந்த வரலாற்றையும் பல்வேறு
விதமான மனிதர்களைப்பற்றிய நினைவுகளையும் இணைத்து ஒரு மாபெரும் சித்திரத்தொகுப்பாக இந்தப்
புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் விட்டல்ராவ். இன்றைக்கு காணக் கிடைக்காத பல நிகழ்ச்சிகள் இப்புத்தகத்தில்
விவரிக்கப்பட்டுள்ளன. வரிசைப்படி சொல்லாத மாபெரும் நாவல் என்றும் அதைக் குறிப்பிடலாம்.
விட்டல்ராவின் படைப்பாக்கங்களில் இந்தத் தொகுப்புக்கு மிகமுக்கியமான இடமுண்டு.
”என் கூட டிப்பார்ட்மென்ட்ல
வேலை செஞ்சவங்க, இன்னைய தேதி வரைக்கும் என்னோடு நெருக்கமா பழகிட்டிருக்கிறவங்க, எனக்கு
மேல் அதிகாரிகளா இருந்தவங்கன்னு கொஞ்சம் பேரு சென்னையில இருக்காங்க. அவுங்களயெல்லாம்
நேருல சந்திச்சி, ஆளுக்கொரு புத்தகத்த என் அன்பளிப்பா கொடுக்கலாம்னு இருக்கேன்” என்று
சொன்னார் விட்டல்ராவ். அதற்காகவே பதிப்பகத்திலிருந்து கூடுதலான எண்ணிக்கையில் புத்தகங்களைக்
கேட்டு வாங்கி வைத்திருந்தார்.
அந்த நண்பர்களில் பாதிப்பேர்
அவருடைய வயதை ஒட்டியவர்கள். எஞ்சியவர்கள் அவரைவிட இரண்டு மூன்று வயது பெரியவர்கள்.
ஒருசிலர் ஓய்வு பெற்றோர் தொழிற்சங்கத்தில் இன்னும் ஊக்கத்துடன் செயல்பட்டு வந்தனர்.
அனைவரோடும் அவருக்கு நல்ல நட்பு இருந்தது. வாரத்தில் ஒரு முறையாவது விட்டல்ராவ் அவர்களை
அழைத்து பேசிவிடுவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அவர் அழைக்காத தருணங்களில் அவர்களே
அழைத்து நலம் விசாரிப்பதையும் பார்த்திருக்கிறேன்.
“எல்லாருடைய முகவரிகளையும்
கொடுங்க சார். க்ளாத் கவர்ல புத்தகத்தைப் போட்டு அழகா ஸ்பீட் போஸ்ட் செஞ்சிடலாம். அது
ரொம்ப்ப சுலபம்” என்றேன்.
”போஸ்ட்ல அனுப்பினா சீக்கிரமா
போய் சேர்ந்துடும்ங்கறது உண்மைதான் பாவண்ணன். ஆனா அவுங்க எல்லாரையும் ஒருமுறை சந்திக்கணும்னு
ஆசையா இருக்குது. சந்திச்சி பேசிட்டிருக்கும்போது இங்க பாருப்பா?, இப்படி ஒரு புத்தகம் எழுதியிருக்கேன்னு
எடுத்துக் காட்டிட்டு கொடுக்கணும். அப்ப, அவுங்க இன்னும் கொஞ்சம் சந்தோஷப்படுவாங்க,
இல்லையா? அத பார்க்கிறதுக்கு எனக்கும் சந்தோஷமா இருக்கும்.”
அவருடைய எண்ணம் எனக்குப்
புரிந்துவிட்டது. புத்தகம் கொடுப்பது என்பது ஒரு சின்ன காரணம் மட்டுமே. அதை முன்னிட்டு
அனைவரையும் சந்தித்து மனம் விட்டு உரையாடவேண்டும் என்று அவர் மனம் விரும்புகிறது என்பதைப்
புரிந்துகொண்டேன்.
”இந்தப் புத்தகங்களைக்
கொடுக்கறதுக்காகன்னு தனியா ஒரு பயணத்தைத் திட்டமிடறதுக்குப் பதிலா புத்தகக் கண்காட்சி
நடக்கிற சமயத்தில போனீங்கன்னா, நண்பர்களையும் பார்த்தமாதிரி இருக்கும். புத்தகக் கண்காட்சியையும்
பார்க்கலாமே சார். கூட ரெண்டு நாள் தங்கினா அதையும் பார்த்துட்டு வரலாம்”
என் ஆலோசனை அவரை யோசிக்கவைத்தது.
“அதுவும் நல்ல யோசனைதான். அப்படியே செய்யறேன்” என்றார்.
ஒரு வாரம் கழித்து உரையாடும்போது
“டிக்கட் புக் பண்ணிட்டேன். என்னோடு என் சம்பந்தியும் சென்னைக்கு வராரு. அவரு அவருடைய
உறவுக்காரங்க வீட்டுக்குப் போயிடுவாரு நான் என்னுடைய நண்பருடைய வீட்டுக்குப் போயிடுவேன்.
இந்த மாதிரி வரேன்னு அவருகிட்ட போன்ல சொன்னேன். எங்கயும் வெளியே போய் தங்கவேணாம். நேரா
நம்ம வீட்டக்கே வா. எத்தனை நாள் வேணும்னாலும் தங்கலாம்னு சொல்லிட்டாரு” என்றார்.
“அவரு வீடு எங்க இருக்குது?”
“கே.கே.நகர் மெட்ரோ ஸ்டேஷன்
பக்கத்துல”
“சிட்டிக்குள்ளயே இருக்கிற
இடம்தான். ஒரு பிரச்சினையும் இல்லை. ஒரு நாளைக்கு ஒரு திசைன்னு கணக்கு வச்சிகிட்டு
கெளம்புங்க. ரெண்டு பேரையோ, மூனு பேரையோ பொறுமையா சந்திச்சி பேசிட்டு வாங்க”
உரையாடும் போக்கில், எனக்கு
வேறொரு விஷயமும் ஞாபகத்துக்கு வந்தது. விட்டல்ராவுடைய பால்யகால நண்பரொருவர் பெங்களூரிலேயே சஞ்சய் நகரில் வசித்துவந்தார். அவரைப்பற்றி அடிக்கடி
தம் உரையாடலில் குறிப்பிட்டுச் சொல்வது வழக்கம். அவரைக் குறிப்பிட்டு “அவருக்கு புத்தகம் கொடுக்கலையா?
எல்லாமே சென்னை நண்பர்களுக்கு மட்டும்தானா?” என்று கேட்டேன். சாதாரணமாகத்தான் அதைக்
கேட்டேன். ஒருவேளை மறந்திருந்தால், அவருடைய பெயரையும் பட்டியலில் இணைத்துக்கொள்ளட்டும்
என்பதுதான் என் எண்ணம்.
நான் கேட்டதும் ஒருகணம்
திகைத்து உறைந்துவிட்டார் விட்டல்ராவ். பிறகு அடங்கிய குரலில் “சந்திரசேகரை நான் எப்படி
மறந்தேன்னு தெரியலை பாவண்ணன். ரெண்டு மூனு மாசமா நான் அவருகிட்ட பேசலை. எப்ப பேசினாலும்
அவருடைய பிள்ளைதான் எடுக்கிறான். என்னமோ ஒரு
பதில் சொல்லிட்டு வச்சிடறான். நேரிடையா பேச
முடியாததால, எப்படியோ அந்தப் பேர் ஞாபகத்துலேர்ந்து நழுவிட்டுது. நல்ல வேளை, நீங்க
அவரை ஞாபகப்படுத்தினீங்க. கண்டிப்பா அவருக்கும் ஒரு புத்தகம் கொடுக்கணும்” என்று ஒரு
பெருமூச்சோடு சொல்லிமுடித்தார்.
“அவரைப்பத்தி அடிக்கடி
நீங்க சொல்லியிருக்கீங்க சார். அதனாலதான் கேட்டேன்.”
“நீங்க சொன்னது ரொம்ப நல்லதா
போச்சி பாவண்ணன். இல்லைன்னா எனக்கு மறந்தே போயிருக்கும்”
“ஒருமுறை ஒரு கார் வச்சிகிட்டு
நீங்க எல்லோரும் உங்க கூட படிச்சவங்கள சந்திச்சி பேசறதுக்காகவே சேலம் போய், அங்கிருந்து
கேரளா வரைக்கும் போய்ட்டு வந்தீங்க இல்லையா?”
“ஆமாம். அவரேதான். அவர்
ஏற்பாடு செஞ்ச கார்லதான் போயிட்டு வந்தோம். அந்தத் திட்டத்தை போட்டவரே சந்திரசேகர்தான்.
நம்ம செட்ல யார்யார்லாம் இன்னும் தொடர்புல இருக்காங்கன்னு ஒரு நாள் பேச்சு வந்தது.
அப்படியே பேசிப்பேசி ஒரு ஆறு பேருடைய பெயர்களையும் எழுதி ஒரு பட்டியல் தயாரிச்சோம்.
உங்க வீட்டுக்கு நான் வந்துடவா சந்திரசேகர்னு
கேட்டேன். வேணாம் வேணாம், நீ வீட்டுலயே இரு. நான் வந்து உன்ன அழச்சிக்கறேன்னு அட்ரஸ
வாங்கிகிட்டாரு. பிறகு சஞ்சய் நகர்லேர்ந்து கார்ல வந்து என்ன பிக்கப் பண்ணிகிட்டாரு.
குப்பத்துல பாலன்னு ஒருத்தர் எங்க செட்காரர் இருக்காரு. பெரிய ஃபுட்பால் ப்ளேயர். அவரும்
வந்துட்டாரு. எல்லாரும் சேலத்துல போய் தங்கி நண்பர்களைப் பார்த்தோம். எங்க வீடுகள்
இருந்த இடங்கள், பள்ளிக்கூடம், சினிமா தியேட்டர் எல்லாத்தயும் பார்த்தோம். பாலக்காடுல
எங்க கூட படிச்ச பிரேம்குமார்னு ஒருத்தர் இருக்காரு. எல்லோரும் சேர்ந்து அவரைப் போய்
பார்த்து பேசிட்டு வந்தோம். எங்க வாழ்க்கையில மறக்கமுடியாத அனுபவம் அது. சந்திரசேகர்
இல்லைன்னா, அது சாத்தியமாகியிருக்காது”
“அந்தப் பயணத்தைப்பத்தி
ஏற்கனவே நீங்க சொல்லியிருக்கீங்க சார். எண்பது வயசுக்கு மேல ஒரு நண்பர்கள் குழு இப்படி
தனியா கெளம்பிப் போறதுலாம் ரொம்ப அபூர்வமான செய்தி. அந்த வயசுல பெரும்பாலான ஆட்களுடைய
முன்னுரிமை மாறியிருக்கும். அல்லது சுருங்கிப் போயிருக்கும். அந்த வயசுலயும் நட்புக்கு
முன்னுரிமை கொடுத்து சந்திக்கறது, பேசிக்கறதுலாம் ரொம்பரொம்ப அபூர்வம்.”
”முன்னுரிமைங்கறது என்ன
பாவண்ணன்? நடைமுறை சாத்தியங்களை கணக்கில எடுத்துகிட்டு நாமா வடிவமைச்சிக்கிற திட்டங்கள்தானே?
எனக்கு ஒரு இடத்துக்கு போக ஆசை இருக்கலாம். ஆனா தனியா போக வழி தெரியாது. அழைச்சிகிட்டு
போகவும் துணையில்லை. அப்படி ஒரு நிலைமை வந்தா, என்ன செய்யமுடியும், சொல்லுங்க? என்னுடைய
ஆசை தானாவே கடைசி வரிசைக்கு போகவேண்டிதுதான். அதுதானே இயற்கை. வாழ்க்கையில யாரையும்
எதற்காகவும் குறை சொல்லவே கூடாது”
சில கணங்கள் அமைதியாகவே
கழிந்தன. ஏதோ பழைய நினைவில் மூழ்கியவரைப்போல அவர் முகம் இருந்தது.
”அந்தக் கேரளா பயணத்துக்குப்
பிறகு ஒரு வருஷ இடைவெளியில நாங்க எல்லோரும் சேர்ந்து இன்னொரு பயணமும் போனோம் பாவண்ணன்.
உங்ககிட்ட நான் சொல்லலைன்னு நெனைக்கறேன்”
”அப்படியா சார்? அது எந்த
ஊருக்கு?” என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்.
“எங்க சேலத்துக்குத்தான்.
காலையில கெளம்பி காரிலயே போய் திரும்பி வந்தோம்”
“என்ன சார் விசேஷம்? ஏதாவது
கல்யாணமா?”
“நாங்க படிச்ச லிட்டில்
ஃப்ளவர் ஸ்கூலுடைய நூற்றாண்டு விழாவுக்குப் போனோம். அந்த ஸ்கூல் ஃபாதர் எங்களைவிட வயசில
சின்னவர். ஆனா எங்க நெம்பர எப்படியோ கண்டுபிடிச்சி பேசினாரு. இந்த மாதிரி விழா வச்சிருக்கோம்,
அவசியமா வரணும்னு சொன்னாரு. சந்திரசேகர்கிட்டயும் பேசியிருக்காரு. அவருதான் ரெண்டு
பேரும் சேர்ந்து போவலாம்ன்னு திட்டம் போட்டாரு”
“பழைய மாணவர்கள்லாம் வந்திருந்தாங்களா?”
“ஆமாம். எல்லோருக்குமே
வயசாகி முக அடையாளமே மாறி போயிடுச்சி. எல்லாரயும் ஞாபகப்படுத்திக்கறமாதிரி சில அனுபவங்கள்
இருக்குமில்லையா? அதச் சொல்லி ஞாபகமூட்டி ரெண்டு மூனு மணி நேரம் பழைய கதைகளை பேசிட்டிருந்தோம்.
அது ஒரு மாதிரியான இனிய அனுபவம். எங்க ஸ்கூல் ஸ்போர்ட்ஸ்ல எல்லாப் போட்டியிலயும் ஜெயிச்சி
கப் வாங்கற ஆள் ஒருத்தரு இருந்தாரு. அவரு பேரு சிவசுப்பிரமணியம். அந்த விழாவுல அவரைப்
பார்த்தேன். நல்லா உயரமா இருந்தாரு. போலீஸ் டிப்பார்ட்மென்ட்ல சூப்பிரன்டென்டா இருந்து
ரிட்டயராயிருக்காரு. அவரு கூட கொஞ்ச நேரம் பேசிட்டிருந்தோம்.”
“உங்க பள்ளிக்கூட நாட்கள்னு
சொன்னா கிட்டத்தட்ட அறுபது, அறுபத்தஞ்சி வருஷத்துக்கு முந்தைய காலம். பள்ளிக்கூடத்துல
நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும், இல்லையா சார்?”
“ஒரு மாற்றமும் இல்லை பாவண்ணன்.
அப்படியே இருந்தது அந்தப் பள்ளிக்கூடம். நான் சொல்றத நம்பறது உங்களுக்கு கஷ்டமா இருக்கும்.
ஆனா ஒவ்வொரு வார்த்தையும் நூத்துக்கு நூறு உண்மை. நாங்க ஃபோர்த் ஃபார்ம், ஃபிஃப்த்
ஃபார்ம் படிக்கறபோது எங்க க்ளாஸ் ரூம் எப்படி இருந்ததோ, அதே போலவே அன்னைக்கும் இருந்தது”
“அப்படியா?”
“ஆமாம். விழா முடிஞ்சதும்
வா, நம்ம க்ளாஸ் ரூம போய் பார்க்கலாம்னு சந்திரசேகர் கூப்ட்டாரு. அதே பழைய கட்டடம்.
பழைய தூண். பழைய கதவு. பழைய ப்ளாக்போர்ட். எதுவுமே மாறலை. எங்க க்ளாஸ் ரூமை கண்டுபிடிச்சி
உள்ள போனோம். சந்திரசேகர் எப்பவும் முதல் வரிசையில உக்காந்திருப்பாரு. இதான் என் சீட்னு
நேரா அங்க போய் உக்காந்துகிட்டாரு. நான் கொஞ்ச காலம் பின் வரிசையில உக்கார்ந்திருந்தேன்.
என் டெஸ்க்க கண்டுபிடிச்சி நான் உக்கார்ந்தேன். அந்த டெஸ்க் இருந்த இடத்தை கூட இத்தனை
வருஷத்துல யாரும் மாத்தவே இல்லை பாவண்ணன். எனக்கு உடம்பெல்லாம் ஒரு மாதிரி புல்லரிச்சி
போயிடுச்சி. நான் உட்கார்ந்திருந்த டெஸ்க்ல ஓரமா, அந்த காலத்துல ப்ளேடால கே.வி.ன்னு
செதுக்கியிருந்தேன். அது தேக்கு மரத்துல செஞ்ச டெஸ்க். அறுபத்தஞ்சி வருஷத்துக்கு முன்னால
பிளேடால செதுக்கின அந்த எழுத்து அப்படியே இன்னும் கல்வெட்டுல பொறிச்ச எழுத்து மாதிரி இருந்தது. பார்க்கப் பார்க்க எனக்கு சந்தோஷம் தாங்கலை.
இங்க வந்து பாரு சந்திரசேகர்னு அவர அழைச்சி காட்டினேன். அவரும் அத வெரலால தடவிப் பார்த்துட்டு
சிரிச்சாரு. ஸ்கூல் நூற்றாண்டு விழாவுக்கு போய் வந்தது மறக்கமுடியாத அனுபவம்.”
அந்தப் பள்ளிக்கால அனுபவத்தை
விட்டல்ராவ் விவரிக்க விவரிக்க, ஒவ்வொன்றும் என் நெஞ்சில் சிறுசிறு காட்சிகளாக விரிவடையத்
தொடங்கின. அடுத்த வாரமே எங்கள் ஊருக்குச் சென்று நான் படித்த பள்ளியில் நான் அமர்ந்திருந்த
டெஸ்க்கும் வகுப்பறையும் எப்படி இருக்குமென்று பார்க்கவேண்டும் போல ஒரு வேகமெழுந்தது.
“நீங்க நல்ல ரசிகர்ங்கறது
ஏற்கனவே தெரிஞ்ச விஷயம்தான். உங்கள மாதிரியே உங்க சந்திரசேகரும் நல்ல ரசிகரா இருந்திருக்காருன்னு
இப்பதான் புரியுது. அவருடைய அறிமுகம் ஏற்கனவே கிடைச்சிருந்ததுன்னா, நானும் அந்தப் பயணத்துல
உங்களோடு சேர்ந்து வந்திருப்பேன்” என்றேன். என் குரலில் என்னை அறியாமல் ஓர் ஏக்கம்
வெளிப்பட்டது.
“அதுக்கென்ன பாவண்ணன்?
இன்னொரு பயணத்துக்கு திட்டம் போட்டுடுவோம். சந்திரசேகர்கிட்ட சொன்னா போதும், எல்லாத்தையும் கச்சிதமா ஏற்பாடு செஞ்சிடுவாரு.”
“நாம எல்லோருமே சேர்ந்து
அதே லிட்டில் ஃப்ளவர் ஸ்கூலுக்கு போவோம் சார். உங்க கையால கே.வி.ன்னு செதுக்கின அந்த
டெஸ்க்க நானும் பார்க்கணும்.”
“சந்திரசேகருகிட்ட சொன்னா,
ரொம்ப சந்தோஷப்படுவாரு. இந்த வருஷமே ஒரு திட்டம் போடலாம். சந்திரசேகருக்கு பயணம் ரொம்ப
புடிச்ச விஷயம். செடிகள், மரங்கள் பத்தி புதுசுபுதுசா பல செய்திகள் சொல்வாரு. ஜுவாலஜி,
பாட்டனி சம்பந்தமா யு.ஜி.சி.க்காக அவரு ரெண்டு பெரிய பெரிய புத்தகங்கள் எழுதியிருக்காரு.
பல பல்கலைக்கழகங்கள்ல அந்தப் புத்தகங்கள் பாடபுஸ்தகமா இருக்குதுன்னு சொன்னாரு. அவரும்
நானும் போன இன்னொரு பயணம் கூட எனக்கு ஞாபகத்துக்கு வருது. சொல்லட்டுமா?”
“சொல்லுங்க சார்”
“அறுபத்திநாலாவது வருஷம்னு
நெனைக்கறேன். நான் மட்டும்தான் அப்ப சென்னையில தங்கி வேலைக்கு போயிட்டிருந்தேன். சேலத்துல
கிச்சிப்பாளையத்துல எங்க வீடு இருந்தது. சந்திரசேகர் வீடு டவுன் ரயில்வே ஸ்டேஷன்கிட்ட
இருந்தது. அவரும் சென்னையிலதான் வேலை செஞ்சிட்டிருந்தாரு. ஒரு பொங்கல் லீவுல நாங்க
ரெண்டு பேரும் சேலத்துல சந்திச்சிகிட்டோம். பேசிட்டிருக்கும்போதே நாளைக்கு காலையில
ஏற்காடுக்கு நடந்து போவலாமான்னு கேட்டாரு சந்திரசேகர். நானும் உடனே சரின்னு சொல்லிட்டேன்.
சேலத்துலேருந்து ஏற்காடு பதினெட்டு கிலோமீட்டர் தூரம். அதெல்லாம் எங்களுக்கு ஒரு விஷயமாவே
தோணலை. காலையில புறப்பட்டு நடக்க ஆரம்பிச்சிட்டோம். பேச்சு. பேச்சு. பேச்சு. ஒரே பேச்சுதான்.
ஒரு நாலு மணி நேரத்துல ஏற்காடு போய் சேர்ந்துட்டோம். வழியில யாரோ ஒருத்தர் கரும்பு
வித்துகிட்டிருந்தாரு. ஆளுக்கொரு கரும்ப வாங்கி கடிச்சி தின்னுகிட்டே நடந்துட்டோம்.
ஏற்காட்டுல ஒரு பெரிய ஏரி இருக்குது. நேரா அங்க போய் புல்வெளியில உட்கார்ந்து பேசிட்டிருந்தோம்.
அதுதான் எங்களுக்கு ஓய்வு. பிறகு பேசிகிட்டே
திரும்பி நடந்துவந்துட்டோம். மறக்கமுடியாத அனுபவம் அது. தண்டி யாத்திரை மாதிரி எங்களுக்கு
அது ஏற்காடு யாத்திரை. சந்திரசேகர் கூட அடிக்கடி அதைப் பத்தி அடிக்கடி சொல்லிட்டே இருப்பாரு.”
பயணத்தைப்பற்றி தொடங்கிய
உரையாடல் எப்படியோ பயண நூல்கள் பற்றியதாக திசைமாறியது. பிறகு புத்தகக்கண்காட்சியை ஒட்டி
வர இருக்கிற புத்தகங்கள் தொடர்பாக பேச்சு திரும்பியது. அரைமணி நேரம் பொழுது கரைவது
தெரியாமல் கரைந்துவிட்டது. அவர் வீட்டிலிருந்து விடைபெற்றுக்கொண்டு கிளம்பிவிட்டேன்.
இரு தினங்கள் கழித்து உரையாடும்போது
“சந்திரசேகர் சார்கிட்ட பேசிட்டீங்களா சார்? அட்ரஸ் கெடைச்சிதா?” என்று கேட்டேன்.
“ரெண்டுமூனு தரம் பேசினேன்
பாவண்ணன். சில சமயத்துல பதிலே இருக்கறதில்லை. சில சமயத்துல அவருடைய பிள்ளை எடுக்கறாரு.
ஆனா ரொம்ப சுருக்கமா அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. ரெஸ்ட் எடுத்துட்டிருக்காரு.
அவரு எழுந்த பிறகு நீங்க பேசினீங்கன்னு சொல்றேன்னு
சொல்லிட்டு வச்சிடராரு. அதுக்கப்புறம் அந்தப் பக்கத்துலேர்ந்து யாரும் பேசறதில்லை.
அதனாலயே அடுத்த தரம் பேசறதுக்கு சலிப்பா இருக்குது”
“அந்தக் காலமா இருந்தா
லேன்ட்லைன் நெம்பர வச்சி, டெலிபோன் டைரக்டரியில ரொம்ப சுலபமா அட்ரஸ தேடி எடுத்துடலாம்
சார். இப்ப எல்லாமே செல்போன் காலமா மாறிப்போச்சி. அதுக்கெல்லாம் இப்ப வாய்ப்பே இல்லை”
“செல்போன் நெம்பர வச்சி
அட்ரஸ கண்டுபிடிக்க வழி கிடையாதா?”
“ட்ரூ காலர்னு ஒரு வழி
இருக்குது. அத வச்சி பேரு என்னன்னு மட்டும் கண்டுபிடிக்கலாம். அவ்வளவுதான். அட்ரஸ கண்டுபிடிக்கமுடியாது”
”அப்ப என்ன செய்யலாம்?”
“இப்ப அமைதியா விடுங்க
சார், இன்னும் ரெண்டு நாள் போவட்டும். அதுக்கப்புறம் முயற்சி செஞ்சி பாருங்க” என்று
சொல்லிவிட்டு உரையாடலை முடித்துக்கொண்டேன்.
அதற்கிடையில் புத்தகக்கண்காட்சிக்கான
தேதி அறிவிப்பு வந்துவிட்டது. பயண ஏற்பாடுகளில் அவருடைய கவனம் திரும்பிவிட்டது.
எப்போதுமில்லாத அதிசயமாக,
புத்தாண்டையொட்டி சென்னையின் சுற்றுப்புறங்களில் பொழியத் தொடங்கிய மழை இரவும் பகலும்
தொடர்ந்து பொழிந்தபடியே இருக்கும் செய்தி திடீரென ஒரு கலவரத்தை ஊட்டியது. பெங்களூரிலும்
அந்த மழையின் தாக்கம் இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய செய்தி மனத்தை கலங்கவைத்தபடியே
இருந்தது.
ரயில் போக்குவரத்து நிறுத்தப்படலாம்
என்று புதிதாகப் பரவிய வதந்திதான் அதிக கவலையைக் கொடுத்தது. “அப்படியெல்லாம் ஆகாது
சார்” என்று நான் அவரை அழைத்து தைரியமூட்டியபடி இருந்தேன். “ஒருவேளை ரயில் ரத்தானாலும்
கவலை வேணாம் சார். எந்த விதமான இயற்கை இடர்களும் இல்லாத நேரமா பார்த்து வேற ஒரு சீட்டு
புக் பண்ணிக்கலாம்” என்று ஆறுதலாகச் சொன்னேன். ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல், அவர்
புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பாகவே மழை நின்றுவிட்டது. அவர் வசதியாக பயணம் செய்து சென்னையை
அடைந்துவிட்டார்.
ஏற்கனவே திட்டமிட்டபடி
தன் நண்பருடைய கே.கே.நகர் இல்லத்தில் தங்கியபடி அவர் சந்திக்க நினைத்திருந்த எல்லா
நண்பர்களையும் சந்தித்து நீண்ட நேரம் உரையாடி பொழுது போக்கினார் விட்டல்ராவ். எல்லோருக்கும்
‘தொலைபேசி நாட்கள்’ புத்தகத்தில் கையெழுத்திட்டு கொடுத்தார். ஒவ்வொரு பொழுதும் இனிமையான
சந்திப்புகளில் கழிந்தது. கிடைத்த ஓய்வில் நேரத்தை மிச்சம் பிடித்து ஒருமுறை புத்தகக்கண்காட்சிக்கும்
சென்று திரும்பிவிட்டார். புறப்படும் நாளன்று, புதிய நண்பரான கே.பி.நாகராஜன் அவரை கே.கே.நகரிலிருந்து
ஸ்டேஷன் வரைக்கும் அழைத்துவந்து பெங்களூரு ரயிலில் அமரவைத்துவிட்டுச் செல்ல, விட்டல்ராவ்
அன்று இரவு எட்டு மணியளவில் பெங்களூருக்கு வந்து சேர்ந்தார்.
ஜனவரி இறுதியில்தான் விட்டல்ராவை
நேரில் சென்று சந்திக்க முடிந்தது. புத்தகக்கண்காட்சியில் பல நண்பர்கள் அவருக்கு அன்பளிப்பாக
சில புத்தகங்களைக் கொடுத்திருந்தனர். கண்காட்சியை ஒட்டி பெங்களூரைச் சேர்ந்த பதிப்பகம்
அவருடைய வண்ணமுகங்கள் நாவலை மறுபதிப்பாகக் கொண்டுவந்திருந்தது. எல்லாப் பிரதிகளும்
அவருடைய எழுத்து மேசை மீது இருந்தன. நான் ஒவ்வொன்றாக எடுத்துப் பிரித்துப் பார்த்தேன்.
தம் நண்பர்களைப் பற்றியும் அவர்களுடைய அன்பான உபசரிப்புகளைப்பற்றியும் பாராட்டுணர்வோடு
சொன்னார் விட்டல்ராவ்.
“சந்திரசேகர் சார் தொடர்பு
கிடைச்சதா, இல்லையா? வீட்டு முகவரியை வாங்கனீங்களா?”
“அந்தக் கதையை என்ன சொல்றது
பாவண்ணன்? சென்னையிலேர்ந்து திரும்பியதிலிருந்து நான் பல முறை முயற்சி செஞ்சேன். அந்தப்
பக்கத்துல மணி அடிக்குதே தவிர, யாரும் எடுத்துப் பேசலை.”
“சரி விடுங்க சார். ரெண்டு
மூனு வாரம் போவட்டும். அதுக்கப்புறம் கேட்டுப் பார்க்கலாம்.”
“நேத்து சாயங்காலம் யாரோ
ஒருத்தரு பேசினாரு. குரலைக் கேக்கும்போது நடுவயசு ஆளு மாதிரி தோணுது. அவருக்கு கொஞ்சம்
உடம்பு சரியில்லை சார். ரெண்டுமூனு நாளைக்கு ஒரு தரம் ஆஸ்பத்திரிக்கு போய்போய் வரவேண்டியதா
இருக்குது. அதனால எல்லாருமே பரபரப்பா இருக்காங்கன்னு சொன்னாரு. சந்திரசேகருக்கு உடம்பு
சரியில்லைன்னு சொன்னதும் எனக்கு ஒரு மாதிரி ஆயிட்டுது. உடனே என்கிட்ட பேசினவருகிட்ட,
நானும் அவரும் ஸ்கூல் மேட்ஸ். எனக்கு அவரை பார்க்கணும்போல இருக்குது. வாட்சப்ல எனக்கு
அட்ரஸ அனுப்பினீங்கன்னா, ஒரு தரம் வந்து பார்க்கறதுக்கு வசதியா இருக்கும்னு சொன்னேன்.
சரிங்க சார், இப்பவே அனுப்பறேன்னு சொல்லிட்டு லைன கட் பண்ணினாரு. ஆனா அனுப்பலை. சரி,
இன்னைக்காவது வரும்னு நெனச்சேன். ஆனா, வரலை. என்ன செய்யறது, சொல்லுங்க”
“சரி சார். அவுங்க பக்கத்துலயும்
ஏதோ பதற்றமா இருக்கலாம். நாம ஏன் தப்பா நினைக்கணும்? அவரு சொல்ற மாதிரி ரெண்டுமூனு
வாரம் போவட்டும் சார். அதுக்கப்புறமா பார்த்துக்கலாம்”
விட்டல்ராவை வீட்டைவிட்டு
வெளியே அழைத்துவந்தேன். அவருடைய வீட்டுக்கு அருகிலேயே இருந்த ஆனந்தபவனுக்கு பேசிக்கொண்டே
நடந்து சென்றோம். காப்பி அருந்திவிட்டு மீண்டும் பேசிக்கொண்டே திரும்பினோம். விட்டல்ராவ் சற்றே இயல்புநிலைக்குத் திரும்பியிருந்தார்.
வண்ணமுகங்கள் நாவலை மறுபதிப்பாகக்
கொண்டுவந்திருந்த ஜெய்கிரி பதிப்பகம் சில வாரங்கள் இடைவெளியில் ’கலை இலக்கியச் சங்கதிகள்’
கட்டுரைத்தொகுதியையும் ‘காலவெளி’ நாவலையும் கொண்டுவந்துவிட்டது. அதன் பிரதிகளை பதிப்பகத்தின்
பொறுப்பாளரான சாய் ரமணா கொண்டுவந்து கொடுத்துவிட்டுச் சென்றதாக ஒருமுறை விட்டல்ராவ்
தொலைபேசியில் தெரிவித்தார். அன்று மாலை நான் விட்டல்ராவைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.
என்னைப் பார்த்ததும் ஏற்கனவே கையெழுத்திட்டு வைத்திருந்த புதிய புத்தகங்களை எடுத்து
என்னிடம் கொடுத்தார். நான் மகிழ்ச்சியோடு வாழ்த்து சொல்லிவிட்டு பெற்றுக்கொண்டேன்.
வண்ணமுகங்கள் நாவலை முன்வைத்து இணையத்தில் சிலர் விரிவாக எழுதியிருப்பதாகத் தெரிவித்தார்.
அது அவருக்கு மகிழ்ச்சியளித்திருப்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
அதற்குப் பிறகு அடுத்தடுத்து
நண்பர்கள் வீட்டுத் திருமணங்களுக்கும் உறவினர் வீட்டுத் திருமணங்களுக்கும் வெளியூர்களுக்குச்
செல்லவேண்டியிருந்தது. ஒவ்வொரு வாரமும் ஒரு பயணம். எந்த ஊரில் இருந்தாலும் ஒருசில நிமிடங்கள்
ஒதுக்கி விட்டல்ராவை அழைத்து உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன் நான். நேரில் சந்திப்பதுதான்
தள்ளித்தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.
ஒருநாள் காலை பத்தரை மணிக்கு
விட்டல்ராவ் தொலைபேசியில் அழைத்தார். வணக்கம் சொல்லிவிட்டு உரையாடலைத் தொடங்கினேன்.
“பாவண்ணன், என்னுடைய சஞ்சய்நகர் ஃப்ரண்ட் சந்திரசேகர் காலமாயிட்டார்” என்று தெரிவித்தார்.
ஒருகணம் நான் உறைந்து நின்றுவிட்டேன்.
சொல்லே எழவில்லை. மெதுவாக என்னை நானே திரட்டிக்கொண்டு
“என்ன சார் சொல்றீங்க? யார் சொன்னாங்க உங்களுக்கு?”
என்று கேட்டேன்.
“இப்பதான் ஃபோன் வந்திச்சி
பாவண்ணன். அவருடைய பிள்ளைதான் பேசினான். அப்பா போயிட்டாரு அங்கிள்ன்னான். இன்னைக்கே
எடுக்கறாங்களாம். கெளம்பி வந்து கஷ்டப்பட வேணாம் அங்கிள், உங்களுக்கு தகவலாதான் சொல்றேன்.
வேற ஒரு நாள்ல சந்திக்கலாம் அங்கிள்னு சொல்லிட்டு வச்சிட்டான். சந்திரசேகர் போயிட்டார்
பாவண்ணன். அவருக்கு கொடுக்க நினைச்ச புத்தகத்தை கடைசி வரைக்கும் என்னால கொடுக்கவே முடியாம
போயிடுச்சி. ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்குது பாவண்ணன்”
அவர் குரல் கம்மிக்கொண்டே
இருந்தது. “அப்படியெல்லாம் நினைக்காதீங்க சார். எத்தனை முறை அட்ரஸ குடுப்பா குடுப்பான்னு
நீங்க போன் பண்ணி கேட்டீங்க. அட்ரஸ் கிடைக்காததுக்கு நீங்க என்ன சார் செய்யமுடியும்? நீங்க குற்ற உணர்ச்சி அடையறதுக்கு
இதுல ஒன்னுமே இல்லை. மனசுக்குள்ள அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்னு வேண்டிக்குவோம்”
“அட்ரஸ் கெடைச்சிருந்தா,
புஸ்தகம் கொடுக்கிற சாக்கிலாவது அவரை ஒருமுறை நான் பார்த்து பேசியிருப்பேன். எனக்கு
அந்த வாய்ப்பு கிடைக்காம போயிடுச்சி”
பேச்சை நிறுத்திவிட்டு
த்ச் என்று நாக்கை சப்புக்கொட்டினார் விட்டல்ராவ். தொலைபேசியில் எனக்கு அது கேட்டது.
அவரை அந்தத் துயரத்திலிருந்து எப்படியாவது உடனடியாக மீட்கும் விதமாக பேச்சின் திசையை
சற்றே மாற்றவேண்டும் என்று தோன்றியது.
“சந்திரசேகர் சேலம் ஸ்கூல்ல
உங்களோடு ஒன்னா படிச்சவருன்னு சொன்னீங்களே.
சேலத்துல இருந்தவரு, பெங்களூருக்கு எப்படி வந்தாரு? அவரும் டெலிபோன் டிப்பார்ட்மென்ட்காரரா?”
என்று அக்கணத்துக்கு மனத்தில் தோன்றியதை ஒரு கேள்வியாகக் கேட்டேன்.
“அதைப் பத்தி தனியா சொல்லமுடியாது
பாவண்ணன். அவருடைய குடும்பக்கதையையே மொத்தமா
சொன்னாதான் அந்த விஷயம் புரியும்”
“அவ்வளவு பெரிய கதையா என்ன?
இருக்கட்டும், சொல்லுங்க சார். நான் ஃப்ரீயாதான் இருக்கேன்”
அந்தத் தூண்டுதல் சரியாக
வேலை செய்தது.
”அவுங்க அப்பா பேரு ஸ்ரீகண்டையா”
என்று தொடங்கினார். நான் உடனே “கன்னடப்பேரா இருக்குதே” என்று சந்தேகத்தோடு இழுத்தேன்.
“ஆமாமாம். கன்னடப் பேருதான். வீட்டுல கன்னடம் பேசறவங்கதான்” என்று அதை உடனடியாக உறுதி
செய்தார் விட்டல்ராவ்.
”அந்தக் காலத்துல சேலத்துல
எஸ்.கே.கபூர் கம்பெனின்னு ஒரு பெரிய சாயப்பட்டறை இருந்தது. பெரிய கம்பெனி. அதன் ஹெட்குவார்ட்டர்ஸ்
பம்பாய்ல இருந்தது. அதுலதான் ஸ்ரீகண்டையாவுக்கு
வேலை. செளத் ஜோனுக்கு அவருதான் ரெப்ரெஸன்ட்டேட்டிவ். ஹேண்ட்லூம், பவர்லூம் இருக்கக்கூடிய
இடங்களுக்கெல்லாய் போய் கலரிங் டைக்கு ஆர்டர்
வாங்கிட்டு வருவாரு. அவருக்கு பூர்வீகம் ஸ்ரீரங்கப்பட்டணம். அவருக்கு மல்யுத்தமும்
நல்லா தெரியும். சொந்த ஆசையினால ஒரு குருகிட்ட கத்துகிட்டவரு. கஞ்சிரா வாசிக்கிறதுலயும்
பெரிய கில்லாடி. பல கச்சேரியில வாசிச்சிருக்காரு. ஆனா எதிர்காலத்துல இதையெல்லாம் வச்சிகிட்டு ஒன்னும்
செய்யமுடியாதபடி ஒரு சூழல் வரலாம்னு அவருக்கு தோணியிருக்குது. அதனால நிரந்தர வருமானத்துக்காக
கபூர் கம்பெனி வேலையில சேர்ந்துட்டாரு. அவருக்கு ஒன்பது பிள்ளைங்க. எட்டு ஆண். ஒரே
ஒரு பெண். பெரிய குடும்பம்.”
அவர் குரல் மெல்ல மெல்ல
இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருப்பதை உணர்ந்ததும் அமைதியாக உணர்ந்தேன்.
”இன்னைய கண்ணோட்டத்துல
அது ஒரு பெரிய குடும்பம் மாதிரி தோணலாம். நாம எல்லோருமே ஒத்த புள்ளைய வச்சிருக்கோம்.
அதனால அப்படி தோணுது. ஆனா அன்னைய கண்ணோட்டத்துக்கு அது சாதாரண குடும்பம்தான், இல்லையா?”
”அது உண்மைதான். நிறைய
பிள்ளைகள் இருந்தாலும், அத்தனை பேரயும் அவர் நல்லா படிக்க வச்சாரு. ஒரு குறையும் இல்லாம
நல்ல நெலைமைக்கு வளர்த்துவிட்டாரு. ஒவ்வொரு பிள்ளையப் பத்தியும் சொன்னா, நீங்க ஆச்சரியப்படுவீங்க.
அந்த அளவுக்கு திறமைசாலிங்க.”
”அப்படியா? முதல் பிள்ளை
யாரு சார்?”
”அவரு பேரு கிருஷ்ணசாமி.
பெரிய ஆர்ட்டிஸ்ட். போட்டோகிராபர். உலகப்புகழ் பெற்ற படங்களையெல்லாம் அப்படியே அச்சு
அசலா கேன்வாஸ்ல வரைஞ்சி விப்பாரு. அவ்வளவு திறமை. அம்பது அறுபது வருஷம் தாங்கற மாதிரி
கேன்வாஸ தயார் பண்ணுவாரு. அதேபோல கச்சிதமா ஃப்ரேம் பண்ணி வச்சிருப்பாரு. ’ரமணகலா கேந்திரா’ன்னு
அவரே ஒரு ஹால் வச்சிருந்தாரு. அதுல அந்த ஓவியங்கள தீட்டி வச்சிருப்பாரு. தத்ரூபமா உண்மையான ஓவியத்தைப் போலவே இருக்கும். வெளிநாட்டுலேர்ந்து
வரவங்க எல்லாரும் அதை பார்த்துட்டு நாற்பதாயிரம் அம்பதாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிட்டு
போவாங்க. மல்லேஸ்வரத்துல சொந்தமா ஒரு வீடு வாங்கியிருந்தாரு. அவருக்கு ஒரே பொண்ணு.
அவங்களும் ஆர்ட் கத்துகிட்டு படம் போடறாங்க. மனைவி இறந்துட்டாங்க. அதுக்கப்புறம் இங்க
இருக்க அவருக்கு மனசு ஒட்டலை. நேரா பெங்களூருலேருந்து கெளம்பிப் போய் திருவண்ணாமலையில
ரமணாசிரமத்துல சேர்ந்துட்டாரு.”
”இப்பவும் அங்கதான் இருக்காரா?”
”ஆமாம். இப்ப 96 வயசாவுது.
அங்கதான் இருக்காரு.”
“ரெண்டாவது பிள்ள?”
“அவரு பேரு நஞ்சுண்டசாமி.
ஆல் இண்டியா ரேடியோ ஆர்ட்டிஸ்ட். அவரும் நல்லா ஓவியம்லாம் போடுவாரு. ஒருமுறை அவரும்
நானும் சேர்ந்து நிக்கிற மாதிரி படம் எடுத்தாரு.”
”இப்ப எங்க இருக்காரு?”
”இல்ல. காலமாயிட்டாரு”
”மூனாவது?”
”அவரு பேரு ராமசாமி. சேலம்
ஈரோடு எலெக்ட்ரிக்கல் போர்டுல வேலை செஞ்சாரு. நாடகம்லாம் எழுதுவாரு. நடிப்பாரு. அவரும்
இப்ப இல்லை. செத்துட்டாரு.”
”நாலாவது?”
”அவரு பேரு சோமசுந்தரம்.
படிப்புல கொஞ்சம் சராசரியான ஆள். ஒவ்வொரு வகுப்புலயும் ஒன்னு ரெண்டு வருஷம் தங்கித்தங்கித்தான்
மேல வந்தாரு. ஒரு கட்டத்துல, என் க்ளாஸ்ல என் கூடவே படிச்சாரு. பிற்காலத்துல டிகிரி
முடிச்சி டீச்சர் ட்ரெய்னிங் பாஸ் பண்ணிட்டு ஸ்கூல் டீச்சரா வேலை பார்த்தாரு.”
”அஞ்சாவது?”
”அவருதான் சந்திரசேகர்.
சேலத்துல என் கூட படிச்சவரு. என் க்ளாஸ்மெட். நல்லா படிப்பாரு. நல்ல ரசனை உண்டு. ஸ்கூல்
படிப்புக்கு மேல என்னால படிக்க முடியலை. அவர் காலேஜ்ல சேர்ந்து படிச்சாரு. டிகிரில
ஜுவாலஜி எடுத்து படிச்சாரு. விவேகானந்தா காலேஜ்ல லெக்சரரா வேலைக்குச் சேர்ந்தாரு. அப்புறம்
ப்ரபஸரா இருந்து, துறைத்தலைவராவும் இருந்து ரிட்டயரானாரு. அதுக்கப்புறமா பெங்களூருக்கு
வந்து சஞ்சய் நகர்ல வீடு வாங்கி, பெங்களூருலயே செட்டிலாயிட்டாரு”
”ஓ. அவருக்குப் பின்னணியா
இவ்வளவு கதை இருக்குதா? சரி, ஆறாவது பிள்ளை?”
”ஆறாவது பொண்ணு. கிரிஜான்னு
பேரு. டிகிரி முடிச்சி கல்யாணம் பண்ணிகிட்டு அமெரிக்காவுக்கு போயிட்டாங்க.”
”ஏழாவது?”
“அவரு பேரு தியாகராஜன்.
அவரும் பட்டப்படிப்பு முடிச்சவர். மகாராஷ்டிரா பேங்க்ல வேலை செஞ்சிட்டிருந்தாரு. என்னமோ
தெரியலை, திடீர்னு ஒரு நாள் துறவியா கெளம்பி போயிட்டாரு. எங்க எங்கயோ சுத்தி அலைஞ்சிட்டு,
அண்ணாமலை ஆசிரமத்துல சுவாமி ஹம்சானந்தான்னு பேர மாத்தி வச்சி்கிட்டு அங்கயே தங்கிட்டாரு.”
“எட்டாவது?”
”அவரு பேரு பாண்டுரங்கன்.
டிகிரி படிச்சாரு. ஆனா வேலைக்கு போகலை. அவரும் பெங்களூருலதான் இருக்காரு. ஆரித்ரா ப்ரிண்டிங்
ப்ரஸ் வச்சிருக்காரு.”
“ஒன்பதாவது?”
“அவரு பேரு சிவக்குமார்.
அவரும் அமெரிக்காவுலதான் இருக்காரு.”
“சந்திரசேகர் சாரை நான்
பார்த்ததில்லை. நீங்க சொல்லி சொல்லித்தான் அவரைப் பத்திய உருவத்தை நான் கற்பனையில உருவாக்கிகிட்டேன்.
அவரோடு சேர்ந்து உங்க பழைய ஸ்கூல பார்க்க போகலாம்னு சொன்னீங்களே, ஞாபகமிருக்குங்களா?
நீங்க சொன்னதிலிருந்து நான் பலமுறை அந்தப் பயணத்தை கற்பனை செஞ்சி பார்த்துட்டே இருந்தேன்.
இப்ப, இனிமேல அந்த வாய்ப்பே இல்லாதபடி அவரு போய் சேர்ந்துட்டாரு. நமக்குக் கொடுத்து
வச்சது அவ்வளவுதான்னு நெனச்சிக்கவேண்டியதுதான்.”
“அவருக்கு பயணத்துல மட்டுமில்லை
பாவண்ணன், அவருக்கு என்னை மாதிரியே சினிமா பார்க்கிறதுலயும் ஆர்வம் உண்டு. என்ன அவரும்
நானும் சின்ன வயசில ஒன்னா நிறைய சினிமா பார்த்திருக்கோம். எங்க ஸ்கூல்ல அப்ப ஒரு இங்க்லீஷ்
டீச்சர் இருந்தாரு. ஊருக்குள்ள எந்த தியேட்டர்லயாவது நல்ல இங்க்லீஷ் படம் போட்டாலும்,
அவரு முதல்ல பார்த்துட்டு வந்து எங்கள போய் பாருங்கடான்னு சொல்வாரு. அப்படி நானும்
சந்திரசேகரும் நிறைய படம் பார்த்திருக்கோம்”
“என்னென்ன படங்கள்னு ஞாபகம்
இருக்குதா சார்?’
“To kill a mocking
bird னு ஒரு படம். நீங்க பார்த்திருக்கீங்களா?”
”இல்லை சார். நான் அந்த
நாவலைத்தான் படிச்சிருக்கேன்.”
“நல்ல படம். ராபர்ட் முல்லிகன்னு
ஒரு டைரக்டர் நிறைய நீதிமன்றக் காட்சிகளைக் கொண்ட படம். நிறவெறி தொடர்பான கதை. நிறவெறி
தொடர்பா இன்னொரு படத்தையும் எங்க சார் சொல்லித்தான் நானும் சந்திரசேகரும் பார்த்தோம்.
படத்துடைய பேரு Sergeant Ruteledge. ஜான் ஃபோர்ட்னு ஒரு டைரக்டருடைய படம். அற்புதமான
படம். கோர்ட் மார்ஷியல்னா என்னன்னு அந்தப் படத்தைப் பார்த்துட்டுத்தான் தெரிஞ்சிகிட்டோம்.
அப்புறம் East of Eaden, Grapes of Wrath, Stage coach எல்லாமே நானும் சந்திரசேகரும்
சேர்ந்து பார்த்ததுதான். இப்படி நிறைய படங்கள் பார்த்தோம்”
அந்தப் படங்கள் பற்றியும்
அவற்றின் கதைச்சுருக்கம் பற்றியும் சொல்லிக்கொண்டே இருந்தார் விட்டல்ராவ். திடீரென
அவருடைய உற்சாகம் குறைந்து தரையைத் தொட்டுவிட்டது. ”த்ச். திடீர்னு எல்லாத்தயும் ஞாபகமா விட்டுட்டு
போயிட்டார் சந்திரசேகர். கடைசியா அவருடைய முகத்தைப் பார்க்கிறதுக்குக்கூட எனக்கு அதிர்ஷ்டம்
இல்லாம போயிடுச்சி. அதை நெனச்சாதான் ரொம்ப சங்கடமா இருக்குது” என்றார்.
“அதையே நெனச்சி வருத்தப்படாதீங்க
சார். அவுங்ககிட்ட நீங்க அட்ரஸ கேட்டுகிட்டேதான் இருந்தீங்க. அவுங்க அனுப்பலை. அதுக்கு
நீங்க என்ன செய்யமுடியும், சொல்லுங்க? ஒரு பத்துநாள் கழியட்டும் சார். இன்னொருமுறை
பேசிப் பார்த்து அட்ரஸ வாங்குங்க. ஒரு ரோஜா மாலை வாங்கிட்டு போய் துக்கம் விசாரிச்சிட்டு
அவருடைய படத்துக்குப் போட்டுட்டு வருவோம். உங்களுக்கும் ஆறுதலா இருக்கும்”
நான் சொன்னதை ஏற்றுக்கொள்ளும்
விதமாக “அப்படித்தான் செய்யணும் பாவண்ணன். அது நல்ல ஐடியா” என்றார் விட்டல்ராவ். அத்துடன்
நான் உரையாடலை முடித்துக்கொண்டேன்.
(அம்ருதா – மே 2024)