Home

Sunday 19 May 2024

இனிப்பும் கசப்பும்

                                                

 

’ரசிகமணி டி.கே.சி. கடிதங்கள்’ என்றொரு புத்தகத்தைப் படித்தேன். ரசிகமணி அவர்கள் தன் காலத்தில் தன்னோடு நெருக்கமாக இருந்த 27 பேர்களுக்கு எழுதிய கடிதங்கள் இப்புத்தகத்தில் தொகுக்கபட்டிருந்தன. இராஜாஜி, கல்கி, தேசிய விநாயகம் பிள்ளை, மகராஜன் போன்ற பல ஆளுமைகளும் இப்பட்டியலில் அடங்குவர். ரசிகமணி அவர்களின் பேரனான தீப.நடராஜன் எல்லாக் கடிதங்களையும் தேடித் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். படிக்கப்படிக்க, வரலாறே இரண்டாகப் பிளந்து என்னை உள்ளே இழுத்துச் சென்றுவிட்டது போல இருந்தது. ஏராளமான பழங்காலத்துச் செய்திகள். ஒருவர் கேள்வி கேட்க, இன்னொருவர் பொறுமையாக விளக்கம் அளிக்கிறார். படிக்கப் படிக்க பொழுதுபோனதே தெரியவில்லை. அந்தக் காலத்து எழுத்தாளர்களின் ஆர்வங்களும் ஈடுபாடும் மலைக்கவைத்தன.

அந்த வார இறுதியில் விட்டல்ராவைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அவரிடம் அந்தப் புத்தகத்தைப்பற்றியும் டி.கே.சி. எழுதிய கடிதங்கள் பற்றியும் சொன்னேன்.

“அந்தக் காலத்துல டி.கே.சி.ன்னு சொன்னாவே கம்பராமாயணத்துல இடைச்செருகல் இருக்குதுன்னு சுட்டிக் காட்டியவர்னு ஒரு வார்த்தையில சுருக்கி சொல்லிட்டு போயிடுவாங்க. அது தப்பான அணுகுமுறை. தமிழ்ச்சூழல்ல ஒரு இலக்கியப்படைப்பை அணுகி மனசுக்கு நெருக்கமாக்கிக் கொள்கிற வழிமுறையை சொல்லிச் சொல்லி நிறுவியர் அவர்” என்றார் விட்டல்ராவ். தொடர்ந்து ”ஒரு பத்து நாள் அவரோடு பேசிப் பழகினாவே போதும், ரசனையை வளத்துக்கறதுக்கான பயிற்சி தானா வந்துடும்னு சொன்ன பல பேரப் பாத்திருக்கேன். பலருக்கும் எழுதி எழுதி, அவங்களயும் எழுத வச்சி, கடைசியா கடித இலக்கியம்னு ஒரு வகையையே அவர் உருவாக்கிட்டாரு” என்றார்.

“நீங்க எழுத்தாளர்களுக்கோ, வாசகர்களுக்கோ கடிதம் எழுதியிருக்கீங்களா சார்?” என்று கேட்டேன்.

“எழுதியிருக்கேன். ஆனால் அதெல்லாம் சின்னச்சின்ன கடிதங்கள். எல்லாமே சாதாரண தகவல் பரிமாற்ற கடிதங்கள்தான். அதுல இலக்கிய விவாதம்லாம் கிடையாது”

சில கணங்கள் எதையோ யோசிப்பவர் போல அமைதியாக இருந்தார் விட்டல்ராவ். “நான் கடிதம் எழுதத் தொடங்கிய காலம் எழுத்தாளர்களுக்கும் வாசிக்கிறவர்களுக்கும் எழுதறதுக்கு முன்னாலயே தொடங்கிட்டுது. அப்பா, அம்மாவுக்கு கடிதம் எழுத ஆரம்பிக்கறதுக்கு முன்னாலயே என் கூடப் படிச்ச ஒரு நண்பனுக்கு ஸ்கூல் படிக்கிற காலத்துல ஒரு கடிதம் எழுதினேன். அதான் நான் எழுதிய முதல் கடிதம்” என்று சொல்லிவிட்டு புன்னகைத்தார்.

“நண்பனுக்கா?” என்று ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தேன். பிறகு ”அப்ப என்ன வயசு இருக்கும் சார் உங்களுக்கு. என்ன படிச்சிட்டிருந்தீங்க?” என்று கேட்டேன்.

“அப்ப நான் மூனாங்கிளாஸ் படிச்சிட்டிருந்தேன். தர்மபுரியில ஸ்ரீராம வித்யாசாலைன்னு ஒரு ஸ்கூல் இருந்தது. அதுலதான் படிச்சிட்டிருந்தேன். திடீர்னு எங்க அப்பா தர்மபுரியிலேருந்து ஓமலூருக்கு இடம் மாறி வந்துட்டார். அதனால நாங்களும் ஓமலூருக்கு வந்துட்டோம். வேற வழி இல்லாம, நானும் ஓமலூருல புதுசா ஒரு ஸ்கூல்ல சேர்ந்துட்டேன்”

நான் ஆர்வத்தோடு அவர் சொன்னதைக் கேட்கத் தொடங்கினேன்.

“தர்மபுரி ஸ்கூல்ல கரீம்னு ஒரு பையன் இருந்தான். எங்கூட நல்லா நெருக்கமா பழகுவான். என்னுடைய பெஸ்ட் ஃப்ரென்ட். அவுங்கப்பா குதிரை வண்டி ஓட்டறவரு. எங்க ரெண்டு பேருடைய வீடுகளும் அடுத்தடுத்த தெருவுலதான் இருந்தது. நாங்க அந்த ஊரை விட்டு கெளம்பற சமயத்துல நீ ஊருக்கு போன பிறகு எனக்கு அடிக்கடி ஸ்கூல் அட்ரஸ்க்கு லெட்டர் எழுதுடா விட்டல், நானும் உனக்கு எழுதறேன்னு சொன்னான். நானும் பெரிய மனுஷனாட்டம் சரிடா கரீம்னு சொன்னேன். அப்புறமா ஒரு சந்தேகம் வந்து  ஸ்கூல் அட்ரஸ்க்கு ஏன்டா எழுதச் சொல்றேன்னு கேட்டேன். அப்பதான்டா என் கைக்கு நேரிடையா கெடைக்கும்னு சொன்னான். சரி சரினு தலையாட்டிட்டு வந்துட்டேன்”

“ஓ, அதுதான் நீங்க எழுதிய முதல் கடிதமா?”

“ஆமாம்” என்று புன்னகைத்தார் விட்டல்ராவ். ”ஓமலூருக்கு வந்ததுமே  ஒரு புது ஸ்கூல்ல என்ன சேத்துட்டாரு எங்க அப்பா. ரெண்டு மூனு வாரத்துல ஸ்கூல் நல்லா பழகிடுச்சி. புது ஸ்கூல் பரபரப்புல கரீமுக்கு கடிதம் எழுதற விஷயம் மறந்தே போயிட்டுது. திடீர்னு ஒரு நாள் ஞாபகம் வந்துட்டுது. உடனே போஸ்ட் ஆபீஸ்க்கு போய் ஒரு தபால் கார்டு வாங்கியாந்தேன். அட்ரஸ்னு சொன்னா அத இங்கிலீஷ்லதான் எழுதணும்னு எனக்கு அந்தக் காலத்துல ஒரு நம்பிக்கை. அதனால அந்த போஸ்ட் கார்ட எங்க அக்காகிட்ட கொடுத்து அட்ரஸ் எழுதிக் குடுக்கான்னு சொன்னேன். யாருக்குடா கார்டுன்னு ரொம்ப அதிகாரமா கேட்டாங்க அக்கா. என் ஃப்ரெண்ட் கரீமுக்குன்னு நான் பெருமையா நெஞ்ச நிமுத்திகிட்டு சொன்னேன். ஓ, லெட்டர்லாம் போடற அளவுக்கு ஒனக்கு பெரிய ஃப்ரெண்டா அவன்னு கிண்டல் பண்ணிகிட்டே கார்ட வாங்கிகிட்டாங்க. இங்கிலீஷ்ல, இங்கிலீஷ்ல எழுதணும்னு நான் அழுத்தம் கொடுத்து சொன்னேன். சரிடா, அட்ரஸ சொல்லுடானு அதட்டினாங்க அக்கா.”

“ம்”

“கரீம், தர்ட் ஸ்டேண்டர்ட், ஏ செக்‌ஷன், ஸ்ரீராம வித்யாசாலை, தர்மபுரின்னு ஒரு ஒரு வரியா சொன்னேன். சொல்ல சொல்ல அவுங்களும் எழுதி முடிச்சாங்க. அப்புறம் எழுதறதுக்கு என்னடா விஷயம் வச்சிருக்கே, சொல்லு, அதையும் எழுதறேன்னு என்ன பார்த்தாங்க. அதெல்லாம் வேணாம், அதை நானே எழுதுவேன், எங்கிட்ட குடுத்துடுன்னு கேட்டேன். நீ எழுதினா தப்புதப்பா எழுதுவடா, நான் திருத்தமா எழுதறேன், சொல்லுடான்னு அதட்டல் போட்டாங்க. நானே என் கையால எழுதறேன், நீ வேணும்னா தப்பு இருக்கிற இடம் வந்தா சொல்லு, திருத்தறேன்னு சொல்லி கார்டயும் பென்சிலயும் கையில வாங்கிட்டேன்.”

“அப்புறம்?”

“எடுத்ததுமே அன்புள்ள கரீமுக்குன்னு  கொட்டை எழுத்துல வேகமா எழுதினேன். இவ்ளோ பெரிய எழுத்துல எழுதுனா நாலு வரி கூட கார்டுல எழுதமுடியாது, சின்ன எழுத்துல எழுதுடான்னு தலையில குட்டினாங்க அக்கா. நான் முனகிகிட்டே எழுதனத ரப்பரால அழிச்சிட்டு மறுபடியும் எழுதினேன். எப்படியோ ஓமலூர் ஸ்கூல் பத்தி ஒரு நாலு வரி யோசிச்சி எழுதிமுடிச்சி கடைசியா இப்படிக்கு உன் அன்புள்ள நண்பன் விட்டல்னு கையெழுத்து போட்டு போஸ்ட் ஆபீஸ்க்கு எடுத்தும் போயி தபால் பெட்டியில போட்டுட்டு வந்துட்டேன்.”

கடிதம் எழுதிய அனுபவத்தை ஒரு கதையைச் சொல்வதுபோல சொன்னார் விட்டல்ராவ். மொழியாலேயே ஒரு காட்சியைச் சித்தரித்துவிடும் அவருடைய ஆற்றலை அவரைத் தவிர வேறு எவரிடத்திலும் நான் கண்டதில்லை.

“கரீம் பதில் கடிதம் போட்டாரா?”

“பதில் வந்தது. ஆனா அதுக்கு முன்னால பெரிய பெரிய விஷயம்லாம் நடந்துட்டுது”

“என்ன சார்?”

“தர்மபுரிக்கு கார்ட் போனதும் முதல்ல ஸ்கூல் ஹெட்மாஸ்டர்கிட்ட போவும். அங்க இருக்கிற கிளார்க்குதான் எல்லாத்தயும் பிரிச்சி செக்‌ஷன் வாரியா எடுத்து வச்சிகிட்டு குடுப்பார். கரீமுக்குரிய கார்ட எடுத்துட்டு வந்த கிளார்க்கு மூனாங்கிளாஸ் ரூமுல உக்கார்ந்திட்டிருந்த கரீம பேர்சொல்லி அழச்சி இந்தாடான்னு குடுத்துட்டு போயிட்டார். என்னடா கார்டு, யாருடா போட்டாங்கன்னு கிளாஸ்ல இருந்த பசங்க எல்லாரும் கரீம மொச்சிகிட்டாங்க. என் ஃப்ரென்ட் போட்ட லெட்டர்டான்னு எல்லார்கிட்டயும் பெருமை அடிச்சிகிட்டான். எல்லாருமே கூட்டமா உக்காந்து அந்த லெட்டர படிச்சாங்களாம். அந்த நேரத்துல அந்த வகுப்புக்கு வரவேண்டிய மிஸ் வந்துட்டாங்க”

“பெரிய திருப்புமுனை மாதிரி இருக்குதே சார்”

“ஆமாம். திருப்புமுனைதான். எல்லாரும் அவுங்கவுங்க இடத்துல உக்காராம எதுக்குடா இப்படி கூட்டமா உக்காந்திருக்கீங்கன்னு மிஸ் கேட்டாங்க. எல்லா பசங்களும் ஒன்னா சேர்ந்து ஒரே குரல்ல கரீமுக்கு லெட்டர் வந்திருக்குது மிஸ்னு சத்தமா சொல்லியிருக்காங்க. அந்த மிஸ் கரீம பக்கத்துல கூப்புட்டு என்னடா லெட்டர்னு கேட்டாங்க. அவனும் அந்த கார்ட மிஸ்கிட்ட காட்டினான். மிஸ் அத வாங்கிப் படிச்சிட்டு “குட், நண்பர்களுக்கு இப்படித்தான் எழுதிப் பழகணும்”னு சொல்லி பாராட்டினாங்க. நீங்களும் கரீம பார்த்து கத்துக்கங்கடான்னு சொன்னாங்க. அதக் கேட்டு கரீமுக்கு ரொம்ப பெருமை. நீயும் பதில் கடிதம் போடு கரீம்னு அவனை உற்சாகப்படுத்தினாங்க. நானும் அவன உற்சாகப்படுத்த லெட்டர் எழுதறேன்டானு சொல்ண்ட்டு அந்த கார்டுல இருந்த என்னுடைய முகவரியை மட்டும் ஒரு தாள்ல எழுதி வச்சிகிட்டாங்க.”

“நெஜமாவே மிஸ் கடிதம் போட்டாங்களா?”

“ஆமாம். ஒரு பத்து நாள் கழிச்சி மிஸ் போட்ட கடிதம், கரீம் எழுதிய கடிதம் ரெண்டும் ஒன்னா வந்தது. எனக்கு ஒரே சந்தோஷம். நானும் அக்காவும் அந்த கார்டுங்கள மாறிமாறி படிச்சோம். அக்காவுக்கு அத நம்பவே முடியலை. எங்கள பொறுத்தவரைக்கும் இப்படிலாம் லெட்டர் போட்டு லெட்டர் வர்ரது சினிமாவுல நடக்கிற கதைன்னு நெனச்சிட்டிருந்தோம். அதனாலயே அந்த லெட்டர்ங்கள எடுத்து எடுத்து  படிச்சிட்டிருந்தோம்.”

“மிஸ் என்ன எழுதியிருந்தாங்க?”

“மாணவர்களுக்கிடையில் இப்படி கடித வழியில் நட்பு வளர்வதைப் பார்க்க மகிழ்ச்சியளிக்கிறது. நீ நன்றாகப் படித்து முன்னேற கர்த்தர்  உனக்குத் துணையாக இருப்பார்னு ஒரு நாலு வரி சுருக்கமா எழுதி பெஸ்ஸின்னு கையெழுத்து போட்டிருந்தாங்க.”

“க்ரேட் சார்”

“அதப் படிச்சதும் எனக்கும் ஒரே பரவசமா இருந்தது. உடனே நானும் அவுங்களுக்கு பதில் கடிதம் எழுதணும்னு நெனச்சேன்.  மறுநாளே போஸ்ட் ஆபீஸ்க்கு போய் ரெண்டு கார்டுங்கள வாங்கி வந்துட்டேன். வழக்கம்போல அக்கா அட்ரஸ்ங்கள இங்கிலீஷ்ல எழுதி குடுத்தாங்க. பெஸ்ஸி மிஸ்க்கு ஒரு கடிதம். கரீமுக்கு ஒரு கடிதம். ஒவ்வொன்னுலயும் ஒரு பத்து வரி எழுதி பக்கத்த நிரப்பினேன். அப்புறம் கொண்டு போய் போஸ்ட் ஆபீஸ்ல போட்டுட்டு வந்துட்டேன்.”

“பதில் வந்ததா?”

“ஒவ்வொரு நாளும் நான் பதிலுக்காக காத்திருந்தேன். ஆனா ஒன்னுமே வரலை. ஒரு பத்து நாள் கழிஞ்ச பிறகு கரீம் எழுதிய கடிதம் மட்டும் வந்தது. மிஸ் கடிதம் ஒன்னும் வரலை.”

“அப்படியா? கரீம் ஒன்னும் எழுதலையா?”

“கரீம் கடிதத்துல மிஸ் பத்தி எந்தக் குறிப்புமே இல்லை. என்ன விஷயம்னு எனக்கு ஒன்னும் புரியலை. கொஞ்ச நாள் குழப்பமா இருந்தது. அப்புறம் படிப்பு, பரீட்சை, வீடுன்னு கவனம் மாறிட்டதால அந்த விஷயத்தையே மறந்துட்டேன்.”

”ஏன் மிஸ் கடிதம் போடலையாம்? கரீம் அத பத்தி ஒன்னுமே எழுதலையா?”

“அத பத்தி அவன் மூச்சே விடலை. ஆனா சில வருஷங்கள் கழிச்சி அவனை சந்திச்ச சமயத்துல அந்த மிஸ் பத்தி சொன்னான்”

“என்ன சொன்னாரு?”

“நான் போட்ட லெட்டர் ஸ்கூல் அட்ரஸ்க்கு போய் சேந்ததுமே வழக்கம்போல ஆபீஸ் ரூமுக்கு போயிருக்குது. கார்டுங்கறதால அங்க இருந்த ரெண்டு மூனு ஸ்டாஃப்ங்க அத உடனடியா படிச்சிட்டாங்க. பெஸ்ஸி மிஸ்க்கு யாரோ ஒரு ஆளு லெட்டர்லாம் எழுதுறான்னு யாரோ கண்ணு காது மூகுல்லாம் வச்சி ஸ்டாஃப் ரூம்ல வதந்திய பரப்பிட்டாங்க. ஸ்டாஃப் ரூம் பேச்சு கொஞ்சம் கொஞ்சமா ஸ்கூல் முழுக்க பரவிடுச்சி. அந்தச் சம்பவம் மிஸ்க்கு ரொம்பவும் அவமானத்தை தேடி குடுத்துட்டுது. அந்த வருத்தத்துலதான் மிஸ் கடிதம் போடலைன்னு சொன்னான்”

விட்டல்ராவ் சொல்லிமுடித்த கணத்தில் வருத்தமாக இருந்தது. மனிதர்களைப்போன்ற வக்கிரமான உயிரினங்களை உலகில்  வேறெங்கும் பார்க்கமுடியாது என்று வெறுப்புடன் நினைத்துக்கொண்டேன். ”மனிதனைப்போல வக்கிரமான ஒரு பிறவியை உலகத்துல வேற எங்கயும் பார்க்கமுடியாது சார்” என்று சொன்னேன்.

விட்டல்ராவின் புன்னகையிலும் கொஞ்சம் கசப்பு படிந்திருப்பதை உணரமுடிந்தது. “என் முதல் கடித அனுபவம் பாதி இனிப்பும் பாதி கசப்பும் நிறைந்ததா மாறிப் போச்சு” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தார்.